[ 10 ]
ஜராசந்தன் மகதத்தின் செங்கோலை ஏந்தி அருகமைந்த நாடுகள்மேல் மேல்கோன்மை கொண்டபின்னர் ஒருநாள் தன் படைக்கலப்பயிற்சிநிலையில் அரசுத்துணைவர்களான விதர்பத்தின் ருக்மியும், சேதியின் சிசுபாலனும், பிரக்ஜ்யோதிஷத்தின் பகதத்தனும், புண்டரத்தின் வாசுதேவனும் சூழ கதை சுழற்றிக்கொண்டிருக்கையில் பெருந்தோளராகிய பகதத்தன் தன் கதையைச் சுழற்றி நெடுந்தொலைவுக்கு வீசினார். பின் ஒவ்வொருவரும் கதையை சுழற்றிவீசி விளையாடினர். “உங்கள் முறை மகதரே” என்றான் சிசுபாலன். ஜராசந்தன் தன் கதையைத் தூக்கி வீச அது பெருமதிலைக் கடந்து அப்பால் சென்று குறுங்காட்டில் விழுந்தது.
அச்செய்தியை அன்று அவையில் பாடிய சூதராகிய வராகர் “ஆரியவர்தத்தின் ஐம்பத்தாறு நாடுகளிலும் சென்று விழுந்தது அந்த கதாயுதம். அதை அசைத்து எடுத்து திருப்பிவீசும் வல்லமை எவருக்குமிருக்கவில்லை” என்று பாடினார். அவையிலிருந்த அரசர்கள் நகைத்தனர். அந்நகைப்பில் கலந்துகொண்டு தானும் நகைத்த ஜராசந்தனின் சிறியவிழிகள் சற்றே சுருங்கின. அன்று மாலையே தன் படைத்தலைவர்களான ஹம்சனையும் டிம்பகனையும் அழைத்து அந்த கதாயுதத்தை தேரிலேற்றி படைகளுடன் தன்னைச் சூழ்ந்த நாடுகளுக்கெல்லாம் கொண்டுசெல்ல ஆணையிட்டான்.
கதாயனம் என்று புலவர் அழைத்த அப்பயணம் நான்காண்டுகாலம் நடைபெற்றது. அதன் பொருளென்ன என்று அனைவரும் அறிந்திருந்தாலும் அது ஒரு விளையாட்டு எனக் கொண்டு நகையாடியபடி திறைசெலுத்தி திருப்பியனுப்பினர். சூழ்ந்திருந்த நாடனைத்தும் மகதத்திற்கு அடிப்படுவதை பிற ஷத்ரியர் திகைப்புடன் நோக்கியிருந்தனர். முதலில் மகதம் நுழைந்த நாட்டில் அரசமாளிகை எரிக்கப்பட்டது. அரசகுலத்தவர் முற்றாக கொன்றொழிக்கப்பட்டனர். கோட்டைகள் யானைகளால் இடித்து அழிக்கப்பட்டன. கருவூலம் சூறையாடப்பட்டது. பன்னிருநாட்கள் நடந்த எரிபரந்தெடுத்தலில் முனிவரும் அந்தணரும் கவிஞரும் சூதரும் சிற்பியரும் மட்டுமே உயிரும் மதிப்பும் அளிக்கப்பட்டனர். பெண்டிருக்கு சிறுதீங்கும் நிகழலாகாதென்று ஜராசந்தனின் ஆணை இருந்தது.
மழைக்குமுன் குளிர் என அச்சம் ஜராசந்தனின் படைகளுக்கு முன் சென்றது. உள்ளம் தோற்கடிக்கப்பட்ட படைகளின் உடல்களை அரிந்து வீழ்த்தினர் ஹம்சனும் டிம்பகனும். ஒவ்வொருநாளும் பலநூறுபேர் கழுவிலேற்றப்பட்டனர். கழுவிலமர்ந்து கதறுபவர்களின் நடுவே மஞ்சம் அமைத்துத் துயில்பவர்கள் அவர்கள் என்று சூதர்களின் சொல் பரவியது. மனித உடல்களை நெடுகப்போழ்வதில் அவர்களுக்கு பேருவகை இருந்தது. எடைமிக்க பெருவாளால் இரண்டாக வெட்டப்பட்டனர் எதிரிகள். யானைகளிலும் குதிரைகளிலும் இருகால்களும் விரித்துக்கட்டப்பட்டு இரண்டாக கிழிக்கப்பட்டனர். விசைமிக்க ஆழிகளால் நடுவே உடைத்து அகற்றப்பட்டனர். அவர்களை எண்ணியபோதே உடல்பிளக்கும் உணர்வை அடைந்தனர் அரசர்கள்.
ஒற்றைவீழ்வென ஷத்ரியகுலங்கள் மகதத்தின் முன் தாள்மடிந்ததை எண்ணி திகைத்தனர் பிற பேரரசர்கள். “அரசே, இடிந்துவிழுவது பெரிய கட்டடம் என்றால் இடிதலே மேலும் இடித்தலை நிகழ்த்தும். பெரிய அமைப்புகள் தங்களை உடைத்துக்கொள்ளும் விழைவு கொண்டவை. ஏனென்றால் பிரிதலே பருப்பொருளின் தன்னியல்பு” என்றார் கோசல மன்னனின் அவையில் கௌசிக குலத்து அந்தணராகிய பிரபாகரர்.
எதையும் செய்யக்கூடியவன் என்று அறியப்பட்ட அரக்கிமகனிடம் போர் தொடுக்கலாகாது என அவர்களின் அமைச்சர்கள் அவர்களை எச்சரித்தனர். “ஒவ்வொரு நிலமும் ஒவ்வொரு காலமும் தனக்கென ஓர் அரக்கனை உருவாக்கி எடுக்கிறது அரசே. அது மண்ணிலுள்ள ஒரு நிலையியல்பு. அதன் வெளிப்பாடென ஒரு மனிதனை அது கண்டடைகிறது” என்றனர். “அவ்வரக்கன் தன் அரக்கத்தன்மையாலேயே பிற அரக்கர்களை கவர்கிறான். அரக்கர்களுக்கு அமைவதுபோல் அர்ப்பணிப்புள்ள அணுக்கரும் அடிப்படையினரும் பிறருக்கு அமைவதில்லை.”
“அப்படியென்றால் என்னதான் செய்வது? வெல்லட்டும் அவன் என இங்கு வாளாவிருப்பதா?” என்றான் பாஞ்சால மன்னன் துருபதன். “எழுவதுபோல் அது அடங்கவேண்டும் என்பதே புடவியின் நெறி. எழுவது அடிப்படைவிசை என்பதனால் அதனுடன் போர்புரிபவன் அழிவான். அது விழுவதும் அடிப்படைநெறி என்பதனால் அதைத் தடுக்க தெய்வங்களாலும் ஆகாது” என்றார் துர்வாசர். “முட்டக்கொழுக்கும் விலங்கு தெய்வங்களுக்குரிய இனிய பலி என்று சொல்லப்படுவதுண்டு. அக்காளை அன்னைக்குரிய கொடை.”
ஜராசந்தனின் கதாயுதம் நாடுகள்தோறும் சென்றுகொண்டிருந்தபோதுதான் மதுராவில் கம்சனை மதுவனத்து யாதவர் இருவரும் மற்போரில் கொன்றனர். கம்சனின் துணைவியரான ஆஸ்தியும் பிராப்தியும் கண்ணீருடன் ராஜகிருஹத்தை வந்தடைந்தனர். தன் மகள்கள் அடைந்த சிறுமையால் கொந்தளித்த ஜராசந்தன் ஹம்சனுக்கும் டிம்பகனுக்கும் மதுராவை வெல்லும்படி ஆணையிட்டான். அவர்களின் படைத்துணைவனாகிய ஏகலவ்யன் படைகொண்டுசென்று மதுராவை அழித்தான். யமுனையை கடந்துசென்று மதுவனத்தையும் எரித்தான்.
ஆனால் யாதவகுடிகளைத் திரட்டி அஸ்தினபுரியின் படைத்துணைகொண்டு வந்த இளைய யாதவர் மீண்டும் மதுராவை வென்றார். அவர் தந்தை வசுதேவர் மதுராவின் அரசனானார். ஜராசந்தனின் கதை மீண்டும் மதுரா நோக்கி சென்றது. படைகொண்டு வந்த பலராமர் அதை யமுனைக்கரையின் கோமஸ்தகம் என்னும் குன்றருகே தடுத்து சிதறடித்தார். பதினைந்து முறை மதுராவின் எல்லைகளைத் தாக்கிய கதாயுதம் தடுக்கப்பட்டது. ஜராசந்தன் வெறிகொண்டு ஹம்சனை அறைந்தான். டிம்பகனை எட்டி உதைத்தான். “இழிமகன்களே, உங்களால் இயலாதென்றால் உரையுங்கள். நான் வெல்கிறேன்” என்றான். “எளிய யாதவர். கன்றோட்டி காட்டில் வாழும் கீழ்மக்கள். அவர்களிடம் தோற்குமென்றால் மகதம் அழிவதே மேல்.”
“அரசே, இம்முறை வென்று மீள்வோம். இல்லையேல் திரும்பமாட்டோம்” என்று வஞ்சினம் உரைத்து ஹம்சனும் டிம்பகனும் கிளம்பிச்சென்றனர். பன்னிரு கால்படைப்பிரிவுகளும் எட்டு புரவியணிகளும் ஏழு களிற்றுநிரைகளும் வில்லவர் தேர்களும் மதுரா நோக்கி சென்றன. மதுராவின் எல்லையில் அப்படைகளை பலராமர் சந்தித்தார். போரில் யாதவர் சிதறியோடினர். நெய்யூற்றி காடுகளை எரித்து புகைசூழச்செய்து நீர்நிலைகளில் நஞ்சுகலக்கி கடக்கமுடியாததாக ஆக்கி மதுராவுக்கு மீண்டார்.
வசுதேவரின் அச்சம் நிறைந்த ஓலை கண்டு துவாரகையிலிருந்து இருந்து இளைய யாதவர் மதுராவுக்கு வந்தார். “நாம் எண்ணமுடியா பெரும்படை, இளையவனே. மதுராவை கல்மேல் கல்லின்றி அழிக்கும் வஞ்சினம் உரைத்து வந்துள்ளது” என்றார் பலராமர். “நாம் இயற்றக்கூடுவது ஒன்றே. அஸ்தினபுரியின் படைத்துணை இன்றி நாம் இவர்களை வெல்லல் இயலாது.”
தன் கைகளை கட்டியபடி யமுனையை நோக்கி நின்ற இளைய யாதவர் “அஸ்தினபுரியில் அத்தையும் பாண்டவரும் இல்லை, மூத்தவரே” என்றார். “அவர்கள் எங்கிருக்கிறார்கள் என்றும் எவரும் அறியக்கூடவில்லை. அவர்களை கண்டடைந்தாலும் அவர்களால் ஆகக்கூடுவதொன்றில்லை.” பலராமர் “நான் சென்று துரியோதனனிடம் கோருகிறேன். என் சொல்லை அவனால் தட்டமுடியாது” என்றார். “மூத்தவரே, அரசு துரியோதனரிடம் இல்லை. விழியிழந்த அரசரிடம் உள்ளது.” சற்றுநேரம் விழியிமைக்காமல் நோக்கியபின் “ஆம், பிறர்காலில் நாம் நடக்கமுடியாது” என்றார் பலராமர். “போரிடுவோம், மடிவதும் வீரருக்கு உகந்ததே.”
“மடிவதற்காக நாம் நம் குடிகளை இத்தனை தொலைவுக்கு இழுத்துவரவில்லை” என்றார் இளைய யாதவர். “எளிய கன்றோட்டிகளாக அவர்கள் வாழ்ந்திருக்கலாம். அரசக்கனவை அவர்களுக்கு ஊட்டினோம். இனி பின்னகர்வதற்கு இடமில்லை. நாம் வென்றே ஆகவேண்டும்.” அவர் குரல் உணர்வெழுச்சி கொண்டது. “மூத்தவரே, கார்த்தவீரியர் தோற்ற இடம். காலமெல்லாம் நாம் தோற்றுக்கொண்டே இருக்கும் இடம். நாம் வெறும் யாதவர் அல்ல. ஏணியில் முதலில் செல்பவர். நாம் விழுந்தால் பின்ஏறுபவர் அனைவரையும் சரித்துவிடுவோம்.” பலராமர் தோள்தளர்ந்து “ஆம்” என்றார். “நாம் வெல்வோம். ஏனென்றால் வென்றேயாகவேண்டும்” என்றார் இளைய யாதவர்.
“இன்று நாம் வெல்லவேண்டியவர்கள் ஹம்சனும் டிம்பகனும்தான், இளையோனே” என்றார் பலராமர். “வற்றாத கொலைவெறியால் நிகரற்ற வல்லமை கொண்டவர்கள். கொலையை விரும்பத்தொடங்குபவனை நோக்கி பாதாள தெய்வங்கள் வந்து சூழ்கின்றன. அவன் படைக்கலங்கள் ஒளிகொள்கின்றன. நான் கம்சனின் வாளை ஒருநாள் கையிலெடுத்துப் பார்த்தேன். அதன் ஒளி என்னை அச்சுறுத்தியது. அது உருவற்று நின்றிருக்கும் குருதிவிடாய்கொண்ட விலங்கொன்றின் நெளிநாக்கு என்று தோன்றியது.” இளைய யாதவர் “இரண்டியல்புகளால் ஆனவன் அரசன். அவன் தன் ஒற்றை இயல்பை மட்டும் எடுத்து இவர்களை அமைத்துள்ளான்” என்றார்.
கிரிவிரஜத்தின் முதல்மலையான விபுலத்தில் பிறந்தவன் ஹம்சன். வராகமலையில் டிம்பகன் பிறந்தான். ஹம்சன் பிறப்பிலேயே வலதுகையும் காலும் மட்டும் செயல்கொண்டவனாக இருந்தான். சொல்லிலும் சித்தத்திலும் வலப்பக்கம் மட்டுமே அவனுக்கிருந்தது. டிம்பகன் இடப்பக்கம் மட்டும் கொண்டிருந்தான். போர்த்தொழில் பயின்று படைநடத்தும் குடியில் பிறந்த அவ்விருவருமே பிறர் உதவியின்றி நடக்கவும் முடியாதவர்களாக இருந்தனர். செயலற்ற ஊன் தடிகள் என்றே அக்குடிகளால் எண்ணப்பட்டனர். அன்னையரின் கருணையால் அவர்கள் உணவுண்டு உயிர்வாழ்ந்தனர்.
மகதத்தின் இளவேனில் விழவொன்றில் அன்னையால் அழைத்துச்செல்லப்பட்ட சிறுவனாகிய ஹம்சன் அங்கிருந்த காளிகோயில் ஒன்றின் திண்ணையில் விடப்பட்டான். அருகே டிம்பகனின் அன்னையும் அவனை விட்டுச்சென்றிருந்தாள். இரு உடல்களும் ஒன்றை ஒன்று கண்டுகொண்டன. அன்னையர் மீண்டு வந்தபோது தோள்கோத்து ஒற்றை உடலென்றாகி துள்ளி அலைந்து விளையாடிக்கொண்டிருந்த ஹம்சடிம்பகர்களை கண்டனர். அன்னையர் அவர்களக் கண்டு அறியாத அச்சமொன்றால் பீடிக்கப்பட்டு நெஞ்சை அழுத்தி விழீநீர் விட்டனர். பின்னர் பேருவகை ஒன்றால் கிளர்ந்தெழுந்து ஓடிச்சென்று அவர்களை தழுவிக்கொண்டனர்.
அவர்கள் ரம்பகரம்பர்களின் மறுபிறப்பென்று நிமித்திகர் சொன்னார்கள். அவர்களின் தந்தை ஒருவரே என்று குலம் கண்டடைந்தது. ஓருடலான இருவர் அதன்பின் ஒவ்வொருநாளும் படைக்கலப்பயிற்சிகொண்டு மேலேறினர். அவர்கள் முன் நின்று வில்குலைக்கும் திறன் கொண்ட எவரும் மகதப்பெருங்குடிகளில் இருக்கவில்லை. ராஜகிருஹத்தை ஜராசந்தன் வென்றபோது அவர்கள் அவனுடன் சேர்ந்துகொண்டனர். அவன் முதன்மைப்படைத்தலைவர்கள் ஆனார்கள். பாரதவர்ஷத்தின் நாடுகளை அவன் பொருட்டு அவர்களே படைநடத்தி வென்றனர்.
யாதவகுடிகளின் எல்லையைச் சூழ்ந்திருந்த மகதத்தின் படைகளுடன் மதுராவின் படைகள் நாளும் சிறுபூசல்களில் ஈடுபட்டிருந்தனர். அஸ்தினபுரியின் படைத்துணை வருமா என்றறிய ஹம்சடிம்பகர் காத்திருந்தார்கள். யாதவர்களின் குடிகளைத்திரட்ட முடியாமையை மறைத்துக்கொண்டு அஞ்சிய விலங்கின் சிலிர்த்த மயிரும் சீற்றமும் காட்டி மதுரா பதுங்கியிருந்தது.
ஒருநாள் எல்லையில் நிகழ்ந்த போரில் மகதத்தின் சிறுபடைத்தலைவனாகிய ஹம்சனை பலராமர் கொன்றார். அவரது கதைபட்டு தலைசிதறிக்கிடந்தவன் எவன் என்று அறியாத பலராமர் படைக்களச்சூதன் ஒருவனிடம் அவனைப்பற்றி கேட்டார். “பிருங்கபேரத்தின் சிற்றரசனும் வீதபயன் மைந்தனுமாகிய இவன் பெயர் ஹம்சன்” என்றார் சூதர். “சிறுகுடி ஷத்ரியன். கோசலத்தின் சிற்றரசன். மகதத்துடன் இணைந்துகொண்டவன்.”
அதைக் கேட்டுநின்ற இளைய யாதவர் வேதம் திகழும் பொய்யற்ற நாவுகொண்டவரான சாம்யகர் என்னும் வைதிகரை களத்திற்கு அழைத்துவந்தார். இறந்தவனுக்குரிய ஈமக்கடன்களை கூட்டிக்கொண்டிருந்தனர் எரிகூட்டுநர். அப்போது சூதன் ஹம்சனின் போர்த்திறனை பாடிக்கொண்டிருந்தான். “வைதிகரே, நீர் ஹம்சனின் உடலை கண்களால் பார்த்தீர் அல்லவா?” என்றார் இளைய யாதவர். “ஆம்” என்று அவர் சொன்னார். “அங்கே யமுனாமுகத்தில் படைநிலைகொண்டிருக்கும் டிம்பகன் என்னும் படைத்தலைவனிடம் இச்செய்தியை சொல்லும்” என்று சொல்லி இளைய யாதவர் அவரை அனுப்பிவைத்தார்.
யமுனாமுகத்தில் ஆற்றின் கரையில் படைநிலைகொண்டிருந்த டிம்பகனை புலரிப்பொழுதில் சென்றடைந்தார் சாம்யகர். வணங்கி முகமனுரைத்து செய்தி என்ன என்று வினவிய டிம்பகனிடம் “படைத்தலைவரே, ஹம்சன் மறைந்த செய்தியை சொல்லும்படி வந்த அந்தணன் நான்” என்றார். திகைத்து நின்ற டிம்பகன் உரக்கக் கூவியபடி அவரை அணுகினான். “இந்த நீரைத் தொட்டு ஆணையிடுக” என்றான்.
கள்ளமற்ற முகத்துடன் சாம்யகர் “ஆணை! நான் ஹம்சனின் உடலை கண்டேன்” என்றார். நரம்பொன்று சுண்டி இழுக்கப்பட்டு துடித்து டிம்பகனின் வலதுகையும் காலும் தளர்ந்தன. அவன் உடல் நடுங்கி அதிர்ந்தது. வாய் கோணலாகி உமிழ்நீர் வழிய, விழிகள் திசைவிலகி நோக்கு குலைய அவன் தள்ளாடினான். இருமுறை கைகளை ஆட்டி ஏதோ சொல்லவந்தபின் திரும்பி இடக்காலால் உந்தி தாவி யமுனையில் விழுந்து நீர்க்குமிழிகள் கொப்பளித்தெழ மூழ்கி மறைந்தான். ஓடிவந்த படைத்துணைவர் கூச்சலிட்டபடி நீரில் பாய்ந்து மூழ்கி அவனை துழாவினர். அடிப்பெருக்கு நிறைந்த யமுனை அவனை திருப்பியளிக்கவில்லை.
கோபுச்சம் என்னும் யாதவச்சிற்றூரில் படையுலா சென்றிருந்த ஹம்சன் டிம்பகன் இறந்த செய்தியை தூதன் சொல்லி அறிந்ததுமே இடப்பக்கம் இடிந்து சரிந்து விழுந்தான். வாய்கோணலாகி கைகள் இழுத்தசைந்துகொண்டிருந்த அவனை பல்லக்கிலேற்றி யமுனை கரைக்கு கொண்டுவந்தனர். “எங்கே?” என்று ஹம்சன் கேட்டான். “இங்கேதான், படைத்தலைவரே” என்றனர் படைத்துணைவர். குளிர்கொண்டவன் போல நடுங்கியபடி கிட்டித்த பற்களுடன் அங்கே தன்னையும் வீசும்படி ஹம்சன் செய்கையால் ஆணையிட்டான்.
அவர்கள் கண்ணீருடன் தயங்கி நிற்க “வேறுவழியில்லை. இது என் ஆணை!” என்றான். அவர்கள் அவ்விணையை நன்கறிந்திருந்தனர். ஒருவரின்றி ஒருவர் வாழமுடியாதவர்கள். அவ்விரு உடல்நடுவே பெண்ணென்றோ மைந்தென்றோ எவரும் நுழைந்ததில்லை. அவ்விரு உள்ளத்தினூடாக தெய்வம் கடந்ததில்லை. ஒருபாதி துயில மறுபாதி விழித்திருக்க எப்போதும் படுக்காது வாழ்ந்த உடல். ஒருபாதி சினக்க மறுபாதி சிரிக்க உணர்வுகளை வென்ற உள்ளம். ஒருபாதி பேச மறுபாதி நோக்க எதிர்நிற்கமுடியாத சித்தம்.
அவர்கள் அவனை அதே இடத்தில் யமுனையில் வீசினர். மூன்றுநாட்களுக்குப்பின் ஹம்சனின் உடலுடன் பிணைந்த டிம்பகனின் உடல் நாணல்புதர் ஒன்றில் மகதவீரர்களால் கண்டெடுக்கப்பட்டது. தயங்கிக்குழம்பிய மகதத்தின் படைகளை மூன்று திசைகளிலிருந்தும் இளைய யாதவரும் பலராமரும் வசுதேவரும் சூழ்ந்து தாக்கினர். சிதறி ஓடிய மகதப்படைகள் பின்பு மீளவில்லை. கதைப்படை நின்று திரும்பிய ஊரை கதாவசானம் என்று யாதவர் அழைத்தனர். அங்கே யாதவர்களின் காவல்கோட்டம் ஒன்று அமைக்கப்பட்டது.
படைகொண்டு மீண்டு வந்து யாதவரை வெல்ல ஜராசந்தன் வஞ்சினம் உரைத்து நாகருத்திரனின் ஆலயத்தில் வைத்து பூசெய்து எடுத்த கங்கணம் ஒன்றை கட்டிக்கொண்டான். ஆனால் அஸ்தினபுரியில் பாண்டவர் மீண்டுவந்தனர். மதுரா விரிந்து பரவியது. துவாரகை பெருகி எழுந்தது. ஆயினும் ஆண்டுதோறும் தன் கங்கணத்தை மீளுறுதிசெய்து ஜராசந்தன் கட்டிக்கொண்டிருந்தான்.
யாதவநிலமும் அஸ்தினபுரியும் அதன் துணைநிலங்களும் அன்றி பிற நாடுகளனைத்தும் ஜராசந்தனுக்கு அடங்கியவை ஆகின. எழுபத்தெட்டு நாட்டின் குருதி படிந்த அரசக் கொடியுடன் கதாயுதம் மகதத்திற்கு திரும்பி வந்தது. அதை தன் கோட்டைவாயிலில் கட்டப்பட்ட சிற்றாலயத்தில் பீடத்தில் நிறுத்தி மக்கள் வழிபடவேண்டுமென ஆணையிட்டான். ‘மகாபுஜம்’ என்ற தெய்வமாக அது ஆகியது. அதை மகதத்தின் காவல்தெய்வம் என்று ஏத்தினர் சூதர்.
[ 11 ]
மகதத்திலிருந்து கிளம்பிய பூர்வகௌசிககுலத்து வைதிகர் நாடெங்கும் சென்று நாகவேள்வியின் செய்தியை பரப்பினர். “நஞ்சென்பது சீர்கெட்ட உணவே. அரசர்களே, சிதைந்த வேதம் இருளின் ஒலி” என்றனர். மகதத்தின் சிற்றரசர்கள் நடுவே சினமெழுந்தது. அவர்களில் ஷத்ரியர் அதை தங்களுக்குள் சொல்லிச்சொல்லி குமுறினர். ஷத்ரியர் அல்லாதோர் மேலும் ஷத்ரியத்தன்மைக்கென நோற்பவர்கள் என்பதனால் அவர்கள் மேலும் குமுறினர். மண்ணுக்கடியில் அனல் என அச்சினம் அவர்களுக்குள்ளேயே வாழ்ந்தது.
ஜராசந்தன் மீதான அச்சம் அவர்களை கட்டுக்குள் நிறுத்தியது. ஒவ்வொரு மழைவிழவுக்கும் அவர்கள் தங்கள் அரச உடையணிந்து வாளேந்தி அடையாளவில்லை பல்லக்கிலேற்றி ஊர்வலமாக மகதத்திற்கு கொண்டுவந்தனர். ராஜகிருஹத்தின் வாயிலில் அமைந்த மகாபுஜத்தின் முன்னால் அவ்விற்களை வைத்து தலைவணங்கி வாள் உருவி நிலம்தொட்டு வஞ்சினம் உரைத்தனர். நாகருத்திரனின் ஆலயமுகப்பில் நிகழும் நாகவேள்வியில் அமர்ந்து அனல் வணங்கி அவிமிச்சம் உண்டனர். பன்னிரண்டாவது நாள் ஜராசந்தனின் அவையில் அமர்ந்து அவன் அளிக்கும் முறைவரிசைகளையும் பரிசில்களையும் பெற்று மீண்டனர்.
இந்திரப்பிரஸ்தத்தின் எழுச்சி அவர்களை மீண்டும் ஷத்ரியர்களென உணரச்செய்தது. பதினெட்டு ஆண்டுகாலம் நிகழ்ந்தவை அனைத்தையும் அவர்களில் எவருமே அறியாதவர்கள்போல அன்று நிகழ்ந்ததை அறிந்தவர் என சினம் கொண்டனர். “வேதம் அமுதாலானது. நாகவேதம் நஞ்சாலானது” என்றார் பாண்டர நாட்டு அரசர் வக்ரதந்தர். “அது ஒலித்தால் நம் நகரங்களுக்கு அடியில் இருந்து நச்சுச்சுருள்கள் படம்கொண்டு எழும்.”
“ஆம், நம் நாடும் நகரும் மாநாகங்களுக்கு மேல் இருக்கும் சிறு பொருக்குகளே என்றறிக! துயிலும் நஞ்சை நாகவேதமெனும் மகுடி ஊதி எழுப்புகிறான் மகதத்தின் அரக்கன். நாம் அழிவது திண்ணம்” என்றார் மிதிலையின் அரசராகிய பிரபாதத்தர். மகதத்தின் சிற்றரசர்கள் திரிகர்த்த நாட்டின் எல்லையில் அமைந்த சாரதாசலம் என்னும் சிறுமலையில் எவரும் அறியாது ஒன்று கூடியிருந்தனர். “ஷத்ரிய மன்னர்களுக்கு கப்பம் அளித்தபோது நமக்கு குலமும் புகழும் எஞ்சியிருந்தது. நாகவேதம் ஒலிக்கும் மண்ணில் இனி நம் மூதாதையரும் வாழமாட்டார்கள்” என்றார் மச்சநாட்டு சூரசேனர்.
“அதை நாம் அரசரிடம் சொல்லியாகவேண்டும்” என்றார் சால்வசேனர். “அரசன் அல்ல, இனி நம் எதிரி” என்று உரக்க குரல்கொடுத்தான் நாசிகேயநாட்டின் அபிமன்யூ. அக்குரல் அனைவரையும் அச்சுறுத்தி அமைதியடையச் செய்தது. சில பீடங்கள் மெல்ல முனகின. “நாம் சொல்லெடுப்பது எளிது” என எவரோ சொல்ல அது யாரென விழிகள் திரும்பி நோக்கின. சொன்னவர் முகக்குறி காட்டவில்லை. எனவே அச்சொற்கள் தெய்வச்சொற்கள் என எடைகொண்டன.
“நம் வில் செல்லாது அங்கே வேள்வி எழமுடியாது” என்று அபிமன்யூ மீண்டும் குரலெழுப்பினான். “என் வில் செல்லாது. ஆண்மைகொண்டவர் இருப்பின் என்னுடன் இணைக!” சற்று நேரம் கழித்து மல்லநாட்டரசன் சுதேவன் “நாம் எத்தனைபேர்?” என்றான். அபிமன்யூ “ஷத்ரியர்கள் மட்டும் எழுபத்திரண்டு பேர். கிராதர்களும் அசுரர்களுமாக மேலும் எண்பது பேர் உள்ளனர்” என்றான். சூரசேனர் “அவர்கள் நம்முடன் இணைவார்களா?” என்றார். “இங்கேயே அறுபத்தேழுபேர் இருக்கிறோம். நாம் இணைந்தால் அவர்கள் இணைந்தாகவேண்டும்.”
சற்று நேரம் அமைதி நிலவியது. “ஆம்” என பெருமூச்சுடன் சொன்ன சூரசேனர் “நான் இணைகிறேன்” என்றார். சுதேவன் “நானும்” என்றான். மெல்ல ஒவ்வொருவராக இணைந்துகொண்டனர். கைகளைத்தட்டியபடி “பிந்தி எழும் பறவைகளும் குரலெழுப்புக!” என்றான் அபிமன்யூ. “இல்லையேல் நாகம் கிளையிலேறி உங்களை கவ்வும்.” சிரித்தபடி எஞ்சியவர்களும் ஒப்புதல் சொன்னார்கள்.
“நாம் இந்திரப்பிரஸ்தத்தை ஏற்போம். நமக்குப்பின் யாதவப்படைகளும் எழுமென்றால் அவ்வரக்கனின் தலைகொய்து கொண்டுசென்று பாஞ்சாலத்து அரசியின் கால்களில் வைப்போம்” என்று அபிமன்யூ சொன்னான். இந்திரப்பிரஸ்தம் என்னும் சொல் அவர்களை எளிதாக்கியது. அதையே அத்தனைபேரும் எண்ணிக்கொண்டிருந்தனர். ஆனால் அச்சொல் காதில் கேட்டபோது அதை புதிதென உணர்ந்தனர். அவர்களின் முகங்கள் மலர்ந்தன.
“பீமனின் தோள்களால் அவ்வரக்கன் கிழிக்கப்படுவான்” என்றார் சூரசேனர். “என் நிமித்திகர் அதை ஏழாண்டுகளுக்கு முன்னரே சொல்லிவிட்டார்.” சுதேவன் “ஆம், என் நிமித்திகரும் அதை சொன்னார்” என்றான். பின்னர் அனைவரும் அதையே சொல்லத்தொடங்கினர். சொல்லச்சொல்ல ஒவ்வொருவர் கண்களும் ஒளிகொண்டன. சொற்களினூடாக அவர்கள் அதை வளர்த்து எடுத்துக்கொண்டனர். ஒருகட்டத்தில் போரே முடிந்துவிட்டது என்னும் நிறைவை அடைந்தனர். இந்திரப்பிரஸ்தத்துடன் இணைந்துகொண்டபின் அடையப்போகும் நலன்களைப்பற்றி உள்ளூர கனவுகாணத்தொடங்கினர்.
“நாம் இம்முறை நம் விற்களை அனுப்புவதில்லை என முடிவெடுப்போம். நாகவேதத்தையும் வேள்வியையும் நம்மால் ஒப்பமுடியாது என்று அறிவிப்போம்” என்று அபிமன்யூ சொன்னான். “அது ஓர் அறிவிப்பு. ஜராசந்தனிடம் நாம் போர் தொடுக்கிறோம், ஆனால் போரை அவன் தொடங்கியாகவேண்டும். அவன் நம் மீது சினம் கொள்வான். மகதப்படைகளைப் பிரித்து நம் மீது அனுப்புவான். அவன் படை சிதறுவதென்பது இந்திரப்பிரஸ்தம் ராஜகிருஹம் மீது பாய்வதற்குரிய நற்தருணம்.”
புரியாது நோக்கிய அரசர்களை நோக்கி சூரசேனர் “நாம் இத்தனைபேர் இருக்கிறோம் ஷத்ரியர்களே. நம்மை வெல்ல அவன் எழுபத்திரண்டு படைப்பிரிவுகளை அனுப்பியாகவேண்டும்” என்றார். அப்போதுதான் அனைத்தையும் புரிந்துகொண்ட சுதேவன் “படைகள் வரட்டும். அவற்றை களத்தில் வெல்வோம். நம் அரசை நாமே காத்தோம் எனும் புகழும் நமக்கு எஞ்சும்” என்றான். “ஆம், மகதப்படைகளுக்கு நான் சொல்லவேண்டிய மறுமொழி ஒன்றுள்ளது” என்றார் பாண்டரத்தின் வக்ரதந்தர்.
சீற்றம் கொண்டு தன் உடைவாளை ஒலியுடன் உருவி தூக்கி ஆட்டி “அவர்களுக்கு நாம் குருதியை திருப்பியளித்தாகவேண்டும்” என்றார் அஸ்மாகநாட்டின் இளைய அரசன் சௌதாசன். “ஹம்சனும் டிம்பகனும் நடத்திய காலம்வரைதான் மகதம் வெற்றிகளை அடைந்தது கூட்டரே. அவர்கள் மறைந்த பின்பு மகதம் அடைந்த வெற்றி என்ன?” என்றார் சூரசேனர். “ஆம்! உண்மை!” என்றான் சுதேவன். “இவன் வெறும் காட்டாளன். கொடுமைசெய்யத் தயங்காதவன். ஆனால் களம் நின்று படைநடத்துவதற்கு ஷத்ரியக்குருதி தேவை…” என்றார் தசார்ண அரசராகிய சுதர்மன்.
அனைவரின் உள்ளமும் கற்பனைகளில் விரிந்து எழ அப்போரின் இயல்தகவுகளைப்பற்றி பேசத் தொடங்கினர். “இக்கட்டான நேரத்தில் உடன்நின்றதை இந்திரப்பிரஸ்தம் மறக்கப்போவதில்லை. அங்கே நம் இடம் மேலும் சிறந்ததாகவே இருக்கும்” என்றார் ரிசிக அரசர் திவோதாசர். “அவர்கள் முழுமைகொண்ட ஷத்ரியர்கள் அல்ல. நம்மைப்போன்றவர்களின் உறவு அவர்களுக்கு நிறையளிக்கும்” என்றார் ஆஃபிர நாட்டின் உக்ரதண்டன். பல ஷத்ரியர்கள் உதடுகளை இறுக்கி புன்னகைசெய்தனர். ஆஃபிர அரசகுலம் வழிப்பறித்திருடர்களில் இருந்து உருவாகி வந்தது என அனைவரும் அறிந்திருந்தனர்.
அவர்கள் எண்ணியதற்கு மாறாக விற்கள் சென்று சேராதது ஜராசந்தனை சினம் கொள்ளச் செய்யவில்லை. மகதம் இந்திரப்பிரஸ்தத்தை அஞ்சி அமைந்துள்ளது என்று அனைவரும் தெரிந்துகொண்டனர். வில் அனுப்பப்படமாட்டாது என்னும் செய்தி சென்றதுமே ஒவ்வொரு ஷத்ரிய அரசருக்கும் ஜராசந்தனின் நேரடி ஓலையுடன் தூது வந்தது. நாகவேதத்தை ஏற்கவேண்டும் என எவரும் கோரப்படமாட்டாகள் என்று அவன் வாக்களித்தான். இந்திரப்பிரஸ்தத்துடன் போர் எழலாம் என்றும் அப்போரில் மகதத்தை துணைப்பவர்கள் அனைவருக்கும் கப்பவிலக்கு அளிக்கப்படும் என்றும் அவர்கள் நட்புநாடுகளாக கருதப்பட்டு திருச்சாத்து செய்யப்படுவார்கள் என்றும் ஜராசந்தன் வாக்களித்தான். அவர்கள் அப்படைக்கூட்டை விரும்பினால் வில்லின்றி நட்புநாட்டரசர்களாகவே மகதத்திற்கு வந்து நாகவேள்வி முடிந்தபின் கூடும் அவையில் முடிசூடி கோல்கொண்டு அமர்ந்திருக்கலாம் என்றான்.
மகதம் பணிந்துவிட்டதை அறிந்ததும் ஷத்ரியர் மகிழ்வுகொண்டாடினர். அவர்கள் வில்லனுப்பப் போவதில்லை என்ற செய்தியை இந்திரப்பிரஸ்தத்திற்கும் அனுப்பியிருந்தனர். நிகழவிருக்கும் போரில் இந்திரப்பிரஸ்தத்துடன் இணையலாகுமா என்று கோரி அனைவருக்கும் சௌனகரின் ஓலை வந்திருந்தது. “இங்கு நாம் நட்புநாடுகள். முடிசூடி அமர்ந்தால் ஜராசந்தனைவிட குலமேன்மை கொண்டவர்கள். நாளை நம் மகளிர் மகத அரியணை அமரலுமாகும்” என்றார் சூரசேனர். “இந்திரப்பிரஸ்தத்தில் நாம் என்றும் யாதவர்களுக்கு கீழேதான் இருப்போம். அதை மறக்கலாகாது.”
அறுபத்திமூன்று ஷத்ரியர்கள் நட்பரசர்களாக ராஜகிருஹத்திற்கு ஓலை அனுப்பியபின் அகம்படிப்படையுடன் கொடியும் கோலும் கொண்டு முடிசூடி யானைமேல் அமர்ந்து ராஜகிருஹத்திற்குள் நுழைந்தனர். அவர்கள் அனைவரையும் ஜராசந்தனே கோட்டைமுகப்புக்கு வந்து வணங்கி வரவேற்றான். அரசமுறைப்படி அவர்கள் அரண்மனைகளில் தங்கவைக்கப்பட்டனர். அவர்களுக்கு ஜராசந்தனே அரண்மனையில் விருந்தளித்தான். தன் கைகளாலேயே அவர்களுக்கு உணவு பரிமாறினான். யவன மதுவை பொற்கிண்ணங்களில் ஊற்றி அளித்தான். அவனுடைய பேச்சுவன்மையில் அவர்கள் திளைத்தனர். காவியநுட்பங்களில் இருந்து கீழ்மைநிறைந்த இளிவரல்களுக்கு தாவும் அவனை அனுமனுக்கு நிகரானவன் என்றார் சூரசேனர். “தோள்விரிந்தோர் பேச்சு அமையாதவர் என்பார்கள். இவன் யார்? ஒருவனே மல்லனும் சொல்வலனும் ஆவது எப்படி இயலும்?”
ஜராசந்தன் களிமயக்கில் இளையவனாகிய அபிமன்யூவை இழுத்து தன் இடதுமடியில் அமரச்செய்து முத்தமிட்டான். “நீ என் மைந்தன்! உனக்கு வேண்டியதென்ன? மகதத்தின் மணிமுடியா? இதோ” என்று கூவினான். “அடேய், எடுத்துவாடா என் மணிமுடியை. என் மைந்தனுக்கு இப்போதே சூட்டுகிறேன். மைந்தா, என் கோல் உனக்கு. இனி நீயே மகதத்தின் அரசன்” என அவன் தோள்களை அறைந்து உரக்க நகைத்தான். கண்ணீர் மல்க கைகூப்பி அதை ஏற்றுக்கொண்டான். “ஆனால் நாங்கள் அவனை ஏற்கமாட்டோம்” என்றான் சுதேவன் “எங்களுக்கு அரசனாக அரக்கனே வேண்டும்.” மற்ற ஷத்ரியர்கள் உரக்க நகைத்தனர்.
இரவெல்லாம் குடித்துக்குழைந்தும் சிரித்துக்கூத்தாடியும் அவர்கள் அவன் அவையிலிருந்தனர். “நான் உங்கள் அடிமை. உங்கள் கால்களுக்கு பணிவிடைசெய்யும் அரக்கன். ஷத்ரியர்களே, உங்கள் கால்கள் எங்கே? உங்கள் கால்களை காட்டுங்கள்” என்று ஜராசந்தன் குழறினான். தள்ளாடியபடி எழுந்து சூரசேனரின் கால்களை பற்றிக்கொண்டான். “பிழைசெய்துவிட்டேன் ஷத்ரியர்களே. சூரசேனரே, நீங்கள் என் தந்தைக்கு நிகரானவர், நான் எளிய அரக்கன்… இழிமகன்” அவன் இடக்கண்ணிலிருந்து மட்டும் விழிநீர் வழிந்தது. விம்மியழுதபடி ஒவ்வொரு ஷத்ரிய அரசர்களின் கால்களையும் தொட்டுத் தொட்டு சென்னி சூடினான்.
“அரசே, என்ன இது?” என்று பதறிய சுதேவனிடம் “நான் மகதத்தை துறந்து கானேகிறேன். என் ஜரையன்னையின் குகைக்குள் புகுந்து இருளாழத்தில் மறைகிறேன். என் மைந்தன் முடிசூடட்டும். அரசர்களே, நான் அவனை உங்களுக்கு அளிக்கிறேன். அவனை கைக்குழவி என்றே இதுநாள் வரை வளர்த்துவிட்டேன். என் வல்லமைகொண்ட தோள்களில் இருந்து அவனை இறக்கியதே இல்லை. தொட்டியில் வளர்ந்த மீன் அவன். அவனை நீங்கள் உங்கள் திண்ணைகளில் தவழவிடுங்கள். அவனுக்கு உணவூட்டுங்கள். அவனை கைபொத்தி காத்துநில்லுங்கள்” என்று கைகூப்பி கேட்டபடி அழுது தளர்ந்து தரையில் அமர்ந்தான். கால்நீட்டிப் படுத்து “எதை வென்றேன்? எதை அடைந்தேன்? எல்லாம் வீண். என் காடு என்னை கைவிட்டது. என் காட்டில் எனக்கு இடமில்லை. அன்னையே, உன் காட்டுக்கு நான் அயலவன் ஆனேன்” என்று அழுதான்.
கள்மயக்கில் பிற அரசரும் அழுது அவனை தழுவிக்கொண்டனர். “அரசே, நான் உங்களுக்காக உயிர்துறப்பேன்!” என்று கூவியபடி அபிமன்யூ அவன் கால்களில் விழுந்தான். சுதேவன் “நான் வாள்தொட்டு ஆணையிடுகிறேன். இந்திரப்பிரஸ்தத்தின் இழிமகனாகிய யுதிஷ்டிரனை என் வாளால் போழ்ந்து உங்கள் கால்களில் போடுவேன்” என்றான். சூரசேனர் “நான் யாதவனை கொல்வேன். கன்றோட்டும் இழிமகன். முடிசூடி அரியணை அமர்கிறானா அவன்? மூடன்” என்றார். வக்ரதந்தர் “சத்ராஜித்தாக யாதவகுருதிகொண்டவன் அமர ஒருபோதும் ஒப்பமாட்டோம்” என்று கூவியபடி எழுந்து பற்களைக் கடித்து “ஒப்பமாட்டேன்! நான் என் இறுதிக்குருதிவரை ஒப்பமாட்டேன்” என்றார்.
அழுகைவழியாக அவர்கள் சிரிப்பை சென்றடைந்தனர். “இரண்டு பகுதிகளாகப்பிரிந்த ஓர் அரசர்… அரசே, நான் உங்கள் உடலை தொட்டுப்பார்க்கலாமா?” என்றான் அபிமன்யூ. “தொட்டுப்பார்… என் மைந்தன் நீ… வா!” என்று ஜராசந்தன் அவன் கையை எடுத்து தன் தலையில் வைத்தான். “துலாக்கோலின் முள் இந்தத்தலை ஆஹ்ஹாஹாஹா!” என்று அபிமன்யூ நகைத்தான். “நம் அரசர் துலா என்றால் சேதிநாட்டுச் சிசுபாலன் ஒரு தேள். சைந்தவனாகிய ஜயத்ரதன் நழுவும் மீன்” என்றார் சூரசேனர். “அரக்கி ஒன்றாகச்சேர்த்த உடல். அவள் கண் தெரியாமல் நம் அரசரைக் கிழித்து கால்மாற்றி கைமாற்றிப் போட்டிருந்தால் என்ன ஆகும்? இப்படி…” அபிமன்யூ கைகால்கள் நான்குபக்கமும் விரிந்து தத்தளிக்க தரையில் தவழ்ந்து காட்டினான். ஷத்ரியர் வெடித்துச்சிரித்தனர். சிரித்து களைத்து உருண்டனர். சிரிப்பை நிறுத்தமுடியாமல் மீண்டும் மீண்டும் சிரித்து கண்ணீர்வழிய களைத்து அறியாது துயின்றனர். காலையில் உடற்குவியலாகக் கிடந்த அவர்கள் நடுவே ஜராசந்தனும் கலந்திருந்தான்.
மறுநாள் அவையில் அனைவரும் வந்தமர்ந்தபோது ஜராசந்தன் எழுந்து அவையமர்ந்த அரசர்கள் அனைவரையும் வரவேற்று முறைமைச்சொல் உரைத்தான். அவர்கள் நட்பரசர்களுக்குரிய முறைமைப்படி மணிமுடி சூடி செங்கோல் கொண்டு அமர்ந்திருந்தனர். ஒவ்வொருவரின் குடியையும் புகழையும் நிமித்திகர் அறிவித்தனர். சூரசேனரையும் சுதேவனையும் வக்ரதந்தரையும் வணங்கி முறைமைசொல்லி பரிசிலளித்து அவையமரச்செய்தான் ஜராசந்தன். மலர்ந்த புன்னகையுடன் அபிமன்யூ அருகே வந்தபோது உரக்க நகைத்தபடி “வருக, இளையோரே வருக!” என இரு கைகளையும் விரித்து அள்ளி நெஞ்சோடணைத்தான்.
அவன் இடக்கால் சற்றே தடுக்குவதுபோலிருந்தது. அவர்கள் நிலைதடுமாற காமிகர் திகைத்து பின்னடைந்தார். ஜராசந்தனின் பற்கள் கிட்டித்தன. தோள்களின் தசைகள் இறுகி உடல் விம்மிப்பெருத்தது. அபிமன்யூ கழுத்தறுபட்ட விலங்குபோல கூச்சலிட்டான். அவன் கால்கள் துடித்து நிலத்தைவிட்டு மேலெழுந்தன. கைகளால் ஜராசந்தனின் பெரிய தோள்களில் ஓங்கி ஓங்கி அறைந்தான். முதலில் சிரித்துக்கொண்டிருந்த அரசர்கள் ஏதோ ஒரு கணத்தில் நிகழ்வதை உணர்ந்து பதைப்புடன் எழுந்தபோது மகதத்தின் காவல்படை அவையை படைக்கலங்களுடன் சூழ்ந்திருப்பதை கண்டனர்.
மூக்கிலும் வாயிலும் குருதி மூச்சுடன் கொப்பளித்து வழிய அபிமன்யூ துவண்டான். அவன் தலை சொடுக்கி இழுக்க கால்கள் நீண்டு அதிர்ந்து மெல்ல ஓய்ந்தன. தலை தொய்ந்து ஜராசந்தனின் தோளில் கைக்குழந்தை போல விழுந்தான். அவனைத் தூக்கி அருகே இருந்த தூணில் ஓங்கி அறைந்த ஜராசந்தன் இரு தோள்களையும் மாறி மாறி அறைந்தபடி மதகளிறுபோல முழக்கமிட்டான். அவையமர்ந்த அரசர்கள் கால்கள் நடுங்க பீடங்களில் ஒண்டி அமர்ந்தனர். சிலர் கைகளால் முகம் பொத்தி உடல்குறுக்கினர். “சிறையிலடையுங்கள்… இந்த இழிமகன்களை இருட்டுக்குள் தள்ளுங்கள்” என்று ஜராசந்தன் கூச்சலிட்டான்.
படைகள் ஷத்ரிய மன்னர்கள் மேல் பாய்ந்து அறைந்து இழுத்து கைகள் பிணைத்தன. அனைவரும் இழுத்துச்செல்லப்பட்டு ராஜகிருஹத்தின் மண்ணுக்கு அடியில் பாறைகளைக் குடைந்து அமைக்கப்பட்ட இருண்ட சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டனர். “நாகவேதத்தின் அவியை அவர்களுக்கு நானே ஊட்டுகிறேன். உண்ணாதவர்களுக்கு அவர்களின் மைந்தர்களின் பச்சை ஊனை ஊட்டுவேன்” என்றான் ஜராசந்தன். தன் உடலை கைகளால் அறைந்தபடி “எப்போது இந்திரப்பிரஸ்தத்துடன் சொல்லாடினார்களோ அப்போதே அவர்கள் சாகவேண்டுமென்ற ஆணையை என் தெய்வம் பிறப்பித்துவிட்டது” என்று வெறியுடன் கூவினான். உடல்பற்றி எரிபவன் போல அரசவையில் நின்று உடல் கொப்பளித்தான். வெறிச்சிரிப்பும் பிளிறலுமாக ஆர்ப்பரித்தான்.