தேவதேவன்-கடிதம்

ஏழாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போது வந்த தீபாவளி. முந்திய நாள் ஆரம்பித்து, அடுத்த நாள் இரவு மிக ஆரவாரமாக போய்க் கொண்டிருந்தது. எனக்கு அப்பா நூறு அல்லது இருநூறு ரூபாய்க்கு பட்டாசு வாங்கித் தருவார், மத்தாப்பு, புஸ்வாணம், சங்கு சக்கரம் சகிதம். பொன்னை செலவழிப்பது போல பட்டசு கொளுத்துவேன். சில நாட்கள் கழித்து வரும் திருக்கார்த்திகைக்கும் இதில் மிஞ்சியதை வைத்து தான் சரி கட்டவேண்டும். ‘ஏ’ ப்ளாக்

வீடுகளின் சிறுவர்கள் விடும் ராக்கெட் ரகங்கள் ‘பி’ ப்ளாக்கில் இருந்த எனக்கு வாங்கித் தரப்படவில்லை. இன்னும் ஒரு பாக்கெட் ஆட்டம் பாம்ப், ஒரு பாக்கெட் சீனி வெடி, 2 பாக்கெட் லட்சுமி வெடி,, 4 டப்பா மத்தாப்பு, ஒவ்வொரு பாக்கெட் புஸ்வாணமும், சக்கரமும் மீதமிருந்தது (சீனி வெடி தவிர மற்றவைகளில் பாதி கார்த்திகைக்கு வைப்பு நிதியாக்க வேண்டியிருந்தது). மாலை தூர்தர்ஷன் தமிழ் சிறப்பு படம், தெவிட்டும் இனிப்புகளுடன்

முடித்துவிட்டு கடைசி ரவுண்ட் வெடிவைப்புக்கு பால்கனியில் எடுத்து வைத்துக் கொண்டிருந்தேன்.

பத்து அடி இடைவெளி விட்டு குவாட்டர்ஸ் முற்றத்தில் அரை ட்ரவுசர் போட்ட சிறுவன் நின்று கொண்டிருந்தான். புது உடுப்பு என சொல்வதற்கில்லை, கிழிசல் இல்லை. டம், டமால் என்று சத்தமும், பல வண்ணங்களில் ஒளிர்ந்து அணைந்து கொண்டிருக்கும் வாணவேடிக்கைகளுக்கு நடுவே அவன் அசைவே இல்லாமல் என்னை பார்த்துக் கொண்டிருந்தான். எதற்காக வந்திருக்கிறான் என தெரியும். சீனி வெடி பாக்கெட். பால்கனியிசிருந்து குதித்து வெளியேறினால் அவனை கடந்து தான் அடுத்த ப்ளாக் நண்பர்களை அடைய முடியும். பார்வையை தவிர்த்து பட்டசுகளை கலைத்து அடுக்கிக் கொண்டிருந்தேன். போய் தொலைவான் என நினைத்தேன்.

என் அருகில் வந்து, ‘அண்ணே…’

‘ம்ம்ம்…’, வேறெங்கோ பார்த்துக் கொண்டு…

என் முகத்தை பார்த்து விட்டு, வெடி பாக்கெட்டை பார்த்து விட்டு, என் முகத்தை பார்த்தான்.

மாலை இருட்டில் அவனின் கறுமை நிறத்திற்கு, கண்களின் வெள்ளை பகுதி தனியாக புலப்பட்டது. செருப்பு இல்லாத வெற்றுக் பாதங்கள்.

‘ஒரு பொட்டு வெடி அண்ணே..’

பொட்டு வெடியென்று சீனி வெடியைதான் சொல்கிறான் என தெரிந்தும் ‘தப்பாக’ குறிப்பிட்டு விட்டான் என நியாயப்படுத்தி,

‘பொட்டு வெடி எங்க..ஒண்ணும் இல்ல போ!..’

குரூரம் என உறைத்தது, இருந்தும் வெடியை விட்டுக் கொடுக்க முடியவில்லை. அவன் கண்களின் வெள்ளை மேல் நோக்கி என்னை பார்த்த போது சந்திக்க முடியாததாக இருந்தது. கௌரவத்திற்கும், குற்றவுணர்ச்சிக்கும் சமரச புள்ளியாக – இன்னொருமுறை கேள் தருகிறேன் என மனது அவனிடம் கேட்டது, இன்னொரு மூலையில் கேட்காமல்

போய் விடு என்றும் சொல்லிக் கொண்டிருந்தது. ஒரு அடி பின்னகர்ந்து நின்றான். கண்கள் மட்டும் என்னை விட்டு அகலவில்லை. என்னால் ஒரு அடி கூட அசைய முடியாது என தோன்றியது. மனது ஒரு சிறு வெளியில் முன்னும் பின்னும் முட்டி விழுந்து கொண்டேயிருந்தது.

சிகரெட்டை பற்ற வைத்துக் கொண்டே கதவை திறந்து பால்கனிக்கு அப்பா வந்து,

‘என்னடா வேணும்?’

யாரோ ஜன்னலை திறந்து விட்டது போலிருந்தது.

‘பொட்டு வெடி சார்’

‘லேய்.. கொஞ்சம் குடுடா..’

‘எங்கிட்ட ரோல் கேப் இல்லப்பா..’

குரல் உயர்ந்து, ‘அதான் சீனி வெடி இருக்குல்ல…குடுடா…’

ஒரு கை அள்ளி கொடுத்தேன். திருப்தியுடன் அப்பவை பார்த்து விட்டு அவன் போனான்.

அப்பா தணிந்து, ‘இருக்குறதை குடுக்கணும்’, என்று புகைக்க ஆரம்பித்தார்.

எதிர்த்து பேசினால் அந்த தீபாவளி அங்கே அப்பொழுதே முடியும் என தெரிந்ததால், மீதி பட்டாசுடன் அடுத்த ப்ளாக் நண்பர்களுடன் ஐக்கியமாகி விட்டேன். சிறிது நேரத்தில் மனதிலிருந்தும் அச்சம்பவம் மறதியில் போய்விட்டது.

தேவதேவனின் கவிதை ஒன்றை சில நாட்களுக்கு முன் வாசிக்க நேர்ந்தது,


பனைகள்
======

பனைகளின் தலைகளெங்கும்

பறவைகளின் சிறகுகள்

பச்சைப்பனைகளின் நடுவே

ஒரு மொட்டைப் பனை

மொட்டைப்பனை உச்சியிலே

ஓர் பச்சைக்கிளி

அடங்கிவிட்டது

‘மரணத்தை வெல்வோம் ‘ என்ற கூச்சல்

மரணமும் வாழ்வாகவே விரும்புகிறது

இனி இங்கே நான்

செய்யவேண்டியதுதான் என்ன ?

‘நானே தடைகல் ‘ஆகும்வழியறிந்து

வழிவிடுவதை தவிர ?

பனைகளின் தலைகளெங்கும்

படபடக்கும் சிறகுகள்

பாவம் அவை பூமியில்

மரணத்தால் நங்கூரமிடப்பட்டுள்ளன.

இரண்டாவது முறை வாசித்த போது,

“மரணமும் வாழ்வாகவே விரும்புகிறது” என்ற வரி, மேலே நடந்த சம்பவத்தை மன ஆழங்களிலிருந்து நீர் குமிழி போல் வெளி வர செய்தது. அந்த வீடு, என் பட்டாசு, அப்பா, அவன், நான் எல்லாம் தெளிவில்லாமல், ஆனால் அவன் கண்களின் வெள்ளை மட்டும் மிக அருகாமையில் உள்ளது. அவ்வரிகளில் சொல்லப்பட்ட மரணம் அச்சிறுவனை போல சற்று தூரத்தில் நிற்கின்றது. அவனும் கொண்டாட வேண்டும் ஆனால் அதற்கு என் கொண்டாட்டத்தின் சாரத்தை அவனுக்கு கொடுத்தாக வேண்டும்.

நெஞ்சிலிருந்து அதன் பிறகு அக்கவிதையும் அதன் தொடர்பும் மறைய மறுக்கிறது.

அவன் அப்படி பலவந்தமாக என்னிடமிருந்து வாங்கி போனானென்றாலும் ஒரு விடுதலை உணர்வு மிக சொற்ப நேரம் அன்று உணர்ந்தது நினைவுகளில் உள்ளது.

‘நானே தடைகல் ‘ஆகும்வழியறிந்து

வழிவிடுவது’ அதுதானோ?

முதன்முறையாக மரணத்தை விளையாட ஆசைப்படும் ஆனால் யாரும் சேர்த்துக் கொள்ள மறுக்கும், பாவம் ஒரு சிறுவனாக, மனமார உணர்ந்தேன். மரணம் என்றால் இன்னும் மரண பயம்தான். கவிதையை வாசித்து கொண்டே அச்சம்பவத்தை கூடவே மனதில் ஓடவிடும் வினாடிக்கும் குறைவான நேரத்தில், ‘ஐயோ பாவம்..’ என்று அச்சிறுவனை நினைக்க தோன்றுகிறது. அப்பொழுது அச்சிறுவன் வெடி கேட்டு வந்த அதே சிறுவனல்ல என்பது ஒரு வித்தியாசமான, அமானுஷ்யமான உணர்வு.

அந்த சிறுவனும் இன்றில்லை, நானும் இல்லை. ஒரு கவிதை இரு கண்களையும், ஆழத்தில் அமிழ்ந்த ஒரு ஞாபகக் கீற்றையும் மரணம் என்ற நித்ய இருப்புடன் இணைத்தது எனக்கு ஒரு ஆச்சரியமான அனுபவம்.

என் பெயர் முத்து கிருஷ்ணன். ஒரு வருடமாக உங்கள் வலதளத்தை படித்து வருகிறேன். உங்கள் நாவல் காடு, எழுதும் கலை, நவீன தமிழ் இலக்கியம் பற்றிய அறிமுகம், சங்கச் சித்திரங்கள் வாசித்துள்ளேன். குறுநாவல்களை வாசிக்கிறேன். உங்கள் படைப்புகளை பற்றி எதுவும் கேட்க இப்பொழுது தெரியவில்லை. தேவதேவன் என்ற கவிஞர் உங்கள் வலைதளத்தின் மூலமே அறியப் பெற்றேன். அதனால் இதை உங்களிடமும் பகிர்ந்து கொள்ளலாம் எனப் பட்டது.
அவரின் இணையதள முகவரி அல்லது மின்னஞ்சல் உங்க்களுக்கு தெரியுமா? தெரிந்தால் எனக்கு தெரியப் படுத்த முடியுமா?

நன்றி

முத்துகிருஷ்ணன்

அன்புள்ள முத்துகிருஷ்ணன்

தேவதேவனின் கவிதை உங்களுக்கு அளித்த தனிப்பட்ட மனநகர்வு எனக்கு உவகை அளிக்கிறது. என்னைப் பொறுத்தவரை அவரது பல கவிதைகள் அவரை விட்டு வந்து என் கவிதைகளாகவே உருமாறி விட்டவை.

தேவதேவனின் எண்ணை அனுப்பியிருக்கிறேன். அவர் மின்னஞ்சல் பார்ப்பதில்லை

ஜெ

முந்தைய கட்டுரைகடிதங்கள்
அடுத்த கட்டுரைகடிதம்