மெல்லுணர்ச்சி, மிகைநாடகம்,உணர்வெழுச்சி

index

புதியவர்களின் சந்திப்புகளில் தொடர்ச்சியாகப் பேசப்பட்ட சில தலைப்புகள் விவாதத்தின் நெறிகள், கருத்துக்களைத் தொகுத்துக்கொள்ளும் முறைமை போன்றவை. அவற்றில் முக்கியமான ஒரு தலைப்பு புனைவுகளில் வெளிப்படும் உணர்ச்சிகளைப் பற்றியது.

உண்மையில் இலக்கியம் குறித்த தொடக்கப்புரிதல்களில் ஒன்று இது. இலக்கிய அறிமுகம்செய்யும் ஒரு முன்னோடி முதலில் இதைப்பற்றித்த்தான் இளம் வாசகர்களிடம் பேசத்தொடங்குவார். ஓர் இலக்கிய அறிமுக வகுப்பில் ஆரம்பநிலை விளக்கங்களில் ஒன்றாக இது இருக்கும். ஆனால் தமிழில் பல ஆண்டுகளாக இலக்கியவாசிப்புடையவர்களுக்குக் கூட இத்தெளிவு இருப்பதில்லை என்பதைக் கவனித்திருக்கிறேன். காரணம், இலக்கியவிவாதம் என்பது வெற்று அரட்டை அல்லது மட்டம்தட்டல்களாகவே சென்றுகொண்டிருப்பதுதான்

இன்றைய வாசகனுக்கு படைப்பின் உணர்ச்சிகள் சார்ந்த சிக்கல் எழுவது அவன் தீவிரஇலக்கியத்திற்குள் நுழைந்த ஆரம்ப ஆண்டுகளிலேயே அமைகிறது. இளமையில் அவன் வாசித்து வியந்த புனைவுகள் அவனை உணர்வெழுச்சி கொள்ளச்செய்வதாக இருக்கும். பல்வேறுவகையான மெல்லுணர்வுகளால் தூண்டப்படும் வயதில் அவ்வாசிப்பு நிகழ்ந்திருக்கும்.

அதன்பின் அவன் இலக்கிய அறிமுகம் பெறுகிறான். இலக்கியத் தளத்தில் அவன் சந்திக்கும் முக்கியமான தரப்பு என்பது வெறுமே அறிவார்ந்த தளத்தில் மட்டுமே வாசிப்பவர்களால் ஆனது. இவர்கள் இருவகை. அரசியல், சமூகவியல் கருத்துக்களை மட்டும் இலக்கியத்தில் வாசிப்பவர்கள் முதல் வகை. அவர்கள் வெவ்வேறு நிலைப்பாடுகள் கொண்டவர்களாக இருப்பார்கள். இடதோ வலதோ. ஆனால் புனைவில் கருத்துக்களைக் கண்டடைவது மட்டுமே வாசிப்பு என எண்ணிக்கொண்டிருப்பார்கள்.

இரண்டாம் வகையினர், புனைவை ஒருவகை செய்திறனாக மட்டுமே அணுகுபவர்கள். ஒரு புனைவின் கட்டுமானச்சிக்கல்களை மட்டுமே இவர்களால் ரசிக்கமுடியும். எனவே அது மேலும் மேலும் சிக்கலான கட்டுமானம் கொண்டிருக்கவேண்டும் என நினைப்பார்கள். அதனுடன் தன் மூளையாலும் வாசிப்பனுபவத்தாலும் மோதுவதே வாசிப்பு என நினைப்பார்கள். வாசிக்க வாசிக்க இவர்களுக்கு ஒரு ‘டேட்டாபேஸ்’ உருவாகிறது. அதன் பின் இவர்கள் அந்த ஒட்டுமொத்த தகவல்திரள்கொண்டு புனைவின்மேல் முட்டுகிறார்கள்.

இவர்கள் புனைவில் இருந்து உணர்வுகளைப் பெறுவதென்பது இரண்டாம்பட்சமானது, இழிவானது என இளம்வாசகர்கள் எண்ணும்படி செய்கிறார்கள். புனைவுக்கு முன் ‘அசைவே இல்லாமல்’ இருப்பதும் அவ்வப்போது மிகமெல்லிய  மதிப்பீட்டை மட்டும் அளிப்பதும்தான் வாசிப்பு என நினைப்பார்கள். தேர்ந்த வாசகன் புனைவை ‘உடைக்க முயலவேண்டும்’ என்று சொல்பவர்களும் உண்டு.

இசையிலும் பிறகலைகளிலும் கூட இத்தகையோர் உண்டு. இவர்களைப்பற்றி இசைக்கலைஞர்கள் நடுவே பலவகையான நக்கல்கள் உண்டு. ஒருவகையில் இவர்கள் பரிதாபத்திற்குரியவர்கள். இவர்களின் இயலாமை அது. அதை ஓர் விதியாக மாற்றிச் சொல்லிக்கொள்கிறார்கள்.சுட்டசட்டி சட்டுவம் என சுருக்கமாகச் சொல்லலாம்

இலக்கியம் மெல்லுணர்ச்சிகளுக்கு எதிரானது என்பது ஓர் உண்மை. நாம் நம் முதிரா இளமையில் வாசித்து அடைந்த பல எளிய மன எழுச்சிகளை அற்பமானதாக அது பின்னுக்குத்தள்ளிவிடுகிறது. அதைச்சுட்டிக்காட்டி அது உணர்வுநிலைகளுக்கே எதிரானது என்று காட்டிவிடுகிறார்கள் இந்த வறண்ட கட்டைகள். இதுதான் இங்கே நிகழ்கிறது இலக்கியத்தை உணர்வுபூர்வமாக வாசிக்கும் இளம் வாசகர்களுக்கு தங்கள் வாசிப்பு பின்தங்கியதோ என்னும் ஐயம் எழுகிறது. அந்த வாசகர்களுக்கு அது நல்லதல்ல. நீண்டகால அளவில் ஓர் இலக்கியச்சூழலுக்கே எதிர்விளைவுகளையும் உருவாக்கும்

ஆகவே அடிப்படைப்பாடங்களை மீண்டும் சொல்லவேண்டியிருக்கிறது

புனைவில் வெளிப்படும் உணர்வெழுச்சிகள் அப்புனைவால் உருவாக்கப்படுவதில்லை. அவை வாசக எதிர்வினைகள் மட்டுமே. ஆகவே அவ்வெதிர்வினைகளைக்கொண்டும் அவற்றை உருவாக்க அப்புனைவுகள் கொண்டுள்ள முறைகளைக் கொண்டும் புனைவுகளின் உணர்வெழுச்சிகளை மூன்று வகைகளாகப் பிரிக்கலாம். ஓர் எல்லைக்குமேல் இது வாசகனின் நுண்ணுணர்வால் மட்டுமே முடிவுசெய்யப்படவேண்டியதுதான்.

1.மெல்லுணர்ச்சி [Sentiment]

நாம் இளமையில் வாசிக்கும் கணிசமான கதைகளில் நம்மைக் கவர்வது மெல்லுணர்வே. அதை இவ்வாறு வரையறைசெய்யலாம். குடும்பம், சமூகவாழ்க்கை வழியாக நிலைநிறுத்தப்பட்டுள்ள சில நிரந்தரமான பற்றுகளும் சார்புகளும் நம்பிக்கைகளும் நமக்குள்ளன. அவற்றை ஒட்டி எழும் உணர்வுநிலைகள் உள்ளன.  உறவு, பிரிவு, அவமதிப்பு, தனிமைஏக்கம், கடந்தகால ஏக்கம், தன்னிரக்கம் என அவை பலவகை.அவற்றை ஒரு புனைவு தூண்டிவிட்டு உணர்வெழுச்சியை உருவாக்குமென்றால் அது மெல்லுணர்வுப்படைப்பு.

பெரும்பாலும் இப்படைப்புகள் நாம் ஏற்கனவே கொண்டுள்ள உணர்வுநிலைகளை தொட்டு எழுப்பிவிடுகின்றன, அவ்வளவுதான்.  கணிசமான வணிகக்கதைகள் இத்தகையவை.நாம் அவ்வுணர்வுகளை அடையும் விருப்புடனும் முன்தயாரிப்புடனும் இருப்போம்.

உதாரணமாக சமீபத்தில் வாசித்த ஒரு கதை. பன்னாட்டு நிறுவனத்தில் பணியாற்றும் ஒருவர் அமெரிக்கா போகவேண்டியிருக்கிறது. தன் அம்மாவை பேரம்பேசி மிகக்குறைவான பணத்தில் ஒரு அனாதைவிடுதியில் சேர்த்துவிட்டுச்செல்கிறார். இக்கதையை வாசிக்கையில் நாம் அடைவதென்ன? ஒரு வகை இரக்கம். மெல்லிய அறச்சீற்றம். அவை உருவாகுமென்று அறிந்தே அக்கதைகள் எழுதப்படுகின்றன. அவற்றுக்கான ஒரு கட்டமைப்பும் அவற்றில் உள்ளது.

இத்தகைய ஆக்கங்களில்  கதாபாத்திரங்கள் கறுப்புவெள்ளையாகச் சித்தரிக்கப்பட்டிருக்கும். அப்போதுதான் நாம் எவர்பொருட்டு பரிதாபம் கொள்ளமுடியும் என்றும் எவரிடம் காழ்ப்படையமுடியும் என்றும் தெளிவாக இருக்கும். மேலே சொன்ன கதையிலேயே அந்த அம்மா அன்பே உருவான அன்னை. உண்மையில் பிறர் மகிழ்ச்சியாக இருப்பதை விரும்பாத, முற்றிலும் எதிர்மறையான உணர்வுநிலைகள் மட்டுமே கொண்ட பெண்கள் உண்டு. அந்த அன்னை அப்படிப்பட்டவர் என்றும் இருந்தால் அந்தக்கதை மெல்லுணர்ச்சிகளை உருவாக்காது. அதன் உணர்வுமையம் சிதறிப்போகும்.

இவ்வாறு ஒற்றைப்படையாக உணர்ச்சிகளை உருவாக்குவதனால்தான் இலக்கியம் மெல்லுணர்ச்சிகளை நிராகரிக்கிறது. ஏனென்றால் இலக்கியத்தின் இலக்கே வாழ்க்கையின் சிக்கல்களை, உணர்வுகளின் ஊடுபாவுகளை, அழியாத அறமுரண்பாடுகளை, சமூக இக்கட்டுகளைச் சொல்வதுதான்.

  1. மிகைநாடகத்தன்மை [Melodrama]

சொல்லில் உள்ளதுபோலவே இது நாடகத்துடன் தொடர்புடையது. பதினேழாம் நூற்றாண்டில் ஓப்பரா என்னும் கலைவடிவம் ஐரோப்பாவில் பெரும்புகழ்பெற்றது. இசையும் நாடகமும் இணைந்தது அது. இசைக்கான உச்சகட்டத் தருணங்கள் நாடகத்துக்குள் தேவைப்பட்டன. ஆகவே அது நிலையான மாதிரிக்கதாபாத்திரங்களையும் செயற்கையான மோதல்களையும் உருவாக்கி உச்சகட்டங்களை கட்டமைத்தது. இத்தன்மை பின்னர் புனைவுகள் அனைத்திலும் நீடித்தது. இது இன்றுவரை வணிகக்கேளிக்கை வடிவங்கள் அனைத்திலும் உள்ள ஒன்று. இன்று இசைநாடகம் அன்றி எதிலும் இதற்குக் கலைமதிப்பு இல்லை

மிகைநாடகத்தன்மையின் இயல்புகள் என்ன? ஒன்று, கதைமாந்தர்கள் கறுப்புவெளுப்பாக தெளிவாகக் கட்டமைக்கப்பட்டிருப்பார்கள். அப்போதுதான் பார்வையாளர்கள் தான் விரும்பும் வெறுக்கும் தரப்புகளை அடையாளம்காணமுடியும். இரண்டு, கதாபாத்திரங்கள் வரையறைசெய்யப்பட்டிருப்பதனால் கதையின் உச்சங்கள் அதிகமாற்றங்கள் இல்லாமல் திரும்பத்திரும்ப வரும். மூன்று, உச்சகணங்களின் மோதல்கள் கட்டமைக்கப்பட்டவையாக இருக்கும். அவை வாழ்க்கையில் நாமறியும் உச்சங்களின் நகல்களாக இருக்கும்.

நம் சினிமாக்களும் தொலைகாட்சித் தொடர்களும் மிகைநாடகத்தையே நம்பியிருக்கின்றன.. அமெரிக்காவில் டிவி தொடர்களைக் குறிக்கும் சோப் ஓப்பரா என்ற சொல்லின் மூலம் இதுவே.

 

  1. உணர்வெழுச்சிகள் [Emotions]

உணர்வெழுச்சிகளை இலக்கியத்திலிருந்து பிரிக்கவே முடியாது. சொல்லப்போனால் இலக்கியமென்பதே உணர்வுகளின் பின்னலாக நிகழும் ஒரு நுணுக்கமான கலை. அறிவார்ந்த தளம் என்பது எப்போதும் கலையில் இரண்டாம்பட்சமானது.  உணர்வுகளை நம்பகமாக ஆக்க அவை கலையில் கையாளப்படுகின்றன. இன்றைய கலைவல்லுநர்கள் கலையின் அறிவுத்தளம் என்பது எந்நிலையிலும் ஒரு பாவனைதான் என்றும் அதற்கு அறிவுதளத்திற்குரிய நேர்மதிப்பு இல்லை என்றும் வாதிடுகிறார்கள்

கலையிலிருந்து உணர்வெழுச்சிகளை அடைவது மிகச்சிக்கலான ஒரு செயல்பாடு. இலக்கிய விமர்சனத்திலும் தத்துவத்திலும் மிகமிக விரிவான ஆய்வுகள் அதைக்குறித்து நிகழ்ந்துள்ளன. என்னிடமிருக்கும் ராபர்ட் ஆடியின் தத்துவக்க்கலைக்களஞ்சியத்தில் ஒன்றிலிருந்து ஒன்றாக தத்துவக்கொள்கைகள் வந்தபடியே உள்ளன. ஆர்வமுள்ளவர்கள் இணையம் வழியாகவே ஏராளமாக வாசிக்கமுடியும்

ஒரு புனைவு நம்மை உணர்வுரீதியாக எழுச்சி கொள்ளச்ச்செய்வதற்கான இரு அடிப்படைகள் உள்ளன. ஒன்று நம் சொந்த அனுபவங்களையும் நம் ஆழ்மனதையும் அது எப்படிப் பாதிக்கிறது என்பது. இன்னொன்று நாம் வாழும் சமூகம் நம்மை எப்படி கட்டமைத்திருக்கிறது என்பது. நம் உணர்வெழுச்சியை நாமே பின்பு ஆராயமுடியும் என்றால் நாம் அப்புனைவைக் கடந்துசெல்லத் தொடங்குகிறோம்.

பொதுவாக , இலக்கியம் உருவாக்கும் உணர்வுநிலைகளைப்பற்றிய விவாதங்கள் இன்று மூன்று தளங்களில் நிகழ்கின்றன. ஒன்று, நரம்பியல் மற்றும் உளவியல் சார்ந்து. இரண்டு, சமூகவியல் மற்றும் குறியீட்டியல் சார்ந்து. மூன்று, மொழியியல் சார்ந்து.

இலக்கியரசனையின் தளத்தில் நின்றபடி புனைவு உருவாக்கும் உணர்வுநிலைகளை சில அடிப்படைகளைக்கொண்டு அடையாளம்காணமுடியும். ஒன்று, அது சில மதிப்பீடுகளை, விழுமியங்களைச் சார்ந்த நெருக்கடிகளை உருவாக்கும். அவற்றை மறுபரிசீலனைசெய்யவைக்கும். அல்லது அவற்றின் முழுப்பேருருவை நமக்குக் காட்டும்.

அவ்வுணர்ச்சிநிலை என்பது உண்மையில் அவ்விழுமியங்களை அவற்றின் முழுமையுடன் நாம் காண்பதன் மூலம் உருவாகும் மன எழுச்சிதான்.  லா.ச.ராவின் ‘பாற்கடல்’  கி ராஜநாராயணனின் ‘பேதை’ , அழகிரிசாமியின் ‘ராஜாவந்திருக்கிறார்’ போன்ற கதைகளை உதாரணமாகச் சொல்லலாம். அவை நாம் அறிந்த மெல்லுணர்வுகளைச் சீண்டி நெகிழச்செய்வதில்லை. நாம் சற்றே அறிந்த சிலவற்றை முழுமையாகக் காட்டி மனம்பொங்கச்செய்கிறன.

இரண்டாவதாக, புனைவுகள் நம் உள்ளத்தை கட்டமைத்துள்ள ஆழ்படிமங்களைத் தொட்டு உலுக்குகின்றன. அவற்றை புதுவடிவில் எழச்செய்கின்றன. அல்லது மறு உருவாக்கம் செய்கின்றன. அதன் விளைவாக அவை நம்மை உணர்வெழுச்சி கொள்ளச்செய்கின்றன. சிலசமயம் நாம் ஏன் உணர்வெழுச்சி கொண்டோம் என்றே நாம் உணர்வதில்லை. நமது அகம் கொந்தளிப்படைகிறது. அங்கே மறைந்துள்ள எதுவோ பொங்கி எழுந்துவிடுகிறது.  மிகச்சிறந்த உதாரணங்கள், தி.ஜானகிராமனின் ’பரதேசி வந்தான்’ ஜெயகாந்தனின் ‘விழுதுகள்’

நாம் நம் இலக்கியச்சாதனைகளைத் திரும்பிப்பார்க்கையில் அவையனைத்துமே உணர்வெழுச்சிகளின் வழியாக நம்மை ஆட்கொண்டவை, மொழியில் நீடிப்பவை என்பதைக் காணலாம்.  என் ஆசிரியர்களுக்கு ஆசிரியரான சி.ஜேசுதாசன் ஒரு மரியாதைக்காகக்கூட  உணர்வுநிலை கூடாத ஆக்கங்களை ஏற்றுக்கொள்ளமாட்டார்.

முற்றிலும் உணர்வெழுச்சியே இல்லாமல் இலக்கியவாசிப்பு செய்பவர்களை என்ன என்று எடுத்துக்கொள்வது? எனக்குத்தெரிந்த ஒருவர் கூடத்தில் பெரிய வீணை வைத்திருந்தார். ‘வாசிப்பீர்களா?” என்றேன். “இல்லை, வீட்டுக்குள் குருவிகள் வந்துவிடும். ஒருமுறை சுண்டினால் பறந்துவிடும். அதற்காக வைத்திருக்கிறேன்” என்றார். அதையும் செய்யலாம்தான். ஆனால் வீணை அதற்கானது அல்ல.

 

 

முந்தைய கட்டுரைநூஸ் – கடிதங்கள்
அடுத்த கட்டுரைதினமலர் 26, நீர்ப்பாசி