நூஸ் – கடிதங்கள்

ஓவியம் அஜயன் சாலிஸேரி
ஓவியம் அஜயன் சாலிஸேரி

அன்புள்ள ஜெ,

சிறுகதையின் இலக்கணங்களில் ஒன்றாக ஒரு நல்ல சிறுகதை முடியும் இடத்தில் இருந்து துவங்க வேண்டும் என்பீர்கள். அதற்கு மிகச் சிறந்த ஒரு உதாரணமாக இந்த ‘நூஸ்’ சிறுகதையைச் சொல்லலாம். போத்தி நாணியின் தம்பி நாணப்பனைப் பற்றிக் கூறும் அந்த கடைசி வரி மொத்த கதையையும் வேறு கோணத்தில் வாசிக்க வைத்த ஒன்று. ஆணாக இருந்து பெண்ணாகத் தன்னை உணர்ந்த ஒருவன், பெண்ணாகவே வாழும் அந்த ஊரில் அவளு(னு)க்குக் கிட்டாத ஒரு இன்பத்தைப் பற்றியே பேசிக்கொண்டிருக்கிறாள். அடையாத ஒவ்வொன்றும் உள்ளத்தில் பேருருவம் கொள்ளும் என்பதும், காணுமிடங்களில் எல்லாம் அது மட்டுமே கண்ணிற்கு தெரியும் என்பதும் அனுபவத்தில் அறிந்த உண்மை. பாவம் தான் ஆசாரிச்சி இல்லையா ஜெ!
பொதுவாக இத்தகைய கதைகளில் மெல்லுணர்வே மேலோங்கி ஒரு வகை சோகமாகவே எழுதப்பட்டிருக்கும். மாறாக முழுக்க முழுக்க நகைச்சுவையாக வந்திருப்பது அபாரம். அதுவும் அந்த வாயுக்கேற்றம், அது கேறும் இடமெல்லாம் குமரிக்கே உரித்தான விஷயங்கள். எனக்குத் தெரிந்து வேறு எந்த ஊரிலும் இதைப் பற்றி ஊருக்குள் பேசப்படுவதில்லை (அதற்காக நடப்பதில்லை என்று அர்த்தம் கிடையாது). மறைந்த என் தாத்தா ஒரு ஜோக் சொல்லுவார், ஏன் வேதக்கோவிலும், அநாதை ஆஸ்ரமங்களும் அருகருகே இருக்கின்றன என்பதைப் பற்றி. இப்போது சொன்னால் ஜெயில் நிச்சயம். உண்மையில் மனதைப் புண்படுத்தக் கூடாது என்ற போர்வையில் நாம் மேலும் மேலும் விலகிக் கொண்டே செல்கிறோம் என்று தான் தோன்றுகிறது. கொஞ்சம் நக்கலுக்கும், நையாண்டிக்கும் இடம் தரலாம் தான். அந்த காஞ்சிரம், நெத்திலி போன்றவையெல்லாம் நினைத்து நினைத்து சிரிக்க வைப்பவை. ஆசாரிச்சி தேர்ந்த உளவியல் வல்லுனரும் கூட. மிகச் சரியாக தினங்களைக் கணக்கிட்டு வந்து மூன்று ரூவாயை ஐந்து ரூவாயக்கக் கூடிய வல்லமை அவளுக்குண்டு. நன்றாக வாய்விட்டு சிரித்தேன்.
அன்புடன்,
மகராஜன் அருணாச்சலம்
அன்புள்ள ஜெ
நூஸ் வாசித்தேன். சமீபத்தில் வாசித்த அற்புதமான சிறுகதை. அதை அனுபவம் என்னும் வகைமைக்குள் அடக்கியிருக்கிறீர்கள். ஒரு அழியாத்துயரத்தை சிரிப்பும் கொண்டாட்டமும் உள்ளடங்கிய சமூகக்குறியிடுகளுமாக வெளிப்படுத்தியிருக்கும் கதை. நுணுக்கமான கதாபாத்திரச்சித்தரிப்பு
ஜெயராமன்
அன்புள்ல ஜெ
நூஸ் ஒரு முக்கியமான படைப்பு. கதையா அனுபவமா நினைவா என்றெல்லாம் தெரியவில்லை. அதில் பெண்பித்தர்களைப்பற்றி போற்றி சொல்லும் இடம் ஒரு முக்கியமான வெளிச்சத்தை அளிக்கிறது.
அருண்

 

முந்தைய கட்டுரைசந்திப்புகள் கடிதங்கள் 2
அடுத்த கட்டுரைமெல்லுணர்ச்சி, மிகைநாடகம்,உணர்வெழுச்சி