[ 2 ]
இந்திரப்பிரஸ்தத்தின் மின்கதிர்கொடி பறந்த அணிப்படகு அலைகளில் எழுந்து தெரிந்ததுமே அஸ்தினபுரியின் துறைமேடையில் முரசுபீடத்தில் நின்றிருந்த நிமித்திகன் தன் வெள்ளிக்கோலை தலைக்குமேல் தூக்கி மும்முறை சுழற்றினான். துறைமுற்றத்தின் இடதுநிரையில் அணிவகுத்திருந்த இசைச்சூதர்கள் முழங்கத் தொடங்கினர். நடுவே பொற்தாலங்கள் ஏந்திநின்ற அணிச்சேடியர் தங்கள் ஆடை சீரமைத்து தாலம் ஏந்தி நிரை நேர்நோக்கினர். வலது நிரையில் நின்றிருந்த வைதிகர்கள் கங்கைநீர் நிறைந்த பொற்குடங்களையும் மஞ்சளரிசியும் மலரும் நிறைந்த தாலங்களையும் எடுத்துக் கொண்டனர்.
அலைகளில் எழுந்தும் விழுந்தும் ஊசலாடி அணுகிய கொடிப்படகு துறைமேடையை நோக்கி பாய்களை மடித்தபடி கிளைதேரும் கொக்கு என வந்தது. அதன் அலகுபோல் நீண்டிருந்த அமரமுனையில் நின்ற படகுத்தலைவன் அணைகயிறுக்காக கையசைத்துக் காட்டினான். துறையிலிருந்து இறுக வளைக்கப்பட்ட பெருமூங்கிலில் தொடுத்து நிறுத்தப்பட்ட பேரம்புடன் பிணைக்கப்பட்டிருந்த வடம் நீர்ப்பாம்பு போல எழுந்து வளைவு நீட்டி அப்படகை நோக்கி பாய்ந்துசென்று அதன் அமரமுனையில் விழுந்தது. மூன்று படகுக்காரர்கள் அதை எடுத்து படகின் கொடிமரத்தில் சுற்றினர். யானைகள் இழுத்த திகிரிகள் உரசி ஓலமிட்டபடி சுழல வடம் இழுபட்டு கழிபோலாகி அணிப்படகை துறைநோக்கி இழுத்தது. துறை அதை தன் உடலுடன் சேர்த்து அணைத்துக்கொண்டது.
படகிலிருந்து இந்திரப்பிரஸ்தத்தின் கொடியுடன் கவசவீரன் ஒருவன் இறங்கி நடைபலகை வழியாக வந்து படகுத்துறைமேல் ஏறி முழந்தாளிட்டு வணங்கி அக்கொடியை தரையில் ஊன்றினான். துறைமுற்றமெங்கும் நிறைந்திருந்த அஸ்தினபுரியின் முதற்படைவீரர்களும் அகம்படியினரும் ஏவலரும் வாழ்த்தொலி எழுப்பினர். அணிப்படகிலிருந்து மங்கலத்தாலங்கள் ஏந்திய பன்னிரு சேடியரும் உடன் மங்கல இசை எழுப்பியபடி சூதரும் இறங்கி வந்தனர். தொடர்ந்து வந்த காவல் படகுகள் ஒவ்வொன்றும் அணிப்படகிலிருந்தே வடம் பெற்று தங்களை ஒன்றுடன் ஒன்று இணைத்துக்கொண்டு நீண்ட மாலையென்றாயின. அவற்றிலிருந்து வேலும் வில்லும் ஏந்திய படைவீரர்கள் நீர் மின்னும் கவசஉடைகளுடன் இறங்கி துறைமேடையில் அணிவகுத்தனர்.
துறைமுற்றத்திலிருந்து விதுரர் கனகருடனும் சிற்றமைச்சர்களுடனும் நடந்து துறைமேடைக்கு வந்தார். தருமனின் நந்த உபநந்த கொடியும் இந்திரப்பிரஸ்தத்தின் மின்கதிர்கொடியும் சூடிய அரசப்படகு கங்கையின் அலைகளில் பன்னிரு பாய்கள் புடைத்து நின்றிருக்க எழுந்தது. “இந்திரப்பிரஸ்தத்தின் அரசர் வாழ்க! அறம் அமைந்த அண்ணல் வாழ்க! பாண்டவ முதல்வர் வாழ்க! குருகுல மூத்தோன் வாழ்க! ஹஸ்தியின் குருவின் கொடிவழியோன் வாழ்க!” என்று துறைமுகப்பு முழங்கியது. படகுத்துறையின் நான்கு பெருமுரசங்களும் இடியென ஒலிக்கத் தொடங்கின.
ஒவ்வொரு பாயாக சுருங்கி கொடிமரத்தை ஒட்டி சுற்றிக்கொண்டு இழுபட்டு கீழிறங்க தருமனின் படகு கூம்பிய மலரென்றாகி அருகணைந்தபோது அதன் அமரமுகப்பு முலைதேரும் கன்றின் மூக்குபோல நீண்டு படகுத்துறையை நாடியது. மாலையென கோத்துக்கொண்ட காவல்படகுகள் நீண்டு அதை வளைத்து கயிறுகளை வீசி குழிபட்ட களிறை பயின்ற யானைகளென அதன் பேருடலை பற்றிக்கொண்டன. அலைகளில் அதை நிறுத்தி மெல்ல இழுத்து படகுத்துறை நோக்கி கொண்டுவந்தன. அருகணைந்ததும் நாணியதுபோல் சற்று முகம் விலக்கி ஆடி நின்றது. அன்பு கொண்ட நாய்க்குட்டியென விலாப்பக்கமாக நகர்ந்து படகுத்துறையை வந்து தொட்டு உரசியது. அதிலிருந்து நடைப்பாலம் எழுந்து படகுத்துறைமேல் படிந்தது. வீரர்கள் அதை சேர்த்துக்கட்டினர்.
இந்திரப்பிரஸ்தத்தின் செங்கோலுடன் படைவீரன் ஒருவன் தோன்றி நடைபாலத்தின் மேல் அணிப்படையினர் மின்னுருக்களென பதிந்த கவச உடைகளுடன் நடந்து வந்தான். அவனைத் தொடர்ந்து எண்மங்கலங்கள் நிறைந்த தாலங்களுடன் சேடியர் எழுவர் நடந்து வந்தனர். அரசனின் உடைவாளுடன் கவச வீரனொருவன் வர தொடர்ந்து தருமன் இடப்பக்கம் திரௌபதியும் வலப்பக்கம் சௌனகரும் உடன்வர நடைபாலத்தில் சிறிய சீரடி எடுத்து வைத்து ஏறி படகுத்துறையை அணுகினார். அவருக்குப் பின்னால் அரச உடையணிந்த பீமனும் அர்ஜுனனும் வந்தனர். நகுலனும் சகதேவனும் தொடர்ந்தனர்.
விதுரர் கைகூப்பியபடி அவர்களை அணுகி தலைவணங்கி “அஸ்தினபுரிக்கு இந்திரப்பிரஸ்தத்தின் பேரரசரை வரவேற்கிறேன். இவ்வரவு அனைத்தையும் இனிதாக்குக! என்றும் குருதியுறவும் இனிய நினைவுகளும் வளர்க!” என்றார். “வாழ்க! என்றும் அவ்வண்ணமே பொலிக!” என்று யுதிஷ்டிரர் மறுமொழி சொன்னார். “இந்திரப்பிரஸ்தத்தின் அரசியை வணங்கி வரவேற்கிறேன். தங்கள் கால்கள் பட்ட இம்மண்ணின் வயலிலும் கருவூலத்திலும் பொன் நிறையட்டும்” என்றார் விதுரர். அவள் புன்னகைத்து “நன்று நிறைக!” என்றாள்.
பாண்டவர் நால்வருக்கும் தனித்தனியாக முகமன் சொல்லி விதுரர் வரவேற்றார். வைதிகர்கள் அணுகி கங்கைநீர் தெளித்து அரிமலர் தூவி வேதமோதி இந்திரப்பிரஸ்தத்தின் அரசரை வாழ்த்தினர். வாழ்த்தொலிகளின் நடுவே முகம் மலர்ந்து கைகூப்பியபடி மெல்ல நடந்தார் தருமன்.
துறைமுற்றத்தில் அவர்களுக்காக ஆறு பொற்தேர்கள் காத்து நின்றிருந்தன. அகம்படி ஓடுவதற்கான பன்னிரு வெண்புரவிகள் அவற்றில் ஏறிய கவச வீரர்களுடன் கால்தூக்கி தலையுலைத்து பிடரி சிலிர்த்து நின்றிருந்தன. “அஸ்தினபுரியின் அரசமணித்தேர் தங்களுக்காக காத்திருக்கிறது” என்றார் விதுரர். “நன்று!” என்று முகம் மலர்ந்து சொன்ன தருமன் சௌனகரிடம் “தாங்கள் எனது தேரில் ஏறிக்கொள்ளுங்கள், அமைச்சரே” என்றார். அவர் தலைவணங்கினார்.
விதுரர் வழிகாட்டி அழைத்துச்செல்ல அஸ்தினபுரியின் பட்டத்துத் தேரில் யுதிஷ்டிரர் ஏறி அமர்ந்தார். வலப்பக்கம் சௌனகர் தூண்பற்றி நின்றார். ஏழு வெண்புரவிகள் இழுத்த அத்தேர் காற்றிலேறுவதுபோல அஸ்தினபுரியின் அரசப்பாதையில் எழுந்தது. பாண்டவர் நால்வரும் திரௌபதியும் தொடர்ந்து சென்ற தேர்களில் ஏறிக்கொண்டனர். முன்னால் சென்ற தேர்களில் முரசுகள் அவர்கள் நகர் நுழைவதை அறிவித்து ஓசையிட்டன. அகம்படியும் காவல்படையும் அவர்களை தொடர்ந்தன.
ஒவ்வொரு இலையும் நாவென மாறியதுபோல் வாழ்த்தொலிகள் அவர்களைச் சூழ்ந்து அலையடித்தன. தேர் நெடும்பாதையை அடைந்து சீர்விரைவு கொண்டபோது சேக்கைபீடத்தில் சாய்ந்தமர்ந்து கால்களை நீட்டிக்கொண்ட தருமன் சௌனகரிடம் “இந்திரப்பிரஸ்தத்திலிருந்து கிளம்பும்போதே எனது உள்ளம் இனிய உவகையால் நிறைந்தது, அமைச்சரே. நான் எண்ணி வந்தது பிழையாகவில்லை. பார்த்தீர்களல்லவா! அரசமணித்தேர்! அமைச்சரே வந்து வரவேற்கிறார். ஒவ்வொன்றும் இனிதென்றே நிறைவேறும்” என்றார். சௌனகர் “ஆம், அவ்வாறே ஆகுக!” என்றார்.
விழிசுருக்கி “ஐயம் கொள்கிறீரா?” என்றார் தருமன். “ஐயமல்ல” என்றார் அவர். “பின்…?” என்றார் தருமன். “படித்துறைக்கு கௌரவர்களில் ஒருவரேனும் வந்திருக்கலாம்” என்றார். “அவ்வாறு வரும் வழக்கமுண்டா?” என்றார் தருமன். “அரசர்கள் வரவேற்க வரவேண்டுமென்று நெறியில்லை. அமைச்சரோ படைத்தலைவர்களோ வந்தால் போதும். ஆனால் தாங்கள் அரசர் மட்டும் அல்ல. அவர்களின் குருதியுறவு. அவர்கள் அனைவருக்கும் மூத்தவர். தங்களை வரவேற்க அவர்கள் வந்திருக்க வேண்டும்” என்றார்.
தருமன் “அதையெல்லாம் எண்ணி நோக்கினால் வீண் ஐயங்களையே வளர்க்க நேரும். வரவேற்க எண்ணியிருக்கலாம். அவையில் எவரேனும் முறைமையை சுட்டிக்காட்டி மறுத்திருக்கலாம். ஏன், விதுரரே எந்நிலையிலும் முறைமைகளை மீறவிழையாதவர்” என்றார். “ஆம், அவ்வண்ணமே இருக்க வேண்டும் என்று விழைகிறேன்” என்றார் சௌனகர். தருமன் “அவ்வண்ணமே. நம்பிக்கை கொள்ளப் பழகுக, அமைச்சரே!” என்றார். “அமைச்சரும் வேட்டைநாயும் ஐயப்படுவதையே அறமெனக் கொண்டவை” என்றார் சௌனகர். தருமன் நகைத்தார்.
அஸ்தினபுரியை நோக்கி செல்லும் சாலையின் இருபக்கங்களிலும் நின்ற ஒவ்வொரு மரத்தையும் தனித்தனியாக அடையாளம் கண்டு தருமன் உளம் மலர்ந்தார். “கனிந்து முதிர்ந்த மூதன்னையரைக் கண்டதுபோல் இருக்கிறது, அமைச்சரே” என்றார். “ஒவ்வொரு கிளையின் வடிவும் நன்கு தெரிந்தவையாக உள்ளன. இந்தப் பாதையளவுக்கு என் உள்ளத்தில் நன்கு பதிந்த இடம் பிறிதுண்டா என்றே ஐயம் கொள்கிறேன்” என்றார். “அந்த மகிழமரம் முதல் முறையாக நான் பார்க்கும்போது ஒரு செங்கழுகை ஏந்தியிருந்தது” என்றார். மரங்கள் காலைவெயிலில் தளிரொளி கொண்டன. தழைப்பு கொந்தளிக்க கிளையசைத்தன. “நம் வரவை அவையும் அறிந்திருப்பதுபோல் தோன்றுகிறது” என்றார். சௌனகர் புன்னகையுடன் அவரை நோக்கி நின்றார்.
“நான் விண்ணுலகு செல்வேனென்றால் என் மூதாதையரை நோக்கி என்னை கொண்டு செல்லும் வழி இப்பாதையின் மறுவடிவாக இருக்கும், சௌனகரே” என்று உணர்வால் நெகிழ்ந்த குரலில் தருமன் சொன்னார். தொலைவில் அஸ்தினபுரியின் கோட்டை தெரிந்ததும் நிலைகொள்ளாமல் எழுந்து நின்று தூணைப்பற்றியபடி நின்று விழிதூக்கி அதை நோக்கினார். “இந்திரப்பிரஸ்தத்தின் பெருங்கோட்டையை பார்த்தபின் இது மிகச்சிறிதென தெரிகிறது. ஆனால் அது இன்னும் எனது நகராகவில்லை. அக்கோட்டையை நான் கவசமென அணிந்திருக்கிறேன். இதுவே என் ஆடை” என்றார். அது நெருங்கி வரும்தோறும் சிறுவனைப்போல தோள் துள்ள “கரிய சிறுகோட்டை. ஆமை போல என்னை வரவேற்க தன் ஓட்டுக்குள்ளிருந்து அது தலைநீட்டப்போகிறது” என்றார்.
அதன் மேல் எழுந்த கொடிகள் தெரியத்தொடங்கியதும் “சிறகு கொள்கிறாள் நாக அன்னை!” என்றார். அவரது உவகைத் துள்ளலை சௌனகர் சற்று வியப்புடன் நோக்கியபின் தன்னை அடக்கும்பொருட்டு விழிதிருப்பிக் கொண்டார். கோட்டை அவர்களுக்கு மேல் கவிவது போல் எழுந்ததும் யுதிஷ்டிரர் “அதற்கு மேல் எனது கொடி பறக்கிறது, அமைச்சரே. நான் இன்னமும் அதற்குள்ளேயே இருப்பதுபோல் உணர்கிறேன். வெளியே செல்லவேயில்லை. அங்கு பிதாமகருடனும் தந்தையுடனும் அமர்ந்து சொல்லாடிக் கொண்டிருக்கிறேன். ஒருபோதும் அதை நீங்கியதே இல்லை… ஆம்!” என்றார்.
கோட்டையின் சரிந்த நிழல் தன் தேர்மேல் வந்து தொட்டபோது தருமன் கைகூப்பியபடி கண்ணீர் மல்குவதை சௌனகர் கண்டார். “தேரை நிறுத்து! நிறுத்து தேரை!” என்று பதறிய குரலில் அவர் கூறினார். பாகன் திரும்பி சௌனகரை நோக்க தேரை நிறுத்தும்படி அவர் கண்காட்டினார். தேர் சகடங்களின் மீது தடைக்கட்டை உரச விரைவழிந்து நின்றது. கடிவாளம் இழுக்கப்பட்ட புரவிகள் கழுத்தை வளைத்து புட்டம் சிலிர்க்க கால் தூக்கி நின்ற இடங்களிலேயே விரைவு ததும்பின.
“அரசே…” என்று சௌனகர் மெல்லிய குரலில் சொன்னார். பின்னால் திரும்பிப் பார்த்தபோது தொடர்ந்து வந்து கொண்டிருந்த தேர்கள் அனைத்தும் கடிவாளங்கள் இழுக்கப்பட்டு விரைவழிந்திருப்பதை கண்டார். அகம்படிப்படையினரும் காவல்படையினரும் ஒருவரிடமிருந்து ஒருவர் ஆணை பெற்று அமைந்தனர். தருமன் கூப்பிய கைகளுடன் தேரின் படிகளில் கால்வைத்து இறங்கி மண்ணில் நின்றார். நடுங்கும் உதடுகளும் ததும்பும் முகமுமாக அண்ணாந்து கோட்டையை பார்த்தார். தொடர்ந்து வந்த தேரிலிருந்து விதுரரும் கனகரும் இறங்கி அவர்களை நோக்கி வருவதை சௌனகர் கண்டார்.
அவரும் தொடர்ந்து இறங்கி தருமனுக்குப் பின்னால் நின்று “அரசே…” என்று மீண்டும் மெல்லிய குரலில் அழைத்தார். “முறைமைகள் பல உள்ளன, அரசே” என்றார். தருமன் அவர் குரலை கேட்கவில்லை. குனிந்து சகடங்கள் ஓடி அரைத்த மென்பூழியில் ஒரு கிள்ளு எடுத்து தன் நெற்றியில் அணிந்து கொண்டார். பாதக்குறடுகளை கழற்றி தேரின் அருகிலேயே விட்டுவிட்டு வெறும் கால்களுடன் மண்ணை மிதித்து கோட்டைக்குள் நடந்து சென்றார். சௌனகர் பின்னால் திரும்பி நோக்கியபடி பதைப்புடன் அவரைத் தொடந்து சென்றார்.
கைகூப்பியபடி நடந்து வரும் தருமனைக் கண்டு கோட்டையில் தேர்நிரையை வரவேற்கக் காத்திருந்த காவலர்தலைவனும் மெய்க்காவல் வீரர்களும் திகைத்தனர். அப்போது என்ன செய்யவேண்டும் என்று அவர்களுக்கு தெரிந்திருக்கவில்லை. காவலர்தலைவன் கைகளை வீசி முரசுகள் முழங்கும்படி ஆணையிட்டான். கோட்டை மேல் இருந்த அனைத்து முரசுகளும் இணைந்து பேரொலி எழுப்பின.
எவரையும் பார்க்காதவராக சீர் நடையுடன் வந்த தருமன் கோட்டை வாயிலுக்குள் நுழைந்து கடந்து மறுபக்கம் சென்றார். அவரை வணங்கிய வீரர்களை, தாழ்த்தப்பட்ட கொடிகளை அவர் காணவில்லை. கொம்புகளும் முரசுகளும் எழுப்பிய பேரொலியை கேட்கவில்லை. கோட்டைக்குள் பெருமுற்றத்தில் அவரை வரவேற்பதற்காக வந்த அஸ்தினபுரியின் குடித்தலைவர்களும் வணிகர் குழுத்தலைவர்களும் வைதிகர்களும் காத்திருந்தனர். அரசப் பொற்தேரை எதிர்பார்த்து நின்றிருந்தமையால் கூப்பிய கைகளுடன் தனித்து நடந்து வந்த தருமனை அவர்கள் முதலில் அறியவில்லை. எவரோ ஒருவர் உரத்த குரலில் “அரசர்…!” என்று கூவினார். ஒரே கணத்தில் பலர் அவரைக் கண்டு “அரசர்! அரசர்!” என்று ஒலியெழுப்பினர்.
முதிய குலத்தலைவர் ஒருவர் இரு கைகளையும் தலைக்குமேல் விரித்தபடி “பேரறச்செல்வர்! குருகுல முதல்வர்! புவியாளும் மாமன்னர்!” என்று வெறியாட்டெழுந்தவர் போல கூவியபடி அவரை நோக்கி வந்தார். “பாரதர்! பரதவர்ஷர்! பரதசார்த்தூலர்! பரதபிரவரர்! தர்மர்! தர்மஜர்! தர்மநந்தனர்!” என்று வாழ்த்தியபடி முழங்காலில் மடிந்தமர்ந்தார். “அஜமீடர்! அஜாதசத்ரு! குருசார்த்தூலர்! குருத்வஹர்! குருசிரேஷ்டர்! குந்தீ நந்தனர்!” நெஞ்சை அறைந்தபடி அவர் விம்மி அழுதார். “குரூத்தமர்! குருபுங்கவர்! குருவர்த்தனர்!”
அஸ்தினபுரியின் குடிமக்கள் அனைவரும் கண்ணீரும் கொந்தளிப்புமாக வாழ்த்தொலி எழுப்பினர். பலர் முழந்தாள் மடித்து நிலத்தில் அமர்ந்தனர். நெஞ்சை பற்றிக்கொண்டு விம்மி அதிர்ந்தனர். அரசரைத் தொடர்ந்து வந்த சௌனகர் தன்னைச் சூழ்ந்து நிறைந்த அவ்வுணர்ச்சிப்பெருக்கைக் கண்டு திகைத்து நின்றார்.
அவருக்குப் பின்னால் அணுகி வந்த விதுரர் “முறைமைகள் ஏதும் தேவையில்லை, அமைச்சரே. அவர்கள் இயல்புபடி இருக்கட்டும்” என்றார். “பாதுகாப்புகள்…?” என்றார் சௌனகர். “அவரிடம் அமைந்த அறத்தைவிட பெரிய பாதுகாப்பை தெய்வங்கள் அளிக்க முடியுமா என்ன?” என்றார் விதுரர்.
“அரசே, இந்நகருக்கு அறம் மீண்டுவிட்டது. இனி எங்கள் குடிகள் வாழும்” என்று கூவியபடி முதியவர் ஒருவர் ஓடிவந்து கால் தடுக்கியது போல் நிலைதடுமாறி தருமனின் கால்களில் விழுந்தார். புழுதி படிந்த அவர் கால்களை பற்றிக்கொண்டு அதில் தன் தலையை முட்டியபடி “இந்நகரை கைவிடாதிருங்கள், எந்தையே! எளியவர்கள் மேல் அளி கொள்ளுங்கள்! எங்கள் தொல்நகரை இருள விடாதீர்கள்!” என்று கதறினார்.
தலைக்குமேல் கையெடுத்துக் கூப்பி நெஞ்சில் அறைந்து அங்கிருந்தோர் அனைவரும் அழுது கொண்டிருந்தனர். ஈசல்புற்று வாய்திறந்ததுபோல் நகரத்தின் அனைத்துத் தெருமுனைகளில் இருந்தும் மக்கள் பெருகி அங்கு வந்தனர். நோக்கியிருக்கவே அஸ்தினபுரியின் கோட்டை முகப்புப் பெருமுற்றம் முழுக்க தலைகளால் நிறைந்தது. கையிலிருந்த மலர்களை ஆடைகளை அவரை நோக்கி வீசினர். “எங்களின் அரசே! எங்கள் தந்தையே! எங்கள் இறையே!” என்று கூவியது கூட்டம்.
தருமனை நெருங்க முயன்ற அரசியும் இளையவரும்கூட அக்கூட்டத்தால் உந்தி அகற்றப்பட்டனர். எந்த விசை அவர்கள் ஒவ்வொருவரையும் தங்கள் இல்லங்களிலிருந்து அங்கு அழைத்து வந்ததோ அதற்கிணையான விசையொன்றால் அவர்கள் அவரை முற்றிலும் அணுகாமல் வளைத்து நின்றனர். அரற்றியும் அழுதும் கொந்தளிக்கும் பெருந்திரளின் நடுவே உருவான சிறு வட்டத்தின் மையத்தில் கூப்பிய கரங்களுடன் புன்னகையும் கண்ணீருமாக தருமன் நின்று கொண்டிருந்தார்.
[ 3 ]
அஸ்தினபுரியின் அரச விருந்தினருக்கான மாளிகையின் தெற்குநோக்கிய சிற்றவைக்கூடத்தில் பாண்டவர்கள் நால்வரும் தருமனுக்காக காத்திருந்தனர். சாளரத்தின் அருகே நகுலனும் சகதேவனும் கைகட்டி நின்றிருக்க பீடத்தில் தடித்த கால்களைப்பரப்பி தசைதிரண்ட கைகளை மடிமேல் வைத்து பீமன் அமர்ந்திருந்தான். அவனுக்கு முன்னால் போடப்பட்ட சிறிய பீடத்தில் சௌனகர் உடலை ஒடுக்கியபடி இடக்கையால் தாடியை நீவிக்கொண்டு எண்ணத்தில் ஆழ்ந்திருந்தார். பீமன் தன்னருகே நின்றிருந்த அர்ஜுனனை நோக்கி “இன்னுமா சடங்குகள் முடியவில்லை?” என்றான்.
“அஸ்தினபுரியின் அனைத்து குலத்தலைவர்களும் முறைமை செலுத்துகிறார்கள்” என்று அர்ஜுனன் தாழ்ந்த குரலில் சொன்னான். “ஆம். இங்குதான் குலங்களுக்கு முடிவே இல்லையே! குழந்தைகளைப்போல அவை பிறந்துகொண்டே இருக்கின்றன” என்றான் பீமன். தோளில் சரிந்த தன் குழலை தள்ளி பின்னால் செலுத்தி தோல் நாடாவால் முடிந்த பின்பு “இன்றென்ன சடங்கு முறைகள் உள்ளன நமக்கு?” என்றான்.
சௌனகர் “சடங்குகள் என ஏதுமில்லை, இளவரசே. மூத்தவரை சென்று சந்திப்பதென்பது ஒரு முறைமை. பிதாமகர் பீஷ்மரையும் ஆசிரியர் கிருபரையும் துரோணரையும் பின்பு பேரரசர் திருதராஷ்டிரரையும் பேரரசி காந்தாரியையும் தாங்கள் சந்திக்கவேண்டும்” என்றார். பீமன் “அவர்கள் நமக்குச் செய்யும் முறைமைகள் ஏதுமில்லையா?” என்றான். சௌனகர் அவ்வினாவிற்கு மறுமொழி உரைக்கவில்லை.
“அவர்களில் எவரும் இத்தருணம் வரை நம்மை வந்து பார்க்கவில்லை. அஸ்தினபுரியின் அரசர் வந்து பார்க்கவேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் இளையோர் நூற்றுவர் இருக்கிறார்கள்” என்றான். அர்ஜுனன் “அவ்வாறு சந்திக்காமல் இருப்பதுதான் அவர்களின் முறைமையோ என்னவோ?” என்றான். “இங்கு கிளம்பி வரும்பொழுது இது ஒரு குடிசூழ் களியாட்டு என்று மூத்தவர் சொன்னார். அவர் இருக்கும் உளநிலையே வேறு. இங்கு நிகழ்ந்து கொண்டிருப்பது அதுவல்ல. நாம் போருக்கு முன்னரோ பின்னரோ இங்கு வந்திருக்கும் அயல் நாட்டவர் போலவே எண்ணப்படுகிறோம்.”
சௌனகர் “அது அஸ்தினபுரியின் குடிகளுக்கு பொருந்துவதல்ல. இன்று காலையிலே அதை பார்த்திருப்பீர்கள்” என்றார். பீமன் “ஆம், அதைத்தான் சொல்லவருகிறேன். கௌரவர்களுக்கு நம்மீது எத்தனை காழ்ப்பு இருக்கும் என்பதை இதனாலேயே உய்த்துணர முடிகிறது. இன்றைய காலைநிகழ்வுக்குப்பின் காழ்ப்பு மேலும் உச்சத்திற்கு சென்றிருக்கும். இந்நகரத்து மக்களின் உள்ளத்தை ஆள்பவர் மூத்தவரே என்பதில் இனி எவருக்கும் ஐயமிருக்காது” என்றான்.
அர்ஜுனன் “நாம் ஏன் வீண் சொல்லாடவேண்டும்? எதற்காக வந்தோமோ அதை ஆற்றி திரும்பிச் செல்வோம்” என்றான். “என்ன நிகழும் என்று எண்ணுகிறாய், இளையோனே?” என்றான் பீமன். “நிகழ்வதில் ஐயத்திற்கு இடமில்லை, மூத்தவர் தோற்பார்” என்றான். பீமன் “அவரும் நெடுநாட்களாகவே பகடையாடுகிறார் அல்லவா?” என்றான். அர்ஜுனன் நகைத்து “பகடை என்ன அம்பா நேர் வழியில் செல்வதற்கு? இவரது பகடையாடலை இவரது ஆடிப்பாவையுடன் மட்டுமே இப்புவியில் ஆட முடியும், மூத்தவரே. உறவின் தகவுகளில் ஊடுவழிகள் எத்தனை உள்ளன என்று அறிவதற்காகவே பகடையாடுகிறார்கள் மானுடர்” என்றான்.
பீமன் சிறிய கண்களில் ஐயத்தின் ஒளிவிட “சகுனி ஆடுவாரென்றால் அதில் கணிகரின் ஆடலும் கலந்திருக்கும் என்கிறாய் அல்லவா?” என்றான். “இத்தருணத்திற்காகவே அவர்கள் பல்லாயிரம் முறை பகடை உருட்டியிருக்கிறார்கள்” என்று அர்ஜுனன் சொன்னான். நகுலன் “மூத்தவரே, அவர் வென்றால் என்ன நிகழும்?” என்றான். “நாம் படைக்களத்தில் தோற்றதாக ஆகும். மூத்தவர் தன் மணிமுடியை துரியோதனன் முன் வைக்க நேரும். அவர் இங்கு இயற்றவிருக்கும் ராஜசூயத்தில் சிற்றசராக சென்று அமர்வார். அவர்களின் வேள்விப்புரவி இந்திரப்பிரஸ்தத்தின் மண்ணை கடந்துசெல்லும்” என்றான்.
பீமன் யானைபோல் உறுமி “நாம் ஒன்றும் செய்வதற்கில்லை. விரும்பியணைந்து இத்தோல்வியை வாங்கி சென்னி மேல் சூடிக்கொள்கிறார் மூத்தவர். இன்று காலை அவரைச்சூழ்ந்து பெருகிய கண்ணீர் வெள்ளம் இவ்வாறு அறத்தின் பொருட்டு அவர் தோல்வியை சூடுவதனால் அளிக்கப்படுவது. அதுவே அவருக்கு நிறைவளிக்கிறது” என்றான். கசப்புடன் நகைத்தபடி “பெரியவற்றின் பொருட்டு தோல்வியுறுபவர்களை மானுடர்கள் வழிபடுகிறார்கள்” என்றான்.
கைகளால் பீடத்தை தட்டி நகைத்து “வழிபடப்படுவதன் பொருட்டு தோல்வி அடையத் துடிக்கிறார்கள் தெய்வமாக விழைபவர்கள். அதற்கு உதவும் என்றால் மூத்தவர் தன் தலையை தானே அறுத்து அஸ்தினபுரியின் அரசனின் காலடியில் வைக்கவும் துணிவார். அதற்குப்பின் அவருக்கு அஸ்தினபுரியின் தெற்கு மூலையில் ஒரு ஆலயம் கட்டப்படவேண்டும் என்பது மட்டுமே அவரது முன்கூற்றாக இருக்கும்” என்றான். சௌனகர் புன்னகைத்துவிட்டார்.
அர்ஜுனன் “நாமே இத்தகைய சொற்களை சொல்லாமலிருக்கலாமே, மூத்தவரே?” என்றான். “எப்படி சொல்லாமல் இருப்பது, இளையோனே? நமது வீரத்தையும் வெற்றியையும் பணயப்பொருளென ஏந்தி இந்நகருக்குள் நுழைந்திருக்கிறார். அவர்கள் வெல்லப்போவது நமது மூத்தவரை அல்ல, நாம் ஈட்டிய வெற்றியையும் அதன் விளைகனியாக அவர் சூடியிருக்கும் மணிமுடியையும் செங்கோலையும்தான். தோற்பது அவர் மட்டுமல்ல, நாமும் கூடத்தான்” என்றான் பீமன்.
அர்ஜுனன் “நாம் எதையும் ஈட்டவில்லை, மூத்தவரே. நான் ஆற்றும் எச்செயலிலும் எனக்கென நான் கொள்வதென்று எதுவுமில்லை. அதுவே தங்களுக்கும். இறுதிநாள் வரை எங்கும் நில்லா தனியனாக நானும் காட்டிருளுக்குள் கலந்து மறையும் அரைநிஷாதனாக நீங்களும் வாழப்போகிறோம். வெற்றியென்றும் புகழென்றும் இவர்கள் சொல்வதனைத்தும் நம் மூத்தவருக்கு நாம் அளித்த காணிக்கை. அது அவரது செல்வம். அதை எவ்வண்ணம் செலவழிக்கவும் அவருக்கு உரிமையுண்டு. அதைக் கொண்டு அவர் பாரதவர்ஷத்தை ஆளலாம். அல்லது அதைத் துறந்து புகழ் மட்டுமே போதுமென்று முடிவெடுக்கலாம். நாம் சொல்வதற்கொன்றுமில்லை” என்றான்.
பீமன் ஒன்றும் சொல்லாமல் தன் மீசையற்ற மேலுதடை கைகளால் வருடியபடி சிறிய விழிகளைத் திருப்பி மாலையொளியில் சுடர் கொண்டிருந்த சாளரத்திரைச்சீலையை நோக்கினான். சகதேவன் “வந்த அன்றே பிதாமகரையும் ஆசிரியர்களையும் தந்தையையும் தாயையும் அரசர் பார்த்தாகவேண்டுமென்பது நெறி. இப்போதே மாலை சாய்ந்துவிட்டது. அந்திக்குள் சந்திப்புகளை முடித்துக்கொண்டால் நன்று” என்றான்.
பீமன் சிரித்தபடி அவனை நோக்கி “வந்த அன்றே அனைவரையும் சந்தித்து வாழ்த்து பெற்றார் அரசர் என்று சூதன் ஒருவன் சொல்லவேண்டும், அவ்வளவுதானே?” என்றான். நகுலன் “ஆம், அரசர்கள் வாழ்வது சூதர்கள் பாடலில்தான்” என்றான். “அவர்கள் ஒவ்வொருநாளும் காவியத்திற்குள் சென்றபடியே இருப்பவர்கள்.” பீமன் நகைத்து “இப்படியே சென்றால் பிறக்காத அரசனொருவன் சூதர் சொல்லிலேயே உருவாகி வாழ்ந்து புகழ் கொண்டுவிடக்கூடும்” என்றான்.
வெளியில் வாழ்த்தொலிகள் கேட்டன. வரவறிவிப்போன் கதவைத் திறந்து உள்ளே வந்து “இந்திரப்பிரஸ்தத்தின் பேரரசர் யுதிஷ்டிரர்!” என்று அறிவித்தான். பீமனும் அர்ஜுனனும் சௌனகரும் எழுந்து நின்றனர். கைகூப்பியபடி அறைக்குள் வந்த தருமன் சௌனகரை நோக்கி “வணங்குகிறேன், அமைச்சரே” என்றபின் கைகூப்பி நின்ற பீமனையும் அர்ஜுனனையும் நோக்கி தலையசைத்தபடி பீடத்தில் அமர்ந்தார். “மிகவும் களைத்திருக்கிறேன், அமைச்சரே. இன்றே பிதாமகரையும் ஆசிரியர்களையும் தந்தையையும் அன்னையையும் பார்த்தாகவேண்டுமல்லவா?” என்றார்.
“ஆம், முறைமைச் சந்திப்பு என்பதால் மிகையான பொழுதை செலவிடவேண்டியதில்லை. அரண்மனைக்கு வந்து மீளவேண்டுமென்பதில்லை. பிதாமகரையும் ஆசிரியர்களையும் சந்தித்தபின் அப்படியே அரசமாளிகைக்குச் சென்று அங்கேயே பேரரசரையும் பேரரசியையும் சந்தித்துவிடலாம்” என்றார் சௌனகர். “துரோணரும் கிருபரும் நகருக்குள்ளேயேதான் இருக்கிறார்கள்.”
“அஸ்வத்தாமன் வந்துவிட்டானா?” என்றார் தருமன். “ஆம், அவரும் ஜயத்ரதரும் நகருக்குள்ளே தங்கியிருக்கிறார்கள்.” தருமனின் இதழ் அசைந்து நிலைத்ததிலிருந்து அவர் அங்கரைப்பற்றி கேட்கப்போகிறார் என்று உணர்ந்த சௌனகர் “அங்கநாட்டரசர் அரசருடன் அவரது மாளிகையிலேயே தங்கியிருக்கிறார்” என்றார். அதை கேட்டதுபோல் காட்டாமல் விழிகளைத் திருப்பி நகுலனை நோக்கிய தருமன் “அஸ்தினபுரியின் மக்களின் உணர்வெழுச்சியை பார்த்தாயல்லவா, இளையோனே?” என்றார்.
“ஆம், அவர்கள் உள்ளத்தில் தாங்கள் வாழ்கிறீர்கள், அரசே” என்றான் நகுலன். சகதேவன் “தாங்கள் விரைந்து நீராடி உடைமாற்றி வருவீர்கள் என்றால் பிதாமகரை சந்திக்கச் செல்லலாம்” என்றான். தருமன் சால்வையை இழுத்து அணியத் திரும்புகையில் பீமன் உரத்த குரலில் “மூத்தவரே, இத்தருணம் வரை உங்கள் குருதி வழியில் வந்த ஒருவர்கூட உங்களை வந்து சந்திக்கவில்லை என்பதை நோக்கினீர்களா?” என்றான்.
கையில் சால்வையுடன் திகைத்து நோக்கிய தருமன் “அவ்வாறு சந்திக்க முறைமை இல்லாமல் இருக்கலாம்” என்றார். “முறைமைகளை மீறி சந்திக்கவேண்டிய கடமை உள்ளது” என்றான் நகுலன். “நாம் உறவினராக இங்கு வரவில்லை என்பதை உணருங்கள், மூத்தவரே! பகையரசராக மட்டுமே இத்தருணம் வரை நாம் நடத்தப்பட்டிருக்கிறோம்” என்றான். தருமன் விழிகள் மாற “இருக்கட்டும். நான் பகையரசாக வரவில்லை. நூற்றைவருக்கும் மூத்தவனாக மட்டுமே வந்திருக்கிறேன். அவ்வண்ணமே என்றும் இருப்பேன்” என்றார்.
பீமன் சினத்துடன் “பகடையில் தோற்று, முடியும் கோலும் தாழ்த்தும்போதும் தாங்கள் அவ்வாறு கருதப்படுவீர்கள் என்றால் நன்று” என்றான். “இளையவனே, நான் எவ்வாறு கருதப்படுகிறேன் என்பதல்ல எனது வழியை அமைப்பது. என்னை எங்கு நான் வைக்க வேண்டுமென்று முடிவு செய்வது நான் மட்டிலுமே. எந்நிலையிலும் நூற்றைவருக்கும் மூத்தவன் மட்டுமே. அதன் பிறகே நான் அரசன்” என்றார். பீமன் தனக்குத்தானே சலிப்புற்றவன் போல தலையசைத்தான்.
தருமன் எழுந்து தன் சால்வையை எடுத்து தோளில் அமைத்துவிட்டு “நான் நீராடி வருகிறேன். நீங்கள் சித்தமாகிவிட்டீர்கள் என்று தோன்றுகிறது” என்றார். சௌனகர் “ஆம் அரசே, பொழுதில்லை” என்றார். அறை வாயிலை நோக்கி சென்ற தருமன் நின்று திரும்பி பீமனிடம் “ஆனால் நான் தோற்றுவிடுவேன் என்று ஐயமின்றி கூறினாய். எண்ணிக்கொள், எந்தப் பகடையிலும் நான் இதுவரை தோற்றதில்லை. பகடையின் பன்னிரு பக்கங்களிலும் அதன் பன்னிரண்டாயிரம் கோடி தகவுகளிலும் நான் அறியாத எதுவுமில்லை. அதை பகடைக்களத்தில் காண்பாய்!” என்றபின் வெளியேறிச் சென்றார்.