அன்புள்ள ஜெ
சென்னை புத்தகக் கண்காட்சிக்கு நீங்கள் வருவீர்கள் என எதிர்பார்த்தேன். அனேகமாக அத்தனை எழுத்தாளர்களும் வந்திருந்தார்கள். நீங்கள் வராதது ஒரு குறையாகவே இருந்தது. புத்தகக் கண்காட்சிகள் உங்களுக்கு ஒவ்வாமையை அளிக்கின்றனவா?
சாம்
அன்புள்ள சாம்
நான் முதன்முதலாகப் புத்தகக் கண்ண்ட்காட்சிக்குச் சென்றபோது சென்னை உட்லாண்ட்ஸ் ஓட்டலுக்கு முன்னால் நாலைந்து கடைகளுடன் அதை நடத்திக்கொண்டிருந்தனர். அன்று உருவான அந்தப்பரவசம் அப்படியே இன்றும் இருக்கிறது
எழுத்தாளனாக நான் சென்ற புத்தகக் கண்காட்சி என் இரண்டாவது சிறுகதைத் தொகுதி வெளிவந்திருந்த காலகட்டம். வசந்தகுமார் வடிவமைத்த மண் சிறுகதை தொகுதி. ஓர் இலை அதன் அட்டையில் இருக்கும். அதை ஒருவாசகர் அடையாளம் கண்டு பாராட்டியபோது பரவசம் அடைந்தேன்
வாசகர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் புத்தகக் கண்காட்சி அவர்களுக்கு மட்டுமே உரிய திருவிழா. அங்கே அவர்கள்தான் வி ஐ பிக்கள். அவர்கள் சொந்த வீடு உட்பட எங்குமே விஐபிக்கள் அல்ல என்பதை குறிட்த்த்துக்கொண்டால் இது எத்தனை முக்கியமான நிகழ்வு என்பது புரியும்
புத்தகக் கண்காட்சி என்பது நூல்களை வாங்குவதற்கு மட்டும் அல்ல. ஒருமுறை சுற்றிவந்தால் தமிழின் ஒட்டுமொத்த அறிவியக்கத்தையே கண்முன் கண்டுவிடலாம். நூல்களின் தலைப்புகள் வழியாகவே தமிழ் வாழ்க்கையை உணரமுடியும். அது ஒரு பேரனுபவம்.
குறிப்பாக புத்தகக்கண்காட்சி குழந்தைகளுக்கு மிக முக்கியமானது. நூல்களை கடைகளில்கூட வாங்கிக்கொடுக்கமுடியும். ஆனால் புத்தகங்களின் உல்லகம் ஒன்று உள்ளது என அவர்களுக்குக் காட்டுவதற்கு புத்தகக் கண்காட்சி அன்றி வேறு வழியே இல்லை. அங்கே அவர்களுக்குள் அவர்கள் அறியாமலேயே ஒரு தொடக்கம் நிகழ்கிறது.
குஜராத் உட்பட பல மாநிலங்கள் வாசிப்பை ஊக்குவிக்க பலவகையான முயற்சிகளை எடுத்துள்ளன. புத்தகக் கண்காட்சிகளை அரசே நிகழ்த்துகின்றன. தமிழகத்தில் இதுவரை வந்த அரசுகள் அனைத்துமே புத்தகக் கண்காட்சிக்கு எதிரானவையாகவே இருந்து வந்துள்ளன. பலமுறை புத்தகக் கண்காட்சிக்கு வந்து சென்ற கருணாநிதி பொய்யான வாக்குறுதிகளை அளித்துச்சென்றார். ஜெயலலிதா அட்தை கண்டுகொள்வதே இல்லை . அவரது அரசதிகாரிகள் புத்தகக் கண்காட்சியை ஒரு வணிக முயற்சியாக மட்டுமே பார்க்கின்றன
தமிழ் மக்களும் பெரும்பாலும் புத்தகக் கண்காட்சியை உதாசீனத்துடனும் ஏளனத்துடனும் மட்டுமே பார்க்கிறார்கள் என்று பேச்சுகளிலிருந்து தெரிகிறது. புத்தகக் கண்காட்சிக்கு எதிரான மனநிலை என்பது ஒருவகையில் அறிவுக்கு எதிரான மனநிலையே
நான் சென்னை ,கோவை, ஈரோடு, திருச்சி, மதுரை என எல்லா புத்தகக் கண்காட்சிகளுக்கும் சென்றிருக்கிறேன். சென்னை புத்தகக் கண்காட்சிக்கு வரமுடியாமல் போனது பயணங்களால்தான். அவை முன்னரே முடிவுசெய்யப்பட்டவை
ஜெ