மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு,
பன்னிரு படைக்களம் படித்துக் கொண்டிருந்தேன்… ஜராசந்தன் வதம் முடிய படித்த போது, எவ்வளவு தகவல்களை இவர் தருகிறார்… இவ்வளவில் பாதி தகவலாவது கங்குலியின் பதிப்பில் திரட்ட முடியுமா என்று திரும்பவும் மஹாபாரதத்தின் சபாபர்வம் கோப்புகளைக் கண்டேன். வியப்படைந்தேன். அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் சின்ன குறிப்புகளையும் நீங்கள் பிரம்மாண்டமாகக் காட்சிப்படுத்தியிருக்கிறீர்கள்… உதாரணத்திற்கு கிருஷ்ணனும், பீமார்ஜுனர்களும் மகதத்தின் கடைவீதிகளில் நடந்தது; பெரு முரசுகள், மற்போர், ஜராசந்த வதம் முடிந்ததும் சகதேவனைச் சந்திப்பது என அனைத்திலும் உள்ள நுணுக்கமான தகவல்களை விவரித்து, பாமரனும் மகாபாரதத்தின் உட்கருத்தை அறியும் வண்ணம் அழகாகக் கூறியிருக்கிறீர்கள். வெண்முரசில் இப்போது சிசுபாலனை உணர்ந்து வருகிறேன். தூரத்தில் கண்ட அதே காட்சியை மீண்டும் அருகில் இருந்து கண்டு, அக்காட்சியில் வரும் பாத்திரங்களின் உள்ளத்தையும் ஊடுருவிப் பார்க்க முடிவதாக உணர்கிறேன். பன்னிரு படைக்களத்தை முழுதும் தொடர நிச்சயம் முயற்சிப்பேன்.
நான் மொழிபெயர்த்து வரும் கங்குலியின் மஹாபாரதத்தைப் படிக்க வேண்டும் என என் கிறிஸ்தவ நண்பர் ஒருவர் கேட்டார். இணையத்தில் படிக்க இயலாதவர் அவர். எனவே, நான் பிழைதிருத்தத்திற்காக அச்செடுத்து வைத்திருக்கும் ஆதிபர்வத்தை அவரிடம் கொடுத்தேன். முதல் 30 அத்தியாயங்களைப் படித்துவிட்டு, “சுவாரசியமாகவே இல்லை சார்” என்றார். நான் “சார், சுவாரசியத்துக்காக அல்லாமல், தகவலை அறிகிறோம் என்று படியுங்கள். உங்கள் பைபிளை நீங்கள் எப்படி அணுகுவீர்களோ, அப்படியே மகாபாரதத்தையும் அணுகுங்கள்” என்றேன். பிறகு, “ஆனால் அது உங்களுக்கு சிரமமாக இருக்கலாம்” என்று சொல்லி, அவருக்கு உங்களின் “எரிமலர்” கொடுத்தேன். இரண்டே நாட்களில் வந்து “அற்புதமாக இருக்கிறது. இப்படித்தான் நீங்களும் எழுத வேண்டும்” என்றார். நான், “மொழிபெயர்ப்பை அப்படிச் செய்ய முடியாது சார்” என்றேன்.
பிறகு ஆதிபர்வத்தின் 30 அத்தியாயங்களுக்கு மேலுள்ளதைத் தொடர்ந்து படித்திருக்கிறார். நான் அவர் படிக்க மாட்டார் என்றே இருந்தேன். ஆனால் அவர், “நூறாம் அத்தியாயத்திற்கு மேலேதான் கதையே ஆரம்பிக்கிறது. இப்போது என்னால் உங்களையும் படிக்க முடிகிறது.” என்றார். இன்னும் படித்துக் கொண்டிருக்கிறார். உங்கள் எரிமலரைப் படித்த பின்பு அவருக்கு கங்குலியையும் படிக்க வேண்டும் என்ற ஆவல் வந்திருக்கிறது. இது போன்ற வாசகர்களுக்கும் மகாபாராதத்தைப் படிக்கும் ஆவலைத் தூண்டி வரும் உங்களுக்கு நன்றி. அடுத்து அவருக்கு “புல்லின் தழல்” கொடுக்கப் போகிறேன்.
அன்புடன்
செ.அருட்செல்வப்பேரரசன்
http://mahabharatham.arasan.info
https://www.facebook.com/arulselva.perarasan
https://www.facebook.com/tamilmahabharatham
அன்புக்கும் பெருமதிப்புக்கும் உரிய அருட்செல்வப்பேரரசன் அவர்களுக்கு,
உங்கள் மகாபாரதத்திற்கு நானும் வந்துகொண்டே இருக்கிறேன். மேலதிகத் தகவல் தேடி. அது ஒரு பெரிய கருவூலம். உங்களுக்கு நன்றிக்கடன்பட்டிருக்கிறேன்.
மகாபாரதத்தை நேரடியாகப் படிப்பதிலுள்ள தடைகள் பல. ஒன்று, அது பழைமையான ஒரு கதைப்பாடல்நூல். அன்று காட்சிகளைச் சித்தரிப்பதும், நிகழ்வுகளை நாடகப்படுத்துவதும் இன்றைய வடிவில் மேம்பட்டிருக்கவில்லை. ஆகவே போர்க்களக்காட்சிகள் பெரும்பாலும் ஒரே வகையான விவரணைகளைக் கொண்டிருப்பதைக் காணலாம். நாடகீய நிகழ்வுகளில் உணர்வுகளும் ஒரேவகைச் சொல்லாட்சிகளுடன் இருக்கும். அவற்றில் உள்ளவற்றை நம் கற்பனையால் விரித்தெடுத்தாகவேண்டும்
இரண்டாவதாக பிற்சேர்க்கைகள். பலவகையான பிற்சேர்க்கைகள் உள்ளன. மிகப்பிற்காலத்தில் சேர்க்கப்பட்ட நீதிநூல்களும் அறச்சொற்பொழிவுகளும் வந்துகொண்டே இருக்கின்றன அதில் . எந்தக்கதாபாத்திரமும் நீதியைச் சொல்ல ஆரம்பித்துவிடும். முற்பிறவிக்கதைகள் வழியாக நிகழ்வுகளுக்கு அளிக்கப்பட்டிருக்கும் விளக்கங்களும் இடைச்செருகல்களே. சற்று காலத்தால் முந்தையவை.
இன்னும் பின்னுக்குச் சென்றால், பல முக்கியமான நிகழ்வுகளும்கூட இடைச்செருகல்களாக இருக்கலாம். உதாரணம், பாஞ்சாலி துகிலுரியப்படும் காட்சி. அது வடக்கத்தி மகாபாரதங்களில் இல்லை. பெரும்பாலான மகாபாரதங்களில் உண்டு என்றாலும் துரியோதனன் சறுக்கிவிழுந்து வன்மம் கொள்ளும் காட்சியும் இடைச்சேர்க்கையே. துரியோதனனின் துணைவர்களான ஜராசந்தனும் சிசுபாலனும் கொல்லப்பட்டதே அவனை வன்மம் கொண்டதாக ஆக்குகிறது என்பதே அரசியல். அவர்கள் கொல்லப்பட்ட பின்னரும் சறுக்கிவிழுந்தமையால் வன்மம் கொண்டான் என்பது ஒரு கதையாக்கம் மட்டுமே. அது குழந்தைகளுக்கும் எளியோருக்கும் எளிதில் சென்றுசேர்கிறது
மகாபாரத மூலத்தை வாசிக்கையிலேயே அதன் செவ்வியல் அழகுக்கும் அரசியல் ஒத்திசைவுக்கும் இசையாது விலகிநிற்பவற்றை எளிதில் கண்டுகொள்ளமுடியும். கிருஷ்ணன் படைத்துணை தேடி அர்ஜுனனை பார்க்கவருகிறான். எளிய யாதவ அரசன் அவன் அப்போது. ஆனால் அவனே பரம்பொருள் என துரோணர் ஒரு பேருரை ஆற்றுகிறார். கிருஷ்ணனே பரம்பொருள் என்று சொல்லி அவன் பத்து அவதாரங்களையும் விவரித்து சிசுபால வதத்திற்கு முன் பீஷ்மர் பேருரை ஆற்றுகிறார். ஆனால் அவற்றை எவரும் கேட்டு பொருட்படுத்தவில்லை. இவையெல்லாம் கிருஷ்ணன் பெருந்தெய்வமாக ஆனபின் சேர்க்கப்பட்டவை
கடைசியாக மகாபாரத வாசிப்பில் கவனிக்கப்படவேண்டியது, மகாபாரதக் கதை சீரான ஒழுக்காக வியாசபாரதத்தில் இல்லை என்பது. பெரும்பாலானவர்கள் கொல்லப்படுவதற்கு முன்னரோ கொல்லப்பட்ட பின்னரோ தான் அவர்களின் முழுக்கதையும் தொகுத்துச் சொல்லப்படுகிறது. பலர் மகாபாரதத்தின் இறுதியில்தான் குணச்சித்திர ஒழுங்கை அடைகிறார்கள் – உதாரணம் திருதராஷ்டிரன்.
வெண்முரசு, இச்சிக்கல்களை களைந்து ஒரு சீரான கதை வடிவை முன்வைக்கிறது என்பதனாலேயே அது நவீன வாசிப்புக்கு உகந்ததாக உள்ளது. அத்துடன் அதன் பங்களிப்பு என்பது, மகாபாரதத்தின் நிகழ்வுகள் வெறுமே கதையாக அல்லாமல் மேலதிக உளவியல், தத்துவப் பொருள்கொண்டவையாக மாற்றப்படத்தக்கவை என்று அது காட்டுகிறது என்பதே. அத்தகைய வாசிப்பு மகாபாரதத்தை மானுடக்கதையாகப் பெருகச்செய்கிறது. ஒருநல்ல வாசகன் அவ்வழியே தானும் நெடுந்தொலைவு செல்லமுடியும். வெண்முரசின் கொடை அதுதான்
ஜெ
மறுபிரசுரம் May 22, 2016