கனவுகளின் பரிணாமம்: விஷ்ணுபுரம் இரண்டாம் பதிப்பின் முன்னுரை

Vishnupuram wrapper(1)

விஷ்ணுபுரம் நாவலின் ஐந்தாம் பதிப்பு கிழக்கு பிரசுரமாக வெளிவருகிறது. அதன் இரண்டாம் பதிப்புக்கு [மூன்றாம் அச்சு]  நான் எழுதிய முன்னுரை அதில் சேர்க்கப்பட்டுள்ளது. அட்டை ஓவியம் ஷண்முகவேல்

 Quan-Am-Thien-Thu-b

விஷ்ணுபுரம் முதற்பதிப்பு வெளிவந்தபோது தமிழ் வாசகச்சூழல் சார்ந்து எனக்கு பல தயக்கங்கள் இருந்தன. விஷ்ணுபுரம் போன்ற உள்விரிவு நிரம்பிய, சிக்கலான பெரிய நாவல் இதற்குமுன் தமிழில் ஏதுமில்லை. பல்வேறு அறிவுத்துறைகளையும் நூல்களையும் தொட்டு வாசித்து விரித்தெடுக்கப்பட வேண்டிய நாவலும் பிறிது இருக்கவில்லை. எனவே, பல பகுதிகள் சுருக்கப்பட்டன; பல பகுதிகள் எளிமைப்படுத்தப்பட்டன; தகவல்கள் குறைந்தபட்சமாக்கப்பட்டன.

எதிர்பார்த்தது போலவே தமிழ் சிற்றிதழ் உலகின் அறிந்த தரப்புகளிடமிருந்து ‘படிக்க சிரமமான நாவல், நாவலில் தத்துவம் எதற்கு?’, ‘பழைய விஷயங்கள் சார்ந்த தகவல்கள் அதிகம்’ போன்ற விமரிசனங்கள் எழுந்தன. எதிர்பாராத விஷயம் மிகப் பரவலாக உருவான புத்தம் புதிய வாசிப்புத்தளம். சிக்கலான இந்நாவலை வரிவரியாகக் கூர்ந்து படித்த வாசகர்கள் அநேகம். பல கடிதங்கள், கட்டுரைகள் பிரசுரமாகவில்லை. பதிவானது ராஜசேகரனின் ‘விஷ்ணுபுரம் திறனாய்வு’ என்ற நூல் மட்டுமே.

அக்கப்போரின் தளத்தை மீறாத பல குரல்கள் தொடர்ந்து எழுந்த போதிலும் உலக இலக்கிய அறிமுகமும் இலக்கிய நுண்ணுணர்வும் கொண்ட ஒரு புதிய தலைமுறை வாசகர்களை இந்நாவல் பெற்றது. எந்த விமரிசகரும் நிறுவாமலேயே தமிழிலக்கியத்தில் முதன்மையான இடத்தையும் அடைந்தது.

அதே சமயம் இத்தகைய படைப்புக்கு அவசியமான விரிவான விமரிசன உரையாடல் நடைபெறவில்லை என்றும் எனக்குப் படுகிறது. நமது காவிய, சிற்ப மரபுடன் இப்படைப்புக்கு உள்ள உறவும் இந்திய சிந்தனை மரபும் தமிழக வரலாறும் இதில் மறுஆக்கம் செய்யப்பட்டுள்ள முறையும் விமரிசனப் பரிமாற்றம் மூலம் தெளிவடையக் கூடியவை. அத்தகைய வாய்ப்பு இல்லாமையினால் கூரிய வாசகர்கள் பலர்கூட பல தளங்களைத் தவறவிட்டுள்ளமை என் கவனத்திற்கு வந்துள்ளது.

பல்வேறு மரபுசார்ந்த அறிவுத்துறைகள் இந்நாவலில் உள்ளன. அவற்றில் பல, சமகாலத் தொடர்பு அற்றவை. அரைகுறை நூல்கள் மூலம் தொகுக்கப்பட்டவை. இத்தகைய ஆக்கத்தில் பெரும் பிழைகள் ஏற்படும் வாய்ப்பு அதிகம். அப்படிப் பல பிழைகள் சுட்டிக்காட்டப்பெறும் என எதிர்பார்த்தேன். விஷ்ணுபுரம் சார்ந்து எழுதப்பட்ட விமரிசனங்களில் தகவல் பிழைகளைச் சுட்டிக் காட்டியவையே அளவில் மிக அதிகம். ஆனால் இம்மறுபதிப்பில் திருத்திக்கொள்ளும்படி உண்மையான தகவல் பிழை ஏதும் இதுவரை குறிப்பிடப்படவில்லை. தனிப்பட்ட கடிதங்களில் குறிப்பிடப்பட்ட சில சிறு பிழைகள் அகற்றப்பட்டுள்ளன; அச்சுப் பிழைகளும் உச்சரிப்புப் பிழைகளும்.

இன்று இந்நாவலின் வாசகர்களாக முன்னிலைப்பட்டிருப்பவர்களை வைத்துப் பார்க்கையில் நீளம், சிக்கல், தத்துவார்த்தத் தன்மை முதலியவை குறித்து நான் அஞ்ச வேண்டியதில்லை என்று படுகிறது. என்றாவது ஒருநாள் இது உலக இலக்கிய ஆர்வலர் பார்வைக்கும் போகக்கூடும். இக்காலகட்டத்தில் சர்வதேச அரங்கில் முன்னிறுத்தப்பட்ட படைப்புகளுக்கு இணையானதோ ஒருபடி மேலானதோ ஆகும் என விஷ்ணுபுரம் குறித்து என்னால் மிக உறுதியாகக் கூற முடியும் (ஆயினும் இந்தச் சந்தை யுகத்தில் பல மதிப்பீடுகள் உற்பத்தி செய்யப்படுகின்றன என்பதையும் நான் மறக்கவில்லை). எனவே முழுமைப்படுத்தப்பட்ட பதிப்பு அவசியம் என்று பட்டது. இது பழைய கைப்பிரதியுடன் ஒப்பு நோக்கப்பட்டு திருத்தி ஆக்கப்பட்ட வடிவம்.

ஒரு தத்துவ நூலில் வரும் தத்துவ விவாதத்திற்கும் இலக்கியப் படைப்பில் வரும் தத்துவ விவாதத்திற்கும் அடிப்படைகள் வேறு வேறு. இலக்கியப் படைப்பு தத்துவ விவாதத்தை நடித்துக் காண்பிக்கிறது. அவ்வளவே. தத்துவத்தின் தனிமொழியில் அது இயங்குவதில்லை; இலக்கியத்தின் தனிமொழியிலேயே இயங்குகிறது. விஷ்ணுபுர ஞானசபை விவாதம் படிமங்களும் உருவகங்களும் நிரம்பிய புனைவு மொழியில் உள்ளது. அது தத்துவ மொழி அல்ல என்பதை தத்துவ அறிமுகம் உள்ள வாசகர் அறிவர். நாவலின் அப்பகுதியின் இயல்பும் நோக்கும் புனைவுத் தருணமே. இதையே இந்நாவலில் குதிரை இலக்கணம் முதல் சமையற்கலைவரை வரும் அத்தனை தகவல்களைப் பற்றியும் கூறலாம். அவையெல்லாம் மறுஆக்கம் செய்யப்பட்டுள்ளன. மறுதொகுப்பு, புதிய தருணங்களுடன் இணைப்பது, சமகால அர்த்தங்களைப் படியச் செய்வது ஆகியவற்றினூடாக இது நடைபெறுகிறது. இது புது நாவலின் புனைவு உத்திகளில் முதன்மையானது. யதார்த்தவாத, நிதரிசனப் பாங்குள்ள நாவல்களில் அரை நூற்றாண்டு காலத்தைச் செலவிட்ட தமிழ்ச்சூழலில் புனைவுண்மையை தகவல்சார் உண்மையாக மயங்கும் போக்கு உள்ளது. நாவல் தகவல்களிலிருந்து உருவாவது; அதே சமயம் அது தகவல்களுக்கு எதிரானதும் தகவல்களைத் தாண்டிச் செல்வதும் ஆகும். இலக்கிய விமரிசனத்தில் பலவாறு வலியுறுத்தப்பட்ட இந்தக் கருத்தை இங்கு குறிப்பிட வேண்டிய அவசியத்தை விஷ்ணுபுரம் சார்ந்து எழுதப்பட்ட சில விமரிசனங்களைப் படித்தவர்கள் உணர்வார்கள். படைப்பின் துவக்கத்தில் படைப்பாளியே இப்படி விளக்கிப் பேச நேர்வது சற்று சங்கடம்தான். தமிழில் வேறு வழி இல்லை.

இந்த செம்மை செய்யப்பட்ட முழுப் பதிப்பு வாசகர்களின் விரிவான கவனத்திற்கும் விமரிசன உரையாடலுக்கும் ஆளாகும் என்று நம்புகிறேன்.

ஜெயமோகன்

நவம்பர் 2000

முந்தைய கட்டுரைபிறந்தநாள் கடிதங்கள்
அடுத்த கட்டுரைதினமலர் கடிதங்கள்