புலிக்கலைஞன், கடிதம்

1

ஜெ

நான் உங்களை கோவையில் துறைமாண்புச்செம்மல் விருதுவிழாவில் சந்தித்தேன்

மாலை வீட்டிலிருந்து 17:30க்கு கிளம்புகையில் வழக்கம்போல எனது மகளின் பிடிவாதம் தொடங்கியது. ஆனால் அவளைக் கூட்டிக்கொண்டு வந்தால் விழா ரணகளமாகிவிடும் அதனால் “horton hears a who” மூவியை துவக்கிவிட்டு புறப்பட்டுவிட்டேன்.

இது ஒரு ரோட்டரி விழா அதில் நமது ஜெவுக்கு விருது கொடுத்து கவுரவிக்கிறார்கள். அதனால் இது ஒரு பெரிய விழாவாக இல்லாமல் சம்பிரதாயமான வாழ்த்தும் உரைகள் மட்டுமே இருக்கும் என்று நினைத்திருந்தேன். ஆவணப்படம் முடியும் வரை சற்று இறுக்கமாகவே இருந்தது. அதன்பின் ரோட்டரியன்கள் அனைவரும் ரத்தினச் சுருக்கமாகவே பேசினர், அனைவருக்கும் உங்களுடைய பேச்சைக் கேட்கும் ஆவல் தெரிந்தது,அதனால் இருக்கலாம்.

நீங்கள் பேச ஆரம்பித்ததும் வழக்கம்போல் இமைப்பொழுதில் சப்ஜெட்டுக்குள் நுழைந்து எங்களை கட்டிப்போட்டு விட்டீர்கள். உங்களுடைய சவால் விடும் தொனியும், மகதத்தை வெல்லும் கதையின் மூலம் ஷத்ரிய ரஜோ குணத்தின் மேன்மை குறித்து உங்கள் உரையும் சுருக்கமாக இருப்பினும் மிகுந்த மன எழுச்சியை எனக்குத் தந்தது.

முக்கியமாக அந்த பார்பரின் கதையை நான் ஏற்கனவே படித்திருப்பினும் தக்க சமயத்தில் அதை இந்த உரையினிடையே புகுத்தி பிரமிக்கச் செய்துவிட்டீர்கள். உங்களுடைய எதிரிகள் உங்களுக்கு விடும் சவாலை விட உங்களுக்கு நீங்களேவிடும் சவால்தான் வாழ்க்கையில் வெற்றியின் பாதை என்பதை வெண்முரசின் முதல் அத்தியாயம் துவங்கியதில் உள்ள பின்புலத்தில் அறிய முடிந்தது. அதை எனக்கான ஒரு திறப்பாக எடுத்துக் கொண்டேன்.

நான் வருடத்தில் பகுதி நாட்களுக்குமேல் வெளிநாட்டில் இருப்பதால் என்னால் உங்களை சில நிகழ்சிகளில் சந்தித்திருப்பினும் உங்களுடன் ஒரு படமாவது எடுக்க வேண்டும் என்ற எனது நீண்ட நாள் ஆசை நிறைவேறியது. அதற்காக நான் சுரேஷ் அவர்களுக்கு நன்றிக் கடன் பட்டுள்ளேன். மேலும் மீனா, விஜயசூரியன், அஜிதன் போன்றோரின் நட்பும் எனக்கு கிடைத்து ஒரு நல்ல துவக்கமாக இருக்கும் என்று நினைக்கிறேன். அஜிதனை ரயில் நிலையத்தின் உள்ளே மட்டுமே விடமுடிந்தது, என்னால் platform வரை சென்று உதவமுடியவில்லை. பார்க்கிங் தொல்லை காரணம்தான்.

இலக்கிய வேட்கை ஒருபுறம் இருப்பினும் எனக்கு எனது துறை சார்ந்த படிப்புகளில் எப்பொழுதுமே தீராத வேட்கை உண்டு. அதில் நான் பலமுறை வெற்றியும் அடைந்திருக்கிறேன். ஆனால் இம்முறை ஒரு சவாலான விஷயத்தை தேர்ந்தெடுத்திருந்தேன். சோவியத் ரஷ்யாவின் ஒரு பல்கலையில் “International MBA in operations” என்னும் ஒரு புதிய பாடத்தை எடுத்திருக்கிறேன். எனது நண்பர்களும் மனைவியும் வழக்கம்போல எதிர்பதமான கருத்துக்கள் விவாதங்கள். கடினமான துறையை எடுத்திருக்கிறாய் என்று ஒரு சாரரின் எதிர்மறை கருத்துக்கள். இவ்வளவு செலவு செய்து இதை இப்பொழுது படித்து என்ன பிரயோஜனம் என்ற எனது மனைவியின் வழக்கமான ஆராதனைகள். ஆனால் எனது அம்மா என்னை சரியாக கணித்திருக்கிறார் என்று நினைக்கிறேன். நீ இதையெல்லாம் காதில் போட்டுக்கொள்ள வேண்டாம். ஆகவேண்டியதைப்பார் என்று கூறியதே ஒரு ஆசீர்வாதம்தான். ஆனாலும் என் மனதில் ஒருவித பயமும் சந்தேகமும் இருந்து கொண்டே இருந்தது.

இந்த குழம்பிய மனநிலையில்தான் நேற்றைய உங்களுடைய உரை சுருக்கமாக இருப்பினும் எனக்காகவே கூறியது போல் இருந்தது. அது எனக்கு மிகப்பெரிய திறப்பை தந்தது.

“ஷத்ரியர்களின் பாதை என்பது சாதாரணர்களின் பாதையிலிருந்து முற்றிலும் வேறுவிதமானது, மிகக் கடினமான பாதையைத்தான் அவர்கள் தேர்ந்தெடுப்பார்கள், அது ஒருவரும் செல்லாத பதையாயிருக்கும், அவர்களால்தான் அதன் உச்சத்தை அடைய முடியும்” போன்ற உங்களுடைய பேச்சு எனது மனதில் இருந்த நெருப்பின்மேல் படிந்திருந்த சாரத்தை துப்புரவாக நீக்கி சிவப்புக் கனலாக மாறியிருப்பதை என்னால் உணரமுடிகிறது. இந்தக் கனல் ஒன்று போதும் வேறேதும் எனக்குத் தேவையில்லை.

அதற்காக நான் உங்களுக்கு என்றும் நன்றிக்கடன் பட்டுள்ளேன்.

அசோகமித்திரனின் புலிக்கலைஞன் நானும் படித்திருக்கிறேன். எனக்கென்னவோ அதை மற்றவர்கள் கூறும்விதம் உச்சமாக கருத முடியவில்லை. வழக்கம்போல கலைஞகளின் வாழ்க்கை நிலையையும், அதிகார வர்க்கத்திடம் கூசி நிற்கும் அவர்களின் உடல் மொழிகளையும் படம் பிடித்துக் காட்டுகின்ற ஒரு வழக்கமான சிறுகதை. அதிலும் மொத்தக் கதையிலும் ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டுமே சிறு உணர்ச்சிக் கொந்தளிப்புக்கு இடம் கொடுக்கப்பட்டுள்ளது.

ஒருவேளை கதை வெளிவந்த காலகட்டத்தில் இது பரவலான கவனிப்பை பெற்றிருக்கலாம். அப்படிப்பார்த்தால் “லங்கா தகனம்” வந்து 20 வருடங்களுக்கு மேல் இருக்கும் என்று நினைக்கிறேன். அதுபோல ஒரு கலைஞனின் வாழ்க்கை முறையை சித்தரிக்கும் ஒரு சிறுகதை நான் இதுவரை படித்ததில்லை. இப்பொழுது படித்தாலும் உணர்ச்சிக் கொந்தளிப்புக்கு ஆளாகிறேன். ஆனால் அந்தக் கதை பரவலாக கவனம் பெற்றிருக்கிறதா என்பதை தெரிவிக்கலாமே !

மேலும் புலிக்கலைஞனை பற்றி யாரேனும் கருத்திடுகையில் எனக்கு அவர்களின் வாசிப்பனுபவம் பற்றி சந்தேகம் எழுகிறது. அவர்கள் பழையவர்களாக எனக்கு தெரிகிறார்கள். ஏனென்றால் எழுத்து நடையும் சாதாரணமாக இருக்கிறது. மேலும் அவரின் ஆகச்சிறந்த கதை என்று வேறு சிலாகிக்கப்படுகிறது !

அந்தக் கதை மட்டுமல்ல ! நிறைய பிரபலமான கதைகளும் அப்படி தட்டையாகத்தான் தெரிகின்றன. ஒருவேளை எனக்குத்தான் அப்படியோ என்ற சந்தேகமும் எழாமலில்லை

சுரேஷ் பாலன்

 

அன்புள்ள சுரேஷ்

 

வாழ்த்துக்கள்

 

புலிக்கலைஞன் பற்றிய உங்கள் கருத்தை வாசித்தேன். அசோகமித்திரனின் கதைகளை வாசிப்பவர்களில் பலருக்கு ஆரம்பத்தில் இந்தத் தயக்கமும் ஐயமும் வருவதுண்டு

அவரது எழுத்துமுறைக்கு ஐரோப்பிய அமெரிக்க இலக்கிய மரபில் முன்னோடிகள் உள்ளனர். ஹெமிங்வே, வில்லியம் சரோயன் போல. மிகக்குறைவாகவே விவரிப்பது, உணர்ச்சிகலக்காமல் சொல்வது, முழுக்கமுழுக்க நடைமுறைத்தன்மைகொண்டிருப்பது, கூறவந்ததை முழுமையாகவே வாசக ஊகத்திற்கு விட்டிருப்பது போன்றவை அவர் புனைகதையின் இயல்புகள். அது ஒரு தனி அழகியல் என்று புரிந்துகொள்ளவேண்டும்

அவரது கதைகள் நேரடியாகப்பார்த்தால் எளியவை, கதைக்குப்பதில் வெறும் சம்பவம் மட்டுமே உள்ள கதைகளும் உண்டு. ஆனால் அவற்றின் அழகு வாசகனின் கற்பனையில் விரிவது. புலிக்கலைஞன்  ‘ஒரு’ கலைஞனின் வாழ்க்கை அல்ல. ‘கலைஞர்களின்’ வாழ்க்கை. ஒரு சாமானியன் கலைஞனாக மாறும் கணத்தின் குறியீட்டுச்சித்தரிப்பு என அதைக்கொண்டால் அது விரிந்துசெல்லும்

 

ஜெ

 

 

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 60
அடுத்த கட்டுரைஸ்பிடி சமவெளி