22.4.2012ல் எனக்கு ஐம்பது வயதாகியது. திடீரென்று வாழ்க்கையின் அடுத்தகட்டத்திற்குச் சென்ற உணர்வு. அது ஒருபாவனைதான். மேலும் ஒரு இருபத்தைந்தாண்டுக்காலம் இருக்கலாமா என்று ஒரு கற்பனை. ஒரு சுயகிண்டல் புன்னகை. என் இணையதளத்தைத் திரும்பிப்பார்த்து மறைந்தவர்களைப்பற்றி நான் எழுதிய கட்டுரைகளை எடுத்து வாசித்தேன்
நான் நினைவுகளை எழுதிக்கொண்டே இருந்திருக்கிறேன். எழுத்தாளனின் நினைவுகள் சிலகுறிப்பிட்ட இயல்புகள் கொண்டவை என்பதை வாசகர்கள் காணலாம். அவை துல்லியமான ஆளுமைச்சித்தரிப்பு கொண்டிருக்கும். முகபாவனைகள், சொற்கள், சூழல் , உணர்வுநிலைகள் எல்லாமே அழியாமல் அவனில் பதிவாகி எழுந்துவரும்.
ஆனால் அவை நேரடிப்பதிவுகள் அல்ல. அவை நினைவுகூரப்படுகையிலேயே ஒருவகை புனைவுத்தன்மை கைகூடியிருக்கும். முற்றிலும் உண்மைத்தகவல்கள் என்றாலும் எந்தத்தகவல் சொல்லப்படவேண்டும், எந்தத்தகவல் எதற்கு பிறகு வைக்கப்படவேண்டும் என்பதில் புனைவுத்திறன் செயல்பட்டிருக்கும். அதுவே பிறர் எழுதும் நினைவுகளுக்கும் எழுத்தாளனின் நினைவுகளுக்கும் உள்ள வேறுபாடு. எழுத்தாளனின் நினைவுகளில் மிகத்துல்லியமாக ஓர் ஆளுமை உருவாகி வரும், அதை வேறெங்கும் காணமுடியாது. ஆனால் அவ்வாளுமை அவ்வெழுத்தாளனில் பதிந்த சித்திரமாக இருக்கும். அவனால் மீளுருவாக்கம் செய்யப்பட்டதாகவும் இருக்கும். அவனை விலக்கி அவனால் அவர்களைப்பற்றிச் சொல்லமுடியாது.
ஆகவே எப்போது தகவல்களில் நுண்பிழைகளும், மாறுதல்களும் இருக்கும். அப்பிழைகளை தொடர்ந்துசெல்லும் ஒருவர் அவையும் அவ்வெழுத்தாளனின் புனைவின் விளைவே என உணரமுடியும். அவன் நிகழ்வுகளையும் உணர்வுகளையும் அறியாமல் எதனுடன் இணைத்துக்கொள்கிறான் என்பதற்கான சான்று அது. உதாரணமாக, சுந்தர ராமசாமியை எப்போதுமே மூக்குக்கண்ணாடியில் பிரதிபலிக்கும் ஒளியுடன் நினைவுகூர்கிறேன். ஆனால் பிற்காலத்தைய கணிசமான படங்களில் அவர் கண்ணாடி இல்லாமலோ, அல்லது ஒளி பிரதிபலிக்காத கண்ணாடி அணிந்தோதான் காட்சியளிக்கிறார். ஆதிமூலம் வரைந்த கணிசமான ஜெயகாந்தன், சுந்தர ராமசாமி கோட்டோவியங்களில் கண்களே இல்லை, கண்ணாடி மட்டும்தான்.
நான் சுந்தர ராமசாமியைப்பற்றி ‘சு ரா- நினைவின் நதியில்’ என்னும் முழுநூலை எழுதியிருக்கிறேன். நாஞ்சில்நாடனைப்பற்றி ‘தாடகைமலையடிவாரத்தில் ஒருவர்’ என்னும் சிறிய நூலை எழுதியிருக்கிறேன். லோகித தாஸ் பற்றி ‘லோகி’ என்னும் நூலை எழுதியிருக்கிறேன்/
நான் அறிந்த மறைந்த ஆளுமைகளைப்பற்றிய என் நினைவுக்குறிப்புகள் ‘இவர்கள் இருந்தார்கள்’ என்னும் நூலாக வெளிவந்துள்ளது. இது பிறகு வெவ்வேறு தருணங்களில் எழுதிய நினைவுகளின் தொகுதி. இதில் என் ஆசிரியர்களும், நண்பர்களும் சென்றபின் எஞ்சிய வடுக்கள் பதிவாகியிருக்கின்றன. ‘முன்சுவடுகள்’ என்னும் நூலில் பல்வேறு பண்பாட்டுநாயகர்களின் ஆளுமைச்சித்தரிப்புகள் உள்ளன.
பண்பாட்டுச்சூழல் என்பது கருத்துக்களால் மட்டும் ஆனதல்ல. ஆளுமைகளாலும் ஆனது. சொல்லப்போனால் கருத்துக்களை விட ஆளுமைகளே முக்கியமானவை. என் இளமையில் என் ஆசிரியரான பி.கே.பாலகிருஷ்ணன் எழுதிய ‘மாயாத்த சந்தியகள்’ என்னும் நினைவுநூலை வாசித்தேன். சி.ஜே.தாமஸ், பி.கே.பாலகிருஷ்ணன் போன்றவர்களைப்பற்றிய நினைவுக்குறிப்புகள். எந்தப் பெரும்புனைவுக்கும் நிகரான உள எழுச்சியை அவை அன்று அளித்தன
பின்னர் கார்க்கி தல்ஸ்தோய் குறித்து எழுதிய நினைவுக்குறிப்புகள் அதே அளவுக்கு என்னை கனவிலாழ்த்தின. தல்ஸ்தோய் எனக்கு மிகமிக அண்மையானவராக ஆனது அந்த சித்தரிப்பின் வழியாகத்தான் என்று சொன்னால் அது மிகையல்ல. தொடர்ந்து எழுத்தாளர்களைப்பற்றிய எழுத்துக்களை விரும்பி வாசித்து வருகிறேன். ஒருநீண்டபட்டியலையே சொல்லமுடியும்.
அவற்றில் உள்ள முக்கியத்துவம் என்ன? ஒன்று அவை மிகச்சிறந்த புனைவுகள். புனைவு என்றால் பொய் அல்ல, உண்மையின் ஒழுங்குபடுத்தப்பட்ட வடிவம்தான். இன்னொன்று, அவை எழுத்தாளன் என்னும் ஆளுமையை நமக்குக் காட்டுகின்றன. கலாச்சாரம் என்னும் தொடர்செயல்பாட்டின் ஒட்டுமொத்தத்தை ஆளுமைகள் வழியாக நாம் காண ஆரம்பிக்கிறோம். கடைசியாக, நாம் அவர்களுடன் நம்மை அடையாளம் கண்டுகொள்கிறோம். எழுத்தாளனாக ஆகவேண்டும் என்னும் கனவு எழுத்தாளர்களின் வாழ்க்கையை அறிவது வழியாகவே உருவாகிறது.
இக்கட்டுரைகளினூடாக எனக்குப்பிரியமான முகங்கள் மொழியால் தீட்டப்பட்டு வெளிப்படுகின்றன. எனக்கே அவை துல்லியமாகத் தெரியத்தொடங்குகின்றன. நம் பண்பாட்டுச்சூழலில் சென்ற காலத்தில் மின்னியவை அவை. துயரம் நிறைந்தவை, ஆழ்ந்த கனவு தேங்கியவை, கொந்தளிப்பவை. இவர்களால் நான் உருவாகி வந்திருக்கிறேன். ஒரு பெரிய நாவலின் அழியாக்கதாபாத்திரங்கள்போல இவை தெரிகின்றன
என் நண்பர் செல்வேந்திரனுக்கு இந்நூல் சமர்ப்பணம்
ஜெ
[குமுதம் வெளியீடாக வரவிருக்கும் எத்தனை காலடித்தடங்கள் நூலுக்கான முன்னுரை]