‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 64

[ 3 ]

அரசியின் அரண்மனையில் இருந்து ஏவல்பெண்டு ஒருத்தி வந்து அறைவாயிலில் நின்றாள். துச்சலன் “வருக!” என்றதும் அவள் வந்து கர்ணனை வணங்கி “தங்களை மகளிரறைக்கு வரும்படி காசிநாட்டரசி கோரியிருக்கிறார், அரசே” என்றாள். கர்ணன் எழுந்து “நான் சென்று அவளை பார்த்துவிட்டு வருகிறேன்” என்றான். “நானும் உடன் வரவா?” என்றான் துச்சாதனன். “வேண்டாம்” என்றபின் கர்ணன் நடந்தான்.

செல்லும் வழியில் ஏவல்பெண்டிடம் “அரசர் அங்கு இருக்கிறாரா?” என்றான். “இருந்தார். இப்போது கிளம்பிச் சென்றுவிட்டார்” என்றாள். “எங்கு?” என்றான். “இளைய அரசியின் அரண்மனைக்கு என்று தோன்றுகிறது” என்றாள். அவள் முகத்தில் மீண்டும் ஏதோ எஞ்சியிருக்கக்கண்டு கர்ணன் “என்ன நிகழ்ந்தது?” என்றான். அவள் “அரசியிடமே தாங்கள் பேசிக் கொள்ளலாம்” என்றாள்.  அந்தக்கடுமை அவனை திகைக்கச்செய்தது.

மகளிர் மாளிகையை சென்றடைந்ததும் முதல் முறையாக அங்கு வந்திருக்கக்கூடாதோ என்னும் உணர்வை கர்ணன் அடைந்தான். அவ்வுணர்வு ஏன் எழுந்தது என்னும் எண்ணமே அவனை குழம்பச் செய்தது. நடையில் அந்தத் தயக்கம் தெரிய, தன்னை அணுகிய சேடிப்பெண்ணிடம் தன் வரவை அறிவிக்கும்படி கைகாட்டினான். அவள் உள்ளே செல்ல சற்று நேரத்தில் மேலிருந்து செவிலி வந்து ஒருசொல்லும் இல்லாமல் தலைவணங்கி “வருக!” என்றாள். உள்ளறைக்குள் அவன் சென்று அமர்ந்ததும் செவிலி தலைவணங்கி வெளியேறினாள்.

பீடத்தில் அமர்ந்து இரு கைகளையும் தொடைமேல் வைத்து சற்றே தலைகுனிந்து மீசையை நீவியபடி கர்ணன் அமர்ந்திருந்தான். உடையசைவின் ஒலி அவனை கலைத்தது. உள்ளே வந்த பானுமதி முகத்தின் மேல் மேலாடையை முழுக்க இழுத்து மூடியிருந்தாள். சற்றே தளர்ந்த காலடிகளுடன் பட்டாடைகளும் அணிகளும் ஒலிக்க அவன் முன் வந்து தலைவணங்கி “அங்க நாட்டரசருக்கு வணக்கம்” என்று முகமன் உரைத்தாள். “நன்று!” என்று சொல்லி அவன் அமரும்படி கைகாட்ட ஆடையை ஒதுக்கி அமர்ந்தாள்.

அவன் முன் அவள் முகத்தை மூடுவதில்லை என்பதனால் அவள் விழிகளை சந்திக்காமல் கர்ணன் சற்று தத்தளித்தான். முதலில் எங்கிருந்து தொடங்குவது என்று தெரியவில்லை. பொருத்தமான ஒரு பொது வினாவை எழுப்பவேண்டுமென்று எண்ணிக்கொண்டிருக்கையிலேயே அவன் எண்ணியே இராத வினாவாகிய “அரசர் இங்கில்லையா?” என்பதை கேட்டுவிட்டான். “இல்லை” என்று அவள் சொன்னாள். “இங்கு வந்தாரல்லவா?” என்றன அவன் உதடுகள். அவள் “ஆம்” என்றாள்.

“நிகழ்ந்ததை அறிந்திருப்பாய்…” என்று கர்ணன் தொடங்கினான். “அனைத்தையும் அவரே சொன்னார்” என்றாள் பானுமதி. “இங்கு வந்தால் சற்று அமைதி கொள்வார் என்று எனக்குத் தோன்றியது” என்றான். “இங்கு வந்து என்ன நிகழ்ந்தது என்பதை சொல்லும்போதே அவருக்குள் உணர்வுகள் மட்டுப்படத் தொடங்கிவிடும் என்று எண்ணினேன்… வேறெங்கும் அவர் தன் முடிச்சுகளை அவிழ்ப்பதில்லை.”

“இங்கு வந்து அவை மேலும் பற்றிக் கொண்டன” என்று அவள் சொன்னாள்.  கேட்கலாமா என தயங்கி “என்ன நிகழ்ந்தது?” என்று அவன் கேட்டான். சற்று நேரம் தலைகுனிந்து விரல்களைக் கோத்து அமைதியாக இருந்தபின் அவள் நிமிர தலையிலிருந்து மேலாடை நழுவி முகம் தெரிந்தது. கர்ணன் அவள் விழிகள் அழுதவை போல வீங்கிச் சிவந்திருப்பதை கண்டான். கன்னம் இருபுறமும் சிவந்திருந்தது. ஒருகணத்திற்குப் பிறகுதான் அவை அடிபட்டதன் வீக்கங்கள் என்று தெரிந்து திகைத்து எழுந்து “என்ன நடந்தது? என்ன நடந்தது?” என்றான். “யார்? அவரா?” என்று மறுபடியும் கேட்டான். “ஆம்” என்று அவள் சொன்னாள்.

அவனால் மேற்கொண்டு சொல்லெடுக்க இயலவில்லை. மெல்ல சென்று சாளரத்தருகே நின்று நோக்கியபடி “நான் எதிர்பார்க்கவே இல்லை. ஒருபோதும் இதை அவர் செய்வாரென்று எதிர்பார்க்கவில்லை” என்றான். “நானும் எண்ணியிருக்கவில்லை. நாளை ஒருவேளை இதற்கு அவர் மிக வருந்தக்கூடும் என்பதே மேலும் துயரை அளிக்கிறது” என்றாள் பானுமதி.   “ஆனால் இது அவரது எல்லை. இதுவே கீழ்மையின் இறுதி எல்லை” என்றான் கர்ணன். அதற்குள் அவள் உணர்வுகள் மீதூர தொண்டை ஏறியிறங்கி கண்கள் கலங்கின. “எப்படி இதை அவரால் செய்ய முடிந்தது?” என்றான்.

“இங்கு வந்தபோது அவரில் ஏறி பிறிதொரு இருள்தெய்வம் அணுகியதாக உணர்ந்தேன். வந்ததுமே என்னிடம் உரத்தகுரலில்  நகைகள் அனைத்தையும் கழற்றி வீசி மரவுரி ஆடை உடுத்து கிளம்பும்படி சொன்னார். என்ன நிகழ்ந்தது என்று கேட்டேன். தன் அணிகளையும் ஆடைகளையும் கழற்றி அறைமூலையில் வீசிவிட்டு கிளம்பு என்னுடன் என்றார். என்னை பேசவே விடவில்லை. வேறு எதுவும் கேட்காதே, ஒருசொல்லும் கேட்காதே, கிளம்பு என்று கூவினார்.”

“என்ன நிகழ்ந்தது சொல்லுங்கள் என்று நான் கேட்டேன். மணிமுடி துறக்கத் தயங்குகிறாயா இழிமகளே என கூவினார். நாம் கிளம்புகிறோம். அஸ்தினபுரி இனிமேல் உனக்கும் உரியதல்ல எனக்கும் உரியதல்ல. என்னுடன் காட்டில் விறகு பொறுக்கி வாழ். நான் கொண்டு வரும் ஊனை சமைத்துக் கொடு. எங்காவது குகைகளில் ஒடுங்கிக் கொள்வோம். அஸ்தினபுரியின் அரசன் இன்றோடு இறந்துவிட்டான். காட்டுவிலங்குகளுக்குமுன் செத்துவிழுவது இங்கே சிறுமைகொண்டு புழுவாக வாழ்வதற்கு மேல் என்றார்.”

“அவரைப் பற்றி அமரச்செய்தேன். மது அளித்தபோது மீண்டும் மீண்டும் குடித்தார். சற்றே தணிந்தபோது என்ன நிகழ்ந்தது என்று சொல்லுங்கள் என்று மீண்டும் கேட்டேன். ஹஸ்தியின் மணிமுடியுடனும் குருவின் செங்கோலுடனும் அந்தச் சிறுமகளின் முன் மீண்டும் சென்று வணங்கி நிற்கும்படி உனது பிதாமகர் எனக்கு ஆணையிட்டிருக்கிறார் என்றார். மறுகணம் அத்தனை மதுவும் தீயாக பற்றிக்கொண்டது போலிருந்தது. எங்கிருந்து முளைத்தன என்று தெரியவில்லை.  மிகக்கீழ்மையான சொற்களில் பீஷ்மபிதாமகரையும் தன் தந்தையையும் வசை பாடினார். கதவுகளை ஓங்கி உதைத்தார். தூண்களை அறைந்தார்” என்றாள் பானுமதி.

கர்ணன் அவளை நோக்கிக் கொண்டிருந்தான். அவள் ஏதோ சொல்லத்தயங்கியவள் போல ஆனால் நெஞ்சுக்குள்ளிருந்து அது எழுந்து வந்து உதடுகளை முட்டுவது போல தோன்றியது. பற்களைக் கடித்து தலைகுனிந்து இருமுறை இல்லையென்பது போல ஆட்டிவிட்டு ஒருகணத்தில் பிறிதொருவளாக ஆகி சீற்றத்துடன் “என் முன் நின்று அவர் ஒரு சொல் சொன்னார். அதை நான் மறுத்தேன்” என்றாள். கர்ணன் என்ன என்று கேட்கவில்லை. ஆனால் அவன் நெஞ்சு படபடத்தது “பீஷ்மபிதாமகரின் பிறப்பையும் தன் தந்தையின் பிறப்பையும் இழித்துரைத்தார்” என்றாள்.

அதை துரியோதனன் சொல்லியிருப்பான் என்பதை அக்கணமே தன் உள்ளம் ஏற்றுக்கொள்வது எப்படி என்று கர்ணன் வியந்தான். சினம் மீறும்போது தானும் அப்படித்தான் சொல்லக்கூடுமோ? பிறப்பை வசையாக்குவதே ஆணவம்கொண்ட ஆணின் இயல்பான வழியாக இருக்குமோ? பானுமதி “என் முன் நின்று அவற்றை சொல்லவேண்டாம் என்றேன். அவரது தந்தையின் பிறப்பு பிழையானதென்றால் அவரும் பிழைப்பிறவிதானே, அரசன் என்று அமர்ந்திருக்க அவருக்கென்ன உரிமை என்று கேட்டேன்” என்றபின் தணிந்த குரலில் “ஆனால் நான் அப்படி கேட்டிருக்கக்கூடாதென்று இப்போது உணர்கிறேன்” என்றாள்.

உடனே சீற்றம் கொண்டு “ஆனால் இனி என் முன் நின்று மீண்டும் அதை சொன்னால் அங்கேயே கத்தியை எடுத்து என் குரல்வளையை அறுத்துக்கொள்வேன்” என்றாள். கர்ணன் “அப்போதுதானா…?” என்றான். “ஆம், நான் சொல்லி முடித்ததும் என்னை அறைய ஆரம்பித்தார். இரண்டு முறை அடிவாங்குவதற்குள் நான் சுருண்டு கீழே விழுந்துவிட்டேன். விழுந்த என்னை உதைத்தார். நான் தெறித்து சுவரில் முட்டி சுருண்டேன். அதற்குள் அனைத்து ஏவல்பெண்டிரும் வந்து அவர் கைகளையும் கால்களையும் பற்றிக் கொண்டனர். இரு செவிலியர் என்னை இழுத்து இன்னொரு அறைக்கு கொண்டு சென்றனர்” என்றாள்.

“எவரையாவது அடித்துக் கொன்றுவிடுவார் என்றால் நாம் நகர் மக்களிடம் இருந்து எதையும் மறைக்க முடியாது” என்றான் கர்ணன். “ஏன் மறைக்கவேண்டும்?” என்று பானுமதி சினத்துடன் கேட்டாள். “இவர் இப்படி இருப்பது தெரியட்டுமே அனைவருக்கும்” என்றாள். “எண்ணித்தான் சொல்லெடுக்கிறாயா பானுமதி?” என்று கர்ணன் சினத்துடன் கேட்டான். “அஸ்தினபுரியின் அரசர் இவர். இவர் உளநிலை சீராக இல்லையென்று மக்களுக்குத் தெரிந்தால் என்ன ஆகும்? முன்னரே இங்குள்ள மக்களில் பெரும்பாலானோர் யுதிஷ்டிரனின் புகழ்பாடத் தொடங்கியுள்ளனர்.”

பானுமதி மெல்ல அடங்கி “என்ன ஆயிற்று இவருக்கு? தங்களுக்கும் தெரிந்திருக்கும், கணவராக நான் இவரை அணுகி விழிநோக்கி இன்சொல் பேசியது இந்திரப்பிரஸ்தத்தின் அணையா விளக்கு விழவுக்கு இவர் கிளம்பிச் செல்வதற்கு முந்தைய நாள். திரும்பி வந்தவர் பிறிதொருவர்” என்றாள். “ஆம், மெய்யாகவே திரும்பி வந்தவர் பிறிதொருவர்” என்றான் கர்ணன். “இங்கு வந்த நச்சு நோயினால் அவர் மாறிவிட்டாரா?” என்றாள். “அந்த நோயே அவர் கொண்டு வந்ததுதான்” என்றான் கர்ணன். அவன் சொல்வதென்ன என்று அறியாததுபோல் அவள் பார்த்தாள்.

கண்ணீர் பெருகிய அவள் விழிகளை பார்த்தபின் அவன் மெல்ல தணிந்து “அங்கு அவர் சிறுமை செய்யப்பட்டார், பானுமதி” என்றான். “அதை பலமுறை பலரும் சொல்லிவிட்டீர்கள். அப்படியென்ன சிறுமை நிகழ்ந்தது? நானும் அங்கு  இருந்தேனே. கால் இடறி விழுந்தது இவரது பிழை. மதுமயக்கிலிருந்த  சில அரசர்கள் நகைத்தனர்.” கர்ணன் “அவள் நகைத்தாள்” என்றான். “அவள் நகைக்கவில்லை. அவளுக்கு மிக அருகே நான் இருந்தேன். அவள் விழிகளையும் உதடுகளையும் நான் பார்த்தேன்.  உறுதியாக அவள் நகைக்கவில்லை. இயல்பாக ஒரு கணம் திரும்பிப் பார்த்துவிட்டு அவ்வாறு பார்க்காததுபோல் திரும்பிக்கொண்டாள்” என்றாள்.

“இல்லை, அவள் நகைத்தாள். அவ்விழிகளை நானும் பார்த்தேன்” என்றான் கர்ணன் சீற்றத்துடன். “அது உங்கள் உளமயக்கு” என்றாள் பானுமதி. “இருக்கலாம். ஆனால் ஆண்கள் மட்டும் பார்க்கும் ஒரு நகைப்பு அது. அதை நான் பார்த்தேன். அஸ்தினபுரியின் அரசரும் பார்த்தார்” என்றான் கர்ணன். “உங்கள் உளமயக்கினால் அனைத்தையும் பெரிதாக்கிக் கொள்கிறீர்கள்” என்று அவள் சொன்னாள்.

கர்ணன் தன் தலையை கையால் தட்டி “இல்லை, ஒவ்வொரு கணமும் அதை சிறிதாக்கி கடந்துசெல்ல முயல்கிறேன்.  முயல முயல அது வளர்கிறது. அந்த நாளிலிருந்து ஒரு கணம்கூட நான் விலகவில்லை, அதை எண்ணாது ஓர் இரவும் துயின்றதில்லை. ஒருகாலையும் அந்நினைப்பில்லாது விடிந்ததும் இல்லை. அரசர் நிலையை என்னால் எண்ணிப்பார்க்கவே கூடவில்லை” என்றான்.

“அதன் பொருட்டு இவ்வளவு வஞ்சமா? ஒரு நகரத்தையே நஞ்சூட்டி, தன் ஆன்மாவையே கடுங்கசப்பால் நிறைத்து மூதாதையருக்கு அளிக்கும் அன்னத்தில்கூட அதைக்கலந்து… அந்த அளவுக்கு இதில் என்ன உள்ளது? உண்மையிலேயே என்ன வெறி இது என்று எனக்குப் புரியவில்லை” என்றாள். “நீ பெண். உன்னால் உணரமுடியாது” என்றான் கர்ணன்.

“அவர் இருக்கும் அறைக்குள் எட்டிப்பார்ப்பேன். தன் மூச்சுக்காற்றால் அவ்வறையை நச்சால் நிரப்பி அதையே திரும்ப மூச்சாக இழுத்துக்கொண்டிருக்கிறார் என்று தோன்றும். சற்று நேரம்கூட அவரருகே என்னால் இருக்க முடிந்ததில்லை. அவர் அறைக்குள் சென்றதுமே அந்நச்சுக்காற்று என் நெஞ்சை நிரப்ப மூச்சுத் திணறத்தொடங்கிவிடும். அவரும் ஓரிரு சொற்களுக்கு அப்பால் என்னிடம் பேசுவதில்லை. அச்சொற்கள் எதுவுமே நான் அறிந்த அஸ்தினபுரியின் அரசருக்குரியதல்ல.”

“எப்போதாவது அவர் என்னை தொட்டால்…” என்று இயல்பாக சொல்லிவந்தவள் உதடுகளை அழுந்தக் கடித்து தலைகுனிந்தாள். இமைப்பீலிகளிலிருந்து கண்ணீர் அவள் மடியில் விழுந்தது. “அங்கரே, அவர் என்னைத் தொடுவதை என்னால் தாங்கிக்கொள்ள முடிவதில்லை. நானறியாத பிறிதெவரோ என்னைத் தொடுவதுபோல் உணர்கிறேன். என் உடம்பு கூசி அதிர்கிறது.”

கர்ணன் பெருமூச்சுவிட்டான். அவள் விழிதூக்கி “உண்மையிலேயே இவ்வுடலுக்குள் பிறிதொருவர் குடியேறிவிட்டாரா? கூடு பாய்ந்து  பிறிதொன்று வந்து இதற்குள் வாழ்வதற்கு வழியுள்ளதா?” என்றாள். பதைப்பு தெரிந்த விழிகளுடன் “என் நெஞ்சின் ஆழம் நன்கு அறிகிறது, இது அவரல்ல. அவரில் குடியேறிய பிறிதெவரோ, ஐயமில்லை” என்றாள். கர்ணன் சிரித்து “கூடு ஒன்றுதான், பானுமதி. உள்ளே அனைத்து மானுடரும் மாறிக்கொண்டேதான் இருக்கிறார்கள். அவ்வாறு முற்றிலும் மாறுவது என் வாழ்க்கையிலும் இது இரண்டாவது முறை” என்றான்.

அவன் என்ன சொல்கிறான் என்பது போல அவள் அவனையே நோக்கிக் கொண்டிருந்தாள். “பல ஆண்டுகளுக்கு முன்பு துரோணரின் கல்விநிலையிலிருந்து சிறுமைப்பட்டு நான் ஓடினேன். அன்று இந்த உடலைத் திறந்து வெளியேறிவிட விழைந்தேன். மண்ணோடு மண்ணாகப் படுத்து புதைந்துவிடவேண்டும் என்று துடித்தேன். பெரும் சிறுமைகளின் முன் நாம் நமது உடலை அத்தனை அழுக்கானதாக, எடை மிக்கதாக, சீரற்றதாக உணர்கிறோம். கிழித்து அதிலிருந்து வெளியேறிவிட வேண்டுமென்று தவிக்கிறோம். நம் முதுகெலும்பு கரைந்து நாம் புழுவாகிவிடுகிறோம்…”

“அந்தப் பதினெட்டு நாட்களைக் கொண்டு அஸ்தினபுரியின் அரசரின் இந்த ஒரு கணத்தை நான் புரிந்து கொள்கிறேன். அக்கணத்தில் நான் முடிவிலாது வாழ்கிறேன்” என்றான். அவள் அவனையே நோக்கிக் கொண்டிருந்தாள். “சிறுமை என்பதே ஆண் கொள்ளும் உச்ச துயரம்” என்றான் கர்ணன். “இறப்பல்ல, இழப்புகள் அல்ல.”

தணிந்த குரலில் “சிறுமை அனைவருக்கும் உரியதே” என்று பானுமதி சொன்னாள். “இல்லை, அன்னையர் என்றே மண்ணில் பிறக்கும் பெண்கள்  ஆணவத்தைச் சுருக்கவும் சிறுமைகளை  கடக்கவும் இயல்பிலேயே கற்றிருக்கிறார்கள். சிறுமையை மாறா வஞ்சமென ஆக்கிக்கொண்ட பெண்கள் எவரையும் நான் இதுவரை கண்டதில்லை” என்றான் கர்ணன்.

பானுமதி “இதே நகர் முற்றத்தில்தான் ஒருத்தி சிறுமையின் உச்சத்தை அடைந்தாள். அதை வஞ்சமென மாற்றிக்கொண்டு இந்நகர் மேல் தன் கண்ணீரை நெருப்புத்துளியாக்கி எறிந்துவிட்டுச் சென்றாள்” என்றாள். “ஆம், பற்றி எரிந்து புரமழிக்கும் கொற்றவைகள் உண்டு. ஆனால் அம்பை உயிர் வாழ்ந்திருந்தால் ஒரு கைக்குழந்தையை அவர் தன் கையில் எடுத்திருந்தால் முலைப்பாலின் தண்மையால் அந்த அனலை கடந்து சென்றிருப்பார். ஆணுக்கு முலையூற்றுக்கள் இல்லை. சில அனல்களை ஆண்களால் ஒருபோதும் அணைக்கமுடியாது” என்றான்.

“அவரால் மீளவே முடியாதா?” என்று தாழ்ந்த குரலில் பானுமதி கேட்டாள். “முடியும். அச்சிறுமைக்கு நிகரான வஞ்சமொன்றை அவர் இழைக்கும்போது. ஒருகணமெனில் ஒருகணம் இந்திரப்பிரஸ்தத்தின் அச்சிறுமகள் வந்து அவர் முன் தலை பணிந்தாள் என்றால் அன்று அவர் வெல்வார். அவ்வனலை அணைக்கும் குளிர்நீர் அது மட்டுமே” என்றான் கர்ணன். பானுமதி “என்ன சொல்கிறீர்கள்? நீங்களே உருவாக்கிக்கொண்ட வஞ்சத்திற்காக இந்திரப்பிரஸ்தத்தின் அரசி எதற்கு சிறுமை கொள்ள வேண்டும்?” என்றாள். “இது எவரும் உருவாக்கியதல்ல. வேண்டுமென்றால் தெய்வங்கள் உருவாக்கியதென்று சொல்லலாம்” என்றான் கர்ணன்.

இருவரும் நினைத்த சொற்களை இழந்து ஒருவருக்குள் ஒருவர் மறந்து அசையாதிருந்தனர். தோட்டத்தில் தொலைவில் ஆடிய மரக்கிளை ஒன்றில் விழிநட்டு நின்றிருந்த கர்ணனை பானுமதியின் நீள்மூச்சு கலைத்தது. “இங்கிருந்து அதே வெறியுடன் இறங்கி இளைய அரசியின் அரண்மனைக்குச் சென்றார்” என்றாள். “நான் பார்க்கிறேன்” என்றான் கர்ணன்.

உலுக்கப்பட்ட மரத்திலிருந்து பனித்துளிகள் கொட்டுவது போல ஒரு விசும்பலோசையுடன் பானுமதி அழத்தொடங்கினாள். அவன் ஒரு  சொல்லுமின்றி அவளை பார்த்துக்கொண்டிருந்தான். பலமுறை தன் அழுகையை அடக்க அவள் முயன்றாலும் அவள் உடலை மீறி அது வந்து கொண்டிருந்தது. கண்களை அழுந்தத் துடைத்து மூக்கையும் வாயையும் பொத்தி சின்ன விசும்பலுடன் மீண்டு மீண்டும் அழுகை பீரிட அதன் ஒழுக்கில் சென்றாள். மெல்ல அடங்கி நீள்மூச்சுடன் மீண்டாள்.

கண்களை அழுந்தத் துடைத்தபடி “அழக்கூடாது என்று எண்ணும்தோறும் அழுகை பெருகுகிறது” என்றாள். கர்ணன் “ஆம், இச்சிறுமையை நீ கடந்து சென்றே ஆகவேண்டும்” என்றான். “சிறுமையா? என்ன சிறுமை?” என்று கண்களைச் சுருக்கியபடி பானுமதி கேட்டாள். “அஸ்தினபுரியின் அரசர்களில் எவரும் பட்டத்தரசியை அறைந்திருக்கமாட்டார்கள்” என்றான்.

பானுமதி “அங்கரே, நான் அழுதது காசிநாட்டரசியாகிய என்னை அஸ்தினபுரியின் அரசர் அறைந்தார் என்பதற்காக அல்ல. இங்கு நான் வந்தபோது என் நெஞ்சை தகழியாக்கி ஏற்றிவைத்த சுடர் ஒன்று இருந்தது. நானறிந்த அரசரை முழுமையாக இழந்துவிட்டேன் என்று என் உள்ளம் சொல்கிறது” என்றாள்.

கர்ணன் “அவ்வாறல்ல. இது சில நாட்கள் நீடிக்கும் ஒரு வஞ்சம் மட்டுமே. நானும் இதைப்போன்ற வஞ்சங்களின் ஊடாக சென்றிருக்கிறேன். அவை மெல்ல அணைந்து குளிரும்” என்றான். “அழியுமா?” என்று அவள் கேட்டாள். அவன் ஒன்றும் சொல்லவில்லை. “இவ்வஞ்சம் அனைத்தையும் சினமாக அன்றி வெறுப்பாகவோ காழ்ப்பாகவோ மாற்றி தனக்குள் கரந்துகொண்டிருந்தாலும்கூட அவர் நானறிந்த துரியோதனர் அல்ல. மணமுடித்து நான் வருகையில் நான் கண்ட அவ்வரசரை மீண்டும் பெறுவேன் என தோன்றவில்லை” என்றாள். “நான் என் மைந்தனைப் பெற்றது அந்த அரசரிடம்தான். இன்று அவ்வுடலேறி நின்றிருக்கும் வஞ்சத்தெய்வத்திற்கு அல்ல.”

“அனைத்தும் மீளும். அதற்கு வழியுள்ளது. அதற்கென்றே என் உயிர். அதற்கப்பால் நான் சொல்ல ஒன்றுமில்லை” என்றான் கர்ணன். “மீளுமெனில் நன்று. ஆனால் இப்போது அழுதுகொண்டிருக்கையில் என்னுள் ஒன்றை கண்டுகொண்டேன்” என்றாள். “என்ன?” என்றான் கர்ணன். “நான் என் முழு உள்ளத்தாலும் விரும்பிய அந்த அரசரைத்தான் மைந்தனாகப் பெற்றிருக்கிறேன். அவரை இழந்தாலும் நான் விரும்பிய அந்த அரசர் என் மடியில் மைந்தனாக இருக்கிறார். அவன் காலடி தொடர்ந்து எஞ்சிய வாழ்நாளை நான் கடந்துவிட முடியும்” என்றபின் அவள் எழுந்தாள்.

“நான் உங்களை அழைத்தது ஒன்று சொல்வதற்காகவே” என்றாள். கர்ணன் அவளை வெறுமனே நோக்கினான். “அவரை நீங்கள் இந்திரப்பிரஸ்தத்திற்கு அழைத்துச் செல்லவேண்டும்” என்றாள். “என்ன சொல்கிறாய்?” என்றான் கர்ணன். “நீங்கள் அழைத்துச் சென்றாக வேண்டும். இது என் ஆணை. நீங்கள் என் தமையன் என்ற வகையில் இதை கூறுகிறேன்” என்றாள். கர்ணன் “நீ எண்ணிச் சொல்லவில்லை” என்றான். “அனைத்துச் சொற்களையும் எண்ணியே சொல்கிறேன். நீங்கள் அழைத்துச் சென்றாகவேண்டும்.”

கர்ணன் உரக்க “அவன் அங்கு அடைந்த சிறுமையை நீ அறிவாயா? மீண்டும் ஒருமுறை…” என்று சொல்லத் துவங்க அவள் கைநீட்டித் தடுத்து “அது ஒரு சிறு தற்செயல். உங்கள் உளம் உறைந்த கசப்பால் அதை பெரிதுபடுத்திக் கொண்டீர்கள். இந்திரப்பிரஸ்தத்தின் அரசிக்கு நான் ஓர் ஓலை அனுப்புகிறேன். இவர் விழைவதென்ன? அவள் வந்து இவர் முன் முடிதாழ்த்த வேண்டும் என்பதுதானே? அதை அவள் செய்வாள். பொறுத்தருளும்படி கோருவாள். அவையில் முதன்மையாக அமர்த்துவாள். போதுமல்லவா?” என்றாள்.

கர்ணன் இல்லை என்பது போல் தலையசைத்தான். “நான் கூறுகிறேன். என் சொல்லை அவள் தட்டமாட்டாள்” என்றாள் பானுமதி. “இனி இவரது அனல் அணைந்து பழையவராக மீளக்கூடுமென்றால் அதற்கொரு வாய்ப்பு இது மட்டுமே.” கர்ணன் “நீ உன்னால் அறிந்துகொள்ள முடியாதவற்றுடன் போரிடத் திட்டமிடுகிறாய்” என்றான். “என் மேல் கருணை கூருங்கள். எனக்கென இதை மட்டும் செய்யுங்கள். இந்த ஒருமுறை எவ்வண்ணமேனும் இவரை அங்கு அழைத்துச் செல்லுங்கள்” என்றாள் பானுமதி. நெடுமூச்சுடன் “பார்ப்போம்” என்றான் கர்ணன்.

அவர்கள் சொல்லவேண்டியதை முழுக்க சொல்லிவிட்டதாக உணர்ந்தனர்.  கர்ணன் எழுந்தான். அவளிடம் ஆறுதலாக எதையேனும் சொல்லவேண்டும் என்று விரும்பினான். ஆனால் ஒருசொல்லும் தன்னிடம் மிஞ்சியிருக்கவில்லை என்று தோன்றியது. தலைவணங்கி அமைதியாக விடைபெற்றான். ஆனால் மறுபக்கக் கதவை அணுகி கையை வைத்ததும் “மூத்தவரே!” என்று மெல்லிய குரலில் அவள் அழைத்தாள். கர்ணன் திரும்பி நோக்க “இரண்டாவது சிறுமை எதுவென்று தாங்கள் சொல்லவில்லை. ஆனால் என்னால் உணரமுடிகிறது” என்றாள். அவன் தன் உடலில் மெல்லிய துடிப்பை உணர்ந்தபடி விழிதிருப்பிக் கொண்டான்.

“உங்கள் துயருடன்தான் எப்போதும் நான் அணுக்கமாக இருக்கிறேன். அதிலிருந்து மீண்டு வாருங்கள். வஞ்சமோ கசப்போ கொண்டு மறைக்கும் அளவுக்கு எளியதல்ல இவ்வாழ்க்கை. எண்ணி முடிப்பதற்குள் ஆண்டுகள் கடந்துபோகும். முதுமை வந்து உங்களை மூடுகையில் இழந்தவற்றை எண்ணி ஏங்குவீர்கள் என்றால் அதுவே வாழ்வின் மிகப்பெரிய துயரமாகும்” என்றாள்.

ஒரே சமயம் அவள் மேலே பேசவேண்டும் என்றும் அச்சொற்களை தான் கேட்கக்கூடாதென்றும் எப்படி தோன்றுகிறதென்று அவன் வியந்து நின்றான். அவள் அணிகளும் ஆடைகளும் ஓசையிட சற்று முன்னால் வந்து “வேண்டாம், மூத்தவரே! கடந்து மறந்துவிடுங்கள். இவையெல்லாம் எளிமையானவை. ஒரு அடி எடுத்துவைத்தால் கடந்துவிடக்கூடிய அளவுக்கு சிறியவை. கனவிலிருந்து விழித்துக் கொள்வதைப்போலத்தான் அது. நான் சொல்வதை கேளுங்கள்” என்றாள். கர்ணன் ஒன்றும் சொல்லவில்லை.

அவள் “இம்முறை இந்திரப்பிரஸ்தத்திற்கு நீங்கள் செல்லும்போது அவளிடம் சென்று பேசுங்கள்” என்றாள். கர்ணன் சீற்றத்துடன் திரும்பி “எவரிடம்?” என்றான். “இந்திரப்பிரஸ்தத்தின் அரசியிடம். என்னிடம் பேசுவது போல் பேசுங்கள்… விழிகளைப்பார்த்து.”

அவன் “அவள் பேரரசி, நான் அஸ்தினபுரியின் சிற்றரசன்” என்றான். “அல்ல. ஒருமுறை அணுகி அவள் விழிகளை நீங்கள் பார்த்தீர்களென்றால் உங்கள் இரண்டாவது வஞ்சத்தின் இறுதி முள்ளும் அகன்று போகும்” என்றாள். “என்ன சொல்கிறாய்?” அவளை நோக்காமலே  கர்ணன் கேட்டான். அவள் “நீங்கள் அறிவீர்கள்” என்றாள். “சரி” என்றபடி அவன் கதவை திறந்தான். அவள் மேலும் ஓரடி வைத்து “நான் சொல்வதை புரிந்து கொள்ளுங்கள். அவளிடம் அணுகி விழி நோக்கி பேசுங்கள். ஒரு சொல் போதும்” என்றாள்.

திடீரென்று தன்னை மீறிய சீற்றத்துடன் திரும்பிய கர்ணன் “போதும்! நீயே உருவாக்கிக்கொண்ட கீழ்மையை என்மேல் சுமத்த வேண்டியதில்லை” என்று கூவினான். “நான் என்ன சொல்கிறேன்…” என்று அவள் சொல்லத்தொடங்க “நீ ஒரு சொல்லும் சொல்ல வேண்டியதில்லை. உன் சொற்களைக் கேட்பதற்காக நான் இங்கு நிற்கவும் இல்லை. உன் கணவன் என் அரசன் என்பதனால் அவனைப்பற்றி பேசுவதற்காக இங்கு வந்தேன். எனது ஆழங்களை நீ கடந்து வர வேண்டியதில்லை” என்றான்.

“பின் எவர்தான் கடந்து வருவார்கள்?” என்று அவள் உரக்க கேட்டாள். “அங்கே அங்க நாட்டில் உங்களுக்கு இரு அரசிகள் இருக்கிறார்கள். இரு மைந்தர்கள் பிறந்திருக்கிறார்கள். அங்கே நீங்கள் சில நாட்கள்கூட இருக்கவில்லை. அங்கிருந்த நாட்களிலும் அரசியரின் அந்தப்புரத்திற்கு மிகச்சில நாட்களே சென்றிருக்கிறீர்கள். இருமைந்தரையும் தொட்டு தோள் தூக்கவில்லை. மார்பில் அணைக்கவில்லை. அங்கிருந்த போதெல்லாம் காட்டில் வேட்டையாடிக் கொண்டிருந்தீர்கள். இங்கு உங்களுக்கு அணுக்கமானவர் அரசர். அவரோ உங்களை முற்றிலும் புறக்கணித்து தன் உலகத்தில் இருக்கிறார். நானும் அணுகக்கூடாதென்றால் எவரும் கடந்து வராத இருட்டு அறையாகவா உங்கள் உள்ளத்தை வைத்திருக்கப்போகிறீர்கள்? ஒட்டடையும் தூசியும் படிந்து மூத்தவள் குடியிருக்கும் இல்லமாகவா?” என்றாள்.

கர்ணன் “ஆம், அது பாழடைந்துவிட்டது. உனக்கென்ன? நான் உன்னிடம் வந்து கோரவில்லை, எனக்குத் துணை கொடு ஆறுதல் கொடு என்று. என் அரசி நீ. அரசனின் துணைவி நீ. அதற்கப்பால் ஏதுமில்லை” என்றான். பானுமதி கன்னங்களில் குழிவிழ விழி ஒளிர புன்னகைத்து “அரசரின் துணைவியை ஏன் ஒருமையில் அழைக்கிறீர்கள்?” என்றாள். “அப்படியென்றால் இனி முறைமை சொல்லி அழைக்கிறேன். அரசி, பொறுத்தருளுங்கள்! தங்கள் எல்லைகளுக்குள் தாங்கள் அமையுங்கள். இந்தச் சிற்றரசனிடம் எது பேசவேண்டும் எது பேசக் கூடாதென்று எண்ணிக் கொள்ளுங்கள்!” என்றான்.

பானுமதி “அந்த எல்லையை நான் வகுத்துக் கொள்ளப்போவதில்லை. என்றும் என் மூத்தவராகவே உங்களை எண்ணுவேன்” என்றபின் “இறுதியாக ஒன்றை மட்டும் உங்களிடம் சொல்ல விரும்புகிறேன். உங்கள் வஞ்சத்தை அவர்மேல் ஏற்றவேண்டாம்” என்றாள். கர்ணன் சினத்துடன் அவளை நோக்க அவள் ஒருகணம் அவன் விழிகளை சந்தித்துவிட்டு அறைக்குள் சென்றாள்.

உடல் முழுக்க சினத்துடன் அவன் திரும்பி வந்தான். ஒவ்வொரு அடிக்கும் அவள் சொன்ன இறுதிச் சொற்களிலிருந்து அவன் உள்ளம் மேலும் மேலும் சொற்களை உருவாக்கி எரிந்தது. திரும்பி துரியோதனனின் அரண்மனைக்கு செல்லத்தோன்றவில்லை. காவலனிடம் புரவியை வாங்கிக்கொண்டு தன் அரண்மனைக்கு சென்றான்.

முந்தைய கட்டுரைபி.ராமன் கவிதைகள்
அடுத்த கட்டுரைதுறைசார் நூல்கள்