அன்புடன் ஆசிரியருக்கு
அந்த தெய்வக்கணம் எனக்கு வாய்க்கவில்லையே என்ற ஆற்றாமையே முதலில் எழுந்தது. உங்கள் கண்கள் வழியாக நானும் கதகளியை கர்ணனை குந்தியை கண்டு விட்டிருந்தேன்.
பிரித்துக் கொட்டித் தேடினால் என்னுள் நம் மரபின் கூறுகள் எதுவும் மிஞ்சவில்லை என்ற ஏக்கமே மேலிடுகிறது. பதின்ம வயதிலேயே நீங்கள் நாட்டார் ஆய்வுகளை மேற்கொள்ளத் தொடங்கி விட்டீர்கள்.
அந்தக் கண்ணீரின் பெருமிதத்திற்கு பின்னிருப்பது கடும் உழைப்பு. திரு. வேதசகாயகுமார் அவர்கள் காடு நாவலின் முன்னுரையில் உங்களுள் மரபின் கூறுகள் சிறப்பாக செயல்படுவதாகக் கூறியிருப்பார். அதைப் புரிந்து கொள்ளும் அளவிற்கு அறிவிருக்கிறது என அமைதி கொள்கிறேன்.
வெண்முரசு வாசகனால் தன் குணத்திற்கும் கற்பனைக்கும் ஏற்றவாறு தன்னுள்ளேயே கலையை நிகழ்த்திக் கொள்ளவும் பொறுமையாக கவனித்து உணர்ந்து கொள்ளவும் முடியும் என நம்புகிறேன்.
இரண்டு வாரங்களாக பன்னிரு படைக்களம் படிக்க முடியவில்லை. இந்திர நீலத்திலிருந்தே (காண்டவம் கைவிடப்பட்டு இந்திர நீலம் தொடங்கிய போது தான் ஆறு நூல்களையும் படித்து முடித்து இணைந்து கொண்டேன்) இந்த “இருவார இடைவெளி” எப்படியோ ஒருமுறை உருவாகி விடுகிறது. அதை இரு நாட்களில் சரி செய்து விடுவேன் என்றாலும் இனி இதையும் அனுமதிக்கப் போவதில்லை. கலைக்கணம் ஒரு காட்சியின் வழியாக ஒரு வாழ்க்கையைக் கண்ட உணர்வு.
அன்புடன்
சுரேஷ் பிரதீப்
அன்புள்ள சுரேஷ்
செவ்வியல் என்னும் அழகியலை ரசிக்க அதற்கென ஒரு தனிப்பயிற்சி தேவைப்படுகிறது. நம் மரபான கோயில்கலைகளில் பல செவ்வியல்கலைகள். அவற்றிலிருந்து நாம் அன்னியப்படும்போது செவ்வியலுக்குள் நுழையும் மனப்பயிற்சி அற்றவர்களாக ஆகிறோம். இது ஒரு பெரிய இழப்பு.
இன்று நமக்கு இயல்பாக அறிமுகமாவது நவீனப்படைப்புகளே. அவற்றின் அடிநாதம் யதார்த்தவாதம். அவற்றை நம் வாழ்க்கையுடன் தொடர்புபடுத்தி, நம் அன்றாட வாழ்க்கையின் நீட்சியாக வாசிக்கிறோம். அவற்றை நம் வாழ்க்கையால் விரிவாக்கம் செய்கிறோம். அவற்றைக்கொண்டு நம் அன்றாட வாழ்க்கையை விரிவாக்கம் செய்துகொள்கிறோம். யதார்த்தம் என்று நவீன இலக்கியம் சொல்வது அன்றாட யதார்த்தத்தைத்தான்
இதுதான் செவ்வியலுக்குள் செல்வதற்கான முதல்தடை. செவ்வியல் அன்றாட யதார்த்தத்தை மென்மையாக ரத்துசெய்கிறது. அதற்கான வழிமுறைகள் பல உண்டு. ஒன்று, அழகியல்வடிவங்களாக அனைத்தையும் ஆக்கிக்கொள்வது. இதை நாடகக்கலைச்சொல்லான ஒயிலாக்கம் என்பதால் சுட்டுகிறார்கள். கதகளியில் குந்தியும் கர்ணனும் சந்திப்பது இரு அழகிய பொம்மைகள் போன்ற வடிவங்களின் ஆடலாக ஆக்கப்பட்டுவிடுகிறது. அழகிய கைமுத்திரைகள் ஆடலசைவுகள் வழியாக மட்டுமே அது வெளிப்படமுடியும்.
இரண்டாவது, உச்சங்களை மட்டுமே கருத்தில்கொள்ளுதல். நவீன இலக்கியத்திற்குரிய அன்றாடத்தன்மை அதில் புறக்கணிக்கப்படுகிறது. குந்தியும் கர்ணனும் சந்திக்கும் அந்த உச்சத்தின் உணர்வுநிலைகள் மட்டுமே அதற்கு முக்கியம்.
மூன்றாவதாக, திரும்பத்திரும்பச் சொல்லுதல். நவீன இலக்கியத்தின் அடிப்படையான ‘புதுமை’ [நாவல்டி என்று ஐ ஏ ரிச்சர்ட்ஸ் சொல்லும் அம்சம்] முற்றாகத் தவிர்க்கப்படுகிறது. திரும்பத்திரும்பச் செய்தல் செவ்வியலின் முக்கியமான அம்சம். ஒவ்வொரு முறை நிகழும்போதும் உருவாகும் நுணுக்கமான மாறுதலும் வளர்ச்சியுமே அதன் இலக்கு. நுண்மையாக்கம் என இதை சொல்லலாம். ஒரே குந்தி கர்ணன் சந்திப்பை நூறுமுறை நிகழ்த்தியிருப்பார்கள் அக்கலைஞர்கள். ஒவ்வொரு முறையும் மிகநுணுக்கமான ஒன்று எழுந்து வருகிறது என்பதே அதன் அழகியல்
கடைசியாக தலைகீழாக்கம். இத்தனை அம்சங்களுடன் சட்டென்று ஒரு கேலிக்கூத்துத்தன்மையை, சர்வசாதாரணத்தன்மையை கலந்து சமன்செய்துகொள்வார்கள்.
செவ்வியல்கலை மட்டுமே அறிந்தவர்கள் ஒரு தலைமுறைக்கு முன் இருந்தனர். அவர்களுக்கு நவீனக்கலை அதிர்ச்சி ஊட்டியது. புதுமைப்பித்தனும் தல்ஸ்தோயும் அருவருப்பூட்டும் விஷயங்களைச் சொல்பவர்களாக தெரிந்தனர். இந்தத்தலைமுறையில் நாம் நவீனக்கலை மட்டுமே அறிந்து செவ்வியலுக்குள் நுழையமுடியாதவர்களாக இருக்கிறோம். அது ஒன்றையே சொல்வதாகவும், மிகைகளும் கேலிக்கூத்தும் மட்டும் கொண்டதாகவும் தோன்றுகிறது
நம் இழப்பு உண்மையில் மிகப்பெரியது. அதை நாம் உணர ஏதாவது வெள்ளைக்காரன் வந்து நம்மிடம் சொல்லவேண்டும்
ஜெ