தினமலர் 40,மீளும் வாசல்

Photo_of_Com.J.Hemachandran
ஜெ.ஹேமச்சந்திரன்

 

தேர்தல் அரசியல் குறித்த விவாதத்தின் ஒரு பகுதியாக என் கோவை நண்பர் நடராஜன் உணர்ச்சிகரமாக ஒரு கேள்வியைக் கேட்டார். ஒரு தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களில் முக்கியமான அனைவருமே தகுதியற்றவர்கள் என்று எனக்குத் தோன்றுமென்றால் நான் யாருக்கு வாக்களிக்க வேண்டும்? தலைவலிக்கு பதிலாக திருகுவலியை தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு மட்டுமே தமிழர்களுக்கு இன்று உள்ளது?

தேர்தல்நேரத்தில் நாம் பேசுவது என்ன? எந்தக் கட்சி “பரவாயில்லை?” என்றுதானே? ஊழலா, எதேச்சாதிகாரப்போக்கா, பொறுப்பின்மையா, குடும்ப ஆட்சியா, உள்ளூர் ரவுடி அரசியலா எது தேவை என்று தானே நம்மிடம் தேர்தல்கள் சொல்கின்றன? எனக்குத்தகுதியான வேட்பாளர் எனக்கு முன் வரவேண்டும் அல்லவா? அப்படி இல்லையேல் நான் என்ன செய்யமுடியும் என்று அவர் கேட்டார்

வேறு வேறு வார்த்தைகளில் இந்த வினா அரசியலில் ஆர்வமுடைய நடுநிலையாளர்களில் அத்தனை பேரிடமும் எழுகிறது. எனக்கே இந்த கேள்வி சில ஆண்டுகளுக்கு முன்பு வந்திருக்கிறது. கேரளத்தின் முக்கியமான ஜனநாயகப் போராளியாகிய டாக்டர் எம்.கங்காதரன் எனது ஆசிரியர். அவரிடம் இக்கேள்வியை நான் கேட்டபோது அவர் சொன்ன பதில் தெளிவான ஒன்று.

இந்தியா முழுக்க தேர்தல்களில் வெற்றி தோல்வி என்பது ஐந்து சதவீதம் அல்லது பத்து சதவீதம் வாக்குகளின் வித்தியாசத்தில்தான் அமைகின்றது. தொகுதிகளில் வேட்பாளரை நிறுத்தும்போது சாதி, மதம் எல்லாம் ஏன் பார்க்கிறார்கள்? மக்களனைவரும் சாதிமதம் பார்த்து வாக்களிப்பதில்லை. வாக்காளர்களில் ஒரு பத்துசதவீதம்பேர்தான் சாதியடிப்படையில் வாக்களிப்பார்கள். ஆனால் அந்த பத்துசதவீத வாக்கே தேர்தல்முடிவை மாற்றிவிடும். அதேபோல ஒருவர் நேர்மையானவர் என்ற ஒரே காரணத்தாலேயே ஒரு தொகுதியில் பத்து சதவீத வாக்குகளை வாங்க முடியுமென்றால் அதற்கு அடுத்த தேர்தலில் அத்தனை கட்சிகளும் அங்கு ஒரு நேர்மையானவரை மட்டுமே தேர்தலில் நிறுத்தமுடிவெடுக்கும்.

ஒரு கட்சியின் சின்னத்திலோ ஒரு தலைவரின் ஆதரவிலோ எவர் நின்றாலும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க முடியும் என்ற வாய்ப்பு இருக்கும்போது மட்டும்தான் யாரை வேண்டுமானாலும் அங்கு நிறுத்தலாம் என்ற துணிவு அரசியல் கட்சிகளுக்கு வருகிறது. தேர்தலில் சாதி, மதம், உள்ளூர் செல்வாக்கு போன்றவற்றுக்கு சமானமாகவே நேர்மையும் ஓர் அளவுகோலாக ஆகும் என்றால், வெறும் பத்துசதவீதம்பேர் நேர்மையாளருக்கே ஓட்டுப் போடுவார்கள் என்பது தெளிவாகத்தெரிந்தால் உறுதியாகவே மாற்றம் நிகழும். உண்மையில் பல வட இந்திய மாநிலங்களில் கண்கூடாகவே இந்த மாற்றம் நிகழ்ந்துவருகிறது.நேர்மை, வளர்ச்சி அரசியல் இரண்டும் வாக்குகளைப்பெற்றுத்தரும் என பிகார், ஒரிசா ,சட்டிஸ்கர், கோவா போன்ற  மாநில அரசுகளின் அரசியல் நமக்குக் காட்டுகிறது.

நான் அறிந்த காலம் முதலே கேரள அரசியலில் கணிசமான தொகுதிகளில் வேட்பாளரின் தனிப்பட்ட நேர்மை என்பது மக்களிடையே ஓரு முக்கியமான அளவுகோலாகத்தான் உள்ளது. அதனால் தான் இடதுசாரிகள் மட்டுமல்ல காங்கிரஸ் கட்சியும் கூட தன் வேட்பாளரின் தனிப்பட்ட நேர்மையைக் கருத்தில் கொண்டே போட்டியிடுவதற்கு இடங்களை அளிக்கிறது. விதிவிலக்குகள் உண்டு, ஆனால் இங்கு போல நேரடியாகவே அரசியல் ரவுடிகள் ஆட்சிக்கு வருவது அரிது.

ஏறத்தாழ கேரளஅரசியலின் சாயல் கொண்ட குமரி மாவட்டத்தில் நான் அறிந்தவரை பெரும்பாலான அரசியல்வாதிகள் தனிப்பட்ட முறையில் நேர்மையானவர்கள் என்றே அறியப்பட்டிருக்கிறார்கள். மிகக்குறைவான அரசியல்வாதிகள் மீதுதான் ஊழலின் கறை உள்ளது இங்கு. அவர்கள் பெரும்பாலும் அ.தி.மு.க, தி.மு.க அரசியலைச் சேர்ந்தவர்கள். வெறும் விசுவாசிகள். வாக்குகள் அவர்களுக்கு விழுவதில்லை, அவர்களின் கட்சிக்கும் சின்னத்திற்கும் விழுகின்றன. அவர்களுக்கு தனிப்பட்ட முகமோ அடையாளமோ இல்லை. அரசியலில் அவர்கள் நீடிப்பதுமில்லை.

என் இளமைப்பருவத்தில் திருவட்டாறு சட்டமன்றத் தொகுதியில் மார்க்ஸியக் கம்யூனிஸ்டுக் கட்சியைச்சேர்ந்த ஜே.ஹேமச்சந்திரன்  ஸ்தாபனக் காங்கிரஸ் கட்சியையும் பின்னர் ஜனதாக் கட்சியையும் சேர்ந்த ஜேம்ஸ் என்ற இருவர் மாறி மாறி போட்டியிட்டு வென்றிருந்தனர். பல ஆண்டுக்காலம் தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினராக இருந்தனர் அவர்கள்.  இருவருமே ஒருவர் மீது ஒருவர் தனிப்பட்ட முறையில் எந்தகுற்றச்சாட்டுகளையும் சுமத்தமாட்டார்கள் ஏனென்றால் இருவருமே அப்பழுக்கற்ற நேர்மைஉடையவர்கள் என்பது மக்களுக்குத் தெரியும்.

இந்தக்கட்டுரைக்காக நாகர்கோயில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பட்டியலை எடுத்துப்பார்த்தேன். நேசமணி,தாணுலிங்கநாடார், காமராஜர், குமரி அனந்தன்,டென்னிஸ், பொன் ராதாகிருஷ்ணன், ஏ,வி.பெல்லார்மின். காங்கிரஸ், கம்யூனிஸ்டு, பாரதிய ஜனதாக் கட்சியைச்சேர்ந்தவர்கள். ஆனால் அனைவருமே அரசியல் நேர்மை கொண்டவர்கள். அவர்கள்மேல் தேர்தலின்போதுகூட குற்றச்சாட்டுகள் எழுந்ததில்லை. அவர்களை எதிர்த்துப்போட்டியிட்ட பொன் விஜயராகவன், இஸ்மாயீல் சாகிப் போன்றவட்கள்கூட நேர்மையான அரசியல்வாதிகளே.

ஏனென்றால் இன்னமும்கூட குமரிமாவட்டத்தில் வாக்களிக்கும் கணக்கில் அரசியல்நேர்மை ஒரு அளவுகோலாக மக்களிடையே உள்ளது. அதிதீவிரமான கட்சிவிசுவாசம், தலைமைவிசுவாசம் போன்றவை நாகர்கோயில், அகஸ்தீஸ்வரம் போன்ற தமிழக மையநிலத்துக்கு அணுக்கமான பகுதிகளில், திராவிட அரசியல் கொண்ட கட்சிகளுக்குள் மட்டுமே உள்ளன. அவர்கள்தான் எப்போதும் ஊழல்வாதிகளை, விசுவாசிகளை தேர்தலில் வேட்பாளர்களாக நிறுத்துகிறார்கள்

அப்படியென்றால் சிக்கல் இருப்பது அரசியல்வாதிகளிடம் அல்ல. நேர்மையை மக்கள் ஓர் அளவுகோலாக கொள்வதில்லை என்று அரசியல்வாதிக்கு தெரியுமென்பதனால்தான் தொடர்ந்து நேர்மை இல்லாதவர்கள் தேர்தலில் நிற்கிறார்கள். கட்சிகளுக்கு அப்பாலும் நேர்மையானவர்கள் அரசியலில் இருக்கிறார்கள். ஏன் அவர்களுக்கு வாக்களிக்கக்கூடாது? நமக்கு நேர்மை தேவை, அதை நாம் கணக்கில்கொள்கிறோம் என ஏன் நாம் அரசியல்வாதிகளுக்குக் காட்டக்கூடாது?

தமிழகம் முழுக்க இந்தத் தேர்தலில் ஐம்பதே தொகுதிகளில் நேர்மையான சுயேச்சைகள் ஆளுக்கு இருபதாயிரம் வாக்குகள் பெற்று அந்தத் தொகுதிகளின் வெற்றிதோல்வியைத் தீர்மானிப்பார்கள் என்றால் என்ன ஆகும்? நேர்மை ஒரு அர்சியல் கணக்கு என்பதை அரசியல்வாதிகள் புரிந்து கொள்வார்கள். அது உடனடியாக தேர்தல் சார்ந்த அனைத்து கணிப்புகளிலும் கண்கூடான மாற்றத்தை உருவாக்கும் என்பதில் எந்த சந்தேகமும் கிடையாது.

இதற்கு எதிராக இருக்கும் மனநிலை என்ன? தேர்தலை கிரிக்கெட் போல இரண்டு கட்சிகளின் போட்டியாக மட்டுமே பார்ப்பதுதான். மிகமிக முதிர்ச்சியற்ற, சிறுவர்களுக்குரிய, மனநிலை இது. ஆனால் இங்கே படித்தவர்களுக்குக்கூட இந்த மனப்போக்கே உள்ளது. இந்தமனநிலையை நாம் எள்ளிநகையாடவேண்டும். மூர்க்கமாக நிராகரிக்கவேண்டும். தேர்தல் என்பது ஒரு விளையாட்டு அல்ல. இரு தரப்பினர் விளையாட நாம் வேடிக்கைபார்க்கவில்லை. அது ஒரு சந்தை. நமக்குத்தேவையானவற்றை நாம் தேர்வுசெய்கிறோம். நமக்கு பிடித்ததைத்தான் தேர்வுசெய்யவேண்டும். கடைக்காரன் தூக்கி நம் முன்னால் போடும் இரண்டு துணிகளில் ஒன்றை தேர்ந்தெடுக்க ஒப்புக்கொள்வோமா என்ன? மேலே அடுக்கில் மறைந்திருப்பதைக்கூட எடுத்துபோடும்படி கேட்கிறோம் அல்லவா?

எங்கள் தொகுதியில் அப்படிப்பட்ட நேர்மையாளர்கள் போட்டியிடவில்லை என்றால் என்ன செய்வது என்ற கேள்வி எழும். ஒவ்வொரு தொகுதியிலும் வாக்காளர்ப் பட்டியலை பார்த்தீர்கள் என்றால் மக்களுக்கு நன்மை செய்யும் எண்ணம் கொண்ட ஒரு வேட்பாளராவது இல்லாமல் இருக்க மாட்டார்கள். அது இந்தியாவின் அடிப்படை ஜனநாயக பண்பின் ஓர் இயல்பு .நாம் அவர்களை தெரிந்து கொள்வதில்லை நம்மிடம் வந்து சேருமளவுக்கு பிரச்சாரம் செய்வதற்கு அவர்களிடம் பணபலம் இருப்பதில்லை.

சரி,நேர்மையானவர்கள் சட்டமன்ற உறுப்பினராக வந்தாலும்கூட ஆட்சியைப் பிடிக்கும் கட்சிகள் ஊழலில் மிதப்பவைதானே என்ற கேள்வி எழலாம். ஆனால் எந்தக் கட்சியாயினும் அந்தக் கட்சிக்குள் நேர்மையை தங்கள் அடையாளமாக கொண்டவர்கள் மேலெழுந்து வருவார்கள் என்றால், அவர்களுக்கு கட்சிக்குள் ஒரு குரல் இருக்கும். உடனடியாக திடீரென்று மாற்றங்களை அவர்களால் செய்ய முடியாமல் போகலாம். ஆனால் அவர்களுடைய பங்களிப்பு அரசியலில் ஒரு திருப்பு முனையாகத்தான் அமையும். மாற்றங்கள் அப்படி மெல்லமெல்லத்தான் நிகழும். ஒர் எளிய தொடக்கமாகவே தென்படும்.

 

 

முந்தைய கட்டுரைசென்னையில் நண்பர்களுடன்…
அடுத்த கட்டுரைதினமலர் கடிதங்கள்