அன்புள்ள திரு ஜெயமோகன் அவர்களுக்கு
கடந்த வாரம் நான்
தெய்வ மிருகம் படிப்பதற்காக உங்கள் தளத்தை தேடினேன். எனக்கு மிகவும் பிடித்த கட்டுரை. அதில் உங்கள் அப்பாவைப் போலவே என்னுடைய அப்பாவின் எப்போதும் வெளியே தெரியும் மிகவும் கண்டிப்பான தோற்றமும் தன் குழந்தைகளுக்கு எதாவது நேர்ந்தால் மட்டுமே வெளிப்படும் அசாத்தியமான உறுதி, முயற்சி, அன்பு, கணிவு, தாய்மை, மூர்க்கம் ஆகியவையும் நன்றாக வெளிப்பட்டிருந்தன. பெரும்பாலான சமயங்களில் இந்த மறுமுகம் குழந்தைகளுக்கே கூட தெரிவதில்லை என நினைக்கிறேன் அல்லது தெரிந்தால் கூட அந்த எப்போதும் சிடுசிடு என இருக்கும் முகம் அதை திரை போட்டு மறைக்கிறது போலும். அப்பாவின் இறப்பு ஒன்றே அந்த இன்னொரு முகத்தை காட்டுகிறது.என்னுடைய இறந்து போன அப்பாவினுடைய ஞாபகம் வரும் போதெல்லாம் இந்த கட்டுரையை நினைத்து கொள்வதும் சில நேரங்கள் உங்கள் தளத்தில் தேடி மீண்டும் படிப்பதும் உண்டு. இரண்டு மூன்று நாட்களுக்கு முன் இந்த கட்டுரையை தேடினேன், ஆனால் பலமுறை தேடியும் என்னால் கண்டு பிடிக்க முடியவில்லை, error என்று வந்தது.இன்று அந்தக் கட்டுரையை உங்கள் தளத்தில் பார்த்ததும் யாரோ நான் தேடியதை உங்களிடம் சொல்லி நீங்கள் மறு வெளியீடு செய்தது போல இருந்தது.
நன்றி.
வாழ்த்துக்களுடன்
அருண்குமார்
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு ,
இன்று காலை 6 மணிக்கு
தெய்வ மிருகம் பதிவை படிக்கும் போது அழுகையை கட்டுப்படுத்த முடியாமல் 3 முறை படிப்பதை நிறுத்தினேன் .பின்பு 10 மணிக்கு பிறகு மனைவி சுனிதாவிற்கு முழுமையாக படித்து காண்பித்தேன் .உங்களுக்கு அப்படியொரு தெய்வம் இல்லையெனில் தமிழகத்திற்கு ஒரு ஜெயமோகனும் ,எங்களுக்கு ஒரு ஆசானும் கிடைத்திருக்கமாட்டார் .
நேற்றிரவு எட்டு மணிக்கு எனது 5 வயதான இளையமகன் படிக்கட்டில் தவறி விழுந்து மேலுதடு ,பற்களில் காயம் பட்டு வலியில் அழுதுகொண்டிருந்தான் .அவனை சமாதானப்படுத்த அவனருகில் படுத்திருந்த நான் பத்து மணிக்கெல்லாம் தூங்கிவிட்டேன் .இரவு முழுவதும் அவன் வலியில் முனகிகொண்டிருந்தான்
காலை 5 மணிக்கு நான் விழித்தபோது முகம் வீங்கி உருவம் மாறிபோய் இருந்தான் .பார்த்ததும் பதறிப்போய்விட்டேன் ,7 மணிக்கு கோட்டார் குமார் குழந்தைகள் மருத்துவமனைக்கு சென்று மருத்துவரை பார்த்தேன் .பயப்படாண்டம் ,பல்லுல போட தைலம் தாரேன் ,செவ்வாய்க்கிழமை வீக்கம் குறையலனா கொண்டு வாங்கோ என்றார் .நீங்க ஊருக்கு எப்ப வந்தீங்க என விசாரித்தார் .
இன்று காலை தெய்வ மிருகம்பதிவு இரு மகன்களுக்கு தந்தையான எனக்கு சாட்டையடி .
ஷாகுல் ஹமீது ,
நாகர்கோயில் .
அன்புள்ள ஜெ
முன்பே இந்த பதிவைப் படித்திருக்கிறேன். இன்று காலை மீண்டும் படித்தேன்.
எப்படிப்பட்ட உக்ரமான பாசம் உங்கள் அப்பாவுடையது.. தகித்து விட்டது
படிக்கையில் எனக்கு.
மிகச் சிறுவனாக அப்போது அந்த பாசம் உங்களுக்கு புரிந்திருக்காது என்று
அனுமானிக்கின்றேன்.
அன்பையன் மருத்துவர்கள் இப்போது எங்கே? இருப்பார்கள். நாம் நிச்சயம்
அவர்களை அணுகமாட்டோம்.
ஏனென்றால் அவர்களுக்கு நோயாளிகளின் வலியைத் தான் போக்கத் தெரியுமே தவிர
தன்னைபிரபலப்படுத்தி காசு பண்ண தெரியாது.
உங்கள் அப்பா உங்களுக்காக பத்தியம் மட்டும் இருந்து உங்கள் கையை மட்டும்
குணப்படுத்தவில்லை. அன்பையரின் வலியுள்ளங்களின் வலி நீக்க உதவி மட்டும்
செய்யாமல் அவர்களின் ஆசீர்வாதத்தையும் உங்களுக்குக் பெற்றுக் கொடுத்து
உங்கள் வாழ்நாள் உள்ளவரை உங்களை ஒரு கஷ்டமும் நெருங்கவிடாமல் அவ்வலி
நிவாரணம் பெறப் போகும் உள்ளங்களின் ஆசீர்வாதத்தால் ஒரு இரும்பு
கவசத்தையும் போட்டு போய் விட்டார் அந்த பாசக் கொதிப்பான அப்பா..
அப்பாடி,,,முடியலப்பா இந்தப் பாசத்தை உள்வாங்க…
அன்பையன் வைத்தியர்.. அனந்த கோடி நமஸ்காரம். எனக்கு வேண்டாம் வைத்திய
செலவு. தேவையானவர்களுக்குச் செய்யுங்கள் என்று சொல்லி மற்றவர்களுக்கும்
புண்ணியத்தைச் சேர்த்த அந்த புண்ணியாத்மாவைப் பற்றி என்ன சொல்ல???
முகமறியாத அவருக்கு என் மனமார்ந்த நமஸ்காரங்களை மட்டுமே சமர்ப்பிக்க முடிகிறது??
இந்த கட்டுரையை எவ்வளவு முறை பதிப்பித்தாலும் படிப்பேன்.
என் மகளிடம் இப்படியே சொல்லிக் கொண்டிருப்பேன். அம்மா உன் தொழில் மிகவும்
புனிதமானது. பலரின் வலி தீர்க்கக் கூடியது. கருத்தோடு செயல்படு என்று…
உங்களின் இந்நாளய வாழ்வு உக்ரமான ஒரு தந்தையின் ஆசீர்வாதமான வரமே.
மிகவும் அதிர்ஷ்டசாலி நீங்கள்.
என்ன இளமையில் அது புரிந்திருக்காது!!
இப்போது தான் புரிந்து உணர்ந்து போற்றுகின்றீர்களே.
அன்புடன்
மாலா