சிறுகதைகள்: கடிதம்

அன்பின் ஜெ,

நலமா?  ஐரோப்பிய பயணத்தில் இருப்பீர்களென்று எண்ணுகிறேன்.சிறப்பாக அமைய வாழ்த்துகள்.

விகடன் தடம் இதழில் சிறுகதையின் நூற்றாண்டு வரலாற்றினைப் பற்றிய கட்டுரை நல்ல பதிவு. சிறுகதை என்பதன் வீச்சு அதன் குறுகிய எல்லையே.அதற்குள் வாசிப்பவரை இழுத்து மூழ்கடிக்க சொற்களும் வடிவும் முக்கியமானவை.சிறுகதை இன்று தேக்கமடைந்ததாக இருப்பினும் எழுதப்பட்ட மிகச்சிறந்தவை தேடித்தேடி வாசிக்கப்படுகின்றன.தமிழில் அழியாச்சுடர் போன்ற இணையதளங்களில் மௌனி,புதுமைப்பித்தன்,ஆதவன்  தொடங்கி முக்கிய படைப்பாளிகளின் சிறுகதைகள் வாசிக்கப்படுகின்றன.எனவே சிறுகதைகளின் ஈர்ப்பு ஆரம்ப வாசிப்பில் இளம் வாசகர்களை இழுப்பதில் மிக முக்கியமானது என கருதுகிறேன்.தீவிர எழுத்துகளை பெரும் நாவல்களை வாசிக்க சிறந்த சிறுகதைகளை வாசிப்பது நல்ல பயிற்சியாக அமையும்.தனிப்பட்ட முறையில் என்னிடம் வாசிப்பு பற்றி கேட்கும் என் மாணவர்களுக்கு நான் பெரும்பாலும் சிறுகதைத் தொகுப்புகளையே பரிந்துரை செய்வதுண்டு.அதன்பிறகு அவர்கள் தேடி பிற ஆக்கங்களுக்குள் வருவார்கள்.

தமிழிலும் பிற மொழிகளிலும் சிறுகதைகளின் வளரச்சி,வடிவமைப்பு பற்றிய உங்கள் கட்டுரை மிக முக்கியமானது.இன்று பல்வேறு இணைய இதழ்களிலும்,வலைப்பூக்களிலும் எண்ணற்ற சிறுகதைகள் எழுதப்படுகின்றன.இணையத்தின் கட்டற்ற போக்கினால் அனைத்து வகையான வாசிப்போரும் வாசிக்கின்றனர்.இலக்கியம் பற்றிய அறிமுகமேயற்ற பேஸ்புக் ,ட்விட்டர் இரண்டு வரி வாசிப்பாளர்கள் வணிகசாயல் கொண்ட எழுத்திற்கும்,இலக்கிய ரீதியான நுண்மைகளுக்கும் வேறுபாடு உணர முடியாமல் இது தானா இலக்கியம் என்ற போக்கில் எதிர்வினையாற்றுகின்றனர். எப்படியோ வாசிக்கிறார்களே என்று மட்டுமே தோன்றுகிறது.சரியான விமர்சனங்கள் தமிழில் இல்லாததும் அதற்கு காரணமாக இருக்கலாம்.எப்படியாயினும் நல்ல எழுத்துகள் வாசகர்களை சரியாகச் சென்றடைகின்றன என்றே நம்புகிறேன்.

சிறுகதையில் நிகழ்ந்த பல்வேறு வடிவ மீறல்களும் சோதனைகளுமே அதன் அழகியல்.அதனாலேயே அவை முக்கியத்துவம் பெறுகின்றன.இன்றைய சிறுகதையில் நீங்கள் கூறுவது போல் பாலியல் வன்முறை சார்ந்த நுட்பங்கள் தான் அதிகம்.அதிர்ச்சியான இலக்கிய உக்தி இது என்றே நானும் எண்ணுவதுண்டு.

எப்படியாயினும்  இன்னும் பதிவு செய்யப்படாத எழுதப்படாத இன்றைய வாழ்வியல் சிறுகதையில் அதிகம் உண்டு.நாவல்கள் அளிக்கும் கட்டற்ற வெளி சிறுகதையில் இல்லை என்பதாலேயே அதிகம்பேர் சிறுகதைகள் எழுதுவதில்லை.சிறந்த சிறுகதையில் வாசகனுக்குத் தேவையானவற்றை குறிப்பிட்ட எல்லையில் கூறுவது சவாலானதே.சிறுகதைகள் குறுஞ்சித்தரிப்புகளாக குறுங்கதைகளாக எழுதப்பட்டாலும் அவற்றின் இலக்கிய ரீதியான தரம் சற்றே குறைவதாகவே எனக்குத் தோன்றுகிறது.

திஜா,வண்ணநிலவன் போன்றோரின் உணர்வு சார்ந்த  எழுத்துகளையும்,கிரா,சுரா என்று அழகியல் சார்ந்த எழுத்துகளையும் என்று நீங்கள் கூறுவது போன்ற தரம் இவற்றிற்கு உள்ளதா என்பதும் ஐயமே.

இணைய எழுத்துகள் சரியாக எடிட் செய்யப்பட்டால் அவற்றின் வடிவம் வீச்சு சரியாக அமையும் என்று தோன்றுகிறது.அசோகமித்திரன் போன்று மிகையற்ற ,எதார்த்தவாத அன்றாட வாழ்க்கையை கூறும் எழுத்துகளே இன்றைய தேவை என்று எண்ணுகிறேன்.மிகையுணர்வுகள்,நுட்பங்கள் என்ற பெயரில் சலிப்பூட்டும் அதிர்ச்சிகர விவரணைகள் சிறுகதைகளைத் தேக்கமுறச் செய்கின்றன.சிறுகதையின் வளர்ச்சியைப் பற்றிய கட்டுரை என்னைத் தெளிவாக்கியது.

நன்றி

மோனிகா மாறன்.

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 89
அடுத்த கட்டுரைவரலாற்று ஊகங்களை அணுகுதல்