அரசியல் கடிதங்கள்

images

 

அன்புள்ள ஜெயமோகன்,

உங்களது ‘ஏஷியா நெட்’ பேட்டியில் இரண்டு விஷயங்களைக் கவனித்தேன். முதலாவது ‘பாடி லாங்குவேஜ் (body language)’. மலையாளிகளுக்கென்று தனித்துவமான உடல் மொழி இருக்கிறது. சக மலையாளிகளிடம் சம்சாரிக்கும் போது அந்த உடல்மொழி அவர்களிடம் தூக்கலாக இருப்பதனைக் கவனித்திருக்கிறேன். உங்களிடம் அந்த உடல்மொழி மிஸ்ஸிங்.

இரண்டாவது உச்சரிப்பு. உங்களின் மலையாள உச்சரிப்பு ஏறக்குறைய தமிழைப் போல இருந்ததாக என்னுடைய தனிப்பட்ட எண்ணம். மூக்கின் உபயோகம் குறைந்தது தமிழில் புகுந்து விளையாடி கஸரத் எடுத்ததன் காரணமாக இருக்கலாமோ என்று ஒரு சம்சயம். அல்லது ஒருவேளை நாகர்கோவில் மலையாளம் அப்படித்தானோ? எப்படி இருந்தாலும் உங்களின் உச்சரிப்பு மறைந்த இசையமைப்பாளர் எம்.எஸ். விஸ்வநாதனை விடவும் பெட்டர்தான். மலையாளிகளிடம் மண்டை காய வைக்கும் மலையாளம் பேசுவதில் அவரை மிஞ்ச இன்னொருத்தன் பிறந்துதான் வரவேண்டும்! எனிக்கி மலையாளம் நன்னாயிட்டு மனசிலாகும். கொறச்சு வாசிக்கானும் அறியும் கேட்டோ? பட்ஷே பறயான் வரினில்லா ஸாரே. ஞான் எந்து செய்யும்? :)

மற்றபடி நீங்கள் சொன்னபடிதானே தமிழக, கேரள தேர்தல் முடிவுகள் இருக்கின்றன? மிகச் சரியாகத்தான் கணித்திருக்கிறீர்கள் என்பதில் சந்தேகமில்லை.

அதே சமயம் நீங்கள் திருமாவளவனை கொஞ்சம் அதிகமாகத் தூக்கிப் பிடிக்கிறீர்களோ என்கிற எண்ணம் எனக்கிருக்கிறது. எனக்கும் அவருக்கும் எந்த தனிப்பட்ட விரோதமோ அல்லது கொடுக்கல் வாங்கல்களோ இல்லை. இருந்தாலும் நீங்கள் சொல்வது போல தமிழ் நாட்டு முதலமைச்சராக வருவதற்கான தகுதிகளை அவர் வளர்த்துக் கொண்டிருக்கிறாரா என்பது சந்தேகம்தான். அவருடைய இத்தனை வருட கால நடவடிக்கைகளையும் நான் கவனித்து வந்திருக்கிறேன் என்றாலும் நானறியாத சில தகுதிகள் அவருக்கு இருக்கக் கூடும் என்பதினை மறுப்பதற்கில்லை. ஜெயலலிதாவிற்கும், கருணாநிதிக்கும் அப்பால் திராவிடக் கட்சிகள் சிதறுவதற்கான வாய்ப்புகள் அதிகம். அடுத்த கட்டத் தலைவர்களை இரண்டு கட்சிகளும் வளர்த்தெடுக்கவில்லை அல்லது வளர விடுவதில்லை. இந்தச் சூழ்நிலையில் திருமாவளவன், அன்புமணி ராம்தாஸ் போன்றவர்களின் முக்கியத்துவம் கூடலாம்.

தமிழ்நாட்டில் பா.ஜ.கவோ அல்லது காங்கிரஸ் கட்சியோ தலையெடுப்பதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு என்பது என்னுடைய தனிப்பட்ட முடிவு. ஓரளவிற்கு வாய்ப்பிருக்கும் பா.ஜ.கட்சி, பெரும்பாலான தமிழர்களால் வட இந்தியக் கட்சியாகவே பார்க்கப்படுகிறது. அதனை மாற்றுவதற்கு அந்தக் கட்சித் தலைவர்களே ஆர்வமற்று இருக்கிறார்கள். எனவே ஒரு காம்ப்ரமைஸ் தலைவராக திருமாவளவன் தமிழ்நாட்டு முதலமைச்சராக வாய்ப்புகள் இருக்கவே செய்கிறது. அதற்கு முன்னால் அவருக்கு இன்றைக்கு இருக்கும் எதிர்மறையான இமேஜை அவர் மாற்ற முயற்சிக்க வேண்டும். அவரது கட்சித் தொண்டர்களை வன்முறையைக் கைவிடச் செய்ய வேண்டும். முக்கியமாக கட்டைப் பஞ்சாயத்து. அடுத்த சாதிப் பெண்கள் குறித்தான அவரது வார்த்தைப் பிரயோகங்கள் ஒருபோதும் பிற தமிழக சாதியினரால் ஏற்றுக் கொள்ளப்படவே மாட்டாது என்பதினை அவர் உணரவேண்டும். இதையெல்லாம் நான் சொல்லி உங்களுக்குத் தெரிய வேண்டும் என்பதில்லை. அதையும் விட வஹாபிய அடிப்படைவாத முஸ்லிம்களுடனும், இலங்கையில் இனப்படுகொலையைத் துரிதப்படுத்திய தமிழக கிறிஸ்தவ பாதிரிமார்களுடனான உறவையும் அவர் மறுபரிசீலனை செய்ய வேண்டும். அதையெல்லாம் அவர் செய்வாரா என்பது சந்தேகமே.

எப்படி இருந்தாலும் அடுத்த ஐந்து ஆண்டுகள் தமிழக அரசியலில் புயல் வீசும் ஆண்டுகளாக இருக்கக் கூடிய வாய்ப்பு அதிகரித்திருக்கிறது என்பதில் சந்தேகமில்லை.

 

அன்புடன்,

நரேந்திரன்.

 

அன்புள்ள நரேந்திரன்,

வெள்ளையானை வெளியான நாள்முதலே விடுதலைச்சிறுத்தைகள் அமைப்பிலுள்ள நண்பர்களுடன் எனக்கு உறவுண்டு. என் அவதானிப்புகள் பல தனிப்பட்ட அனுபவங்கள் சார்ந்தவை.

ஜெ

 

 அன்புள்ள ஜெமோ

உங்கள் ஏஷியாநெட் பேட்டி மலையாள மனோரமா கட்டுரை இரண்டையுமே கவனித்தேன். சுவாரசியமான அரசியல் ஊகங்கள். பெரும்பாலும் ஒரு நேரடியான நடைமுறைத்தன்மை கொண்டவை உங்கள் கருத்துக்கள். தமிழக அரசியல் பற்றியும் கேரள அரசியல் பற்றியும் நீங்கள் சொன்ன ஊகங்கள் எல்லாமே சரியாகிவிட்டன.

இடதுசாரி இலட்சியவாதம் கேரளத்தில் காலாவதியாகி அந்த இடத்தில் நடைமுறை சார்ந்த ஒரு அரசியல் வந்துவிட்டிருப்பதை சொன்னீர்கள். அதுவும் சரிதான். அச்சுதானந்தனைப்பற்றி நீங்கள் சொன்ன வார்த்தைகள் முக்கியமானவை. நீங்கள் சொன்னதைப்போல தலையில் சிவப்புத்துண்டு கட்டி ‘எந்தா சாரே?’ என்று கேட்டு அட்டிமறிப்பணம் கேட்டுவரும் ரவுடி சகாவுதான் இப்போது முதலமைச்சர்

எது பயமாக இருக்கிறது என்றால் கேரளத்தைப்பற்றி நீங்கள் சொன்ன மேலதிக ஊகம்தான். பாரதிய ஜனதா பலமடங்கு வாக்கு பெறும் என்று சொன்னீர்கள். பெற்றுவிட்டார்கள்.கேரளத்தில் அப்படியெல்லாம் பாரதியஜனதாவுக்கு எதிர்ப்பி இல்லை என்றும் , பெரும்பாலான கேரள கிறித்தவர்கள் வணிகர்கள் என்பதனால் அவர்கள் பாரதிய ஜனதாவை ஆதரிக்கவும் கூடும் என்றும் அதுநடந்தால் இப்போது காங்கிரஸ் அங்கே செய்யும் ஒருங்கிணைப்புவேலையை பாரதிய ஜனதா செய்யமுடியும் என்றும் சொன்னீர்கள். நடந்திருமோன்னு பயமா இருக்கு

 

ஜெயசீலன்

 

அன்புள்ள ஜெயசீலன்,

இப்போதேகூட சிரியன் கிறிஸ்தவர்களுக்கு பாரதிய ஜனதா உவப்பான கட்சிதான். அவர்கள் வணிகர்கள். அடுத்த ஐந்தாண்டும் மத்தியில் காங்கிரஸ் இல்லை என்றால் அவர்கள் பாரதிய ஜனதாவை நாடுவார்கள். வஹாபிய இஸ்லாமின் வெறுப்பரசியலும் வன்முறையும் அவர்களை அத்திசை நோக்கிச் செலுத்திக்கொண்டிருக்கிறது

 

ஜெ

 

 

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 59
அடுத்த கட்டுரைகேரள வன்முறை