[ 8 ]
அஸ்தினபுரியிலிருந்து கிளம்பி கங்கைத்துறை நோக்கிய சாலையில் தனியாக சென்று கொண்டிருக்கையில் தன் உடல் மெல்ல இறந்து ஊன் பொதியென ஆகி புரவி மேல் படிவதை சிசுபாலன் உணர்ந்தான். கைகால்கள் ஒவ்வொன்றும் உடலிலிருந்து உருகும் அரக்கால் ஆனவை போல் விடுபட்டு குழைந்து பரந்து கொண்டிருக்கும் உணர்வு எழுந்தது. ஒரு கட்டத்தில் தன்னிலை அழிந்து புரவியின் கழுத்திலேயே முகம் பரப்பி கைகள் அதன் விலாவில் இருபுறமும் தொங்க நினைவிழந்து கிடந்தான். பெருநடையிட்டுச் சென்ற புரவி அவன் கடிவாளத்தை விட்டுவிட்டதை அறிந்து குறுங்காட்டின் ஓரமாக சென்று நின்றது.
சிசுபாலன் தன்னுள் கொப்பளித்த முகங்களினூடாக சென்று கொண்டிருந்தான். தொலைவில் எவரோ “இவ்வழி! ஆம், இவ்வழி!” என்றனர். “யார்?” என்று அவன் கேட்டான். வேறெங்கோ நகைப்பொலி எழுந்தது. “யார்?” என்று அவன் மீண்டும் உரக்க கேட்டான். “இவ்வழி!” என்றது மிக அருகே ஒரு குரல். அவன் விழித்துக்கொண்டு தன் உடலை உணர்ந்தான். தொலைவில் ஏதோ பறவை சிறகடித்துச்செல்ல மிக அப்பால் நீர் பாயும் ஒலி எழுந்தது.
எழுந்து அமர்ந்தபோது நீண்டஓய்வும் உணவும் பெற்றபின் என உடல் புத்துயிர் கொண்டிருந்தது. சேணத்தின் மேல் சீரமைந்து கால்களை வளையத்தில் செலுத்தி புரவியை தட்டினான். அது விரைவு கொண்டபோதுதான் சிந்து நாட்டுக்கு செல்லவேண்டுமென்ற எண்ணம் எழுந்தது. சேதிநாட்டுக்குத் திரும்பும்பொருட்டே அவன் அஸ்தினபுரியிலிருந்து கிளம்பினான். திருதராஷ்டிரரின் அவைக்கு வெளியே அவன் வந்தபோது கர்ணனும் துரியோதனனும் முன்னால் சென்றுவிட்டிருந்தனர். அவன் கைகளை இறுகப்பற்றி பற்களைக் கிட்டித்தபடி விதுரருக்காக காத்து நின்றான். அவர் வெளியே வந்ததும் அவனைப்பார்த்து தயங்கி நின்றார்.
“நன்று!” என்று கசந்து சுருங்கிய முகத்துடன் அவன் சொன்னான். “இந்த நாடு ஷத்ரியர்களுடையது என்று எண்ணினேன். அல்ல என்று இப்போது தெளிந்தேன்.” விதுரர் புன்னகையுடன் “இது குருகுல மூதாதையரின் நாடு. அவர் மைந்தர் ஒத்துவாழும் நிலம்” என்றார். “இனி இங்கு நான் இருப்பதில் பொருளில்லை. இன்றே கிளம்புகிறேன். விதுரரே, பாரதவர்ஷத்தில் ஷத்ரிய நாடென்பது அஸ்தினபுரி மட்டுமல்ல. கூர்ஜரமும் சேதியும் விதர்ப்பமும் சிந்துவும் வல்லமை கொண்டிருக்கின்றன. அங்கு செல்கிறேன். அவர்களை திரட்டுகிறேன். ஜராசந்தரின் இறப்புக்கு நிகரீடு செய்ய முடியுமா என்று பார்க்கிறேன்” என்றான்.
விதுரர் புன்னகையுடன் “நன்று” என்றார். சிசுபாலன் தன் பேச்சு அதன் சினத்தை தவிர்த்தால் சிறுவனின் வீம்புபோல ஒலிப்பதை உணர்ந்து மேலும் சினம்கொண்டு காற்றில் சீறும் வாளோசையுடன் சால்வையைச் சுழற்றி தோளில் இட்டபடி இரண்டடிகள் சென்று திரும்பி “அவ்வாறு ஷத்ரிய நாடுகள் எழுந்து அந்த யாதவ இழிமகனின் நகர்களை அழிக்கும்போது அதனுடன் சேர்ந்து உறவு நாடென அஸ்தினபுரியும் அழியும். அதை நினைவில் கொள்ளுங்கள். செயலாற்றாது இருக்கும் உடலுறுப்பு சூம்பும். உயிர் இழந்து அழுகும் இந்நகரம் என்றோ செயலிழந்துவிட்டது. இதன் அழுகல் மணத்தை இத்தெருக்கள் அனைத்திலும் உணர்கிறேன். இதை வீழ்த்த ஒருநாள் வாளுடன் வருவேன்” என்றபின் படியிறங்கிச் சென்றான்.
தன் அறைக்குச் சென்று உடனே கிளம்பி எவரிடமும் விடைபெறாது நகர்விட்டு கிளம்பினான். ஆனால் கோட்டையை விட்டு வெளியே வந்ததுமே உள்ளம் தளர்வடைந்தது. சேதிநாட்டுக்குச் செல்வதைப்பற்றிய உணர்வே கல்லைத்தூக்கி எண்ணங்களின் மேல் வைத்தது போலிருந்தது. ஆனால் புத்துணர்வு மீண்டதும் அனைத்தும் எளிதெனத் தோன்றலாயின. ஜயத்ரதன் மட்டும் ஒத்துழைத்தால்போதும். ஒரு படை எழுந்தால் பிற ஷத்ரியர் வாளாவிருக்கமுடியாது. அது அவர்களுக்கு தங்கள் ஷத்ரியப்படைவீரர் நடுவே தீராப்பழியை ஏற்றிவைக்கும்.
சுதுத்ரிக்கான வழியிலேயே சேதிநாட்டு ஒற்றனொருவனை சந்தித்தான். அவனிடம் சேதி நாட்டுக்கு செய்தி அனுப்பிவிட்டு சுதுத்ரியின் கரைக்குச் சென்று படகில் ஆற்றைக் கடந்து வணிகர் குழு ஒன்றிலிருந்து புதுப்புரவியைப்பெற்று பயணம் செய்தான். சிந்துநிலத்தின் மென்பூழி உடம்பெல்லாம் படிந்து செம்மண்திரிகளாகச் சுருண்டு தொங்கிய தாடியும் தலைமயிருமாக ஏழாம் நாள் சிந்துவின் தலைநகரான விருஷதர்ஃபுரத்தை சென்றடைந்தான்.
சேற்றுப்பாறைக் கற்களை வெட்டி அடுக்கிக் கட்டப்பட்டிருந்த விருஷதர்ஃபுரத்தின் கோட்டை மண்ணிலிருந்து உந்தி எழுந்ததுபோலிருந்தது. அதன் வாயிலில் அவன் கணையாழியைப்பார்த்த காவலர் அவனை நோக்கித் திகைத்து பின்பு தலைவணங்கினர். அவன் உள்ளே நுழைந்ததுமே அவன் வருகையை அறிவிக்கும் முரசொலிகள் கோட்டைமேல் எழுந்தன. அவன் நகருக்குள் சென்றதும் அவனுக்குப்பின்னால் சற்று தொலைவில் சிந்துவின் காவலர்தலைவன் புரவியில் வந்தான்.
அரண்மனை வாயிலிலேயே அவனை எதிர்கொண்ட ஜயத்ரதன் கைவிரித்து வந்து தழுவிக்கொண்டு “வருக சேதி நாட்டரசே! தாங்கள் முதல் மூறை இந்நகருக்குள் நுழையும்போது அதை ஒரு பெருவிழாவென எடுக்க வேண்டுமென்று எண்ணியிருந்தேன். எதிர்பாராமல் வந்து திகைக்கவைக்கிறீர்கள்” என்றான். அப்புன்னகையும் தழுவலும் சிசுபாலன் உடலை எரியச்செய்தன. சினத்துடன் “நான் இங்கு விருந்து கொண்டாட வரவில்லை சைந்தவரே” என்றான். “நம்முடன் விருந்து கொண்டாடி தோள்தழுவி மகிழ்ந்த ஒருவன் கொல்லப்பட்டிருக்கிறான். இங்கு இருந்து நாம் பேசும் ஒவ்வொரு இன்சொல்லும் அவனுக்கெதிரானது. ஒவ்வொரு உணவுக் கவளமும் அவன் குருதி படிந்தது.”
ஜயத்ரதனின் முகம் இறுகியது. “ஆம் சிசுபாலரே, அச்செய்தியிலிருந்து மீள எனக்கு இரண்டு வாரமாகியது. அந்நாட்களில் இங்கு மழை பெருகி வழிந்து நதிகளில் வெள்ளம் நகர் புகுந்தது. என் படை முகாம்கள் அனைத்தையும் இடமாற்றம் செய்ய வேண்டியிருந்தது. இடிந்த இல்லங்களை சீரமைத்து கூரைகளை செப்பனிட்டு முடிப்பதற்குள் கார்த்திகை எழுந்தது. அச்செயல்கள் இல்லையென்றால் ஒருவேளை சினத்தில் மெய்மறந்து படைகொண்டு எழுந்திருப்பேன். அச்செயல்களில் மூழ்கியமையால் என் தலைக்குள் நிறைந்த அனல் சற்று அவிந்தது” என்றான். சிசுபாலன் தோள் தழுவி “வருக!” என்றான்.
சிசுபாலன் அத்தொடுகையையே உடல்விதிர்ப்பென உணர்ந்தான். அக்கையை தவிர்த்து “இன்னும் பிந்தவில்லை சைந்தவரே, இப்போதும் நாம் ஐந்து பேர் எஞ்சியிருக்கிறோம். நாம் குருதிநிகர் கொள்வோம்” என்றான். “துரியோதனரை பீஷ்மரின் ஆணை கட்டுப்படுத்துகிறது என்று செய்தி வந்தது…” என்றான் ஜயத்ரதன். அதை மறித்து உரக்க “இனி அஸ்தினபுரியைப்பற்றிய எப்பேச்சையும் நான் விழையவில்லை” என்றான் சிசுபாலன். “விதர்ப்பத்தின் ருக்மி அனல் தின்று இதுநாள் வரை உயிர்வாழ்கிறார். இங்கு என்னுள்ளும் நஞ்சு நிறைந்திருக்கிறது. நீங்கள் இருக்கிறீர். கூர்ஜரனோ ஒவ்வொரு தருணத்திலும் துவாரகையை வெல்ல சித்தமாக இருக்கிறான். அங்கத்தின் மேல் சினம் கொண்டிருக்கிறான் வங்கன். போதும், நாம் ஐவர் இருக்கிறோம். நாம் படைகொண்டு எழுவோம். நாம் படைகொண்டு எழுந்த பின்னும் நம்முடன் சேராதிருப்பவர்கள் எவரும் ஷத்ரியர்கள் அல்ல என்று அறிவிப்போம். அவர்களுக்கு வேறு வழியில்லை.”
ஜயத்ரதன் “தாங்கள் நீராடி வாருங்கள். இங்கு அவைகூடி நாம் அனைத்தையும் பேசுவோம்” என்றான். சிசுபாலன் “பேசுவதற்கொன்றுமில்லை. என் படைகளை சித்தமாக நிற்கும்படி ஆணையிட்டுவிட்டே இங்கு வந்தேன். தங்கள் படைகள் சித்தமா என்பதையன்றி பிறிதெதையும் நான் விழையவில்லை” என்றான். ஜயத்ரதன் அவன் விழிகளைத் தவிர்த்து “ஜராசந்தன் ஷத்ரியர்களைச் சிறையிட்டு அவர்களை நாகருத்திரனுக்கு பலி கொடுக்கப்போவதாக அறிவித்ததுபோல் நம் தரப்பின் பிழை வேறொன்றுமில்லை. ஒரே செய்தியால் பாரதவர்ஷத்தின் அனைத்து ஷத்ரியர்களுக்கும் ஜராசந்தன் அரக்கனும் நிஷாதனுமாகிவிட்டான். அவன்பொருட்டு படை கொண்டு செல்ல ஷத்ரியர்களை நாம் அழைப்பது இன்று இயலாது” என்றான்.
அவனை பேசவிடாமல் உரக்க கூவினான் சிசுபாலன் “நாம் படை கொண்டு செல்வோம். போர் நமக்கும் யாதவர்களுக்கும் என்னும்போது ஷத்ரியர்கள் என்ன நிலைபாடு எடுக்கிறார்கள் என்று பார்ப்போம்.” தணிந்த குரலில் சற்றே சலிப்புடன் “தாங்கள் நீராடி வருக!” என்றான் ஜயத்ரதன். அச்சலிப்பை உணராமல் “இதுவே தருணம்… இதை விட்டால் நாம் வீழ்வோம். நம் புகழ் அழியும்…” என்று சிசுபாலன் கூவினான். “ஆம், பேசுவோம்” என்றான் ஜயத்ரதன்.
சிசுபாலன் ஜயத்ரதனின் மாளிகைக்குச் சென்று நீராடி உணவுண்டு முடிக்கையிலேயே களைப்பு மிகுந்து உடல் சரிவதை உணர்ந்தான். எழுந்து மஞ்சத்துக்கு செல்வதற்குள்ளாகவே தலைக்குள் துயில் நிறைந்து எண்ணங்கள் மயங்கி இடமும் காலமும் அகன்றன. வானிலிருந்து மண்ணுக்கு உதிர்வதுபோல் மஞ்சத்தில் விழுந்து புதைந்து புதைந்து செல்வதுபோல் இருளுக்குள் மறைந்தான். பின்பு விழிமணிகள் ஒளிரும் நாகங்கள் நிறைந்த ஆழ் உலகொன்றுக்குள் கால்களில் வேர்களென நாக வளைவுகள் தடுக்க, நாக நெளிவுகள் உடலெங்கும் வழுக்கி இறங்க, குளிர்ந்து நடுங்கியபடி சென்று கொண்டிருந்தான்.
மிகத்தொலைவில் மீண்டும் அக்குரலை கேட்டான். “இவ்வழி! ஆம் இவ்வழிதான்! இவ்வழி!” அவன் “யார் நீ?” என்று உரக்க கூவினான். இருளதிரும்படி அது நகைப்பது தெரிந்தது. “இது மிகக்குறுகலான வழி. ஆனால் வழிகளில் அண்மையானது இதுவே.” அவன் “யார்? யார்?” என்று கூவியபடி கால் தடுக்கி நாக உடலொன்றில் நிலையழிந்து விழுந்தான். நாகங்கள் அவன்மேல் அருவிகள்போல் பொழிந்து வளைத்துக் கொண்டன. நாக நெளிவுகளில் நீச்சலிட்டு எழுந்து கரைநீண்டிருந்த விழுதொன்றைப் பற்றி ஏறி அதுவும் ஒரு நாகம் என்று உணர்ந்து பிறிதொரு ஆலமரத்தை தழுவி அதன் கிளைகளில் ஏறி அதுவும் ஒரு பெருநாகமென்றுணர்ந்தான்.
மிக அப்பால் அக்குரல் “அணுகிவிட்டாய்” என்றது. “யார்? யார் அது?” என்று உரக்க கூவியபடி அவன் விழித்துக்கொண்டான். புலரி ஒளி சாளரத்தினூடாக உள்ளே விழுந்து கிடந்தது. எங்கிருக்கிறோம் என ஒரு கணம் திகைத்தபின் எழுந்து மஞ்சத்தை அறைந்து ஏவலனை அழைத்தான் “எவ்வளவு நேரமாயிற்று?” என்றான். “தாங்கள் நேற்று பிற்பகல் முதல் துயின்றுகொண்டிருக்கிறீர்கள் அரசே. தங்களை எழுப்ப வேண்டாமென்றார் அமைச்சர்” என்றான் ஏவலன். பாய்ந்து எழுந்து “நான் அரசரை பார்த்தாகவேண்டும், உடனே” என்றான் சிசுபாலன். “தெரிவிக்கிறேன்” என்றபடி ஏவலன் விரைந்தான். “என் நீராட்டறை ஒருக்குங்கள்… ஆடைகளை எடுங்கள்…” என்று அவன் இரைந்தான்.
நீராடி உணவுண்டு ஆடைகள் மாற்றிக்கொண்டு அவன் ஜயத்ரதனின் மந்தண அறைக்குச் சென்றபோது அங்கே அவன் அமைச்சர்கள் அனைவரும் இருந்தனர். உள்ளே நுழைந்து முகமன் சொல்லி ஜயத்ரதனை வணங்கியபின் பீடத்தில் அமர்ந்தான். அவன் பேசத்தொடங்குவதற்குள் ஜயத்ரன் “நேற்று அஸ்தினபுரியிலிருந்து விரிவான செய்தி வந்துவிட்டது” என்றான். “அதை தங்களுக்கு அறிவிக்கும் பொருட்டு இங்கு அமைச்சர் அனைவரையும் வரச்சொன்னேன். வந்திருப்பது பீஷ்மரின் ஆணை. அது என்னையும் கட்டுப்படுத்தும்.”
ஜயத்ரதனை நோக்கி மூச்சு சீறியபடி எழுந்து “என்ன சொல்கிறீர் சைந்தவரே?” என்றான் சிசுபாலன். “நான் கௌரவர்களின் உறவரசன். விதுரரின் ஆணை தெளிவாக உள்ளது. பீஷ்மரின் சொல் அஸ்தினபுரியை ஆள்கிறது. அதன் துணை அரசுகளையும் உறவரசுகளையும் ஆள்வது அதுவே. அதை மீறினேன் என்றால் நான் முதலில் படை நிறுத்தவேண்டியது அஸ்தினபுரிக்கெதிராக” என்றான் ஜயத்ரதன். “அமைச்சர்களும் அதையே சொல்கிறார்கள்.”
சிசுபாலன் “சிறுமை! இது சிறுமையின் எல்லை!” என்று குரல் உடைய கூச்சலிட்டான். “ஜயத்ரதரே, சைந்தவம் உங்கள் அரசு. இந்த மணிமுடி உங்களுடையது அல்லவா?” என்றான். “ஆம், என் அரசு என்னுடையதாக இருப்பதற்கு அஸ்தினபுரியே அடிப்படை. நீங்கள் அறிவீர்கள், என்னைச் சூழ்ந்திருக்கும் நாடுகள் என்னவென்று. அப்பால் இருக்கிறது காந்தாரம். கூர்ஜரன் இன்று வரை என்னை நண்பனாக ஏற்கவில்லை. சிபிநாடும் சௌவீரர்களும் என்னால் முன்பு வெல்லப்பட்டவர்கள். அஸ்தினபுரியுடனான குருதி உறவே இவர்கள் நடுவே என் கொடி தாழாது எழுந்து பறக்க வைக்கிறது.”
சிசுபாலன் நடுவே புகுந்து பேச கையெடுக்க ஜயத்ரதன் கையை ஆட்டி மறித்து “பொறுத்தருள்க சிசுபாலரே! அஸ்தினபுரியுடன் நிற்பதன்றி எனக்கு வேறு வழியில்லை. என் அமைச்சர்களும் சொல்வது அதுவே” என்றான். மீண்டும் சிசுபாலனை கையமர்த்தி “மகதரின் தழுவல் உங்கள் தோள்களில் இருக்கிறது என்றீர்கள். என் தோள்களிலும் அதுவே உள்ளது. அவருக்கு நான் செய்யும் கடன் ஒன்றுள்ளது, தருணம் வர காத்திருக்கிறேன்” என்றான்.
“காத்திருத்தல்! அது நாய்களின் வழி. நான் சிம்மம். என் பாதை தடைகளற்றது. எவருமில்லை என்றால் நானே சென்று பழி தீர்க்கிறேன்” என்று சிசுபாலன் திரும்பி வாயில்நோக்கி சென்றான். “அமருங்கள் சிசுபாலரே! நாம் பேசுவோம்” என்று ஜயத்ரதன் எழுந்து கை நீட்டியபடி பின்னால் வந்தான். “இனி எவரிடமும் பேசுவதற்கேதுமில்லை” என்றபின் அறைவிட்டு வெளியே சென்றான் சிசுபாலன்.
[ 9 ]
பன்னிருநாட்கள் புரவிமாற்றி பயணம் செய்து சிசுபாலன் விதர்ப்பத்தை சென்றடைந்தபோது உடல் மெலிந்து அடர்ந்த தாடிக்குள் வெறிமின்னும் செவ்விழிகளும் ஓயாது நெறிபடும் பற்களும் முறுகி நெளியும் கைவிரல்களுமாக பித்தனைப்போல் இருந்தான். கார்த்திகைமாதத்துக் குளிரில் வெட்டவெளியில் துயின்று அவன் முகமும் தோள்களும் சுட்ட கனியெனக் கன்றி கருமைகொண்டிருந்தன. வரதா ஐப்பசி மழையின் சேற்றுக்கலங்கல் குறையாது சுழித்தோடிக்கொண்டிருக்க மென்சதுப்பாகிக் கிடந்த குதிரைச்சாலையில் அவன் காற்றில் தளர்ந்து நீந்தும் வலசைப்பறவை போல சென்றான்.
விதர்ப்பத்தின் தலைநகர் கௌண்டின்யபுரியைச் சூழ்ந்து வரதாவின் புதுச்சேறு வற்றி அலையலையாக படிந்திருந்தது. அவ்வண்டலில் வெற்றிலையும் காய்கறிகளும் பயிரிடும் உழவர்கள் திரும்பிப் பறக்கும் தாடியுடன் புரவியில் விரைந்துசெல்லும் சிசுபாலனை வியந்து நோக்கினர். ஒளி பளபளத்த நீர்ப்பரப்பின் பகைப்புலத்தில் அவன் நிழல் என கடந்துசென்றான்.
கோட்டைவாயிலில் அவனது கணையாழியைக் கண்ட கோட்டைக்காவலன் மும்முறை அதை நோக்கிவிட்டு உள்ளே சென்று தலைவனை அழைத்துவந்தான். கணையாழியை மீண்டும் நோக்கிய தலைவன் “முனிவரே தாங்கள்?” என்றான். அவன் பொறுமையிழந்து கையசைத்து “நான் சேதி நாட்டரசன் சிசுபாலன்” என்றான். அதற்குள் உள்ளிருந்து வந்த முதிய காவலன் அவனை அடையாளம் கண்டு “அரசே… தாங்கள் இக்கோலத்தில்…” என்றபின் உள்திடுக்கிடல் ஒன்றை அடைந்து தலைவணங்கினான். “உங்கள் அரசரை நான் உடனே பார்க்க வேண்டும்” என்றான் சிசுபாலன்.
முதியதலைவர் “வருக அரசே!” என்று தலைவணங்கி அவனை அழைத்துச் சென்றார். சிசுபாலன் வருகையை அறிவிக்கும் முரசுகள் கௌண்டின்யபுரியின் கோட்டையில் முழங்கின. மழை முடிந்தமையால் கௌண்டின்யபுரியின் கற்பலகைக் கூரையிட்ட வீடுகள் அனைத்துக்கு மேலும் புதுமலர்களோடு செடிகள் அடர்ந்திருந்தன. படிப்படியாக ஏறிச்சென்ற நகரத்தின் ஏணிபோன்ற பாதையில் புரவியில் சென்று கொண்டிருந்தபோது “இங்கு இப்போதுதான் புதுவெள்ளவிழா முடிந்தது. அன்னையருக்கான விழவு அணுகுகிறது” என்றார் காவலர்தலைவர். சிசுபாலன் பற்களைக்கடித்து பேசவேண்டாம் என்று கைகாட்டினான். சொற்கள் அனைத்தும் கூரிய முள் போல் உடலைத் தொட நோய் கண்ட யானை போல் அவன் உடல் ஆங்காங்கே நடுங்கிக் கொண்டிருந்தது.
மாளிகை முற்றத்தில் அவனை எதிர்கொண்டழைத்த ருக்மி அவன் தோற்றத்தைக் கண்டதும் திகைத்தான். அருகே வந்து கைகளைப்பற்றிக்கொண்டு “சிசுபாலரே தாங்கள்…” என்றான். சிசுபாலன் “உன்னிடம் பேச வந்தேன். முறைமைகள் முகமன்கள் எதுவும் தேவையில்லை. இங்கேயே அமர்ந்து பேசுவதென்றாலும் அவ்வாறே” என்றான். ருக்மி “அவைக்கு வராது பேசலாகாது அரசே. உணவுண்டு இளைப்பாறுங்கள். பேசுவோம்” என்றான். “உணவும் இளைப்பாறலும் இப்போதில்லை. உன் சொல் கேட்ட பின்னரே இந்நகரில் நீர் அருந்துவதா என்று நான் முடிவெடுக்க வேண்டும்” என்றான் சிசுபாலன்.
ருக்மி “அரசே, நான் என்றும் தங்கள் நண்பன். சேதிநாட்டு அரண்மனையில் பல நாள் விருந்துண்டவன். என் நகரில் நீர்அருந்துவதில் உங்களுக்கென்ன தடை?” என்றான். “ஆம், அருந்துகிறேன். வரதாவின் நீரனைத்தையும் குடித்து வற்றச்செய்கிறேன். ஆனால் அதற்குமுன் உன் சொல் ஒன்று போதும்” என்றான் சிசுபாலன். “அதைக் கேட்காது என்னால் எதையும் உளம்கொள்ள முடியாது… சொல்! இப்போதே பேசிவிடுவோம்.”
அருகே நின்ற அணுக்கரை ஐயத்துடன் நோக்கிவிட்டு “வருக!” என்று ருக்மி சிசுபாலனை அழைத்துச் சென்று தன் அறைக்குள் நுழைந்தான். முன்னரே அங்கு இருந்த அமைச்சர்களும் படைத்தலவர்களும் அவைக்குள் நுழைந்த சிசுபாலன் தோற்றத்தைக் கண்டு திகைத்து ஒருவரை ஒருவர் நோக்கினர். அரியணைக்கு அருகே போடப்பட்ட பீடத்தில் அமர்ந்து கால் மேல் கால் வைத்து “எந்த முகமனும் தேவையில்லை. சொற்கள் சலிப்பூட்டுகின்றன. நான் கோர விழைவது ஒன்றே. இந்திரப்பிரஸ்தத்தின் மேல் படை கொண்டு செல்ல விதர்ப்பம் என்னுடன் துணை நிற்குமா?” என்றான்.
ருக்மி பேசுவதற்குள் தலைமை அமைச்சர் “சேதிநாட்டரசரே, விதர்ப்பம் இன்னும் முடி மாற்றம் செய்யவில்லை. பீஷ்மகரே இந்நாட்டின் அரசர். முடிவெடுக்கவேண்டியவர் அவரே” என்றார். சிசுபாலன் பாய்ந்தெழுந்து “அவ்வண்ணமெனில் நான் அவரிடம் பேசுகிறேன். படைபொறுப்பற்ற எவரிடமும் ஒரு சொல்லும் பேசுவதற்கில்லை எனக்கு” என்றான். “அமருங்கள் அரசே, நான் பேசுவதை மட்டும் கேளுங்கள். ஒருசில சொற்கள்தான்… கருணைகூர்ந்து என் உரையை கேளுங்கள். அமருங்கள்” என்று ருக்மி வேண்டினான்.
“உன் முடிவு என்ன? உன் தந்தைக்கு முன் எழுந்து நின்று என்னுடன் படை கொண்டு வருவதாக அறிவிக்க நீ சித்தமா? அதைமட்டும் சொல்” என்றான் சிசுபாலன். “சிசுபாலரே, இன்று பாரதவர்ஷத்தில் நிகழ்வதென்ன என்று தாங்கள் அறியாதிருக்கிறீர்கள். விடுவிக்கப்பட்ட ஷத்ரியர் அனைவரும் ராஜசூயத்திற்கு ஆநிரை அளித்துவிட்டனர். அர்ஜுனன் வடக்கும் பீமன் கிழக்கும் நகுல சகதேவர்கள் தெற்கும் தருமன் மேற்கும் அபிமன்யு வடகிழக்குமாக சென்று பாரதவர்ஷத்தின் அனைத்து அரசரிடமிருந்தும் ஆநிரையும் திரையும் பெற்றுக்கொண்டிருக்கிறார்கள்” என்றான் ருக்மி.
“இம்மாத இறுதிக்குள் ராஜசூயம் நிகழும். அதை தடுக்கும் வல்லமை உங்களுக்கோ எனக்கோ இல்லை. இன்று நம்முடன் இருப்பவர் மிகச்சிலரே. பாரதவர்ஷம் அவர்களின் காலடியில் விழுந்துவிட்டது. அதுதான் உண்மை” என்று சொன்ன ருக்மியைத் தடுத்து வெறிக்குரலில் “பாரதவர்ஷம் விழவில்லை மூடா! எண்ணிச் சில கோழைகள் விழுந்திருக்கிறார்கள். ஒரே ஒரு ஒரு ஷத்ரியன் வாளெடுத்து எதிர்நின்றால் இவர்கள் சரிந்திருக்க மாட்டார்கள்” என்று சிசுபாலன் ஓசையிட்டான்.
“சரியாதிருக்க வழியில்லை” என்றான் ருக்மி. அவனுக்கும் சினம் எழத்தொடங்கியது. “தனஞ்செயன் அந்தர்கிரி, வகிர்கிரி, உபகிரி என்னும் மலைநாடுகளை மூன்று நாட்களில் வென்றிருக்கிறான். உலூக நாட்டின் பிரஹந்தனை அரை நாளில் வென்றான். உலூகத்தைக் கடந்து சென்று மோதாபுரம் வாமதேவம் சுசங்குலம் என்னும் ஷத்ரியக் குறுநாடுகளை வென்றான். பஞ்சகர்ணத்தின் தலைநகர் தேவப்பிரஸ்தத்தில் அவன் நிலைகொண்டபோது அருகிலிருந்த அத்தனை நாடுகளிலிருந்தும் அரசர்கள் தங்கள் கன்றுகளுடன் பட்டத்து இளவரசர்களை அவனுக்கு அனுப்பிவைத்தனர்.”
“கனி உதிர்வது போல நாடுகள் அவன் கால்களில் உதிர்கின்றன. ஒரு வெற்றி பிற வெற்றியை உறுதி செய்கிறது. ஒவ்வொரு நாளும் அவர்கள் வெல்ல முடியாதவர்கள் என்னும் எண்ணம் பாரதவர்ஷத்தில் பரவுகிறது. அது அவர்களின் படை செல்வதற்கு முன்னரே சென்றுவிடுகிறது” என்று ருக்மி சொன்னான். “கேளுங்கள் அவர்களின் வெற்றிச்செய்தியை. சொல்லுங்கள் மாதவரே!” என்று அமைச்சரிடம் சொன்னான். மாதவர் “விதேகநாட்டு கண்டகர்களை பீமன் வென்ற செய்தி நேற்றுமுன்நாள் வந்தது. இன்று இதோ புளிந்த நாட்டின் ஒருவயிற்று அரசர்களான சுகுமாரன் சுமித்ரன் இருவரையும் வென்றதாக ஓலைவந்துள்ளது.”
படைத்தலைவரான கஜசேனர் “சகதேவன் செல்வதற்குள்ளாகவே சூரசேனரும் மச்சநாட்டரசரும் ஆகொடைக்கு ஓலை அனுப்பிவிட்டனர். நிஷாதர்களின் கோசிருங்கத்தை அவன் இன்று சென்றடைந்துள்ளான். அவன் செல்வதற்குள்ளாகவே அவர்கள் மலையை விட்டுவிட்டு ஓடிவிட்டனர். சகதேவனின் படைத்தூதன் தெற்கே கடல் எல்லைவரை சென்றதாகவும் சோழர்களும் பாண்டியர்களும் கூட ஆநிரை அளிப்பதாக ஒப்புக்கொண்டு ஓலையனுப்பியிருக்கிறார்கள் என்றும் செய்தி வந்துள்ளது” என்றார்.
பயிற்சி செய்து வைத்திருந்தவர்போல மாதவர் தொடர்ந்தார். “நகுலன் மேற்கே ரோஹீதக நாட்டு அரசர்களான மத்தரையும் மயூரரையும் வென்றான். சைரீஷத்தை வென்றபின் ஆக்ரோசன் ஆளும் மகோதத்தை நோக்கி சென்றுள்ளன அவன் படைகள்.” ருக்மி “இதுவரை இதைப்போல பாரதவர்ஷத்தில் நடந்ததில்லை. ஷத்ரியர் எங்கும் ஒன்றிணையவில்லை. அசுரரும் நிஷாதரும்கூட ஒருங்குகூடவில்லை. நேற்று ஒரு சூதன் இங்கு பாடினான், இருளில் வெடிக்கும் எரியம்பின் கதிர்கள் போல இந்திரப்பிரஸ்தத்தில் இருந்து பாண்டவர்கள் பாரதவர்ஷத்தில் பரவுகிறார்கள் என்று… இப்போது நாம் ஒன்றும் செய்வதற்கில்லை.”
வாள் காற்றைக்கிழிக்கும் ஒலியுடன் உறுமியபடி சிசுபாலன் எழுந்தான். “செய்வதற்கென்னவென்று நான் அறிவேன். அதை செய்கிறேன். விதர்ப்பரே, நீங்கள் என்ன இறப்பையா அஞ்சுகிறீர்கள்? அவ்வண்ணம் அவர்கள் வென்று செல்வார்கள் என்றால் அவர்கள் நேர் நின்று நெஞ்சுகொடுப்பதற்காவது இங்கே ஷத்ரியர் வேண்டாமா? யாதவ கீழ்மக்களிடம் எதிர்ப்பின்றி பணிந்தனர் ஷத்ரியர் என்றால் நமது கொடி வழிகள் நாணுவர்” என்றான். ருக்மி “ஆம், ஆனால்…” என்று சொல்ல சிசுபாலன் கையசைத்து “வஞ்சம் தீர்ப்பதெற்கென்று சிவருத்ரனிடம் ஏழு வரங்கள் பெற்று அனல் வடிவானவர் நீங்கள் என்று பாடியலைகிறார்கள் வீணர்களாகிய சூதர்கள். நீங்களோ இங்கு அமர்ந்து கணக்கு சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள்” என்றான்.
ருக்மி “நான் என் வஞ்சத்திற்க்காக இக்குடிகளை களம் நிறுத்த விரும்பவில்லை. என் தந்தையின் ஆணைக்கு அப்பால் இங்கிருந்து படைகளை கிளம்பவும் என்னால் முடியாது” என்றான். “நன்று. நான் கூரஜரத்துக்கும் மாளவத்துக்கும் செய்தியனுப்பியிருந்தேன். அவர்கள் அஞ்சிப்பின்னடைந்த போது எஞ்சிய உங்களிடம் மட்டும் ஒரு சொல் கேட்க வேண்டுமென்று எண்ணினேன். போதும், நிறைவுற்றேன்” என்றபடி திரும்பி நடந்தான் சிசுபாலன்.
“சிசுபாலரே, என் நகர் நுழைந்தபின் ஒரு வாழ்த்தும் சொல்லாமல், ஒரு வாய் நீரருந்தாமல் கிளம்புகிறீர்கள். இது நீங்கள் எனக்கிழைக்கும் பிழை” என்றான் ருக்மி. திரும்பிப்பாராமல் “என் குடிகள் இனி இந்நகரில் நீரருந்தாது” என்றபடி சிசுபாலன் கௌண்டின்யபுரியின் சிற்றவை விட்டு வெளி வந்தான். அரண்மனை முற்றத்தில் நின்றிருந்த தன் புரவியை நோக்கி சென்று ஒரே தாவில் அதன் மேல் ஏறி சவுக்கைச் சுழற்றி அதை அறைந்தான். பேய் கொண்டது போல அது கனைத்து குளம்புகள் தடதடக்க முற்றத்தைக் கடந்து நகர் தெருக்களில் இறங்கி அதன் படித்தட்டுகளினூடாக பாய்ந்து சென்றது.