சுஜாதா அறிமுகம்
அன்புள்ள ஜெ,
நான் கதை என்று சொல்லி என் நட்பு, உறவு வட்டத்தில் பரப்பும் விஷயங்களுக்கு இரண்டு விதமான எதிர் வினைகள் வரும். ஒன்று – Abrupt ஆக கதை முடிகிறது. இரண்டு – அப்படியே சுஜாதாவின் நடை. இரண்டிலும் எனக்கு வருத்தம் ஒன்றும் இல்லை.
சுஜாதாவை மட்டுமே 25 வயது வரை படித்து வந்தததன் பாதிப்பிலிருந்து விடுபடுவது சாத்தியமா? பொதுவாக படித்த நடையின் பாதிப்பு இல்லாமால் எழுதுவது எப்படி? என்னுடைய சில மாதிரி கதைகள்.
மாதிரி
பழைய மாமல்லபுரம் சாலையில் ஒரு சிங்கம் – இது கொஞ்சம் காப்காவின் பாதிப்பு உள்ள ஒன்று.
அன்புடன்,
ஶ்ரீதர்
அன்புள்ள ஸ்ரீதர்
சுஜாதாவின் பாதிப்பு என்பது சரிதான்
சுஜாதாவின் நடை இளைய தலைமுறையினரில் தீவிர வாசிப்புப்பழக்கம் இல்லாதவர்கள் அனைவரையும் பாதித்திருப்பது. ஆரம்பகட்டத்தில் அனைவருடைய நடையிலும் இன்னொரு எழுத்தாளரின் பாதிப்பு இருக்கும். அது இயல்பே. ஆனால் சுஜாதாவின் பாதிப்பு அப்படி அல்ல. அதை சற்றே பிரித்தறியவேண்டும்
அசோகமித்திரனோ சுந்தர ராமசாமியோ உருவாக்கும் மொழிப்பாதிப்பு என்ன? அவர்கள் உள்ள ஓட்டத்தையோ புறவுலகையோ ஒரு குறிப்பிட்டவகையில் பார்க்கிறார்கள். அசோகமித்திரன் ஓர் அறிக்கையிடலாக விலகிநின்று நோக்குகிறார். சுந்தர ராமசாமி மெல்லிய கிண்டலுடன் கச்சிதமாக வகுக்க முயல்கிறார்
அவர்களை தொடர்ந்து வாசித்துப் பாதிக்கப்படுக்ம்போது நாமும் அம்மனநிலைக்குள் செல்கிறோம். நம் மொழிநடை அவ்வாறு மாறுபடுகிறது. அவர்களின் தனியுலகம் நம்முடையதென்றாகிறது. பின்னர் நாம் நம் தனியுலகை உருவாக்கிக்கொள்கையில் அதிலிருந்து மீண்டு கடந்துசெல்கிறோம்
சுஜாதா தனக்கென ஒரு தனியுலகை உருவாக்கிக்கொண்ட எழுத்தாளர். கூடவே மிகப்பெரிய வணிகப்படைப்பாளி. அத்தகைய படைப்பாளிக்குரிய ஒரு சிறப்புக்குணம் அவருக்குண்டு. சமகால வாழ்க்கையை, மோஸ்தர்களை, பேச்சுமொழியை கூர்ந்து கவனித்துக்கொண்டே இருந்தார். அதிலுள்ள சுவாரசியமான பகுதிகளை எடுத்து தொகுத்து தன் உரைநடைக்குள் கொண்டுவந்தார். அவரது புனைகதையின் உரையாடல்களைப்பார்த்தால் அது தெரியும்
அதாவது அவரது உலகமென்பது அவரது அகம் சார்ந்தது அல்ல. அது தமிழ்ச்சமூகத்தின் சுவாசியங்களை நோக்கி வைக்கப்பட்ட கண்ணாடி.ஒரு பெருந்தொகுப்பு. சினிமா, வம்புகள், அன்றாட உரையாடல், இதழ்கள், செய்திகள் என அனைத்திலிருந்தும் எடுக்கப்பட்டது. என்ன சிக்கல் என்றால் ஒவ்வொன்றிலிருந்தும் அவர் மேலோட்டமான சுவாரசியங்களையே எடுத்துக்கொண்டார்.
இரு உதாரணங்களைச் சொல்கிறேன். சுஜாதா அறிவியல்குறித்தெல்லாம் எழுதியிருக்கிறார். இன்று விக்கிபீடியா யுகத்தில் அவரது ஏன் எதற்கு எப்படி போன்ற கட்டுரைகளில் மேலதிகமான ஒரு வேடிக்கை மட்டுமே எஞ்சியிருக்கிறது. அவர் இலக்கியக்கொள்கைகளைப் பற்றி எழுதிய கட்டுரைகளின்போதுதான் அவருக்கு அவை குறித்த மேலோட்டமான அறிதலே உள்ளது என்றும், அவற்றிலுள்ள பொதுசுவாரசியத்திற்கு அப்பால் அவர் செல்லவில்லை என்றும் எனக்குப்புரிந்தது
இன்னொரு உதாரணம், ஒருமுறை அவரிடம் பேசிக்கொண்டிருந்தேன். ‘ஹோமியோ மருந்துபோல குறையக்குறையத்தான் வீரியம்’ என நக்கலாக எதைப்பற்றியோ சொன்னேன். அடுத்த வாரமே அந்த வரியை அவர் வாரஇதழ் கட்டுரை ஒன்றில் பயன்படுத்தியிருந்தார். அதை சுட்டி எனக்கு ஒரு கார்டும் போட்டிருந்தார்.
சுஜாதாவின் பாதிப்பு நம்மை சுவாரசியம் என்பதில் கட்டிப்போடுகிறது. கல்கி இதே பாதிப்பை ஒரு தலைமுறைக்கு முன் மிகப்ப்பரவலாக உருவாக்கியவர். சுவாரசியத்தை உருவாக்கிக்கொள்ளுதல் என்று அதற்குப்பொருள். சுஜாதா இயல்பாகவே கூர்மையும் மொழித்திறனும் கொண்டவர். ஆகவே அந்த சுவாரசியம் ஈர்த்தது. அவரைப்போல எழுதுபவர்களால் அந்த கூர்மையை அடையவே முடியவிலை.
சுஜாதாவிலிருந்து வெளிவராது நல்ல உரைநடை எழுதமுடியாது. சுஜாதா எஞ்சியிருந்தால் செயற்கையான சுவாரசியம் நோக்கியே செல்ல முடியும்.பண்பாட்டின் சுவாரசியமான பகுதிகளை மட்டுமே நக்கிப்பார்க்கத் தோன்றும்.
இலக்கியத்திற்கு சுவாரசியம் ஒரு நிபந்தனையே அல்ல. ஆர்வமுள்ள வாசகனுக்காக மட்டுமே அது எழுதப்படுகிறது. அதன் உள்ளடக்கத்தால், வாழ்க்கையுடன் அதுகொண்டுள்ள உறவால் அவனை அது ஈர்க்கிறது. அது ஞானத்தின் ஈர்ப்பே ஒழிய அரட்டையின் உற்சாகம் அல்ல
ஆகவே எதைச் சொல்லவேண்டுமோ அதைமட்டும் சொல்லுங்கள். வேடிக்கை காட்டவேண்டியதில்லை. அவதானிப்பை, உணர்வுகளை, கண்டடைதல்களை மட்டும் இலக்கியமாக ஆக்க முயலுங்கள்.
மானுட உள்ளம் சொல்லித்தீரா புதிர்கள் கொண்டது. நாம் வாழும் புறவுலகமோ முடிவிலாது மாறிக்கொண்டிருக்கும் விந்தை. அதை மொழியால் சந்திக்கமுயல்வதே இலக்கியமாக ஆகிறது
ஜெ