தேசிகவினாயகம் பிள்ளை தமிழ் விக்கி
அ.கா.பெருமாள்
நாகர்கோவிலில் மிக முக்கியமான நகரச்சந்திப்பு ஒன்றுக்கு ‘நடுக்காட்டு இசக்கியம்மன் பேருந்து நிறுத்தம்’ என்று பெயர். திருவனந்தபுரம் நெடுஞ்சாலை ஆகையால் சரசரவென்று பேருந்துகள் ஓடும், கடைகளும் பங்களாக்களும் நிரம்பிய, இப்பகுதியில் சாலையோரமாகவே நடுக்காட்டு இசக்கியம்மனின் கோயில் உள்ளது. கோயில் என்பது சரியல்ல. குடில். வெள்ளைபூசப்பட்ட சிறு களிமண் சுவர்கள் கொண்ட ஓலைவேயப்பட்ட சிறு அமைப்பு ஒன்று. சுற்றிலும் மரத்தடிகளில் வேறு துணைத்தெய்வங்கள். அங்கே சென்று நின்றால் சற்று நேரத்தில் எல்லா சந்தடிகளையும் மறந்து காட்டின் தனிமையும் அமைதியும் பயங்கரமும் நம் மனதில் படர்கின்றன.
நாகர்கோவில் நகரை அதிகபட்சம் இருநூறு வருடங்களுக்கு முன்னால் கொண்டுபோக முடியாது. நகரின் அப்பகுதி லண்டன் மிஷன் பாதிரியார் ‘மெட்’ [Mead] அவர்களால் நூற்றைம்பது வருடம் முன்பு விரிவுபடுத்தப்பட்டது. நடுக்காட்டு இசக்கியம்மனுக்கு எத்தனை வருட வரலாறு இருக்கும்? ஆயிரம், இரண்டாயிரம்? சொல்ல முடியாது. அவள் கண்முன் யுகங்களே கடந்து சென்றுவிட்டிருக்கலாம்.
நமது கலாச்சாரத்தின் மையத்தில் உறங்கும் இந்த அதிபுராதனக் கூறு நமது சக்திமையங்களில் ஒன்று. நாகர்கோவில் நகரை நமது நவீன மனம் என்றால் நடுக்காட்டு இசக்கியம்மன் வாழ்வது நமது ஆழ்மனத்தில் எனலாம். நமது பேரிலக்கியங்களின் ஆழத்தில், நமது மதங்களின் சாரத்தில் இந்த தொல்பழைமை உறைகிறது. நம் மனதை, நமது கலாச்சாரத்தை அறிய அதை நாம் அறிந்தே ஆகவேண்டும்.
***
நாட்டார் வழக்காற்றியல் என்ற அறிவுத்துறைக்கு மேற்கே உள்ள அர்த்தங்கள் வேறு. அது அவர்களின் அழிந்துவிட்ட பண்பாட்டுக் கூறுகளை ஆராய்வதாகவோ, அவர்களைவிட பிற்பட்டவை என அவர்கள் நம்பும் கலாச்சாரங்களைப்பற்றிய ஒப்பாய்வாகவோ அவர்களுக்கு பொருள்படலாம். அவர்கள் உருவாக்கிய ஆய்வு முறைமை மற்றும் அவர்களுடைய அடிப்படைக் கொள்கைகள் ஆகியவற்றிலிருந்தே அத்துறை இங்கே உருவாயிற்று. ‘நாட்டார்’ என்ற சொல்லேகூட ஒரு மொழிபெயர்ப்புக் கலைச்சொல்தான். ஃபோக் லோர் என்ற சொல்லை பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரி ஆய்வாளர் பேரா: தெ.லூர்து ‘நாட்டார் வழக்காற்றியல்’ என எண்பதுகளில் மொழிபெயர்த்தார். அது மெல்ல ஏற்றுக் கொள்ளப்பட்ட சொல்லாயிற்று. நம்முடைய சூழலில் நாட்டாரியல் ஆய்வு என்பது ஆழமான ஒரு சுய கண்டடைதலுக்குரிய பயணம். ஆகவே மேலைநாடுகளைப்போல அது இங்கு ஒரு தனித்த அறிவுத்துறையாக அல்லது கல்விநெறியாக இயங்கக்கூடியதல்ல. வரலாற்றாய்வு, தத்துவம் மற்றும் மெய்யியல், அரசியல், இலக்கியம், கலைகள், மாற்று வேளாண்மை மற்றும் மாற்று மருத்துவம் போன்ற பலதுறைகளையும் தொட்டு விரியக்கூடிய ஓர் அடிப்படை அறிவுத்துறையாக உள்ளது.
நாட்டார் இலக்கியம் நம் மக்கள் வாழ்க்கையுடன் இரண்டறக்கலந்த ஒன்றாகையால் அதன் பெரும்பகுதி எப்போதும் உயிர்ப்புடன்தான் இருந்து வந்துள்ளது. அச்சு முறை உருவானதுமே செவ்விலக்கியங்களைவிட வேகமாக நாட்டாரிலக்கியங்கள் அச்சில் வந்தன. அல்லி அரசாணி மாலை முதலியவை பத்தொன்பதாம் நூற்றாண்டிலேயே அச்சாகிவிட்டன. நாட்டார் வழக்காற்றியல் துறைகள் நம் கல்வித்தளத்தில் உருவாவதற்கு முன்னரே நாட்டார் வழக்காற்றியலில் முன்னோடி ஆய்வுகளும் தரவு தொகுப்புகளும் நடைபெற்று விட்டிருந்தன. பேராசிரியர்.நா.வானமாமலை தன் ஆய்வுகள் மூலமும், தான் நடத்திய ‘ஆராய்ச்சி’ என்ற இதழ் மற்றும் ஆய்வு வட்டம் மூலமும் நாட்டாரியல் என்ற தனித்த அறிவுத்துறைக்கான அடித்தளத்தை அமைத்தார்.
அ.கா.பெருமாள் உள்ளிட்ட ஆய்வாளர்களுக்கு உந்துவிசையாக அமைந்த துவக்கம் அது. அரசு உயரதிகாரியாக பணியாற்றி தன்னுடைய சுய ஆர்வத்தாலும் சொந்த பணத்தாலும் நாட்டாரியலில் முக்கியமான தரவுகளை சேர்த்து, வழிகாட்டியான முடிவுகளை உருவாக்கிய பி.எல்.சாமியின் ஆய்வுகள் வெளிவந்துவிட்டிருந்தன. ஆனால் கல்வித்துறை சார்ந்த அங்கீகாரம் நாட்டாரியலுக்கு கிடைத்ததுமே அதன் எல்லைகள் விரிந்தன. அதன் ஆய்வுமுறைகள் தரப்படுத்தப்பட்டன. அதே சமயம் பல்கலை ஆய்வுகளில் கணிசமானவை வெறும் குப்பைகளாக, பொய்யான ஆய்வுகளாக வெளிவரும் நிலை உருவாகியுள்ளது என்று சொல்லப்படுகிறது. இன்று நாட்டாரியல் மீதுள்ள கவனத்தை, அது வகிக்கக்கூடிய பங்கை நமது கல்வித்துறையாளர் பெரும்பாலும் உணரவில்லை என்பதே தொடர்ந்து இவ்வாய்வுகளை கவனித்து வருகையில் எனக்குத் தோன்றிய எண்ணம்.
**
‘இந்திய வரலாற்றுக்கு ஒரு முகவுரை’ என்ற தன் பிரபல நூலில் நவீன இந்திய வரலாற்றாசிரியரான டி.டி.கோசாம்பி இந்திய வரலாற்றை ஆய்வு செய்ய போதுமான ஆதாரங்கள் இல்லாத நிலையைப் பற்றிய கவலையுடன்தான் துவங்குகிறார். நமக்கு கிடைக்கும் ஆதாரங்களில் பெரும்பாலானவை எங்கும் ஒட்டாத உதிரித்தகவல்கள். வரலாற்றை மன்னர்கள் மற்றும் நகரங்கள் குறித்த தகவல்களிலிருந்து உருவாக்கிவிடமுடியாது. மக்கள் வாழ்ந்த முறை தெரியவேண்டும். அவர்களுடைய பொருளியல் உற்பத்தி வினியோக முறைகள் மிக முக்கியமானவை. அவை குறித்த நேரடித் தரவுகள் இல்லாத நிலையில் வரலாற்றை அறிய டி.டி.கோசாம்பி இரு முக்கியமான வழிமுறைகளைக் கண்டடைகிறார். மக்களிடையே புழங்கும் ஐதீகங்களையும் வாய்மொழி வரலாறுகளையும், மக்கள் வணங்கும் கடவுள்களையும் குறித்த தகவல்களை திரட்டி அவற்றுக்கு குறியீட்டுரீதியான விளக்கம் அளித்து வரலாற்றை அறிதல். இன்னொன்று மானுடவியல் சார்ந்த பார்வை. இன்னும் இந்தியாவில் மக்கள் நிர்வாணமான பழங்குடி நிலை முதல் நாகரீகத்தின் எல்லா படிநிலைகளிலும் வாழ்கிறார்கள். இவர்களைப்பற்றிய தகவல்களை திரட்டி அடுக்கி ஒரு பரிணாம வரலாற்றை உருவாக்கிக் கொள்ள முடியும். இந்த கோணம் வரலாற்றாய்வில் நாட்டாரியல் மற்றும் மானுடவியலுக்குள்ள முக்கியத்துவத்தை பெரிதும் வலியுறுத்துகிறது.
நமது வரலாற்றாய்வில் நாட்டரியல் வகிக்கக் கூடிய பங்கு பற்றி இன்னமும் வரலாற்றாய்வாளர்களிடையே விழிப்பு இல்லை என்பதை இத்துறை சார்ந்த ஆய்வேடுகளில் நாட்டாரியல் சான்றுகள் மிகக்குறைவாக மட்டுமே பயன்படுத்தப்பட்டிருப்பதிலிருந்து அறியலாம். நாட்டாரியல் சார்ந்த ஆதாரம் இன்னமும் வரலாற்றாய்வில் முதல் கட்ட ஆதாரமாக கொள்ளப்படவில்லை. நாம் வரலாற்றை இன்னமும் செவ்வியல் முறைப்படி தொல்பொருள் ஆதாரங்கள் மற்றும் இலக்கிய ஆதாரங்களிலிருந்தே உருவாக்கிக் கொள்கிறோம். இது குறித்து ஒரு முக்கிய வரலாற்றாய்வாளரிடம் பேசியபோது அவர் நாட்டாரியல் தரவுகள் நிலைத்த தன்மை இல்லாமல் மாறிக் கொண்டிருக்கும் இயல்பு கொண்டவை என்பதனால் அவற்றை மூல ஆதாரங்களாக கொள்ள முடியாது என்றார்.
அதை நாட்டாரியல் அறிஞர்கள் அனைவருமே திட்டவட்டமாக மறுக்கிறார்கள். நாட்டாரியல் தரவுகள் பல்லாயிரம் மக்களின் பங்களிப்புடன் நீடிப்பவை. பெரும்பாலானவை நிகழ்கலைகளுடனும் சடங்குகளுடனும் தொடர்புடையவை. ஆகவே அவற்றில் மாறுதல் செயற்கையாக நிகழ்வது மிக மிக அரிது என்றார்கள். மாறுதல் நிகழ்வது மெல்லமெல்ல மக்களின் மனநிலையில் ஏற்படும் மாற்றம் வழியாகவே. அப்போதுகூட அம்மாறுதல்களின் தடம் தெளிவாகத் தெரியும்படித்தான் அவை நிகழ்கின்றன. நேர்மாறாக செவ்விலக்கியங்கள்தான் ‘சான்றோர்’ உடமையாக தனிச்சொத்துபோல இருந்தன, அவற்றில்தான் இடைச்செருகல்கள் அதிகம் என்கிறார்கள். நூறு வருடப்பதிவுகளை வைத்துப் பார்த்தால் செவ்விலக்கியங்கள்தான் பாடபேதங்கள் கொண்டிருக்கும் நாட்டார் நம்பிக்கைகள் மற்றும் சடங்குகளில் பெரிய மாற்றம் ஏதும் நிகழ்ந்துவிட்டிருக்காது என்கிறார்கள்.
தொல்லியல், இலக்கியத் தடயங்களை பயன்படுத்தி எழுதப்பட்ட முதல்கட்ட வரலாறு அதிகமும் மன்னர்களைப்பற்றியதாக, அதிகார சக்திகளைப்பற்றியதாக இருக்கும். இதன் அடுத்த கட்டமாக மக்களின் வரலாற்றை எழுத முற்படும்போதுதான் நாட்டாரியல் போன்ற துறைகளின் தரவுகள் தேவைப்படுகின்றன. மக்கள் வரலாற்றை அடித்தளம் நோக்கி கொண்டு வரும்தோறும் நாட்டாரியல் தரவுகள் இன்றி வேறு தரவுகளே இல்லாமலாகின்றன. மக்கள் வரலாறே வரலாறு என எழுத முற்பட்ட டி.டி.கோசாம்பியே நாட்டாரியல் தரவுகளை மிக அதிகமாக பயன்படுத்திய முன்னோடி வரலாற்றாசிரியர் என்று காணலாம். கோசாம்பியின் நூல்கள் வெளியாகி அரை நூற்றாண்டு ஆனபிறகும் கூட நம் ஆய்வுகளில் அவற்றின் பாதிப்பு மிக மிகக் குறைவேயாகும். பிரபலமான ‘ஐதீகமும் உண்மையும்’ [Myth and Reality] என்ற அவரது நூல் நாட்டாரியல் தரவுகளை ஆதாரமாகக் கொண்டு வரலாற்றை ஆராய்வதற்கு சிறந்த உதாரணமாகும்.
இதிலிருந்து தாய்தெய்வங்களைப்பற்றிய ஒரு கட்டுரையை நான் சுருக்கி தமிழாக்கம் செய்தேன். மகாராஷ்டிர மாநிலத்தின் பலநூறு தாய்தெய்வங்களின் தோற்றம், இடமாற்றம், உறவு ஆகியவற்றை ஆராயும் டி.டி.கோசாம்பி அதன் வழியாக அத்தெய்வங்களை வழிபட்ட, குலஅடையாளமாகக் கொண்டிருந்த மக்கள்கூட்டங்களின் வரலாற்றையே உருவாக்கிக் காட்டுகிறார். உதாரணமாக மகிஷாசுரமர்த்தினி பற்றிய அவரது ஆய்வை சொல்லலாம். நிலையான வாழ்க்கைகொண்ட வேளாண்குடிகள் தாய் தெய்வங்களை வழிபட்டன. நிலையற்ற அலைச்சல் வாழ்க்கை கொண்ட இடையர்குடிகள் எருமை [மகிஷம்] போன்ற தெய்வங்களை வழிபட்டன. நாட்டார் தெய்வ மரபில் ஒரு இடத்தில் மகிஷன் தேவியின் கணவனாக சித்தரிக்கப்பட்டிருப்பதை டி.டி.கோசாம்பி கண்டடைகிறார். இரு குலங்களும் நட்புறவு கொண்டதை அது காட்டுகிறது என்கிறார். பிறகு வேளாண்குலம் இடைக்குலத்தை வென்றதை மகிஷாசுரமர்த்தினி மகிஷனை கொல்லும் ஐதீகம் காட்டுகிறது.
நமது மாரியம்மன்கள், திரெளபதை அம்மன்கள், கன்னியம்மன்கள் பற்றிய தகவல்கள் இன்னும் நமது வரலாற்றாய்வுக்கு பயன்படுத்தப்படவில்லை. அப்படி பயன்படுத்தப்பட்டிருந்தால் நம் வரலாறு இப்போது இருக்கும் வடிவிலிருந்து முற்றாக மாறுபட்டு புதிய வடிவங்களை அடையக்கூடும். எழுதப்படாத பல வரலாறுகள் திறக்கக் கூடும். இரு உதாரணங்களை மட்டும் சொல்கிறேன். தன்னுடைய கட்டுரை ஒன்றில் ஆ.சிவசுப்ரமணியம் அவர்கள் நெல்லை மாவட்ட பெண்தெய்வங்களில் பெரும்பாலானவை ஜமீந்தார்களால் கற்பழித்துக் கொல்லப்பட்ட பெண்கள்தான் என்று விரிவான தரவுகளை முன் வைக்கிறார். நமது மத்தியகால வரலாற்றின் மீது எந்தக் கல்வெட்டைவிடவும் வெளிச்சம் வீசும் தகவல் இது. இந்நூலின் ஒரு கட்டுரையில் அ.கா.பெருமாள் அவர்கள் சோழ மன்னனிடம் கைக்கோளப்படையாக [மெய்க்காவல் படையாக] உயர்ந்த அந்தஸ்தில் இருந்த ஒரு கூட்டம் மன்னனிடம் கோபித்துக் கொண்டு குமரிமாவட்டம் வந்து பிழைக்க வழிதேடி நெசவாளர்கள் ஆகி ‘கைக்கோள முதலியார்‘ ஆனதைப் பற்றி சொல்கிறார்.
ஏற்கனவே இருந்த, தாழ்ந்த சாதியினரான சாலியர்களைவிட கீழான இடத்தை இவர்கள் பெற்றனர். அவர்கள் தரைக்குமேல் தறிவைத்து இருக்கைபோட்டு அமர்ந்து நெசவு செய்தபோது இவர்கள் குழிக்குள் அமர்ந்து நெசவு செய்யவேண்டும் என்று சொல்லப்பட்டது. இதைப் போன்ற தரவுகள் வரலாற்றாய்வுக்கு பயன்படுத்தப்படும்போதுதான் நமது வரலாற்றாய்வு முழுமைப்படமுடியும். முதல் தரவு நமது மன்னர்கள் உண்மையில் எப்படி தங்கள் பிரஜைகளை ஆண்டார்கள் என்பதற்கான ஆதாரமாகும். அவர்கள் மெய்கீர்த்திகளிலிருந்து நாம் உருவாக்கும் வரலாறுகளுக்கு நேர்மாறான வரலாறு இது. இரண்டாம் தரவு சாதிகள் எப்படி தொழிலையும் சமூகஅதிகாரத்தையும் அடிப்படையாகக் கொண்டு மறுநிர்ணயம் செய்யப்படுகின்றன என்பதற்கான ஆதாரம். இன்றுள்ள சாதி அமைப்பை அப்படியே எடுத்துக் கொள்ளாமல் அதன் படிநிலை மாற்றங்களைப்பற்றிய ஒரு சித்திரத்தை உருவாக்கிக் கொள்ள நம்மை இது தூண்டுகிறது.
நமது வரலாற்றாய்வில் உள்ள மாபெரும் இடைவெளிகள் பல இன்னமும் நிரப்பப்படவில்லை. கடுமையாக சொல்லப்போனால் சதாசிவப்பண்டாரத்தார், சீனிவாச சாஸ்திரி தொடங்கி கே.கே.பிள்ளை, ஆரோக்கிய சாமி வரையிலான ஒரு காலகட்டத்துக்கு பிறகு வரலாற்றாய்வில் என்ன நடக்கிறது என்பதே பொதுஅறிவுச்சூழலுக்கு வரவில்லை. ஆய்வேடுகளை கவனித்தால் பெரிதும் தொழில்நுட்ப விவாதங்களையே காணமுடிகிறது. இரு கேள்விகளை உதாரணமாக சொல்லலாம். ஒன்று: தமிழகத்தில் சமண பெளத்த மதங்களின் அழிவுக்கு பிறகு அம்மதங்களின் கலாச்சாரக்கூறுகள் எங்கு சென்றன, எப்படி உருமாறின? இரண்டு: தமிழகத்தில் இப்போது நிலமற்ற தலித் சாதிகளாக இருக்கும் பல சாதிகள் முன்பு நிலவுடைமை சாதிகளாக இருந்தன என்று சொல்லப்படுகின்றன. அதற்கு ஆதாரம் உண்டா? அந்த நில இழப்பு நடந்தது எப்படி? இக்கேள்விகளுக்கு அரசியல் சார்ந்த ஊகங்கள் மட்டுமே முன்வைக்கப்படுகின்றன. இவற்றை ஆராயப்புகும்போது முக்கியமான தரவுகளை நாட்டாரியலே தரமுடியும். பல சமண பெளத்த தெய்வங்கள் நாட்டார் தெய்வங்களுடன் கலந்துள்ளன, நாட்டார் தெய்வங்களாகவே ஆகியுள்ளன. தலித் சாதிகளின் வாய்மொழிப்பாடல்களை ஆராய்வதும், அவர்கள் குலதெய்வங்களை அடிப்படையாகக் கொண்டு அவர்கள் இடப்பெயர்ச்சியின் சித்திரத்தை அமைப்பதும் இக்கேள்விகளுக்கு பதில் அளிக்கக் கூடும்.
வரலாற்றாய்வில் நாட்டாரியல் உரிய முறையில் பயன்படுத்தப்படும்போதே தமிழக வரலாற்றின் அடுத்த கட்ட நகர்வு சாத்தியமாகும் என்று சொல்லலாம்.
***
தத்துவமும் மெய்யியலும் [அதாவது ஆன்மீகமும் மதமும்] இங்கே பிரித்துப்பார்க்கப்படாமல் இணைந்தே உள்ள விஷயங்கள். ஆகவே நமது தத்துவ ஆராய்ச்சிக்கும் மேலைநாட்டு தத்துவ ஆராய்ச்சிக்கும் அடிப்படை வேறுபாடுகள் உள்ளன. மேலைநாட்டில் தத்துவம் நீண்ட காலம் முன்னரே தனியாக பிரிந்து தன்னளவில் முழுமையான ஓர் உலகை உருவாக்கிக் கொண்டு வளர்ந்து வந்தது. தொடர்ச்சியான தத்துவ விவாதத்தை அங்கே பல நூற்றாண்டுகளாக காணமுடிகிறது. நம் நிலை அப்படி அல்ல. இந்திய தத்துவத்தை தத்துவம் என்று சொல்வதுகூட மிகைதான். அது இறையியலும் மெய்யியலும் கலந்த ஓர் அமைப்பு. ஆகவே அதில் தருக்கங்களைவிட படிமங்களுக்கே முக்கியத்துவம் அதிகம். அப்படிமங்களுக்கு அடிப்படையாக அமையும் ஆழ்படிமங்கள் இங்கே தத்துவ சிந்தனையில் மிக மிக ஆழமான பங்கை ஆற்றுகின்றன.
உதாரணமாக நான் விஷ்ணுபுரம் நாவலை எழுதியபோது எனக்கு ஏற்பட்ட ஒரு மனப்பயணத்தை இங்கே நினைவுகூரலாம். பிரபஞ்ச ரூபனாக மல்லாந்து படுத்த விஷ்ணுவின் பேருடலே அந்நாவலின் தத்துவ தரிசனத்தின் மையம். அந்த சிற்பத்தின் முன்னோடி வடிவம் பரிநிர்வாணபுத்தரின் ‘தர்ம காய‘ உடல் என கண்டடைந்தேன். புத்த தர்மத்தின் படி பிரபஞ்சம் தர்மத்தின் தூல வடிவம். ஆகவே தர்மகாய புத்தர் தத்துவார்த்தமாக ‘பிரபஞ்ச ரூபன்’ தான். அச்சிலையையும் ஊடுருவிச்சென்றால் நாம் காண்பது இறந்த மூதாதையை இறந்த வடிவில் [படுத்த வடிவில்] சிற்பமாக செய்து வழிபடும் பழங்குடி மரபை. பல்வேறு நாட்டாரியல் ஆய்வுகள் மூலமாக இன்றுகூட நம் பழங்குடி மதமரபில் இப்படி மண்ணில் படுத்த சிலைகளைச் செய்து வழிபடும் வழக்கம் இருப்பதை அறிந்தேன். நுட்பமாக பார்க்கும் போது இது ஒரு சிற்பத்தின் பரிணாமம் மட்டுமல்ல. இது ஒரு தத்துவத்தின் பரிணாமம். இறந்த மூதாதை மண்ணாகி, பின் பிரபஞ்சமாகி, பின் பிரபஞ்ச ரூபனாக வடிவம் கொள்ளும் வளர்ச்சிப்போக்கை நாம் இங்கே காண்கிறோம். அதை நான் என் நாவலில் எழுதினேன்.
‘இந்திய தத்துவ சிந்தனை வளர்ச்சியை தத்துவ அமைப்புகளைப்பற்றிய ஆய்வினூடாக மட்டும் நாம் அறிந்துவிட முடியாது. பெரும்பாலானவர்களால் பின்பற்றப்படும் எந்த மத நம்பிக்கையிலும் பழங்குடி மரபின் அம்சங்கள் உண்டு. நாகரீகத்தின் தொடக்கம் முதல் இன்றுவரை இருந்துவரும் சில ஐதீகங்களையும் தொன்மங்களையும் படிமங்களையும் அவற்றில் காணலாம். அவற்றை பகுப்பாய்வு செய்துபார்க்கும்போது வரலாற்றின் வளர்ச்சிப்படிகளும் தத்துவ சிந்தனையின் பரிணாமமும் தெளிவுபடக் கூடும். இவ்வாய்வை புறக்கணித்துவிட்டு உன்னத தளங்களை வைத்து மட்டும் இந்திய சிந்தனை வரலாற்றை எழுத முற்படுவது உண்மையை திரிபடையச் செய்வதற்கு நிகர்’ என்ற கருத்தை டி.டி.கோசாம்பி தன் ஐதீகமும் உண்மையும் நூலில் உள்ள முன்னுரையில் விளக்கமாகச் சொல்கிறார். மறைந்த கே.தாமோதரன் அவர்கள் ரிக்வேதத்தை புரிந்துகொள்ள நாட்டாரியலை மிக அழகாக பயன்படுத்துவதை அவரது ‘இந்திய சிந்தனை’ என்ற நூலில் காணலாம்.
பழங்குடி மரபின் மந்திர பாடல்கள் மற்றும் பூசைச் சடங்குகள் எப்படி படிம வடிவம் கொண்டு வேதம் போன்ற செவ்விலக்கிய வடிவம் கொண்டன என அவர் ஆராய்கிறார். கேரள பழங்குடிகளான மலைவேடரின் மந்திரப்பாடலை அதே போன்ற வரிகளைக் கொண்ட ரிக் வேத பாடலுடன் ஒப்பிடும் கே.தாமோதரன் அதனூடாக ரிக்வேத காலத்துக்கு முந்தைய மதம் பழங்குடி மந்திரச் சடங்குகளிலிருந்து கிளைத்ததே என வாதிடுகிறார். என் தத்துவ நூலான ‘இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள்’ -ல் சாங்கியம் யோகம் போன்ற ஆதி தரிசனங்களுக்கு பழங்குடி மரபில் வேர்கள் இருக்கக் கூடும் என்பதற்கான சில காரணங்களை விவரித்துள்ளேன். அதைப்போல நமது தாந்திரிக மதங்களை புரிந்துகொள்ளவும், நம் மரபில் உள்ள பல சிற்பங்களின் ஆதிவடிவங்களை புரிந்துகொள்ளவும் நாட்டாரியல் ஆய்வுகளை மிக நுட்பமாக பயன்படுத்த முடியும். தத்துவவாதிகளால் உரிய முறையில் நாட்டாரியல் அணுகப்படும்போது பல கேள்விகளுக்குத் தெளிவான பதில் கிடைக்கக் கூடும்.
***
நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் நம் அரசியல் சாதி சார்ந்தது. இங்கே மக்கள் சாதிகளாகவே குவிகிறார்கள், சாதிகளுக்கு இடையேயான அதிகாரப் போராட்டமே நமது அரசியலின் போக்குகளை தீர்மானிக்கிறது. நமது சாதி அரசியலில் நாட்டாரியல் நேரடியாக பங்கு கொள்ள ஆரம்பித்து பல காலமாயிற்று. இதன் துவக்கம் என ‘மதுரைவீரன்’ திரைப்படத்தை சொல்லலாம். தலித் மக்களுக்குரிய இந்த நாட்டார்தெய்வமாக எம்.ஜி.ஆர் நடித்தது தமிழ் அரசியலில் ஒரு முக்கியமான நிகழ்வு. அம்மக்களின் அரசியலாக்கம் அதன் மூலமாக நிகழ்ந்தது என்று கூட சொல்லலாம். அதன் பிறகு இப்போது அரசியலுக்கு தங்களை அணிதிரட்டிக் கொண்டு வந்துள்ள எல்லா பிற்பட்டசாதியினருமே நாட்டாரியலில் இருந்தே தங்கள் வீரநாயகர்களை கண்டெடுத்துள்ளனர். காரணம், மிகவும் பிற்பட்ட சாதிகள் அரசியலுக்குள் நுழைகையில் அவர்கள் தங்களை சாதி ரீதியாக திரட்டிக் கொள்ளவேண்டியுள்ளது.
அப்படி திரட்ட அவர்கள் தங்கள் சாதியின் பெருமையையும் தொன்மையையும் நிலைநாட்டி சாதி சார்ந்த பெருமிதங்களை உருவாக்கவேண்டியுள்ளது. அப்பெருமிதங்களின் அடிப்படையிலேயே தங்கள் உரிமைகளை அவர்கள் கோரமுடியும். இதற்காக எல்லா சாதிகளும் தாங்கள் பழங்காலத்தில் நாடாண்ட பரம்பரை என்ற சித்திரத்தை தகவல்களையும் கற்பனையையும் கலந்து உருவாக்குகின்றன. பல காரணங்களினால் தங்களுக்கு நிகழ்ந்த வீழ்ச்சியை இவை உருவகித்துக்காட்டி பழையநிலையை அடைவதற்கான அறைகூவலை விடுக்கின்றன. இதன் அவசியமாக தங்கள் சாதி சார்ந்த அடையாளங்களை உருவாக்கிக் கொள்கின்றன. இவ்விரு கூறுகளின் சந்திப்பினால் நாட்டார்மரபு சார்ந்த கதாநாயகர்கள் மறு ஆக்கம்பெற்று அரசியல் சார்ந்த முக்கியத்துவம் பெறுகிறார்கள் இந்த அரசியல் செயல்பாட்டின் நாட்டாரியல் வகிக்கும் பங்கு மிகப்பெரியது.
1984ல் கோவைப்பேராசிரியர் ‘சக்திக்கனல்’ நாட்டார் பாடலான ‘அண்ணன்மார் சாமி கதை’யை முழுமையாகப் பிரசுரித்தார். அக்கதை இன்று ஒரு முக்கியமான கலாச்சார அரசியல் குறியீடு. ‘பொன்னர்-சங்கர்’ சகோதரர்கள் இன்று அச்சாதிக்குரிய அடையாளங்கள். பண்டார வன்னியன், சுந்தரலிங்கம், வெங்கலராசன் என அனேகமாக எல்லா சாதியும் இன்று தங்கள் நாயகர்களை கட்டி எழுப்பி நிலைநிறுத்தியுள்ளது. இவர்கள் அனைவருமே நாட்டார் மரபிலிருந்து எழுந்து வந்தவர்கள். நாட்டாரியலாளர்களால் ‘கண்டுபிடித்து’ கொடுக்கப்பட்டவர்கள். உதாரணமாக வீரன் சுந்தரலிங்கம் பற்றிய சிறு குறிப்பு பாஞ்சாலங்குறிச்சி பற்றிய வீரகதைப்பாடல்களில் உள்ளது. வெள்ளீயப்படை வருவதை கண்டு கட்டபொம்மனுக்கு சொல்ல வரும் சுந்தரலிங்க குடும்பனார் தாக்கப்பட்டு உயிர் பிரியும் நிலையிலும் குதிரை மீது விரைந்து வந்து அச்செய்தியை சொல்லிவிட்டு உயிர் துறக்கின்றார். புகழ்பெற்ற வீர பாண்டிய கட்டபொம்மன் திரைப்படத்தில் கூட இவர் ஒரே காட்சியில் வரும் சிறு கதாபாத்திரம் மட்டுமே. எண்பதுகளில் கோவையில் குருசாமி சித்தர் நடத்திய கருத்தரங்கு ஒன்றில்தான் சுந்தரலிங்க குடும்பனார் தேவேந்திர குல வேளாளர் சாதியைச் சேர்ந்த ஒருவர் என அடையாளப்படுத்தப்பட்டு ஒரு கட்டுரை வாசிக்கப்பட்டது. சீக்கிரத்திலேயே அவர் ஒரு வீரநாயகனாகி, அவர் பேரை முன்வைத்து அரசியல் போராட்டங்கள் ஆரம்பித்தன.
இன்னும் சொல்லப்போனால் எண்பதுகளில் நமது கல்வித்துறையில் நிகழ்ந்த நாட்டாரியல் புரட்சியானது நேரடியான விளைவை ஏற்படுத்தியது நம் அரசியல்சூழலில்தான். இங்கே இன்னொரு விஷயத்தை, இது அரசியல் என்பதனால், சுட்டவேண்டியுள்ளது. உலகளாவிய தளத்தில் ஒர் அறிவுத்துறை அலை பரவுகிறதென்றால் அதற்கு மேற்கத்திய, அமெரிக்க பல்கலைக்கழகங்கள் முக்கியமான காரணம். எழுபதுகளில் அமெரிக்கப் பல்கலைகளில் நாட்டாரியல் மற்றும் மானுடவியல் சார்ந்த ஓர் அலை கிளம்பியது. வணிக நிறுவனங்களும் அமெரிக்க பாதுகாப்பு அமைப்புகளும் அளித்த நிதி இதற்கு முக்கியமான காரணம். உலகம் முழுக்க இருந்து நாட்டாரியல் மானுடவியல் தகவல்கள் சேகரிக்கப்பட்டு மேற்கு நாடுகளுக்கு, குறிப்பாக அமெரிக்காவுக்குக் கொண்டு செல்லப்பட்டன. உலகளாவிய வணிக நோக்கின் ஒரு பகுதியாக விற்பனைக் கொள்கைகளை உருவாக்கவே இவை சேகரிக்கப்பட்டன, சேகரிக்கப்படுகின்றன என்பது பொதுவான கூற்று. அரசியல் மற்றும் உளவறிதல் சார்ந்தும் அவற்றுக்கு தனி நோக்கங்கள் இருந்தன.
அமெரிக்க அலையே நம் கல்வித்துறையில் பாதிப்பை உருவாக்கியது. ஃபோர்ட் ஃபவுண்டேஷன் முதலிய அமைப்புகள் நேரடியான நிதி உதவி அளித்து நம் நாட்டில் நாட்டாரியல் அலையை உருவாக்கின. மதுரை பல்கலை நாட்டாரியல் ஆய்வுத்துறை, பாளையங்கோட்டை புனித சவேரியார் கல்லூரி உட்பட எல்லா நாட்டாரியல் நிறுவனங்களும் ஃபோர்ட் ஃபவுண்டேஷனின் நிதி உதவியால் நடத்தப்படுபவையே. ஆக ஒரு தொலைதூரப்பார்வையில் நமது தமிழக அரசியலை வடிவமைப்பதில் மேலைநாட்டு வணிக, அரசியல் சக்திகளும் பெரும்பங்காற்றுகின்றன. அமெரிக்க மானுடவியல் கூட்டமைப்பில் 1947ல் 500 பிரதிநிதிகள் இருந்தனர். 1970ல் அது 5000 ஆக அதிகரித்தது. அமெரிக்க பல்கலைகளில் மொத்தம் இருபது துறைகள் இவ்விஷயம் சார்ந்து செயல்பட்டது 1970ல் 217 ஆக பெருகியது. இப்பெருக்கம் மூலம் அத்துறை எண்ணற்ற சித்தாந்தங்களாலும் கணக்கிலடங்கா தரவுகளினாலும் நிரம்பி அசைவற்ற பிண்டமாக ஆகியது என குறிப்பிடப்படுகிறது [Perspective in Recent American anthropology Cora Du Bois. P74.] இத்தகைய வீக்கம் நம் கல்வி மற்றும் அரசியல் துறைகளில் வடிவது ஏற்படுத்தும் பாரதூரமான விளைவுகள் பல.
ஆகவே நமது இன்றைய அரசியல்போக்குகளைப் பற்றிய ஆய்வை நாம் நாட்டரியல் ஆய்வுகளின் துணையின்றி பொருளுடன் நிகழ்த்திவிடமுடியாது. உதாரணமாக தேவேந்திர குல வேளாளர் அரசியலையே எடுத்துக் கொள்ளலாம். டாக்டர் குருசாமி சித்தர் என்ற ஆய்வாளர் தனது ‘மள்ளர் மலர்‘ இதழ் மூலம் தொடர்ந்து நாட்டாரியல் ஆய்வுகளை வெளியிட்டார். அவ்வாய்வுகளில் பள்ளர்கள் என்ற சாதியினர்தான் சங்க காலத்தில் ‘மள்ளர்‘ என்று குறிப்பிடப்பட்ட பழம்பெரும் சாதி என்று வலியுறுத்தினார். அவர்களுடைய ஐதீக சமயப் பெயர் ‘தேவேந்திர குல வேளாளர்‘ என்று பிறகு விளக்கப்பட்டது. இவர்கள் நிலவுடைமையாளராக இருந்து நிலம் பறிக்கப்பட்டு தாழ்ந்த நிலைக்கு வந்தார்கள் என சான்றுகள் காட்டப்பட்டன. இந்த நாட்டாரியல் விவாதமே முதலில் ‘தேவேந்திர குல வேளாளர் சங்க‘மாக வளர்ந்தது. பிற்பாடு ‘புதிய தமிழகம்‘ என்ற கட்சியாக மாறியது. இதன் எதிர்வினையாக மற்ற சாதிகளில் என்ன நடந்தது என ஊகிக்கலாம். நாட்டாரியல் தரவுகள் இல்லாமல் இன்றைய தமிழக அரசியலை விவாதிக்கவே முடியாது.
***
எண்பதுகளில் தமிழின் நவீனத்துவ இயக்கம் முடிவுக்கு வர ஆரம்பித்தது. அசோகமித்திரன், சுந்தர ராமசாமி, ஜி நாகராஜன், நகுலன், ஆ.மாதவன், வண்ணதாசன், வண்ண நிலவன், பூமணி, நாஞ்சில்நாடன், பிரபஞ்சன் ஆகியோரால் உருவாக்கப்பட்ட பொதுவான இலக்கிய நோக்கில் மாற்றங்கள் ஏற்பட்டன. இம்மாற்றம் எப்படிப்பட்டது என பொதுவாகச் சொல்லப்போனால் ஒன்றையே சுட்டவேண்டியிருக்கும் — நாட்டார் மரபு சார்ந்த நோக்கு ஒன்று இலக்கியத்தை ஊடுருவியதுதான் அது. கோணங்கியின் ஆரம்பகாலச் சிறுகதைகள், என்னுடைய கதைகள் மற்றும் நாவல்கள், எஸ்.ராமகிருஷ்ணனின் கதைகள் அடுத்த கட்டத்தில் சு.வேணுகோபாலின் கதைகள் ஆகியவை உதாரணமாக கொள்ளத்தக்கவை. அதுவரை இருந்துவந்த நவீனத்துவத்தின் அழகியலானது நாசூக்கு, கச்சிதம் ஆகியவற்றை முக்கிய குணாதிசயமாக கொண்டதாக இருந்தது. மொழியில் அடக்கமும், வெளிப்பாடுகளில் மிதமான தன்மையும் அதன் இலக்கணமாக வலியுறுத்தப்பட்டன. நவீனத்துவம் தன் ‘உண்மையை‘ தனிமனித மனதிலிருந்து மட்டுமே பெற்றுக் கொள்வதாக சொல்லப்பட்டது. ஆனால் அந்த மனத்தை வடிவமைத்தவை கல்வி மூலம் கிடைக்கப்பெற்ற செவ்விலக்கியங்களே. நாட்டார் மரபு ஆழத்தில் இருந்துகொண்டு தன் மறைமுக பாதிப்பை செலுத்தியிருக்கலாம். ஆனால் அப்பாதிப்பு பிரக்ஞைபூர்வமாக வடிகட்டப்பட்டது.
இலக்கியம் என்பது ‘பண்பட்டது‘ எனவே அது நாட்டார்கூறுகளுக்கு எதிரானது, நாட்டார் கூறுகளைக்கூட ‘பண்படுத்தியே‘ அது பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்ற மனப்பயிற்சி நவீனத்துவகால படைப்பாளிகளிடம் இருந்தது. உதாரணமாக சுந்தர ராமசாமி, வண்ணதாசன் இருவரையும் சொல்லலாம். நாட்டார் வழக்குகளின் பெரும் குவியல் கொண்ட குமரி நெல்லை மாவட்டங்களில் இருந்து இவர்கள் எழுதியபோதும் படைப்புகளில் நாட்டார் அழகியலின் சாயல்களே இருக்கவில்லை. ‘ஒருபுளிய மரத்தின்கதை‘ நாவலில் நாட்டார் கதைமரபு முன்வைக்கப்படுகிறது, ஆனால் அது நவீனத்துவ அழகியல் வடிவத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. கதைசொல்லி அவற்றை திருப்பி சொல்கிறான். சீக்கிரமே நாவல் அதைக் கடந்து அடுத்த கட்டத்துக்குச் சென்றும் விடுகிறது. இதெல்லாம் எப்போதுமே விதிகள் அல்ல என்பதற்கு கி.ராஜநாராயணனின் ஆக்கங்கள் ஓர் உதாரணம். நவீனத்துவ காலகட்டத்திற்குள் நாட்டார் அழகியலின் நேரடியான வெளிப்பாடாக அமைந்த ஆக்கங்கள் அவர் உருவாக்கியவை. ஆனாலும் அவர் கதைகளில் நவீனத்துவப் பண்புகூறுகள் வலுவாகவே உள்ளன. நாட்டாரியல் கூறுகள் அவற்றில் இயல்பாக இடம்பெறுகின்றனவே ஒழிய வளர்த்தெடுக்கப்படவில்லை. கி.ராஜநாராயணன் கதைகளில் எங்குமே நாட்டார் மரபு சார்ந்த படிமங்கள் சமகால நவீன வாழ்க்கையை விளக்கவும் விமரிசிக்கவும் பயன்படும் விதமாக மலர்ச்சி கொள்ளவில்லை என்பதை இங்கே சுட்டிக் காட்டவேண்டும். கி.ராஜநாராயணனின் பார்வை சமகால முற்போக்கு அழகியலையே பெரிதும் சார்ந்துள்ளது.
நாட்டரியல்மரபு சார்ந்த தனி அழகியலை தமிழில் நிறுவியவர் ‘கோணங்கி.‘ அவரது கதைகள் அன்று பெற்ற முக்கியத்துவம், இன்று அவர் அபத்தமான சொற்குப்பைகளை கொட்டும்போதுகூட அவர் மீது உள்ள கவனம், அக்கதைகள் மூலம் உருவானதேயாகும். கோணங்கியின் கதைகளில் நாட்டார் கூறுகள் வரலாறாகவோ, பின்புலச் சித்தரிப்பின் பகுதியாகவோ தகவலளவில் வரவில்லை என்பதை சுட்டிக் காட்டவேண்டும். அவர் தன் ஆரம்பகால கதைகளில் நாட்டார் மரபின் கதைகளுக்குப் பதிலாக படிமங்களையே அதிகமும் பயன்படுத்தினார். நாட்டார் வாய்மொழி இலக்கியங்களின் மொழியை படைப்பாளுமையுடன் பயன்படுத்தினார். இவ்வாறு இரு ஆழமான படைப்பியக்க அடிப்படைகளை அவர் கதைகள் கொண்டபோது அவரது மையமான அணுகுமுறையும், அவரது வடிவப் பிரக்ஞையும் நவீனத்துவத்திலிருந்து முற்றிலும் விலகிச்சென்றன. கோணங்கியின் கதைகள் சொல்லிச்சொல்லி செல்வன. உதாரணமாக ‘மதினிமார்கள் கதை‘ இழந்துபோன கிராமத்து உறவுகளைப்பற்றிய ஒரு பெரும் புலம்பல். வடிவக்கச்சிதம் நுட்பம் ஆகியவற்றுக்குப் பதிலாக தன்னிச்சையான ஓட்டம் என்பதை அவர் கதைகள் முன்வைத்தன. அடங்கிய குரலுக்கு மாறாக நேரடியான உணர்ச்சிவேகத்தை முன்வைத்தன. செவ்விலக்கியங்கள் உருவாக்கிய நாகரிகத்துக்கு எதிரான ஆதிக் குரல்களை நாம் அவற்றில் காண்கிறோம் — உதாரணம் தாத்தாவின் கைத்தடி கேட்ட நூறு கேள்விகள். அவ்வாறாக அதுவரை எழுதப்படாத ஓர் உலகம் அவரால் எழுதப்பட்டது. தோற்கடிக்கப்பட்ட மனிதர்களின், தோற்று உள்ளே அழுத்தப்பட்ட மரபின், நனவிலிக்கு துரத்தப்பட்ட படிமங்களின் உலகம்.
என்னுடைய ஆரம்பகாலக் கதைகள் முதல் தொடர்ந்து நாட்டார் கூறுகளைக் காணலாம். நான் இளமையில் கேட்டு வளர்ந்த பழங்கதைகளின் நீட்சியாகவே நான் நவீன இலக்கியத்தை உருவகித்தேன். ‘படுகை‘ ‘மண்‘ போன்ற கதைகள் நாட்டார் மரபின் மொழியையும் படிமங்களையும் இலக்கியஆக்கம் செய்தவை. ‘நாகம்‘ போன்ற கதைகள் நாட்டார் மரபின் படிமங்களை மட்டுமே எடுத்தாண்டவை. இதன் நீட்சியாக தொன்மங்களின் உருவாக்கத்தில், இணைவுகளில் உள்ள தருக்கம் என்ன என்று என் கவனம் குவிந்தது. அது என்னை புராணங்களை நோக்கி இட்டுச்சென்றது. உதாரணமாக என் கதையான ‘நாகம்‘ என் குலக்கதைகளில் உள்ள ஒரு நாட்டாரியல் கரு. பல நூற்றாண்டுகளாக நாக வழிபாடு செய்பவர்கள் நாங்கள். இக்கதையை நவீன இலக்கியமாக ஆக்கியபோது அதில் ஒரு பெளராணிக தன்மையும் குடியேறுவதைக் காணலாம். அந்த நாகத்துக்கும் நமது புராணங்களில் வரும் பலநூறு நாகங்களுக்கும் இடையேயான உறவென்ன என்றவினா அடிப்படையான ஒன்று. அவ்வாறாக நாட்டாரியலுக்கும் புராணங்களுக்கும் இடையேயான உரையாடலை நோக்கி என் கவனம் குவிந்தது.
என் ஆர்வத்தின் ஒரு பக்கமாக தத்துவமும் வரலாறும் எப்போதுமே இருந்து வந்தன. நாம் வாழும் உலகம் வரலாற்று நீட்சியாகவும் வாழ்க்கையின் பக்க விளைவான தருக்கங்களாலும் உருவானது என்பது என் நம்பிக்கை. நம் மனம் வெளியுலகின் எதிர்வினை. ஆகவே இலக்கியத்தை வரலாற்றுக்கும், தத்துவத்துக்கும், ஆழ்மனதுக்கும் இடையேயான சந்திப்புப் புள்ளியாகவே நான் கண்டேன். இந்நோக்கு செவ்வியல் தன்மை கொண்டது. ஆகவே என் அழகியலில் எப்போதுமே செவ்வியல் அம்சம் உள்ளது. அதேசமயம் செவ்வியல்தன்மையை ஓர் இறுக்கமான சுய இயல்பாக கொள்ள நான் தயாராக இல்லை. என் வளர்ப்பிலிருந்து எனக்கு வந்து சேர்ந்த நாட்டரியல் கூறுகள் அதை ஊடுருவின. ஆக நாட்டாரியலால் ஊடறுக்கப்பட்ட செவ்வியல்தன்மை என் படைப்புகளுக்கு மெல்ல ஏற்பட்டது. இதற்குச் சிறந்த உதாரணம் விஷ்ணுபுரம்.
எஸ்.ராமகிருஷ்ணனின் நாட்டாரியல் தொடர்பு அவரது முதல் தொகுப்பான ‘வெளியிலிருந்து வந்தவனி‘ல் வெளியாகவில்லை. பிறகு வந்த தொகுப்புகளான ‘காட்டின் உருவம்‘ அதன் துவக்கப்புள்ளியை அடையாளம் காட்டியது. வாய்மொழியாக பரவிச்செல்லும் கதைகளின் சாரத்தை நவீனமுறையில் மறு ஆக்கம் செய்பவை அவரது கதைகள். சிறந்த உதாரணமாக சொல்லப்படவேண்டியது ‘தாவரங்களுடன் உரையாடல்‘ என்ற கதைதான். ராமகிருஷ்ணனுக்கும் புராணமரபு நாட்டார் கதைகளை தழுவும் புள்ளி மீது படைப்பாக்கம் சார்ந்த ஆர்வம் உண்டு.
நாட்டரியலின் இலக்கிய பாதிப்பே நவீனத்துவக் கூறுகளை வென்று புதுவகை இலக்கியம் தமிழில் உருவாக வழியமைத்தது என்பதைக் காணலாம். பொதுப்பிரக்ஞைக்கும், அறிவார்ந்த தருக்கத்துக்கும் முதலிடம் கொடுப்பது நவீனத்துவம். அவற்றைத்தாண்டி படைப்பாளியின் அகமனம் வெளியாகும் இடங்களே நவீனத்துவத்தின் ஆழம். நவீனத்துவத்தை தாண்டி சென்ற எழுத்துமுறையானது தொல்படிமங்களாகவும், ஐதீகங்களாகவும் சமூக ஆழ்மனம் பதிவாகியிருப்பதை அடையாளம் கண்டது. அந்த சமூகஆழ்மனதை படைப்பாளி தன் ஆழ்மனதால் அடையாளம் கண்டு மறு ஆக்கம் செய்யும் போது அவனது ஆழ்மனம் சமூக ஆழ்மனதின் உறவால் வரலாற்று ஆழத்துக்குச் செல்லமுடியும் என கொண்டுகொண்டது. இதற்கு உதவியது நாட்டாரியலே. தொகுக்கப்பட்ட நாட்டார் பாடல்கள், நாட்டார் கதைகள் இலக்கிய படைப்பாளிகள்மீது நேரடியாகவே பாதிப்பு செலுத்தின. மேலும் தீவிரமான பாதிப்பை செலுத்தவும் உள்ளன.
***
சமகாலக் கலைகள் மீதான நாட்டாரியல் பாதிப்பு இருவகையானது. சில கலைகளுக்குள் நாட்டாரியல் ஃபோர்டு ஃபவுண்டேஷன்போன்ற பெரு நிறுவனங்களாலும் பல தன்னார்வக் குழுக்களினாலும் ‘ஊசி‘ மூலம் செலுத்தப்பட்டது. இதை ஏற்கனவே வெங்கட் சாமிநாதன் போன்ற கலைவிமரிசகர்கள் சற்று கடுமையான சொற்களினால் சுட்டிக் காட்டியுள்ளனர். நவீன நாடகத்தில் நாட்டார் அரங்க கலைகளான கதகளி, தெருக்கூத்து, யட்ச கானம் போன்றவற்றின் கூறுகளை கலக்கும் போக்குக்கு எழுபதுகளில் நாடகக் கலைக்கு நிதியுதவி செய்த சர்வதேச நிறுவங்கள் ஊக்குவித்தன, பல சமயம் வற்புறுத்தின. தூண்டுதலினால் நிகழ்ந்தமையால் இந்த மாறுதல் பெரும்பாலும் மிக செயற்கையாக இருந்தது என்பதே என் அனுபவம். இங்கே நாடகம் போன்ற கலைகளுக்கு மக்கள் ஆதரவு இல்லை. நிதியை நம்பியே அவை இருக்கின்றன. மக்கள் ஆதரவுடன் நடக்கும் கேரள வணிக நாடக அரங்கில் நாட்டாரியல்கூறுகள் மிக குறைவாகவே பாதித்துள்ளன என்பது என் கணிப்பு. ஆனால் வீதிநாடகம் போன்ற அரங்குகள் உருவானபோது நட்டார் அரங்கக் கூறுகள் அவற்றில் ஆக்கபூரவமாக பயன்படுத்தப்படமுடியும் என நிரூபிக்கப்பட்டது. வெகுஜனக் கலையான சினிமாவில் எப்போதுமே நாட்டார்கலைகளின் மேலோட்டமான பாதிப்பு உண்டு. இதற்குமேல் விவாதிக்கும் அளவுக்கு எனக்கு கலைகளில் பழக்கம் இல்லை.
ஆனால் நாட்டார் கலைகளில் நாட்டரியல் என்ற அறிவுத்துறையின் பாதிப்பு மிக மிக அதிகம். நாட்டரியல் நாட்டார் கலைகளை முதலில் பதிவுசெய்ய ஆரம்பித்தது. எவ்விதத்திலும் அவற்றில் தலையிடாமல் பதிவு மட்டுமே செய்யவேண்டும் என்ற திட்டவட்டமான விதிமுறை நாட்டாரியலில் இருந்தாலும் நடைமுறையில் பதிவு செய்தல் என்பதே கூட பெரிய விளைவுகளை உருவாக்குவதாக அமைந்தது. முதலில், ஒரு நாட்டார் கலை பதிவுசெய்யப்படுகையிலேயே அதன் ‘காற்றில் கரைந்து மறையும்‘ தன்மை இல்லாமலாகிவிடுகிறது. பதிவுசெய்யப்படுவதன் மூலம் அந்த நாட்டார்கலையின் வகைபேதங்கள், ஆட்ட ஒழுங்குகளிலும் சடங்குகளிலும் உள்ள பல்வெறு வேறுபாடுகள் பதிவாகின்றன. அவை ஒப்பிடப்படுகின்றன. அது மெல்ல ஒரு தரப்படுத்துதலுக்கும் சீரமைப்புக்கும் இட்டுச்செல்கிறது. நாட்டார்கலைகளை ஆவணப்படுத்தி அவற்றை பொதுவான கலாச்சார ஆர்வலர் கண்களுக்கு கொண்டு வருகிறது நாட்டாரியல். அவற்றின் வரலாற்று, கலாச்சார முக்கியத்துவத்தை அது வெளிப்படுத்துகிறது. அவற்றின் சீரழிந்த நிலையை, அவற்றில் சில அழிவதை பதிவு செய்கிறது. இதன் விளைவாக நாட்டார்கலைகள் பேணப்படுவதற்கான விழிப்புணர்வை நாட்டாரியல் ஓரளவேனும் உருவாக்கியது. உண்மையில் பல்வேறு நாட்டாரியல் ஆய்வு அமைப்புகள் மற்றும் சேவை நிறுவங்கள் மூலம் வரும் வருமானம் பல நாட்டார் கலைகளுக்கு வேர்நீராக அமைந்து அவை அழியாமல் காத்துவருவதை காணமுடிகிறது. சில கலைகள் நாட்டாரியல் கவனம் விழுந்த பிறகு அழிவிலிருந்து மீண்டு புதிய முக்கியத்துவத்தை அடைந்துள்ளன. உதாரணமாக சொல்லவேண்டுமானால் தப்பாட்டத்தை குறிப்பிடலாம்.
இப்போக்கில் நாட்டாரியல் ஆய்வாளர் பலர் நாட்டாரியல் கலைகளிலும் அக்கலைஞர்களின் வாழ்விலும் மேலும் ஈடுபட்டு அவற்றை மேம்படுத்த உழைப்பதும் சாதாரணமாக நடக்கிறது. நாட்டுப்பாடல் ஆய்வாளர்களான பேராசிரியர் விஜயலட்சுமி, பேராசிரியர் நவநீத கிருஷ்ணன் ஆகியோர் பெரும்புகழ்பெற்ற உதாரணங்கள். டாக்டர் அ.கா.பெருமாள் கூட தோல்பாவைக்கூத்து கலை பற்றிய ஆய்வில் ஈடுபட்டு அவர்கள் வாழ்க்கை மேம்பாட்டுக்காக உழைத்திருக்கிறார். தன் தோல்பாவை கூத்து என்ற ஆய்வு நூலில் அதை பதிவு செய்துள்ளார். பல சமயம் நாட்டாரியல் ஆய்வாளர்கள் நாட்டார் கலைகளின் வடிவத்திலும் உள்ளடக்கத்திலும் பெரிய மாற்றங்களை செய்பவர்களாகவும் இருந்துள்ளனர். உதாரணமாக ந.முத்துசாமி தன் கூத்து ஆய்வுகள் மூலம் தெருக்கூத்தின் அமைப்பிலும் உள்ளடக்கத்திலும் குறிப்பிடத்தக்க பாதிப்பை செலுத்தினார் என்று சொல்லப்படுகிறது. இன்று நமது நாட்டார்கலைகள் இயல்பான சமூக ஆர்வத்தை விட நாட்டாரியல் ஆய்வாளர் ஆர்வத்தால்தான் பிழைத்திருக்கின்றன என்று கூட சொல்லிவிடலாம்.
***
நாட்டாரியல் முக்கியமான பங்களிப்பை ஆற்றக்கூடிய ஒரு தளம் என இன்று அவசியத்தேவையாக எழுந்துவரும் மாற்று வேளாண்மை மற்றும் மாற்று மருத்துவம் போன்ற துறைகளை குறிப்பிடலாம். ஓரு உதாரணம். இயற்கைவேளாண் அறிவியலாளரான நம்மாழ்வார் இன்று வழக்கொழிந்து போய்விட்ட பல்வேறு நெல்விதைகளை சேகரிக்கும் பணியில் அவ்விதைகளைப் பற்றிய தகவல்களை நாட்டார் பாடல்களில் இருந்துதான் பெற்றுக் கொண்டதாக சொல்லியிருக்கிறார். நாட்டார்பாடல்களில் உள்ள வேளாண்மை மற்றும் மருத்துவம் குறித்த தரவுகளை சேகரிப்பது மாற்று வழிகளைத்தேடும் போராட்டக்காரர்களாலும், மேலைநாட்டு ஆய்வு மாணவர்களாலும் ஒரே சமயம் செய்யப்படுகிறது. நவீன வேளாண்மையும் மருத்துவமும் பெரும் அமைப்புகளாக எழுந்து, பெரும் சுரண்டல் சக்திகளாக மாறியுள்ள இன்று அவற்றுக்கு எதிரான போராட்டம் ஒரு வகை மக்கள் விடுதலைப் போராட்டமேயாகும். அப்போராட்டத்தின் மக்களின் மரபுசார்ந்த அறிவியலும் மெய்யியலும் திரண்டிருக்கும் ஊற்றுமுகங்களாக நாட்டார் மரபு குறிப்பிடப்படுகிறது.
[ 2 ]
அ.கா.பெருமாள் அவர்களின் இந்நூல் ஆய்வாளர்களை முன்னால் கண்டு எழுதப்பட்டது. ஆய்வாளர்களுக்கான அரங்குகளில் முன்வைக்கப்பட்டது. ஆனால் இது பொது வாசகர்களுக்கு அவர்களுடைய சிந்தனையின் எல்லையை விரிவு படுத்த பெரிதும் உதவக்கூடிய ஒன்று. குறிப்பாக இலக்கியவாதிகள் இந்நூலை ஆழமாக பயிலவேண்டுமென்று எண்ணுகிறேன். இம்மாதிரி ஒரு நூல் முன்வைக்கும் தகவலின் முக்கியத்துவம் என்ன என்ற கேள்வி சாதாரணமாக ஒரு இலக்கிய வாதியின் மனதில் எழுவதே. காரணம் பெரும்பாலான சிறந்த இலக்கியவாதிகள் தங்கள் சுய அனுபவத்தை பெரிதும் சார்ந்துள்ளனர், அதுவே போதும் என்ற எண்ணம் அவர்களிடம் இருப்பதும் இயல்பே. இக்கேள்வியை ஒரு முறை நாஞ்சில்நாடன் தனிப்பேச்சில் எழுப்பியபோது நான் சொன்ன உதாரணம் இது. அம்மன் கொண்டாடி ஆபாசப் படம் பார்க்க பிக்சர்பாலஸ் தியேட்டர் வாசலில் முண்டியடிப்பதை நாம் காணும்போது ஒரு மனநகர்வு ஏற்படுகிறது. அது ஒருஅக அனுபவம், அதை நாம் தீவிரமாக பதிவும் செய்யலாம். ஆனால் அந்த அம்மனின் முழுவரலாற்றுடன் பொருத்தி சித்தரிக்கும்போது அதே சம்பவம் ஒரு பெரிய உளவியல் அலையாக, வரலாற்று நகர்வாக ஆகிவிட்டிருக்கிறது. அதற்கு நமது சொந்த அனுபவம் மட்டும் போதாது. வரலாற்று, சமூகவியல் பின்புலம் குறித்த தகவல்கள் தேவை. நாட்டாரியல் போன்ற துறைகளின் உதவி இங்குதான் வருகிறது.
அதாவது நமது அணுகுமுறையை கறாராக மாற்றிக் கொள்வதற்கான ஆயுதங்கள் இவை. ஒரு எளிய மனப்பிம்பமாக நம் உள்ளே பதியும் எண்ணங்களை வரலாற்றிலும் சமூகச்சூழலிலும் வைத்து பரிசீலிப்பதற்கும் நமது கருத்துக்களின் உண்மையான மதிப்பை அறிந்துகொள்வதற்கும் நமது தர்க்கங்களை கூர்மைசெய்துகொள்வதற்கும் இவை உதவுகின்றன. இலக்கியப்படைப்பை பொறுத்தவரை நமது மனதில் எழும் படிமங்களை புறவயமான இலக்கியப்படிமங்களாக, குறியீடுகளாக வளர்த்தெடுத்துக் கொள்ள உதவக்கூடியவை. அதே போல சமகால இலக்கியப் படைப்புக்ளை மதிப்பிடுவதற்கும் இவை அடித்தளங்களை உருவாக்கி அளிக்கின்றன. படைப்பில் தன்னிச்சையாக நம்பிக்கைகளும் படிமங்களும் கொள்ளும் மாற்றம் அப்படைப்பாளியின் அக இயல்பைப்பற்றிய ஆய்வுக்கு மிக முக்கியமானது. நவீன இலக்கியத்தை மதிப்பிட நாட்டாரியல் வலுவான ஆயுதங்களை அளிக்கும்
அ.கா. பெருமாள் அவர்கள் கடந்த முப்பது வருட காலமாக தொடர்ந்து குமரிமாவட்ட வரலாறு மற்றும் நாட்டாரியல் துறைகளில் ஆய்வுகள் செய்து முக்கியமான பங்களிப்புகளை ஆற்றி வந்துள்ளார். கவிமணி தேசிகவநாயகம் பிள்ளை, எஸ்.வையாபுரிப்பிள்ளை, கே.கே.பிள்ளை ஆகியோரின் ஆய்வுமரபின் இன்றைய தொடர்ச்சி என அவரை குறிப்பிடுவது மிகப்பொருத்தம். கவிமணியின் வரலாற்றை ஆராய்ந்து அரிய குறிப்புகளுடனும் புகைப்படங்களுடனும் அவரது கவிதைகளை நூலாகத் தொகுத்துள்ளார். கவிமணியைப்பற்றி ‘கவிமணியின் இன்னொரு பக்கம்‘ ‘கவிமணியின் வரலாற்று ஆய்வுக்கட்டுரைகள்‘ ஆகிய நூல்களை எழுதியுள்ளார். எஸ்.வையாபுரிப்பிள்ளையின் வாழ்க்கையையும் ஆய்வுகளையும் பற்றி ‘தமிழ் இலக்கியங்களின் காலம் பற்றி வையாபுரியாரின் கணிப்பு’ என்ற நூலை எழுதியுள்ளார். இம்மூவரும் செய்த ஆராய்ச்சிகளின் நீட்சியாக தன் ஆய்வுகளை நிகழ்த்தி வருகிறார் என்று சொல்லலாம். கவிமணியால் கண்டெடுக்கப்பட்டு கேரள அரசால் பிரசுரிக்கப்பட்ட முதலியார் ஓலைச்சுவடிகளில் அச்சேறாத சுவடிகளை அச்சேற்றி அவை காட்டும் தகவல்களை ஆராய்ச்சி செய்து நாஞ்சில்நாட்டு முதலியார் ஓலைச்சுவடிகள் என்ற நூலை எழுதியுள்ளார். கவிமணியையும் எஸ்.வையாபுரிப்பிள்ளையையும் அடியொற்றி குமரிமாவட்ட வரலாற்றை ஆராய்ந்து நாஞ்சில்நாட்டு வரலாறு என்ற நூலை எழுதியுள்ளார். அதன் விரிவான பதிப்பு வரவிருக்கிறது. கே.கே.பிள்ளையின் வரலாற்றாய்வுகளின் தொடர்ச்சியாக, குறிப்பாக சுசீந்திரம் கோயில் பற்றிய அவரது ஆய்வின் நெறிநின்று குமரிமாவட்ட கல்வெட்டுகளைப்பற்றிய ஆய்வை செய்துள்ளார். தன் முன்னோடிகளிடம் இல்லாத ஒரு சிறப்பம்சம் அ.கா.பெருமாள் அவர்களிடம் உண்டு. நாட்டாரியல் சார்ந்த ஆய்வுப்பார்வை. அது அவரது பார்வையையும் முடிவுகளையும் பெரிதும் வேறுபடுத்துகிறது.
அ.கா.பெருமாள் அவர்கள் தனது முன்னோடிகளாகக் கொண்டுள்ள இம்மூவருக்கும் அவருக்கும் சில பொதுமைக்கூறுகள் உண்டு. இவர்கள் அனைவருமே ஒன்றுக்கு மேற்பட்ட துறைகளைச் சார்ந்து ஆராய்ச்சிகளை நடத்துபவர்கள். கவிமணி கவிஞர், கூடவே வரலாற்றாய்வாளர். எஸ்.வையாபுரிப்பிள்ளை இலக்கிய விமரிசகர் மற்றும் கல்வெட்டு ஆய்வாளர். கே.கே.பிள்ளை மரபார்ந்த வரலாற்றாய்வாளர் மட்டுமல்ல சமூகவியலை அதற்கு பயன்படுத்திக் கொண்டவரும் கூட. இத்தொடர்ச்சி அ.கா.பெருமாள் அவர்களுக்குள்ளும் செயல்படுகிறது. அவரது முக்கியமான ஆய்வுத்துறையாக காலப்போக்கில் நாட்டாரியல் உருவாகி வந்தது என்றாலும் வரலாற்றாய்வும் இலக்கிய ஆய்வும் தான் அவரது துவக்கம். அவ்விரு துறைகளும் அவரது ஆய்வின் துணைகளாக எப்போதுமே இருந்துகொண்டிருக்கின்றன. இவ்வாறு பல்துறை சார்ந்து ஆய்வுசெய்கையில் ஒரு ஆய்வுமுறையின் உள்ளார்ந்த போதாமையை இன்னொன்று ஈடு கட்டுகிறது. உதாரணமாக குமரி நெல்லை மாவட்ட நாட்டரியலாய்வாளர் கதைப்பாடல்களை சேகரிக்கும்போது பப்புதம்பி ராமன்தம்பி கதை, இரவிக்குட்டிப்பிள்ளை போர் போன்ற கதைகளை ஆராய்ந்து வகைப்படுத்த வேண்டுமென்றால் திருவிதாங்கூர் வரலாறு சார்ந்த பயிற்சி இருக்கவேண்டியுள்ளது. பழந்தமிழுக்கும் நாட்டு மலையாளத்துக்கும் இடைப்பட்ட பழைய மொழியை புரிந்துகொள்ள ஒப்பிலக்கியப்பயிற்சியும் தேவையாகிறது. இந்நூலில் அ.கா.பெருமாள் அவர்களின் பலதுறை சார்ந்த ஆய்வுமுறை அவருக்கு தொடர்ந்து கைகொடுப்பதைக் காணலாம்.
முன்னோடிகளிடமிருந்து அ.கா.பெருமாள் பெற்றுக் கொண்ட இன்னொரு முக்கிய சிறப்பம்சம் ஆய்வின் தகவல்தன்மையை பெரிதும் நம்பியிருப்பதும் வெகுதூரத்துக்கு எறியப்படும் ஊகங்களைச் செய்யாதிருப்பதும் ஆகும். இந்நூலை வாசிக்கும் பொதுவாசகன் அவனுக்கு அதிர்ச்சி ஊக்கம் பெருமிதம் போன்ற உணர்வுகளைத்தரும் ஊகங்களோ முடிவுகளோ இல்லாமலிருப்பதை காணலாம். தமிழ் ஆய்வுநூல்களைப் பொதுவாக வாசித்துப் பார்ப்பவர்கள் ஒரு சொல்லை மட்டும் விருப்பப்படி அசைபிரித்து பொருள்கொண்டு சிந்து சமவெளி நாகரீகமே தமிழருடையதுதான், உலகாயத சிந்தனையே தமிழர் உற்பத்தி செய்ததுதான் என்பதுபோன்ற ஏழுகடல் ஏழுமலை தாவிக்கடக்கும் ஊகங்கள் நடத்தப்பட்டிருப்பதைக் கண்டு மெய்சிலிர்ப்பு கொள்வதே வரலாற்று வாசிப்பு என நம்பிக்கொண்டிருக்கிறார்கள். இம்மாதிரியான ஊகங்கள் தான் வரலாற்றாய்வுக்குள் செயல்படும் படைப்பூக்கம் என்ற நம்பிக்கை நம்மிடமுண்டு. அத்தகைய வாசகன் இந்நூலுக்குள் செல்லும்போது இது சீராக தொகுக்கப்பட்ட தகவல்கள் மட்டும்தானா என்ற சலிப்பை அடையக் கூடும். ஆனால் தன் முன்னோடிகளிடமிருந்து அ.கா. பெருமாள் அவர்கள் பெற்றுக்கொண்ட முக்கியமான பாடம் ஒன்று அவரை எப்போதும் கட்டுப்படுத்துகிறது. ‘நம்பிக்கைகொள்வதல்ல, அவநம்பிக்கை கொள்வதே ஆய்வின் முதல் படி‘. அவநம்பிக்கை காரணமாக தமிழ்நாட்டுக் கலாச்சார அரசியலால் வெறுத்து ஒதுக்கப்பட்ட எஸ்.வையாபுரிப்பிள்ளை அவர்களிடமிருந்தும், வரலாற்றாய்வாளராக பொருட்படுத்தப்படாத கவிமணியிடமிருந்தும் இப்போக்கை அ.கா.பெருமாள் அவர்கள் பெற்றுக் கொண்டிருக்கலாம்.
இந்நூலில் உள்ள ஆய்வுமுறை தகவல்களை முழுமையாக ஒட்டி நிற்கும் கவனத்தில் தன் அடிப்படை வலிமையை கொண்டிருக்கிறது. நாட்டாரியல் இவ்வகையில் மிகக் கவனமாக ஈடுபடவேண்டிய ஆய்வுத்துறையாகும். அதற்குக் காரணம் இரண்டு. ஒன்று: நாட்டாரியல் தரவுகள் நேரடியான கள ஆய்வுகளின் விளைவுகளானதால் நுட்பமான திரிபுகளை அவற்றில் நிகழ்த்துவது எளிது. பிறிதொரு கள ஆய்வு தான் அதை மறுபரிசீலனை செய்யமுடியும். இரண்டு: நாட்டாரியலில் முக்கிய இடம் வகிப்பவை படிமங்கள். சடங்குகள், தெய்வங்கள் என்ற வடிவில் இவை உள்ளன. இவை நம் ஆழ்மனதுடன் பலவகையில் உரையாடுபவை. ஆகவே நம்மை கட்டுக்கடங்காத கற்பனைகளை நோக்கி தள்ளிவிடக்கூடியவை. திட்டவட்டமான பழைய வரலாறுகளிலேயே கற்பனைப் பாய்ச்சல்களை நிகழ்த்துபவர்கள் நாம். நாட்டாரியலில் நமது குதிரைகள் கடிவாளங்களில்லாமல் துள்ளிப்போகின்றன. நம் மனதுக்கு ஓர் இயல்பு உண்டு. நம் மனதில் ஒரு சிந்தனைக் கோணம் எழுந்துவிட்டாலே அது உண்மையானது என நம்ப ஆரம்பித்து விடுகிறோம், அதை நிரூபிக்க முனைகிறோம். அந்த வேகத்தில் அக்கோணம் தவிர பிறிது எதுவுமே தெரியாமலும் ஆகிவிடுகிறது. இந்த அபாயத்துக்கு ஆளான நாட்டாரியலாய்வுகளே நம் சூழலில் அதிகம். ஆகவேதான் அ.கா.பெருமாள் அவர்களின் நிதானமான தகவல்சார்ந்த அணுகுமுறை முக்கியமானதாகிறது.
அ.கா.பெருமாள் அவர்கள் இநூலில் குமரிமாவட்ட நாட்டார் தெய்வங்களுக்கு சிவனிடம் / சைவமரபில் உள்ள ஆழமான தொடர்பு குறித்து பேசுமிடத்தை உதாரணமாக காட்டலாம். கயிலைக்கு சென்று வரம்பெற்றுத்தான் பெரும்பாலான நாட்டார்தெய்வங்கள் தெய்வங்களாகின்றன என்பதை அ.கா.பெருமாள் அவர்கள் பல இடங்களில் சொல்கிறார். ஏன் வைணவ மரபில் இத்தெய்வங்கள் இணையவில்லை என்ற வினா வாசகன் மனதில் எழும். எனக்கு ஏற்பட்ட எண்ணம் வைணவ மரபில் உக்கிர தெய்வங்களுக்கு இடமில்லை என்பதே. ஆனால் இம்மாதிரி கொள்கைவகுக்கும் மனத்தாவல்களை அ.கா.பெருமாள் அவர்கள் கவனமாக தவிர்த்து விடுகிறார். ஆனால் மெல்ல மெல்ல தரவுகள் மூலம் ஒரு ஒட்டுமொத்த சித்திரத்தை உருவாக்கவும் செய்கிறார். இந்நூலை வாசிக்கும் ஒருவர் நாட்டார் தெய்வங்களுக்கு மரணத்துடன் உள்ள உறவைப்பற்றிய ஆழமான மனப்பதிவை அடைவார். நாட்டார் தெய்வங்களின் பழிவாங்கும் உணர்வை குரோதத்தை அறிவார். அத்தெய்வங்கள் ‘அருள்மிகு‘ க்களாக மாற்றப்படும்போது ஏற்படும் மாற்றத்தைக் காண்பார். 1991ல் நான் எழுதிய கதையான மாடன் மோட்சம் இங்கே நினைவு கூரத்தக்கது. அதை எழுதும்போது நாட்டரியலில் எனக்கு அறிமுகம் இல்லை. அது நேரடி மனப்பதிவின் விளைவு. இப்போது வரலாற்று ரீதியான ஆய்வுகளினூடாக நாட்டாரியல் அக்கதை முன்வைத்த சமூக மாற்றத்தை மேலும் விரிவாகவும் ஆதாரபூர்வமாகவும் நிறுவுவதை இந்நூலின் கட்டுரைகளில் காணலாம்.
[ 3 ]
அ.கா.பெருமாள் அவர்களின் இந்நூல் அடிப்படையில் நாட்டாரியல் சார்ந்ததாயினும் தமிழாய்வாளர்களுக்கும், வரலாற்றாய்வாளர்களுக்கும், தத்துவ ஆய்வாளர்களுக்கும், அரசியல் சித்தாந்திகளுக்கும், இலக்கியவாதிகளுக்கும், பல கோணங்களில் பெரிதும் பயன்படக்கூடிய ஒரு தொகுப்பாகும். அ.கா.பெருமாள் அவர்கள் எழுதிய முந்தைய நூல்கள் பரவலாக வாசகர்கள் கவனத்துக்கு வராமல் ஆய்வாளர்கள் குறிப்பாக கல்வித்துறையாளர்கள் கவனத்துடனேயே நின்று விட்டன. இந்நூல் அந்த தேங்கலை உடைத்து பரவலான கவனத்தை அடையுமென எண்ணுகிறேன்.
**
பழந்தமிழ் இலக்கியத்தை பயிலும்போது ஏற்படும் பல முக்கியமான வினாக்களுக்கு நாட்டரியலில் பதில் தேடமுடியும். தமிழிலக்கியத்தின் போக்கை எடுத்துப் பார்த்தால் செவ்வியலாக்கம் நோக்கி திசைகொள்ளும் ஒரு போக்கும் நாட்டாரிலக்கியம் நோக்கி மீளும் ஒரு போக்கும் எப்போதுமே இருப்பதைக் காணலாம். முன்னதை செய்நேர்த்தி, நுட்பம், தத்துவார்த்த தன்மை, பெருமதம் சார்ந்த தரிசன நோக்கு ஆகியவை நோக்கிய நகர்வென கொள்ளலாம். பின்னது சரளத்தன்மை, உணர்ச்சிகரம், பொதுவிவேகம், சிறு மதங்கள் அல்லது மாற்று தரிசனமரபுக்கள் ஆகியவற்றை நோக்கிய நகர்வு. சங்க காலம் செவ்வியலாக்கத்தின் ஓர் உச்ச நிலை. சிலப்பதிகாரம் நாட்டாரிலக்கியக் கூறுகளை உள்வாங்கியது. [ஆய்ச்சியர் குரவை உதாரணம்] கம்ப ராமாயணம் நமது உச்ச கட்ட செவ்விலக்கியம். தொடரும் பக்தி இலக்கியக் காலகட்டத்தில் நாட்டாரிலக்கியக் கூறுகள் ஊடுருவின. [இசைப்பாடல்தன்மை] சிற்றிலக்கியங்களின் இறுதிப்பகுதி செவ்விலக்கியங்களை போலி செய்த பண்டித விளையாட்டின் காலம். அதை உடைத்த பாரதி சிந்துக்கள் முதலிய நாட்டாரியல் கூறுகளை பயன்படுத்தினார். இந்த முரணியக்கத்தில் முக்கிய பங்கு வகிப்பவை நாட்டரிலக்கியங்கள். ஆனால் நம் இலக்கிய ஆய்வுக்கு நாட்டாரிலக்கியங்கள் மிக மிகக் குறைவாகவே பயன்படுத்தப்பட்டுள்ளன. நமது செய்யுள் வடிவங்களையும் கருக்களின் வேர்களையும் ஆராய நாட்டாரிலக்கியங்கள் பெரிதும் உதவக்கூடியவை.
அ.கா.பெருமாள் அவர்களின் இந்நூல் அளிக்கும் கட்டுரைகள் நமது இலக்கிய மரபு குறித்த பல நுட்பமான உள்ளுறை அறிதல்களை அளிக்கின்றன. உதாரணமாக இந்நூலில் உள்ள வில்லிசை பாடல்கள் குறித்த ஆய்வை குறிப்பிடலாம். வில்லிசையானது ‘புலவர்‘ என்றழைக்கப்பட்ட கிராமத்துப் பண்டிதர்களால் நிகழ்த்தப்பட்ட கலைவடிவம். அதை முழுக்க நாட்டார் கலையென சொல்ல முடியாது. காரணம் அதை நிகழ்த்துபவர்களுக்கு ஓரளவு செவ்வியல் பயிற்சி உண்டு. அதன் பாடல் கருக்கள், பாட்டுடைதெய்வங்கள், அதனுடன் இணைந்த சடங்குகள் அனைத்துமே நாட்டார் மரபில் முளைத்தவை, ஆழ வேரோடியவை. ஆகவே நாட்டார் பாடல் மரபு செவ்வியலை நோக்கி நகரும் சலன நிலையில் உள்ளன இப்பாடல்கள்.
பூசை புரிந்து அனலை வளர்க்க
புகழுடனே உருவளருது பாராய்
கடுகுடனே மல்லி மிளகு போலாகி
கருத்த அவரை குமிழி போலாகி
அரியே நெல்லிக்காய் புன்னைக்
காயாகி அஞ்சுபூதம் அஞ்சு வர்ணமுமாகி…
என்பது போன்ற வரிகளில் நமது விருத்தப்பாவின் மூல வடிவம் உள்ளது. எப்படி நமது நாட்டாரிலக்கிய பாடல்வடிவுகள் செவ்வியல் பாக்களாக செம்மை செய்யப்பட்டன என்ற புரிதலை உருவாக்குகின்றது இது. விருத்தப்பாடலுக்குரிய நீட்டிப் பாடும் ஓசைநயமே இவ்வில்லிசைப் பாடலை வடிவமைக்கிறது. அதனுடன் எதுகையும் மோனையும் ஓரளவு தளை ஒழுங்கும் இணையும் போது விருத்தம் பிறந்துவிடுகிறது– எண்சீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்!
கதைப்பாடல்களிலிருந்துதான் காவியங்கள் உருவாயின என்பது உலகளாவிய காவிய ஆய்வாளர்களின் கொள்கைகளில் முக்கியமானது. குறிப்பாக வம்சகதைப்பாடல்கள் மற்றும் குலதெய்வப்பாடல்களின் அழகியலின் தத்துவார்த்தமான விரிவாக்கமே காவியங்கள். தமிழில் நமக்கு காவியங்களின் மூலமாக விளங்கும் குணங்கள் கொண்ட கதைப்பாடல்கள் பல உள்ளன. அண்ணன்மார் சுவாமி கதை, சுடலைமாடன் கதை போன்ற கதைப்பாடல்களில் வம்சவரலாறு, ஐதீகம், வழிபாட்டுமரபு ஆகிய மூன்று காவிய அடிப்படைக்குணங்களும் குவிகின்றன. இக்கதைப்பாடல்களை ஆராய்ந்தால் நமது நாட்டார் மரபில் சிலப்பதிகார காலத்துக்கு முன்னரே இருந்துவந்த கதைப்பாடல் மரபை ஊகித்துவிட முடியும். இதற்கு எனக்கு உறுதியான ஆதாரமாக உள்ளது நீலகேசியின் கதை. அது நேரடியாக நாட்டார் மரபிலிருந்து பெறப்பட்ட கதை. அதன் வடிவுக்கும் சுடலைமாடன் கதை, இசக்கியம்மன் கதை போன்ற நாட்டார்தெய்வங்களின் கதைகளுக்கும் உள்ள நேரடியான ஒற்றுமை. ஆனாலும் இக்கதைப்பாடல் மரபிலிருந்து நமது காவிய மரபு எப்படி உதயமாகி வளர்ந்தது என்பது குறித்த குறிப்பிடத்தக்க ஆய்வுகள் இன்னும் ஏதும் நிகழ்ந்ததாக தெரியவில்லை.
அ.கா.பெருமாள் அவர்களின் இந்நூலில் உள்ள முத்தாரம்மன் கதை பற்றிய ஆய்வும் குறிப்புகளும், சுடலைமாடன் கதை பற்றிய ஆய்வுகளும் குறிப்புகளும் இந்த தளத்தில் முக்கியமான தகவல்களை முன்வைத்து ஆழமான புரிதல்களை உருவாக்குவனவாக உள்ளன. விரிவான ஆய்வுக்கு ஒரு முன்னுரை இடமளிக்காது என்றாலும் ஒரு விஷயம் மட்டும் குறிப்பிடவேண்டும். இந்நூலில் கொடுக்கப்பட்டுள்ள முத்தாரம்மன் கதையில் நாட்டர் தெய்வங்கள் பெருந்தெய்வங்களுடன் கொண்டுள்ள உறவு நமது காவிய உருவாக்க முறை குறித்த பல எண்ண அலைகளை உருவாக்கக் கூடியது. முழுமுதல் தன்மைகொண்ட பெருந்தெய்வங்களின் அருளைப்பெற்ற நாட்டார் தெய்வங்கள் அவற்றை மீறி இயங்கும் தனித்தன்மையையே வரமாக பெறுகின்றன. அவை அழிக்கப்படுவதில்லை, படிமங்களுக்குள் நிலையாக அமரச்செய்யப்படுகின்றன. புராணஉருவகங்கள் சிறு மாற்றங்களுடன் நாட்டார் மரபில் இணைக்கப்படுகின்றன. உதாரணமாக முப்பிடாதி [அல்லது முப்பிடாரி] என்று புகழ்பெற்ற நாட்டார் தெய்வம் முப்புராதி அம்மன்கள் என்ற பேரில் முத்தாரம்மன் கதையில் வந்து சிவனால் எரிக்கப்பட்ட முப்புரம் குறித்த ஐதீகத்துடன் அழகாக இணைவதை குறிப்பிடலாம். அ.கா.பெருமாள் அவர்களின் இந்நூல் முன்வைக்கும் தரவுகளினூடாக அப்படி பல வகைப்பட்ட ஆழமான பயணங்களை நிகழ்த்த வாய்ப்புள்ளது.
**
அ.கா.பெருமாள் அவர்களின் இந்நூலில் உள்ள வரலாற்றுத்தகவல்கள் நமது வரலாற்றாய்வின் முக்கியமான இடைவெளிகள் பலவற்றை நிரப்பவல்லவை. இரு உதாரணங்களைச் சொல்லலாம். ஒன்று இந்நூலில் தரப்பட்டுள்ள குமரிமாவட்ட நாட்டார் தெய்வங்களின் விரிவான பட்டியல். டி.டி.கோசாம்பி தன் தாய்தெய்வ ஆய்வுக்கு தானே கள ஆய்வுக்கு சென்று தரவுகளை சேகரித்தார். இங்கு சேகரிக்கப்பட்டு ஒழுங்குபடுத்தப்பட்டுள்ள இந்த தரவுகளின் அடிப்படையில் நம்து வரலாற்றை, குறிப்பாக நமது சாதிசமூகங்களின் பரிணாம வரலாற்றை ஒரு வரலாற்றாய்வாளர் ஆராயப்புகுந்தால் அவருக்கு ஏராளமான வாசல்கள் திறக்கக் கூடும். இப்பட்டியலில் உள்ள தெய்வங்களின் பெயர்களே ஏராளமான் ஊகங்களை சொல்ல வல்லன. அகத்தியர், உதிர உலை இயக்கி, கொம்புமேலழகர் போன்ற தூய பழந்தமிழ் பெயர்கள் கொண்ட தெய்வங்கள் இப்பட்டியலில் உள்ளன. அயனிமூட்டு தம்புரான், துள்ளுமாடன் போன்ற தெய்வங்கள் பழங்குடி மரபை சுட்டுகின்றன. பிரம்ம சக்தி அம்மன், அட்டதிக்கன்னியர் முதலிய தெய்வங்களில் புராண பின்புலம் தெரிகிறது. குலசேகரத்தம்புரான், அரிய குலசேகர நங்கை போன்ற தெய்வங்கள் உடனடியாக சேர வரலாற்றுடன் தொடர்புள்ளவையாக இருக்கலாம். உச்சினிமாகாளி, குரங்கணி அம்மன் போன்ற தமிழ்நாடு முழுக்கவும் பரவலாக உள்ள தெய்வங்களும் கைமுறிவாள் வாதை போல மிக மிக பிராந்தியத்தன்மை கொண்ட தெய்வங்களும் இப்பட்டியலில் உள்ளன. ஆக நமது நாட்டார் தெய்வங்கள் வரலாற்றுப்பிரவாகத்தால் உருட்டப்பட்டு அடியில் தங்கிய கூழாங்கற்கள் என்ற எண்ணம் ஏற்படுகிறது. இத்தெய்வங்களை முறைப்படி அடுக்கி படிமங்களை அவிழ்த்து ஆராயும் ஒருவர் வரலாற்றின் உள்ளறைகளுக்குள் எளிதில் புகுந்துவிடமுடியும்.
இந்நூலில் உள்ள வலங்கை இடங்கை சாதிகளைப்பற்றிய ஆய்வு நமது சமூக வரலாற்றைப் பற்றிய சித்திரத்தை உருவாக்கிக் கொள்வதில் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. ஏறத்தாழ பத்து நூற்றாண்டுகளாக இப்பிரிவினை அமைப்பு நம் சமூக இயக்கத்தின் கொள்கையாக இருந்து வந்துள்ளது. பல்வேறு பூசல்களுக்கும் போர்களுக்கும் ஆட்சிமாற்றங்களுக்கும் வழியமைத்துள்ளது. இந்த அடிப்படையான விஷயம் கே.கே.பிள்ளை எழுதிய சோழர்வரலாறு நூல் மூலமாகத்தான் நமது அரசியல் சிந்தனையாளர்களுக்கும் ஓரளவு இலக்கியவாதிகளுக்கும் [அன்றையை நவீனத்துவ இலக்கியவாதிக்கும் அவனது அந்தரங்கம் மட்டுமே ஒரே பேசுபொருள். படிகள் இதழில் சிவராமன் அவர்களால் கே.கே.பிள்ளை அவர்களின் ஆய்வுச்செய்திகள் தொடர்ந்து பிரசுரமானபோதும்கூட இலக்கியவாதிகளிடம் அவை எந்தவிதமான மாற்றங்களையும் உருவாக்கவில்லை] அறிமுகமாயிற்று. இடங்கை வலங்கை சாதிப்பிரிவினை தொழிலை மையமாகக் கொண்டு துவங்கி மெல்ல சமூகத்தில் எந்த இடம் என வகுப்பதாக பரிணாமம் கொண்டது. [மிகப் பொதுவாகப் பார்த்தால் உற்பத்தியுடன் மட்டும் நேரடியாக தொடர்புள்ள மக்கள் இடங்கை. வினியோகம் நிர்வாகம் முதலிய பணிகளையும் சேர்த்து செய்பவர்கள் வலங்கை] நமது செவ்விலக்கியங்களில் வலங்கை இடங்கை பற்றிய செய்திகள் அனேகமாக இல்லை. சோழர்காலக் கல்வெட்டுகள், நாயக்கர் கால சாசனங்கள் முதலியவற்றில்தான் குறிப்புகள் உள்ளன. நாட்டாரியல் தரவுகள் இலக்கியத்துக்கு பயன்படத் துவங்கிய காலத்துக்குப் பிறகே இப்பிரச்சினையின் விரிவு தெளியலாயிற்று. ஆனாலும் இன்றும் நமது வரலாற்றை தீர்மானித்த அடிப்படை விஷயங்களில் ஒன்றான இது தெளிவுபடுத்தப்படாத விஷயமாகவே உள்ளது.
அ.கா.பெருமாள் அவர்களின் இந்நூலில் பல முக்கியமான தகவல்களை அளிக்கிறார். அச்சில் வராத வலங்கைபுராணம் என்றநூல் இப்பிரிவினை கரிகால்சோழனால் உருவாக்கப்பட்டது என்று கூறும் தகவல் முக்கியமானது. அ.கா.பெருமாள் அவர்களின் முடிவுப்படி இப்பிரிவினையே பிற்கால சோழர் காலத்தில் உருவான ஒன்றுதான். ஏற்கனவே கல்வெட்டுகள் சார்ந்து வலங்கை இடங்கை சாதிகள் குறித்து செய்யப்பட்டுள்ள ஆய்வுகளுக்கு நாட்டரியலில் இருந்து ஆதாரங்களை திரட்டி அளித்து மேலும் பலவகையில் விரிவுபடுத்துகிறது இந்நூலில் உள்ள கட்டுரை. அத்துடன் கேள்விகளையும்தான் விரிவுபடுத்துகிறது. இந்நூலில் இடங்கை சாதிகளுக்கு தாய்மைய மரபு இருந்தது, பெண்தெய்வங்கள் இருந்தன என்றும் வலங்கை சாதிகளுக்கு தந்தை மைய சமூக மரபு இருந்தது என்றும் அ.கா.பெருமாள் சொல்லிச்செல்லும் ஊகம் எழுப்பும் கேள்விகள் முடிவற்றவை. அப்படியானால் இடங்கை சாதிகள்தான் பழைமையும் வேர்பிடிப்பும் கொண்டவையா? அவை தோற்கடிக்கப்பட்ட சாதிகளா? நமது அரசியல் பரிணாம வரலாற்றையே இக்கோணத்தில் யோசிக்கதூண்டுகின்றது இந்த தகவல்.
**
நமது மதமரபின் வேர்களை நாட்டார்தெய்வங்களில் காணலாம். டி.டி.கோசாம்பி தன் நூலில் இந்திய வரலாறென்பதே தோற்கடிக்கப்பட்டு உருமாற்றம் செய்யப்பட்ட தாய்த் தெய்வங்களின் வரலாறுதான் என்று சொல்லமுனைகிறார். அ.கா.பெருமாள் அவர்கள் இந்நூலில் விவாதிக்கும் நாட்டார் தெய்வங்கள் குறித்த செய்திகளிலிருந்து நமது மததத்துவ ஆய்வுக்கான புதிய கேள்விகளும் புதிய தரவுகளும் கிளம்பி வந்தபடியே உள்ளன. பலவகையான உக்கிரமான நாட்டார்தெய்வங்கள் தொடர்ந்து சைவ மரபில் இணைகின்ற சித்திரமானது நேற்றும் இவ்வாறு பல தெய்வங்கள் இணைந்திருக்கக் கூடுமென்ற எண்ணத்தை உருவாக்குகிறது. காளாமுக, பாசுபத மரபுகள் அப்படி இணைந்து உருவானவையாக இருக்கலாம். கங்கை சமவெளிநாகரீகம் தோன்றுவதற்கு முன்னர் ருத்ரன் என்ற வேதகால சுடுகாட்டுத் தெய்வம் சிவ வழிபாட்டில் இணைந்தது என்ற கோசாம்பியின் கண்டுபிடிப்பு இங்கே நினைவில் எழுகிறது. அது ஒரு வகை சுடலை. இப்படி பற்பல சுடலைதெய்வங்கள் இணைந்து வளர்ந்து உருவான ஒன்றுதானா சைவ மதத்தின் மையமாக உள்ள சிவன்? அப்பிம்பத்தில் உள்ள பல்வேறு முரண்பட்ட கூறுகளை [ உதாரணம் அழகன், சுந்தரன் அதேசமயம் சுடலை காப்பவன், நீலகண்டன் ஆனால் பொன்னார்மேனியன், உக்கிரமான மயானமூர்த்தி ஆனால் ஆடவல்லான்] இப்படி பகுப்பாய்வு செய்வதன் மூலம் நாம் புரிந்துகொள்ளமுடியுமா? அது சிவ தத்துவத்தையே பகுப்பாய்வு செய்வதற்கு சமம். பொதுவாக சுடலைமாடன் கதையையும் புராதன மயானருத்ரர்களின் உருவகங்களையும் கோசாம்பியின் கோணத்தில் நமது வரலாற்று ஆசிரியர்கள் ஒப்பிட்டு ஆராயவேண்டிய அவசியம் உண்டு என்று படுகிறது.
அ.கா.பெருமாள் அவர்களின் இந்நூலில் துவக்கத்தில் பெருந்தெய்வங்களுக்கும் சிறுதெய்வங்களுக்கும் இடையேயான ஒப்பீடு மிக முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய பகுதி. அதன் அடிப்படையில் அவர் பிற்பாடு விளக்கும் முத்தாரம்மன், சுடலைமாடன் கதைகளை ஆராயவேண்டும். இங்கே குறிப்பாக சொல்லவேண்டியது ஒன்றுண்டு. இன்றும் நமது பெருந்தெய்வ வழிபாட்டுமுறைக்குள் இந்த நாட்டார் தெய்வ வழிபாட்டு முறைகள் குறியீடாக மாற்றப்பட்ட வடிவில் உள்ளன. உதாரணமாக சுடலைமாட சாமிக்கு மயானக் கொள்ளை என்ற சடங்கு உள்ளது. பல கேரள சிவன் கோவில்களில் அபூர்வமாக வைணவ ஆலயங்களிலும் மிக உருமாற்றப்பட்ட வடிவில் இச்சடங்கு தொடர்கிறது. இது வேட்டை என்று குறிப்பிடப்படுகிறது. பெரும்பாலும் இது ஒரு குறிப்பிட்ட சிறுதெய்வ ஆலயம் வரை சென்று பலி கொண்டு திரும்புவதாக உள்ளது. நமது வலிமையான அடிப்படை தத்துவ உருவகங்களுக்கு நமது பழங்குடி மரபில் உள்ள வேர் இங்கே புலனாகிறது.
***
இக்கட்டுரையில் எற்கனவே சொல்லப்பட்டதுபோல நமது அரசியலை புரிந்துகொள்ள நாட்டாரியல் மிக முக்கியமான பங்கை ஆற்றுகிறது. அ.கா.பெருமாள் அவர்களின் இந்நூலில் தரப்பட்டுள்ள தகவல்களை ஒரு அரசியல் சித்தாந்தி மிக விரிவாகவே பயன்படுத்திக் கொள்ளமுடியும். உதாரணமாக வலங்கை சாதிகளின் பாடல்களில் கடுமையான பிராமண வெறுப்பு காணப்படுகிறது. ஆனால் அவர்கள்தான் வரிவசூலிக்கும் உரிமைகொண்டிருந்த சாதியினர். கொடுமையான முறையில் சுரண்டலை நிகழ்த்தியவர்கள். இங்கிருந்து துவங்கும் ஒருவர் நமது திராவிட இயக்கங்களின் உளவியலுக்குள் நுழையமுடியும். அது அடிப்படையில் ஒரு வலங்கை எழுச்சி என்று நான் எண்ணுகிறேன். இந்நூலில் உள்ள முத்தாரம்மன் கோவில்களின் சமூகப் பங்களிப்பு என்ற கட்டுரை இக்கோணத்தில் முக்கியமான ஒன்றாகும்.
**
ஓர் இலக்கிய ஆசிரியனுக்கு இந்நூலின் தகவல்களும், பின்னிணைப்புகளில் உள்ள கதைகளும் அளிக்கும் அகவெளிச்சங்களும் புனைவுச்சாத்தியங்களும் எண்ணற்றவை. உதாரணமாக சுடலைமாடன் மயானக்கொள்ளை குறித்த அ.கா.பெருமாள் அவர்களின் சித்தரிப்பை இந்நூலில் உள்ள முக்கியமான இடங்களில் ஒன்றாக சொல்லலாம். மதுசூதனப்பெருமாள் மாடனின் கதை இன்னொரு உதாரணம். இலக்கியவாதியின் கற்பனைக்கு சவாலாக ஆகும் வினா ஒன்று இங்கே உள்ளது. பெரும் கொடுமைகள் செய்து அதனால் கொல்லப்பட்ட ஒருவன் மாடனாக, தெய்வமாக ஆகிறான். அது அம்மக்களின் குற்ற உணர்வின் வெளிப்பாடு அல்லது மரணம் மீதான அச்சம் வெளிப்பட்ட விதம் என்று சொல்லலாம். ஆனால் பிறகு அந்த மனிதன் செய்த பாவங்கள் எல்லாம் என்னவாக பொருள்படுகின்றன? நமது அகமனம் எப்படி அவற்றை உருமாற்றிக் கொள்கிறது? சுடலைமாடசாமி பாடல்களில் பல இடங்களில் அத்தெய்வத்தின் தீய இயல்புகளுடன் பக்தர்கள்மனம் தங்களை அடையாளம் கண்டு கொள்கிறது என எனக்கு பட்டிருக்கிறது. மனித மகத்துவங்களின் உச்ச உருவகமாக மட்டும் கடவுள் உருவாக்கப்படவில்லை, மனிதனின் இருளின் நீட்சியாகவும் கூடத்தான். இது கிரேக்க புராணங்களிலும் இந்து புராணங்களிலும் உள்ளபல்வேறு தெய்வங்களின் குரோதம் போட்டிகள் முதலியவை பற்றிய அகவெளிச்சத்தை நமக்கு அளிக்கிறது. ஏன் லூசிஃபர் கிறிஸ்துவின் சகோதரனாக கணிக்கப்படுகிறான் என்ற கேள்விக்கு பதிலாகிறது.
ஒரு இலக்கியவாதியை பொறுத்தவரை மனிதமனம் என்பது இருளும் ஒளியும் நிரம்பிய ஒரு வெளி என்றால் இரண்டையுமே உக்கிரப்படுத்திக் கொள்ளவேண்டியதேவை மனிதனுக்கு உள்ளது என்று தெளிவுபடுத்துகிறது இது. ஆகவேதான் பேரிலக்கியங்களிலெல்லாமே தீமை அதன் மாபெரும் தோற்றத்துடன் வீற்றிருக்கிறது. இருளை சொல்லத் தெரிந்தவனே பெரும் கலைஞன் என்ற விதி உருவாகியிருக்கிறது. கம்ப ராமாயணத்தில் ஏன் யுத்தகாண்டம் பிற அனைத்து காண்டங்களையும் விழுங்குமளவு பெரிதாக இருக்கிறது, ஏன் கதேயின் ஃபெளஸ்டில் சாத்தான் அத்தனை கதாபாத்திரங்களையும் விட உக்கிரம் கொள்கிறான் என்பதை விளக்குகிறது. இந்நூலில் இருந்து ஒரு இலக்கியவாசகன் வெகுதூரம் செல்லமுடியும். அவனது கற்பனை முளைக்க எண்ணற்ற விதைகள் இங்குள்ளன.
[ 4 ]
நடுக்காட்டு இசக்கி அம்மன் நகர் நடுவே இருப்பதுவரை நமது சாலைகளில் கண்டஸாக்களும் டொயோட்டாக்களும் ஃபோர்டுகளும் ஓடினாலும் நமது மண் நம்மிடமிருந்து அன்னியமாவதில்லை.
[2000த்தில் வெளிவந்த அ.கா.பெருமாள் எழுதிய ‘தெய்வங்கள் முளைக்கும் நிலம் :நாட்டார் தெய்வங்களும் கதைப்பாடல்களும் ‘ என்ற நூலின்முன்னுரை ]