ராஜராஜன் – கடிதங்கள்

திரு ஜெயமோகன் அவர்களுக்கு

முன்பொருமுறை ஆப்பிரிக்காவின் வரலாற்றை பற்றி பேசும் பொழுது (நைஜீரியாவில் நடந்த படுகொலைகள் என்று ஞாபகம்) உலக வரலாறு உருவான விதத்தை விளக்க ‘ஜாரெட் டையமண்ட்’ எழுதிய ‘Guns, germs and steel’ என்ற புத்தகத்தை பற்றி குறிப்பிட்டிருந்தீர்கள். அப்புத்தகத்தை நூலகத்தில் எடுத்து படித்தேன். வாசிக்க தொடங்கிய சில பத்திகளிலேயே மிகவும் சுவாரசியமான அதே சமயம் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்றை படிக்கிறேன் என்று புரிந்தது. கடைசி பக்கம் வரை அந்த நம்பிக்கை பொய்க்கவில்லை. சில பாகங்களை (எழுத்து எப்படி மனித குலத்தில் உருவானது, வனவிலங்குகள் எப்படி கால்படைகளாயின போன்றவை) இரு தடவை வாசித்தேன்.

பொதுவாக வரலாறு பற்றி பேசும் பொழுது, “முதலில் இது, அப்புறம் இப்படி ஆனது, பிறகு இந்த நிகழ்வுகள் அரங்கேறின …… இறுதியில் இங்கு வந்து நிற்கிறது”, என்ற தொனியிலே விளக்கும் புத்தகங்களை வாசித்திருக்கிறேன். ஆனால் இப்புத்தகத்தில் எடுத்த எடுப்பிலேயே, “ஏன் சொற்ப எண்ணிக்கையில் ஐரோப்பிய மனிதர்கள், அட்லாண்டிக் பெருங்கடல் தாண்டி, அமெரிக்க கண்டத்தில் வந்தேறிகளாக நுழைந்து, அங்கு தலைமுறைகளாக வாழ்ந்து கொண்டிருந்த பல ஆயிரக்கணக்கான இந்தியர்களை வென்று, அந்நிலங்களை தம்வசமாக்கினர்?, மாறாக ஏன் அமெரிக்க இந்தியர்கள் ஐரோப்பாவை கைப்பற்றவில்லை?” என்ற நடைமுறையில் எல்லோராலும், ‘அது அப்படிதான்’ என்று ‘face value’வில் ஏற்றுக் கொள்ளப்பட்ட விஷயத்தை முன்வைத்து, அதை தோண்டி, திருகி 10000 ஆண்டுகளுக்கு முன் அதற்கான ஆதார விதைகளை கண்டறியும் நேரெதிர் பயணமே, அப்புத்தகத்தின் தனித்துவமாக எனக்கு தோன்றியது.

மற்றொன்று, எந்த விளக்கத்தையும் தற்காலிகமாக கருதி, அது ஏற்பட்டதற்கான காரணத்தை ஆராய்தல். உதாரணமாக: எப்படி குதிரைகளையும், பன்றிகளையும், ஆடு, பாடுகளையும் வட ஆப்பிரிக்க மற்றும் மத்திய கிழக்கு ஆசியாவின், செழி பிறை பகுதியில் (fertile crescent சரி தான?) மனிதன் வளர்ப்பு பிராணிகளாக்கினான் என்று மிக தர்க்கபூர்வமாக அலசி, ஆராய்ந்திருப்பதை படித்து, “அப்பாடி எல்லா காரணங்களும் தெரிந்துவிட்டது” என திருப்தியுடன் அடுத்த பக்கத்தை புரட்டினால், “அது சரி, தென் ஆப்பிரிக்காவில் வரிக்குதிரை, காட்டு மாடுகள், காண்டாமிருகம் என அதே போன்ற விலங்குகள் இருந்தன, அவைகளை மட்டும் ஏன் அப்பகுதி
மனிதர்கள் பழக்கப்படுத்தவில்லை?” என்ற கேள்வியை பார்த்த போது, “நமக்கு ஏன் இது தோன்றவில்லை” என்று ஆச்சரியமாக இருந்தது.

அது ஒரு சுவாரசியமான அபுனைவு மட்டுமல்ல, மாறாக மிக உயர்ந்த தளத்தில் நடத்தப்பட்ட பாரபட்சமற்ற ஆய்வுகளின் முடிவுகள் என போகப் போக புரிந்தது. அவைகளை சுவாரசியமாக்கியது எழுதியவரின் மேலதிக திறமையே.
அதை படித்துவிட்டு அதன் போக்கிலேயே இந்திய துணைகண்டத்தை பற்றி யோசிக்க முயன்றேன். ஆனால் அன்று, இமாலய மலைத்தொடர் ஒரு பெருந்தூணாக மங்கோலிய படையெடுப்பையும், இன்ன பிற உலக நிகழ்ச்சிகளையும் இங்கு பாதிப்பு ஏற்படுத்துவதற்கு ஒரு பெருந்தடங்கலாக இருந்தது என்பதை தவிர்த்து எதுவும் யோசிக்க முடியவில்லை.

உங்களுடைய ‘ராஜராஜ சோழன் காலகட்டம் பொற்காலமா?’ என்ற கட்டுரை படித்த பொழுது, அப்புத்தகத்தின், ‘tribals, band, kingdom, empires’ என்ற பகுதியை தென் இந்தியாவில் பொருத்தி பார்ப்பது போல் இருந்தது. மிகவும் ஆழமாக சிந்தித்து மிக நேர்த்தியாக வடிவமைக்கப் பட்ட கட்டுரை அது. நீங்கள் சொன்னதை போல வரலாற்றுணர்வுடன் மட்டுமே வரலாற்றை வாசிக்க கூடும். இல்லாவிட்டால் ‘இது சரி இது தவறு’ என்று கடந்த கால நிகழ்சிகளுக்கு இன்றைய அளவுகோல்களை கொண்டு முடிவுகளை அறிவித்துவிட்டு மேடையேற்றலாமே தவிர, வரலாற்றிலிருந்து இன்றைய நிலையையும், அது உருவான காரணங்களையும் புரிந்து கொள்ளல் இயலாது. சோழனின் காலகட்டத்தில் குற்ப்பிடப்பட்ட எதிர்மறை அம்சங்களும் அக்காலகட்டத்தின் சூழலில், அதற்கேயுண்டான நெருக்கடியில் தவிர்க்கவேமுடியாது என்பதை உங்கள் கட்டுரை தெளிவாக காட்டுகிறது. “சங்ககால தமிழ் மக்கள் வாழ்கைமுறை” என்று தமிழ்நாடு அரசு வெளியிட்டிருந்த ஒரு புத்தகத்தை படிக்க முயன்றேன். “முடியல…”

என் தனிப்பட்ட விருப்பம் சார்ந்ததாக அது இல்லாததால் கூட இருக்கலாம். ஆனாலும் எப்படி விளம்பப்படுகிறது என்பதும் முக்கியம் என்பது உங்கள் கட்டுரை படித்த பொழுது புரிந்தது. உங்கள் கட்டுரை கட்டாயமாக எனக்கு தென்னிந்திய வரலாற்றை எப்படி அணுக வேண்டும் என்பதற்கு ஒரு நல்ல தொடக்கமாக இருந்தது என்று சொல்வேன். அப்படிப் பார்க்கும் பொழுது உங்கள் கட்டுரை “Guns, Germs and Steel” இன் தென்னிந்திய பகுதியை விளக்கும் மேலதிக இணைப்பு என்றே சொல்வேன்.இதைப் போல வேறு கட்டுரைகளையும் எதிர்பார்க்கிறேன்.
வணக்கம்.

முத்துகிருஷ்ணன்

அன்புள்ள முத்துகிருஷ்ணன்,

ஜாரேட் டயமண்டின் நூல் எனக்கு மிகவும் உதவியாக இருந்தது. அதுபோல பல நூல்கள் உள்ளன. சிந்திக்க ஆரம்பித்த காலகட்டத்தில் என்னை கவர்ந்த டி டி கோஸாம்பியின் நூல்களை நான் இன்றும் அடிப்படைநூல்களாகக் கொள்கிறேன். அவற்றின் முடிவுகள் பல தாண்டிச் செல்லப்பட்டுவிட்டன. அவற்றின் வழிமுறைகளும் பல முன்முடிவுகள் கொண்டவை. ஆனாலும் மாற்று ஆய்வுக்கோணம் எனக்கு சிக்கவில்லை. ஆகவே நான் அந்த ஆய்வுமுறையை முடிவானதாகக் கொள்ளாமல், நிபந்தனைகளுடன், எல்லைக்குட்பட்டு கையாள்கிறேன்

ஜெ

நண்பர் ஜெயமோகன் அவர்களுக்கு,

வணக்கம். நான் தங்களது பல கட்டுரைகள், குறிப்பாக புராதன சின்னங்கள், செய்திகள் சார்ந்த எதையும் விட்டுவைக்காமல் படித்து வருபவன்; ரசிப்பவன். குறிப்பாக ஆதிச்சநல்லூரில் ஒரு சாதாரண குடிமகன் விளக்கும் செய்திகள். ..

சமீபத்தில் தாங்கள் எழுதியுள்ள ராஜராஜன் காலத்து ஆட்சி முறை பற்றிய கட்டுரையில் 99% விழுக்காடு செய்திகள் ஆய்வுபூர்வமாக யோசித்து அழகாக வடிக்கப்பெற்றிருப்பினும், பெண்கள் அடக்கப் பட்டார்கள் என்பதற்கான சான்று ஏதும் இல்லை. ஏனெனில், பல கோயில்கள் பெண்களே எடுத்துக் கட்டியதையும், தனி ஆதூர சாலைகள் அமைத்தது பற்றியும், தனி பள்ளிப்படை கொண்டதையும், ராஜராஜனின் அரசியல் ஆசான் தனது தமக்கையார் குந்தவையாரே என்பதும் ஆதாரபூர்வமான செய்திகளாய் இருக்கையில், பெண்கள் அடிமைகளாக நடத்தப்பட்டதாக கூறுவது சற்றே நெருடுகிறது.
கட்டுரையில் மாற்றங்கள் நிகழுமா? கட்டுரை ஆசிரியரின் உரிமை அது..:)
அன்பன்,

ஜெ. சந்திரசேகரன்

http://maraboorjc.blogspot.com
http://sirichuvai.blogspot.com
http://fourthpillar.wordpress.com

To save culture & heritage visit:
www.conserveheritage.org
http://templesrevival.blogspot.com
http://reachhistory.blogspot.com
join http://groups/yahoo.com/temple_cleaners

to do your bit to uplift the society visit
www.dreamindia2020.org

அன்புள்ள சந்திரசேகரன்

ராஜராஜசோழன் காலகட்டத்தில் பெருவாரியாக நிலம் வேளாண்மைக்கு வந்தது. நிலவுடைமைச்சாதிகள் பலம்பெற்றன. இந்நிலங்கள் தந்தைவழிச் சொத்துரிமை மூலம் வாரிசுகளுக்குச் சென்றன. தமிழ்நாடு முழுக்க பல்வேறு வகைகளில் கைமாறப்பட்ட சொத்துரிமையை ராஜராஜசோழன் ஒற்றைநெறிப்படுத்தில் தந்தைவழியாக மாற்றினார். இதன்மூலம் நாடெங்கும் ஒரே குடிமைச் [சிவில்]சட்டம் உருவாக வழியமைத்தார். ஆனால் இது இன்றும் தமிழகத்தில்நீடிக்கும் ஆண்கள்மையக் குடும்ப அமைப்பை உருவாக்கியது. பெண்கள் வீடுகளுக்குள் ஒடுங்க நிர்ப்பந்திக்கப்பட்டார்கள். அவர்களுக்கு ஒரு பழங்குடிச் சமூகம் அளித்துவந்த சொத்துரிமைகளும் பிற உரிமைகளும் மெல்லமெல்ல இல்லாமலாயின.

இது இரு வகை பெண்களுக்கு பொருந்தாது. அரசகுலப்பெண்டிர் கல்விகற்றனர். நிர்வாகங்களில் தலையிட்டனர். கோயில்கள் கட்டினர். தாசிகளும் கல்வி கற்றனர். பொருளியல் சுதந்திரத்துடன் இருந்தனர். கோயில்கள் கட்டினர். ஆனால் அதுவல்ல சாதாரணப் பெண்களின் நிலை. அதை அன்றைய கல்வெட்டாதாரங்களில் காணமுடிகிறது

ஜெ

அன்புள்ள ஜெ சார்,
வணக்கம் & வாழ்த்துக்கள்.

சோழர் கால உத்திரமேரூர் கல்வெட்டுகள் பற்றி அறிவீர்கள். அதன்படி சதுர்வேதி மங்கலங்களாகவும் -குடும்புகளாகவும் நிலபரப்பு பிரிக்கப்பட்டது. குடவோலை மூலம் தேர்தல் நடைபெற்றது. 1988 களில் ராஜிவ்காந்தி அவற்றை பார்வையிட்டு உருவானதுதான் “பஞ்சாயத்ராஜ்” என்ற அமைப்பு.

காமராஜ் ம

அன்புள்ள காமராஜ்

மங்கலம் என்ற பின்னிணைப்புள்ள ஊர்கள் பிராமணார்களுக்கு வரிவசூல் உரிமை நன்கொடையாக அளிக்கப்பட்டவை. சேரி என்ற பின்னடைவுள்ள ஊர்கள் அவர்களின் அக்ரஹாரங்கள் அமைந்தவை. [சேரி என்ற பொருளுள்ள சம்ஸ்கிருத வார்த்தைதான் அக்ரஹாரம்]

இந்தியாவில் கிராமநிர்வாக முறை [பஞ்சாயத்து] மிகமிகத் தொன்மையான காலம் முதலே இருந்து வந்துள்ளது. நீங்கள் டாக்டர் அம்பேத்கார் எழுதிய ‘ புத்தரும் அவரது தம்மமும்’ என்ற அற்புதமான ஆய்வுநூலை வாசித்தால் சாக்கியகுலத்து பஞ்சாயத்து அமைப்புகளை அவர் பண்டையநூல்களில் இருந்து ஆராய்ந்து எழுதியிருப்பதை காணலாம்.

ஆந்திராவில் ராணி ருத்ராம்பாள் [காகதீய பேரரசு] மிகச்சிறந்த பஞ்சாயத்து அமைப்புகளை உருவாக்கி பலநூற்றாண்டுக்காலம் நீடிக்கச் செய்தாள். சுதந்திரமான கிராமநிர்வாக அமைப்பு என்பது இந்தியாவுக்கே உரிய ஒரு சிறப்பம்சம். தரம் பால் என்ற காந்திய அறிஞர் தொன்மையான இந்திய பஞ்சாயத்து அமைப்பு குறித்து விரிவாக எழுதிய முன்னோடி.

காந்தி குஜராத்தில் அவரது காலகட்டத்திலேயே வலுவான பஞ்சாயத்து அமைப்புகளைக் கண்டார். அதைஒட்டியே அவரது ஹிந்து சுயராஜ் என்ற நூலின் சிந்தனைகளை உருவாக்கிக் கொண்டார். அதில் அவர் இந்தியாவை சுதந்திரமான கிராம அமைப்புகளின் கூட்டமைப்பாக உருவகம் செய்தார். பஞ்சாயத்து ராஜ் என்பது காந்தி கண்ட கனவு

ராஜீவ்காந்தி காலத்தில் மணிசங்கர் அய்யரின் முயற்சியால் உருவான பஞ்சாயத்து ராஜ் அமைப்பு ஏற்கனவே காந்தியவாதிகளால் தொடர்ந்து முன்வைக்கப்பட்ட கருத்தின் நீர்த்த வடிவம்தான். இன்றைய பஞ்சாயத்துராஜ் சுதந்திரமானது அல்ல. அதன்மீது மாவட்ட நிர்வாகத்தின் பிடி மிக அதிகம். அதன் நிதி முழுக்கமுழுக்க அரசு கட்டுப்பாட்டில் உள்ளது. மேலும் கட்சி அரசியல் அதை ஊழலில் தள்ளிவிட்டது

இருந்தாலும் ஓரளவு குடிமை உணர்வுள்ள மக்கள் உள்ள கிராமங்களில்கூட பஞ்சாயத்து ராஜ் அமைப்பு மகத்தான மாறுதல்களை நிகழ்த்தியிருக்கிறது. தமிழகத்தில் பல முன்மாதிரியான கிராமங்கள் குமரிமாவட்டத்தில் உள்ளன

ஜெ

ராஜராஜ சோழன் காலகட்டம் பொற்காலமா?

ராஜராஜ சோழன் காலகட்டம் பொற்காலமா?–2

முந்தைய கட்டுரைஅ.முவின் நாட்கள்
அடுத்த கட்டுரைகாந்தியும் விதவைகளும்