‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 23

[ 8 ]

காசிமன்னன் சகதேவனின் மகளாகிய கலாவதி உளம் அமையா சிற்றிளமையில் ஒரு சொல்லை கேட்டாள். அச்சொல்லில் இருந்தே அவள் முளைத்தெழுந்தாள். மானுடரை ஆக்குபவை ஒற்றைச்சொற்களே. அவர்கள் அதை அறிவதுதான் அரிது. ஒவ்வொருவருக்கும் உரிய தெய்வம் ஊழை ஒற்றைச் சொல்லென ஆக்கி அவர்கள் செவியில் ஓதுகிறது. பின்பு புன்னகையுடன் சற்று விலகி நின்று நோக்கிக்கொண்டிருக்கிறது.

கைக்குழவியாகிய அவளை கோட்டைப்புறவளைப்பில் குறுங்காடு நடுவே இருந்த கொற்றவை ஆலயத்திற்கு கொண்டுசென்ற செவிலி ஆடையை திருத்தும்பொருட்டு அவளை நிலத்தில் அமர்த்திவிட்டு மடிப்புகளை நீவியபடி அருகிருந்த சேடியிடம் சொல்லாடினாள். சொல் அவளை இழுத்துச்சென்றது. ஒரு தருணத்தில் குழந்தையை உணர்ந்து குனிந்தபோது அங்கே அது இருக்கவில்லை. அலறியபடி அவள் சுற்றிலும் நோக்கினாள். சூழ்ந்திருந்த புதர்களையும் சரிவுகளையும் துழாவினாள். குழந்தை மறைந்துவிட்டிருந்தது.

மகவின் அழகில் மகிழ்ந்த கந்தர்வர்களோ குழவியின் இளம் ஊனை விரும்பும் கூளிகளோ கொண்டுசென்றிருக்கலாம் என்றாள் முதுசெவிலி. “இன்றே குழவி கிடைக்காவிட்டால் என் சங்கறுத்து சாவேன்” என்று செவிலி அலறினாள். அவளைப் பிடித்து துணியால் கைகளைக் கட்டி தேரில் அமர்த்தி அரண்மனைக்கு கொண்டுசென்றனர். அரசப்படைகள் வந்து அக்குறுங்காட்டை இலையொன்றையும் புரட்டித்தேடின. தேடத்தேட பதற்றம் கூடிக்கூடி வந்தது. எனவே மாறுபட்டு எவரும் எண்ணமாலாகி ஒரேபோல மீண்டும் மீண்டும் தேடினர். சலித்து ஒரு கணத்தில் குழந்தை கிடைக்காதென்ற எண்ணத்தை அடைந்தனர். பின் அவ்வெண்ணத்துடன் தேடினர். குழந்தையைக் கண்டடைவது அரிதாகியது.

குழந்தை நிலத்தில் விடப்பட்டதுமே வாய்நீர் ஒழுக, கிண்கிணி ஒலிக்க, தண்டை மண்ணில் இழுபட, வளையணிந்த சிறுகைகளை மண்ணில் அறைந்து ஊன்றி சிரித்தும் சிதர்ச்சொல் உரைத்தும் சாலையின் ஓரமாக சென்றது. அக்குழவியை கிளைமேலிருந்து நோக்கிக்கொண்டிருந்த அன்னைப்பெருங்கரடி ஒன்று தொங்கி இறங்கி ஒற்றைக்கையில் தூக்கிக் கொண்டது. அவளை மரக்கிளைகளின் பாதையினூடாக கொண்டுசென்று தான் தங்கியிருந்த மரப்பொந்துக்குள் வைத்துக்கொண்டது.

அங்கே இரண்டு கரடிக்குழவிகள் முன்பே இருந்தன. வெண்ணிறமான புதிய குருளையை அவை கைகளால் தழுவியும் மென்மயிர் உடலால் பொதிந்தும் ஏற்றுக்கொண்டன. அவை அன்னையிடம் முட்டிமுட்டி பால்குடிப்பதைக் கண்ட கலாவதி அதைப்போல் தானும் உண்டாள். அன்னையின் பேருடலின் வெம்மையில் உடல் அணைத்து இரவுறங்கினாள். பகலொளி எழுந்ததும் கையூன்றி புதர்களுக்குள் நடைசென்ற அன்னையைத் தொடர்ந்த குருளைகளுடன் தானும் சென்றாள். மூன்றாம்நாள் அதை வேடன் ஒருவன் கண்டடைந்தான். சிறிய பாறை ஒன்றின் மேல் கைகளை சேர்த்தமைத்து விழிவிரிய நோக்கி ஒற்றைச் சொல்லை நெளியும் உதடுகளால் சொல்லிக்கொண்டிருந்தது குழந்தை.

வேடன் அது அரசமகள் என்பதை உணர்ந்துகொண்டான். அதை அள்ளித்தூக்கி அரண்மனைக்கு கொண்டுவந்தான். அவன் குழவியுடன் கோட்டைக்குள் நுழைந்ததுமே எதிர்வந்த காவலர்தலைவன் அவன் தலையை ஒரே வாள்மின்னலால் வீழ்த்தினான். ஏந்திய கையில் குழந்தையுடன் உடல் மட்டும் நின்று நடுங்கியது. அதை காவலர்தலைவன் பெற்றுக்கொண்டதும் அப்படியே மல்லாந்து விழுந்து மண்ணில் காலுதைத்து கைதவிக்கத் துடித்தது. குழவியைத் தொடர்ந்து வந்த அன்னைக்கரடி தொலைவில் நின்று இரு கைகளையும் அசைத்தபடி துடிக்கும் உடலை நோக்கியது. அவர்கள் சென்றபின் மெல்ல வந்து உறைந்து கிடந்த உடலையும் விழிவெறித்த தலையையும் முகர்ந்து பெருமூச்சுவிட்டது.

காவலர்தலைவன் குழந்தையுடன் அரண்மனைக்குச் சென்று அதை தேடிக்கண்டடைந்ததை சொன்னான். அரசி ஓடிவந்து குழந்தையை அள்ளி நெஞ்சோடு சேர்த்துக்கொண்டு கண்ணீர்விட்டாள். அரசன் தன் மார்பிலணிந்த மணியாரத்தைக் கழற்றி காவலர்தலைவனுக்கு அணிவித்து அவனை படைநிலை உயர்த்தினான். குழவியை திருடிச்சென்ற வேடனின் உடலை இரு இடங்களிலாக தெற்குச்சுடுகாட்டில் எரித்தனர். அங்கே செவிலி முந்தையநாள் காலை தலைவெட்டப்பட்டு எரிந்திருந்தாள்.

ஒற்றைச்சொல் குழந்தையின் வாயிலிருந்ததை இருநாட்கள் கழித்தே செவிலியர் புரிந்துகொண்டனர். அது என்ன என்று செவியும் விழியும் கூர்ந்தனர். குழந்தை சிலநாட்களிலேயே பேசத்தொடங்கியது. அன்னை என்றும் அத்தன் என்றும் அன்னம் என்றும் அமுது என்றும் சொல்லத்தொடங்கியது. அச்சொற்கள் பெருகி மொழியாகின. அது எழுந்து சிற்றடி வைத்தது. கைவீசி ஓடியது. பாவாடை அணிந்து மலர்கொள்ளச்சென்றது. எண்ணும் எழுத்தும் இசையும் இயலும் கற்றது. ஆனால் அதன் நாவில் அச்சொல் இருந்தபடியே இருந்தது. அவள் துயில்கையில் அச்சொல் நாவிலிருப்பதை செவிலியர் கவலையுடன் நோக்கினர். நிமித்திகரும் மருத்துவரும் கவிஞரும் படிவரும்கூட அச்சொல்லை அறியமுடியவில்லை. அவளுக்கு காட்டுத்தெய்வம் ஒன்று அளித்தது அது என்றான் சூதன். “அதில் காட்டின் பொருள் உள்ளது. அதை அவளுக்குள் வாழும் காடு மட்டுமே அறியமுடியும்” என்றான்.

அவள் கன்னியென்றானாள். காசியின் பெருமை அறிந்து அவளை மணம்கொள்ளவந்தனர் ஆரியவர்த்த மன்னர். அவள் நாவிலுறையும் அச்சொல்லைப்பற்றி அறிந்ததும் அஞ்சி பின்வாங்கினர். “அறியாச்சொல் என்பது அருளாத தெய்வம் போன்றது. நம் கொடை கொள்ளாதது. அதை நம் இல்லத்தில் குடியேற்றலாகாது” என்றார்கள் அவர்களின் நிமித்திகர்கள். கலாவதி நாளுமென வயது கொண்டாள். கைமேல் நீலநரம்புகள் தடித்தன. கழுத்து தடித்து குரல் ஆழ்ந்தது. முன்னெற்றி மயிர் மேலேறியது. மூக்கைச்சுற்றி ஆழ்ந்த கோடுகள் எழுந்தன. கண்ணுக்குக் கீழே நிழல் படிந்தது.

“இனி ஒன்றும் எண்ணுவதற்கில்லை அமைச்சரே. கன்னி ஒருத்தி கொள்வாரின்றி இருந்தாள் என்றால் நம் குடிக்கே பழியாகும். இனி முதலில் வந்து கோரும் அரசனுக்குரியவள் இவள்” என்றான் சகதேவன். “அரசே, அது ஊழுடன் ஆடுவதுபோல” என்ற அமைச்சரை நோக்கி “ஆம், ஆனால் நான் முடிவுசெய்துவிட்டேன்” என்றான் அரசன். ஊழென அன்றுமாலையே மதுராவின் யாதவர்குலத்து அரசன் தாசார்கனின் மணத்தூது வந்தது. கார்த்தவீரியனின் நூற்றெட்டு மைந்தர்களில் கடையன். பரசுராமரால் எரிக்கப்பட்ட நகரின் எஞ்சிய பகுதியை கைப்பற்றி ஆண்டுவந்தான். அவன் அன்னை நகருக்கு வணிகம்செய்யவந்த கீழைநிலத்து வைசியப்பெண். கார்த்தவீரியன் அளித்த ஒற்றைக் கணையாழியொன்றே அவனை அரசக்குருதியென்று காட்டியது.

கார்த்தவீரியனின் நூறுமைந்தர்கள் முடிசூடும்பொருட்டு பொருதி நின்றிருந்தனர். ஷத்ரியகுடிப்பிறந்த யாதவர்கள் படைபலத்தால் முந்தினர். யாதவர்கள் குடித்துணைகொண்டிருந்தனர். அசுரகுடி மைந்தரோ தயங்காமை என்னும் பேராற்றல் கொண்டிருந்தனர். எனவே நாளுமொருவர் என கொல்லப்பட்டனர். எட்டாவது மைந்தன் கிருதபாலன் அசுரகுடிப்பிறந்த கிருதை என்னும் மனைவிக்கு கார்த்தவீரியனில் தோன்றியவன். அவனுடன் இணைந்துகொண்டான் தாசார்கன்.

வைசியனின் கணக்குகள் அசுரனை ஆற்றல் மிக்கவனாக்கின. பன்னிரு அசுரகுடிகளை ஒன்றிணைத்து தன் மூத்தோர் தங்கியிருந்த கார்தகம் என்னும் சிறுநகரைத் தாக்கி அழித்து அனைவரையும் கொன்றான் கிருதபாலன். எஞ்சியவர்கள் அவன் முன் அடிபணிந்தனர். அவர்களை திரட்டிச்சென்று காடுகளில் ஒளிந்த மிஞ்சியவர்களை கொன்றான். படைத்துணை தேடி அயல்நாடுகளுக்குச் சென்றவர்களை ஒற்றர்களை அனுப்பி கொன்றான். முடிசூடி அமர்ந்த கிருதபாலனுக்கு படைநடத்துதல் கற்ற எந்த இளையோனும் பகைவனே என்று சொல்கூட்டி அளித்தான் தாசார்கன். தன்னுடன் இணைந்த உடன்பிறந்தார் அனைவரையும் கிருதபாலன் கொன்றான்.

எதிர்பிறரின்றி மதுராவின் முடிசூடி பன்னிரு மனைவியரை மணந்து தன்னிலை அமைந்த கிருதபாலனை துயில்கையில் வாள் செலுத்திக் கொன்றான் தாசார்கன். பிறரில்லாத நிலையில் மதுராவின் மன்னனென்றானான். மூத்தவனின் பன்னிரு மனைவியரை தான் கொண்டான். சிதறிப்பரந்த யாதவகுலங்களில் எஞ்சியவற்றைத் திரட்டி தன்னை அரண்செய்துகொண்டான். மதுராவின் நெய்வணிகம் அவனை நிலைநிறுத்தியது. ஆனால் குடிப்பிறப்பற்றவன் என்பதனால் ஆரியவர்த்தத்தின் அவைகள் எதிலும் அவனுக்கு இடமிருக்கவில்லை. காசியின் இளவரசி கொள்வாரின்றி இருப்பதை அவன் அறிந்திருந்தான். அங்கிருந்த அவன் ஒற்றன் அமைச்சரிடம் அரசர் உரைத்த வஞ்சினத்தை அவனுக்கு அறிவித்தான். அன்றே மணத்தூதுடன் அவன் அமைச்சன் காசிநகர்புகுந்தான்.

கலாவதியை மணந்து மதுராவை வந்தணைந்த தாசார்கன் முதல் மணவிரவில் அவள் மேல் கையை வைத்தபோது அலறியபடி எழுந்தான். அவள் “என்ன? என்ன?” என்றாள். அவன் கையை உதறியபடி அலறிக்கொண்டே இருந்தான். மருத்துவரும் ஏவலரும் ஓடிவந்தனர். “அனல் பழுத்த இரும்பு போலிருக்கிறாள். என் கை வெந்துவிட்டது” என்று தாசார்கன் கூவினான். அவள் திகைத்து எழுந்து நின்றாள். அவன் கையில் அனல்பட்ட தடமேதும் தெரியவில்லை. அவன் உளமயல் என்றனர் மருத்துவர். மறுநாள் மீண்டும் அவளை தொட்டபோதும் கைசுட கதறி விலகினான். அவளைத் தொடுவதைப்பற்றி எண்ணும்போதே அவன் அஞ்சி கையை வீசினான். கனவுகளில் அனலுருவாக வந்து அவள் அவனைத் தழுவி உருக்கினாள். எலும்புக்கூடாக அவனை மஞ்சத்தில் விட்டுவிட்டு காற்றில் அணைந்து புகையானாள்.

தாசார்கனின் உடல் கருமைகொள்ளத் தொடங்கியது. முதலில் அது நீலப்பயலை என்றனர் மருத்துவர். பின்னர் தோல்படர்நோய் என்றனர். பின்னர் தொழுநோயோ என்றனர். அவன் உடல்குறுகிக்கொண்டே வந்தது. கருகி சுருங்கி எரிந்தணைந்த காட்டுமரமென அவன் ஆனான். அவனுக்குத் தொழுநோய் என்று நகரில் செய்திபரவியது. “குருதிப்பழி தொடர்ந்துசெல்லும்” என்றனர் ஊர்மக்கள். “அவன் உள்ளம் கொண்ட தொழுநோயை உடல் இன்றுதான் அறிகிறது” என்றனர் மூதன்னையர். முதலமைச்சரிடம் அரசை அளித்துவிட்டு அவன் தன் மந்தணச்சாலையிலேயே வாழலானான். அவன் செவிகளும் கண்களும் அணைந்தபடியே வந்தன. சுவையும் மணமும் மறைந்தன. இருத்தலெனும் உணர்வு மட்டுமே எஞ்ச அந்தச் சிறுகுடிலின் வாயிலில் அமர்ந்து ஒளி எழுந்த வானை நோக்கிக்கொண்டிருந்தான்.

கண்ணீருடன் கலாவதி தவமிருந்தாள். அவள் உடல் மெலிந்து ஒடுங்கி முதுமைகொண்டது. அவளைச் சூழ்ந்து எப்போதும் மதுராநகரின் பெண்களின் இளிவரல் இருந்தது. “கைபிடித்த கணம் முதல் கணவனை கருக்கியவள்” என்று அவள் செவிபட எவரோ சொல்வது எப்போதும் நிகழ்ந்தது.

மாமுனிவர் கர்க்கர் இமயமலையின் அடியில் அமைந்த தன் குருநிலையில் வாழ்வதை நிமித்திகர் வழி அறிந்து அவரைச்சென்று கண்டாள். அவள் கைகளைப் பற்றி கண்மூடிய கர்க்கர் “அரசி, இரண்டு பழிச்சொற்களால் சூழப்பட்டிருக்கிறீர்கள்” என்றார். “உங்கள் செவிலியும் வேடன் ஒருவனும் உதிர்த்த விழிநீர் உங்களை சூழ்ந்துள்ளது. ஆகவேதான் பெரும்பழி சூழ்ந்த இக்கீழ்மகனின் மனைவியென்றானீர்கள். துணைவனின் பழிக்கும் அறத்துக்கும் பங்கென்றே துணைவியரை நூல்கள் உரைக்கின்றன.”

அரசி கைகூப்பி “நான் செய்யவேண்டுவதென்ன?” என்றாள். “உங்கள் சொற்களின் நடுவே நுண்சொல் என ஒன்று ஓடிக்கொண்டே இருக்கிறது. அந்த விதை முளைத்தெழுக. அதை ஒலியென்றாக்குக. அவ்வொலி மந்திரமாகுக. அது உங்களை மீட்டுக்கொண்டுவரும்” என்றார் கர்க்கர். அரசி தலைவணங்கி மீண்டாள். திரும்பும் வழியெல்லாம் கண்ணீருடன் அதையே எண்ணிக்கொண்டிருந்தாள். தன் சேடியரிடமும் தோழியரிடமும் வினவினாள். “என் இதழ்சொல்லும் அந்த நுண்சொல் என்ன? நோக்கி உரையுங்கள்” என்றாள். அவர்கள் “இத்தனை ஆண்டுகாலம் நோக்கியும் நாங்கள் அதை உணரக்கூடவில்லை அரசி. அது தெய்வம் உரைத்த சொல். அதை தெய்வமே வந்து உரைத்தாகவேண்டும்” என்றனர்.

கலாவதி தன் பிறசொற்களனைத்தையும் அவித்துக்கொண்டாள். இதழ்கள் சொல்மறந்தபோது உள்ளம் சொற்பெருக்காகியது. அதை நோக்கியபடி சொல்லடக்கி அமர்ந்திருந்தாள். உள்ளம் சொல்லிழந்தபோது கனவுகள் கூச்சலிட்டன. கனவுகள் ஒலியற்றவையாக ஆனபோது ஆழத்து இருள் முனகியது. இருள் இறுகியபோது அப்பாலிருந்த ஒளி ரீங்கரித்தது. அதுவும் அடங்கியபோது அவள் செவிகளும் ஓசைமறந்தன. ஓசையற்ற வெளியில் சென்று அவள் தன் சொல்லை கண்டடைந்தாள். “சிவாய!”

பெருங்களிப்புடன் அவள் திரும்பிவந்தாள். கைகளை விரித்து துள்ளி நடமிட்டு கூவினாள். அழுதும் சிரித்தும் தவித்தாள். அச்சொல்லையே மொழியென்று ஆக்கினாள். அச்சொல்லே எண்ணமும் கனவும் என்றானாள். அருந்தவத்தால் வாடிய அவள் உடல் ஒளிகொண்டது. முகம் இளமகள் என வண்ணம் பொலிந்தது. ஒருநாள் தன் தவத்தின் ஆழ்கனவில் அவள் நீலநீர் சுழித்த ஒரு சுனையை கண்டாள். அது ஓர் கனிந்த விழியெனத் தோன்றியது. அன்றே கிளம்பி கர்க்கரைச் சென்று கண்டாள். “அது இமயத்திலுள்ள காகதீர்த்தம் என்னும் பாபநாசினிச் சுனை. அங்கே சென்று உன் கணவனை நீராட்டுக! உன் கைகளால் அள்ளி விடப்படும் நீரால் அவன் தூய்மைகொள்வான்.”

அவள் கர்க்கர் துணைவர தாசார்கனுடன் இமயம் ஏறிச்சென்று காகதீர்த்தத்தை அடைந்தாள். கரியசுனை அவளை நோக்கிக்கொண்டிருந்தது. அதைக் கண்டதும் தாசார்கன் அஞ்சி நின்றுவிட்டான். “இறங்குக அரசே! இதுவே உங்கள் மீட்புக்கான வாயில்” என்றார் கர்க்கர். அவன் நடுங்கி கைகளைக் கூப்பி கண்ணீருடன் நின்றான். “செல்க!” என்றார் கர்க்கர். அரசி “வருக அரசே” என்று சொல்லி அவன் கையைப்பற்றியபடி நடந்தாள். “சிவாய! சிவாய!” என்று உச்சரித்தபடி நீரில் இறங்கினாள். நீர் கொந்தளிக்கத் தொடங்கியது. அவன் அலறியபடி கரையேற முயன்றான். அவள் அவனை இறுகப்பற்றிக்கொண்டாள்.

நீரில் அவனைப்பிடித்து அழுத்தி நீராட்டினாள். அரசனின் உடல் துடித்தபடியே இருந்தது. அவன் உடலின் கரியதோல்பரப்பின் வண்ணம் நீரில் அலைபாய்ந்தது. அவ்வலைகள் இரு சிறகுகளென்றாயின. காகமென உருக்கொண்டு நீரை உதறி மேலெழுந்தன. “கா” என்று கூவியபடி காகம் காற்றில் சிறகடித்து வட்டமிட்டது. மேலுமொரு காகம் எழுந்தது. அவன் உடலின் கருமை காகங்களென எழுந்து சுழன்று நீர்த்துளிகள் மின்னிச்சிதற கூச்சலிட்டது. அவள் நாவில் சிவச்சொல் மட்டுமே நின்றது. காகங்கள் “ஏன்? ஏன்?” என்று கூவியபடி சிறகுகள் உரச சுழற்காற்றில் சருகுகள் என பறந்து சுழித்தன.

“எழுக!” என்று கர்க்கர் சொன்னார். “அவன் கொண்ட பழிகளெல்லாம் இதோ காகங்களென எழுந்து அகன்றுள்ளன. இக்கருவறையிலிருந்து புதிதாகப்பிறந்து வருக! அறம் திகழும் கோல் கொண்டு மக்களை தந்தையென காத்தருள்க!” அவள் கைகூப்பியபடி நின்றாள். மேனி ஒளிமீண்ட தாசார்கன் கைகூப்பி அழுதபடி நின்றான். “வருக அரசே!” என்றார் கர்க்கர். அவன் அவள் கைகளைப்பற்றியபடி “இருளில் இருந்து என்னை மீட்ட நீயே என் தெய்வமாகுக! என் குடிநிரை உன்னை மூதன்னையென ஆலயம் அமைத்து வணங்குக!” என்றான்.

அவனுடன் கைகூப்பியபடி மேலேறிய கலாவதி திரும்பி அக்காகங்களையே நோக்கிக்கொண்டிருந்தாள். ஒவ்வொரு காகமாக எழுந்து பறந்து வானில் மறைந்தது. “ஏன்?” என்று அவை கூவி உதிர்த்துச் சென்ற சொற்கள் மட்டும் அங்கு எஞ்சின. இறுதிக்காகமும் சென்றபின் அவள் நீள்மூச்சுடன் ஒரு காட்சியை நினைவுகூர்ந்தாள். இளங்குழவியாக அவள் ஒரு பாறைமேல் அமர்ந்திருந்தாள். அவள் எதிரே வந்தமர்ந்த கரியகாகம் “ஏன்?” என்றது. அச்சொல்லைத்தான் அவள் இதழ்கள் அன்று பெற்றுக்கொண்டன.

 

[ 9 ]

காகதீர்த்தத்தின் நீரை ஏழு வைதிகர்கள் பொற்குடங்களில் அள்ளி கொண்டுவந்தனர். அஸ்தினபுரியின் நகரெல்லையிலேயே கனகரும் பன்னிரண்டு வைதிகர்களும் காத்திருந்தனர். நீலப்புலரியில் வந்துசேர்ந்த அந்த அணிநிரை நகரின் இருண்டு சொட்டிக்கொண்டிருந்த கூரைகளுக்கு நடுவே காலடியோசைகள் ஒலிக்க மெல்ல நடந்தது.

திண்ணைகளிலும் முகப்புகளிலும் அமர்ந்து அவர்களை நோக்கிக்கொண்டிருந்த அஸ்தினபுரியின் குடிகளும் வேலும் வில்லும் ஏந்தி நின்ற காவலரும் அக்காட்சியை அகப்புலன்களால் அறியவில்லை. அரண்மனையின் ஏவலரும் அமைச்சர்களில் பலரும்கூட நோக்கியும் உணரவில்லை. வைதிகர்கள் நீர்வழிந்த உடல் நடுங்க ஆழ்ந்த குரலில் வேதச்சொல்லுரைத்தபடி நடந்தனர்.

அரண்மனை முற்றத்திற்கே வந்து கர்ணன் அவர்களை எதிர்கொண்டான். கர்க்க முனிவரின் குருமரபில் வந்த தீப்தர் அந்த வைதிகர்குழுவை தலைமைகொண்டு நடத்திவந்தார். கர்ணன் அவரை வணங்கி முகமன் சொன்னான். காகதீர்த்தத்தில் அள்ளிய நீரை எங்கும் நிலம்தொடாமல் கொண்டுவந்த வைதிகர் அக்கலங்களை கைமாற்றிவிட்டு அமர்ந்து ஓய்வெடுத்தனர். காத்திருந்த வைதிகர் நீர்க்கலங்களுடன் மேற்குநோக்கி சென்றனர். கன்றுநிரையின் மணியோசைபோல வேதச்சொல் அவர்களிடமிருந்து எழுந்தது.

கோட்டையின் மேற்குவாயிலுக்கு அப்பால் குறுங்காட்டுக்குள் இருந்தது கரிய கற்களால் ஆன கலிதேவனின் சிற்றாலயம். அவர்கள் இளஞ்சாரல்மழை பொழிந்த புதர்களின் நடுவே வெட்டி உருவாக்கப்பட்ட சேற்றுப்பாதையில் கால்பதிய நடந்தனர். கலியின் ஆலயத்துக்குமேலே உருளைப்பாறைகளால் ஆன சரிவில் வழிந்தோடிவந்து சிறிய அருவியாகக் கொட்டி ஓசையிட்டு இறங்கிச்சென்ற ஓடைவழியாகவே மேலே செல்லும் வழி அமைந்திருந்தது. முன்னரே அங்கு சென்றிருந்த அரசப்படையினர் பாறைகளுக்கருகே கற்களை அடுக்கி ஏறிச்செல்லும் வழியை ஒருக்கியிருந்தனர். அவற்றில் கால்வைத்து உடல்நடுங்க நிகர்நிலை நிறுத்தி மேலே சென்றனர் வைதிகர்.

பாறைகள் முழுக்க கரிய களிம்பென பாசி படர்ந்திருந்தது. காடெங்கும் இலைததும்பிச் சொட்டிக்கொண்டிருந்த ஆடி மழையின் ஓசை அவர்களைச் சூழ்ந்து அவர்கள் எழுப்பிய வேதச்சொல்லை மூடியது. இறுதிவிடாயுடன் நீர்விளிம்பருகே வந்து உயிர்துறந்த விலங்குகளின் வெள்ளெலும்புக்குவைகள் சேற்றில் புதைந்தும் பற்களென எழுந்து நகைப்பு காட்டியும் பரவியிருந்தன. அவற்றின் மட்காத தோல்மயிர்ப்பரப்புகள் மென்புல் என்றும் மெத்தைப்பாசி என்றும் கால்களுக்கு மாயம் காட்டின.

ஆலயத்தின் அருகே ஓடைசுழித்துச் சென்ற இடத்தில் கற்கள் அடுக்கி கரைவளைக்கப்பட்டு ஒரு சுனை உருவாக்கப்பட்டிருந்தது. அதில் கரியநீர் சுழன்றுசென்றது. சுனையின் மென்சேற்றுக்கதுப்பு ஆமையோடுபோல கரிய அலைவளைவுகள் ஒளிமின்ன தெரிந்தது. நீரிலிறங்க கற்களைக் கொண்டு பாதை அமைக்கப்பட்டிருந்தது. அப்பகுதியின் புதர்ப்பரப்பு வெட்டிச்சீரமைக்கப்பட்டு அஸ்தினபுரியின் கொடிகள் கட்டப்பட்டு சித்தமாக்கப்பட்டிருந்தது.

படைக்கலங்களேந்திய வீரர்கள் மெலிந்த உடலும் தளர்ந்த தோள்களும் பழுத்த விழிகளுமாக காவல் நின்றனர். ஏழுபேர்கொண்ட இசைச்சூதர் பீளைபடிந்த கண்களுடனும் உலர்ந்த உதடுகளுடனும் இசைக்கலங்கள் ஏந்தி காத்திருந்தனர். நோயுற்ற அனைவருக்குமே எரியும் மது ஒன்றே மருந்தாக இருந்தது. அது அவர்களின் நரம்புகளை இழுபடச்செய்து எழுந்து நின்றிருக்கும் ஆற்றலை அளித்தது. ஆயினும் அவர்களின் தலைகள் அவ்வப்போது எடைகொண்டு அசைந்தன. கால்கள் நிலையழிந்து பிறர்தோளை பற்றிக்கொண்டனர். எவர் சித்தமும் அவ்விடத்தில் இருக்கவில்லை.

அமைதியில் ஒருவர் விழித்துக்கொண்டு “என்ன?” என்று முனகினார். நால்வர் குருதிபடிந்த விழிகளால் திரும்பி நோக்கினர். அஸ்தினபுரியிலிருந்து வந்திருந்த சூதர்குலத்துப் பூசகர் கரிய ஆடை அணிந்து தோல்கச்சை கட்டி கைகளில் கரியநூலால் ஆன கங்கணத்துடன் உள்ளே நீளிருளைக் கல்லாக விழிவரையப்பட்டு நீலமலர்மாலைகள் சூடி அமர்ந்திருந்த கலிதேவனுக்கு பூசனை செய்துகொண்டிருந்தார். கலிக்கு உகந்த பறவை ஊனும், கரும்பட்டும், எதிரெதிர் சிற்றாடிகளும், தோல்சவுக்கும், குறைகுடமும், கருமயிர்ச்சுருள்களும், இடம்புரிச்சங்கும் படைக்கப்பட்டிருந்தன. இரட்டைத்திரிவிளக்குகள் தளர்ந்து எரிந்தன.

ஓடைச்சரிவில் வேதம் ஒலிக்கக்கேட்டு அவர்கள் எழுந்து நின்று நோக்கினர். பூசகர் உள்ளே சென்று கெண்டிநீரை தெளித்து கைமணியை சுழற்றி ஒலித்து கலிக்குரிய போற்றுகைகளை சொல்லத் தொடங்கினார். வேதமொலிக்க வைதிகர் மேலேறிவந்தனர். வழிகாட்டிவந்த தீப்தர் கைகளைக்கூப்பியபடி கண்களைத்திறக்காமல் வந்து கலிமுன் நின்றார். அவரைத் தொடர்ந்த வைதிகர்களும் கண்களை மூடியபடி கைகளில் நீர்க்குடங்களுடன் நின்றனர்.

மங்கலச்சூதரை நோக்கி படைத்தலைவர் கைகாட்ட அவர்கள் இசையெழுப்பத் தொடங்கினர். அஞ்சிய ஆட்டுக்கூட்டம்போல முற்றிலும் இசைவழிந்து செவிபதைக்கும் வெற்றொலிகளின் பெருக்காக இருந்தது அந்த இசை. பூசகர் நுண்சொற்களை நாவெழாது உரைத்தபடி அக்குடங்களைப் பெற்றுக்கொண்டு கலியின் முன் நிரைத்தார். நீலக்குவளையால் நீரைத் தொட்டு கலிவடிவம் மேல் தெளித்து மும்முறை வணங்கியபின் அக்குடங்கள் மேலும் தெளித்தார்.

கைகூப்பியபின் திரும்பியபோது அவரும் நோயுற்றிருப்பது தெரிந்தது. காய்ச்சலால் இழுபட்டிருந்த அவரது முகத்தசைகள் உறுமும் சிம்மம்போன்ற தோற்றத்தை அவருக்களித்தன. ஆழ்குரலில் “உடையவர் நீர்கொண்டிருக்கிறார். உடனிருப்பார், அருளுண்டு” என்றார். கண்களை மூடியபடியே தீப்தர் “அவ்வண்ணமே ஆகுக!” என்றார். அந்நீர்க்குடங்களை திரும்ப எடுத்து வைதிகர்களிடம் அளித்தார் பூசகர்.

தாளம் விரைவுகொள்ளும்தோறும் அங்கு நின்றிருந்த அத்தனை வீரர்களும் உடலில் அதன் கட்டற்ற அசைவுகளை அடைந்தனர். கால்கள் மண்ணில் நிற்காது எழுந்தன. இசைத்தலின் விரைவில் முகம் இழுபட்டு வாய்விரிந்து இளிக்கத் தொடங்கினர் சூதர்கள். அவ்விளிப்பு வீரர்களிடமும் பரவியது. வைதிகர்கள் நிரையாகச் சென்று அச்சுனையில் காகதீர்த்தத்தின் நீரை ஊற்றினர். ஒழிந்த கலங்களை திரும்பக்கொண்டுவந்து கலியின் ஆலயத்தருகே அமைத்தனர்.

கைகளைக்கூப்பியபடி கீழே இழிந்திறங்கும் ஓடையை நோக்கி வைதிகர் நின்றனர். அவர்களுக்குமேல் மென்மழை பொழிந்துகொண்டிருந்தது. தங்கள் மேல் விழிகள் பதிந்திருக்கும் உணர்வை வைதிகர் அடைந்தனர். இளையவர் ஒருவர் விழிசுழற்றும்போது ஈரப்புதர்களுக்குள் இரு நரிக்கண்களைக் கண்டு திடுக்கிட்டார். அச்சம் விழிகளை கூர்மைகொள்ளச்செய்ய மேலும் மேலும் என விழிகளைக் கண்டார். “என்ன?” என்றார் மூத்த வைதிகர். “நரிகள்… நிறைய அமர்ந்திருக்கின்றன.”

அவர் நோக்கிவிட்டு தணிந்த குரலில் “அவை இங்கே தலைமுறைகளென வாழ்பவை. இது நீர் அருந்தவரும் விலங்குகளை வேட்டைகொள்வதற்கு உகந்த இடம்” என்றார். அனைவரும் நரிகளை நோக்கிவிட்டனர். தீப்தர் அவர்கள் நோக்குவதை உணர்ந்தாலும் திரும்பவில்லை. “கூரிய நோக்குகள்” என்றார் ஒருவர். “அவை பசிகொண்டிருக்கின்றன. பசி கூரியது” என்றார் இன்னொருவர்.

ஓடைக்குக் கீழே அரசர் எழுவதை அறிவிக்கும் வலம்புரிப் பணிலம் முழங்கியது. இசையின் அதிர்வுகளில் நின்றாடிக்கொண்டிருந்த சூதரும் வீரரும் அதை அறிந்ததாகவே தெரியவில்லை. அவர்களின் முகங்கள் ஊனுண்டு களத்தில் களிக்கும் கூளிகளின் முகங்களுக்குரிய இளிப்பை கொண்டிருந்தன. அஸ்தினபுரியின் அமுதகலசக்கொடி மேலேறி வந்தது. ஈரத்தில் துவண்டு கழியில் சுற்றி இறந்துகொண்டிருக்கும் பறவையின் இறுதிச்சிறகடிப்பு என அது நுனியதிர்ந்தது.

தொடர்ந்து வாளேந்திய ஏழுவீரர்கள் வந்தனர். கர்ணன் இரு படைவீரர்களால் தோள்தாங்கப்பட்டு நடந்துவந்தான். அவன் உடல் எலும்புநிரை தெரிய மெலிந்து, தோள்கள் சாம்பல்பூத்து, விழிகள் ஒளியிழந்து குழிகளுக்குள் ஆழ்ந்திருந்தன. கன்னம் ஒட்டியமையால் பல்நிரையுடன் வாய் உந்தியிருந்தது. அவன் மிகைஉயரத்தால் கூன் விழுந்திருந்தது. வீரர்கள் அவனை ஒவ்வொரு காலடிக்கும் முன்செலுத்தி உடலை தூக்கிவைத்தனர்.

அவனுக்குப் பின்னால் செங்கோலேந்திய ஒரு வீரன் வர தொடர்ந்து மங்கலப்பொருட்களுடன் ஏழு சூதரும் இசைக்கலங்களுடன் மூன்று சூதரும் வந்தனர். துரியோதனன் கைகளைக் கட்டியபடி இருபக்கமும் நோக்கி நடந்து வந்தான். அவன் வெண்பட்டாடைகள் மழையால் நனைந்து உடலுடன் ஒட்டி நடக்கும்போது இழுபட்டு கொப்புளங்களாகி அலைகளாயின. அவன் தன்னந்தனிமையில் நடப்பவன் போலிருந்தான். முகம் மலர்ந்திருக்க விழிகள் கனவுக்குள் விரிந்திருந்தன.

தீப்தர் அவனை நோக்கிக்கொண்டு கைகளைக் கூப்பியபடி நின்றார். “இத்தனை ஒளியா?” என வைதிகர்களில் எவரோ கேட்டனர். அது அவரது எண்ணமாக இருந்தது. அவன் உடல் கரியமணி என ஒளிவிட்டது. ஈரம் வழிந்த இலைப்பரப்புகளில் அவன் உடலின் ஒளி அலைபடிவதுபோல் தோன்றியது. காட்டுக்குள் மழை காற்றுடன் இணைந்து சுழன்றது.

அவர்கள் மேலே வந்ததும் பூசகர் சென்று எதிர்கொண்டு வரவேற்று ஆலயமுகப்பிற்கு கொண்டுவந்தார். கலிதேவனுக்கு நேர்நிற்றலாகாதென்பதனால் கர்ணன் இடப்பக்கமும் துரியோதனன் வலப்பக்கமும் நிற்கப் பணிக்கப்பட்டனர். துரியோதனனுக்குப் பின்னால் கனகர் நின்றார். கர்ணன் கைகளைக் கூப்பியபடி தளர்ந்து கீழே சரியும் விழிகளுடன் நின்றான். அவனை பின்னால் இருவர் தாங்கிப்பிடித்திருந்தனர். அவன் கழுத்துத் தசைகள் சொடுக்கி அதிர்ந்துகொண்டிருந்தன. கெண்டைக்கால்தசைகள் உருண்டிருந்தன. துரியோதனன் வணங்காமல் கைகளை மார்பில் கட்டியபடி நோக்கி நின்றான்.

பூசகர் மலரும் நீரும் காட்டி சுடராட்டு நிகழ்த்தினார். செய்கைகளால் பலிகொடையும் சொற்கொடையும் ஆற்றிக்கொண்டிருந்தபோது துரியோதனன் மெல்ல நகர்ந்து கலிக்கு நேர்முன்னால் வந்து நின்றான். பூசகர் திரும்பி கையசைத்து விலக்கமுயன்று பின் தவிர்த்தார். நீரும் மலரும் கொண்டு வந்தளித்தபோது கர்ணன் கைநீட்டி பெற்றுக்கொண்டான். துரியோதனன் சுருங்கிய புருவங்களுடன் சிலைவிழிகளையே நோக்கிக்கொண்டிருந்தான்.

தீப்தரின் ஆணைப்படி மூன்று வைதிகர்கள் வந்து பணிந்து கர்ணனையும் துரியோதனனையும் சுனையருகே கொண்டுசென்றனர். தீப்தர் அருகே வந்து “ஆடையை கழற்றுக அரசே!” என்றார். “ஏன்?” என்று அவன் அவரை அப்போதுதான் நோக்குபவன் போன்ற திகைப்புடன் கேட்டான். “கலிதீர்த்தம் இது. இமயத்தின் காகதீர்த்தம் கலந்தது. நகரைக் கவ்விய நோய் நீங்க நீங்கள் இதில் கழுவாய்நீராட்டு இயற்றவேண்டும்.”

அவன் அச்சொற்களையும் பெற்றுக்கொள்ளவில்லை. அவ்விழிகளின் வெறுமையை நோக்கியபின் அவர் தலையசைக்க அகம்படிக்காரர்கள் அவன் ஆடைகளை களைந்தனர். முழுவெற்றுடலுடன் அவன் நிற்க தீப்தர் அகம்படியினரிடம் “ஒரு சிறு அணிகூட இருக்கலாகாது. கருவறை விட்டுவந்த அதே தோற்றம் இருக்கவேண்டும்” என்றார். ஓர் அகம்படியன் அவன் கைகளில் இருந்த கணையாழி ஒன்றை கழற்றினான். குழலில் மலர்கள் எஞ்சியிருக்கின்றனவா என ஒருவன் நோக்கினான்.

அவர்கள் பணிந்ததும் தீப்தர் துரியோதனனின் கைகளைப்பற்றியபடி அழைத்துச்சென்று நீர் விளிம்பருகே நிறுத்தி “இறங்கி நீராடுக அரசே!” என்றார். அவன் குனிந்து நீரையே நோக்கிக்கொண்டிருந்தான். “நீராடுக!” என்றார் தீப்தர். அவன் மெல்ல காலடி எடுத்துவைத்து சேற்றிலிறங்கினான். அவன் கால்கள் நடுங்கிக்கொண்டிருந்தன. “கைகளை கூப்புக!” என்றார் தீப்தர். அவன் குழந்தைபோல் அதை செய்தான்.

நீர் அலைகொப்பளிக்கத் தொடங்கியது. அதற்குள் பல்லாயிரம் நாகங்கள் நெளிவதுபோல. “மூழ்குக!” என்றார் தீப்தர். அவன் கண்மூடி நீரில் மூழ்கி எழுந்தான். சொட்டும் குழலுடன் நின்ற அவனை நோக்கி “பிறிதொருமுறை! பிறிதொருமுறை!” என்றார் தீப்தர். கிளைகளுக்குள் இருந்து “கா!” என்னும் கூச்சலுடன் வந்த காகம் ஒன்று நீருக்குள் பாய்ந்தது. மீன்கொத்தி போல மூழ்கி மறைந்தது. அவன் திகைத்து நோக்க “மூழ்குங்கள்” என்றார் தீப்தர். அவன் மீண்டும் மூழ்கியபோதும் கூச்சலிட்டபடி மேலும் காகங்கள் வந்து நீரை அறைந்து விழுந்து மூழ்கின.

படைவீரர்கள் வியப்பொலியும் அச்சக்கூச்சலுமாக வந்து குழுமினர். நான்கு பக்கமும் காட்டுக்குள்ளிருந்து காகங்கள் வந்து நீருக்குள் சென்றபடியே இருந்தன. நீரை அவை அறைந்து சிதறடித்து கற்களைப்போல மூழ்கி கருநிழலாக மாறி ஆழ்ந்து அங்கிருந்த இருள்கலங்கலுக்குள் மறைந்தன.

நீர் மேலும் மேலும் கருமைகொண்டது. “வைதிகரே, போதும்!” என்றான் கர்ணன். “மூன்றாம் முறை! மூன்றாம் முறை!” என்றார் தீப்தர். மீண்டும் துரியோதனன் மூழ்கியபோது நீரே தெரியாதபடி காகங்கள் வந்து விழுந்தன. உடல் பேரெடை கொண்டதுபோல துரியோதனன் தள்ளாடி நீருக்குள்ளேயே விழுந்தான். “அரசே, கரைசேருங்கள்… வந்துவிடுங்கள்” என்று கர்ணன் கூவினான். துரியோதனன் நடுங்கியும் தத்தளித்தும் காலெடுத்துவைக்க காகங்கள் அவனை அறைந்து அறைந்து நீரிலேயே மூழ்கடித்தன. அவனால் ஏறமுடியவில்லை.

“அவரால் அதைக் கடந்து வரமுடியவில்லை” என்றார் தீப்தர். “அவர் நோய்கொண்டிருக்கிறார்!” என்று கனகர் கூவினார். துரியோதனன் உடல் ஒளியிழந்து கருமைகொண்டு தசைகள் தளர்ந்து தொய்ந்தது. அவன் தோள்களும் கால்களும் நடுங்கின. உதடுகள் துடித்துக்கொண்டிருந்தன. கண்ணிமைகள் தடித்துச் சரிந்தன. “நோய் கொள்கிறார். கணம் தோறும் நோய் முதிர்கிறது” என்றார் வைதிகர் ஒருவர். “ஆசிரியரே, அவர் இதைக் கடந்து மீளமுடியாது.”

உடல்குறுகி துரியோதனன் நீருக்குள்ளேயே விழுந்தான். இருமுறை எழமுயன்று மீண்டும் விழுந்து நீரில் முழ்கினான். அவனை சரியாகப் பார்க்கமுடியாதபடி சென்று விழும் காகக்கூட்டங்களின் சிறகுகள் மறைத்தன. கர்ணன் தன் ஆடைகளை களையத்தொடங்கினான். அதைக் கண்ட தீப்தர் “அரசே, வேண்டாம்… இது மீளமுடியாத ஆழம்” என்று கூவி கைநீட்டி தடுக்கவந்தார். ஆடைகளைக் கழற்றி வீசி அணிகளைப் பிடுங்கி உதிர்த்தபடி நீரை நோக்கிச்சென்ற கர்ணன் தள்ளாடி விழப்போனான். பிடிக்கவந்த ஒருவனை உந்திவிட்டு “அரசே! அரசே!” என வைதிகர்கள் கூவுவதை புறக்கணித்து நீருக்குள் பாய்ந்தான்.

நீரிலிறங்கியதுமே அவன் ஆற்றல்கொள்ளத் தொடங்கினான். முதல்முறை மூழ்கியதுமே அவன் விழிகள் எழுந்தன. மும்முறை மூழ்கி எழுந்ததும் பெருந்தோள்களும் நிமிர்வும் கொண்டவன் ஆனான். துரியோதனனை தன் தோள்களில் தூக்கிக் கொண்டு கரைநோக்கி நடந்து வந்தான். சேற்றுப்பரப்பில் அவனை படுக்கவைத்தான். அவனுக்குப் பின்னால் சுனைக்குள் புகுந்த காகங்கள் நிழல்களாக உள்ளே அசைந்து பின் மறைந்தன. அலையடங்கி அது அமைதிகொண்டது.

துரியோதனனின் அருகே வந்து குனிந்து தீப்தர் அவன் முகத்தை நோக்கினார். “அரசர் மீண்டுவிடுவார்… இனி சிலநாட்களில் முன்பென ஆகிவிடுவார்” என்றார். விழிதூக்கி கர்ணனை நோக்கி “அரசே, தாங்கள்…” என்றார். கர்ணன் ஆழ்ந்த குரலில் “அரசரை அரண்மனைக்கு கொண்டுசெல்வோம்” என்றான். இருவீரர் வந்து துரியோதனனை தூக்கிக் கொண்டனர்.

மழைநின்றுவிட்டதை அவர்கள் அறிந்தனர். இலைகள் சொட்டி ஓய்ந்துகொண்டிருந்தன. இனியகாற்றுகளால் இறுதித்துளிகளும் உதிர்க்கப்பட்டன. வேதம் முழங்க வைதிகர் முன் செல்ல அவர்கள் ஒருசொல்லும் பேசாமல் நடந்து இறங்கினர். கோட்டையை அடைவதற்குள்ளாகவே அவர்களில் பலர் நோய்நீங்கி ஆற்றல் பெற்றுவிட்டிருந்தனர்.

அஸ்தினபுரியில் மழை நின்றமையை உணர்ந்த மக்கள் எழுப்பிய ஓசை காலைப்பறவைகளின் குரலென ஒலித்துக்கொண்டிருந்தது. கறையென வானில் படிந்திருந்த முகில்குவைகளுக்கு அப்பாலிருந்து சூரியன் எழத்தொடங்கினான். கோட்டைப்பரப்பு சிலிர்த்தது. குறுங்காட்டின் அனைத்து இலைகளும் ஒளிகொண்டன. ததும்பிய நீர்த்துளிகள் சுடர் பெற்றன.

முந்தைய கட்டுரைதினமலர் 27, ஒற்றைவரிகளின் அரசியல்
அடுத்த கட்டுரைகோவை சந்திப்பு கடிதங்கள் 3