அன்புள்ள ஜெ,
தங்களின் ‘ஆண்மையின் தனிமை’ கட்டுரையில் ஈடிபஸ் காம்ப்ளக்சைப் பற்றிய வினயாவின் இப்பார்வை – “ஈடிபஸ் காம்பள்ஸ் என்பது அறிதலின் ஒரு சிறிய பக்கம் மட்டுமே. உலகெங்கும் செல்லுபடியாகும் நாணயம் அல்ல அது. இந்தியாவில் ஒர் இளைஞனின் பிரச்னை ஈடிபஸ் உளச்சிக்கல் அல்ல. தந்தையை பெற்றுக் கொள்ளுதல்தான்” [inheritance] – சட்டென்று என்னைப் புரட்டிப் போட்டது. ஆம், எத்தனை உண்மை அல்லவா? ஒவ்வொரு மகனும் தன் தாயிடம் இருந்து தன்னைப் பெற்றவனின் சித்திரத்தைத் தான் உருவாக்கிக் கொள்கின்றனர். ஒரு கட்டத்தில் அதன் போதாமைகளை உணரும் போது முழு ஆணாகின்றனர், இல்லையா?
கர்ணனும், அர்ஜுனனும் குந்தியிடம் இருந்து பெற்றுக்கொள்ள முயன்று கொண்டே இருப்பது அவரவர் தந்தையைத் தான் அல்லவா!! இத்தனை நாள் குந்தியைப் பார்க்கும் அர்ஜுனனின் பார்வையை முழுமையாகப் புரிந்து கொள்ள இயலாமல் இருந்தேன். நாங்கள் கூட சென்னை விவாத அரங்கில், அது ஈடிபஸ் காம்ப்ளக்ஸ் என்று கூடப் பேசினோம். கூடவே எல்லா உளவியலுக்கும் கிரேக்கத்திற்குத் தான் போக வேண்டுமா என்ற உங்களின் ஆதங்கத்தையும் பேசினோம். எனினும் எங்கோ உள்ளே எங்கள் அனைவராலுமே அது ஈடிபஸ் என்று ஏற்றுக் கொள்ள இயலவில்லை. ஒரு இந்திய மனதிற்கு அத்தகைய ஒரு எண்ணத்திற்கான சாத்தியம் மிக மிகக் குறைவே.
ஒரு வகையில் உங்கள் தளத்தில் வரும் கட்டுரைகளுக்கும் அதனோடு வரும் வெண்முரசின் பகுதிகளுக்கும் ஒரு வகை தொடர்பு இருக்கிறதோ என்று ஒரு எண்ணம். MS பற்றிய ‘டி.ஜெ.எஸ். ஜார்ஜ்’ எழுதிய நூலைப் பற்றிய விமர்சனம் வந்தால் கூடவே திருஷ்டதுய்மனின் மீது காதல் வயப்படும் தாசியான சுப்ரியை வருகிறாள். “ஆதல்” என்று யாராக ஆக விரும்புகிறோம் என்ற லோகியை மையமாக்கிய ஒரு கட்டுரை வந்தால் குந்தியாக ஆக விழைந்த சுருதகீர்த்தியின் கதை வருகிறது. தட்சிணாமூர்த்தியும், கருப்பண்ண சாமியும் என்று வந்தால் அங்கே சிசுபாலன் பழியுணர்வுக்கும், தன்னிரக்கத்திற்கும் இடையில் அல்லாடும் சித்திரம் வருகிறது. இவை தற்செயலாகவும் இருக்கலாம். இருப்பினும் இப்போதெல்லாம் ஏதேனும் ஒரு இடைவெளி வாசிப்பில் வருமென்றால் உடனடியாக கடந்த 5 நாட்களில் வந்த கட்டுரைகளைத் தொகுத்துப் பார்த்துவிடுவதை ஒரு வழக்கமாக்கிக் கொண்டுள்ளேன்!!
அன்புடன்,
அருணாச்சலம் மகராஜன்