மூன்று மாதத்திற்கு முன்னாள் உங்களுடைய கன்னியாகுமரி மற்றும் இன்னொரு புதினத்தையும் தியாகு-வின் பரிந்துரை பேரில் எடுத்து வந்திருந்தேன்! நான் கன்னியாகுமரி புத்தகத்தை எடுத்து படிக்க ஆரம்பித்து இருந்தேன். ஏனென்றால் அந்த இன்னொரு புத்தகத்தை விட ஒரு 10 வருடத்திற்கு முன்னால் நீங்கள் எழுதியது! என் மனைவி வேறு வழியில்லாமல் அந்த மற்றொரு புத்தகத்தை எடுத்து படிக்க ஆரம்பித்தாள். நான் காலை வெளியே கிளம்பிய போது புத்தகத்தை கீழே வைக்காமல் கதவைத் திறந்து கார் செல்வதற்கு வழி செய்துவிட்டு, மறுபடியும் எனக்கு கை காண்பித்த போதும் அப்புத்தகம் கையில் இருந்ததை கவனிக்க நேர்ந்தது!
வேலைப் பளுவில் வீட்டை மறந்து இருந்தபோது, நண்பகல் சுமார் 1:30 மணி அளவில் அலைபேசி அழைப்பு, நான் இன்று சமைக்க இயலவில்லை, நீங்கள் வரும்பொழுது நம் இரண்டு பேருக்கும் மதிய உணவு வாங்கி வந்துவிட முடியுமா? என்று கேட்டபொழுது, அப்போது நான் இருந்த மனநிலையில் காரணத்தை கேட்கவில்லை! வீட்டிற்கு ஒரு 2:30மணிக்கு வந்து சேர்ந்த போதும், எனக்கு கதவை திறந்துவிட்டு விட்டு, பொருட்களை கூட வாங்காமல் வேகமாக வீட்டிற்குள் வந்து அதே புத்தகத்தை படித்துக் கொண்டிருந்தாள்!.அவள் ஏன் மதிய உணவு வாங்கிவரச் சொன்னாள்? என்பது இப்போது புரிந்தது, நான் சிறிது சிரமப் பரிகாரம் செய்து வந்த போது…
நான் இந்த புத்தகத்தை படித்து முடித்துவிட்டேன்! கீழே வைக்கவே முடியவில்லை, நான் காலை உணவைக் கூட எடுத்துக் கொள்ளவில்லை என்று சொன்னபோது என்னால் நம்ப முடியவில்லை! என்றாள்
அவள் படித்த புதினம் உங்களுடைய படைப்பான… “இரவு” தான்!
இருவரும் உணவு மேஜையில் மதிய உணவு பொட்டலங்களைப் பிரித்துக் கொண்டு உட்கார்ந்தபோது அவள் தான் படித்த அனுபவத்தின் ஆச்சரியமும், திகிலும், கார்வையையும் அவள் அதை விவரித்த தடையில்லாத பிரவாகத்திலேயே தெரிந்தது!
உங்களுக்கு மிகவும் பிடிக்குமே இந்த மாதிரி கதைகள்!..என்று சொன்னபோது என்னுடைய கைகள் காய்ந்து போய் உட்கார்ந்து கேட்டுக் கொண்டிருந்தேன்!
நான் “இரவு” படிக்க ஆரம்பித்த பொழுது, கன்னியாகுமரி எழுதிய 10 வருடத்திற்கு பிறகு எழுதப்பட்டது (2010) என்பதை உணர்ந்தேன்! கடந்த டிசம்பர் 2015-ல் நீங்கள் நிகழ்த்திய “கீதைப் பேருரை” யில் என்னுடைய காண்டீபத்தை நான் கீழே வைக்கவேயில்லை என்று குறிப்பிட்டதை முழுவதுமாக உணர முடிந்தது!
சரவணன் கொச்சியில் வந்து இறங்குவதும், நீலிமாவுடன் திரும்புவதும் வரை ஒரு திரைப்படம் பார்த்த உணர்வு!
எனக்குமே அந்த மாதிரியான தொடர்புகள் கிடைத்திருந்தாலும் ஒருவிதமான எச்சரிக்கை உணர்வு என்னை மேலே செல்லாமல் தடுத்திருக்கிறது! சரவணன் போன்ற வெகு சிலராலேயே அந்த தொடர்புகளின் ஆழத்தை தொட்டுவிட முடியும்…நீங்கள் மட்டுமே அந்த அனுபவத்தை கதையாக வடிக்க முடியும்!
இரவுக்கு ஆயிரம் கண்கள்..என்ற பாடலைப் பாடிய சுசீலாவின் அற்புதக் குரலை விவரித்து, தெலுங்கர்களின் தமிழ் மொழி ஆளுமையை உணர்த்தியது எல்லாமே நீங்கள் “இரவு”என்ற புதினத்தை ஒவ்வொரு வரியிலும் நிறுத்தி இருக்கிறீர்கள்!
சமீபத்தில் கொச்சின் தாண்டி நாங்கள் திருவனந்தபுரம் சென்று கொண்டிருந்தபோது, GPS உதவியுடன் சென்று கொண்டிருந்தாலும், கொச்சியில் மெட்ரோ ரயில் கட்டுமான வேலைகளின் ஊடே வழி தவறிவிடக் கூடாது என்பதற்காக, அங்கிருந்த சிலரிடம் எர்ணாகுளம் இதே வழிதானே என்று கேட்டபோது அவர்கள் இதுதான் எர்ணாகுளம்! என்று பதிலளித்தபோது, எங்களையும் அறியாமல், நீங்கள் எழுதியிருந்த கொச்சி-எர்ணாகுளம் என்ற வித்தியாசத்தில் கேரளத்தினருக்கே ஒரு குழப்பம் உண்டு என்று எழுதியிருந்ததை நினைத்து, சிரித்துக் கொண்டோம்!
இரவுப் பொழுது, இரவு என்று எங்காவது சொல்லிக் கொள்ளும்போதும் கூட நானும், விஜியும் எங்களுக்கு மட்டுமே புரியக்கூடிய ஒரு பிரத்தியோக புன்சிரிப்பின் வாயிலாக உங்களை நினைத்துக் கொள்கிறோம்!
லௌகீக வாழ்கையில் நாங்கள் தொலைத்திருந்த இரவுப் பொழுதின் வசீகரத்தை மீட்டுக் கொடுத்ததற்கு நன்றி!
இம்மாதிரியான இன்னொரு புதினம் நீங்கள் படைக்கவேண்டும் என்று வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டு இந்த இரவில் விடை பெறுகிறேன்!
“பால் போலவே வாண் மீதிலே”பாடல் என்னுடைய ஹோம் தியேட்டரில் ஒலிக்க ஆரம்பித்துவிட்டது!
சுந்தர் கார்த்திகேயன்
***
அன்புள்ள ஜெ
நான் உங்கள் இரவு நாவலைத்தான் முதன்முதலாக வாசித்தேன் – பிடிஎஃப் ஆக சுற்றிக்கொண்டிருந்தது. முதலில் அதன் பரபரப்பான ஓட்டத்துக்காகவும் அதிலுள்ள விசித்திரமான வாழ்க்கைக்காகவும்தான் வாசித்தேன். அதன்பிறகு இப்போது வெண்முரசுவரை வாசித்துவிட்டேன்
இன்று வாசிக்கும்போது அது எத்தகைய உளவியல் நூல் என தெரிகிறது. அதில் யட்சிகுறித்துவரும் பகுதிகளும் நிஷாகந்திபூ வரும் இடமும் எல்லாமே உளவியல் சார்ந்தவை. நம் மனதில் நாம் அறியாமல் இருக்கும் கனவுப்பிரதேசங்களைச் சுட்டிக்காட்டுபவை
அதிலும் கமலாவின் இறப்பை மேனனும் கதாநாயகனும் எதிர்கொள்ளும் விதத்தில் உள்ள நுட்பம் ஒரு கிளாஸிக் ஆக இந்நாவலை மாற்றுகிறது
அன்பழகன் ராமசாமி
***
இரவு வாழ்க்கை என்பது தகுந்தது – யோகத்திற்கும் போகத்திற்கும். ஆனால் அதன் உண்மையான வீரியத்தை நம்மால் எதிர்கொள்ள இயலுமா என்று கேட்கிறது இந்த நாவல். சட்டங்களுக்கும் ஒழுங்குகளுக்கும் கட்டுப்பட்டு நடப்பது பகல் பொழுது. இரவு என்கிற கட்டட்ற வேளையின் பிரம்மாண்ட வலிமையை, அதன் குண்டூசிமுனையை சூடுபடுத்தி, கண்ணுக்குள் செலுத்துவது போல விவரிக்கிறது.
***