கோவை புதியவாசகர் சந்திப்பு

1

இம்மாதம் எட்டாம் தேதி  முழுக்க வெறிபிடித்ததுபோல எழுதிக்கொண்டிருந்தேன். வெண்முரசு நான்கு அத்தியாயங்கள் முன்னால் செல்லாமல் பயணம் கிளம்பமுடியாத நிலை. நடுவே பல சந்திப்புகள். எல்லாமே சினிமா. அவை நேரம் கொல்பவை. ஒருவழியாக சாயங்காலம் ஏழரை மணிக்குத்தான் வேலைகள் முடிந்தன. அவசரமாகக் குளித்துக் கிளம்பி ஓடி ரயிலைப்பிடித்தேன்.

இந்த எட்டரை மணி கோவை ரயிலை மட்டும் நான் முன்னரே வந்து அடைந்ததே இல்லை. ஐந்தரைமணி கன்யாகுமரி ரயில் என்றால் மதியத்துக்குமேல் நேரமில்லை என்னும் உணர்வு காலையிலேயே இருக்கும். இந்த ரயில் சரிதான் , ராத்திரிதானே என்னும் ஒரு ‘அசால்ட்டான’ நிலையை உருவாக்குகிறது.

2

கோவைக்கு காலை ஏழரைக்குச் சென்று சேர்ந்தேன். ஒரு கட்டு புத்தகங்களை எடுத்து வந்திருந்தேன். என் நூலகத்தில் புத்தகங்களுக்கு இடமில்லாத நிலை. பயனுள்ள, ஆனால் நான் மேற்கொண்டு வாசிக்க வாய்ப்பில்லாத நூல்களை பங்கேற்பாளர்களுக்கு அளிக்கலாமே என நினைத்தேன். அவற்றை மட்டும் கொண்டுசென்றால் நன்றாக இருக்காதே என்பதற்காக பங்கெடுக்கும் ஒவ்வொருவருக்கும் ஒன்று என என் நூல்கள்.

பெட்டியை நைலான் கயிறால் கட்டியிருந்தமையால் கையை அறுத்தது. ஒருவழியாக வெளியே வந்தேன். எனக்காக நண்பர்கள் ‘குவிஸ்’ செந்தில், விஜய் சூரியன், அரங்கசாமி, ராதாகிருஷ்ணன்,ஷிமோகா ரவி ஆகியோர் வந்திருந்தார்கள். ரயில் நிலையத்திலிருந்தே நிகழ்ச்சி நடக்கும் இடத்துக்குச் சென்றோம்

3

புதியவாசகர்களுக்கான சந்திப்பு நிகழ்ச்சியை கோவை காந்திநகரிலேயே ஒர் இல்லத்தில் ஏற்பாடுசெய்திருந்தோம். கோவை இரும்புவணிகர்  பி.குப்புசாமி அவர்களின் பழைய இல்லம். அவர்கள் புது இல்லத்திற்குச் சென்றமையால்  பூட்டிக்கிடந்தது. எங்களுக்கு அளித்தனர். நண்பர் நடராஜன் ஏற்பாடு செய்திருந்தார்.  பெரிய வீடு. நூறாண்டுகள் பழையது. ஆனால் அனைத்துவசதிகளும் கொண்டது. ஒரு காலப்பயண அனுபவத்தை அளித்தது அங்கே தங்கியிருந்தது

திரு குப்புசாமி அவர்களின் தந்தையார் காங்கிரஸில் காமராஜருக்கு மிக அணுக்கமானவராக இருந்தவர். நிகழ்ச்சி நடந்துகொண்டிருந்தபோது குப்புசாமி அவர்கள் வந்து சந்தித்து நலம் விசாரித்துச்சென்றார். நிகழ்ச்சியை  செந்திலும் விஜய்சூரியனும், ராதாகிருஷ்ணனும், மீனாம்பிகையும் ஒருங்கிணைத்தனர்.

5

ஒன்பதுமணிக்குள் நண்பர்கள் வந்து கூடிவிட்டனர். இயல்பாக உரையாடலைத் தொடங்கினோம். ஒன்றிலிருந்து ஒன்றெனத் தொடர்ந்துசெல்லும் உரையாடல். கூடவே சிரிப்பும். பிற இடங்களில் சந்திப்புநிகழ்ச்சிகளில் வெம்மை ஒரு பிரச்சினையாக இருக்கவில்லை. இங்கே கோவையிலேயே வெயில் கொளுத்தியது. ஆனாலும் பேச்சு சுவாரசியமாகவே சென்றது.

கொல்லிமலையில் மாலை முழுக்க மலையுச்சி நோக்கிய பயணத்துக்காகச் செலவாகியது. இங்கே பேச்சுமட்டும்தான். மறுநாள் காலையில் அருகே இருந்த பூங்காவுக்கு ஒரு நடை சென்றுவந்தோம். அன்று புதியவாசகர்கள் கொண்டுவந்திருந்த கதை, கட்டுரைகளை விவாதித்தோம். மதியத்துடன் சந்திப்பு முடிந்தது.

6

அன்று மாலை நான் கோவையில் என் மேல் மதிப்புகொண்ட சிலரைச் சந்திக்கலாமென நடராஜன் ஒருங்கிணைத்திருந்தார். சிறுதுளி அமைப்பை நடத்தும்  வனிதா மோகன் அவர்களைச் சந்தித்தேன். நான் சந்திக்க விரும்பியிருந்த முக்கியமான ஆளுமைகளில் ஒருவர் அவர். தமிழகம் எதிர்காலத்தில் நினைவுகூரப்போகும் சிலரில் ஒருவர் என்று சொல்வேன்

தமிழகத்தின் அனைத்து நகரங்களும் ஆறுகளின் கரைகளில் அமைந்தவை. அல்லது ஏரிகளால் ஆனவை. அத்தனை ஆறுகளும் இன்று சாக்கடைகள். ஏரிகளில் பெரும்பாலானவை நிரப்பப்பட்டுவிட்டன. எஞ்சியவை சாக்கடைத்தேக்கங்கள். எந்நகரிலும் அவற்றைப்பற்றிய விழிப்புணர்வு மக்களிடம் இல்லை. அந்த விழிப்புணர்வை கோவையில் உருவாக்கவும் கோவையின் நீர்த்தேக்கங்களையும் நொய்யலையும் பாதுகாக்கவும் பெரும்பணியாற்றிவரும் அமைப்பு சிறுதுளி.

7

கோவையில் அவர்களால் மீட்படைந்த ஏரிகளின் நீலநீர்ப்பெருக்கைப் பார்க்கையில் அரசின் பொறுப்பின்மை, மக்களின் அக்கறையின்மை, சல்லி அரசியல்வாதிகளின் சுயநல இடையூறுகளைக் கடந்து மீட்புக்கு இன்னமும்கூட சாத்தியமுள்ளது என்னும் நம்பிக்கை உருவாகிறது.

நொய்யலின் நீரளிப்பு ஓடைகளை அடையாளம் கண்டு அதை மீட்கும் நோக்குடன் பெருமுயற்சி ஒன்றை தொடங்கியிருக்கிறார்கள். சென்ற மார்ச் 26 அன்று அண்ணா ஹசாரே அவர்கள் வந்து அதைத் தொடங்கி வைத்தார். அம்முயற்சியைப்பற்றியும் அதன் நடைமுறை இடர்களைப்பற்றியும் பேசிக்கொண்டிருந்தோம்.

9

தொழிலதிபர்கள் டி.பாலசுந்தரம், சிஆர்ஐ பம்புகள் நிறுவனத்தின் வேலுமணி ஆகியோர் தொடர்ந்து வந்தனர். இயகாகோ சுப்ரமணியம் அவர்கள் வந்தார். நடராஜனின் நண்பர் வரதராஜன் வந்தார். சமகாலத் தொழில் வணிக உலகின் பல்வேறு சிக்கல்கள், சவால்கள் குறித்து உரையாடின ஒவ்வொன்றும் எனக்குத் திறப்பாக இருந்தன. குறிப்பாக டாட்டா ஸ்டீல் அமைப்பு சந்தித்துள்ள சமீபத்திய நெருக்கடி பற்றிய சித்திரம் உரையாடல்வழியாக விரிந்தது ஒரு பெரிய நாவலை வாசித்த அனுபவத்தை அளித்தது.

மறுநாள் காலை சற்றுப்பிந்தித்தான் எழுந்தேன். அஜிதன் உடனிருந்தான். முந்தையநாளே நண்பர்கள் சென்றுவிட்டிருந்தனர். விஜய்சூரியன் இருந்தார். மாலையில் நாகர்கோயில் ரயிலில் ஊருக்கு வந்தேன்.

10

இதுவரை புதியவர்களின் சந்திப்புகள் மட்டும் நான்கு நடந்துவிட்டன. மொத்தம் நூற்றுமுப்பது புதியவாசகர்கள். அவர்களில் பெரும்பாலானவர்கள் சென்ற ஒரு வருடத்திற்குள் வாசிப்புக்குள் நுழைந்தவர்கள். வாசகர்களை உள்ளே கொண்டுவந்த வழியாக இணையத்தில் அவ்வப்போது வெடிக்கும் விவாதங்கள் இருந்துள்ளன. கூடவே எஸ்.ராமகிருஷ்ணனின் கதாவிலாசம் என்னும் தொடரும் பெரிய பங்களிப்பாற்றியிருப்பதை உணர்ந்தேன்.

புதியவாசகர்களின் ஐயங்கள், அறிதல்முறைகளை அணுகி அறிய வாய்ப்பு கிடைத்ததை பெரிய வாய்ப்பாகவே நினைக்கிறேன்.

 

 

மேலும் படங்கள்

 

முந்தைய கட்டுரைஅழிமுகம் – கடிதங்கள்
அடுத்த கட்டுரைதினமலர் 25, குடிமகனின் சுயமரியாதை