பின் தொடரும் நிழலின் குரல் – அறம்

1

அறம் விக்கி

மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு,
வெகுசமீபமாக தங்களின் பின் தொடரும் நிழலின் குரல் நாவலை வாசித்தேன். உங்கள் படைப்புகளில் நான் வாசிக்கும் இரண்டாவது படைப்பு இது. முதலாவதாக நான் வாசித்த அறம் என்னுள் எவ்வளவு பாதிப்பை ஏற்படுத்தியதோ அதற்கு சற்றும் குறையாத பாதிப்புடனே பின் தொடரும் நிழலின் குரலையும் வாசித்து முடித்தேன். என்னளவில் ஒரு சிறந்த நாவல்\சிறுகதை\கதை என்பது முழுகவனம் செழுத்தி வாசிக்க விடாமல் வாசிக்கும் வரியை பற்றிய சிந்தனை உலகில் ஏகியவாறும், அதே நேரம் அடுத்த வரியை வாசிக்க தூண்டக் கூடியதாகவும் இருக்க வேண்டும்.பின் தொடரும் நிழல் வாசிப்பு முழுக்க நான் தொடர்ச்சியாக ஏகப்பட்டவாறும்,அடுத்த வரியை வாசிக்க தூண்டப்பட்டவாறுமே இருந்தேன்.

உன் தியாகங்கள் அனைத்தும் ஒரு நாள் அர்த்தமற்று போகும். உன் இலட்சியங்கள் காலம் எனும் கொடுந்தீயில் சாம்பலாகும்,நீ வெறுமை அடைவாய்.வெறுமை என்பது ஏதுமில்லா வெறுமையல்ல, நீயேயல்லா வெறுமை.. இதுவே பின் தொடரரும் நிழலின் குரல் என்னில் விட்டுச் சென்ற நிழல். நூலின் குறிப்புரையில் கூறியது போல் இது ஓர் இடதுசாரி அறிவினூடாக சோவியத் ரஷ்யாவின் வீழ்ச்சியை ஆராயும் நாவலெனினும், தனி மனித அறம் பற்றிய தேடல் நாவலின் முக்கிய தளங்களில் ஒன்றாகவே நான் கருதுகிறேன் அல்லது உணர்கிறேன். அறம் நாவல் வாசிக்கும் வரையில் “அறம்” என்பது எனக்கு வெறும் ஒரு வார்த்தை என்ற அளவிலேயே இருந்தது.ஆனால் வாசித்து முடிக்கையில் என்னுள் படிந்து கிடக்கும் அறத்தை நான் வைரமாக கண்டு கொண்டேன். அது போலவே பின் தொடரும் நிழலின் குரலும் என்னிள் மானுட அறம் பற்றிய சில சிந்தனைகளை விட்டுச் செல்கிறது.இக்கடிதம் அறம் மற்றும் பின் தொடரும் நிழலின் குரலை ஒப்பீடு செய்ய முயற்ச்சிப்பது போல் இருப்பினும், என் எண்ண ஓட்டங்களை பதிவு செய்வது அன்றி இதன் நோக்கம் வேறு அல்ல.

என்றும் அன்புடன்,

ம.கிருஷ்ணகுமார்

 

அன்புள்ள கிருஷ்ணகுமார்

பெரும்பாலான கருத்துருவங்களுக்குப் பின்னால் உண்மையே உள்ளது, அவை சிதறுண்ட உண்மைகள். அரை உண்மைகள். ஆகவே அவை பிற உண்மைகளுக்கு எதிரானவை. அவை ஆதிக்கம் கொள்ள விரும்புவது அப்பிற உண்மைகள் மேல் முழுவெற்றி அடைவதன் வழியால முற்றுண்மையாக தங்களை நிறுவிக்கொள்ளும்பொருட்டே.

ஆகவேதான் அவை வெறிகொள்கின்றன. அனைத்துவகையிலும் அடக்குமுறைத்தன்மைகொண்டவையாக தங்களை மாற்றிக்கொள்கின்றன. அழிவுச்சக்திகளாக ஆகின்றன. மீண்டும் மீண்டும் இதுவே மானுடவரலாற்றில் நிறுவப்பட்டுள்ளது. ஆனாலும் உண்மைக்கு எதிர்நிற்பது பொய் என்ற இருமைக்குள் நம் உள்ளம் இயல்பாகவே சென்றுவிழுவதனால் அது நமக்கு கண்ணில்படுவதில்லை, கருத்தில் நிற்பதுமில்லை

பின் தொடரும் நிழலின் குரல் எழுதிய நாட்களை நினைத்துப்பார்க்கிறேன். இப்போது வெண்முரசில் பன்னிருபடைக்களத்திலும் அதையே இன்னும் அடர்த்தியாக படிமங்களினூடாக சொல்லிக்கொண்டிருக்கிறேன்

 

ஜெ

 

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 43
அடுத்த கட்டுரைபோதி – சிறுகதை