திரிலோக சீதாராம் ஆவணப்படம் – அஸ்வத்

3

சென்ற  3.4.2016  அன்று  ரவி சுப்ரமணியன்  இயக்கிய  கவிஞர்  திருலோக  சீதாராம்  குறித்த  ஆவணப்  படத்தை  புதுதில்லி  தமிழ்ச் சங்கத்தில் காணும் வாய்ப்பு கிடைத்தது. ஒரு மணி நேரம் ஓடிய  இப்பபடத்தில்  கவிஞரின்  வாழ்க்கை  நிறையவும்,   கவிதைகள்  கொஞ்சமும்   பார்க்கக் கிடைத்தன.

 

கவிஞர்   தமிழ்க் கவிஞர்  என்றாலும்  தமிழ்ச் சூழலில்  வெகு ஜனப்   பிராபல்யம்  இல்லாதிருந்தவர்.  பாரதிக்குப்  பிறகு  தமிழில்  வந்த  கவிஞர்களில்  மிகவும்  முக்கியமானவர்.  அவரே   சொல்லிக்  கொண்டது போல்  பாரதியை  ஞானத் தந்தையாக   வரித்துக்  கொண்டவர். எழுத்துக்கும்  வாழ்க்கைக்கும்    முரண்பாடுகள்  இல்லாது பார்த்துக் கொண்டவர்.

 

1914ஆம் வருடம்  பிறந்த  இவர்  தெலுங்கைத்  தாய் மொழியாகக்  கொண்டவர்.   அத்யயனம்  செய்து  புரோகிதத்தை  மேற்கொள்ள  உத்தேசித்திருந்த  போது  இராமசாமிப் படையாச்சி  என்கிற  தமிழறிஞரிடம்  இவர்  பாடம்  கேட்க  நேருகிறது.  இராமசாமிப்  படையாச்சி  சைவ சித்தாந்த,  சைவத் திருமுறைகள்  ஆகியவற்றை  கதாகாலட்சேபம்  போல்  செய்கிறவர்.  இரண்டு கண்ணும்  தெரியாதவர்.  படையாச்சிக்குப்  பாடல்களை  உரத்துப்  படிக்கும்  பணியினூடே  இலக்கண  இலக்கியங்கள்  ஆழ்ந்து  அவரிடம்  கற்றிருக்கிறார்  கவிஞர்.

 

இதற்குப் பின்னர்  பல  பத்திரிக்கைகளிலும்  துணை ஆ சிரியராக  வேலை  பார்த்திருக்கிறார்.  கடைசியாக  கிராம ஊழியனில்  வேலை பார்த்தபிறகு  சொந்தமாக  அச்சகத்தையும்,  ‘சிவாஜி’  பத்திரிகையையும்  தொடங்கி  இருக்கிறார்.  பாஞ்சாலி  சபதத்தையும்  குடும்ப விளக்கையும்  (பாரதிதாசன்)  கதாகாலட்சேபம்  போல் செய்வாராம்.  அதற்குப்  பெரிய ரசிகர்  கூட்டம்  இருந்திருக்கிறது.  சந்தக் கவிதைகளில்  பெரிய நிபுணராக  விளங்கிய  இவர் கவிதைகள்  சொல்லும் பாங்கு  மிகவும்  பிரத்யேகமானது;  வசீகரமானது  என்கிறார்கள்.

 

வாழ்க்கையையும் இவர் கவித்துவமாகத்தான் அமைத்துக் கொண்டிருக்கிறார். தேவைக்கு ஏற்றவாறு அமைத்துக் கொண்ட லோகாயதமான வாழ்க்கை. தேவைகளை மிகவும்குறைவாக வைத்துக் கொண்டிருந்தார். ‘சக்கரம் நிற்பதில்லை’யில் இவரைப் பற்றி ஜெயகாந்தன் எழுதுகிறார். ‘கணுக்கால் வரைக்குமே வருகின்ற வேஷ்டி இவருக்கு எங்கு கிடைக்கிறது’ என்று. நான்கு பெண்களும் மூன்று பையன்களும், எல்லோருமே இவர் காலமாகும் வரைக்கும் அந்தக் காலத்து ஸ்டோர் எனப்படும் நெருக்கமான வீடுகளில் வாழ்ந்திருக்கிறார்கள். பொதுக் கழிப்பிடமும் சிறு அறைகளும் கொண்ட நெருக்கமான காலனி வீடுகள். இந்தக் காலத்தில் நினைத்தே பார்க்க முடியாது.

 

2

பாரதியைத் தன் ஞானத்தந்தை என்று அறிவித்துக் கொண்ட இவர், செல்லம்மா பாரதிக்கு உடம்பு சரியில்லை என்று தெரிந்து போட்டது போட்டபடி அவருக்குப் பணிவிடை செய்ய ஓடுகிறார். குடும்பம் எல்லாம் அப்புறம்தான்.  மூன்று மாதங்கள் ஊழியம் செய்தபின் செல்லம்மா பாரதி இவர் மடியில்தான் உயிர் விடுகிறார்.

கவிதை, கட்டுரை என்று எழுதிக் குவித்திருக்கிறார். கவிதைகளைப் படிப்பதை விட இவர் சொல்லிக் கேட்பதில்தான் ஆனந்தம் என்கிறார்கள் கேட்டவர்கள். அந்த நாட்களில் இலக்கியத்தில் பிரபல்யம் அடைந்திருந்த பலரும் இவரின் அத்யந்த நண்பர்கள். தி.ஜானகிராமன், எம்.வி. வெங்கட்ராம், சிட்டி, ஜெயகாந்தன், டி.என். ராமச்சந்திரன், ஸ்வாமிநாத ஆத்ரேயன் போன்ற பலரும் இதில் அடக்கம். அந்நாட்களில் இவர் தேவசபை அசுரசபை என்று திருச்சியில் நடத்துவது உண்டாம். தேவ சபையில் வேதங்களை பற்றியும் உபநிடதங்கள் பற்றியும் திருலோக சீதாராம் விளக்கவுரை நிகழ்த்துவாராம். வரவேற்புரை நன்றியுரை ஒன்றும் கிடையாது. கவிஞர் பேசி முடித்தும் எல்லோரும் கலைந்து விட வேண்டுமாம். அசுரசபை இதற்கு நேர் எதிர். எல்லோரும் எல்லாவற்றையும் பற்றிப் பேசிக் கொண்டிருப்பார்களாம். கவிஞர் கேட்க மட்டுமே செய்வாராம்.

இவையெல்லவற்றையும் தன் சொற்ப வருமானத்தில் செய்திருக்கிறார் கவிஞர். ஒருமுறை பாரதியின் மகள் சகுந்தலா பாரதி “என்ன இப்போ கொஞ்சம் வசதி கூடியிருக்கிறது போலிருக்கிதே” என்றாராம். அதற்குக் கவிஞர் “ஆமாம். அப்போதெல்லாம் ஐந்துக்கும் பத்துக்கும் பஞ்சம்; இப்போது ஐம்பத்துக்கும் நூறுக்கும்தான் தட்டுப்பாடு” என்றாராம் புன்னகையுடன்.

எல்லாப் பெரிய மனிதர்களிடமும் பழக்கம் வைத்துக் கொண்டிருக்கிறார். யாரிடமும் எந்தவித பேதமும் பாராட்டவில்லை கவிஞர். பாரதிதாசன் கவிதைகளில் இவருக்குப் பெரிய பிரேமை. கவிஞரின் கோபகுணம் எல்லோரும் அறிந்ததே. பாரதிதாசன் மணிவிழாவை திருலோக சீதாராம் பொறுப்பேற்று நடத்தியிருக்கிறார். அதற்கு இவர்கள் திருச்சியில் ஏற்பாடு செய்திருந்த விழாவிற்கு பாரதிதாசனால் வரமுடியாமற் போனதில் இருவருக்கும் மனத்தாங்கல்.

எப்படியும் வசூல் செய்த பணமுடிப்பை பாரதிதாசனிடம் கொடுத்துவிடலாம் என்று திருலோக சீதாராம் போயிருக்கிறார். அப்போது பாரதிதாசன் ஏதோ கோபாமாய் பேச இருவருக்கும் வாக்குவாதம் வந்துவிட்டது ஒரு கட்டத்தில் திருலோக சீதாராம் கோபமாக, “நீங்கள் எனக்குத் தேவையில்லை; நீங்கள் எழுதிய புத்தகங்கள் அனைத்தும் என்னிடம் இருக்கின்றன. அதுபோதும் எனக்கு” என்றாராம். உணர்ச்சிவசப்பட்ட கவிஞர் பாரதிதாசன் “இவன் தானடா தமிழன்; நான் வேண்டாம்; நான் எழுதிய புத்தகங்கள் போதும் என்கிறார் பார்” என்றாராம்!

ஜி.டி. நாயுடுவுடன் கவிஞரின் நட்பு மிகவும் தற்செயலாக நடந்திருக்கிறது கோயம்புத்தூரில் ஒருநாள் வீதியில் கவிஞர் சென்று கொண்டிருந்தபோது தற்செயலாக நாயுடுவின் அலுவலகம் கண்ணில் பட்டிருக்கிறது. அதில் நல்ல கொட்டை எழுத்துகளில் நாயுடுவை சந்திப்பதற்கு உண்டான விதிமுறைகள் எழுதப்பட்டிருந்திருக்கின்றன. ‘நன்கொடை கேட்கக்கூடாது; குடிக்கத் தண்ணீர் கூடக் கிடைக்காது’ போன்ற வித்தியாசமான அறிவிப்புகளை கவிஞர் கண்ணுற்று நாயுடுவைச் சந்திக்க வேண்டுமென்று கூறியிருக்கிறார்.

1

அதற்கு விண்ணப்பப் படிவம் வேறு, அதை பூர்த்தி செய்திருக்கிறார். சந்திக்க விரும்பும் காரணம் என்கிற இடத்தில் ‘சும்மா’ என்று குறிப்பிட்டுக் கொடுத்திருக்கிறார். சந்திக்க அனுமதி கிடைத்தது. “வீதியில் போய்க் கொண்டிருந்த மனிதனுக்கு மனக் கிலேசத்தை ஏற்படுத்துகிற மாதிரியான அறிவிப்புகளை வெளியில் வைத்திருக்கிறீர்களே… இது நியாயம் தானா? நான் வருகிறேன்” என்று கூறிவிட்டு கிளம்பி விட்டார் கவிஞர். இப்படி ஏற்பட்ட தொடர்பு ஜி.டி. நாயுடு மறையும் வரையில் நீடித்தது.

எப்படியென்றால், “யாரு ஜி.டி. நாயுடுவா? ஒரு பத்தாயிரம் ரூபா வேணுமே. யாரிடமாவது கொடுத்து அனுப்புங்கள” என்று உரிமையுடன் கவிஞர் கேட்கிற விதத்தில் இந்த நட்பு நீடித்தது. இதுபோன்ற நட்புகளையும் தொடர்புகளையும் பலரிடம் பேணியிருக்கிறார் கவிஞர். எல்லோரிடம சமரப் போக்கு. ஞானத்தேடலில் ஊறித் திளைத்த கவிமனம். வாழ்க்கையின் நுட்பச் சிக்கல்களை வேதாந்தமாய்ப் புரிந்து கெள்ளும் நோக்கு. இதே மனப்பான்மையுடன் 56 வருடங்கள் வாழ்ந்திருக்கிறார்.

ஒருமுறை என்.எஸ்.கிருஷ்ணன் அளித்த விருந்தில் உணவு அருந்தாமல் வெளியேறிய கி.வா. ஜகன்னாநாதன் போன்றோரை என்.எஸ்.கிருஷ்ணன் கடுமையாக விமர்சனம் செய்து பேசும்போது கரிச்சான்குஞ்சு நாத்திகர்களைக் கடுமையாக விமர்சனம் செய்து பதில் கொடுத்திருக்கிறார். அப்போது அங்கே இருந்த கவிஞர் “முன் காலங்களில் எப்படி இருந்தது; காலம் மாற மாற அந்தப் பழக்க வழக்கங்கள் எப்படி மாறி வருகின்றன” என்று வேதாந்த நோக்கில் பேசியிருக்கிறார். இருவரின் பேச்சுகளை சமநோக்கில் பாவித்து வேதாந்தமாகப் பேசிய அவர் பேச்சு சமரசத்துக்கு முன்னுதராணமாக விளங்குகிறது.

ஜெயகாந்தன் கதைகளைப் படித்துவிட்டு அவரால் கவரப்பட்டு சென்னை வரும்போதெல்லாம் அவரைக் கவிஞர் சந்திப்பதுண்டு. கவிஞர் மீது அளவற்ற மரியாதை வைத்திருந்தார் ஜெயகாந்தன். மணிக்கணக்கில் அவருடன் பேசிக் கொண்டிருப்பாராம். கவிஞரே “நேரம் ஆகிவிட்டது; கிளம்புகிறேன்” என்று வற்புறுத்தித்தான் கிளம்ப வேண்டியிருக்குமாம்.

4
ரவி சுப்ரமணியந் ஆவணப்பட இயக்குநர்

 

சித்தார்த்தாவைத் தமிழில் மொழி பெயர்த்திருக்கிறார் கவிஞர். அதை எழுதிய ஹெர்மன் ஹெஸ் இறந்தபோது ‘தாயாதி இறந்துவிட்டான்; தீட்டு உண்டு’ என்ற முழுக்கு போட்டுவிட்டு வந்தாராம் கவிஞர். தனிப்பட்ட கவி ஆளுமை என்றாலும் ‘வசுதேவக் குடும்பம்’ என்கிறார்களே, அதுபோல் பலரையும் அரவணைத்து வாழ்ந்தவர் கவிஞர்.

‘கவிஞர்கள் லோகாயத விஷயங்களைக் கவனிக்காது குடும்பத்தை நடுத்தெருவில் விட்டுவிடுவார்கள்’ என்கிற குற்றச்சாட்டு பரவலாக இருக்கிற சூழலில் தன் குடும்பத்தின் சொற்ப தேவைகளையும் கவனித்துக் கொண்டு, கவிமனமும் பழுதுபடாமல் காப்பாற்றிக் கொண்டு இலக்கியவாதிகள் என்றில்லாமல் சகல தரப்பினரிடமும் தொடர்புடன் இருந்து அரவணைத்து நிறைவான வாழ்க்கை வாழ்ந்த கவிஞர் ஒரு அதிசயப்பிறவி என்பதில் சந்தேகமில்லை.

‘உள்ளத்தில் கிடந்த உண்மையை ஏனோ உசுப்பிவிட்டாய்?’ என்று ஒரு கவிதையில் கேட்பார் கவிஞர், கவி தத்துவ உள்ளங்களை உசுப்பும் வேலையைச் செய்து கொண்டிருந்த கவிஞரைப் போன்ற தமிழில் போதிய கவனிப்பு பெறாத, இலக்கிய ஆளுமைகளை நினைவு கொள்வதென்பது நாம் நம் உட்கனல் அணையாது பார்த்து கொள்வது போன்ற உசுப்பி விடுதல் எனலாம்.

 

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 44
அடுத்த கட்டுரைபோப் ஆண்டவர் செய்ட்லுஸ்- ஐசக் பாஷவிஸ் ஸிங்கர்