ஒவ்வொரு தேர்தலிலும் நாம் அடிக்கடி காதில் கேட்கும் ஒரு ஏளனக்குரல், ‘அவர்களுக்கு வைப்புத்தொகைகூட திரும்பக்கிடைக்காது’ .டெபாசிட் காலி என்பது ஒரு கேலிச் சொல்லாகவே நம் நாவில் விளங்குகிறது. ஓர் அரசியல் தரப்பை மட்டம் தட்டவும், இழிவுபடுத்தவும் அவர்களுக்கு தேர்தலில் படுதோல்வி தான் கிடைக்கும் என்ற சொற்றொடரைத்தான் நாம் பயன்படுத்துகிறோம்.
ஜனநாயகத்தை புரிந்து கொண்ட ஒருவர் இந்த கூற்றிலுள்ள அபத்தத்தை அறிந்திருப்பார். ஒரு தரப்பு முழுமையாகவே மக்களால் புறக்கணிக்கப்படும் என்றால் அது இழிவானதா என்ன ?மக்கள் அத்தனை பேரும் ஒரு தரப்பை எதிர்க்கிறார்கள் என்பதனால் அது தவறானதாகிவிடுமா என்ன? இன்று நாம் எதையெல்லாம் நம்முடைய அடையாளங்களாக தூக்கிப்பிடிக்கிறோமோ அவையனைத்தும் ஒரு காலத்தில் மக்களால் முழுமையாக புறக்கணிக்கப்பட்டவைதானே? எதிர்க்கப்பட்டவைதானே ?
மக்களின் மனநிலைகள் எப்போதுமே தற்காலிகமான உணர்ச்சிப் பெருக்குகள் சார்ந்தவை .யேசுவை சிலுவையில் அறையக்கொண்டுவரும்போது பிலாத்தோஸ் ‘இந்த நீதிமானை நான் தண்டிக்கமுடியாது. உங்களுக்கு ஒருவரை விடுதலை செய்வதற்கான வாய்ப்பை தருகிறேன்’ என்று சொன்னான். மக்கள் யேசுவை சிலுவையில் அறையும்படியும், தண்டிக்கப்பட்டிருந்த பரபாசை விடுதலை செய்யும்படியும் தான் கோருகிறார்கள். பிலாத்தோஸ் தன் கைகளைக் கழுவி ‘இந்த பாவத்தில் எனக்குப் பங்கில்லை’ என்று சொன்னான். மக்கள் ‘அந்தப்பழி எங்கள் மேல் விழட்டும்” என்று கூச்சலிட்டனர்
மக்கள் வரலாறு முழுக்க சமகாலத்தில் யேசுவுக்கு நிகரானவர்களைத்தான் சிலுவையில் அறைகிறார்கள் பரபாஸ்களைத்தான் தங்களுக்குரியவர்களுக்காக தேர்ந்தெடுக்கிறார்கள். மக்கள் மீதான் வெற்றி என்பது முக்கியம்தான். ஜனநாயகத்தில் மக்களின் குரலே இறுதியானது. தங்களுக்கு என்ன தேவை என்பதை அவர்கள்தான் முடிவெடுக்கவேண்டும். அவர்கள் தவறாக முடிவெடுத்தாலும் அதுவே அவர்களைக் கட்டுப்படுத்தும். அதன் அழிவுகளை அவர்கள் அடையத்தான் வேண்டும்
ஆனால் அக்காரணத்தாலேயே மக்களின் தீர்ப்பு உன்னதமானது, சரியானது என்றில்லை. ஓர் அரசியல் தரப்பு அது சொல்வது முற்றிலும் உண்மை என்று நம்பினால், அதை மக்கள் ஏற்றுக் கொள்கிறார்களா என்று பார்க்கவேண்டியதில்லை. தங்கள் அர்ப்பணிப்பினாலேயே அதை மக்கள்முன் தொடர்ந்து முன் வைக்கலாம். பலசமயம் முற்போக்கான, சரியான கருத்து தவறான தருணத்தில் முன்வைக்கப்படுவதனால் மக்கள் ஆதரவில்லாமல் இருக்கும். மக்கள் மனம் அப்பிரச்னையை புரிந்து கொள்ளும் அளவுக்கு நெருக்கடியை அப்போது அடைந்திருக்காது. ஒரு கருத்துக்கான காலம் கனிவதற்கு முன்னாலேயே அந்தக் கருத்து முன்வைக்கப்படும்போது அது எவருக்குமே பொருள்படாது. எவருமே அதைக் கவனிக்கவும் மாட்டார்கல். ஆனால் அதை முன்வைப்பவர்களின் தொடர் செயல்பாடுகள் இர்க்கும்போது அதற்கான தருணம் வரும்போது அக்கருத்து அவர்களின் கண்ணுக்குப்படுகிறது.
‘உதாரணமாக 1985-86கள் முதல் ஈரோடு சேர்ந்த காந்தியவாதியும் ,சுற்றுச்சூழல் இயக்கங்களின் முன்னோடியுமான டாக்டர் ஜீவானந்தம் அவர்களுடன் எனக்குத் தொடர்பு உண்டு. என் ‘இன்றைய காந்தி’ என்னும் நூலை அவருக்குத்தான் சமர்ப்பண செய்துள்ளேன். அன்று நொய்யல் ஆறு மாசுபடுவது, திருப்பூர் பகுதியின் நிலத்தடி நீர் ரசாயனமயமாவது குறித்து அவர் மக்களிடையே தொடர் பிரச்சாரம் செய்து வந்தார். தன் சொந்தச் செலவில் துண்டுப் பிரசுரங்களை அச்சிட்டு ஊர் ஊராக கொண்டு சேர்த்தார். அனைத்து இடங்களிலும் அது மக்களால் ஏளனமாகவே பார்க்கப்பட்டது. அன்றிருந்த தொழிலாளர் அமைப்புகள் அது மக்களின் தொழில்வாய்ப்புகளை கெடுக்கும் உத்தியென்றே பார்த்தனர்.
அன்று தேர்தல்களில் அச்செய்தியை முன்வைத்து ஜீவா அவர்கள் பிரச்சாரம் செய்யும் போது பத்து பேர் கூட திரும்பிப் பார்த்ததில்லை ஆனால் அடுத்த பத்தாண்டுகளில் ஈரோடு, திருப்பூர் ,கோவை வட்டாரங்களின் மிக முதன்மையான பிரச்னையாக எழுந்து வந்தது சுற்றுச்சூழல்தன். இன்று அங்கு போட்டியிடும் அத்தனை கட்சிகளுமே சுற்றுச் சூழல் சார்ந்த வாக்குறுதிகளை மக்களுக்கு அளித்தாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளன. மக்களே ஒன்று சேர்ந்து ‘சிறுதுளி’ போன்ற அமைப்புகளின் வழிகாட்டலில் ஏரிகளை செப்பனிடவும், நொய்யல் ஆற்றின் நீர்வழிகளை மீட்கவும் களமிறங்கிச் செயல்படக்கூடிய நிலை வந்துள்ளது.
தமிழகம் முழுக்க இன்று சுற்றுச் சூழல் சார்ந்த ஒரு மெல்லிய விழிப்புணர்வு பரவி வருகிறது. அடுத்த பத்தாண்டுகளில் முக்கியமான கோரிக்கையாகவே அது அமையும். இந்தியாவிற்கு மன்னர்கள் விட்டு சென்ற பெரும் கொடைகள் என்றால் ஏரிகளும் கோயில்களும்தான். தமிழகத்தின் பொற்காலம் என்பது சோழர்களின் ஆட்சிக்காலகட்டம்தான். அதற்கு முக்கியமான காரணம் இன்றும் தமிழகத்தின் வளத்திற்கு அடிப்படையாக அமைந்துள்ள மாபெரும் ஏரிகளில் பெரும்பாலானவை சோழர்களால் வெட்டப்பட்டவை .தமிழகத்தின் விளைநிலங்களின் அளவே மும்மடங்கு பெருகியது.
அதன் பீறகு மதுரை நாயக்கர்களின் ஆட்சிக்காலத்தில் இன்றும் தென்னகத்தின் வாழ்க்கைக்கே ஆதாரமாக இருக்கும் மாபெரும் கண்மாய்கள் வெட்டப்பட்டன. புஞ்சை நிலம் முழுக்க நீர் கொண்டு வரப்பட்டு வேளாண்மை பெருகியது. அவ்வேளாண்மையின் மிச்ச செல்வத்தைக் கொண்டுதான் மிகப்பெரிய கோயில்கள் கட்டப்பட்டன. அவை கல்விக்கும் கலைக்கும் உறைவிடங்களாக இருந்தன.
ஆனால் இன்று தமிழகம் முழுக்க அந்த மாபெரும் ஏரிகள் சிதைந்து கிடக்கின்றன. பெரும்பாலான ஏரிகளுக்கு கரைகள் இல்லை. நீர்வழிகள் ஆக்ரமிக்கப்பட்டுள்ளன. நீர்பிடிப்பு பகுதிகளில் கருவேல முட்களை பயிரிட்டு காடாக மாற்றிவிட்டனர். என் இல்லத்துக்கு அருகே நடக்கும் தொலைவுக்குள்ளேயே சோழர்களாலும் நாயக்கர்களாலும் வெட்டப்பட்ட நான்கு மாபெரும் ஏரிகள் முப்பதாண்டுகளாக புதர்மண்டி நீரின்றி கிடக்கின்றன.
தமிழகம் தன் தேவைக்கு அதிகமாகவே மழை பெய்யும் பகுதி. ஆனால் அந்த மழை வருடத்தில் பதினைந்து இருபது நாட்கள் ஒட்டுமொத்தமாக பெய்து முடிந்துவிடுகிறது. ஆகவேதான் இத்தனை ஏரிகளை வெட்டி அந்த மழை நீரை முழுக்க சேகரித்து வருடம் முழுக்க பயன்படுத்தும் முறையை மன்னர்கள் உருவாக்கினார்கள். சுதந்திரத்துக்குப் பிறகு பொதுப்பணித்துறையிடம் ஒப்படைக்கப்பட்ட இந்த நீர்நிலைகள் அனைத்துமே அதிகாரிகளின் உதாசீனத்தால் கைவிடப்பட்டன. முன்பு சோழர் காலத்திலும், நாயக்கர் காலத்திலும் ஏரிகளை பராமரிக்கவும் நீர்நிலைகளை பகிர்ந்து கொள்ளவும் உருவாக்கப்பட்டிருந்த பல்வேறு குடிமராமத்து அமைப்புகள் அழிந்தன.
நமது ஆலயங்களும் அதே போல கைவிடப்பட்டு வெறும் வணிக மையங்களாக்கப்பட்டுள்ளன. அற்புதமான சிற்பங்கள் மேல் பெயிண்ட் பூசப்பட்டு நாசம் செய்யப்படுகின்றன. மணல் வீச்சு என்னும் முறைப்படி உயர் அழுத்தத்தில் மணலை சிற்பங்களின்மேல் பீய்ச்சி அடித்து அதன் நுட்பங்கள் அனைத்தையும் மழுங்கடிக்கிறார்கள். உண்மையில் தமிழகத்தில் உள்ள மகத்தான சிற்பங்களில் பாதிக்கு மேற்பட்டவை சென்ற இருபதாண்டு காலத்தில் அழிந்துவிட்டன.
நம் ஏரிகள், ஆலயங்களின் அழிவைப்பற்றி பல்வேறு இதழாளர்கள் தொண்ணூறுகளிலேயே எழுதிவந்தனர். நானே பல கட்டுரைகள் எழுதியிருக்கிறேன். ஆனால் வாசகர்களின் ஆர்வம் அவற்றின்மேல் உருவாகவே இல்லை. அனேகமாக வாசகர்கடிதங்களே வராது. ஆனால் இன்று நாளிதழ்களில் ஏரிகளின் அழிவைப்பற்றி எழுதினால் பெரும் அளவுக்கு மக்களின் ஆதரவு உள்ளது. பிரச்சினை அவர்களை அணுகி விடது என்று பொருள்
ஆகவே மக்களுக்கு ஆர்வமில்லை என்பதனால் ஓர் அரசியல் தரப்பை பேசக்கூடாது என்றில்லை. அப்படி மிகச்சிறுபான்மையினரால் பேசப்படும் அரசியல் தரப்பு வீணானதோ கேலிக்குரியதோ அல்ல. அவ்வரசியல்தரப்பின் பொறுத்தப்பாடு, அதன் இன்றியமையாமை மட்டுமே நம்மால் கவனிக்கப்படவேண்டும்.
மக்களுக்குப் பிடித்தமானவை வளரவேண்டும் என்றால் இங்கே சினிமாவும் சாப்பாடும் அன்றி வேறெந்த விஷயமும் பேசப்பட முடியாது. சில சமயம் மக்களுக்கு தேவையானவை அதே மக்களால் புரிந்து கொள்ளப்படமுடியாதவையாகவும், மக்களால் வெறுக்கப்படுவதாகவும் இருக்கக்கூடும். ஜனநாயகத்தில் அவற்றை பேசுபவர்களை முக்கியமானவர்களாகக் கருத வேண்டும்.
எப்போதுமே வெல்லும் தரப்பில் அல்ல தோற்கும் தரப்பில் தான் அதிகமான நியாயங்கள் இருக்கும் என்பதை கருத்தில் கொள்வோம். நாளைக்குரிய விஷயங்கள் மிகக்குறைவானவர்களாலேயே பேசப்படும் என்பதை நினைவில் வைப்போம். நாம் சற்றேனும் சிந்திப்பவர் என்றால் பெரும்பான்மையினர் பேசுவதை அல்ல, குறைவானவர்களால் கவனிக்கப்பட்டதையே நாம் எடுத்துப்பேசுவோம்.