கேள்வி பதில் – 29, 30, 31, 32

மொழித்தூய்மை பற்றி என்ன நினைக்கிறீர்கள்? அறிவியல் சார்ந்த துறை மட்டுமல்லாது நாம் அன்றாடம் உபயோகிக்கும் அல்லது நம் பாட்டி காலத்திலிருந்தே வழக்கில் இருக்கும் காப்பி, பஸ், டிக்கட் போன்ற வார்த்தைகளைக் கூட மாற்றத்தான் வேண்டுமா? ஒருமொழி எவ்வளவுதூரம் அடுத்த மொழிக்கு இடமளிக்கலாம் என்று நினைக்கிறீர்கள்?

— ஜெயஸ்ரீ கோவிந்தராஜன்.

நவீனமொழியில் அதன் தூய்மைக்கான ஒரு விழிப்புணர்வு இருந்தபடியே இருக்கவேண்டும் என்பது என் எண்ணம்.

பலவருடங்களுக்கு முன் மலையாள எழுத்தாளர் ‘ஆனந்த்’ உடன் பேசிக்கொண்டிருந்தபோது அவர் இதை மறுத்தார். எல்லா காலத்திலும் மொழி பிறமொழிகளுடன் உரையாடி, சொற்களைப் பெற்றுக் கொண்டே வளர்ந்துள்ளது என்றார். இந்த வாதம் வலிமையுடன் எப்போதும் வைக்கப்படுகிறது

ஆனால் கடந்த காலத்தில் மொழிகளுக்கு இடையேயான உரையாடல் மிக மிகக் குறைவாகவே நிகழ்ந்துள்ளது. காரணம் இன்றைய ஊடகங்கள், பொதுக்கல்வி, மக்கள் இடம்பெயர்தல் ஆகியவை அன்று இல்லை. இன்று மொழிகள் மிதமிஞ்சிச் கலப்பதன் அபாயம் அதிகம். நேற்று நாம் நதிகளையும் நீர்நிலைகளையும் காப்பது குறித்துப் பேசியதில்லை, இன்று சுற்றுச்சூழல் சார்ந்த பேச்சே தலையானதாக உள்ளது. இக்காலம் இவற்றைக் கட்டாயமாக்குகிறது. பலமொழிகளால் கல்வி, செய்தித் துறைகளில் சூழப்பட்டுள்ள தமிழ் தன் தனித்துவம் குறித்த விழிப்புணர்வுடனிருக்கவேண்டும்.

மொழியின் தனித்துவம் அதன் ஒலிநேர்த்தியில் உள்ளது. பிற மொழிகளிலிருந்து சொற்களைக் கடன் வாங்கி திசைச்சொற்களை உருவாக்க நமக்கு இலக்கணமரபின் அனுமதி உள்ளது. ஆனால் அது நம் மொழியின் ஒலியமைப்புக்குள் அமையவேண்டும். காப்பி நம் மொழியின் ஒலி உள்ள சொல். பஸ், டிக்கட் அப்படி அல்ல. சினிமா, நாவல், பிரக்ஞை முதலிய சொற்கள் நம் மொழிக்குள் கொணரப்பட்ட நல்ல திசைச்சொற்கள். தொனி, அங்கம், சித்தம், தவம் போன்றவை நம் மொழியாக ஒலிமாற்றப்பட்டவை. அவற்றை ஏற்கலாம். கலெக்டர், கம்ப்யூட்டர், தாஸில்தார், ட்ரெயின் முதலியவற்றை ஏற்க இயலாது. ஏற்றால் மொழி அழியும்.

நாவல் சினிமா போன்ற ஏற்கப்பட்ட சொற்களுக்குக் கூட ‘புதினம்’, ‘திரைப்படம்’ என்ற சொற்கள் உருவாக்கப்படுகின்றன. அதுவும் நல்லதே. பல சொற்கள் இருப்பது ஒலிநயம் தேடும் படைப்பிலக்கிய எழுத்துக்கு மிகவும் பயனுள்ளது.

ஒரு சொல்லின் தமிழ் ஒலியை எப்படிக் கண்டறிவது? ஒரு மொழியின் கவிதை அம்மொழியின் ஒலிநேர்த்தியைப் பெரிதும் வெளிப்படுத்துவது. கவிதையில் எழுதினால் அன்னிய ஒலி வரும் சொல் தவிர்க்கப்பட்டேயாகவேண்டும். ‘சினிமா பார்க்கச் செல்கின்றீர்/ இனியொரு விதியினைக் கைக்கொள்வீர்‘ தமிழின் ஒலிநேர்த்தி பங்கப்படவேயில்லை. ‘கம்ப்யூட்டர் கொண்டு கதை எழுதும்/ எம்போல்வர் என்செய்வோம் இனி’ ஒலி துருத்தி நிற்கிறது. இதுதான் அளவுகோல்.

தமிழில் புதிய சொற்களை ஆக்கியவர்கள் பண்டிதர்கள். அவற்றை அதிகமாகப் பயன்படுத்திவர்கள் பண்டிதர்களைக் கிண்டல்செய்த புதுக்கவிதையாளர். ஒருபோதும் தனித்தமிழ்வாதிகளை ஏற்று ஒரு சொல் சொல்லாத, பண்டிதர்களை எதிர்க்கும் ஒரு தருணத்தையும் உதறாத சி.மணியும் சுந்தர ராமசாமியும் ‘ஒளிச்சேர்க்கை‘ என்றும் ‘தட்டச்சுப்பொறி‘, ‘கால்பந்தாட்டம்’ என்றும் சொற்களை ஆள்கிறார்கள். ஃபோட்டோ சிந்தஸிஸ் என்றும் டைப் ரைட்டர் என்றும் ஃபுட்பால் என்றும் கவிதை எழுத இயலாதென அவர்கள் அறிவார்கள். இதை சுந்தர ராமசாமியிடம் பதினைந்துவருடம் முன்பே சொல்லி வாதிட்டிருக்கிறேன்.

அதேசமயம் தமிழ்ச்சிற்றிதழ் இயக்கம் மிக அதிகமான புதுச்சொற்களை உருவாக்கியுள்ளது. பலசொற்கள் அன்றாடச் சொற்களாக ஆகி இன்று தினத்தந்தியில் புழங்குகின்றன. உதாரணம் படிமம், எதிர்வினை.

-*-

வாசகனுக்கும் எழுத்தாளருக்குமான இடைவெளி எவ்வளவு இருக்கவேண்டும் என்று நினைக்கிறீர்கள்?

— ஜெயஸ்ரீ கோவிந்தராஜன்.

எழுத்தாளனை வாசகன் உதாசீனமாக எண்ணாதபடி.

-*-

தற்சமயம் குழுமங்கள் வழியாக நினைத்தே பார்க்க முடியாத எழுத்தாளர்களுடன் அன்றாடம் மடலாடும் வாய்ப்பு (அதுவும் என்னைப் போன்ற மிகமிகச் சாதாரண வாசகிக்கு) நல்ல ஆரோக்கியமான திருப்பமா? எனக்கு இதில் தயக்கம் நிறைய இருக்கிறது.

— ஜெயஸ்ரீ கோவிந்தராஜன்.

வாய்ப்புகள் எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன என்பதைப் பொருத்தது அது. எழுத்தாளன் பொதுவான கண்ணோட்டத்துக்கு அப்பால் சில கோணங்களை தன் எழுத்தின்மூலம் அடைந்தவன் என்பதனால் வாசகர்களுக்கு அவனுடன் உரையாடுதல் பலவகையிலும் பயன் அளிக்கும். நான் பல பேரறிஞர்களை, அறிவியலாளர்களை, ராஜதந்திரிகளை, அரசியல்தலைவர்களை, சிந்தனையாளார்களை, திரைப்படக்காரர்களை சந்தித்திருக்கிறேன். அவர்கள் எவரையும்விட எனக்கு அகத்தூண்டல் அளித்த சொற்களை எழுத்தாளர்களே சொல்லியிருக்கிறார்கள். எழுத்தாளர்களுக்கு மேல் நான் வைப்பது நித்ய சைதன்ய யதியை. ஆனால் ஒருகோணத்தில் அவரும் எழுத்தாளரே.

ஆனால் எழுத்தாளனை அவனது படைப்புகளுக்குப் பதிலாக எண்ணக் கூடாது. அவன் சொன்னவற்றை அப்படியே அவன் எழுத்துகள்மீது ஏற்றிப் பார்ப்பதும் அவனது எழுத்துகளை அவன் விளக்கவேண்டுமென எதிர்பார்ப்பதும் பிழை.

இவ்விரு எல்லைகளுக்குள் நிற்கின்றன மடலாடற்குழுக்களின் நிலைகள்.

-*-

மின்புத்தகங்களின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்று நினைக்கிறீர்கள்?

— ஜெயஸ்ரீ கோவிந்தராஜன்.

இணையத்தில் வந்த என் கட்டுரைகளை கணிசமான வாசகர்கள் அச்சுப் போட்டு வைத்துள்ளார்கள். பிறர் அதைக் கோரிப் பெற்று நகலச்சு எடுத்துக் கொள்கிறார்கள். மிகப்பெரும்பாலானவர்களுக்கு கணித்திரையில் படிப்பது பற்றி நினைத்தே பார்க்கமுடியவில்லை.

மேலும் இங்கே இணையத்துக்கான செலவை விட புத்தகச்செலவு சற்றுதான் அதிகம்.

மின்புத்தகங்கள் தமிழில் பிரபலமாக பலகாலமாகும். அதற்குமுன் தமிழில் புத்தகங்கள் பரவலாக அறிமுகமாகவேண்டியுள்ளது.


முந்தைய கட்டுரைகேள்வி பதில் – 27, 28
அடுத்த கட்டுரைகேள்வி பதில் – 33, 34