பகுதி ஒன்பது : மார்கழி
[ 1 ]
மார்கழித்திங்கள் முதல்நாள் இந்திரப்பிரஸ்தப் பெருநகரியில் ராஜசூய வேள்விக்கான அறிவிப்பு எழுந்தது. இருள் விலகா முதற்புலரியில் மயில்நடைத்தாளத்தில் ஒலித்த விடிமுரசின் ஓசை அடங்கி, நூற்றியெட்டு முறை பிளிறி பறவைகளை வணங்கிய கொம்புகள் அவிந்து, கார்வை நகருக்குள் முரசுக் கலத்திற்குள் ரீங்காரம் என நிறைந்திருக்க அரண்மனை முகப்பின் செண்டுவெளியில் அமைந்த ராஜசூயப்பந்தலின் அருகே மூங்கிலால் கட்டி உயர்த்தப்பட்ட கோபுரத்தின்மீது அமைந்த பெருங்கண்டாமணியின் நா அசைந்து உலோக வட்டத்தை முட்டி “இங்கே! இங்கே! இங்கே! இங்கே!” என்று முழங்கி வேள்வியை அறிவித்தது.
அன்று ராஜசூய வேள்வி தொடங்குவதை முன்னரே அறிந்திருந்தபோதிலும்கூட அந்த மணியோசை நகர்மக்களை உளஎழுச்சி கொள்ள வைத்தது. நீராடி, புத்தாடை அணிந்து, விழித்திருந்த நகர்மக்கள் கைகளைக் கூப்பியபடி இல்லங்களிலிருந்து வெளிவந்து முற்றங்களிலும் சாலையோரங்களிலும் கூடி ராஜசூயப்பந்தல் இருந்த திசை நோக்கி “எங்கோ வாழ் எந்தையே! மூதாதையரே! துணை நின்றருள்க! எண்ணிசை தேவர்களே சூழ்க! தெய்வங்களே மண்ணிறங்குக! சிறகொளிர் பூச்சிகளே, இன்குரல் புட்களே, விழிகனிந்த விலங்குகளே, ஐம்பெரும் ஆற்றல்களே இங்கு வந்தெங்களை அருள்க!” என்று வாழ்த்தினர்.
நகரெங்கும் வேள்வி அறிவிப்பை முழக்கியபடி பெருமுரசுகள் யானைநடைத் தாளத்தில் முழங்கின. கொம்புகளும் சங்குகளும் அவற்றுடன் இணைந்துகொண்டன. மார்கழியின் குளிர் எழத் தொடங்கியிருந்தமையால் கைக்குழந்தைகள் நடுங்கி தோள்சுற்றி அணைத்து அன்னையர் உடம்பில் ஒட்டிக்கொண்டன. முதியோர் மரவுரிச் சால்வைகளை உடலெங்கும் சுற்றிக்கொண்டு மெல்லிய நடுக்கத்துடன் நின்று இருளுக்குள் வாழ்மரங்களுக்கு திரும்பிக்கொண்டிருந்த வௌவால்களின் சிறகடிப்பை பார்த்தனர். கீழ்ச்சரிவில் வலசைநாரைகளின் மெல்லிய அசைவு தெரிந்தபோது “புலரிகொணரும் புட்களே எழுக! இரவாளும் புட்களே நிறைவுகொள்க!” என்று கூவினர்.
வானை முகில் மூடியிருந்ததனால் விடிவெள்ளி கண்ணுக்கு தென்படவில்லை. காற்று இல்லாதபோது மழை ஓய்ந்த துளிகளென மரங்களிலிருந்து பனி சொட்டும் தாளம் அவர்களை சூழ்ந்தது. உடல் சிலிர்க்க வடக்கிலிருந்து வீசிய குளிர்காற்று பனித்துளிகளை அள்ளி சுவர்கள் மேல் பொட்டுகள் வைத்து கடந்து சென்றபின் சற்று நேரம் செவிகளை வருடிச்செல்லும் அமைதி நிலவியது. அமைதிகேட்டு துயில் கலைந்த சிறுபறவை அன்னையை உசாவ ‘விடியவில்லையே’ என்று சொல்லி சிறகுகளால் மூடிக்கொண்டது அன்னை.
முந்தி எழுந்த காகங்கள் சில கருக்கிருட்டின் அலைகளின் மீது சிறகடித்து சுழலத்தொடங்கின. விண்ணில் மெல்ல தணிந்து திரண்ட விண்மீன்கள் குளிருக்கென நடுங்கி அதிர்ந்து இருளில் மீண்டும் புதைந்து மறைந்தன. தெற்கிலிருந்து முகில்நிரைகள் வடக்கு நோக்கி செல்லத் தொடங்கியிருந்ததனால் நகரெங்கும் மெல்லிய நீராவி நிறைந்திருந்தது. வெட்டவெளியில் குளிரையும் அறைகளுக்குள் நீர்வெம்மையையும் உணரமுடிந்தது. காலைக்குளிரை விரும்பிய காவல்புரவிகள் வால்சுழற்றி குளம்போசையுடன் கடந்துசென்றன.
இந்திரப்பிரஸ்தத்தின் அரண்மனைப்பெருவாயிலில் நூற்றெட்டு வைதிகர்கள் கங்கையும் யமுனையும் நிறைந்த பொற்கலங்களும், மஞ்சளரிசியும், பொன் மலர்களுமாக காத்து நின்றிருந்தனர். அவர்களுக்கு இருபக்கமும் இசைச்சூதர்களும் அணிச்சேடியரும் நிரை வகுத்து நின்றனர். அரண்மனைக்குள்ளிருந்து சிற்றமைச்சர் சுரேசர் வெளியே ஓடிவந்து கைகளை அசைக்க வெள்ளிக்கோலேந்திய நிமித்திகர் இருவர்
“ஓம்! ஓம்! ஓம்!” என்று கூவியபடி அவற்றைச் சுழற்றி வான் நோக்கி தூக்கினர். வேத ஒலி எழுந்தது. மங்கல இசை அதை சூழ்ந்தது. அனைத்து வீரர்களும் ஏவலர்களும் வாழ்த்தொலி எழுப்பத் தொடங்கினர். “விண்சுடர் சூடிய பெருநகர் ஆளும் வேந்தர் வாழ்க! மின்கதிர் நகர் வெல்க! எரியெழுந்த மங்கை ஒண்மலர் சூடுக! வில்திறல் விஜயனும் தோள்திறல் பீமனும் இணைதிறல் இளையரும் வாழ்க! இந்திரப்பிரஸ்தம் எழுக! விண்ணவர் இங்கு இறங்குக!”
நகரின் மாபெரும் முற்றம் மீனெண்ணெய் பந்தங்களால் எரியெழுந்த காடுபோல் செவ்வொளி அலைகொண்டிருந்தது. புரவிகளின் விழிகளில், தேர்களின் உலோகச்செதுக்குகளில், படைக்கலங்களில் பளிங்குத் தூண் வளைவுகளில் எல்லாம் சுடர்கள் எழுந்திருந்தன. அரண்மனையின் உள்ளிருந்து வெள்ளிக் கோலேந்தியபடி நிமித்திகன் வெளியே வந்தான். மும்முறை அதைச் சுழற்றி மேலே தூக்கி “பாரதவர்ஷத்தின் முதன்மைப் பேரரசர்! இந்திரப்பிரஸ்தம் ஆளும் பாண்டவர்குடி மூத்தோர்! யயாதியின் குருவின் ஹஸ்தியின் சந்தனுவின் விசித்திரவீரியனின் பாண்டுவின் கொடிவழி வந்த கோன்! அறம்வளர்ச்செல்வர், தென்திசை தெய்வத்தின் மைந்தர் யுதிஷ்டிரர் எழுந்தருள்கிறார்!” என்று அறிவித்தான்.
அவனைத் தொடர்ந்து வந்த இரண்டாவது நிமித்திகன் “இந்திரப்பிரஸ்தத்தின் அரசி! எரியெழுந்த கொற்றவை! ஐங்குழல் கொண்ட அன்னை! பாஞ்சாலி, திரௌபதி எழுந்தருள்கிறார்!” என்று அறிவித்தான். அவனைத் தொடர்ந்து இசைச்சூதர்கள் முழங்கியபடி வர, நூற்றெட்டு அணிப்பரத்தையர் மங்கலத்தாலங்களில் நெய்யகல்கள் சுடர, பொன்னணிகள் பந்தங்களில் அனலுருவாகி வழிய, சீர்நடையிட்டு வந்தனர். அவர்களுக்குப் பின்னால் எட்டு வீரர்கள் வாளேந்தி வர நடுவே தருமனின் செங்கோலை படைத்தலைவன் ஒருவன் ஏந்தி வந்தான். அவர்களுக்கு அப்பால் இந்திரப்பிரஸ்தத்தின் மணிமுடியைச் சூடி தருமன் நடந்து வந்தார். அவர் இடக்கையை பற்றியபடி மணிமுடிசூடி திரௌபதி வந்தாள். அவர்களுக்கு மேல் வெண்குடை முத்துச்சரம் குலுங்க முகில்பிசிறு ஒளிர கவிந்த பிறை நிலவென வந்தது. தருமனுக்குப் பின்னால் அரசஉடையில் பீமனும் அர்ஜுனனும் வந்தனர். அவர்களுக்குப் பின்னால் நகுலனும் சகதேவனும் வாள்களை ஏந்தி நடந்து வந்தனர்.
செங்கோல் ஏந்திய வீரன் முற்றத்தில் இறங்கியதும் வாழ்த்தொலிகள் உச்சம் கொண்டன. முற்றத்தில் காத்து நின்ற வைதிகர்களின் தலைவர் சிரௌதர் முன்னால் சென்று அரசனையும் அரசியையும் அரிமலரிட்டு வாழ்த்தினார். வைதிகர்கள் கங்கைநீர் தெளித்து வேதம் ஓதினர். சுரேசர் அருகே வந்து “தேர்கள் சித்தமாக உள்ளன, அரசே” என்றார். தருமன் மெல்ல தலையசைத்தபின் காத்து நின்றிருந்த தன் அரசப்பொற்தேர் நோக்கி சென்றார். அவர்கள் தேரில் ஏறிக்கொண்ட அசைவை உணர்ந்ததும் நெடுநேரம் நின்றிருந்த அதன் ஏழு புரவிகளும் குளம்புகளை தூக்கிவைத்து உடலில் பொறுமையின்மையை காட்டின. மணிகளுடன் தேர் குலுங்கியது.
சுரேசர் கையசைக்க எழுந்த பீடத்தில் அமர்ந்திருந்த சூதன் ஏழு கடிவாளங்களையும் மெல்ல சுண்டினான். மணிகள் சலங்கைகள் ஒலிக்க நடனமங்கை அவையேறுவதுபோல இடையொசிந்து அசைய, கொண்டைச்சரங்கள் உலைந்தாட, செம்பட்டுத்திரைகள் அசைய தேர் மேட்டிலேறியது. எதிர்காற்றில் மின்கதிர்க் கொடி எழுந்து பறந்தது. பந்தங்களின் செவ்வொளியில் அனல் உருகி வழிவது போல தேர் முற்றத்தைக் கடந்து சாலையில் நுழைந்தது. அதைச்சூழ்ந்து வாழ்த்தொலிகளும் மங்கல இசையும் முழங்கின.
[ 2 ]
யுதிஷ்டிரரின் அரசத்தேர் வேள்விக்கூடத்தின் பெருமுற்றத்தை வந்தடைந்ததும் அங்கு நான்கு நிரைகளாக நின்ற வைதிகர்கள் வேதம் ஓதி, அரிமலர் தூவி, கங்கைநீர் தெளித்து அவரையும் அரசியையும் வரவேற்றனர். அமைச்சர் சௌனகர் முன்னால் வந்து அரசரையும் அரசியையும் முகமன் உரைத்து செய்கையால் வழிநடத்தி உள்ளே கொண்டு சென்றார். நிமித்திகர் குறித்த நற்தருணத்தில் மீனும் கோளும் நோக்கி நின்றிருந்த வானுக்குக் கீழ் தருமன் கைகளைக் கூப்பியபடி தேவியும் தம்பியரும் உடன் வர ராஜசூயப்பந்தலுக்குள் வலக்காலை வைத்து நுழைந்தார்.
ஆயிரத்தெட்டு பெருந்தூண்களின் மேல் நூற்றியெட்டு வெண்குடைக்கூரைகளாக கட்டப்பட்டிருந்த மையப்பந்தலுக்கு வலப்பக்கம் நகர்மக்களும் அயல்வணிகரும் அமர்ந்து வேள்வியை பார்ப்பதற்கான துணைவிரிவுப் பந்தல் அமைக்கப்பட்டிருந்தது. இடப்பக்கம் படைவீரரும் அவர்களின் குடும்பங்களும் அமர்வதற்கான பந்தல் விரிந்திருந்தது. மையப்பெரும்பந்தலில் பாரதவர்ஷத்தின் அரசர்களும் இந்திரப்பிரஸ்தத்தின் இணை அரசர்களும் முறை அரசர்களும் அசுர குடித்தலைவர்களும் நிஷாத குடித்தலைவர்களும் நாகர் குடித்தலைவர்களும் அமர்வதற்கான பீடங்கள் ஒருக்கப்பட்டிருந்தன.
நீண்ட மையப்பந்தல் பருந்தின் உடல் போலவும், இரு இணைப்பந்தல்கள் அதன் விரிந்த சிறகுகள் போலவும், வேள்வி மரம் நின்ற முகப்பு அதன் கூர் அலகு போலவும் அமைக்கப்பட்டிருந்தது. அனைத்துத் தூண்களும் பசுந்தழைகளும் அன்றலர்ந்த மலர் தொடுத்த மாலைகளும் கொண்டு அணி செய்யப்பட்டிருந்தன. வேள்விப்பந்தலில் மலரும் தளிருமன்றி பிற தோரணங்களோ பாவட்டாக்களோ பட்டுத் திரைகளோ அமைக்க வைதிக முறைமை இல்லை என்பதால் அக்கூடம் இளவேனில் எழுந்த குறுங்காடென உயிர் வண்ணத்தால் நிறைந்திருந்தது. மலர் நாடி வந்த வண்டுகளும் பட்டாம் பூச்சிகளும் அங்கிருந்தவர்களின் தலைக்குமேல் வண்ணச்சிறகடித்தும் யாழ் மீட்டியும் பறந்தலைந்தன. அவை வேள்விக்கு வந்த கந்தர்வர்களும் கின்னரர்களும் கிம்புருடர்களும் தேவர்களும் என்று நூல்கள் உரைத்தன.
சிறிய அரைவளையங்களாக அலைகளால் ஆன பேரலை என்னும் வடிவில் அமைக்கப்பட்டிருந்த அந்தப்பீடங்களில் காலை முதலே அரசர்களும் அவர்களின் அகம்படியினரும் வந்து அமர்ந்துகொண்டிருந்தனர். இந்திரப்பிரஸ்தத்தின் சார்பில் சௌனகர் முதலான அமைச்சர்களும் படைத்தலைவர்களும் துணைசெய்ய திருஷ்டத்யும்னனும் சஞ்சயனும் பூரிசிரவஸும் சாத்யகியும் வேள்விக்கூடத்தின் வாயில்களில் நின்று அரசர்களை வரவேற்று உரிய பீடங்களில் அமர்த்தினர். விதுரர் அவற்றை ஒருங்கிணைத்தார். வேள்விப்பந்தலாதலால் வாழ்த்தொலிகளோ வரவுரைகளோ எழவில்லை. வேதமன்றி பிற ஒலி ஏதும் அங்கு எழலாகாது என்ற நெறி இருந்தது.
உடை சரசரக்கும் ஒலிகளும் படைக்கலங்களின் மணியோசையுமாக மெல்லப் பெருகி நிறைந்துகொண்டிருந்தன வேள்விக்கூடத்தின் சிறகுகள். அரசர்களின் அவைகள் அனைத்தும் நிறைந்தன. ஒழிந்து கிடந்த ஒருசில பீடங்களை நோக்கி பிந்தி வந்தவர்களை வழிகாட்டி கொண்டு சென்றவர்கள் மிகமெல்ல ‘அரசே!’ என்றும் ‘உத்தமரே!’ என்றும் அழைத்தனர். அரசர்கள் அவையமர்ந்த பின்னரே வேள்விக்கு வந்த வைதிகரும் முனிவர்களும் முன்னணியில் அவை அமரத்தொடங்கினர். வைதிகர்களை அவையமரச்செய்வது அஸ்வத்தாமனின் தலைமையில் நடந்தது. அக்ரூரர் அவனுக்கு துணைநின்றார். வைதிகர்கள் தங்கள் குருகுலத்து அடையாளச் சால்வைகளை அணிந்தபடி வந்து அரிமஞ்சள் கூடைகளையும் மலர்க்குடலைகளையும் கைகளில் பெற்றுக் கொண்டு தங்கள் குருகுலத்து முறைப்படி சிறு குழுக்களாக அமர்ந்தனர்.
பல்வேறு குருகுலங்களைச் சேர்ந்த முனிவர்கள் தங்கள் மாணவர்கள் சூழ வந்தனர். அவர்களை வரவேற்க துரோணரும் கிருபரும் வேள்விக்கூட முகப்பில் தங்கள் மாணவர்களுடனும் துணைவருடனும் நின்றனர். முனிவர்கள் தங்களுக்கான பகுதிகளில் மாணவர்கள் சூழ அரை வளையங்களாக எரி நோக்கி அமர்ந்தனர். தனஞ்சய கோத்திரத்தைச்சேர்ந்த முனிவரான சுஸாமர் தன் நூற்றெட்டு மாணவர்களுடன் வந்தார். யாக்ஞவல்கிய குருகுலத்தைச்சேர்ந்த பதினெட்டாவது யாக்ஞவல்கியரும் அவரது நூற்றெட்டு மாணவர்களும் தொடர்ந்து வந்தனர். வசிட்ட, வாமதேவ, கௌசிக, விஸ்வாமித்திர குருகுலங்களின் ஆசிரியர்களும் மாணவர்களும் வந்தனர்.
வேள்விச் செயலர்களான ஆயிரத்தெட்டு வைதிகர்கள் தங்கள் அவியூட்டுமுறைமைக்கான தோல் போர்வைகளுடன் வலக்கையில் சமித்தும் இடக்கையில் நெய்க்குடமுமாக வந்து வேள்விக்கூட மையத்தில் அமைக்கப்பட்டிருந்த முப்பத்தாறு எரிகுளங்களைச் சுற்றிலும் அமர்ந்தனர். எரியூட்டுக்குத் தலைமைகொண்டிருந்த வசு மைந்தரான பைலர் அவர்களை வாழ்த்தி அமரச்செய்தார்.
பீமனாலும் அர்ஜுனனாலும் எதிர்கொண்டழைக்கப்பட்டு பீஷ்மர் அவைபுகுந்து பீடத்தில் அமர்ந்தார். திருதராஷ்டிரர் சஞ்சயனால் வழிநடத்தப்பட்டு அவைக்கு வந்தபோது பீமன் எதிர்கொண்டு அவையமரச் செய்தான். கர்ணனுடன் துரியோதனன் உள்ளே வந்தபோது நகுலனும் சகதேவனும் அவர்களை வரவேற்று கொண்டுசென்று அமரச்செய்தனர். காந்தாரத்தின் சுபலர் தன் மைந்தர்களுடன் வர பின்னால் சகுனி வந்தார். உடன் கணிகர் ஒரு வீரனால் தூக்கப்பட்டு மெல்ல வந்தார். சௌவீர பால்ஹிக சிபிநாட்டு அரசர்கள் அவைபுகுந்தனர். சல்யர் அவர்களுக்கு மேல் எழுந்த தோள்களுடன் நீண்ட கால்களை எடுத்துவைத்து உள்ளே வந்தார்.
மாளவனும் கூர்ஜரனும் ஜயத்ரதனுடன் இணைந்து அவைபுகுந்தனர். துருபதன் அவைபுகுந்தபோது அபிமன்யு அவரை வரவேற்று கொண்டுசென்றான். ஜராசந்தனின் மைந்தன் சகதேவன் தன் மாதுலமுறைகொண்ட பிரக்ஜ்யோதிஷத்தின் முதியமன்னர் பகதத்தருடன் அவைக்கு வந்தபோது அனைத்து விழிகளும் அவர்களை நோக்கின. பீமன் அவர்களை அவைக்கு கொண்டுவந்து அமரச்செய்தான். விதர்ப்பத்தின் ருக்மி தன் தந்தை பீஷ்மகர் உடன்வர அவைக்கு வந்தான். சேதியின் தமகோஷரை சகதேவன் அவையமரச் செய்தான். சிசுபாலன் தனியாக வந்தபோது பீமன் அவனை எதிர்கொண்டழைத்தான்.
அனிருத்தன், கங்கன், சாரணன், கதன், பிரத்யும்னன், சாம்பன், சாருதோஷ்ணன், உல்முகன், நிசடன், அங்காவகன் என்னும் பத்து யாதவக்குடியினருடன் மதுராவின் வசுதேவர் அவைக்கு வந்தார். பலராமர் வந்து முறைமைகளைத் தவிர்த்து துரியோதனன் அருகே அமர்ந்தார். அயோத்தி நாட்டரசனுடன் மச்சநாட்டு சூரசேனர் வந்தார். கௌசிகி நாட்டு மஹௌஜசனுடனும் காசி நாட்டு சுபாகுவுடனும் கோசலத்தின் பிரகத்பலன் அவைபுகுந்தான். அர்ஜுனனால் வெல்லப்பட்ட உலூகநாட்டு பிரஹந்தனும் காஷ்மீரநாட்டு லோகிதனும் இணைந்து அவைபுகுந்தனர். அவர்களை அபிமன்யு வரவேற்று அவையிலமர்த்தினான். திரிகர்த்தர்களும் கிம்புருடர்களும் கின்னரர்களும் தங்கள் மலைநாட்டு மயிராடைகளுடன் அவைக்கு வந்தனர்.
சகதேவன் தன்னால் வெல்லப்பட்ட கோசிருங்கத்தின் சிரேணிமானை பணிந்து வரவேற்று அவையிலமர்த்தினான். அவனால் தோற்கடிக்கப்பட்ட அவந்தியின் விந்தனும் அனுவிந்தனும் வந்தபோதும் அவனே சென்று தலைவணங்கி அவைக்கு கொண்டுவந்தான். தென்னகத்திலிருந்து சகதேவனால் வெல்லப்பட்ட வாதாதிபன், திரைபுரன், பௌரவன் என்னும் அரசர்கள் வந்தனர். அவை முழுமையாக நிறைந்ததும் முற்றிலும் ஓசையடங்கி வண்ணங்களும் ஒளிச்சிதறல்களும் மட்டுமானதாக ஆகியது.
இளைய யாதவர் அவைபுகுந்தபோது அர்ஜுனனும் பீமனும் நகுலசகதேவர்களும் அபிமன்யுவும் சாத்யகியும் அவரை நோக்கி சென்று வணங்கி முகமனுரைத்து அழைத்துவந்தனர். அவர் தன் முடியில் சூடிய பீலிவிழி வியந்தமைய புன்னகை மாறா கண்களுடன் அனைவரையும் தழுவி இன்சொல் பேசி அவைக்குள் வந்தார். அவையின் வலப்பக்க மூலையில் மென்பட்டுத்திரைக்கு அப்பால் அமர்ந்திருந்த அரசியர் நிரை நோக்கி சென்று அங்கே பொற்பீடத்தில் அமர்ந்திருந்த குந்தியிடமும் அருகே அமர்ந்திருந்த காந்தாரியிடமும் தலைவணங்கி மென்சொல் பேசினார்.
அவர்களைச் சூழ்ந்து காந்தார அரசியரும், பானுமதியும், துச்சளையும், அசலையும், சுபத்திரையும், தேவிகையும், பலந்தரையும், விஜயையும், கரேணுமதியும் அமர்ந்திருந்தனர். அவர்கள் ஒவ்வொருவரிடமும் அவர் ஓரிரு சொல் பேசினார். அவர்களுக்குப் பின்னால் அமர்ந்திருந்த கௌரவர்களின் துணைவியர் நூற்றுவரிடமும் அவர் ஒருசொல் தனியாக பேசினார் என்று அவர்கள் உணர்ந்தனர். திரும்பி வருகையில் பீஷ்மரையும் துரோணரையும் வணங்கிவிட்டு தன் தமையனருகே சென்று அமர்ந்தார்.
தர்ப்பைப் பீடத்தில் முதல் எரிகுளத்தின் வலப்பக்கமாக வேள்வித்தலைவர் தௌம்யர் அமர்ந்திருந்தார். இடப்பக்கம் சிறிய மேடைமேல் போடப்பட்டிருந்த இந்திரப்பிரஸ்தத்தின் அரியணைகளில் வெண்பட்டு மூடப்பட்டிருந்தது. சௌனகரால் அழைத்து வரப்பட்ட தருமனும் துணைவியும் வேள்விப்பந்தலின் நுழைவாயிலில் அமர்ந்து தங்கள் உடலை தூய்மை செய்துகொள்ளும்பொருட்டு அங்கு அமைந்த சிறிய எரிகுளத்தில் வைதிகர் மூவர் அமைத்த தென்னெரியில் பலாச இலைகளை அவியளித்து தர்வி ஹோமத்தை செய்தனர். புலனின்பத்தால் மாசடைந்த உடலை அப்புகையால் மீட்டனர். மூன்று அழுக்குகளையும் அவ்வெரியில் விட்டு சிவந்த விழிகளுடன் எழுந்தனர். அவர்களின் ஆடைகளை சேர்த்துக்கட்டினர் வைதிகர். அரசியின் கைபற்றி இடம் வரச்செய்து தருமன் வேள்விப்பந்தலுக்குள் நுழைந்தார்.
ஆரம்பனீயம், க்ஷத்ரம், திருதி, வியுஷ்டி, திவிராத்ரம், தசபேயம் என்னும் ஆறுவகை எரிகளுக்கான ஆறு எரிகுளங்களாக முப்பத்தாறு எரிகுளங்களைச்சூழ்ந்து அவியூட்டுநர் அமர்ந்திருந்தனர். தருமனும் அரசியும் அவர்களை வணங்கி முனிவர்களையும் அந்தணரையும் அரசர்களையும் குடிகளையும் தொழுது எரிகுளங்களை வலம்செய்து கூப்பிய கைகளுடன் தௌம்யரை நோக்கி சென்றனர். தருமன் நெற்றி நெஞ்சு இடை கால் கை என ஐந்துறுப்புகளும் நிலம் தொட விழுந்து தௌம்யரை வணங்கினார். அவர் “வேதச்சொல் துணை நிற்க! எரி அணையாதிருக்கட்டும்! கொடி என்றும் இறங்காதிருக்கட்டும்! ஆம், அவ்வாறே ஆகுக!” என்று வாழ்த்தினார்.
அரசி கை நெற்றி முழங்கால் என மூன்று உறுப்புகள் நிலம் படிய தௌம்யரை வணங்கினாள். “அறம் வளர உடனுறைக! எரி என நெறி கொண்டிருக்க! அன்னையென கொடிவழிகள் நினைவில் வாழ்க! ஓம், அவ்வாறே ஆகுக!” என்று தௌம்யர் வாழ்த்தினார். தௌம்யரின் மாணவராகிய பதினெட்டு வைதிகர்கள் வந்து தருமனை எதிர்கொண்டழைத்து வேள்வி மரத்தை நோக்கி கொண்டு சென்றனர். இளைய பாண்டவர்கள் நால்வரும் உருவிய வாட்களுடன் அவரைத் தொடர்ந்து சென்றனர்.
வேள்வியறிவிக்கப்பட்டதுமே இடம்பார்த்து வரையப்பட்ட வாஸ்துமண்டலத்தில் செம்பருந்தின் அலகில் நடப்பட்டு நீரூற்றி வளர்க்கப்பட்டு தளிரெழுந்த இரு மென்கிளை கொண்டிருந்த அத்தி மரத்தின் அருகே சென்று இருவரும் பணிந்தனர். பொற்குடங்களில் மும்முறை அதற்கு நீரூற்றினர். வைதிகர் அளித்த மஞ்சள் சரடை வேதம் ஒலிக்க அம்மரத்தில் கட்டி அதை அவ்வேள்விக்குரிய இறை எழவேண்டிய உயிர்ப்பீடமென ஆக்கினர்.
தருமன் அருகே அறத்துணையென நின்றிருந்த திரௌபதி தர்ப்பையால் கங்கை நீர் தொட்டு அதை வணங்கி அகல்சுடராட்டினாள். மலர்தூவி வணங்கி மீண்டாள். தம்பியர் புடை சூழ மும்முறை வேள்வி மரத்தைச் சுற்றி வணங்கி தனது அரியணை நோக்கி நடந்தார் தருமன். தௌம்யரும் பைலரும் அவரை வரவேற்று எதிர்கொண்டு அழைத்துச் சென்று அரியணை பீடத்தருகே நிறுத்தினர். ஐந்து ஏவலர் வந்து பட்டுத்திரையை விலக்க இந்திரப்பிரஸ்தத்தின் செவ்வொளிமணிகள் பதிக்கப்பட்ட அரியணை வேள்விக்கூடத்தின் பலநூறு பந்தங்களின் ஒளியில் கனல்குவையென ஒளியசைவுகொண்டது. தௌம்யர் அரியணைக்குமேல் கங்கைநீர் தெளித்து தூய்மை செய்து முறைப்படி தருமனை அழைத்தார். “இந்திரப்பிரஸ்தத்தின் அரசே! குருகுலத்து விசித்திரவீரியனின் வழித்தோன்றலே! சௌனக வேதமரபின் புரவலரே! பாரதவர்ஷத்தின் ஷத்ரியர் தலைவரே! இங்கு யயாதியின் பெயரால் ராஜசூய வேள்வி ஒன்று நிகழவிருக்கிறது. இவ்வேள்வியை முடித்து பாரதவர்ஷத்தின் சத்ராஜித் என அரியணை அமரும்படி சௌனக வேத மரபின் வசிஷ்ட குருகுலத்தின் வைதிகனாகிய தௌம்யன் என்னும் நான் உங்களை வாழ்த்தி கோருகிறேன்.”
தருமன் தன் உடைவாளை உருவி அவர் காலடியில் தாழ்த்தி “யயாதியின் வழிவந்தவனும் குருகுலத்தவனும் விசித்திரவீரியனின் வழித்தோன்றலும் யாதவப் பேரரசி குந்தியின் குருதியுமாகிய நான் இவ்வேள்வியை என் உடல் பொருள் உயிர் என மூன்றையும் அளித்து காப்பேன் என்று உறுதி கொள்கிறேன். துணை நிற்கட்டும் என் தெய்வங்கள்! அருளட்டும் என் மூதாதையர்! கனியட்டும் ஐம்பெரும் பருக்கள்! காக்கட்டும் எண்திசை தேவர்! அருகணைக என் ஆற்றலுக்கு உறைவிடமாகிய என் அறத்துணைவி! அருகமைக என்னிலிருந்து பிறிது அல்லாத என் இளையோர்!” என்றார். நான்கு பாண்டவர்களும் தங்கள் வாட்களை தௌம்யரின் காலடியில் தாழ்த்தி “ஆம், அவ்வாறே ஆகுக!” என்றனர்.
உருவிய வாளுடன் தருமன் ராஜசூய காவலனாக அரியணை அமர்ந்தார். அவர் அருகே திரௌபதி அமர்ந்தாள். தௌம்யர் அரிமலரும் கங்கைநீரும் தூவி அவரை வாழ்த்தியபின் திரும்பி அவை நோக்கி இருகைகளையும் விரித்து “அவையோரே! இன்று இவ்வேள்விக்கூடத்தில் பாரதவர்ஷத்தின் நூற்றுப்பன்னிரண்டாவது ராஜசூய வேள்வி நிகழவிருக்கிறது. இதுவரை இவ்வேள்வியை இயற்றி சத்ராஜித் என அறியப்பட்ட நூற்றுப்பதினொரு அரசர்களும் விண்ணுலகில் எழுந்தருளி இவ்வேள்வியை வாழ்த்துவார்களாக! அவர்களின் பெயர்களை இங்கு அறிவித்து எரிகுளத்தில் அவியளித்து நிறைவு செய்வோம். யயாதியும், ஹஸ்தியும், குருவும், சந்தனுவும், பிரதீபரும், விசித்திரவீரியரும் என நீளும் அழியாத அரசநிரையின் பெயரால் இங்கு இவ்வேள்வி நிகழவிருக்கிறது” என்றார்.
“அவ்வரசர் அமர்ந்த அரியணையையும் முடியையும் பாரதவர்ஷத்தின் முதன்மை அரசென்று ஒப்புக் கொண்டு இங்கு வந்திருக்கும் ஐம்பத்துஐந்து தொல்குடி ஷத்ரியர்களையும் அவர்களுடன் வாள் கொண்டு நிகர் நிற்கும் நூற்றுஎட்டு சிறுகுடி ஷத்ரியர்களையும் மண் வென்றதனால் முடி கொண்ட பிற அரசர்கள் அனைவரையும் தலைவணங்கி வரவேற்கிறேன். இங்கு தேவர்கள் எழுக! அவி கொள்ள தெய்வங்கள் எழுக! அவர்கள் அருள் பெற்ற மூதாதையர் வருக! ஐம்பெரும்பருக்கள் நிறைக! எண்திசைக்காவலர் சூழ்க! அவர்கள் அனைவரையும் உணவூட்டிக் காக்கும் எரி ஓங்குக! ஓம், அவ்வாறே ஆகுக!” என்றார். வைதிகர்களும் முனிவர்களும் கைகளைத் தூக்கி “ஓம்! ஓம்! ஓம்!” என்று வாழ்த்தினர்.