அறம் – கதையும் புராணமும்

 

1

அன்புள்ள ஜெ,

வழக்கமாக என்னிடம் வைத்தியத்திற்கு வரும் நகரத்தார் பெரியவர் அவர். எப்போது வந்தாலும் கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு செல்வார். மரபிலக்கியத்தில் ஓரளவு நல்ல பரிச்சயம் உடையவர். கம்பன் மீது ஆர்வமுடையவர்.

இரண்டு நாட்களுக்கு முன் அவர் வந்திருந்த போது நகரத்தார்களின் பதிப்பகங்களை பற்றி பேச்சு வந்தது. அப்போது ஒரு பதிப்பகம்  பற்றி ஒரு விஷயம் சொல்கிறேன் என்று, அறம் கதையை அதே விவரணைகளுடன் (ஆச்சி, தார் சாலையில் சேலை உட்பட) அப்படியே எனக்கு சொன்னார்.
நீங்கள் ஜெயமோகன் வாசித்ததுண்டா என கேட்டேன். அவரு யாரு? என்றார். இந்த நிகழ்வை உங்களுக்கு யார் சொன்னார்கள் என கேட்டேன். வேறொரு நண்பர் அண்மையில் சொன்னதாக சொன்னார்.
உண்மை மனிதர்களை கொண்டு எழுதப் பட்டிருந்தாலும் கூட, ஏறத்தாழ அப்படியே அக்கதை அதே விவரணைகளுடன் இடைவெளிகளுடன் திருப்பிக் கூறப்பட்டது. புனைவு வாய்மொழி வரலாறாகும் தருணத்தை நான் நேருக்கு நேராக சந்தித்தேன்.
சுநீல் கிருஷ்ணன்
அன்புள்ள ஜெ
சமீபத்தில் பரம்பிக்குளம் டாப்ஸ்லிப் சென்றிருந்தேன். அங்கே யானைடாக்டர் கிருஷ்ணமூர்த்தி அவர்களின் நினைவு இல்லத்தைச் சென்றுபார்த்தேன். அங்கே ஒருவர் அறிமுகமானார். அவரும் அந்த இடத்தைப் பார்ப்பதற்காக வந்திருந்தார். அவர் என்னிடம் டாக்டர் கே பற்றிச் சொன்னார். அப்படியே யானைடாக்டர் கதை. பத்மஸ்ரீ விருது தவிர்க்கப்படுவது உட்பட எல்லாமே.
ஆனால் அவர் யானைடாக்டர் கதையை வாசித்ததில்லை. உங்களைப்பற்றிக் கேள்விப்பட்டதும் கிடையாது. அவரது மகன் உயர்நிலைப்பள்ளி மாணவன்.அவனுக்கு இதை நடந்தகதையாக அவனுடைய ஆசிரியர் சொல்லியிருக்கிறார். ஒரு கதை தொன்மமாக ஆவதைப்பார்க்க ஆச்சரியமாக இருந்தது
யானைடாக்டர் கதையில் உள்ள மாய அம்சம் தான் அதை ஒரு வாய்மொழிக்கதையாக ஆக்கி நிலைநிறுத்துகிறது என்று தோன்றுகிறது. இப்படி நடக்குமா நடக்காதா என்பது அல்ல பிரச்சினை. அது எப்படி வாசகர்களில் அர்த்தமாகிறது என்பதுதான். யானைடாக்டருக்காக யானைகள் வந்தன என்பதுதான் உண்மையில் புராணம் என்பது. அதுதான் காலத்தைக் கடந்து நிற்கிறது
அறம் கதைகளில் எனக்குப்பிடித்த கதை மத்துறு தயிர். ஆனால் அந்தக்கதைகளுக்கெல்லாம் இந்த ‘லெஜெண்ட்’ தன்மை கிடையாது. அமெரிக்கக் கதைகளில் எவ்வளவோ கதைகள் இப்போது எவர் நினைவிலும் இல்லை. ஆனால் ஜாக் லண்டனின் தங்க வேட்டைக்கதைகளும் நாய்க்கதைகளும் வாய்மொழியாகவே நீடிக்கின்றன.அவை ‘கதைகள்’ என்றவிஷயம்தான் காரணம் என நினைக்கிறேன்
இம்முறை இந்தியா வந்தது மகிழ்ச்சிகரமாக இருந்தது. ஆனால் ஜனவரியிலேயே வெயில் உச்சியைப்பிளக்கிறது. பார்வையே மங்கிவிட்டது. பரம்பிக்குளமும் கூட சுட்டெரித்தது
சதீஷ் ராம்
முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 27
அடுத்த கட்டுரைதோன்றாத்துணை