ஞாயிற்றுக்கிழமை தஞ்சையில் நண்பனின் மகள் திருமணத்தில் கலந்துகொண்டு திரும்பும் வழியில் அந்த வித்யாசமான தேரை தொட்டியம் என்ற ஊரில் பார்த்தேன்.
ஆறு ஆள் உயரத்தில் சக்கரமற்ற மூங்கிலால் கட்டப்பட்டு வேண்டுதல் வைத்தோர்கள் சாற்றிய பல் வண்ண புடவைகளால் அலங்கரிக்கப்பட்ட தேர்.
சக்கரமற்ற தேராதலால் தூக்குவதற்கு இசைவாக மிக பெரும் மூங்கில் வாரைகளை நீள வாட்டத்தில் கட்டி நீட்டியிருந்தார்கள். சுற்றுப்பட்ட கிராம இளைஞர்கள் இந்த எல்லையிலிருந்து இந்த எல்லை வரை தூக்கி வந்து வைத்துவிட வேறு வேறு கிராம கட்டளைதார இளைஞர்களால் சாவதானமாக தேர் சுற்றி வந்து கோவில் நிலை அடைய மூன்றிலிருந்து ஐந்து நாட்களாகுமாம்.
அருகில் சென்று தேர் உள்ளே பார்த்தால் உள்ளே எந்த உற்சவர் சிலையோ மூர்த்தமோ இல்லை. மஞ்சள் பட்டுத்துணியில் சிவப்பு வர்ணத்தில் கோட்டோவியமாக அம்மனின் மலர்ந்த முகம் மட்டும் கமலவடிவாக வரையப்பட்டிருந்தது. அதற்குத்தான் அபிஷேக ஆராதனைகள் விமரிசையாக நடந்து கொண்டிருந்தது. பரம்பரை பூசாரிகள்(தொட்டிய நாயக்கர்கள்) பூஜை செய்து கொண்டிருந்தார்கள்.
ஸ்தல புராணத்தைப் பற்றி விசாரித்த போது அம்மனின் பெயர் மதுர காளி என்றும்,பூர்வீகத்தில் அவள் மதுரையில் இருந்தவள் என்றும், சின்னான் பொன்னான் என்ற இரு பறை அடிப்பவர்களின் பறை கொட்டு மேளத்தில் மயங்கி மதுரையிலிருந்து தொட்டியம் வந்து விட்டதாகவும் தினமும் இந்த இருவர் பறையடிக்கும் வாய்க்கால் கரையோரமுள்ள குறுங்காட்டிலேயே தங்கிவிட்டாளாம்.
அவள் தங்கியிருந்த புதரிலேயே அந்த ஊர் ஆவினங்கள் எல்லாம் பாலை சொரிந்து விட்டு போனதை கண்ட அந்த ஊர் ஜமீன்தார் அந்த புதரை சுத்தம் செய்ய ஆணையிட அப்போது மண்வெட்டியால் அம்மன் தலையில் காயமேற்பட்டு ரத்தம் சொட்டி ஓடியதாம்.
அங்கேயே கோவிலை கட்டி முடித்து அம்மனது ரத்த இழப்பிற்காக முப்பூசை எனும் ஆடு கோழி எருமை பலி கொடுக்கதொடங்கினார்களாம்.
நான் பார்த்த போது பத்து எருமை கன்றுகளை வீச்சரிவாள் கொண்டு பலியிட்டார்கள்.
ரத்தபீஜனின் ரத்ததுளிகள் போல் ரத்தகுளம்…
விழாமுடியும்முன் 500எருமைகள் வரை பலியிட்டு பெருங்குழிகளில் புதைத்து மூடிவிடுவார்களாம். அடுத்த வருடம் அடுத்த குழி என போய்க்கொண்டேயிருக்கும்.
இந்த புராணம் தொன்மமாக பழங்குடி சமூகத்திலிருந்து செவிவழி செய்தியாக பரம்பரை பரம்பரையாக தற்போது வரை கடந்து வந்திருக்கிறது.
தொல்காப்பியத்தில் சொல்லப்பட்டதாக சொல்லப்பபடும் தொல்தமிழ் பாவையை கோட்டோவியமாக குகை சுவற்றில் வரைந்து வைத்து வழிபட்ட சமூகத்தான் எவனோவொருவன்தான் இந்த மதுரகாளியம்மனை வரை கலை பாவையாக பட்டு சீலையில் வரைந்து வழிபட்டானோ?
விஜயராகவன்