அன்புள்ள ஐயா,
திசைகளின் நடுவே காலத்திலிருந்து உங்களைத் தொடரும் வாசகன் நான். உங்களது இணையத்தளத்தையும் தவறாமல் வாசித்துவருகிறேன். மறைந்த எழுத்தாளர் ஆர்.சூடாமணியின் கதைகள் எனக்கு மிகவும் விருப்பமானது. அவர் குறித்து உங்களது கருத்தை நீங்கள் எழுதுவீர்கள் என்று கடந்த இரண்டு நாட்களாக எதிர்பார்த்தேன். அவர் கதைகள் பற்றி நீங்கள் எழுதுவதைப் படிக்க விரும்புகிறேன்.
அன்புடன்
சிவராமகிருஷ்ணன்
அன்புள்ள சிவராமகிருஷ்ணன்,
தமிழ் இலக்கியவாதிகளில் மூன்று வகைமாதிரிகள் உண்டு. வணிக ஊடகங்கள் வழியாக புகழ்பெற்ற கேளிக்கை எழுத்தாளர்கள். சிற்றிதழ்கள் வழியாக வெளிப்பாடு கண்ட இலக்கியவாதிகள் ஆகிய இருதரப்பினரும் நாம் அறிந்தவர்கள். மூன்றாவது வரிசை ஒன்றும் உண்டு. அவர்கள் இவ்விரண்டிலும்சேராதவர்கள்.
வணிக எழுத்தாளார்கள் அவர்களை விற்கும் இதழ்களின் தொடர் பிரச்சாரத்தால் அவர்கள் வாழும் காலகட்டத்தில் பெரும்புகழ் பெறுகிறார்கள்.ஒரு பெரிய பண்பாட்டு சக்தியென அறியப் படுகிறார்கள். வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு எழுத்தாளர்கள் அப்படி உச்சத்தில் இருந்திருக்கிறார்கள். முப்பதுகளில் வடுவூர் துரைசாமி அய்யங்கார். ஜே.ஆர்.ரங்கராஜு. அதற்கு அடுத்த காலகட்டத்தில் கல்கி,தேவன். அதற்கு அடுத்த காலகட்டத்தில் பிவிஆர், சாண்டில்யன். அதன் பின்னர் அகிலன்,நா.பார்த்தசாரதி. அதன்பின் சுஜாதா பாலகுமாரன்.
அவர்களில் சிலர் மட்டுமே காலத்தில் தொடர்ந்து நினைக்கப்படும் ஆக்கங்களை உருவாக்குகிறார்கள். பெரும்பாலானவர்களை அவர்கள் எழுத்தை நிறுத்தியதுமே இதழ்கள் கைவிட்டு விடுகின்றன. இதழ்கள் நினைவுறுத்தாதவரை அவர்களுக்கு வாழ்க்கையும் இல்லை. மிகச்சிறந்த உதாரணம் ஆர்வி. அவர் எழுதுவதை விட்டது 1970களில். மேலும் முப்பத்து வருடம் உயிருடன் இருந்தார். அவர் உயிருடன் இருப்பதையே எவரும் அறியவில்லை. ஒரு கூட்டத்தில் எவரோ ‘மறைந்த ஆர்வி’ என்று பேசுவதைக்கேட்டு அவர் எழுந்து நான் உயிருடன்தான் இருக்கிறேன் என்றார். அப்போதுதான் தெரியவந்தது! உதாரணமாக எழுபதுகளின் நட்சத்திரமான மகரிஷியை இன்று எத்தனைபேர் நினைக்கிறார்கள்?
இந்தப்போக்கு எதிரான ஒரு தீவிரப்போக்காக இங்கே இலக்கியம் இருந்தது. புதுமைப்பித்தன் முதல் சு.வேணுகோபால், கண்மணிகுணசேகரன் வரை வரக்கூடிய ஒரு பெரிய ஓட்டம் அது. தமிழின் சாதனைகள் நிகழ்ந்தகளம். தொண்ணூறுகள் வரை மிகச்சிறிய சிற்றிதழ்க்குழுக்களுக்குள் இயங்கியது. பின் ஓரளவு வாசகர்வட்டத்தை அடைந்தது.
இவ்விரண்டிலும் சேராத ஒரு இலக்கியச்சரடு உண்டு. அதை இலட்சியவாத எழுத்து என்று சொல்லலாம். அதன் தொடக்கப்புள்ளி தமிழில் வி.ச.காண்டேகர். அவரது நாவல்களை கா.ஸ்ரீ.ஸ்ரீ ஐம்பதுகளில் உடனுக்குடன் தமிழாக்கம்செய்தார். அவை அன்று மிகப்பெரிய இலக்கிய வெற்றிகளாக கருதப்பட்டன. வணிகரீதியாகவும் அவை வெற்றிபெற்றன.
அதற்குக் காரணம் அக்காலகட்டத்தில் இருந்த இலட்சியவாதமனநிலை. அது நேருயுகம். பல சமூகங்களில் படித்த முதல்தலைமுறை உருவாகி வந்தது. படித்தவர்கள் வேலையில்லாமல் இருக்கும் நிலை உருவாகவில்லை. ஊழல்கள் வெளிப்பட்டு ஜனநாயகம் மீது அவநம்பிக்கை உருவாகவில்லை. அன்று இலட்சியவாத எழுத்துக்களை வாசிக்கும் ஒரு பெரிய வட்டம் இருந்தது. அவர்களிடையே காண்டேகர் நட்சத்திரமாக இருந்தார். வணிக இதழ்களில் கல்கி கோலோச்சிக்கொண்டிருக்க அவற்றுக்கு வெளியே நிகழ்ந்த அலை இது.
அவரது பாணியில் எழுதியவர் என மு.வரதராசனைச் சொல்லலாம். அவரது கள்ளோ காவியமோ, கரித்துண்டு, நெஞ்சில் ஒரு முள் போன்ற நாவல்கள் அக்காலத்தில் பெரிய அலைகளை கிளப்பின. மு.வரதராசன் வணிக இதழ்களை நம்பி எழுதியவரல்ல. பின்னர் அந்த இலட்சியவாத எழுத்தை அகிலன், நா.பார்த்தசாரதி ஆகியோர் வணிக இதழ்களுக்குக் கொண்டுசென்றனர்.
இந்தப்போக்கை வணிக எழுத்தும் அல்லாத தீவிர இலக்கியமும் அல்லாத ஒன்று என்று வரையறை செய்யலாம். நான் இலட்சியவாத எழுத்து என்று அடையாளப்படுத்துவேன். நல்லொழுக்க எழுத்து என வேதசகாயகுமார் சொல்வார். இந்தப்பாணியில் பின்னர் கு.ராஜவேலு முதலியோர் எழுதினார்கள்.
வணிக எழுத்து இலக்கியம் என இரண்டும் அல்லாத மூன்றாம் ஓட்டத்துக்குள் இலட்சியவாத எழுத்துக்கு இணையாக இன்னொரு சரடு இருந்தது. அதை குடும்ப எழுத்து என்று நான் அடையாளப்படுத்துவேன். கலைமகள் இதழ் ஆரம்பத்தில் இலக்கிய இதழாக இருந்தது. புதுமைப்பித்தன், லா.ச.ரா போன்றவர்களின் எழுத்துக்கள் வெளிவந்தன. பின்னர் அது குடும்ப இதழாக மாறியது. அது ஒரு முன்னுதாரணமாக அமைந்தது. பின்னர் அமுதசுரபி அந்தபாணியை தொடர்ந்தது. பிற்பாடு வந்த பெண்கள் இதழ்களின் முன்மாதிரி கலைமகளே
ஐம்பதுகளில் நடுத்தர பிராமணக் குடும்பங்களில் பெண்கள் படிக்க ஆரம்பித்திருந்தார்கள். அவர்களில் பெரும்பாலானவர்கள் விகடன், கல்கி போன்ற வணிக இதழ்களில் தேவன்,ஆர்வி போன்றவர்களின் வணிக எழுத்துக்களையே வாசித்தார்கள். ஆனால் அடுத்த கட்டத்தை நோக்கிச் சென்ற பெண்களுக்கு இன்னமும் கொஞ்சம் பொறுப்புள்ள எழுத்து தேவைப்பட்டது. அதை கலைமகள் அளித்தது.
கலைமகள் இதழ் பெண் எழுத்தாளர்களின் ஒரு நீண்ட வரிசையையே உருவாக்கியது. அதிகமும் பிராமணப்பெண்கள். குகப்பிரியை, அநுத்தமா, பி.ஆர்.ராஜம்மா, சரஸ்வதி ராமநாதன் என பல குறிப்பிடத்தக்க எழுத்தாளர்கள் உருவானார்கள். கலைமகளின் இந்தப் பெண் எழுத்தாளர்கள் தமிழகத்தில் பெண்ணியசிந்தனையின் அடித்தளங்களை உருவாக்கியவர்கள். இவர்களின் பங்களிப்பு இன்னும் நம் ஆய்வாளர்களால் கவனிக்கப்படவில்லை. இவர்களை குடும்பம்பற்றி எழுதிய பிராமணப்பெண்கள் என்ற ஒரே வரிக்குள் அடக்கி நிராகரிக்கிறார்கள்.
தமிழகத்தின் முதல் பெண்ணியக்குரல் என்று சொல்லப்படும் அம்பை அவரது ஆரம்பகாலக் கதைகளை கலைமகளில் எழுதியபடித்தான் களத்துக்கு வந்தார். அவரது புகழ்பெற்ற ‘அம்மா ஒரு கொலைசெய்தாள்’ கலைமகளில் வெளிவந்ததுதான். கலைமகள் எழுத்தாளர்கள் பெண் கல்வி, பெண்களின் உணர்ச்சிகர தனித்துவம், அவளது சுயகௌரவம் மற்றும் சிந்திக்கும் உரிமை ஆகியவற்றுக்காக வாதிட்டவர்கள். அதேசமயம் குடும்பம் என்ற அமைப்பை வலுவாக முன்வைத்தவர்கள். குடும்பத்தை எக்காரணம் கொண்டும் இழக்க விரும்பாமல் அதற்காக எந்த தியாகத்தையும் செய்யக்கூடியவர்கள் அவர்களின் பெண்கள்.
கலைமகள்தான் பெண் எழுத்தை தமிழில் உருவாக்கியது என்றால் மிகையல்ல. அவர்களை முன்மாதிரியாகக் கொண்டுதான் வணிக எழுத்துக்குள் ஊடுருவிய பெண் எழுத்தாளர்கள் உருவானார்கள். முக்கியமான தொடக்கப்புள்ளி லட்சுமி. அவரது எழுத்து கலைமகள் பெண்ணெழுத்தின் இன்னும் நாடகப்படுத்தப்பட்ட வணிக வடிவம். அவாது தொடர்ச்சியாகவே சிவசங்கரி, இந்துமதி, வாசந்திமுதல் ரமணிச்சந்திரன் வரையிலான வணிகநோக்குள்ள பெண்ணெழுத்து உருவாகி வந்தது.
தமிழகத்துப் பெண் எழுத்தாளர்களை இவ்வகையில் மூன்றாகப் பிரிக்கலாம். ஒன்று கலைமகள் பாணி குடும்பஎழுத்தாளர்கள். இரண்டு விகடன்குமுதம் பாணி வணிக எழுத்தாளர்கள். மூன்று இலக்கியவாதிகள். முதல் வகையில் ஆகச்சிறந்த உதாரணம் அனுத்தமா. இரண்டாம் வகையில் வாசந்தி. மூன்றாம் வரையில் அம்பை முதல் உமாமகேஸ்வரி வரை.
இந்தப்பெண் எழுத்தாளர்களில் மீறலையே தன் பாணியாகக் கொண்டு எழுதியவர்கள் என அம்பை முதலிய இலக்கியவாதிகளைச் சொல்லலாம். எல்லைக்குள் நின்று எழுதுவதை இயல்பாகக் கொண்டவர்கள் கலைமகள் படைப்பாளிகள். நடுவே நின்று எல்லைகளையும் மீறலையும் ஒருங்கே நிகழ்த்தியவர்கள் வணிக எழுத்தாளர்கள்.
ஒட்டுமொத்தமாக இவர்கள் அனைவருமே தமிழின் பெண்ணிய சிந்தனைகளை உருவாக்கினார்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு தளத்தில் அதற்கு பங்களிப்பாற்றியிருக்கிறார்கள். பெண்ணின் உணர்வுச்சுதந்திரம் பற்றி பேச ஆரம்பித்து பாலியல் சுதந்திரம் வரை வந்துசேர்ந்திருக்கிறார்கள். இதைப்பற்றிய ஓர் ஒட்டுமொத்த சித்திரம் இன்னமும் உருவாக்கப்படவில்லை. அனேகமாக நான் இங்கே முதல் வரைபடம் ஒன்றை உருவாக்கியிருக்கிறேன் என நினைக்கிறேன்.
இந்த வரைபடத்தில் ஆர்.சூடாமணியை எங்கே வைப்பது? அவர் முதன்மையாக ஒரு கலைமகள் எழுத்தாளர். அவரது நடை, கதைக்கருக்கள் அனைத்துமே முழுக்க முழுக்க கலைமகள்தன்மை கொண்டவை. எளிமையான சித்தரிப்புநடை. பிராமணவழக்கு அல்லது இலக்கணவழக்கு கொண்ட பெரும்பாலும் சம்பிரதாயமான உரையாடல்கள். ஒழுக்கம் அல்லது அறம் சார்ந்த எளிமையான சிக்கல்களை எடுத்துக்கொண்டு விவாதிக்கும் கதைகள். மரபான மனம் ஏற்கத்தக்க முடிவுகளை தெளிவாக அளித்து அவை நிறைவடையும்.
ஆனால் அநுத்தமா போன்றவர்களிடமிருந்து சூடாமணியை வேறுபடுத்தும் அம்சம் ஒன்று உண்டு. அதை மு.வவின் பாதிப்பு எனலாம். பிற கலைமகள் பெண்ணெழுத்தாளர்களில் குடும்பம், பெண் என்ற வட்டத்துக்குள் நின்றே எழுத்து செயல்படுகிறது. பெண் புரிந்துகொள்ளப்படுவதில்லை. ஒடுக்கப்படுகிறாள். அவள் திமிறி மீறி தன் குரலை எழுப்புகிறாள், தியாகம் மூலம் தன்னை வெளிப்படுத்துகிறாள்- அவ்வளவுதான்.சூடாமணி இன்னமும் விரிவான இலட்சியவாத நோக்கை வெளிப்படுத்துகிறார். அக்காலகட்டத்தின் பொதுவான அறவீழ்ச்சியைப் பற்றி கவலைகொள்கிறார். அதற்கு தீர்வாக தொன்மையான நெறிகளைச் சுட்டிக்காட்டுகிறார்.
குடும்ப எழுத்துக்கும் இலட்சியவாத எழுத்துக்கும் பிறந்த குழந்தை என சூடாமணியைச் சொல்லலாம். பொதுவாக கலைமகள் பெண்ணெழுத்தாளர் கதைகளில் நீண்ட பேச்சுகள் இருப்பதில்லை. ஆனால் சூடாமணியின் கதைகளில் கதைமையம் பெரும்பாலும் ஒரு மையக்கதாபாத்திரத்தால் விரிவாகச் சொல்லப்படும். அவரது உள்ளக்கடல் என்ற சிறு நாவலை வாசித்து 1981ல் நான் ஒரு கடிதம் போட்டிருந்தேன். அதில் இந்த விஷயத்தைச் சுட்டிக்காட்டியிருந்தேன். மையப்பிரச்சினையை அப்படி பேசியே தீர்ப்பது பற்றி. என் அவதானிப்பு சரிதான் என அவர் ஒரு கடிதம் எழுதியிருந்தார்.
சூடாமணியின் கதைகளின் இலக்கிய மதிப்பு மிகக்குறைவு என்றே நான் நினைக்கிறேன். அவை நல்ல நோக்கம் கொண்டவை. மென்மையானவை. ஆனால் மிகமிக பிரக்ஞைபூர்வமாக எழுதப்பட்டவை. அவற்றை எளிமையான அறப்பிரச்சார ஆக்கங்கள் என்றுதான் சொல்லவேண்டும். இலக்கிய ஆக்கத்துக்கு தேவையான நுட்பமான புறச்சூழல் அவதானிப்புகளும் அகச்சித்தரிப்புகளும் அவற்றில் இல்லை. தான் நினைப்பதை சொல்ல ஒரு கதைக்களத்தை கட்டமைக்கிறார் சூடாமணி, அவ்வளவுதான். அவர் ஒரு குறிப்பிட்டவகை எழுத்தின் பிரதிநிதி என்ற வகையில் கவனிக்கத்தக்கவர், அவ்வளவுதான்.
சூடாமணியின் இன்னொரு வகை நீட்சி என்று ராஜம் கிருஷ்ணனைச் சொல்லலாம். அவரது எழுத்தும் கலைமகள் எழுத்துதான். ஆனால் மு.வ.பாணி இலட்சியவாதத்தின் பாதிப்புள்ளது. பின்னாளில் ராஜம் கிருஷ்ணன் முற்போக்கு எழுத்தின் வகைமாதிரிகளை நோக்கி நகர்ந்தார்.
சூடாமணியை இன்றைய நிலையில் வாழும் இலக்கியகர்த்தாவாக அணுக முடியாது. தமிழ்ச்சிறுகதை, நாவல் ஆகியவற்றின் பரிணாமத்தில் அவருக்கு பங்கேதும் இல்லை. ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தின் பொதுக்கருத்தியலை வெளிப்படுத்தியவர். தமிழில் பெண்ணிய சிந்தனைகள் உருவாவதற்கான அடித்தளமாக செயல்பட்ட சொல்லாடலில் அவருக்கு முக்கியமான பங்களிப்பு உண்டு.
ஜெ
http://www.writerpara.com/paper/%E0%AE%85%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%BF/%E0%AE%85%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF/1516
http://azhiyasudargal.blogspot.com/search/label/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D.%E0%AE%9A%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF
http://kasakoolam.wordpress.com/2005/11/03/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF/