அனிதா இளம் மனைவி -ஒரு கடிதம்

 sujatha-0002

அன்புள்ள மதிப்பிற்குரிய ஜெயமாே கனருக்கு,

உள்ளே இருப்பவர்கள் கட்டுரையின்படி சிறு வயதிலேயே நீீங்கள் வாசகர் கடிதம் அனுப்பியதாக கூறியிருப்பது தகவலல்லது தட்டச்சுப் பிழையா….

Kuppuswamy Ganesan யாரென எனக்குத் தெரியாது…

Kuppuswamy Ganesan : சுஜாதாவின் முதல் நாவல் 1965ம் வருடம் தொடர்கதையாக வெளிவந்த நைலான் கயிறு. அனிதா இளம் மனைவி இரண்டாவது தொடர்கதை.. அது வெளிவந்தது 71ல். அப்போது ஜெமோக்கு வயது 9. அந்த வயசிலேயே திறனாய்வுக் கடிதம் என்றால் கருவிலே திரு தான்.

தெளிவு பெற ஆவலுடன் காத்திருக்கும்

நிருதன் நயினார்

*

அன்புள்ள நிருதன் நயினார்

எனக்கு அவ்வப்போது வரும் எதிர்வினைகளில் ஒன்று இவ்வகைப்பட்டது.  ‘எப்டிசார் இவ்ளவு எழுதறீங்க? என்னால போஸ்ட் கார்டே எழுதமுடியலை’ ‘எப்டி சார் இவ்ளோ படிக்கிறீங்க? என்னால அம்பது பக்கம் படிக்கமுடியலை’. ‘இதெல்லாம் எங்க பாத்தீங்க? நான் பாத்ததில்ல”

 ‘சரி, நீ யார்?’ என்று நான் கேட்பதில்லை. கோழிமுட்டை வட்டத்திற்குள் வாழ்க்கையை அமைத்துக்கொண்டு, சில்லறை வம்புகளில் பொழுதைப்போக்கிக்கொண்டு வாழ்ந்து மடியும் ஒரு பாமரன் அடையும் வியப்பு இது.

நான் என்னைவிட எழுதிய, என்னைவிட சாதித்த, என்னைவிட பயணம்செய்த தாகூரை எண்ணி அந்த வினாவை எழுப்பிக்கொள்வதில்லை. ஏனென்றால் அது எப்படி சாத்தியமாகிறது என எனக்குத்தெரியும்

நான் சாண்டில்யனின் கடல்புறாவை தொகுப்பாக வாசிக்க ஆரம்பித்தபோது வயது எட்டு. மூன்றாம் வகுப்பு மாணவன். சாண்டில்யனுக்கு அவ்வயதில் வாசகர்கடிதம் அனுப்பியிருக்கிறேன்.   அவர் என்னை வாழ்த்தி திருப்பாவை நூல் ஒன்றை பரிசாகவும் அனுப்பியிருக்கிறார்.

உண்மையில் அந்த குமுதம் பக்கங்களை இன்றைக்கும் நினைவுகூரமுடியும்.  லதாவின் ஓவியங்களுடன். அன்று வாசித்த தொடர்கதைகளை மட்டுமல்ல, அப்பக்கங்களில் இருந்த விளம்பரங்களும் துணுக்குகளும்கூட நினைவில் நிற்கின்றன. [வெள்ளக்கால் இரா கந்தையா இப்போதிருக்கிறாரா?]

அனிதா இளம் மனைவிக்கு வரையப்பட்ட ஓவியங்கள் [பாலு] கிருதாவுடன் கூடிய கணேஷின் முகம் இன்றும் துல்லியமாக நினைவில் உள்ளது. முதுமையில் அது இன்னமும் தெளிவாகும், காலைச்சாப்பாடு மறந்துபோகும்.

அதேவயதில் வெண்முரசை வாசிக்கும் பல வாசகர்கள் எனக்குள்ளனர், எனக்கு கடிதம் [மின்னஞ்சலில்!] எழுதியிருக்கிறார்கள்.

இதெல்லாம் எந்த ஆச்சரியமும் இல்லை. ஏனென்றால் பெரும்பாலான எழுத்தாளர்கள் இதை தங்கள் வாழ்க்கையிலிருந்தும் சொல்வார்கள். எழுத்தாளர்களின் மொழிநுண்ணுணர்வு, காட்சிநினைவுகள், கனவுகள் ஆகியவை முற்றிலும் அசாதாரணமானவை. அதை அறியாத உளவியலாளர் இருக்கமுடியாது.

நல்ல எழுத்தாளன் மட்டுமல்ல வாசகன்கூட  மொழிக்குள்தான் பிறந்து வருகிறான். இசைக்கலைஞர்கள் இசைக்குள் பிறந்து வருவதுபோல. பிறிதொன்றிலும் அவன் முழுதாக அமைவதில்லை.

இணையத்தின் பெரிய சிக்கல் என்பது தங்களால் எப்போதுமே புரிந்துகொள்ளமுடியாத விஷயங்களுக்குள் தவறி வந்துசேர்ந்துவிடும் ஆத்மாக்கள்தான்.

ஜெ

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 49
அடுத்த கட்டுரைஆதல்