வாசகர்ளுடனான சந்திப்பு

அன்புள்ள ஜெ,

இன்று உடுமலை சிதம்பரத்திடம் பேசினேன். என் பெயரை ஏற்கனவே உங்கள் தளம் மூலமும், மற்ற சில வாசக நண்பர்கள் மூலமும் அறிந்தேன் என்று ஆச்சர்யப்படுத்தினார். தற்போது தான் படிக்கத் தொடங்கிய புதிய வாசகர்கள் கூட கவனிக்கப்படுகிறார்களா என வியந்தேன்.

பேசப்பேச மேலும் பல தகவல்கள் தந்து ஆச்சர்யப்படுத்தினார். முக்கியமாக ‘விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம்’. ஏற்கனவே அதை சுருக்கமாக அறிந்திருந்தேன். சற்றே அதிகம் கேட்டவுடன், இன்றிரவே தளத்தில் தேடி அனைத்தையும் படித்து முடித்தேன்.

இப்போது என் விண்ணப்பம். இவ்வருடம் மீண்டும் வாசகர் சந்திப்பிற்கு வாய்ப்பிருக்கிறதா? கோவை மட்டுமல்ல தமிழகத்தில் எங்கிருப்பினும் வாசகர்கள் தயாராக இருப்பார்கள் என நம்புகிறேன். நான் ஜனவரியில், விடுமுறையில் இந்தியாவில் இருப்பேன். கடந்த ஆண்டைப் போல இந்த ஆண்டும் ஜனவரியில் ஒரு வாசகர் சந்திப்பு அமைந்தால் என் அதிர்ஷ்டம், உங்களை மட்டுமல்லாது என்னைப் போல் உங்கள் எழுத்தை நேசிக்கும் மற்றபல வாசகர்களையும் சந்திக்க வாய்ப்பாக அமையும். இல்லையெனினும் விருதுநகர் வந்த அடுத்த நாளே உங்கள் வீட்டில் உங்களை சந்திப்பேன். (முன்னனுமதியுடன்).

இக்கடிதத்தை தளத்தில் வெளியிடுவீர்களா, ஆர்வமுடைய வாசகர்கள் /விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் சாத்தியங்களை உருவாக்க வழிவகுக்கலாம்.

அன்புடன்,
செந்தில் குமார்,தேவன்
ஜெர்மனி

அன்புள்ள செந்தில்

விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் சார்பில் வருடத்தில் ஒரு இலக்கியவிருது அளிக்க நினைக்கிறோம். பொதுவாக நம்சூழல் கவனிக்காமல் விட்டுவிட்ட இலக்கிய முன்னோடிகளை கௌரவிப்பதே நோக்கம். இவ்வருடம் நவம்பர் இறுதி அல்லது டிசம்பர் தொடக்கத்தில் விழா அமையும். அதற்கான ஏற்பாடுகளைச் செய்துகொண்டிருக்கிறோம். பரிசு இப்போதைக்கு ஐம்பதாயிரம் ரூபாய். அது ஒரு விழாவில் அளிக்கப்படும். அந்த ஆசிரியரைப்பற்றி நான் ஒரு சிறு நூலையும் எழுதி வெளியிடுவேன்.

நண்பர் அரங்கசாமிதான் இதில் பெரிய ஆர்வத்துடன் இருக்கிறார். இதைத்தவிர சில இலக்கியச் சந்திப்புகளை நிகழ்த்தலாமென எண்ணம். இனிமேல் இலக்கியக் கூட்டங்கள் தேவையில்லை என நினைக்கிறேன். காரணம், அவை உரையாடலையும் பரஸ்பர நட்பையும் சாத்தியமாக்குவதில்லை. அத்துடன் அப்படிக் கூடுவது வெறும் அரட்டையாக அல்லாமல் பயனுள்ளதாக இருக்கவேண்டும்.

சென்னை மாதிரி நகரம் ஒன்றில் தேவதேவன் கவிதைகளைப்பற்றி ஒரு முழுநாள் விவாத அரங்கு ஏற்பாடு செய்தாலென்ன என நினைக்கிறேன். அவரது 50 கவிதைகளை வாசித்து விவாதித்து அவரிடம் ஒரு விவாதம். ஒருநாளில் மூன்று அரங்கங்களிலாக. அது நண்பர்கள் ஒருவரை ஒருவர் சந்திக்கவும் உதவும். நானும் பிறரைச் சந்திக்கலாம். நாஞ்சில்நாடன் ஆக்கங்களைப்பற்றியும் ஒரு சந்திப்பு நிகழ்த்தலாமென எண்ணம்.

என்னையோ என் ஆக்கங்களையோ முன்வைத்து கூட்டங்களை நான் நிகழ்த்துவதில்லை. நம் முன்னோடிகளே இன்னமும் அதிகமாகப் பேசப்படாதபோது அது அழகல்ல. ஜனவரியில் எப்படியும் சந்திப்போம். முடிந்தால் ஒரு சந்திப்பு நிகழ்ச்சியை சென்னையில் அல்லது மதுரையில் நிகழ்த்தலாம்.

இவற்றுக்கான நிதியாதாரங்களை நண்பர்களிடமிருந்தே பெறுகிறேன். நிபந்தனைகள் ஏதும் விதிக்காத வாசக நண்பர்கள். ஓரளவு என் பணம். எதையாவது செய்யவேண்டுமென்று தோன்றிக்கொண்டே இருக்கிறது. நிர்வாக விஷயங்களை இன்னொருவர் செய்யும்போது சிலவற்றுக்கு துணிகிறேன்

ஜெ

முந்தைய கட்டுரைமார்க்ஸ் கண்ட இந்தியா
அடுத்த கட்டுரைகலைச்சொற்கள்-கடிதம்