துறைசார் நூல்கள்

 

 

 

 

1

அன்புமிக்க திரு.ஜெயமோகன் அவர்களுக்கு,

வணக்கம்.

நான் ’ஆடம் ஸ்மித் முதல் கார்ல் மார்க்ஸ் வரை’ நூலின் ஆசிரியன். டிசம்பர் 23, 2012ல் நீங்கள் என் நூலுக்கு உங்கள் இணையதளத்தில் எழுதிய விமர்சனத்திற்கு நான்காண்டுகளுக்குமேல் தாமதித்து நன்றி கூறுவதற்காக என்னை மன்னியுங்கள். நீங்கள் அந்த நூலை ‘குங்குமம்’ வார இதழில் வெளிவந்த சிறந்த பத்துத் தமிழ்நூல்களில் முதலாவதாகத் தேர்ந்தெடுத்திருக்கிறீர்கள் என்று MIDS பேராசிரியர் ஏ.ஆர்.வெங்கடாசலபதி அப்போது தெரிவித்திருந்தார். ஆனால் அவருக்கும் கூட நீங்கள் அந்த நூலுக்கு ஒரு விமரிசனமும் எழுதியிருக்கிறீர்கள் என்பதை தெரிவித்திருக்கவில்லை என்றே நம்புகிறேன்.

 

2010-13ல் திரு.பவுத்த  அய்யனார் கரூரில் பணிபுரிந்தபோது அறிமுகமானார். அவர் உங்கள் எழுத்துக்களைப்பற்றி அவ்வப்போது கூறுவார். இப்போது தந்தி தொலைக்காட்சியில் பணியாற்றும் தீவிர வலதுசாரி நண்பரான   KR அதியமான் தன் முகநூல் பக்கங்களில் உங்கள் கருத்துக்களை அவ்வப்போது விமரிசனம் செய்வதுண்டு. அவர்களிருவருக்கும் கூட என் நூலைப்பற்றிய உங்கள் விமரிசனம் பற்றித் தெரிந்திருந்தால் எனக்கு அப்போதே தெரிவித்திருப்பார்கள் என்று நம்புகிறேன்.

 

2014லிருந்தே உங்கள் இணைய பக்கங்களை எனது Feedly RSS Feed aggregatorல்  சேர்த்திருப்பதால் நான் அவற்றைத் தினமும் காண்கிறேன். (இப்போது உங்கள் இணைய தளத்தோடு மின்னஞ்சல் தொடர்பையும் ஏற்படுத்திக் கொண்டுவிட்டேன்.) இருந்தபோதிலும் மூன்று நாட்களுக்கு முன்பு  உங்கள் இணைய தளத்தில், தினமலரில் உங்கள் சமீபத்திய கட்டுரைகளைத் தேடிக் கொண்டிருந்தபோது நீங்கள் என் நூலுக்கு விமர்சனம் எழுதியிருக்கும் செய்தி எதிர்பாராதவிதமாகக் கிடைத்தது. அதனால்தான் தாமதமாக நன்றி கூறுவது கூட, அப்படிச்செய்யாமலே விடுவதைவிடவும் மேன்மையானதே என்கிற அடிப்படையில் இக்கடிதம் எழுதுகிறேன்.

 

1995லேயே என் நினைவாற்றல் தடுமாற ஆரம்பித்ததனால் ’சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவன’த்திலிருந்து, அந்த நிறுவனம் எனக்கு பதவி நீட்டிப்பு அளிக்க முன்வந்த போதிலும், நானாகவே ஓய்வு பெற்றுவிட்டேன். வயது கூடக்கூட நினைவாற்றல் குறைந்துகொண்டே வருவதை இயற்கையானதாக ஏற்றுக்கொள்கிறேன். அதனால் மற்றவர்களின் கருத்துக்களை அறிந்துகொள்வதில் ஆர்வம் குறையவில்லையென்றாலும் அவற்றைப் பற்றி விவாதங்களில் ஈடுபடுவதை கூடியவரை தவிர்த்துவிடுகிறேன். தற்போது இணையத்தின் வழியாகமட்டுமேபெருமளவில் பொருளியல் கட்டுரைகளையும் மற்ற கட்டுரைகளை அவ்வப்போதும், படிக்கிறேன். முன்போல புத்தகங்களை முழுதாக படித்து நினைவில் வைத்துக் கொள்ள இயலவில்லை!

 

இணையத்தின் வழியாகத்தான் உங்களை அறிந்தேன்; தொடர்கிறேன். இணையத்தில் தினந்தோறும் நீங்கள் பதிப்புக்கும் பல்வேறு வகையான கட்டுரைகள் பலவற்றை படித்திருக்கிறேன். உங்களுடைய பல கருத்துகள் எனக்கு  ஏற்புடைத்தானவை. எடுத்துக்காட்டாக, இந்து மதம் ஒரு தொகைமதம் என்பதனால் அதில் சிறு தெய்வ பெருந்தெய்வ வழிபாடுகள் படிப்படியாக வளர்ந்து அதையும் தாண்டி நுட்பமான ஞானமார்க்கத்தை நோக்கிச் செல்கிறது என்றும் அதன் அகன்ற பரப்பை அறிந்து கொண்டால் மற்ற மதத்தினரின் பகடிகளையும் இழிசொற்களையும் புறந்தள்ளலாம் என்ற கருத்து; காந்தியைப்பற்றிய உங்கள் விரிந்த பார்வை; பெருமாள் முருகன் நூலுக்கான எதிர்ப்புக்கு உங்கள் எதிர்வினைகள் போன்றவை. அதேசமயம் உங்களிடமிருந்து மாறுபட்ட கருத்துகளும் எனக்கு உண்டு. காந்தியப்பொருளியல் கொள்கை தற்போதைய ’புத்தாக்க’ (Innovative) உலகிற்கு சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு மிக உகந்ததென்றாலும், சாதாரண மனிதர்களுக்கு அவர்களின் அன்றாட இன்றியமையாத் தேவைகளை நிறைவு செய்து கொள்ளக் கடுமையான உடலுழைப்பைக் கட்டாயமாக்கியிருந்த பன்னெடுங்காலத்திய பழைய உற்பத்தி முறைகளிலிருந்து விடுதலை கொடுத்திருக்கும் நவீன உற்பத்தி முறைகளின் பிரம்மாண்ட வளர்ச்சியை ஊக்குவிக்கவும், பங்கிடவும் செயல்முறை சாத்தியமற்றது  என்கிற மாறுபட்ட கருத்தை நான் கொண்டிருக்கிறேன்!

 

உங்களின் இடைவிடாத உழைப்பையும், பரந்த அறிவையும் பற்றிப் பலமுறை வியந்திருக்கிறேன். முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு மேல் பொருளியல் ஆசிரியனாக இருந்த நான் அறிந்தவரை புவியியலுக்கும் பொருளியல் வளர்ச்சிக்குமிடையே இருக்கும் மிக நுண்ணிய தொடர்பை அலசி ஆராய்ந்திருக்கும் Jared Diamondன் ‘Guns, Germs and Steel’ பற்றித்தெரிந்த தமிழ்நாட்டின் பொருளியல், புவியியல், வரலாற்றாசியர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம் என்பதையும், நீங்கள் அந்த நூலை திறனாய்வு செய்திருப்பதையும் அறிவேன். அதுபோல உப்புவேலியை தமிழ்நாட்டில் அறிமுகம் செய்தது உங்களின் பெரும் சாதனை. இந்திய தத்துவப்பின்னணியில் இந்தியப்பொருளியல் எண்ணங்கள் சுதந்திரமான வளர்ச்சி பெறவில்லை என்கிற உங்களின் கருத்தை நான் ஏற்றுக் கொள்பவன். எனவேதான் என் நூலுக்கான தங்களின் விமர்சனம் எனக்கு மிக உவப்பளிக்கிறது.

 

’ஆடம் ஸ்மித் முதல் கார்ல்மார்க்ஸ் வரை’ நூலைத்தொடர்ந்து, நவச்செவ்வியல் பொருளியல் என்கிற அடுத்த நூலை எழுதி, (முதல் நூலைத் திருத்தி, மெய்ப்பு செய்த) ஜெயரஞ்சனிடம் அனுப்பிவிட்டேன். கிபி 1870லிருந்து 1920வரை (மார்க்ஸீயத் தொடர்பு சிந்தனைகளைத் தவிர்த்து) மேற்கத்திய பொருளியல் எண்ணங்களில் வந்த மாற்றங்களை இந்த நூலில் விவரித்துள்ளேன். வில்லியம் ஸ்டான்லி ஜெவன்ஸில் தொடங்கி, ஆர்தர் சிஸீல் பீகுவரை  பதினேழு பொருளியல் வல்லுநர்களின் எண்ணங்களை இதில் விவரித்திருக்கிறேன். இருபதாம் நூற்றாண்டில் தொழிலாளர்கள் மத்தியில் கார்ல் மார்க்ஸ் பெற்ற செல்வாக்களவுக்கு, அவர் கல்விக்கூடங்களில் பெறமுடியாமல் போனதற்கான பின்னணியைக் கணித வழியில் காட்டியிருப்பவர்களைக் காட்டிலும் சாமானியர்களின் உரையாடல்கள் வழியாகவே விளக்கிய கார்ல் மெங்கரின் கருத்துக்களை அதில் தெளிவாக்கியிருக்கிறேன்! அமெரிக்க முதலாளித்துவப் புதிய செல்வந்தர்களின் ஓய்வு வர்க்க நடத்தைகளை நக்கலடித்து, சமுதாய அமைப்புகளின் பரிணாம வளர்ச்சியை புதிய நோக்கில் பார்த்த தார்ஸ்டீன் வெப்லினின் கருத்துக்களையும் விவரித்துள்ளேன். நூல் பதிப்பிக்கப்பட்டவுடன் உங்களுக்கு அனுப்புகிறேன்.

மீண்டும் நன்றியுடன்,

அன்புள்ள ,

எஸ். நீலகண்டன்.

 

அன்புள்ள நீலகண்டன் அவர்களுக்கு,

தமிழில் தெளிவான மொழியில் எழுதபப்டும் துறைசார் நூல்கள் மிக அரிது. மொழியாக்கங்கள் சிக்கலான [ தமிழ் தெரியாமையால் வரும் சிக்கல் இது] மொழியில் செய்யப்படுகின்றன. ஆகவே அவை பெரும்பாலும் பயனற்றவை

நான் தமிழில் எளிதாக வாசிப்பவன் என்பதனால் ஒரு துறைசார் நூல் தமிழில் இருந்தால் அதை வாசிப்பதையே விரும்புவேன். ஆகவே இத்தகைய நூல்களை தேடி வாசிப்பதுண்டு. உங்கள் நூல் எனக்கு மிகவும் உதவியானதாக இருந்தது

நெடுஞ்செழியன் கல்வியமைச்சராக இருந்த காலத்தில் பட்டமேற்படிப்பு வரை அனைத்துக்கல்வியையும் தமிழில்கொண்டுவர ஒரு முயற்சி நிகழ்ந்தது. அப்போது அனேகமாக எல்லா துறைகளுக்கும் உரிய பாடங்கள் தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டன. பாடத்திட்ட மொழி என்றாலும் எளிதில் வாசிக்கத்தக்கவை

பொருளியல் ,வரலாறு, தத்துவம் ,சமூகவியல் , நிலவியல் ஆகிய துறைகளில் அன்று முன்வைக்கப்பட்ட அனைத்துப் பாடநூல்களையும் வாசித்துவிடுவது என்னும் திட்டத்துடன் நான் நான்காண்டுக்காலம் வாசித்தேன். இன்று தென் திருவிதாங்கூர் இந்துக்கல்லூரி நூலகத்தின் பின் அறையில் இந்நூல்கள் அனைத்தும் உள்ளன. அவற்றில் முக்கியமானவையாவது மறுபதிப்பாவது அவசியம்

சமீபத்தில் என் நண்பர் ஈரோடு கிருஷ்னனுக்கு நெப்போலியன் குறித்த பாடநூலை வாசிக்கக்கொடுத்தேன். மிக உத்வேகமான வாசிப்பாக அமைந்தது என்றார். அந்நூல்கள் இன்றும் முக்கியமானவை, ஏனென்றால் மேலதிக நூல்கள் வரவேயில்லை

இந்தச்சூழலில் இன்றையவாசகர்களுக்காக எழுதப்பட்ட உங்கள் நூல் மிகப்பெரிய ஒரு கொடை. அதன் பங்களிப்பு நீங்கள் எண்ணுவதைவிட அதிகம்

தொடர்ந்து எழுதுங்கள்

 

ஜெ

 

பொருளின் அறமும் இன்பமும்

 

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 64
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 65