நெருக்கடியின் கணங்களில்…

Father’s Love is a drawing by Martin Lagewaard

இந்தக் கடிதத்தை 13 ஆண்டுகளுக்கு முன் எழுதியிருக்கிறேன். அண்மையில் ஒருவருக்கு ஏறத்தாழ இதேவகையான பதிலைச் சொன்னேன், இக்கடிதம் நினைவுக்கு வந்தது.

துயரங்கள் மூன்றுவகை. ஆதிதெய்வீகம், ஆதிபௌதிகம்,ஆதிமானுஷிகம். இவை தாபத்ரயம் என அழைக்கப்படுகின்றன. (ஆதிதெய்வீகம்,  ஆதிபௌதிகம், ஆத்யாத்மிகம் என்றும் சொல்லப்படுவதுண்டு) நாமறியமுடியாத தெய்வீகமான விசைகளால் விளைபவை. இந்த உலகின் நிகழ்வுகளால் விளைபவை, நாமே நமக்கு உருவாக்கிக்கொள்ளக்கூடியவை. இவற்றில் முதல்வகை துயருக்கு காரணத்தை யோசிக்கவேகூடாது. முடிந்தவரை சரண்அடையவேண்டும். இதுதான் சொல்லப்பட்டுள்ளது.

ஆனால் சொல்வது எளிது, தனக்கென வராதவரை சொல்வது நம் வழக்கமும்கூட. மனிதர்கள் எவராயினும் துயர் வழியாகவே சென்றாகவேண்டும். அறிந்துகொள்ளல் துயரின் மூர்க்கத்தைச் சற்று தணிக்கலாம். எளிய இளைப்பாறல்களை அளிக்கலாம். சில பதுங்கிடங்களை மானசீகமாக உருவாக்கிக் கொள்ளலாம். ஆயினும் சொல்கிறோம். அது ஒரே பொருளில்தான். உங்கள் துயரை நான் புரிந்துகொள்கிறேன், சகமனிதனாக என்று நாம் சொல்வதுதான் அது. மனிதர்களால் அவ்வளவே செய்யமுடியும்

*

Hi Sir

… Last month 15th we had a beautiful girl baby. We were happy for the first three days and when we went for the doctors office for initial check up the doctor told the baby is not active.
The same day we admitted the baby to the hospital. Lots of blood work, scan ,MRI were done. The doctors could not get any decisive answer other than it is a muscle weakness.

The baby is feeding well, digestion and motion are going fine. She can move her hands and legs but not lifting her hands from the shoulder also her legs from the ground level. The doctors sent to further tests to findout the exact issue. They say some of the tests may take weeks to come back. The only answer we have now is, it is a muscle weakness. When the doctors did the muscle ultrasound they found the muscle is abnormal( they did it in her thigh). So we are still waiting for the final results to comeback to decide what kind of treatment to provide.

We are going through a real pain and i dont know what will be the outcome. I am writing this to you because, (i believe ) other than my father the only person i know, who is more confident and can guide me is only you. Lots of people suggest to surrender to god. I am a non-believer and dont think that will help me.

Can you please guide me regarding this medical processes and emotional issues im facing now. I dont know how i am going to overcome this issue. I know as there is no definitive answer about what is the issue, for some reasons i dont believe this is going alright.

Is it possible this can be cured by any other medical practice like Ayurveda. My writing may not be clear but i think i conveyed the message.Please help me sir. I don’t know what to do. I’m in a huge pain.

c

அன்புள்ள c

உங்கள் கடிதம் எப்படியோ ஸ்பாமுக்குள் போய்விட்டது. மன்னிக்கவும். தாமதமாக எழுதுகிறேன்.

நெருக்கமான இரு நண்பர்களின் குடும்பங்களில் இரு குழந்தைகள் இதே சிக்கலுக்குள் சென்று தொடர்ந்து சிகிழ்ச்சையால் ஒரளவே தேறிய நிலையில் இருக்கின்றன. அவர்களில் ஒன்று எனக்கு மிக நெருக்கமான குழந்தை. அவள் நினைவு இன்றும் என் நெஞ்சுக்கு ஆழமான வலியாக உள்ளது. உங்கள் துயரத்தை , தனிமையை, பதற்றத்தை நான் புரிந்துகொள்கிறேன். மிக அந்தரங்கமாக உங்களை தோளுடன் அணைத்துக்கொள்கிறேன்.

மருத்துவம் சார்ந்து இந்த விஷயத்தின் சாத்தியங்கள் என்னென்ன என்று எனக்கு தெரியவில்லை. நீங்கள் அமெரிக்காவில் இருக்கிறீர்கள். அங்கே இன்னமும் அதிக வாய்ப்புகள் இருக்கலாம். பொதுவாக இந்த தசைத்தளர்வு என்பது தசைகளை இயக்கும் நரம்புகளுக்கும் மூளைக்கும் இடையேயான தொடர்புச்சிக்கல்களாலோ அல்லது மூளையின் சில பகுதிகளின் வளர்ச்சிச் சிக்கல்களாலோ நிகழ்வது என்றே நான் தெரிந்துகொண்டிருக்கிறேன். சிறு குழந்தைகள் என்றால் அவை வளரக்கூடிய முனைப்பில் இருப்பவை என்பதனால் வளார்ச்சிப்போக்கில் இப்பிரச்சினை சரியாகும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். மூளையும் நரம்புகளும் தங்களை சரி செய்துகொள்ள தேவையான சில பயிற்சிகளையும் மருந்துகளையும் கொடுப்பார்கள். பொதுவாக சரியாகிவிடும் என்றே நான் அறிகிறேன். பார்ப்போம்.

இம்மாதிரி தருணங்களில் நம் சிந்தனைகள் நம்மை விட்டு நீங்காமல் சுற்றிச் சுற்றிவந்து அவையே பெரும் சித்திரவதையாக ஆகிவிடுகின்றன. நம் அகம் முழுக்க எதிர்பார்ப்புகளும் அச்சங்களும் மாறி மாறி நிறைந்து நம்மை அலைக்கழிக்கின்றன. கற்பனைகளும் தர்க்கங்களும் ஓயாமல் உள்ளே ஓடுகின்றன. அந்த வதையைத்தான் நாம் எதிர்கொள்ள வேண்டும். ஓரளவு மனத்தயாரிப்பும் திட்டமிடலும் இருந்தால் அதை சந்திக்கமுடியும் என்று நினைக்கிறேன்.

இந்தமாதிரி தருணங்களில் உருவாகும் ஆழமான மனச்சோர்வுக்கு நம்மை ஒப்புக்கொடுக்கக் கூடாது என்பதே முதல்சவால். அதைப்பற்றிய பிரக்ஞை இல்லாமலேயே நாம் அதில் மூழ்கிவிடுவோம். அதை மேலும் மேலும் வளர்த்துக்கொண்டு அந்த துயரை திகட்டத்திகட்ட அனுபவிப்போம். துயரங்களை மிகைப்படுத்தும் இயல்பு மனிதனுக்கு உண்டு. அப்படிச் செய்யக்கூடாது என நாமே உணர்ந்து முடிவெடுத்து அதில் இருந்து விலக வேண்டும். இந்த மனச்சோர்வு என்னை மூட விடமாட்டேன் என நாமே உறுதிகொண்டு அதற்காக எல்லாவற்றையும் செய்ய வேண்டும். அப்படி எண்ணினாலே மனச்சோர்வை பெரும்பாலும் வென்றுவிடலாம்.

இம்மாதிரி விஷயங்களில் ஒன்று நமக்கு தெரியவேண்டும். வாழ்க்கையின் பல அடிப்படைச்சிக்கல்களில் நாம் எதையும் செய்ய முடியாது. இது நம்மை மீறிய விஷயம். ஒரு விபத்து போல. பூகம்பம், வெள்ளம் போல. நாம் எளிய மனிதர்கள். இயற்கையின் பிரம்மாண்டமான வல்லமைக்கு முன் நாம் வெறும் கிருமிகள். நமக்கு வருவதை நாம் ஏற்கும் நிலையில்தான் இருக்கிறோம். இதற்கு காரணகாரியங்கள் இருக்கலாம். ஆனால் அவை நம் அறிவுக்கு எட்டுவன அல்ல. மொத்த பிரபஞ்சத்தையே அறிந்தால்தான் இவற்றை அறிய முடியும். ஆகவே இதைப்பற்றி சிந்தனைசெய்து மூளையை சூடாக்கிக்கொள்வதனால் பயனேதும் இல்லை.

இறைவனிடம் சரணடையச் சொல்பவர்கள் ஒரு சரியான வழியையே சொல்கிறார்கள். நம்முடைய தனிப்பட்ட அகங்காரம் ஏன் இப்படி, இது எவ்வாறு என்றெல்லாம் ஓயாது அரற்றி அலைவதை வெல்ல சரியான வழிதான் அது. காரணகாரியச் சிந்தனைகளுக்கு அப்பாற்பட்ட ஒரு மையம்தான் இறைவன். இறைவன் முன் சரணடைய உங்கள் தர்க்கமனம் சம்மதிப்பதில்லை என்றால் நீங்கள் அந்த இடத்தில் இன்னும் நுட்பமான, பிரம்மாண்டமான பிரபஞ்ச தரிசனத்தை வைத்துக்கொள்ள பழகவேண்டும். அத்வைதம்போல. பௌத்தம்போல. அதற்கு கூரிய மூளைத்திறனும் சலிக்காமல் தனித்து நின்று யோசிக்கும் தன்னம்பிக்கையும் தேவை. அது அனைவராலும் முடியாது.

ஒரு கடவுள்நம்பிக்கையாளன் என்ன சொல்வான்? இது கடவுளின் இச்சை. இதை நம்மால் அறியமுடியாது. புத்தி,மனம்,அகங்காரத்தை அவன் முன் வைத்து சரணடைந்து மன்றாடு. கடவுள் அருளக்கூடும். கடவுளின் இச்சை எதுவோ அது நடக்கும். அது நன்றாக நடக்கும் என எதிர்பார் – என்பான்.

பிரபஞ்ச நோக்குள்ள ஒருவன் அதையே வேறுவகையில் சொல்வான். இந்தநிகழ்வு உங்களுக்கு மட்டும்தான் முக்கியமானது. ஆனால் உண்மையில் பூமியின் கோடானுகோடி உயிர்களில் ஒன்றுக்கு வந்த சிறு வளார்ச்சிச் சிக்கல் மட்டும்தான் இது. பிரபஞ்ச நிகழ்வின் பிரம்மாண்டமான ஓர் ஒத்திசைவில் இதற்கும் ஒரு காரணமும் விளைவும் இருக்கக் கூடும். அது நீங்கள் என்ன செய்தாலும் நிகழும். அதை சிறப்பாக நன்றாக நிகழ்த்த நீங்கள் என்னென்ன செய்யக்கூடுமோ அதை முடிந்தவரை செய்துவிட்டு விளைவுகளுக்கு அந்த பிரம்மாண்டமான செயல்சக்கரத்தை பொறுப்பாக்கி விலகி காத்திருங்கள் – என்பான். இரண்டுமே ஒன்றுதான்.

நீங்கள் கவலைப்பட்டாலும் கவலைப்படவில்லை என்றாலும் செய்யக்கூடியது ஒன்றே. உங்களால் முடிந்தவரை குழந்தையை சரிசெய்ய தேவையான அனைத்தையும் செய்வது. குழந்தைக்குள் இருக்கும் இயற்கை, குழந்தையை உருவாக்கிய இயற்கை ஆகியவற்றின் விருப்பப்படி அதன் எதிர்காலம் நிகழட்டும் என காத்திருப்பது. கவலையை வளர்த்துக்கொண்டால் அதன் வழியாக உங்கள் வாழ்க்கை கொடுமையானதாக ஆகும். அக்குழந்தைக்கு நீங்கள் செய்யவேண்டியதை முழுமையாகச் செய்யமுடியாமலும் ஆகும். ஆகவே கவலையை விட்டு செய்யவேண்டியதை உணர்ச்சிவேகங்கள் இல்லாமல் நிதானமாகச் செய்யுங்கள்.தத்துவார்த்தமான தீர்வு இது.

நடைமுறையில் நாம் நம்மையே அவதானித்து நம்மை சமாதானம் செய்து நம்மை மீட்டுக்கொள்ளவேண்டியிருக்கிறது. இந்த நிலையின் தீவிரம் அதிகநாட்களுக்கு நீடிக்காது என உணருங்கள். இப்போதிருக்கும் உக்கிரமான உணர்ச்சிநிலைகள் இப்படியே இருக்காது. எந்த வேதனையும் இக்கட்டும் காலப்போக்கில் மெல்லமெல்ல பழகிப்பழகி சாதாரணமாக ஆகும். இது நாளை சாதாரணமாக ஆகிவிடும் என்று இப்போது உணர்வதே நமக்கு நிம்மதியை அளிக்கும். உடல்வலியில் இரவில் விடிந்தால் சரியாகிவிடும் என எண்ணியே நாம் காத்திருப்போம் அல்லவா, அதைப்போல. இப்போதைய உணர்ச்சிகளை கண்காணியுங்கள். உணர்ச்சிகளை மொழியாக ஆக்கினால், அதாவது எழுதினால், அவை உடனே அடங்க ஆரம்பிப்பது என் அனுபவம். அவற்றை நாம் புறவயமாக காண ஆரம்பித்துவிடுவோம்.

வலுக்கட்டாயமாக மனதை வேறுவகையில் செலுத்திக்கொள்ள முடியும், திசைமாற்ற முடியும் என்பது நான் அறிந்த உண்மை. எந்த இக்கட்டிலும் ஒரு நாவலை வாசிக்கமுடியும். முதலில் மனம் ஒன்றவே ஒன்றாது. ஆனால் பிடித்து அழுத்தி மூழ்கடிக்க முடியும். நாமிருக்கும் இடத்தை கொஞ்சம் மாற்றினாலே மனம் மாறுபடுகிறது. ஒரு புதிய இடத்தில் நடக்கச் சென்றாலே மனநிலை மாறுகிறது.

ஒரே விஷயத்தை திரும்பத் திரும்பச் செய்யாதீர்கள். ஒன்றும் செய்யாமல் சும்மா இருக்காதீர்கள். முக்கியமாக இந்தச்சிக்கலையே மீண்டும் மீண்டும் மனைவியிடமோ நண்பர்களிடமோ திரும்ப திரும்ப விவாதிக்காதீர்கள். இணையத்திலும் இதழ்களிலும் இதையே மீளமீள வாசிக்காதீர்கள். இந்தகாலகட்டத்தை பல்லைக்கடித்து தாண்டிவிடுங்கள். இது அதிகம்போனால் ஒரு மூன்றுமாத மனநெருக்கடி மட்டுமே என உணருங்கள். தாண்டிவிடுவீர்கள். அதன் பின் இதை நிதானமாக திரும்பிப்பார்க்கமுடியும்.

குழந்தை சரியாகும் என்றே எனக்குப் படுகிறது. சட்டென்று சரியாகாது, வளர வளர சரியாகும். முழுக்கச் சரியாகாது போகலாம். ஆனால் சிறிய சிக்கல்களுடன் அது தன் வாழ்க்கையை தானே சிறப்பாக அமைத்துக்கொள்ளும். நீங்கள் செய்யவேண்டியது அதற்கு தேவையான அனைத்தையும் செய்து கொடுப்பது.அதற்கு உங்களுக்கு மனபலமும் நிதானமும் தேவை. அதை நீங்கள் உங்களையே பயிற்றுவித்துக்கொண்டு அடையலாம். அது அக்குழந்தைக்கும் நீங்கள் செய்தாகவேண்டிய கடமை. உங்கள் மனைவிக்கும் அந்த நிதானத்தை உங்களிடமிருந்து எதிர்பார்க்க உரிமை உண்டு.

இது இன்று மாபெரும் துயரமாக இருக்கலாம். ஆனாலும் இதில் ஏதேனும் நன்மை இருக்கலாம். ஏதேனும் நாமறியா நோக்கம் இருக்கலாம். இந்த துயரம் வழியாக நீங்கள் உங்களை இன்னமும் நெருக்கமாக அறியக்கூடும். இந்த நெருக்கடி வழியாக அக்குழந்தைமேல் உங்களுக்கு மேலும் மேலும் பாசம் உருவாகி நீங்கள் இன்னமும் மேம்பட்டவராக இன்னமும் உணர்ச்சிகரமானவராக ஆகக்கூடும். உங்களை ஆன்மீகமாக இந்த நெருக்கடி பண்படுத்தக்கூடும்.

அத்துடன் அக்குழந்தைக்கே கூட உடல்சார்ந்த நெருக்கடிகள் வழியாக வளர்ச்சியின் புதிய சாத்தியங்கள் உருவாகக்கூடும். சிறுவயதின் உடல்சிக்கல்கள் காரணமாகவே வழக்கத்தைமீறிய மனவளர்ச்சியை அடைந்தவர்கள்தான் அசாதாரண சாதனையாளர்களில் கணிசமானவர்கள். எதிர்காலத்தின் கைகளில் என்ன இருக்கிறது என நீங்கள் எப்படிச் சொல்லமுடியும்?

இந்தக்காலகட்டத்தை நீங்கள் திட்டமிட்டு தாண்ட வேண்டும். வாழ்க்கைச் சந்தர்ப்பங்களை தன்னிச்சையாகவே நம்மில் பலர் சந்திக்கிறோம். திட்டமிட்டு பயின்று சந்தித்தால் அவை மிக எளிமையானவை என்று தெரியவரும். அதை செய்யுங்கள் என்று கேட்டுக்கொள்வேன்

இவை ஒரு நிபுணரின் ஆலோசனைகள் அல்ல. நான் ஒரு நண்பனாக இதை எழுதுகிறேன். இதை எப்போதுமே இன்னொருவரே சொல்ல வேண்டியிருக்கிறது. எனக்கொரு நெருக்கடி வந்தால் இதையே நீங்கள் எனக்குச் சொல்ல வேண்டியிருக்கும்.

தைரியமாக இருங்கள். Waves are nothing but water,so is the sea

ஜெ

மறுபிரசுரம் – முதற்பிரசுரம் Oct 25, 2010 

முந்தைய கட்டுரைஆலந்தூர் கோ.மோகனரங்கன்
அடுத்த கட்டுரைஅறம் ஓர் உரையாடல்- சிங்கப்பூர்