சிறுகதையின் வழிகள்

ஓ ஹென்றி

 

 

[ 1 ]

ஒரு பண்பாட்டுச்சூழலில் குறிப்பிட்ட இலக்கிய படிவம் ஏன் உருவாகிறது என்ற வினா அவ்வடிவத்தில் எழுதப்படும் அனைத்து படைப்புகளையும் புரிந்து கொள்வதற்கான முதல் திறவுகோலாக அமைய முடியும். உதாரணமாக பெரும்பாலான நாட்டுப்புறப்பாடல்கள் ஏதேனும் தொழிலுடன் இணைந்ததாக உள்ளன. அத்தொழிலின் இயல்புக்கேற்ப அவற்றின் வடிவம் அமைந்துள்ளது. ஆகவே,கணிசமான நாட்டுப்புறப்பாடல்க்ள் ஒன்றிலிருந்து ஒன்று தொற்றி ஏறுவனவாகவும்,எத்தனை நேரம் வேண்டுமென்றாலும் ஒரு குறிப்பிட்ட கருவை நீட்டிக்கொண்டு போகும் தன்மை கொண்டதாகவும் உள்ளன. அவற்றுக்கேற்ப சுழன்று வரும் சொல்லாட்சியோ அல்லது உரையாடல் அமைப்போ அவற்றுக்குள்ளது.

பின்னர் சங்கப்பாடல்கள் போன்ற செவ்வியல் வடிவங்கள் உருவாகி வந்தபோது அவை நிகழ்த்துகலைகளின் ஒலிவடிவமாக இருந்தன. சங்கப்பாடல்களில் உள்ள செறிவான மொழியமைப்பும்,நுட்பமாகக் குறிப்புணர்த்தும் தன்மையும் ஓர் அரங்கில் பாணனும் விறலியும் நடித்து தங்கள் கற்பனை மூலம் பலவாறாக விரித்தெடுப்பதற்குரியவை. இன்று கூட கதகளி போன்ற செவ்வியல் கலைவடிவத்தில் அவற்றின் வரிவடிவப்பாடல்கள் மிகச்சுருக்கமானவையாகவும் நடிகனின் மனோதர்மத்தைக் கோரி நிற்பவையாகவும் இருப்பதைக் காணலாம். பின்னர் எழுதி வாசிக்கப்படும் வடிவம் வந்தபோது நான்கு நான்கு வரிகளாக அமைந்த செய்யுட்கள் உருவாகி வந்தன.

 

 

எட்கார் ஆல்லன் போ

 

காப்பியம் என்னும் இலக்கிய வடிவம் சமூக உருவாக்கத்தின் ஒரு வளர்ச்சிக் காலகட்டத்தில் உருவாகி வந்தது. ஒரு சமுதாயம் தன்னுடைய பல்வேறு பண்பாட்டுக்கூறுகளை வளர்த்தெடுத்தபின் அவற்றை ஒன்றுடன் ஒன்று பின்னி முடைந்து ஒற்றை பெரும் பண்பாட்டு வெளியாக ஆகும்போது அவற்றுக்கு காப்பியம் தேவைப்படுகிறது. பெருங்காப்பியங்கள் என்பவை முதன்மைக் குணமாக தொகுப்புத்தன்மை கொண்டவை. உதாரணமாக சிலப்பதிகாரம் போன்ற மிகச்சிறிய காவியத்திற்குள்ளாகவே வேட்டுவவரி,கானல்வரி போன்று வெவ்வேறு நிலப்பகுதிகளின் பாடல்களும் அவற்றை இணைக்கும் பொதுவானதொரு கதைப்போக்கும் இருப்பதைக் காணலாம்.

நவீன இலக்கியம் தோன்றியபோது அதனுடன் இணைந்து உருவாகிவந்த ஒரு வடிவம் சிறுகதை. சிறிய கதைக்கும் சிறுகதைக்கும் அடிப்படையில் உள்ள வேறுபாடு இலக்கிய வாசகன் அறிந்ததே. பண்பாட்டில் என்றும் இருப்பது சிறிய கதை என்னும் வடிவம். நீதிக்கதை, தேவதைக்கதை என பலவடிவங்கள் அதனுள் உள்ளன. அவை ஒரு மையத்தை வலியுறுத்தும் கதைவடிவுகள். சிறுகதை என்பது அம்மையத்தில் ஒரு திருப்பத்தை,ஒரு முடிச்சை முன்வைக்கும் வடிவமாக உருவாகி வந்தது. எட்கார் ஆலன்போ, ஓ.ஹென்றி போன்ற முன்னோடிகளால் வேடிக்கையும் வியப்பும் ஊட்டும் வாசக அனுபவத்துக்காக உருவாகி வந்த அக்கலை வடிவம் மிகச்சில ஆண்டுகளிலேயே உலகளாவிய செல்வாக்கு பெற்றது.

 

எந்த ஒரு கலைவடிவமும் அது உருவான முதல் தலைமுறையிலேயே அதன் மிகச்சிறந்த செவ்வியல் படைப்புகளை அடைந்துவிடும் என்று ஒரு கூற்று உண்டு. காவியங்களோ ஓபராவோ சிம்பனியோ அனைத்தும் இதையே காட்டுகின்றன. திரைப்படம் கூட . சிறுகதையும் விதிவிலக்கல்ல. இன்றும் சிறுகதையின் பெரும்படைப்புகளாகக் கருதப்படுபவை செக்காவ்,மாப்பசான் போன்ற முன்னோடிகளால் சிறுகதை என்ற வடிவம் உருவான ஆரம்பகாலத்திலேயே உருவாக்கப்பட்ட படைப்புகள் தான்.

சிறுகதை என்னும் வடிவம் ஏன் உருவானது, ஏன் அது உலகளாவ இத்தனை செல்வாக்கு அடைந்து இன்றும் நீடிக்கிறது? அது வியப்பும் வேடிக்கைக்கும் உரிய வடிவமாக முதலில் ஏன் அமைந்தது? முன்னரே இலக்கிய வாசகன் கதை என்னும் வடிவிற்கு பழகியிருக்கிறான். ஒரு களத்தில் ஒரு நிகழ்வுத்தொடர் ஒரு சில கதாபாத்திரங்களைக் கொண்டு தொடங்கும் என்றால் அது எதைச்சொல்லி எவ்வண்ணம் முடியும் என்று ஒரு கணிப்பு அவனுக்கு இருந்தது. பெருவிருந்துகளுக்குப்பிறகு அரட்டைகளிலும்,நூல் வாசிப்பு அரங்குகளிலும் கூடிய பெரும்பாலான வாசகர்கள் அத்தகைய கதைகளை கூடவே பயணம் செய்து ஆசிரியன் முடிக்கும் முன்பே தாங்கள் முடித்துவிடும் பழக்கம் கொண்டிருந்தனர்.

 

அவர்களிடம் ஒரு ஆர்வமூட்டும் விளையாட்டை ஆசிரியன் ஆடத்தொடங்கியபோது சிறுகதை உருவாகியது. வாசகனின் எதிர்பார்ப்பை, ஊகத்தை முறியடித்து முற்றிலும் எதிர்பாராத இடத்துக்கு கதையை ஆசிரியன் கொண்டு செல்லும் போது அவர்கள் திகைத்து பின் மகிழ்கிறார்கள். கிட்டத்தட்ட மூன்றுசீட்டு விளையாட்டுதான். நீங்கள் கைவைக்கும் இடத்தில் ஆடுதன் இருக்காது ஏஸ் இருக்கும். இத்தனை சோதனைகளுக்குப்பிறகும் சிறுகதையின் இந்த அடிப்படை வடிவம் மாறவேயில்லை.

வேடிக்கைக்காக உருவாக்கப்பட்ட இந்த வடிவம் இரண்டு அம்சங்கள் கொண்டது. ஒண்று அதில் ஆசிரியனுக்கும் வாசகனுக்குமான ஒரு உரையாடல் உள்ளது. ஆசிரியன் வாசகனிடம் விளையாடுகிறான். ஆசிரியன் விட்ட இடைவெளியை வாசகன் நிரப்புகிறான். வாசகனின் கற்பனையை ஆசிரியன் தாண்டிச் செல்கிறான் அங்கு ஆசிரியன் நின்றுவிட்ட இடத்திலிருந்து மீண்டும் வாசகன் மேலே செல்கிறான். சிறுகதையின் அடிப்படை இயல்புகளில் ஒன்று இந்த ஆடல். எவ்வகையிலேனும் இந்த ஆடல் நிகழாத ஒன்று ஒருபோதும் சிறுகதையாவதில்லை.

இரண்டாவதாக சிறுகதை எப்போதும் முரண்பாட்டை சொல்கிறது. அதன் இறுதித்திருப்பம் காரணமாகவே அது ஒருகளத்தில் நிகழக்கூடும் என எவரும் நினைக்காத ஒன்றை புதிதாகச் சொன்னது. அனைவரும் நம்பிய ஒன்றை மாற்றியமைத்தது. வழிவழி வந்தவற்றை மறுத்துப்பேசியது. ஆகவே, புனைவு விளையாட்டாகத் தொடங்கிய சிறுகதை வடிவம் மிக விரைவிலேயே சமூகத்தின், வாழ்க்கையின், தத்துவ தரிசனத்தின் அடிப்படை முரண்பாடுகளைச் சொல்லுவதற்கு உகந்த வடிவம் என்று கண்டடையப்பட்டது. ஆகவே தான் ஒரு கதையாடல் என்னும் இடத்திலிருந்து இலக்கியப்பிரதி என்னும் கௌரவத்தை அது அடைந்தது. எட்கார் ஆலன் போவிலும் ஓ.ஹென்றியிலும் வெறும் கேளிக்கை வடிவமாக இருந்த சிறுகதை செக்காவிலும் மாப்பசானிலும் இலக்கியத் தகுதி கொள்வது முரண்பாடுகளைச் சொல்லும் கலைவடிவமாக அது ஆனமையினால்தான்

சிறுகதை உலகளாவப்பெற்ற பெரும் வரலாற்றுக்கான காரணமும் இவ்விரண்டும் தான். பதினேழாம் நூற்றாண்டின் இறுதியிலும் பதினெட்டாம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் காலனி ஆதிக்கம் வழியாக நவீனமயமாதல் உலகமெங்கும் சென்று சேர்ந்தது. அதன் மூன்று அடிப்படைகள் இவை. அனைவருக்குமான பொதுக்கல்வி, பொதுபோக்குவரத்து, கூட்டு உற்பத்தியமைப்புகள். அவை ஜனநாயகத்தை உருவாக்கும் அடிப்படைகளாக அமைந்தன. .

 

 

கோணங்கி
கோணங்கி

 

இவை ஒன்றுடன் ஒன்று இணைந்து புதிய வாசகன் ஒருவனையும் உருவாக்கின. அவன் தனது பாரம்பரியமான தொழிலிலிருந்து வெளியே வந்தவன். நவீன கூட்டு உழைப்பின் ஒரு சிறு பகுதியாக தன்னை ஆக்கி படைப்பாளி என்ற இடத்திலிருந்து உழைப்பாளி என்று தன்னை சுருக்கிக் கொண்டவன். ஆகவே அன்னியமானவன். தன்னை நிறைவுபடுத்திக்கொள்ள கேளிக்கைகளை மேலும் மேலும் தேடும் நிலையில் இருப்பவன்.பொதுக்கல்வி முறையால் சராசரியான அடிப்படைக்கல்வியை அடைந்தவன். அக்கல்வி அனைவருக்குமான ஒன்று என்பதனால் பரவலாக அவனைப்போன்ற ஒரு வாசகச் சமூகமே உருவாகியது. அச்சுக்கலையின் வளர்ச்சியும் கூடவே போக்குச்வரத்து விரிவாக்கமும் எழுத்தையும் வாசிப்பையும் ஒரு சமூக இயக்கமாக மாற்றின. சென்னையில் அச்சிடப்படும் ஒரு பக்கம் ஓரிரு நாட்களில் மதுரையையோ நாகர்கோவிலையோ சென்றடைய முடியும் என்றாகியது. இதன் ஒட்டு மொத்த விளைவாக உருவாகிவந்த நவீனவாசகன்தான் சிறுகதையின் இலக்கு.

இந்த நவீன வாசகனுக்கு முந்தைய காலகட்டத்து வாசகன் மிகக் குறைவாகவே வாசித்திருந்தான். அன்று ஒருவர் வாசித்த நூலை பிறிதொருவர் வாசித்திருக்கும் வாய்ப்பு மிகக்குறைவாக இருந்தது. நவீனவாசகர் அனைவருக்குமே இருந்த ஒட்டுமொத்தமான வாசிப்பும் பொதுவானது அத்தகைய ஒரு வாசகன் முன்னால் வந்து அமர்ந்த ஆசிரியனால் எழுதப்பட்டது சிறுகதை. அவனே அவ்வாசிரியன் வாசகனுடன் உரையாடவும் விளையாடவும் தொடங்கினான். அவன் சமகால வாழ்க்கையின் முரண்பாடுகளைப்பற்றிப் பேசலானான்.

அந்த முரண்பாடுகள் உருவாவதற்கு முக்கியமான காரணம் அக்காலகட்டம்தான். அதற்கு முந்தைய நிலப்பிரபுத்துவ காலகட்டம் பல நூற்றாண்டுகளாக உறைந்து நின்ற ஒன்று. அதன் ஆசாரங்களும் நம்பிக்கைகளும் சிறு சிறு வட்டங்களுக்குள் நிலைத்துவிட்டவை. நவீனகாலகட்டம் அதை முழுக்க நிராகரித்தது. மனிதன் வட்டாரங்களில் இருந்து வெளிவந்து உலகம் என உணரத் தொடங்கினான். முந்தைய காலகட்டத்தின் நம்பிக்கைகளையும் ஆசாரங்களையும் மறுபரிசீலனை செய்தான், கடந்து சென்றான். அந்த மீறலே நவீன இலக்கியத்தில் முரண்பாடுகளாக வெளிப்பட்டது. அதற்கான வடிவமாகச் சிறுகதை அமைந்தது

புதுமைப்பித்தன்
புதுமைப்பித்தன்

 

 [ 2 ]

 

தமிழில் சிறுகதையின் தொடக்கப்புள்ளி என்று வ.வே.சு அய்யரையும் சுப்ரமண்ய பாரதியையும் சொல்வது வழக்கம். வங்காளத்தில் எழுதப்பட்ட சிறுகதைகளை மொழிபெயர்த்து சிறுகதை என்னும் வடிவை தமிழுக்கு வ.வே.சு. அறிமுகம் செய்தார். வங்க மொழிச் சிறுகதைகளை தழுவி பாரதியும் வ.வே.சு. அய்யரும் அவ்வடிவை முன்னெடுத்தனர். அவர்களே வலுவான சிறுகதைகளை எழுதினார்கள். பாரதியின் சிறுகதைகள் பெரும்பாலும் கதை என்றவடிவுக்குள்ளேயே நிற்கின்றன. வ.வே.சு. அய்யரின் மங்கையர்க்கரசியின் காதல் என்னும் தோப்பிலுள்ள குளத்தங்களை அரசமரம் சரியான சிறுகதை வடிவம் கொண்டதென்று சொல்வார்கள்.

தமிழ் சிறுகதை அதன் முழுஅடையாளத்தை அடைவது புதுமைப்பித்தனிடம் தான். ஒருமொழியின் ஒரு குறிப்பிட்ட கலைவடிவத்தில் பிற்காலத்தில் உருவாகும் அனைத்திற்கும் விதைநிலமாக அமைந்திருக்கும்தன்மை கொண்ட படைப்புக்களை செவ்வியல் என்கிறோம். அதை புதுமைப்பித்தனிடம் காணமுடியும். தமிழில் உருவான அனைத்துச் சிறுகதை வடிவங்களுக்கும் முன்னோடி வடிவங்கள் புதுமைப்பித்தனிடம் உண்டு. தமிழில் எழுந்து வந்த யதார்த்தவாதச் சிறுகதை இயக்கத்திற்கு புதுமைப்பித்தனின் செல்லம்மாள்,மனித யந்திரம்,பொன்நகரம் போன்ற கதைகள் முன்னுதாரணமாக அமைந்தன

முறையே யதார்த்தவாதத்தின் மூன்று வெவ்வேறு போக்குகளை அவை பிரதிபலிக்கின்றன. செல்லம்மாள் அழகியல்சமநிலை கொண்ட யதார்த்தவாதத்தை சுட்டுகிறது. அசோகமித்திரனின் படைப்புக்கு முன்னோடி வடிவம் என்று அதை எளிதில் சொல்ல முடியும். பொன்நகரம் இங்கு உருவான முற்போக்கு படைப்புகளுக்கான முன்னோடி வடிவம். மனித எந்திரம் கு.அழகிரிசாமி, சுந்தர ராமசாமி போன்றவர்களால் உருவாக்கப்பட்ட விமர்சன யதார்த்த வாதத்தின் முன்னோடி வடிவம்

செவ்வியல் மரபுகளை மறுஆக்கம் செய்யும் மரபிற்கு புதுமைப்பித்தனின் அகலிகை சாபவிமோசனம் போன்ற கதைகளை உதாரணமாகச் சொல்லலாம் அங்கத நோக்கம் கொண்ட உருவகக்கதைகளுக்கு எப்போதும் முடிவிலே இன்பம் போன்ற கதைகள். நனவோடை முறையென்றால் முன்னோடிக்கதையாக கயிற்றரவை சொல்லமுடியும். மிகு கற்பனைக்கதை என்றால் புதுமைப்பித்தனின் காஞ்சனை, கபாடபுரம் போன்ற கதைகளைச் சொல்லலாம். காஞ்சனை மாய யதார்த்த கதையென்றும், கபாடபுரத்தை கட்டற்ற கற்பனை விரியும் கதை என்றும் சொல்லலாம்

மிகக்குறுகிய காலகட்டத்திற்குள் கதையின் அனைத்து வகைமைகளையும் தொட்டு சென்ற புதுமைப்பித்தன் தமிழ் உருவாக்கிய மேதைகளில் ஒருவர் என்று ஐயமின்றி சொல்ல முடியும். இன்றைய வணிக இலக்கியத்திற்கும் ஒருவகையில் புதுமைப்பித்தனே முன்னோடி. வணிக இலக்கியத்தில் பின்னால் உருவாகிவந்த அனைத்து மரபுகளையும் அங்கு காணலாம் மு.வ.,கு. ராஜவேலு போன்றவர்கள் எழுதிய தனித்தமிழ் உரைநடைக்கதைகளுக்கு முன்னோடியாக இந்தாப்பாவி போன்ற கதைகளை, மனவக்கிரத்தை வெளிப்படுத்தும் விபரீத ஆசை போன்ற கதைகளை, அச்சுறுத்தும் செவ்வாய்தோஷம் போன்ற பேய்க்கதைகளை, இனிய நகைச்சுவைக்கதைகளான பூசனைக்காய் அம்பி போன்ற கதைகளை புதுமைப்பித்தனின் உலகில் பார்க்கும்போது இனி எழுந்து வரவிருக்கும் கதைகளையும் அவர் ஏற்கனவே எழுதியுள்ளாரா என்ற வியப்பேற்படுகிறது.

அத்துடன் சிறுகதைக்குரிய சரியான வடிவை அவர் உருவாக்கி முன்வைத்தார். மலையாளம் கன்னடம் வங்காளம் போன்ற நவீன இலக்கியம் வளர்ந்த மொழிகளில்கூட சிறுகதை என்னும் வடிவம் அறுபதுகளில்தான் சரியான வடிவை வந்தடைகிறது என்னும்போது நாற்பதுகளில் புதுமைப்பித்தன் அடைந்த பாய்ச்சல் மிக முக்கியமானது.

 

.

 

இவ்வாழ்க்கை முரண்பாடுகளாலேயே புரிந்துகொள்ளத்தக்கது என்றோ, அல்லது இவ்வாழ்வின் முரண்பாடுகளே மேலும் முக்கியமானவை என்றோ, அல்லது இப்பெரும்பெருக்கு முரண் இயக்கமாகவே முன் செல்கிறது என்றோ ஒரு பார்வை சிறுகதைக்குப்பின்னால் உள்ளது. அது நவீன இலக்கியம் என்னும் இயக்கத்திற்கே பொதுவான பார்வை ஆகவே தான் அது நீதியை உருவாக்குவதில்லை. விமர்சனத்தை உருவாக்குகிறது. அமைப்புகளை எழுப்ப முயல்வதில்லை, உடைத்து பிரிக்க விழைகிறது. விடைகளைச் சொல்வதில்லை வினாக்களை முன்வைக்கிறது.

நவீன இலக்கியம் எங்கு பண்டைய இலக்கியத்திலிருந்து மாறுபடுகிறது என்றால் பண்டைய இலக்கியம் ஒரு சான்றோனின் தரப்பாக, ஒரு மூதாதையரின் குரலாக ஒலிக்கிறது. நவீன இலக்கியம் திரும்பி நின்றுபேசும் ஒரு இளைஞனின் குரலாக, ஒரு கலகக்காரனின் குரலாக ஒலிக்கிறது. நவீன இலக்கியத்திலிருந்து ‘துடுக்கு’ என்று சொல்லத்தக்க இந்த அம்சத்தை விலக்கினால் அது பொருளிழந்து போய்விடும். திரும்ப திரும்ப பண்டைய இலக்கியத்தின் வாசகர்கள் நவீன இலக்கியத்தில் அடையும் அதிர்ச்சி நவீன இலக்கியத்தில் இருக்கும் இந்த அடங்காமை அல்லது துடுக்குதான். புதுமைப்பித்தனின் கதைகளின் சாரமே அவரது துடுக்குதான்

புதுமைப்பித்தன் கதைகளை வாசித்து இவர் இப்படியெல்லாம் எழுத யார் அதிகாரம் கொடுத்தது என்று ராஜாஜி முகம் சுளித்தார் என்பார்கள். நவீன இலக்கியம் பழமையின் மனத்தை சந்திப்பதற்கான மிகச்சரியான புள்ளி இது. ராஜாஜியின் திக்கற்ற பார்வதி என்ற கதைத்தொகுதியை படிக்கும் போது சிறுகதைக்கும் கதைக்குமான வேறுபாட்டை மிகத்துல்லியமாக உணர்ந்து கொள்ள முடியும்.

புதுமைப்பித்தனின் சமகாலத்தவர்களில் அவருக்கு இணையான புனைகதை ஆசிரியர்களாக சொல்லப்படும் கு.ப.ரா,கோபாலன், மௌனி, நா.பிச்சமூர்த்தி ஆகிய மூவரும் ஒருவகையில் புதுமைப்பித்தனின் சில இடைவெளிகளை நிரப்பும் படைப்பாளிகள் என்றே சொல்ல வேண்டும். புதுமைப்பித்தன் அவருடைய இயல்பான துடுக்குத்தனம் மற்றும் அத்துமீறல் காரணமாகவே ஆழ்ந்த நீதி உணர்வின் குரலை வெளிப்படுத்தத் தவறுகிறார் என்று சொல்லலாம். அந்த இடத்தை நிரப்பும் படைப்பாளி நா.பிச்சமூர்த்தி. அவருடைய காவல் போன்ற கதைகள் உதாரணமாக சொல்லலாம்.

புதுமைப்பித்தன் தன் புறவயநோக்கு காரணமாகவே பாலுறவின் நுட்பமான தளங்களை அவர் அலட்சியமாகக் கடந்து செல்கிறார். அவரில் எப்போதும் இருக்கும் கிண்டல் பாலுறவின் நுண்சிடுக்குகளை தொட்டெடுக்கும் பொறுமையை அவருக்கு அளிப்பதில்லை. அவ்விடைவெளியை நிரப்புபவராக கு.ப.ரா எழுதுகிறார். ’ஆற்றாமை’, ’விடியுமா’ போன்ற கதைகள் உதாரணம். புதுமைப்பித்தன் அவரது அடிப்படையான உலகியல் பார்வை காரணமாகவே உயர்கவித்துவத்தை அடைவதில்லை. மௌனி ’அழியாச்சுடர்கள்’, ’எங்கிருந்தோ வந்தான்’ போன்ற கதைகளின் வழியாக அந்த புள்ளியை மட்டும் தொட்டவர்.

தமிழில் புதுமைப்பித்தனுக்கு பிந்திய தலைமுறையில் ஒவ்வொரு படைப்பாளியும் எந்த முன்னோடியை தொடக்க புள்ளியாக கொண்டிருக்கிறார் என்பதை வைத்து அவர்களை மதிப்பிட முடியும். உதாரணமாக தி,ஜானகிராமன் கு.ப.ரா வழி வந்தவர். அடிப்படையில் ஆண்பெண் உறவைப்பற்றியே அவரும் பேசுகிறார். கு.ப.ரா, மிகச்சில புள்ளிகளை மட்டும் தொட்டு நுட்பமாக சொல்லி நிறுத்திய இடங்களை அழகிய மொழியில் உணர்வு தீவிரத்துடன் விரித்தெடுக்கும் நாவல்கள் சிறுகதைகள் தி.ஜா.வுடையவை. அவரது சிறுகதைகளில் மேலதிகமான அற உணர்வுவெளிப்படும் ’பரதேசி வந்தான்’, ’கடன் தீர்ந்தது’ போன்ற கதைகள் மேலும் முக்கியமானவை.

1
அழகிரிசாமி

 

கு.அழகிரிசாமியை பிச்சமூர்த்தியின் தொடர்ச்சியாளர் என்று சொல்லலாம். உதாரணம் ’ராஜா வந்திருக்கிறார்’, ‘அன்பளிப்பு’ போன்ற சிறுகதைகள். மனித மனங்கள் உறவு கொள்ளும் நுட்பமான உரசல்களை அவை எழுப்பும் அற பிரச்னைகளை அவர் பேசுகிறார். லா.ச.ரா ஒருவகையில் மௌனியிலிருந்து தொடர்பவர். மௌனி குறிப்புணர்த்தியவற்றை விரித்துரைத்தவர் என்று அவரை அடையாளப்படுத்தமுடியும். பாற்கடல், இதழ்கள், பச்சைக்கனவு போன்ற கதைகள் உதாரணம்.

புதுமைப்பித்தனிலிருந்து தொடங்கிய யதார்த்தவாதத்தின் இருபோக்குகள் என்று சுந்தரராமசாமியையும் ஜெயகாந்தனையும் குறிப்பிடலாம். தமிழக முற்போக்கு இலக்கியத்தின் முன்னோடியான ஜெயகாந்தன் புதுமைப்பித்தனின் பொன்னகரம் என்ற கதையை தன் முதலூற்றாகக் கொண்டிருக்கிறார் என்று எண்ண முடியும். ஜெயகாந்தனின் இந்திய முற்போக்கு அழகியல் சமூகப் பிரச்னைகளுக்கு பொருளியல் காரணங்களை எளிதில் சுட்டும் மார்க்சிய சட்டகத்திலிருந்து மீறி மனிதனின் அடிப்படையான ஆன்மீக தேடல்களையும் விவரிக்கிறது. விழுதுகள் முதன்மையான உதாரணம்

முற்போக்கு முகாமில் தொடங்கி,அங்கிருந்து நவீனத்துவ படைப்புகளை நோக்கி வந்தவர் சுந்தர ராமசாமி .மானுட உறவுகளின் அழகுகளையும் ஒடுக்குமுறைகளையும் பேசும்  பிரசாதம் வாழ்வும் வசந்தமும் போன்ற கதைகளை முதற்பகுதியில் உருவாக்கினார். பின்பு ரத்னாபாயின் ஆங்கிலம் போன்ற கதைகளின் வழியாக மேலும் நுட்பமான வாழ்க்கைச் சித்தரிப்புகளை நோக்கி வந்தார். இன்று வாசிக்கையில் அவற்றுக்கு நிகராகவே அவர் எழுதிய ’லவ்வு’ போன்ற அங்கதமும் மானுட விருப்பும் வெளிப்படும் கதைகள் முக்கியமானவை என்று தோன்றுகிறது.

சுந்தர ராமசாமிக்கு பின் சற்றே பிந்தி இலக்கியத்துக்குள் நுழைந்த கி.ராஜநாராயணன் தமிழிலக்கியத்தில் நாட்டுப்புற அழகியலின் உணர்வு நிலைகளை கொண்டு வந்தவர். கி,ராவின் சிறுகதைகள் பெரும்பாலும் நாட்டுப்புற வாழ்வின் நேரடிச் சித்திரங்கள். பலகதைகள் சிறுகதைக்குரிய முரண்பாடையோ உச்சத்தையோ கொண்டிருப்பதில்லை. அவை வாழ்க்கைப் பதிவுகளாகவே நின்றுவிடுகின்றன. என்றாலும் ‘பேதை’ போன்ற சில கதைகள் வழியாக நம் கிராமிய வாழ்விலிருந்து எழுந்த உக்கிரமான சில தரிசனங்களை அவர் முன் வைத்திருக்கிறார்.

உளவியல் பிரச்னைகளை நகர்ப்புறச் சித்திரங்களிலிருந்து எழுதிய இந்திராபார்த்தசாரதி ஆதவன் போன்றவர்கள் விரைவாக நகர்மயமாகி வந்த தமிழக வாழ்க்கையை ஃபிராய்டிய கோணத்தில் முன் வைத்தவர்கள். சா.கந்தசாமி மிகையற்ற வெறும்சித்தரிப்பையே கதை என எழுதியவர். வாழ்க்கையின் ஒருதுண்டே சிறுகதை ஆகிவிடும் என வாதிட்டவர். தக்கையின்மீது நான்கு கண்கள், இரணியவதம் போன்ற கதைகள் உதாரணம்.

ஆனால் ஒட்டுமொத்தமாக இத்தலைமுறையின் முதன்மை படைப்பாளி என்பவர் அசோக மித்திரன்தான் .தன்னை வெளிப்படுத்திக் கொள்ளாத குரலில் மிகையற்ற சொல்லாட்சிகளின் வழியாக பழுத்த எதார்த்தவாத நோக்கில் அன்றாட வாழ்க்கையை மட்டுமே சொன்ன அசோகமித்திரன் சொல்லப்படாத நுட்பங்களின் வழியாக இருபதாம் நூற்றாண்டின் தேவையையும் கனவையும் தோல்வியையும் வெளிப்படுத்திய பெருங்கலைஞர்.

அவருடைய புனைகதை உலகில் வெவ்வேறு படிவங்கள் வியப்பூட்டுபவை மிகக்குரூரமான சித்திரங்கள் கொண்ட படைப்புகள், மிக மென்மையான எளிய விஷயங்களுடன் நின்றுவிடு, படைப்புகள் என்று அவை பலவகைப்பட்டவை.  புலிக்கலைஞன் காந்தி வாழ்விலே ஒரு முறை விமோசனம்  ஐநூறு கோப்பை தட்டுகள் போன்று அவற்றின் பட்டியல் பெரிது. அசோகமித்திரனின் புனைவுலகத்தில்தான் புதுமைப்பித்தனுக்கு பின்னர் சிறுகதை என்னும் வடிவம் அளிக்கும் முரண்பாடு என்னும் அம்சம் ஆழ்ந்த பொருளுடன் வெளிப்படுகிறது. அவரது பெரும்பாலான கதைகள் வலுவான இறுதித்திருப்பம் அமைந்தவை.

அசோகமித்திரனின் எதார்த்தவாதம் மெல்லத் தவிர்த்துவிட்டுச் செல்லும் ஓர் உலகம் அடித்தள மக்களின் ஆங்காரம் நேரடியாக வெளிப்படும் வாழ்க்கைச்சூழல். அந்த தளத்தைச் சேர்ந்தவை ஆ.மாதவனின் படைப்புகள் .திருவனந்தபுரம் சாலைத்தெருவின் கதைகளை மட்டுமே எழுதிய மாதவன் ‘கோமதி’ ‘நாயனம்’ போன்ற் கதைகளினூடாக அவ்வாழ்க்கையின் அடிப்படை முரண்களை வெளிப்படுத்தியவர்.

[ 3 ]

 

 

தமிழ்ச்சிறுகதை அதன் தொடக்கத்திலேயே புதுமைப்பித்தன் போன்ற ஒரு மேதை வழியாக எளிதில் அதன் உச்சங்களைத் தொட்டது. அடுத்த தலைமுறையில் அச்சாதனைகளை மேலும் வீச்சுடன் தொடர்ந்தன. அதற்கடுத்த தலைமுறை அந்த தரத்தை பெரும்பாலும் தொடர்ந்து தக்க வைத்தது. தி.ஜானகிராமனின் தொடர்ச்சி என சொல்லத்தக்க வண்ணதாசன் மெல்லிய உணர்வுசார்ந்த மொழியில் ஆண் பெண் உறவையும் அடுக்குகளையும் மானுடத்தின் அந்தரங்க தனிமையையும் எழுதியவர். தனுமை, நிலை போன்ற கதைகள் உதாரணம். ஜானகிராமனின் மரபையும் அழகிரிசாமியின் மரபையும் சேர்ந்தவர் என்று வண்னநிலவனைச் சொல்லலாம். எஸ்தர் போன்ற கதைகள் உதாரணம்

சுந்தர ராமசாமி மற்றும் கி ராஜநாராயணனின் அழகியல் போக்கின் நீட்சி என்று சொல்லத்தக்க நாஞ்சில் நாடன் அங்கதமும் விமர்சனமும் கலந்த எதார்த்த சித்திரங்களை உருவாக்கியவர். கால்நடையும் கனகதண்டியும், யாம் உண்பேம், போன்ற கதைகள் உதாரணம். அசோகமித்திரனின் பரபரப்பற்ற எதார்த்த சித்திரத்தின் தொடர்ச்சி என தமிழில் திலீப்குமார் குறிப்பிடத்தக்கவர். ‘கடிதம்’ ‘மூங்கில்குருத்து’ ‘தீர்வு’ போன்ற படைப்புகள். கந்தர்வனையும் ஒருவகையில் அழகிரிசாமியின் வழிவந்தவர் என்று சொல்லலாம். அவரது ‘சாசனம்’ ‘காளிப்புள்ளே’ போன்ற சிறுகதைகள் நாடகத்தனம் அற்ற நுண்ணிய சமூக விமர்சனத்தன்மை கொண்டவை.

தமிழின் இயல்புவாத எழுத்தின் சாதனையாளரான பூமணி வெறும் புறவயத்தகவல்களினூடாக முன்வைத்த வாழ்க்கைச்சித்தரிப்பு ஒரு தனித்த அழகியலை உருவாக்கியது. பின்னாளில் இமையம் போன்றவர்கள் பின்பற்றிய அழகியல் அது. பூமணியின் ரீதி போன்ற சிறுகதைகள் உதாரணம். பெண்ணிய நோக்கில் பிரச்சார வீச்சுள்ள கதைகளை அம்பை எழுதினார்.

ஈழ இலக்கியத்தில் வ.அ. ராசரத்தினம், தெளிவத்தை ஜோசப் போன்றவர்களின் வழியாக யதார்த்தவாதச் சிறுகதைகள் உருவாகி வந்தன. ஈழச்சிறுகதையின் முதன்மையான தொடக்கப்புள்ளி மு.தளையசிங்கம்தான். அவரது தொழுகை, கோட்டை முதலிய கதைகளை குறிப்பிட்டுச் சொல்லவேண்டும். அதன்பின் சற்று பிந்தைய வயதில்  அ.முத்துலிங்கம் ஈழத்தின் முதன்மையான சிறுகதையாசிரியராக உருவாகிவந்தார்.

 

[ 4 ]

 

தமிழ்ச் சிறுகதைகளின் முற்றிலும் புதிய முகம் எண்பதுகளில் தொடங்கியது. எதார்த்தச் சித்தரிப்பென்பது அதுவரையில் சிறுகதையில் தவிர்க்க முடியாத அம்சமாக இருந்தது. சிறுகதை என்பதே அன்றாட வாழ்க்கையின் ஒரு துண்டு என்பது அவ்வாசகர்களுடைய புரிதல். ஐம்பதாண்டுகளாக அவர்கள் அதாற்கு பழக்கப்படுத்தப்பட்ட்டிருந்தார்கள். உண்மையில் அது ஒரு விந்தை. கதை என்பதே அன்றாட வாழ்க்கைக்கு அப்பால் இருக்கும் ஒன்று என்ற எண்ணம் ஆயிரம் ஆண்டுகாலமாக நம் பண்பாட்டில் உள்ளது. ஆகவே புதுமைப்பித்தன் போன்றவர்களுக்கு எதார்த்தத்தை இலக்கியத்தில் சொல்வது என்பது ஓர் அறைகூவலாகவும் அதற்கான கூறுமுறைகளைத் தாங்களே கண்டுபிடிக்கவேண்டியதாகவும் இருந்தது. அக்கதைகள் அன்றைய வாசகர்களுக்கு அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஊட்டின. பட்டிவிக்கிரமாதித்தன் கதைகளைப்புரிந்து கொண்டவர்கள் புதுமைப்பித்தனின் செல்லம்மாள் போன்ற கதைகளின் உள்ளடக்கம் தெரியாது தவித்தனர்.

ஆனால் மூன்றாவது தலைமுறை வரும்போது தமிழகத்தில் வணிக எழுத்து மிகப்பரவலாகியது. தங்கள் வாழ்க்கையையே பகல்கனவு கலந்து திரும்ப எழுத்தில் வாசிக்கும் மனநிலை வாசகர்களிடம் வேரூன்றியது. ஆகவே தங்கள் வாழ்க்கையுடன் நேரடியான சாயல் இல்லாத எதையும் வாசிக்க முடியாதவர்களாகிவிட்டனர். எந்த ஒரு படைப்பும் தாங்கள் அறிந்த வாழ்க்கையின் இன்னொருவடிவமாக இருக்க வேண்டுமென்ற எண்ணம் வாசகர்களிடம் இருந்தது. அது இலக்கியத்தின் ஒரு நிபந்தனையாக ஆனபோது இயல்பாக அது ஒரு தளையாக ஆகியது

யதார்த்தத்தை உதறி உள்ளுணர்வுகளை மட்டுமே பின்தொடரும் எழுத்துமுறை மேற்கில் எழுந்து புகழ் பெற்றிருந்தது. குறிப்பாக லத்தீன் அமெரிக்காவின் மாயயதார்த்தவாதம் ஐரோப்பாவில் உருவான மீயதார்த்தவாதம் போன்றவை. யதார்த்தவாதம் வாழ்க்கையின் ஒரு பகுதியை சித்தரிப்பது. அதன் உட்பொருளை அது சித்தரிப்பில் தொக்கி நிற்கச்செய்கிறது. அந்த உட்பொருளை மட்டும் எடுத்துக் கொண்டு அதை விரிவாக்கம் செய்ய தடையாக இருப்பது அந்த யதார்த்தச் சித்தரிப்புதான் என்னும் எண்ணம் அடுத்த தலைமுறையில் உருவாகியது. இலக்கியம் அன்றாட வாழ்க்கையை அல்ல, அவ்வாழ்க்கைக்கு அப்பால் இருப்பவற்றையே சொல்ல வேண்டுமென்று அவர்கள் வாதிட்டனர்.

அவ்வாறு உருவாகி வந்த புதிய தலைமுறை சிறுகதை ஆசிரியர்களில் கோணங்கி முதன்மையானவர். கொல்லனின் ஆறு பெண்மக்கள், பொம்மைகள் உடைபடும் நகரம், கருப்பன் போன பாதை, மாயாண்டிக்கூத்தனின் ரசமட்டம் போன்ற கதைகளில் அன்றாட வாழ்க்கையிலிருந்து உருவான கனவை மட்டுமே அவர் தன் மொழியில் எழுத முயன்றார். வரலாற்றிலும் நாட்டார் மரபிலும் உள்ள தொன்மங்களையுமம், கனவுகளையும் மறுஆக்கம் செய்வதன் மூலம் ஒரு புதுப் புனைவு உலகை நான் உருவாக்கினேன்.

எஸ்.ராமகிருஷ்ணன், யுவன் சந்திரசேகர் போன்றவர்கள் தங்களுக்கென யதார்த்தத்தைக் கடந்துசெல்லும் கூறுமுறையை உருவாக்கினார்கள். எஸ்.ராமகிருஷ்ணன் அசோகமித்திரன் பாணியிலான புறவய எழுத்து நடையையும் வண்ணதாசன் போன்றோர் எழுதும் நெகிழ்வான உணர்வுகளையும் கலந்து மாயத்தன்மை கொண்ட எதார்த்தத்தை உருவாக்க முயன்றார். வெவ்வேறு வகையான கதைகளுக்கு நடுவே ஊடாடும் பொதுப்புள்ளியை தேடும் ஒரு கதை வடிவை யுவன் சந்திரசேகர் தன் புனைவுகளில் உருவாக்கினார். மாற்று மெய்மை என்று அவர் குறிப்பிடும் யதார்த்தத்தை மீறிய உளநிகழ்வுகளை எழுதுவதற்கான தளமாக சிறுகதையை அவர்கண்டார்.

சுரேஷ்குமார இந்திரஜித் அன்றாடவாழ்க்கைச்சித்தரிப்புக்குரிய மொழிநடையில் குறைவாகச்சொல்லும் ஒரு கதைவடிவை உருவாக்கி அதற்குள் மீறிச்செல்லும் சில தருணங்களைக் கண்டடைந்தார். மொழியின் கட்டற்றபெருக்காக கதையை அமைக்க முயன்றவர் என்று பா.வெங்கசேனைச் சொல்லலாம். சாரு நிவேதிதா நேர்கோடற்ற முறையில் அமைந்த சிறுகதைவடிவில், விவரணைகளற்ற நேர்ப்பேச்சுநடையில் சிறுகதைகளை எழுதினார்.

இதே காலகட்டத்தில் பாவண்ணன், சுப்ரபாரதிமணியன், பெருமாள் முருகன், சு.வேணுமோபால் போன்றவர்கள் தமிழில் அழுத்தமான யதார்த்தவாதச் சிறுகதைகளை தொடர்ந்து எழுதி வந்தனர். ஈழ இலக்கியத்தில் சட்டநாதன், ரஞ்சகுமார் போன்ற அழுத்தமான சிறுகதையாசிரியர்கள் எழுத வந்தாலும் தொடரவில்லை. ஷோபா சக்தியே இன்றைய தலைமுறையின் முதன்மையான சிறுகதையாசிரியர். அங்கதமும் வரலாற்றுவிமர்சனமும் கொண்ட அவரது கதைகள் தமிழிலக்கியத்தின் முக்கியமான சாதனைகள்.

DSC_0541
யுவன் சந்திரசேகர்

 

[ 5 ]

 

தொண்ணூறுகளுக்குப்பிறகு உலகெங்கிலும் சிறுகதைகளில் ஒரு பெருந்தேக்கம் நிலவுவதைக் காணமுடிகிறது. நான் அமெரிக்காவின் பிரம்மாண்டமான புத்தக அரங்குகளில் சிறுகதைக்கான பகுதி மிககுறைவாக உள்ளதைக் கண்டிருக்கிறேன். சிறுகதைகளைப் பிரசுரிக்கும் ஊடகங்கள் கூட மேற்கே மிக குறைந்துவிட்டன.  நாவல்கள்,வாழ்க்கை வரலாறு, பல்வேறு வகையான நுண் வரலாற்றுச் சித்தரிப்புகள், இதழியல் சார்ந்த நூல்கள் ஆகியவையே வாசகர்களால் பெரிதும் விரும்பி படிக்கப்படுகின்றன. சிறுகதைகளிலே கூட அறிவியல் புனைகதைகளுக்கு இருக்கும் முக்கியத்துவம் பிறவற்றுக்கு இல்லை. இப்போக்கு இந்தியா முழுக்க பிரதிபலிக்கிறது. தமிழிலும் அதைக் காண முடிகிறது.

சிறுகதையின் தேக்கத்திற்கான காரணங்களில் முதன்மையானது அதன் வடிவம்தான் என்று தோன்றுகிறது. நாவல் நெகிழ்வான வடிவம் கொண்டது, ஆகவே அது பலவகையான வடிவச்சோதனைகளுக்கு இடமளித்து ஏராளமான வெற்றிகரமான புதுமைகளை நிகழ்த்தியது. சிறுகதை வடிவம் அதன் இறுதிமுடிச்சு அல்லது உச்சம் என்னும் வடிவத்தால் வரையறுக்கப்பட்டிருக்கிறது. அந்த கச்சிதமே அதன் அழகு. அது புகழ்பெற்றது அதனால்தான். அதுவே அதன் எல்லையும்கூட.

சிறுகதையில் பலவகையான வடிவமீறல்கள், சோதனைகள் நிகழ்ந்தன. ஒவ்வொன்றும் அவ்வடிவை இல்லாமலாக்கும்வகையிலேயே முடிந்தன. அவை மீண்டும் கவித்துவக்குறிப்பு குறுங்கதை ஆகிய பழைய வடிவங்களையே சென்று சேர்ந்தன. வாசிப்பில் அவை பெரிய அளவில் ஈர்க்கவுமில்லை.உலகஅளவில் இன்று சிறுகதையில் பெரிய வடிவச் சோதனைகள் ஏதும் நிகழவில்லை. மீண்டும் செவ்வியல்சிறுகதைவடிவமே புகழுடன் இருக்கிறது. மேலும் அறிவியல்புனைகதைகளுக்கு அவற்றுக்குரிய திகைப்பூட்டும் உச்சத்தை அளிக்கும் வடிவமாக சிறுகதை உள்ளது.

இன்னொன்று, பின்னவீனத்துவ எழுத்துமுறைக்குச் சிறுகதை உகந்ததாக இல்லை என்பது. சிறுகதை முரண்பாட்டை முன்வைப்பது. ஆகவே அது எதிரீடுகளை முதன்மையாக கவனிக்கிறது. பின்நவீனத்துவம் எதிரீடுகளை நிராகரிக்கிறது. ஊடுபாவுகளின் சிடுக்குகளை விளையாட்டை முன்வைக்கிறது. நாவல் அந்நோக்குக்கு மிக உகந்ததாக இருந்தது. சிறுகதை அதற்கு உதவவில்லை. ஆகவே நவீன இலக்கியத்தில் சிறுகதையின் இடம் குறைந்தது.

தமிழின் இன்றைய சிறுகதை எழுத்தாளர்களில் பலர் முன்னரே எழுதப்பட்ட சிறுகதை முறைமைகளை உடைத்தும் மறுஆக்கம் செய்தும் எழுத முயன்றனர் முந்தைய சிறுகதை ஆசிரியர்களால் அழகியல் நோக்குடனோ ஒழுக்க நோக்குடனும் சற்று மங்கலாக எழுதப்பட்ட வன்முறை பாலியல் போன்றவை வீரியத்துடன் விரித்தெழுதும் முறை தமிழில் உருவாகியது. எஸ்.செந்தில்குமார். கே.என்.செந்தில் ஜே.பி.சாணக்யா, லக்ஷ்மி சரவணக்குமார் போன்றவர்களின் சிறுகதைகள் இத்தகையவை.

கே.என்.செந்தில் எஸ்.செந்தில்குமார் போன்றவர்கள் யதார்த்தமான கதைகூறுமுறைக்குள் பாலியல், வன்முறை சார்ந்த உளநுட்பங்களைச் சொல்கிறார்கள். ஜே.பி.சாணக்யா அவற்றை சற்றே கவித்துவத்துடன் எழுதுபவர். இவ்வகை எழுத்துக்கான முன்னோடியாக ஓரிரு சிறுகதைகளை லக்ஷ்மி மணிவண்ணன் எழுதியிருக்கிறார். இவ்வகை எழுத்து தமிழில் உருவாவதற்கான சமூக உளவியல்காரணங்கள் பல. பொதுவாக, சென்ற கால எழுத்தைக் கொந்தளிக்கச் செய்த அடிப்படையான தத்துவ, அரசியல் வினாக்கள் மறைந்து அந்த வெற்றிடத்தில் பாலியல் சிடுக்குகள் எடுத்துக்கொள்கின்றனவா என்னும் ஐயம் எனக்குண்டு.

இன்றைய சிறுகதைகளின் மிக முக்க்கியமான இன்னொரு அம்சம் எழுதும் ஊடகத்தில் உருவாகியுள்ள மாற்றம். இன்று வார இதழ்கள் தொடர்ச்சியாக சிறுகதைகளை வெளியிட்டுக் கொண்டிருந்தாலும் கூட இணைய ஊடகம் மிக முக்கியமான பங்கை வகிக்கிறது. இணையம் உரைநடையில் அடிப்படையான மாற்றத்தை உருவாக்குகிறது. ஒன்று, அது கைபேசியில் விரல்களால் தொட்டு தட்டச்சு செய்யும் பழக்கத்தை உருவாக்கியது. முகநூலில் மிகச்சுருக்கமான பதிவுகளை போட்டு வாசிப்பையும் எதிர்வினைகளையும் பெறக்கூடும் பழக்கம் உருவாகியது. விளைவாக குறுகிய சொற்றொடர்களும், சிறிய சித்தரிப்புகளும், வர்ணனைகள் அற்ற விவரணைகளும் கொண்ட ஒரு கூறுமுறை பிறந்தது

ஓர் உலகத்தை உருவாக்கி அதற்குள் வாசகனை பயணம் செய்யவைப்பதற்கு பதிலாக அவன் உடனடிக்கவனத்தை கோரி, அவன் பிரக்ஞையின் ஒரு பகுதியை சுண்டிவிட்டுச் செல்லும் ஒரு எழுத்துமுறை வந்தது. அவ்வெழுத்து முறையில் வெற்றிகரமாக செயல்படுபவர் என்று போகன் சங்கரைச் சொல்லலாம். பரவலாக படிக்கப்படும் அராத்து போன்றவர்களின் கதைகளும் இத்தகையவே. சிறுகதைகளில் இன்று வாசிக்கக்கிடைக்கும் புதிய போக்கு என்று இதைச் சொல்லலாம். இதை சிறுகதை என்று சொல்வதை விட குறுஞ்சித்தரிப்பு என்றே சொல்ல முடியும். அவர்கள் இதை குறுங்கதைகள் என்னும் வடிவமாகச் சொல்கிறார்கள். இது ஒருவகையில் நவீனக்கவிதையில் இன்று உருவாகியிருக்கும் நுண்சித்தரிப்பு என்னும் முறையின் இன்னொரு வடிவமாகவும் படுகிறது.

சிறுகதை என்னும் வடிவிலிருந்து முக்கியமான இளைய படைப்பாளிகள் நாவல் நோக்கி செல்வதையே காணமுடிகிறது, இந்தியாவின் எல்லா மொழிகளிலும் இதுவே நிகழ்கிறது. எதிர்காலத்தில் சிறுகதை குறுங்கதை என்னும் வடிவிலிருந்து மேலே செல்லுமா, நீண்ட சிக்கலான கதைகளாக தன்னை உருமாற்றிக்கொள்ளுமா என்பதெல்லாம் முக்கியமான கேள்விகள். இலக்கியத்தில் என்ன நிகழுமென முன்னரே சொல்லிவிடமுடியாதென்பதே அதன் வசீகரம்.

தடம் இலக்கிய இதழ் ஜூன் 2016

முந்தைய கட்டுரைஜாக்கி -ஓர் ஆறுதல் கடிதம்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 89