மனலீலை

index

 

அன்பு ஜெமோ,

தளத்தில் வேறெதையோ தேடிக்கொண்டிருந்தபோது இது கிடைத்தது.

“நீங்கள் வாசிக்கவேண்டிய நிறைய நூல்கள் உள்ளன. குர்ஜீப் எழுதிய ஆன்மீக நூல்களை நீங்கள் வாசிக்கவேண்டும். ஜென்கதைகள் கவிதைகளை வாசிக்கவேண்டும். மிர்தாதின் புத்தகம் ஆகியவற்றை வாசிக்கவேண்டும். அதன்பிறகுதான் நீங்கள் எழுதவேண்டும். கலீல் கிப்ரானைப்போன்ற ஒரு கவிதையை எழுதிவிட்டு ஓஷோவைப்பற்றிப் பேசுங்கள். ஓஷோவைப் புரிந்துகொள்வதற்கு நிறைய அறிவு தேவைப்படும். காதல்கதைகளை எழுதிக்கொண்டிருக்கும் தமிழ் எழுத்தாளர்களுக்கு ஓஷோவைப் புரிந்துகொள்ள முடியாது.

ஓஷோ காமத்திலே ஈடுபட்டார் என்று சொல்கிறீர்கள். ஓஷோ எந்தப் பெண்ணிடமும் உறவு வைத்துக்கொண்டதில்லை. அதை அவரே சொல்லியிருக்கிறார். அவர் அவர்களை மன அளவிலே லீலையிலே ஈடுபடுத்தினார். அதையெல்லாம் புரிந்துகொள்ள நீங்கள் நிறைய வாசிக்கவேண்டும். நீங்கள் My way the way of white clouds என்ற நூலை வாசிக்க ஆரம்பிக்கலாம்.”

இவ்வளவு புத்தகங்கள் வாசிக்க வேண்டியிருக்கிறது. வாசிப்பதாக வாக்குறுதி வேறு கொடுத்திருக்கிறீர்கள். கலீல் ஜிப்ரனைபோல் கவிதைகளை வேறு எழுத வேண்டியிருக்கிறது. இதையெல்லாம் எப்போது செய்யப்போகிறீர்கள் என்று திகைப்பாக இருக்கிறது. இதையெல்லாம் படிப்பதற்கு முன்பே அவசரமாக எழுதிவிட்டவைகளையும் என்ன செய்வது என்று புரியவில்லை.

பி.கு: நீங்கள் எழுதிய காதல் கதைகள் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. அவற்றின் சுட்டிகளை அனுப்பவும். மேலும் மன அளவில் லீலையில் ஈடுபடுவது எப்படி என்பது பற்றி புத்தகம் ஏதேனும் தேடிப்  படித்திருந்தால் அதையும் அனுப்பவும்.

அன்புடன்,

ராஜன் சோமசுந்தரம்

 

அன்புள்ள ராஜன்,

ராலேயில் கோடைகால இசைநிகழ்ச்சிகள் தொடங்கியிருக்குமென நினைக்கிறேன்

இப்படி நான் வாசிக்கவேண்டிய நூல்கள் நிறைய உள்ளன. முன்பு அந்திமழை பத்த்ரிகையில் ஒரு டிவிட்டரி மங்கை புகழ் பெற்றதைப்பற்றி நான் பொறாமை கொள்வதாகவும் நானும் கடுமையாக உழைத்தால் புகழ்பெறலாம் என்றும் ஒருவர் எழுதியிருந்தார். கடுமையாக உழைப்பதற்கும் ஓர் எல்லை உண்டு அல்லவா?

மேலே சொன்ன கடிதத்திலிருந்து ‘மன அளவில் லீலையில்’ ஈடுபடாமல் ஓஷோவை புரிந்துகொள்ள முடியாதென்றுதான் அவர் சொல்கிறார் என்றுதான் நான் புரிந்துகொண்டேன். அதெல்லாம் எனக்கு இனிமேல் சாத்தியமில்லை என்பதனால் விட்டுவிட்டேன்.

ஆனால் நீங்கள் கேட்கும்போது சந்தேகமாக இருக்கிறது. wet chat என்று ஆங்கிலத்திலே சொல்லும் ஈரமான உரையாடலைத்தானே ’மனலீலை’ என்று சொல்கிறார்கள்? நான் தான் தப்பாகப்புரிந்துகொண்டேனா?

 

ஜெ

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 28
அடுத்த கட்டுரைகனவுகளின் முதற்படியில்- விஷ்ணுபுரம் முதல் பதிப்பின் முன்னுரை