[ 11 ]
ஜரையன்னை தன் மைந்தனுக்கு அணிகளை அளித்தபின்னர் அன்றே உயிர்துறந்தாள். காட்டின் எல்லையாகிய சிற்றோடையின் கரையில் அவள் அவன் கையால் இறுதிநீர் பெற்று அடங்கினாள். அவள் உடலை கையேந்தியபடி ஜராசந்தன் தன்னந்தனியாக நடந்தான். சற்று தள்ளி அவனை பின்தொடர்ந்த ஜரர்கள் அவன் வரமாதாவின் குகைக்குள் சென்று மறைந்தபோது வெளியே நின்றுவிட்டனர்.
பன்னிருநாட்கள் அவர்கள் அங்கே காத்திருந்தனர். எருதன் திரும்பிவரப்போவதில்லை என்னும் எண்ணம் அவர்களுக்கு ஏற்பட்டு திரும்ப முடிவுசெய்த அன்று அவன் குகைக்குள் இருந்து திரும்பி வருவதை ஒருவன் கண்டான். திறந்த வாய்க்குள் இருந்து நாக்கு வருவதைப்போல என்று அவன் சொன்னான். வளைவிட்டு நாகமெழுவதைப்போல என்று அதை குலப்பாடகன் மாற்றிப்பாடினான்.
குகைவிட்டெழுந்த எருதனை அணுகிய ஜரர்கள் “இளையோனே, எங்கள் காவல்தெய்வம் நீ. எங்களுடன் இரு” என்று வேண்டிக்கொண்டனர். அவன் அவர்களை மிகத்தொலைவிலெனத் தோன்றிய விழிகளால் நோக்கி “அக்குகைக்குள் சென்றவன் அல்ல நான்” என்றான். “அங்கே என்ன கண்டாய் மைந்தா?” என்று முதுஜரன் ஒருவன் கேட்டான். “கையில் பாதியுடல் மைந்தனைக் கொண்ட அன்னையை. ஒளிரும் விழிகளும் குருதியுலராத நாவும் கொண்டிருந்தாள்” என்றான். “வரமாதா! அவள் வரமாதா!” என்று ஜரர்கள் கூவினர். கைகூப்பி அவன் காலடியில் அமர்ந்தனர். “சொல். என்ன கண்டாய்? அவள் என்ன சொன்னாள்?” என்றார் குலப்பூசகர்.
“நான் யாரென்றும் இங்கு ஆற்றவேண்டியது என்ன என்றும் அறிந்தேன். இன்றே கிளம்புகிறேன்” என்றான். “எங்கே?” என்றார்கள் ஜரர்கள். “என் வலது உடலின் நாட்டுக்கு. அதை ராஜகிருஹம் என்கிறார்கள்.” அவர்கள் திகைத்து நோக்கினர். “நம்மில் எவரும் அங்கு சென்றதே இல்லை” என்று ஒருவன் சொன்னான். “நான் உங்களில் ஒருவன் அல்ல” என்று அவன் சொன்னான். முதுமகன் “எப்போது மீண்டு வருவாய்?” என்றான். “இப்போது எழுந்ததுபோலவே பெருவினா ஒன்று என்னுள் எழுமென்றால் மீண்டும் அன்னையைப்பார்க்க இக்குகைக்குள் செல்வேன். அதுவரை வரமாட்டேன்” என்று அவன் சொன்னான்.
அன்றே அவன் கிளம்பினான். அவனுக்கு புலித்தோல் ஆடையும் இரும்புமுனைகொண்ட வேலும் குலமூத்தாரால் அளிக்கப்பட்டது. அவன் தன் உடலில் அன்னை அளித்த அரசகுலத்து நகைகளை அணிந்திருந்தான். சிறு கைவளைகளை காதுகளில் குழைகளைப்போல் அணிந்தான். கால்தண்டைகளை நெற்றியில் கட்டி தொங்கவிட்டான். கணையாழிகளையும் கயிற்றில் கட்டி கழுத்தில் அணிந்தான். ஆரங்களை கைகளில் சுற்றிக்கொண்டான். வெளிவானின் ஒளி அவன் கண்களை கூசச்செய்தது. எங்குசெல்லவும் வழிகள் தெரிந்திருக்கவில்லை. வற்றிய ஆறுபோல செல்பவை பாதைகள் என்றே அவன் அறிந்திருக்கவில்லை.
சாலையில் செல்பவர்களை பின்தொடர்ந்து அவன் சந்தைக்கு சென்றுசேர்ந்தான். அங்கே மணிவணிகம் காலையிலேயே முடிந்தபின் ஊனும் நெய்யும் உப்பும் மரவுரியும் விற்கும் வணிகர்கள் செறிந்திருந்தனர். அவன் சந்தைக்குள் நுழைந்தபோது பித்தன் என எண்ணிய காவலன் அருகே வந்து வேல்கொண்டு அவனை தடுத்தான். தடுத்தவனைத் தூக்கி அப்பால் எறிந்து அவன் உள்ளே நுழைந்தபோது காவலர் வேல்களுடன் திகைத்து நின்றனர். சந்தையின் அனைத்து முகங்களும் திரும்பி நோக்கின.
ஜரர்களுடன் மணிவணிகம் செய்யும் கோசலநாட்டுப் பெருவணிகன் “அவன்தான் எருதன். ஜரர்களின் காவல்தெய்வம்” என்று கைநீட்டி கூவினான். வியப்பொலியுடன் மக்கள் அவனை சூழ்ந்துகொண்டனர். அவன் உடலில் கிடந்த நகைகளைப் பார்த்த காவலர்தலைவன் “அரச நகைகள்! கள்வர்கள் கொண்டவைபோலும்!” என்று கூவினான். வில்லம்புகளுடன் காவலர்கள் அவனை சூழ்ந்துகொண்டனர். அவன் சற்றும் அஞ்சவில்லை. திரண்டிருந்த மகதர்களை நோக்கி “நான் மகதமன்னர் பிருஹத்ரதரின் முதல் மைந்தன். இருவராகப் பிறந்தோம். ஜராவனத்தில் விடப்பட்டோம். என் இணையன் மறைந்தான். அவனை என்னுடன் இணைத்தாள் என் அன்னை ஜரை. நான் அவனையும் சேர்த்துக்கொண்டு வளர்ந்தேன்” என்றான்.
சிலகணங்கள் கூட்டம் திகைத்து நின்றது. எவனோ ஒரு சூதன் “மகத இளவரசர் ஜராசந்தர் வாழ்க!” என்று கூவினான். கூட்டம் அக்குரல் கேட்டு ஓசையிலாது உடல் அதிர்ந்தது. “மகதத்தின் வெற்றிப்பெருவீரர் வாழ்க!” என்று சூதன் மேலும் குரலெழுப்ப “வாழ்க!” என்று கூட்டம் வாழ்த்தோசை எழுப்பியது. சற்றுநேரத்தில் வாழ்த்தொலிகளுடன் அவனைச்சூழ்ந்து மகதமக்கள் அலையடித்தனர். மலர்களும் மஞ்சளரிசியும் அவன் மேல் அள்ளி வீசப்பட்டன. காவல் வீரர்கள் வேல்தாழ்த்தி வில் தணித்து பின்னகர்ந்தனர்.
அங்கிருந்து பெருந்திரளாக அவர்கள் ராஜகிருஹம் நோக்கி சென்றனர். செல்லச்செல்ல அக்கூட்டம் வளர்ந்தது. நகரின் கோட்டையை அடைந்தபோது மறுஎல்லை தெரியாதபடி தலைப்பெருக்காகத் தெரிந்தது. கோட்டைகளோ படைக்கலங்களோ தடுக்கமுடியாத விசைகொண்டிருந்தது. நகர்மக்கள் உப்பரிகைகளில் செறிந்து வாழ்த்தொலி எழுப்பினர். சாலையோரங்களில் எல்லாம் மக்களின் முகங்கள் ஒன்றுமேல் ஒன்றென சுவராகி எழுந்தன.
நடக்கநடக்க அவன் உறுதிகொண்டான். நகர்நுழைந்தபோது அவனுக்கு ஜராசந்தன் என்னும் பெயர் முற்றமைந்துவிட்டிருந்தது. ராஜகிருஹத்தின் அரசவை கூடுவதற்கு முன்பு ஐங்குலமூத்தாரும், அமைச்சர்களும், அவைப்புலவரும், அயலகத்தூதர்களும், சூதரும் கூடி நின்று சொல்லாடி மகிழ்ந்துகொண்டிருந்த அங்கணத்தை நோக்கி அந்தப் பெருநிரை வந்தது. உள்கோட்டைவாயிலில் நிறைந்து பெருகி முற்றத்தை முழுதும் நிறைத்து அரண்மனை இடைநாழிகளில் முட்டி அலையடித்தது. “ஜராசந்தர்! மகதப் பேரரசர்!” என்று அக்கூட்டம் வேதமென தாளத்தில் உரைத்துக்கொண்டிருந்தது.
அரண்மனை இடைநாழியில் எழுந்த ஜராசந்தன் “இங்கு அரசர் பிருஹத்ரதர் எவர்?” என்றான். அமைச்சர் பத்மர் ஓடிவந்து “யார் நீ? என்ன வேண்டும்? அரண்மனை எல்லைகளை மீறினால் கொல்லப்படுவாய்” என்றார். “நான் அரசரின் முதல்மைந்தன். இருவராகப்பிறந்து அன்னையால் ஒருங்கிணைக்கப்பட்டவன். ஜரையால் இணைக்கப்பட்டமையால் ஜராசந்தன்” என்றான். “அரண்மனைவிட்டு நீங்கிய இளவரசர்களின் அணிகள் இவை. இவற்றைக் கண்டெடுத்து அணிந்தமையால் நீ அரசக்குருதி என்றாவதில்லை” என்றார் பத்மர்.
அப்போது அங்கே ஓடிவந்த இளவரசர்கள் “இவனை எவர் உள்ளே விட்டது? அரண்மனை புகுவதற்கான நெறிகளேதும் இல்லையா இங்கே?” என்று கூச்சலிட்டனர். கிருதி “இவன் அணிந்திருக்கும் நகைகள் அரசகுலத்துக்குரியவை. இக்கள்வனை இப்போதே பிடித்துக்கட்டுங்கள்… தலைதிருகுங்கள்” என்று கூவினான். பத்மர் “இளவரசே, பொறுங்கள். பொறுங்கள். எதையும் நீதிக்குகந்த வகையில் ஆற்றுவதே மகதத்தின் முறை” என்றார். “எது நீதி? எவனோ ஒரு காட்டான் வந்து அரண்மனை இடைநாழியில் நின்று உரிமைபேசுவதா நீதி?” என்று பிருகத்சீர்ஷன் கத்தினான்.
“அரசர் வரட்டும். அரசியர் வரட்டும். நான் அவர்களின் மைந்தனல்ல என்று அவர்கள் சொல்லட்டும், நான் விலகிச்செல்கிறேன்” என்றான் ஜராசந்தன். “ஆம், அதுவே முறை. அரசர் வரட்டும்” என்றார் குலமூதாதை. ஏவலர் சூழ பிருஹத்ரதன் மெல்ல நடந்து வெளியே வந்தார். நரைத்த புருவம் கொண்ட விழிகள் கூர்ந்துநோக்கியபின் திகைத்தன. “பத்மரே, இவன்…” என்று அவர் சொல்லெடுக்க பத்மர் “அரசியர் சொல்லட்டும்” என்றார். “ஆம், அரசியர் சொல்லட்டும்… அரசியர் சொல்லட்டும்” என்று கூட்டம் முழங்கியது.
அணிகையும் அன்னதையும் சேடியர் சூழ அங்கே வந்தனர். கூடிநின்றிருந்த பெருங்கூட்டம் ஓசையடங்கி அவர்களின் காலடியோசை கேட்கும் அமைதி நிலவியது. பத்மர் உரத்த குரலில் “அரசியரே, சொல்லுங்கள்! இதோ இங்கு நிற்பவன் காட்டாளன். உங்கள் இளமைந்தருக்குரிய அரசுரிமைக்கு தானே உரியவன் என்கிறான். உங்கள் கருவிலுதித்த முதல்மைந்தன் தானே என்கிறான்” என்றார். “உங்கள் மொழியில் இக்கூட்டம் முடிவெடுக்கட்டும். இவன் எவர் மைந்தன்?”
அன்னதை அணிகையின் தோளை பற்றிக்கொண்டாள். இருவராலும் நிற்கமுடியவில்லை. நடுங்கும் தலையுடன் அவனை கூர்ந்துநோக்கினர். பின் தம் மைந்தரை நோக்கினர். “நாங்களா இக்காட்டாளனா, எவர் நாடாளவேண்டும்? சொல்லுங்கள்!” என்றான் கிருதி. அன்னதை உதடுகளை அசைத்தாள். அவளால் சொல்லெடுக்க முடியவில்லை. “அன்னையே, நான் உங்கள் இருவரின் மைந்தன்” என்றான் ஜராசந்தன். “எவர் மைந்தன்? அதை சொல்க…” என்றான் கிருதி. “அதை நான் அறியேன்” என்றான் ஜராசந்தன். “ஓசையிடாதீர். அவர்களே சொல்லட்டும்” என்றார் பிருஹத்ரதன்.
அணிகை மிகமெல்லிய குரலில் “நானறியேன்” என்றாள். “இவன் என் மைந்தனென்று என் உள்ளம் சொல்லவில்லை.” அன்னதையை நோக்கி விழிகள் திரும்ப அவள் தலைகுனிந்து “ஆம், என் மைந்தன் என்று எனக்கும் தோன்றவில்லை” என்றாள். கிருதி “இனியென்ன கேள்வி? அணிகளைத் திருடிய இக்காட்டாளனை இக்கணமே சிறைபிடியுங்கள். படைத்தலைவர்களே…” என்று கூவினான். “ஆம், இனி இவன் இம்முற்றம் விட்டு அகலக்கூடாது” என்றான் பிருகத்புஜன். கூடியிருந்தவர்களில் ஒருவர் “இல்லை, தெய்வங்களுக்கு மானுடர் சான்றளிக்கமுடியாது” என்று கூவ மற்றவர்கள் “ஆம்!ஆம்!” என்று முழக்கமிட்டனர்.
“நாம் இதை பின்னர் முடிவுசெய்வோம்” என்றார் பிருஹத்ரதன். “அரசே, மக்கள் விந்தைகளையும் மாயங்களையும் நம்ப விழைபவர்கள். இவனைக் குறித்த கதைகளை அவர்கள் முன்னரே நம்பிவிட்டனர். ஆகவே இதையும் அவர்கள் நம்பியாகவேண்டும்” என்றார் பத்மர். “அவர்களை நிறைவுறச்செய்யாமல் நாம் இங்கிருந்து விலக முடியாது.” “இந்தக் கீழ்மக்களா இங்கே முடிசூட்டவேண்டியவர் எவர் என முடிவுசெய்வது? நம் கோல்கீழ் வாழும் எளியோர். நாம் போர்களில் கொன்று குவிக்கும் புழுக்கள்” என்று கிருதி சொன்னான்.
“இளவரசே, இச்சொற்களால்தான் இவ்வுணர்ச்சியே உருவாகியிருக்கிறது. இது இவனுக்கான ஏற்பு அல்ல. மகதத்தின் நான்கு இளவரசர்களுக்கான எதிர்ப்பு” என்றார் பத்மர். “வாயை மூடும்! இவர்களை எப்படி கலைப்பதென்று எங்களுக்குத் தெரியும். படைத்தலைவர்கள் எங்கே? நம் படைகள் எழுக… இவ் இழிமக்களில் நூற்றுவரின் தலைகள் நம் முற்றத்தில் உருளட்டும். எஞ்சியவர் எங்கே செல்வார்கள் என நான் அறிவேன்” என்று கிருதி இரைந்தான். பத்மர் “படைகளும் இம்மக்களிடமிருந்து வந்தவர்கள்தான்” என்றார்.
“படைத்தலைவர்களே…” என்று கிருதி கூவியபடி திரும்பி அவர்கள் அருகே எந்த உணர்வுமற்ற முகங்களுடன் கைகட்டி நின்றிருப்பதை கண்டான். “கலையுங்கள் இவர்களை” என்றான். “இது என் ஆணை! குருதியை காட்டுங்கள் இவர்களுக்கு!” பெரும்படைத்தலைவர் சிருங்கசேனர் “இளவரசே, நீங்கள் இன்னமும் முடிசூடவில்லை. இங்கே ஐங்குலமும் இணைந்து முடி எடுத்து வைத்து அரிசியிட்டு நீரூற்றிய பின்னரே அரசர்கள் ஆணையிடும் நிலை கொள்கிறார்கள்” என்றார்.
“இழிமகனே, எதிர்ச்சொல் எடுக்கிறாயா?” என்று கைநீட்டியபடி கிருதி அவரை அடிப்பதற்காக பாய்ந்தான். அவன் தம்பியர் அவனை பிடித்துக்கொண்டனர். “இளவரசே, மக்களுக்கு எதிராக படையினர் எழமாட்டார்கள். அவர்கள் எங்கள் அன்னையரும் தந்தையரும் என்று அறிக!” என்றார் படைத்தலைவர். பிருஹத்ரதன் “இப்பேச்சு நிற்கட்டும்…” என்று உரத்த குரலில் கூவி கைதூக்கினார். “என் முன் பூசல் வேண்டாம். ஆவதென்ன என்று பார்ப்போம்.”
முதியகுலத்தலைவர் ஒருவர் “அனற்சான்று நோக்குவோம்” என்றார். “அனலின் சொல்லை அனைவரும் ஏற்போம்.” கூடிநின்றிருந்தவர்கள் “ஆம், அனல்சான்றை ஏற்போம்” என்றனர். “ஏற்போம் ஏற்போம்” என்று குரல்கள் எழுந்து பரவிச்சென்றன. கூட்டம் முட்டி நெரிசலிட்டு அருகே வந்தது. “அகல் விளக்கு கொண்டுவாருங்கள். ஓர் அகல்விளக்கு!” என்று சிற்றமைச்சர் ஒருவர் கூவினார். வைதிகர் மூவர் பொன்னாலான சிற்றகலைக் கொண்டு அக்கூட்டம் நடுவே வைத்தனர். அதில் சிறுசுடர் பொருத்தினர்.
“ஜரனே, நீ எவர் மைந்தன் என்று சொல். அனல் அனைத்தையும் அறியும். உன் சொல்லை ஏற்று இம்மணிச்சுடர் அணையுமென்றால் அதை இங்குள மக்களும் ஐங்குலத்தலைவரும் ஏற்பர். அவர்கள் ஏற்றால் அரசனும் ஏற்றாகவேண்டும்” என்றார் குலத்தலைவர். “ஆம், அனல்சான்றே பிறப்புக்குரியது” என்றார் முதுவைதிகர். “ஆம்! அனல் சொல்லட்டும்” என்று கூட்டம் கூச்சலிட்டது.
ஜராசந்தன் திகைத்து நிற்க பத்மர் “அனலே கூறுக! இதோ நின்றிருக்கும் இந்த இளைய ஜரன் முதல் அரசி அணிகையின் மைந்தன் அல்லவா?” என்றார். நெருப்பு அணையாதிருந்தது. “இளைய அரசி! அவர் இளைய அரசியின் மைந்தர்!” என்று மக்கள் கூச்சலிட்டனர். அவர்களை கையமர்த்திவிட்டு “இதோ நின்றிருக்கும் இந்த இளைய ஜரர் இளைய அரசி அன்னதையின் மைந்தரா?” என்றார் பத்மர். சுடர் அசையவில்லை. பத்மர் திரும்பி கூட்டத்தை நோக்கி “போதுமல்லவா? எரிசான்றை ஏற்று இல்லம் திரும்புக!” என்றார்.
கூட்டத்தினர் கலைந்த ஒலியுடன் சற்றே பின்னடைய ஜராசந்தன் தன் கையை நீட்டியபடி “நான் இரு அரசியரும் பெற்ற மைந்தன். என் பெயர் ஜராசந்தன்!” என்றான். சுடர் இழுபட்டதுபோல துடித்து அணைந்தது. கூட்டம் ஒருகணம் அசைவற்று நிற்க சூதன் ஒருவன் “மகத இளவரசர் ஜராசந்தர் வாழ்க!” என்று கூவினான். களிவெறி கொண்டு அக்கூட்டமே கொந்தளித்தது. மேலாடைகள் வானில் எழுந்து சுழன்று அமைந்தன. வாழ்த்தொலி முழக்கம் அரண்மனைச்சுவர்களை அதிரச்செய்தது.
“அன்னையரின் மூச்சு. அது அன்னையரின் மூச்சால் அணைந்தது!” என்றான் இளையவனாகிய ஜயசேனன். “தந்தையே, இதை ஏற்கலாகாது. இதை ஏற்றால் இப்படி எவர் வேண்டுமென்றாலும் அரண்மனைக்கு வந்து முடிகோரமுடியும்” என்றான் பிருகத்புஜன். “இவன் அரியணை ஏறுவான் என்றால் நான் இக்காட்டாளனுக்கு அடிமைசெய்யவேண்டுமா?” என்றான் கிருதி. “நான் இவனை நோக்கியதுமே ஐயுற்றேன். இவன் விழிகளை நான் ஒருகணமும் மறக்கவில்லை” என்றார் பிருஹத்ரதன். அப்போது அன்னதை நினைவிழந்து சரிய சேடியர் கூச்சலிட்டபடி அவளை பற்றிக்கொண்டனர். “விலகுக! காற்று வரட்டும்! விலகுக!” என்று செவிலியர் கூச்சலிட்டனர்.
“இவன் இளவரசன் என நான் இப்போது ஏற்கிறேன். நாளை என் குலமூதாதையர் முன்றிலில் இவனை நிறுத்தி அவர்களின் அருட்கூற்றை கேட்கிறேன். அதன்பின் ஆவன செய்கிறேன்” என்று பிருஹத்ரதன் கைகூப்பியபின் திரும்பி நடந்தார். கூடியிருந்த மகதர் “முடிசூடும் இளவரசர் ஜராசந்தர் வாழ்க! மகதத்தின் மைந்தர் வாழ்க!” என்று கூவி ஆர்த்தனர். எங்கோ “திசையானைகள் ஒழிக!” என்று குரலெழுந்தது. கூடவே பெருஞ்சிரிப்பும் எழ பிருகத்புஜன் திரும்பி “யார் அது? கூவியவன் யார்?” என்றான். பின் நிரையில் “திசைப்பன்றிகள் அழிக!” என்று கூவ கூட்டமே கூச்சலிட்டு நகைத்தது.
பத்மர் “இனி இங்கு நிற்கவேண்டியதில்லை இளவரசே” என்றார். “பட்டத்து இளவரசே, குதிரைச்சாணியள்ள திசைக்கழுதைகளுக்கு தெரியுமா என்று கேளுங்கள்” என்று எவரோ கூவ மீண்டும் கூட்டம் வெடித்து நகைத்தது. திரும்பி நோக்கிய பத்மர் என்றும் அழியாத வஞ்சம் குடிகொண்ட பல்லாயிரம் கண்களை கண்டார். அவியிட்டு அவியிட்டு புரந்தாலும் அடங்கா பசிகொண்ட தேவர்கள்.
[ 12 ]
ஜராசந்தனிடம் அரண்மனையில் தங்கி இளைப்பாறும்படியும் மாலை அரசவையில் அனைத்தையும் இறுதியாக முடிவெடுக்கலாம் என்றும் பத்மர் சொன்னார். “ஆம், அதுவே முறை. ஆனால் நான் அரசகுடியினனாக இன்னும் மாறவில்லை. என் உணவும் உடையும் எளியவை. நான் இம்மக்களுடன் ஊர்மன்றிலேயே தங்குகிறேன்” என்றான் ஜராசந்தன். பத்மர் அவன் விழிகளை ஒருகணம் கூர்ந்து நோக்கினார். அதன்பின் அவர் அவனைப்பற்றிய எந்த ஐயமும் கொள்ள நேரவில்லை. இருவரும் ஒருவரையொருவர் நன்கறிந்துகொண்டனர்.
சொல்சூழ் சிற்றறையில் கிருதியும் இளையோரும் குமுறிக் கூச்சலிட்டனர். “என்ன நிகழ்கிறது? இந்த அறிவிலாச் செயல்களின் வழியாக அக்காட்டுவிலங்கு இந்நாட்டின் அரசனாகப் போகிறானா? நாங்கள் அவன் காலடியில் அமரவேண்டுமா? அதைவிட இந்நாட்டையே அனலால் கொளுத்தி அழிப்போம். தந்தையும் அன்னையரும் அமைச்சும் சுற்றமும் அனைத்தும் அழியட்டும்” என்று கிருதி கூவினான். “அமைச்சரே, உண்மையை சொல்லுங்கள். எதற்காக இந்த நாடகம்?” என்றான் பிருகத்புஜன்.
பத்மர் “இளவரசர்களே, அவன் எளியவன் அல்ல” என்றார். “உண்பதற்குப் போராடும் வாழ்க்கையிலிருந்து வென்றுசெல்லும் வேட்கைகொண்ட எவரும் எழுவதில்லை. ஏனென்றால் ஒவ்வொருநாளும் உண்பதற்குத் தேடியடைவதென்பது முழுஆற்றலையும் கொள்ளும் செயல். அத்துடன் அது ஒரு மானுடன் விழையும் முழு உவகையையும் அளிக்கும் வேட்டையும்கூட. வெற்றி என்பதும் வல்லாண்மை என்பதும் உண்பதற்கான வேட்டையை முற்றிலும் அறியாதவர்களுக்குரிய விழைவுகள்.”
“இளவரசர்களே, அரிதிலும் அரிதாக மிக எளியவாழ்க்கையிலிருந்து ஒருவன் வெல்லவும் ஆளவும் விழைந்தான் என்றால் அவன் இங்கு அரசுகளை அமைத்து போர்களை நிகழ்த்தி குருதியிலாடி அமையும் நாமறியா தெய்வங்களால் தொட்டெழுப்பப்பட்டவன் என்றறிக! அவனுக்கு நூலறிவு தேவையில்லை. சொல்லறிவு அளிக்க சுற்றமும் தேவையில்லை. அவனுக்குரிய அறிவனைத்தையும் அவன் விழைவென நெஞ்சில்கூடியிருக்கும் அந்த தெய்வமே சொல்லிக்கொடுக்கும். இவன் அத்தகையவன்” பத்மர் சொன்னார். “அக்குழந்தையரின் அணிகளுடன் அவன் சென்று எந்த குலத்தலைவர் இல்லத்திலும் நிற்கவில்லை. எந்தக் காவலர்மன்றையும் அணுகவில்லை. சந்தையில் சென்று நின்றான். அவன் தெய்வம் அவனுக்கிட்ட முதல் ஆணை அது.”
“அறிக, சந்தை என்பதுதான் என்ன? அது அரசவை அல்ல. நூல்மன்றும் அல்ல. அங்கே விற்கப்படும் வாங்கப்படும் ஒவ்வொன்றும் கண்முன் உள்ளன. ஒவ்வொன்றும் இன்னொன்றால் பொருள்கொள்கின்றன. பொருட்கள் இரக்கமற்றவை. அவற்றை நாம் விழிமூடி இல்லை என மறுத்துவிடமுடியாது. நம் விழைவுகளாலும் நோக்கங்களாலும் வளைத்துவிடவும் முடியாது. சந்தைகள் நுண்ணிய போர்க்களங்கள் என்றறிக!” என்றார் பத்மர்.
“அங்கே அவன் சென்று நிற்கையில் காண்பது எவரை? எளியவரை. நூலறியாதவரை. மானுடர் எவராயினும் விழைவுகளாலேயே சமைக்கப்பட்டிருக்கிறார்கள். நூலறிந்தோர் அவற்றுக்கு மேல் கொள்கைகளை, மரபுகளை, கனவுகளை போர்த்தி மாயம் காட்டத்தெரிந்தவர். அதற்குரிய சொற்களை கொண்டவர்கள். சந்தையிலிருப்போர் சொற்திரைகள் அற்ற வெறும் விழைவால் மட்டுமே ஆனவர்கள்” பத்மர் சொன்னார். “அவன் அங்கே சென்று நின்று அவர்களின் விழைவுகளுடன் உரையாடினான். ஒரேநாளில் பல்லாயிரம்பேரை வென்றான். பெரும்படையெனத் திரண்டு நம் அரண்மனைமேல் வந்து அறைந்தான்.”
“இவர்களா பெரும்படை? இவர்களின் படைக்கலம் என்ன?” என்று கிருதி இளிவரலுடன் முகம் சுளித்தான். “பத்துபேர் குருதியூறி விழுந்தால் ஈக்களைப்போல கலையும் இழிசினர்” என்றான் பிருகத்புஜன். “ஆம், உண்மை. அவர்கள் அச்சத்தால் ஆனவர்கள். அச்சம் அவர்களை எளிதில் வெல்லும். ஆனால் அவர்கள் அவ்வச்சத்துக்காக எப்போதும் நாணமும் கொண்டிருக்கிறார்கள். அச்சத்தைக் கடக்கும் ஒவ்வொரு வாய்ப்பையும் அவர்கள் எடுத்துக்கொண்டு கொண்டாடுகிறார்கள். கூட்டமாக ஆவதே அவர்களின் அச்சத்தை அழிக்கும் முறை. இளவரசே, நாம் அவர்கள் மேல் கொண்டுள்ள தளை என்பது அச்சமே. அச்சம் அழிந்த மக்கள்திரள் என்பது நம்மால் ஆளப்பட முடியாத நாடு.”
“அவன் அவர்களை நன்கறிந்திருக்கிறான். ஏனென்றால் அவன் அவர்களில் ஒருவன். நாம் அளித்த அழைப்பை ஏற்று அரண்மனையில் அவன் தங்கியிருந்தான் என்றால் இன்றே அவனும் ஓர் அரசகுலத்தான் ஆகியிருப்பான். உங்களுக்கு நிகரானவனாக அவனும் எண்ணப்பட்டிருப்பான். அத்துடன் மக்கள் இருபிரிவாகப் பிரிந்து ஒருசாரார் அவனையும் பிறிதொரு சாரார் உங்களையும் ஆதரித்திருப்பார்கள். அது அவர்கள் காலகாலமாக ஆடும் ஆடல். நுண்ணிய சொல்லாடல். வெட்டியும் ஒட்டியும் கடந்தும் அமைந்தும் போரிடுதல். இப்போர் மீண்டும் ஒரு கேளிக்கையென்றாகியிருக்கும். எவர் வென்றாலும் சின்னாளிலேயே வென்றவர் தரப்புக்கு அனைவரும் மாறிவிட்டிருப்பர். தோற்றவர்களுக்கு குற்றவுணர்சியின் விளையான ஒரு பொய்ப்புகழ் சின்னாள் நின்றிருக்கும். பின்னர் அனைவரும் வரலாற்றில் வெறும் பெயர்கள். வென்றவர் வென்றவை மட்டும் வரலாற்றில் பொருண்மையுடன் நின்றுகொண்டிருக்கும்.”
“இன்று அவன் அவர்களில் ஒருவன்” என்று பத்மர் தொடர்ந்தார். “மக்களின் உள்ளே குமுறிக்கொண்டே இருக்கும் ஒன்று உண்டு இளவரசர்களே. நம் நகருலாக்களில் களிவெறிகொண்டு நம்மை வாழ்த்திக் கூவும் குடிமகனும் சரி, நம் ஆணையை ஏற்று போர்கொண்டு உயிரளிக்கும் படைவீரனும் சரி, தங்கள் ஆழ்கனவுகளில் நாமாக ஆகி நடிக்கவும் செய்கிறார்கள். தங்களுக்குத்தாங்களே அவர்கள் சொல்லிக்கொள்ள அஞ்சுவது அது. இதோ அக்கனவுகளின் வடிவாக ஒருவன் எழுந்து வருகிறான். எளியவன். அவர்களில் ஒருவன். ஆனால் பேராற்றல் கொண்டவன்.”
“யுகயுகமாக நிகழ்வது இதுவே. அரசர்களுக்கு எதிராக எளியவன் ஒருவன் எழுந்துவந்து முடிகொள்வான். இங்குள்ள புதிய அரசுகளனைத்தும் அவ்வாறு எழுந்த மக்களில் ஒருவனாகிய மன்னர்களால் அமைக்கப்பட்டவை அல்லவா? இளவரசே, பேராற்றல் கொண்டெழுந்து விண்ணகங்களை வெல்லும் அரக்கர்களின் கதைகளை ஏன் மக்கள் விரும்புகிறார்கள்? ஏன் சொல்லிச் சொல்லி அவற்றை வாழச்செய்கிறார்கள்?” பத்மர் கேட்டார். “இவர்களை எளிதில் நாம் எதிர்க்கமுடியாது. நம் எதிர்ப்பிலிருந்தே வல்லமையை கொள்வார்கள். நாமளிக்கும் ஒவ்வொரு புண்ணுமிழ்க்குருதியிலிருந்தும் ஒருவர் எழுவார்கள்.”
இளவரசர்கள் அமைதியடைந்தனர். அவர்களின் விழிகள் மட்டும் மின்னிக்கொண்டிருந்தன. “அத்துடன் அவன் அவர்களுடன் சென்று தங்குவது பெரும் போர்நுட்பமும் கூட. அவனுக்கு நாம் நஞ்சிட முடியாது. அவனை எவ்வகையிலும் கொல்லமுடியாது. அவனைச்சூழ்ந்து மக்கள் எழுப்பியிருக்கும் வேலியை கோல்கொண்டு அரியணை அமர்வதுவரை அவன் விடமாட்டான். அவர்களின் உணர்வெழுச்சி ஒருதுளியும் இறங்க ஒப்பமாட்டான்.”
“நாம் என்னதான் செய்வது?” என்று கிருதி கேட்டான். “எளிதாக எண்ணி எதையும் செய்யவேண்டாம் என்றே சொல்லவந்தேன்” என்றார் பத்மர். “அவனைச்சூழ்ந்துள்ள ஆற்றலென்பது மக்களின் எழுச்சி. அவன் வெல்லக்கூடும் என்ற நம்பிக்கை அதன் அடித்தளம். மிகையுணர்ச்சிகளால் அது நுரையென கலக்கப்பட்டு மேலெழுப்பப்படுகிறது. மக்களெழுச்சி எதுவானாலும் அதை வெல்ல காத்திருப்பதொன்றே வழி.”
“இளவரசர்களே, இவர்கள் யார்? வேளிர்கள், ஆயர்கள், கைவினையாளர்கள், வணிகர்கள். இவர்களுக்குத் தெரியும் இவ்வெற்றியால் இவர்களின் இல்லத்துக்கு கால்பணமோ கைப்பிடி நெல்லோ வந்து சேரப்போவதில்லை என. இது இவர்களுக்கு ஓர் ஆழ்கனவை நேரிலாடும் களியாட்டு மட்டுமே. எவரும் களியாட்டில் வாழ்ந்துவிடமுடியாது. மெல்லமெல்ல இவ்வெழுச்சி அடங்கும். இவன் மண்ணிறங்கி தரையில் நிற்பான். அப்போது நாம் போரிடுவோம். இவனை அழிப்போம்” பத்மர் சொன்னார். “அப்போது இவ்வெழுச்சி மண்ணிறங்கிய பெரும் சோர்விலிருப்பார்கள் மக்கள். இவனை நாம் எப்படி அழித்தாலும் அதை எவ்வகையிலும் பொருட்படுத்தமாட்டார்கள்.”
“அவன் அதற்கும் வழிகாணலாமே” என்றான் கிருதி. “இல்லை, வரலாற்றில் மிகமிகச் சிலரே இந்தப் பொறியில் சிக்காது கடந்து சென்றிருக்கிறார்கள். இப்போது இவ்வெழுச்சி தன்னால் உருவாக்கப்பட்டது என அவன் நம்பத்தொடங்கியிருப்பான். அவர்களின் கூட்டுக்கனவெழுச்சியின் நுரைக்குமிழியே அவன் என்பதை அவனிடம் சொல்ல அவன் தெய்வம் முயலும். அவன் தன் ஆணவத்தால் அக்குரலை விலக்கிக் கொள்வான். தனக்கு கார்த்தவீரியனைப்போல் ஆயிரம் கை இருப்பதாக எண்ணுவான். எனவே மக்களின் உணர்ச்சியை மேலும் மேலும் எழுப்புவான்.”
“அவன் அறிந்திருக்கமாட்டான், அதற்கு முடிவிலி வரை செல்லும் ஆற்றலில்லை என. மேலே எழுந்து சென்று ஒரு கட்டத்தில் தன் எடையாலேயே வீழும் அலை அது. அப்புள்ளியில் அது சரியத்தொடங்கும்போது அவன் தன் ஆயிரம் கைகளாலும் அதை அணைத்து நிறுத்த முயல்வான். தன்னந்தனியாக எஞ்சி நிற்பான். ஒரு பெருந்தோல்வியைக் கண்டவன் வேர் உளுத்த பெருமரம். ஒற்றைக்கையால் அவனை சாய்த்துவிடமுடியும். ஆகவே காத்திருப்போம்” பத்மர் சொன்னார்.
சற்றுநேரம் சொல்லறையில் அமைதி நிலவியது. கிருதி உடலசைத்து அமர்ந்தான். பிருகத்புஜன் தொண்டையை கனைத்தான். கிருதி இருமுறை வெறுமனே உதடசைத்துவிட்டு “பத்மரே, ஒருவேளை அவன் வென்றால் என்ன ஆகும்?” என்றான். “அவன் குருதிகுடிப்பவன் என்கிறார்கள். மகதம் குருதியால் கழுவப்படும்” என்றார் பத்மர். “அசுரப்பேரரசர்கள் ஒருவர்கூட நெறிவிலக்கில்லை. அவர்கள் குருதியுண்ணவே வருகிறார்கள். இங்குள்ள ஒவ்வொரு குடிமகனின் கனவின் ஆழத்திலும் வண்டலெனப் படிந்துள்ள குருதிவெறியின் பருவடிவம் இவன்.” நேரடியாக அதை சொல்லக்கேட்டபோது அவர்கள் ஒவ்வொருவரும் நடுங்கினர். அதைச்சொன்னதும் பத்மருமே சற்று உளத்தளர்ச்சியடைந்தார்.