நான் 1985ல் லா.ச.ரா எழுதி முத்துப்பதிப்பகம் வெளியிட்ட த்வனி என்னும் சிறுகதைத்தொகுதியை வாங்கினேன். மூன்று ரூபாய் விலை. 1978ல் வெளியானது. முத்துப்பதிப்பக உரிமையாளர் என்னிடம் சொன்னார். ”முந்நூறு பிரதி அடிச்சேன் சார். இன்னும் எம்பது இருக்கு”
எனக்கு ஆச்சரியமாக இல்லை. ஏனென்றால் அதற்கு மூன்று மாதம் முன்னால் நாகர்கோயில் ஜெயகுமாரி ஸ்டோர்ஸ் என்னும் புத்தகம் மற்றும் எழுதுபொருள் கடை நகுலனின் நினைவுப்பாதையை வெளியிட்டிருந்ததை நான் வாங்கினேன். நகுலனின் செலவில் வெளியான நூல். நாற்பதுபிரதிகள் பத்துவருடங்களில் விற்கப்பட்டிருந்தன. பின்னர் அதை சுந்தர ராமசாமியே ஆளனுப்பி பழையதாள் விலைக்கு வாங்கி இலக்கியவாசகர்களுக்கு இலவசமாக அனுப்பிவைத்தார். நகுலனைப்பற்றி சிற்றிதழ்களில் பேச்சுக்கள் ஆரம்பமானது அதற்குப்பின்னர்தான்
இதுதான் அன்றைய பிரசுரச்சூழல். அது வார இதழ்களின் பொற்காலம். குமுதம் விகடன் கல்கி ராணி என்னும் நான்கு இதழ்களைசார்ந்தே இருந்த வார இதழ் இயக்கம் குங்குமம், சாவி, இதயம்பேசுகிறது, தாய், தேவி பாக்யா என வளர்ந்து மூடியிருந்தது. சுஜாதாவும் பாலகுமாரனும் நட்சத்திரங்கள். சிவசங்கரி, இந்துமதி, வாசந்தி ஆகிய மூவரும் பெண் நட்சத்திரங்கள். இலக்கியவாதிகளாக மக்கள் அறிந்தவர்கள் அவர்கள் மட்டுமே.
சுந்தர ராமசாமியை அவரது எதிர் கடையில் வேலைபார்த்த என் நண்பன் ராஜாமணிக்கே தெரியாது. சுஜாதாவின் வெறிரசிகன். ‘நீ எதுக்குலே அந்த சுதர்சன் ஓனருக்க கடையிலே எப்பமும் போயி இருக்கே? டவல் ஏவாரம் செய்யுதியா?” என்று அவன் கேட்டான். இவ்வளவுக்கும் அவரது ஜே.ஜே.சிலகுறிப்புகள் அப்போது புயலைக்கிளப்பிக்கொண்டிருந்தது. டீக்கோப்பைப்புயல் என்றால் அது மிகை, டீஸ்பூனுக்குள் புயல். அசோகமித்திரனைப்பற்றி அவரது பிள்ளைகளுக்கே தெரிந்திருக்காது
இச்சூழலில்தான் நான் எழுதவந்தேன். நான் என் ஆரம்பப்பள்ளி வயதிலேயே சாண்டில்யனையும் சுஜாதாவையும் வாசித்து வந்தவன். பள்ளிநாட்களிலிருந்தே பிரபல வார இதழ்களில் எழுதிக்குவித்தவன். ஆகவே அந்த எழுத்து எனக்கு சவாலாகத் தெரியவில்லை. கதை எழுதி கிடைக்கும் காசில் நண்பர்களுடன் பரோட்டா பீஃப் சாப்பிடுவேன். பரோட்டா அப்போதுதான் வரத்தொடங்கியிருந்தது. சினிமா பார்ப்பேன். ஒருதலை ராகத்தை மட்டும் நாற்பது முறை பார்த்திருப்போம்.
இலக்கியம் எனக்கு மலையாளம் வழியாக அறிமுகமாகியது. என் அம்மா சிறந்த இலக்கியவாசகி. நான் அம்மாவின் ஆதர்ச எழுத்தாளர்களான வைக்கம் முகமது பஷீர், ஹெமிங்வே, ஜார்ஜ் எலிய்ட வழியாக இலக்கியத்தை அறிமுகம் செய்துகொண்டேன். தல்ஸ்தோயை நான் அம்மாவுக்கு அறிமுகம் செய்தேன்
நடுவே அரசியலில் புகுந்து ஆன்மீகமாகத் தட்டழிந்து ஒருவழியாக காசர்கோட்டில் தொலைபேசித்துறை ஊழியராக ஆனபின் மீண்டும் எழுதத் தொடங்கினேன். அப்போது சுந்தர ராமசாமியுடன் நேரடி உறவு உருவானது. அவரது தூண்டுதலால் நவீன இலக்கியத்திற்குள் நுழைந்தேன். 1986ல் கொல்லிப்பாவை இதழில் வெளிவந்த ‘கைதி’ என்னும் கவிதைதான் நவீன இலக்கியத்திற்குள் என் காலடி. நவீனத்துவத்தின் நிரந்தரக் கரு, எங்கோ அடைபட்டுவிட்டதான பதற்றம் , பதிவான கவிதை அது. அதை கொல்லிப்பாவையின் ஆசிரியர் ராஜமார்த்தாண்டன் பாராட்டி எனக்கு ஒரு குறிப்பு எழுதியிருந்தார்
தொடர்ந்து கணையாழியில் ‘நதி’ வெளிவந்தது. அசோகமித்திரனின் சிறிய குறிப்புடன் அக்கதை பிரசுரமாகி என்னை ஓர் எழுத்தாளன் என எனக்குக் காட்டியது. தீபம் இதழில் ‘ரோஜாபயிரிடுகிற ஒருவர்’ ‘எலிகள்’ என கதைகள் தொடர்ந்து வெளிவந்தன. 1988ல் கோவை ஞானி ஆசிரியத்துவத்தில் வெளிவந்த நிகழ் இதழில் வெளிவந்த ‘போதி ‘, ‘படுகை’ ஆகிய இருகதைகளும் ஓர் எழுத்தாளனாக என்னை நிலைநிறுத்தின.
அக்கதைகளைப்பற்றி அன்று தொடர்ச்சியாக விவாதங்கள் நிகழ்ந்தன.படுகை மாயத்தன்மை கொண்ட சித்தரிப்பும் நாட்டார்பாடல்களின் மொழியும் கொண்ட படைப்பு. அதே வருடம் பொன் விஜயனின் புதியநம்பிக்கை இதழில் ‘மாடன்மோட்சம்’ வெளிவந்தது. நான் தமிழின் முக்கியமான சிறுகதையாசிரியன் என இந்திரா பார்த்தசாரதி ஒரு கடிதத்தில் குறிப்பிட்டார். தமிழ்ச்சிறுகதையின் அடுத்தகட்டம் என்று அசோகமித்திரன் ஓரிடத்தில் எழுதினார்.
1988லேயே நான் ரப்பர் நாவலை எழுத ஆரம்பித்துவிட்டேன். அதன் முதல் வரைபடம் கொஞ்சம் பெரியது. அதை எழுதிமுடித்தபின்னர்தான் நூலாக்கம் பற்றி யோசித்தேன். அன்று சொந்தச்செலவில்தான் எவரானாலும் நூல்வெளியிடவேண்டும். நீலபத்மநாபன் அன்று இலக்கிய நட்சத்திரம். அவரது நூல்களையே ஜெயகுமார் ஸ்டோர்ஸ் பணம் பெற்றுக்கொண்டுதான் வெளியிட்டு வந்தது.
மேலும் ஓராண்டுக்காலம் கழித்தபோது அகிலன் கண்ணன் நடத்திவந்த தமிழ்ப்புத்தகாலயம் அமரர் அகிலன் நினைவாக ஒரு நாவல்போட்டியை அறிவித்தது. டாக்டர் தா வே வீராச்சாமி, கி.ராஜநாராயணன், இந்திரா பார்த்தசாரதி ஆகியோர் நடுவர்கள். அச்சில் இருநூறு பக்கங்களுக்குள் நாவல் இருந்தாகவேண்டும். நான் என் நாவலில் இருபது சதவீதம் பகுதியை வெட்டி வீசி சுருக்கி அதை அனுப்பிவைத்தேன். வெளியேகொடுத்து தட்டச்சு செய்து வாங்க முந்நூறு ரூபாய் ஆகியது. அதுவே எனக்கு அன்று பெரிய தொகை
போட்டியில் முதல் பரிசு ரூ இரண்டாயிரத்தை ரப்பர் பெற்றது. 1990 அக்டோபரில் நாவலை தமிழ்ப்புத்தகாலயம் வெளியிட்டது. அந்தவெளியீட்டுவிழாவன்று சென்னையில் பெருமழை. அண்ணாசாலையில் செத்த பூனைச்சடலம் ஒழுகிச்செல்வதைக் கண்டேன். இடுப்பளவு நீரில் துழாவி விழா நிகழுமிடத்திற்குச் சென்றேன். விழாவில் ஞானக்கூத்தன், சா.கந்தசாமி போன்றவர்கள் கலந்துகொண்டனர். இந்திரா பார்த்தசாரதியையும் அவர் மனைவி இந்திராவையும் அன்றுதான் சந்தித்தேன். அகிலனின் உறவினர்கள் அரங்கை நிறைக்க நூல் வெளியிடப்பட்டது
நூல் வெளியாகி சிலநாட்களிலேயே இரு வாசகர்கடிதங்கள் வந்தன. முதல் கடிதம் கோவை விஜயாவேலாயுதம் அவர்களால் எழுதப்பட்டிருந்தது. இரண்டாவது கடிதம் தியடோர் பாஸ்கரன் எழுதியது. இருபத்தைந்தாண்டுகளுக்கு முன்பு பேருந்தில் நடத்துநர் எனக்கு முழு டிக்கெட் வாங்கவேண்டும் என்று சொன்னபோது அக்கா முகம் சோர்ந்தாள். என் முகம் மலர்ந்தது. அம்மலர்ச்சியை அன்று அடைந்தேன்.
[அந்திமழை இதழில் வெளியான கட்டுரை]