இனிய ஜெயம்,
முன்பெல்லாம் ஊடகத்துடன் அதன் செய்தியாளர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தேன். அப்போதெல்லாம் சமூக மாற்றத்துக்கு எஞ்சி இருக்கும் ஒரே புகலிடம் ஊடகங்கள் மட்டுமே என அப்பாவியாக நம்பிக்கொண்டிருந்தேன். ஊடகம் தேவையான நேரத்தில் சரியாக செயல்பட்டால் அது மொத்த சமூக ஒடுக்குமுறைகளையும் அப்படியே அல்லாக்கா தூக்கி மல்லாக்கா போட்டுவிடும் என நினைத்துக் கொண்டிருந்தேன்.
கேபிள் டீவி புரட்சி துவங்கியபின் ஊடகங்கள் அரசியல்வாதிகளின் சொத்தாக மாறத் துவங்கிய பின். நிலவரம் சீரழியத் துவங்கியது. காட்சி ஊடகம், எழுத்து ஊடகத்தை முற்றிலும் பின்னுக்கு தள்ளியது. காட்சி ஊடகமோ செய்திகளை விளம்பரதாரர் நிகழ்ச்சியாக மாற்றியது. மக்கள் விரும்பியதை மட்டும் அல்லது மக்கள் விரும்ப வேண்டியதை மட்டும் காட்டியது. காட்சி ஊடகம் அரசியல்சக்திகளின் பொம்மையாக மாறியதும் எந்த செய்திகள் ”வெளியே” தெரிய வேண்டும், எவை ”மறைக்கப்;” படவேண்டும் என நியதிகள் உருவாகின. உண்மைகள் துண்டுபட்டோ, திரிபு பட்டோ செய்திகள் ஆக்கப் பட்டன.
காட்சி ஊடகம் இருபத்து நான்கு மணி நேரமும் செய்திகளை தான் விரும்பிய வண்ணம் திரித்து மக்கள் விரும்பும் வண்ணம் அதை கேளிக்கயாகாக மாற்றி முன் வைத்த வேகத்தில் எழுத்து ஊடகம் தள்ளாடத் துவங்கியது. அனைத்துக்கும் மேல் இந்த காட்சி ஊடகங்களின் கோர முகம் எந்த அளவு விஸ்வரூபம் கொள்ளும் என்பதை இத் தகு தேர்தல் சூழல்களில் மிக எளிதாக சாமான்யரும் காண முடியும். இந்தத் தேர்தலில் தேதி அறிவிக்கப் பட்ட மறு நிமிடம், கடலூரில் ஊடகங்கள் யாருக்கு ஆதரவாக யாருக்கு எதிர்ப்பாக செய்திகளை கொண்டு வரவேண்டும் என ”மேலிடத்தால்” வரையறை செயப்பாட்டு விட்டது. கடலூர் என்பது மொத்த தமிழக ஊடக செயல்ப்பாட்டின் ஒரு அலகு.
இந்த தேர்தல் காலத்தில் இந்த காட்சி ஊடகங்கள் மக்களை அடுத்து ஆள வரவேண்டியவர் யார் எனமக்களை தீர்மானிக்கவைக்கும் அதிகாரத்தை எடுத்துக் கொள்கின்றன. கிட்டத்தட்ட ஆளும் அதிகாரத்துக்கு எதிரான ஊடக ப்ளாக் மெயில். இந்த விளையாட்டில் எழுத்து ஊடகங்கள் திராணி அற்று பின் தங்கி விட்டன. இவை போக உண்மையில் ஒரு செய்தியை தெரிந்து கொள்ள எழுத்துக் கூட்டி வாசிப்பதைக் காட்டிலும் மொபைலை பிதுக்கும் செயல்பாடே இன்று மேலோங்கி நிற்கிறது. இதில் தினத் தந்தி எப்போதும் போல செயல்பட்டு தனது இடத்தை தக்க வைத்துக் கொள்வதுடன் அதுவும் காட்சி ஊடக கோதாவில் குதித்து விட்டது. தினமணிக்கும் தினமலருக்கும் இடப்பட்ட ஒரு எல்லையில் தன்னை வடிவமைத்துக் கொண்டு விட்டது தமிழ் தி ஹிந்து. ஆக காட்சி ஊடகங்களில் காணக் கிடைக்காத, அவசியம் எழுத்துக் கூட்டி வாசித்தால் மட்டுமே கிடைக்கும் அபூர்வம் அதுவே இன்றைய எழுத்து ஊடகங்கள் தேடுவது.
செய்தி ஊடகங்கள் தங்களது விழுமியங்களை கொஞ்சம் கொஞ்சமாக கைவிட்டுக் கொண்டிருக்கும் இந்த சூழலில், தினமலரின் ”ஜனநாயக சோதனை சாலையில்” என்ற இந்த முன்னெடுப்பு. எனக்கு மிகுந்த உவகை அளித்தது. சரியான நேரத்தில் தேவையானதை சொல்வது என்ற பத்திரிகை தர்மம் நீண்ட இடைவெளிக்குப் பிறகு தினமலரால் கைக்கொள்ளப் பட்டிருக்கிறது..ஜெயமோகன் என்பதற்காக அல்ல அதைத் தாண்டி கற்ப்பிக்கவும், வழிக்காட்டவும், மட்டுறுத்தவும், சமூகத்தின் மனசாட்சியாக விளங்கும் எழுத்தாளுமையை துணைக்கோடிய தினமலரின் செயல் புதிய நம்பிக்கையை உருவாக்குகிறது. இந்த புதிய துவக்கத்தை மகிழ்ச்சியுடன் வரவேற்கிறேன். வழமை போல உங்களது ஜனநாயக சோதனை சாலை நூல் பெருவாரியான மக்களை சென்றடைய வாழ்த்துகிறேன். எப்போத்தும் போல உங்கள் கரங்களுக்கு என் அன்பு முத்தங்கள்.
கடலூர் சீனு
அன்புள்ள ஜெயமோகன்,
பெங்களூருவிலிருந்து தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கு வாக்களிக்க ஊருக்குப் போக அதிகாலையில் பேருந்தில் இடம் கிடைக்கும் என்று 5.30 மணிக்கு வந்தால் திருவிழாக் கூட்டம். சேலம், நாமக்கல், கரூர், கோவை திருச்சி, மதுரை போக என வெவ்வேறு ஊர் எளிய மக்கள். எல்லாரும் ஊருக்குப் போக சொன்ன ஒரே காரணம், சட்டமன்றத் தேர்தலில் ஓட்டு போட…
பெரிய வருமானமோ, விடுப்போ இல்லாத, பெங்களூரு போன்ற ஒரு செலவுமிக்க நகரத்தில் சின்னச்சின்ன பணிகளிலிருக்கும் இந்த எளிய மனிதர்களைக் கண்ட மன எழுச்சியை உங்களுடன் பகிர்ந்து கொள்ளத் தோன்றியது.
பத்து காசு பெறாத காரணங்களை சொல்லிக்கொண்டு மீம்ஸ் போட்டுக் கொண்டிருக்கும் கார்ப்பரேட் கம்பெனியில் கொழுத்த ஊதியம் பெறும் படித்த புத்திசாலிகளை நினைத்தால் சிரிப்புத் தான் வருகிறது. எவ்வளவு விதமாகக் காரணங்கள் சொல்கிறார்கள்… நல்லா இருக்கட்டும்…
என்றென்றும் அன்புடன்,
மூர்த்திஜி
பெங்களூரு