‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 75

[ 24 ]

நிமித்திகர் சுதாமர் பன்னிரு களத்தில் ஒவ்வொன்றாக கைதொட்டுச் சென்று கண்மூடி ஒருகணம் உள்நோக்கி விழிதிறந்து “மீன் எழுந்து அமைந்துவிட்டது. களம் நிறையக்காத்துள்ளது. அமுதமாகி எழுக!” என்றார். சௌனகர் மெல்லிய குரலில் “நன்று சூழும் என்கிறீர்களா?” என்றார். “ஒற்றைச்சொல்லில் அதை உரைத்து முடிக்க முடியுமெனில் அப்போதே சொல்லியிருப்பேன். ஒரு களம் தொட்டு நோக்கினால் குருதிப்பெருக்கு என் கண்களுக்குள் விரிகிறது. மறுகளம் நோக்கித் திரும்புகையில் அமுதமென பெருகுகிறது. ஒன்றில் குளிர் நீரை காண்கிறேன். பிறிதொன்றில் எரியனலை. ஒன்று தொட்டு பிறிதொன்று உய்த்து மற்றொன்றை கணித்து நன்று தேர்ந்து இதை சொல்கிறேன்” என்றார்.

தருமன் “முன்னரே பன்னிரு பகடைக்களத்திற்கு ஒப்புதல் தெரிவித்துவிட்டோம். கிளம்பும் நேரத்தை குறிப்பதொன்றே இப்போது நம்மிடம் எஞ்சியுள்ளது. நன்றோ தீதோ இனி மறுக்க இயலாது” என்றாr. நிமித்திகர் “இம்முடிவுகள் எவையும் நம்மால் எடுக்கப்பட்டவை அல்ல. ஒவ்வொன்றும் விண்வெளியில் தங்கள் மாறாத்தடத்தில் ஓடும் கோள்களை சார்ந்துள்ளன என்பதனால் அவையும் மாறாதவையே”  என்றார். சௌனகர் “இறுதி உரை என்ன நிமித்திகரே?” என்றார்.

“மகரம் அலைவடிவானது. கும்பம் மங்கலம் கொண்டது. இம்மாத இறுதியில் அது நிறையும். பின்னர் மீனம் எரிவிண்மீனென தென்மேற்குத் திசையில் எழும்” என்றார். அவர் சொல்வது என்னவென்றுணராமல் ஒருவரை ஒருவர் விழிநோக்கி அவை அமர்ந்திருந்தது. “மாசி முதல் நாள் நன்று என்கிறீர்களா?” என்றார் தருமன். “ஏனெனில் நானும் அதை கணித்திருந்தேன்.” நிமித்திகர் “ஆம். அதைத் தேர்வோம். நன்று சூழ்க!” என்றார்.

தருமன் பெருமூச்சு விட்டு உடல் எளிதாகி “அச்சொல் போதும் நிமித்திகரே, அதுவென்றே முடிவெடுப்போம்” என்றபின் சௌனகரை நோக்கி “முதல் நாள் முதற்பொழுதில் இங்கிருந்து அஸ்தினபுரிக்கு கிளம்புவோம்” என்றார். சௌனகர் தயங்கி “நிமித்திகர் அத்தருணத்தை இன்னும் குறித்தளிக்கவில்லை அரசே” என்றார். “எத்தருணமும் நன்றே” என்றார் நிமித்திகர். “நன்றென நாம் எண்ணுவது நம்மைக்குறித்தே. நன்று சூழ்க! ஆடும் குழந்தைகளை நோக்கியபடி அன்னை விழியிமையாதிருக்கிறாள். அதை மட்டும் நெஞ்சில் நிறுத்திக் கொள்வோம்” என்றார். தருமன் “ஆம். அது ஒன்றே இவ்வச்சத்திற்கும் ஐயங்களுக்கும் அப்பால் மாறா உறுதியென என்னுள் உள்ளது” என்றார்.

நிமித்திகர் கைகூப்பி தலைவணங்கி தன் மாணவனை நோக்க அவன் பன்னிருகளம் வரையப்பட்ட பூர்ஜமரப்பட்டைத்தாளை மடிக்கத்தொடங்கினான். சௌனகர் குழப்பத்துடன் “இதில் இந்திரப்பிரஸ்தத்திற்கு வெற்றி உண்டா?” என்றார். “வருவது உரைக்க நிமித்திக நூல் அறியாது. அது ஊழையும் காலத்தையும் ஒரு களமென நிறுத்தி அதன் நெறிகளை மட்டுமே உய்த்துணர்கிறது” என்றார் நிமித்திகர். “சொல்லுங்கள், அந்த நெறி உரைப்பதென்ன? ஒற்றைச்சொல்லில்…” என்றார் சௌனகர். “நிறைகும்பம். அமுதகலம். பிறிதொன்றையும் இப்போது சொல்வதற்கில்லை” என்றபடி நிமித்திகர் தலைவணங்கினார்.

“போதும். முற்றிலும் எதிர்காலத்தை அறிந்தபின் நாம் செய்வதற்கென்ன உள்ளது? நன்று சூழும் என்று நம்புவோம்” என்றபின் தருமன் எழுந்து தன் அருகே நீட்டப்பட்ட வெண்கலத்தாலத்தில் இருந்து பொன்னும் பட்டும் மலரும் கொண்ட வெள்ளித்தட்டை எடுத்து நிமித்திகருக்கு அளித்தார். அவர் அதை தலைவணங்கி பெற்றுக்கொண்டு “நன்று சூழ்க! நாடு குடியும் நலம் பெறுக!” என்று வாழ்த்தினார்.

நிமித்திகர் சென்றபின் தருமன் தன் அரியணையில் அமர்ந்து திரும்பி அவைநின்ற சகதேவனிடம் “உனது நிமித்திக நூல் என்ன சொல்கிறது?” என்றார். “நல்ல முடிவு” என்றான் சகதேவன். “அதை நான் கேட்கவில்லை. உனது நூலின்படி கும்பம் முதல் நாள் நன்றோ?” என்றார் தருமன். “அவர் சொன்னதையே நான் சொல்வேன். எந்நாளும் நன்றே” என்றான் சகதேவன். “நன்றுசெய்வதென்றால் நாள் தேரவேண்டியதில்லை, அன்றெனில் நன்னாளால் பயனில்லை என்பார்கள்.”

“நீங்கள் அனைவரும் எப்படி ஒரே மொழியில் பேசத்தொடங்கினீர்கள் என்று தெரியவில்லை” என்று சலிப்புடன் தருமன் சொன்னார். “இவ்வாடலை முன்னெடுக்கலாமா என்று நான் கேட்டபோதும் இதையே நீ சொன்னாய்.” சகதேவன் “அப்படி தாங்கள் கேட்கவில்லை மூத்தவரே. முடிவெடுத்துவிட்டேன், நன்று விளையுமா என்றீர்கள்” என்றான். தருமன் பதற்றத்துடன் “அப்படியானால் நன்று நிகழாது என்று எண்ணுகிறாயா? என்றார். “நன்று நிகழும், முடிவில்” என்றான் சகதேவன். “முடிவில் என்றால்…?” என்று தருமன் மீண்டும் கேட்டார். “எப்போது முடியவேண்டுமென்று இயற்றி ஆடும் அன்னை எண்ணுகிறாளோ அப்போது” என்றபின் சகதேவன் தலைவணங்கி வெளியே சென்றான்.

“என்ன செய்வது சௌனகரே?” என்றார் தருமன். “இளையோர் இருவரும் என்ன சொல்கிறார்கள்?” என்று சௌனகர் கேட்டார்.  ”முடிவெடுத்த அன்றே பேசியதுதான். பிறகு அவர்கள் ஒன்றும் சொல்லவில்லை. எனது விருப்பப்படி நிகழட்டும், தனக்கு ஒன்றும் சொல்வதற்கில்லை என்று பீமன் சொன்னான். அர்ஜுனனோ அவன் ஒன்றும் சொல்ல விரும்பவில்லை என்றான்.” சௌனகர் “சூது தங்களுக்குரியதல்ல அரசே. அதுதான் என்னை அச்சுறுத்துகிறது” என்றார். தருமன் “பகடைக்களத்தில் நானறியாத எதுவுமில்லை. நானாடிய எந்தப் பகடைக்களத்திலும் இதுவரை தோற்றதில்லை” என்றார்.

“பகடையின் நெறிகள் அனைத்தையும் தாங்கள் அறிவீர்கள் என்று நானும் அறிவேன். ஆடலின் ஒரு முனையில் ஒவ்வொரு முறையும் கலைந்தும் இணைந்தும் முன்னகரும் பிழை ஒன்றுள்ளது. அதை தாங்கள் அறிய முடியாது. அரச நெடும்பாதையில் செல்லும் பட்டத்து யானையென முன்னெழுவது தங்கள் உள்ளம். கரவு வழிகளை அது அறியாது” என்றார். தருமன் “கரவுப்பாதைகள் வழியாக வரும் எந்த குக்கலும் பட்டத்து யானையை எதுவும் செய்யாது அமைச்சரே. அங்கு என்னுடன் பகடை பொருதப்போவது சகுனி என்றார்கள். முதலிரு ஆட்டத்திலேயே அவரை வெல்வேன். அதை தாங்கள் காணலாம்” என்றார்.

அவரது தன்னம்பிக்கை நிறைந்த முகத்தை நோக்கி ஏதோ சொல்ல வாயெடுத்த பின் “அவ்வண்ணமே ஆகுக!” என்றார் சௌனகர். எரிச்சலுடன் தலையசைத்து “இங்கு ஒவ்வொருவரும் ஏன் இத்தனை அவநம்பிக்கை கொள்கிறீர்கள் என்று எனக்குப் புரியவில்லை” என்று தருமன் சொன்னார். “போரைத்தவிர்த்து நிகரிப்போர் என பன்னிரு படைக்களத்தில் ஆடலாம் என்று என்னை அழைக்க வந்தவர் விதுரர். என்  வாழும் இரு தந்தையரில் ஒருவர். அவர் சொல்லுக்கு அப்பால் பிறிதொன்றை நான் எப்போதும் எண்ணியதில்லை.”

“அமைச்சரே, அஸ்தினபுரியின் துணையரசுகளும் உறவரசுகளும் இணைந்து இந்திரப்பிரஸ்தத்துக்கு எதிராக பெரும்போர் ஒன்றுக்கு படைசூழ்கை நிகழ்த்தவிருப்பதை அறிந்தபோது நான் கொண்ட பதற்றம் சிறிதல்ல. இளையவர் இருவருக்கும் அது வெறும் போர். எனக்கு அது பெருங்குருதி. எண்ணியதுமே அதன் பச்சைமணத்தை என் மூக்கு அறியும். என் உடல் நடுங்கத்தொடங்கும். போருக்கான முன்செயல்கள் தொடங்கியபின்  நான் ஒருநாள்கூட உளம் ஓய்ந்து துயின்றதில்லை” என்று அவர் தொடர்ந்தார்.

“போர்சூழ்தலின் செய்திகளை இங்கே ஒவ்வொருநாளும் கொண்டாட்டமாகவே அறிந்துகொண்டிருந்தனர். நம் படைகளை ஒருங்கமைப்பதற்காக இளையோர் பகலிரவாக ஆணைகளை இட்டும் நேர்சென்று நோக்கியும் செயலில் மூழ்கி அவ்விரைவில் உளம்திளைத்துக்கொண்டிருந்தனர். முடிவறியாது காத்திருப்பதன் சலிப்பை உதறி படைவீரர்கள் பரபரப்படைந்தனர். நகர்மக்கள் வெற்றி எவருக்கென்று பந்தயம் கட்டி சொல்லாடினர். இந்நகரில் போரை அஞ்சி ஒடுங்கி அமர்ந்து நடுங்கிக்கொண்டிருந்தவன் நான் மட்டிலுமே.”

சௌனகர் “போருக்கென நாம் எழுவது தேவையில்லை. ஆனால் குடிகாக்கப் போரிடுவது மன்னரின் கடமை” என்றார். தருமன் “ஆம், குடிகளைக் காக்கவே கோலேந்தி இங்கு அமர்ந்திருக்கிறேன். போரெனில் இருதரப்பிலும் உயிர்கள் அழியும். அமைச்சரே, பிணங்களில் நடந்துசென்று நான் அடையும் சிறப்பென ஏதுமில்லை. வரலாறு என் பேர் சொல்லாதொழியட்டும். குலக்கொடிவழிகள் என்னை கோழையென்றோ வீணன் என்றோ சொல்லட்டும். என் ஆட்சியில் குடிகள் ஒருபோதும் குருதி சிந்தலாகாது என்றே உறுதிகொண்டிருக்கிறேன்” என்றார்.

சௌனகர் “மண்ணில் ஒருபோதும் போர் ஓயாது அரசே” என்றார். “ஏனென்றால் இப்புவியில் வாழ்வென நிகழ்வதெல்லாம் போரே.” தருமன் “ஆம், போட்டியில்லாது வாழ்க்கை இல்லை. போட்டிகளினூடாகவே தங்களுக்குரிய ஊர்திகளை தெய்வங்கள் கண்டடைகின்றன” என்றார். “ஆனால் அப்போர் அழித்தும் கொன்றும்தான் நிகழவேண்டுமென்பதில்லை. வெறுப்பில்லாத பூசல்கள், கொலையில்லாத போர்கள், குருதியில்லாத பலிகள் நிகழலாம். அவற்றை தெய்வங்கள் வாழ்த்தும் என்பதில் ஐயமே இல்லை.”

“அமைச்சரே, மானுட வாழ்க்கை இங்கே தொடங்கும்போது ஒவ்வொன்றும் தனியுருவிலேயே இருந்தன. நாம் அவை ஒவ்வொன்றுக்கும் நிகரிகளை உருவாக்கிக்கொண்டுதான் இங்கு வந்திருக்கிறோம். அந்தணரின்  வேள்விகளில் பலியளிக்கப்படும் அன்னத்தாலான பசுவும் மஞ்சள்சுண்ணக் கலவையாலான குருதியும் கும்பளைக்காய் நிணமும் உயிர்ப்பலியின் நிகரிகள் அல்லவா? இவ்வரண்மனை, இந்த அரியணை, இம்மணிமுடி, செங்கோல், நான் அணிந்துள்ள அணிகள் அனைத்துமே முன்பிருந்தவற்றின் நிகரி வடிவங்கள்தானே? இவ்வீடும் ஆடையும் கூட நிகரிகளே என்று சொல்வேன்.”

“போர் தவிர்த்து பன்னிருபகடைக்களத்தில் ஆடிப்பார்க்கலாம் என்ற செய்தியுடன் விதுரர் இங்கு வந்தபோது நான் வழிபடும் தெய்வமே எழுந்தருளியதுபோல் உணர்ந்தேன். சொல்லி முடிப்பதற்குள்ளே அவர் கைகளை பற்றிக்கொண்டு “தங்கள் ஆணையை சென்னிசூடுகிறேன் அமைச்சரே என வாக்களித்தேன். அவர் ஆணை எதுவோ அதை கடைபிடிப்பதே எனது கடமை என்றுதான் இன்றுவரை வாழ்ந்திருக்கிறேன். இவ்வுயிர் அவர் அளித்த கொடை என்பதை மறவேன்” என்றார் தருமன். “அன்னையிடம் சென்று விதுரரின் ஆணை இது என்று சொன்னபோது அவர் அதுவே உன் தந்தையின் ஆணை என்று கொள்க என்று சொன்னதும் நான் செய்ததே உகந்தது என முழுநிறைவை அடைந்தேன்.”

சௌனகர் “சில தருணங்களில் போர்கள் சூதை விட உயர்ந்தவை அரசே” என்றார். “என்ன சொல்கிறீர்கள்?” என்று சினத்துடன் தருமன் கேட்டார். “போர்கள் பருப்பொருட்களின் வல்லமையை நம்பி இயங்குபவை பருப்பொருட்கள் ஐயத்திற்கிடமற்றவை. எனவே கள்ளமற்றவை. பகடை பல்லாயிரம் வழிகளை தன்னுள் கரந்த முடிவிலா ஆழம். அதில் உறைகின்றன நாமறியாத தெய்வங்கள்.”

தருமன் நகைத்து “பகடை ஆடாத ஒவ்வொருவரும் அதை அஞ்சுகிறார்கள் என்றொரு சொல்லுண்டு. அறியப்படாதவை பேருருவம் கொள்கின்றன” என்றார் “நான் பன்னிரு படைக்களத்தின் ஒவ்வொரு கட்டத்தையும் என் உள்ளம் போல் அறிவேன். எனக்கு ஐயமோ அச்சமோ இல்லை.” சௌனகர் பெருமூச்சுடன் “அவ்வண்ணமெனில் அதுவே ஆகுக!” என்றார்.

“நன்று நடக்கும் அமைச்சரே. இது உடன் பிறந்தார் தங்களுக்குள் ஆடும் ஒரு விளையாட்டென்றே கொள்க! இளவயதில் குருகுலமைந்தர் கூடி நிலவில் வட்டாடியதைப்போல. அன்னையர் சூழ்ந்திருக்க மகளிர்மாளிகையிலமர்ந்து சொல்லடுக்கு ஆடியது போல. இது எங்களில் எவர் மூப்பு என்றறிவதற்கான ஓர் எளிய பகடை விளையாட்டு மட்டுமே. அவன் வென்றால் அவன் இயற்றும் ராஜசூயத்தில் சென்றமர்ந்து தலை தாழ்த்தப் போகிறேன். நான் வென்றால் என்னை மூத்தவனாக ஏற்று அவன் அவ்வரியணைக்கு அருகே அமர்த்தப் போகிறான். இரண்டும் நன்றே. போர் நீங்கிவிட்டதென்பது மட்டுமே இதில் நாம் கொள்ள வேண்டியது” என்றார் தருமன்.

“அங்கு பன்னிரு படைக்களம் ஒருங்கிக் கொண்டிருக்கிறது என்று செய்திகள் வந்தன” என்றார் சுரேசர். “நம் செய்தி சென்றதுமே கட்டத்தொடங்கிவிட்டனர். நேற்று விஸ்வகர்மபூசனை நிகழ்ந்தது என்றார்கள். களத்தை அணிசெய்யும் பணிகள் இன்றுமுதல் தொடங்கிவிட்டன.” தருமன் “ஆம், இது ஒரு பெருநிகழ்வல்லவா? நம் கொடிவழியினர் எண்ணி மகிழப்போவது” என்றார். சுரேசர் “ஐநூறு கலிங்கச் சிற்பிகள் அதை அமைக்கிறார்கள்” என்றார்.

“பிற மன்னர்களுக்கு அழைப்புள்ளதா?” என்றார் சௌனகர். சுரேசர் “இல்லை என்றார் விதுரர். இது குருகுலத்தின் தோன்றல்களுக்கு இடையே நடப்பது என்றே அமையட்டும் என்பது பீஷ்மரின் ஆணை என்றார். ஆகவே குருதி உறவு இருந்தால் மட்டுமே களத்தில் இருப்பார்கள்” என்றார். “நன்று. பிற அரசர்கள் இல்லாதிருப்பது மிக நன்று” என்றார் தருமன். சௌனகர் “ஆம், அது சற்று ஆறுதல் அளிக்கிறது. பீஷ்மரும் துரோணரும் கிருபரும் அவ்வவையில் அமர்ந்திருப்பார்கள் என்றால் நன்றே” என்றார்.

“அவர்கள் அமர்ந்திருப்பார்கள். இதில் என்ன ஐயம்? இது அவர்களின் மைந்தர்கள் ஆடும் களிவிளையாட்டு. கேட்டீர்களா சௌனகரே? முன்பு நாங்கள் களம் வரைந்து வட்டாடுகையில் அப்பால் பிறிதொரு பணியிலென பிதாமகர் நின்றிருப்பார். ஓரவிழியால் எங்களது ஆடலை அவர் பார்க்கிறார் என்பது அவரது முகமலர்வில் தெரிந்துவிடும். முதிர்ந்து நரை கொண்டபின் மீண்டும் அவர் விழிமுன் நின்று விளையாடப்போகிறோம் என்னும் உவகை என்னுள் எழுகிறது” என்றார்.  சௌனகர் தணிந்த குரலில் தனக்கென்றே என “ஆம், அது நன்றே” என்று சொன்னார்.

[ 25 ]

இந்திரப்பிரஸ்தத்தின் தெற்குப்பெருவாயிலுக்கு அப்பால் காவல்காட்டுக்குள் அமைந்திருந்த கொற்றவை ஆலயத்தின் சிறு முற்றத்தில் தருமன் திரௌபதிக்காக காத்திருந்தார். இருபக்கமும் இருளெனச் செறிந்திருந்த குறுங்காட்டுக்குள் பறவைகளின் ஒலி எழுந்துகொண்டிருந்தது. காற்றில் இலைகள் சலசலக்கையில் மழைவிழுவதுபோல உளமயக்கு எழுந்தது.

இந்திரப்பிரஸ்த நகரை உருவாக்கிய மூத்த சிற்பியாகிய சயனர் கல்லில் கண்டடைந்த தேவி அவள். அந்நகரின் காவலன்னை நுதல்விழியும், பன்னித்தேற்றையெனப் பிறை எழுந்த  சடைமகுடமும், நெளிநாகப் படமெழுந்த கச்சையும் கொண்டு பதினாறுகைகள் ஏந்திய படைக்கலங்களுடன் விரித்த கால்களின் நடுவே அனலென அல்குல் விழியுமாக அமர்ந்திருந்தாள். அவள் கழல்முத்துகளில் மும்மூர்த்திகளின் முகங்கள் விழிதெறிக்க நோக்கினர். கணையாழிகளில் சூரிய சந்திரர்களும் ஆதித்யர்களும் ஒளிர்ந்தனர். எட்டு வசுக்களும் திசைத்தேவர்களும் நிரைகொண்ட ஒளிவளையத்தில் அனல் இதழ்கள் மலர்ந்திருந்தன.

சிற்றமைச்சர் சுஷமர் அரசருக்கு அருகே பணிந்து நின்றிருந்தார். காவல் வீரர்கள் அப்பால் படைக்கலங்கள் ஒளிர நின்றனர். அவர் வந்த தேர் புரவிகள் அகன்ற நுகத்துடன் காட்டின் இருளை தன் ஒளிர்பொன்செதுக்குகளில் காட்டியபடி நின்றது. தருமன் பொறுமையிழந்து பெருமூச்சுடன் சுஷமரை நோக்கினார். அவர் “கிளம்பிவிட்டார்கள் அரசே” என்றார். “ஆம்” என்று சொல்லி அவர் விழிகளை விலக்கி இலைப்பரப்பினூடாகத் தெரிந்த வானச்சிதறலை நோக்கினார்.

நெடுந்தொலைவில் சங்கொலி எழுந்தது. “வருகிறார்கள்” என்றார் சுஷமர். “நன்று” என்றார் தருமன். பல்லக்கு வருவதை உள்ளத்தால் கண்டபின்னர் அவரால் பொறுமை கொள்ளமுடியவில்லை. கணங்களை கணக்கிட்டார். ஒருகணத்தில் இலையொன்று சுழன்றிறங்கியது. பிறிதொன்றில் ஒரு பறவை சிறகடித்தது. இன்னொன்றில் எங்கோ மந்தி ஒன்று முழவுமீட்டியது. “எங்கு வந்திருக்கிறார்கள்?” என்றார். சுஷமர் “மந்தியொலி முழங்குவதைக்கேட்டால் அணுகிவிட்டார்கள் எனத்தெரிகிறது” என்றார். பறவைகள் எழுந்து சிறகடித்து காட்டுக்குள் பல்லக்கு அணுகும் பாதையை காட்டின.

அருகே எழுந்த சங்கொலி சிம்மக்குரல் போல் ஒலித்து திடுக்கிடச்செய்தது. கருங்கழல்கொற்றவைக்கு சிம்மம் காவலென்று இந்திரப்பிரஸ்தத்தில் அனைவரும் அறிந்திருந்தனர். இருமுறை அங்கு வந்த பூசகர்களை சிம்மம் கொன்றிருக்கிறது. அவர் எருதை வந்து பலிகொண்டுசென்ற சிம்மத்தின் செம்பழுப்புநிறக் கண்களை நினைவுகூர்ந்தார். பத்துமடங்கு பெரிய பாண்டிநாட்டு முத்துக்கள். அனலென்று அலைத்த பிடரி. அது சென்றபின் மண்ணில் பதிந்திருந்த காலடித்தடங்களில் குருதிமுத்துக்கள் உருண்டுகிடந்தன.

காட்டுக்குள்ளிருந்து இந்திரப்பிரஸ்தத்தின்  மின்கதிர்க்கொடியும் பாஞ்சாலத்தின் விற்கொடியும் ஒன்றன் பின் ஒன்றாக வந்தன. சங்கு ஊதி வர அவருக்குப்பின்னால் வேலேந்திய வீரர் எழுவர் தொடர்ந்தனர். செம்பட்டுத்திரை உலைந்த பல்லக்குக்குப்பின்னால் வில்லேந்திய எழுவர் வந்தனர். பல்லக்கு வந்து மெல்ல அமைந்தது. ஒருவன் மரப்படி ஒன்றை எடுத்து அருகே இட்டான். திரையை விலக்கி உள்ளிருந்து திரௌபதியின் வலக்கால் வெளியே வந்தது.

அவள் வெண்பட்டுத்திரையால் முகத்தையும் உடலையும் மூடியிருந்தாள். ஊடாக முகிலுக்கு அப்பாலென அவள் உடல் சற்றே தெரிந்தது. சிலம்புகளும் வளைகளும் மேகலையும் ஒலிக்க மெல்ல நடந்து அவரருகே வந்து தலைதாழ்த்தி “அரசருக்கு மங்கலம்” என்றாள். “நலம் திகழ்க” என முறைமை சொன்னபின் தருமன் விழிகளை விலக்கிக்கொண்டார். நகுலனின் மாதம் அது என்பதனால் அவனுடைய யமுனைக்கரை மாளிகையிலிருந்து அவள் வந்திருந்தாள். ஆலயங்களில் மட்டுமே அவர்கள் சந்திக்கலாமென நெறியிருந்தது. அந்நெறிகளை அர்ஜுனன் மீறுகிறான் என்று உடனே தருமன் எண்ணிக்கொண்டார். அவ்வெண்ணத்தை மறுகணமே கலைத்தார்.

“அரசி அறிந்திருப்பாய், நாளை அஸ்தினபுரிக்கு கிளம்பவேண்டும்” என்றார். “ஆம், சொன்னார்கள்” என்றாள். “இன்று உச்சிப்பொழுதில் அன்னையை சந்தித்து வாழ்த்துபெற்றேன்.” அவள் “அறிவேன்” என்றாள். “போர் நீங்கியதை எண்ணி எண்ணி நிறைவடைகிறேன். வரலாற்றில் எப்படி அறியப்பட்டாலும் உடன்பிறந்தாரைக் கொன்றவன் என்ற பழியின்றி கடந்துசென்றால் போதும் என்றே உணர்கிறேன்” என்றார். அதை பல்வேறு சொற்களில் அவளிடம் சொல்லிவிட்டிருந்ததை எண்ணிக்கொண்டார். அச்சொற்களை வெவ்வேறு வகையில் சொல்லிக்கொண்டே இருப்பதை அவரே உணர்ந்தாலும் சொல்லாமலிருக்க இயலவில்லை.

“பன்னிருபடைக்களம் அங்கே ஒருங்கியிருக்கிறது. முன்பு மாமன்னர் ஹஸ்தி அமைத்த அதே படைக்களத்தை ஏழுமடங்கு பெரிய வடிவில் கலிங்கச்சிற்பிகள் கட்டியிருக்கிறார்கள். எனக்கு மறுபக்கமாக மாதுலர் சகுனி அமர்ந்தாடுவார் என்றார்கள்.” அவள் “ஆம், சொன்னார்கள்” என்றாள். “நான் வெல்வேன். என் உள்ளம் சொல்கிறது” என்றார் தருமன். “இன்றுவரை என்னை எவரும் வென்றதில்லை. அதை நீயும் அறிவாய்.” திரௌபதி ஒன்றும் சொல்லவில்லை.

“இன்று காலைதான் பேரரசரின் அழைப்பு வந்தது. பேரரசியின் சொல்லும் உடனிருந்தது” என்றார் தருமன். “அரசியையும் அந்நிகழ்வுக்கு அழைத்திருக்கிறார்கள்.” அவள் அசைவிலாது நின்றாள். “எனவே நீயும் எங்களுடன் கிளம்பலாம்” என்றார் தருமன். “பகடையாடலுக்கு அரசியர் செல்வது வழக்கமா?” என்றாள் திரௌபதி. தருமன் சிரித்து “பகடையாடுவதே வழக்கமில்லை. இது ஒரு குலவிளையாட்டுதானே? நீயும் வருவதில் பிழையில்லை” என்றார்

“நான் வரவேண்டுமென்று பேரரசரிடம் விழைவறிவித்தவர் யார்?” என்றாள். தருமன் “மூத்ததந்தையே விழைகிறார் என்றுதான் நினைக்கிறேன்.  இது தாதையர் கூடி அமர்ந்து தனயர்களின் ஆடலைக் கண்டு மகிழும் விழா. அனைவரும் உடனிருக்கவேண்டும் என்று அவர் எண்ணியிருக்கலாம்.” அவள் “அனைவரையும் அழைக்கிறார்களா?” என்றாள். “அனைவரும் எதற்கு? அன்னையும் பிற அரசியரும் இங்கிருக்கட்டும். நீதான் மூத்தவள். உனக்கு மட்டும்தான் அழைப்பு” என்றார்.

அவள் பேசாமல் நிற்கக்கண்டு “ஏன், நீ வர விழையவில்லையா?” என்றார். “பெண்கள் எதற்கு?” என்று அவள் சொன்னாள். “ஏனென்றால் பேரரசி அழைத்திருக்கிறார்கள். நீ அவர்களின் ஆணையை தட்டமுடியாது” என்று தருமன் சினத்துடன் சொன்னார். “தழல்முடிசூடி பாரதவர்ஷத்தின் சக்ரவர்த்தினியாக நீ அமர்ந்தாலும் முதன்மையாக எங்கள் குடியின் மருமகள். அதை மறக்கவேண்டியதில்லை.”

பெருமூச்சுடன் அவள் “நன்று” என்றாள். “காலையில் பிரம்மதருணத்தில் கிளம்புகிறோம்” என்றார் தருமன். “நன்று” என்று அவள் மீண்டும் சொன்னாள். சுஷமர் அப்பால் வந்து பணிந்து நின்றார். தருமன் அவரை நோக்க “மெய்ப்பூச்சு முடிந்துவிட்டது. பூசனைகளை தொடங்கலாமா என்கிறார் பூசகர்” என்றார். “நிகழட்டும்!” என்றார் தருமன்.

திரௌபதி சென்று அன்னைமுன் நின்றாள். உடலெங்கும் குங்குமச்சாத்து சூடிய கொற்றவை பதினாறு  கிளைகளாக வழிந்த குருதித்தடம் போல விரித்த கைகளுடன் நின்றிருந்தாள். அவள் காலடியில் எண்மங்கலங்கள் பரப்பப்பட்டிருந்தன. பன்னிரு நெய்ப்பந்தங்கள் எரிந்தன. முதுபூசகர் வெளிவந்து “கண்மலர்கள் பொருத்தலாம் அல்லவா?” என்றார். “ஆம்” என்றார் தருமன்.

அவர் நீல வைரங்கள் பதிக்கப்பட்ட விழிமலர்களை எடுத்து அன்னையின் முகத்தில் பதித்தார். தருமன் திரும்பி சுஷமரை நோக்க அவர் எண்ணத்தை உணர்ந்த அவர் “இன்று சனிக்கிழமை. நீலக்கண்கள் என்று நெறி” என்றார். குளிர்ந்த இரு நீர்ச்சொட்டுகள் போலிருந்தன அவ்விழிகள். கண்ணீர் நிறைந்தவை போல. கனிந்தவை. கனவுகாண்பவை.

இளம்பூசகர் துடிமீட்டி பாடத் தொடங்கினார். “அன்னை எழுக! இமையாப்பெருவிழியே. வற்றா சுனைமுலையே. அருளும் வலக்கையே. ஆற்றும் இடக்கையே. அலகிலியே. அருகமர்பவளே. அன்னையென்றாகி வருக! அனைத்துமாகி சூழ்க! அளிப்பவளே, உன் மைந்தருக்குமேல் நிழல்தருவென்று கைவிரித்தெழுக!”

முந்தைய கட்டுரைவயதடைதல்
அடுத்த கட்டுரைகுறுங்கதைகள், அராத்து,கடிதம்