நெல்லைவிழா-கடிதங்கள்

1

பெருமதிப்பிற்குரிய ஜெமோ அவர்களுக்கு,

வணக்கம்.

இந்த வருட தொடக்கத்தில் கோவைக்கு அடிக்கடி வருவது போல், நெல்லைக்கு ‘இலக்கிய நிகழ்வுகளுக்காக’ அடிக்கடி வருவதில்லையே என்ற எனது கேள்விக்கு, இதை நடத்தக் கூடிய அமைப்புக்கள் இங்கு இல்லாததும் ஒரு காரணம் என்று எழுதி இருந்தீர்கள்.நீண்ட நாள் கழித்து நெல்லைக்கு வரப்போகிறீர்கள் என்ற மகிழ்வுடன் காலையிலேயே எனது ஊரில் (ஆழ்வார்திருநகரி) இருந்து புறப்பட்டு 9:45 மணிக்கு கூட்ட அரங்கிற்கு வந்து விட்டேன்

நிகழ்ச்சி நிரலின்படி 9:30 மணிக்கே கூட்டம் துவங்கி இருக்கும்,அதுவும் முதலில் நீங்கள் திரு.லட்சுமி மணிவண்ணனின் கவிதை நூலை வெளியிட்டு பேசத்தொடங்கி இருப்பீர்கள் என்ற பதைப்புடன் வந்த எனக்கு, அப்பொழுதுதான் கூட்டத்திற்கான இருக்கைகள், ஒலிபெருக்கி முதலியவற்றை அமைத்து கொண்டு இருந்தார்கள் என்பதை பார்த்ததும் நிம்மதி ஏற்பட்டது.(நீங்கள் தாமதமாக வந்த காரணத்தை பின்பு அறிந்து கொண்டேன்)

நெல்லையின் ‘வெக்கையை’பற்றி எழுதி இருந்தீர்கள் அதற்கேற்றாற்போல் தான் கூட்ட அரங்கும் இருந்தது. எங்களுக்காவது பரவாயில்லை, தலைக்கு மேலே மின்விசிறி சுழன்றது.நீங்கள் அமர்ந்த பகுதியில் அதுவும் இல்லை.திரு.தேவதச்சன் அவர்கள் அடிக்கடி வியர்வை வழிந்த முகத்தை துடைத்து கொண்டு இருந்தார். உண்மையில் எனக்கு கவிதையில் எந்த புரிதலும் இதுவரை கிடையாது, கூட்டத்தில் பேசியது போல், பெருமைக்காக இதை சொல்லவில்லை, என்னுடைய ‘திறன்’ அவ்வளவுதான். இருந்தபோதிலும் தங்கள் உரையை நேரில் கேட்கும் வாய்ப்பிற்காகவும், உங்கள் தளத்தில் முக்கியமான கவிதையாசிரியர்களின் கவிதைகளைப் பற்றிய தங்களின் எழுத்தை படித்து வருவதனால் ஏற்பட்ட உந்துததாலும் ஆர்வத்துடன் அமர்ந்து இருந்தேன்.

நீங்கள் லட்சுமி மணிவண்ணனின் கவிதை நூலை அறிமுகப்படுத்தி பேசினீர்கள்,ஒரு கவிதையை படிக்கும்போது அதன் சூழல்(context) மிகவும் முக்கியம் என்பதை குறிப்பிட்டு அதற்காக ஒரு சிறையில் படித்த “கல்வெட்டை” பற்றியும், லட்சுமி மணிவண்ணனின் கவிதையில் வரும் தென்னை மரத்தின் பல உருவங்களை,பல சூழல்களில் விவரித்த போதும், ஏதோ மண்டைக்குள் ‘மின்னல்’ வெட்டினாற்போல் இருந்தது. இருப்பினும் இன்னும் நான் வரவேண்டிய தூரம் அதிகம் என உணர்கிறேன். நிகழ்ச்சிக்கு வந்திருந்த பெரியவர்களின் எளிமை, பழகியவிதம் -நீங்கள் உள்பட- என்னை வெகுவாக கவர்ந்தது.

வழக்கம்போல் எனது தயக்கம் மற்றும் கூச்சத்தின் காரணமாக தங்களிடம் எதுவும் பேசாமல், தொலைவிலேயே இருந்து தரிசித்துவிட்டு செல்லும் பக்தனைப்போல் ஊருக்கு திரும்பிவிட்டேன். ரொம்ப நாட்களுக்குப் பிறகு ஒரு விடுமுறை தினத்தின் முன் பகல் இனிதாகக் கழிந்தது.

நன்றி,

அன்புடன்,

அ .சேஷகிரி.

ரோஸ் ஆண்டோ கைலாஷ் சிவனுடன்
ரோஸ் ஆண்டோ கைலாஷ் சிவனுடன்

 

அன்புள்ள ஜெ

நெல்லைகூட்டத்தில் உங்களைப் பார்த்ததும் புகைப்படம் எடுத்துக்கொண்டதும் மகிழ்ச்சியாக இருந்தது. நான் நெடுநாட்களாக சந்திக்க நினைத்த ஆளுமை நீங்கள். ஆனால் சந்தித்தபோது பேசமுடியாத நிலை. ஆனால் நிறைவாக இருந்தது

விழாவில் நீங்களும் கோணங்கியும் வந்திருந்ததைப்பற்றி அங்கிருந்த அனைவருமே கொண்ட மகிழ்ச்சியும். உங்களைப்பற்றி அவர்கள் பெருமிதத்துடன் பேசிக்கொண்டதும் எனக்கு மிகுந்த மனநிறைவை அளித்தன. ஃப்ரான்ஸிஸ் கிருபா உங்களை தமிழிலக்கியத்தின் தலைமகன் என்று சொன்னபோது எனக்கு மெய்சிலிர்த்தது. நான் எண்ணியவை அவை

விழாவில் பல திறப்புகள். ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையாக இருந்தன. லக்ஷ்மி மணிவண்ணன் இன்றைய கவிதையில் நம்புவதற்கு ஏதுமில்லாத சிதறல்தான் இருக்கிறது என்றார். தேவதச்சன் நாம் இல்லாமலாகி நான் வந்துவிட்டது என்றார். ஆண்டனி உலகம் வையம் என்னும் சொற்கள் இல்லாமலாகி அதற்கு எதிரான கசப்பு தெரிகிறது என்றார் எல்லாமே யோசிக்கவைக்கும் விஷயங்கள்

உங்கள் பேச்சு சுருக்கமாக அழகான பேச்சு. அந்த சின்னஞ்சிறு சிறை பற்றிய இமேஜ் ஒரு பெரிய அடி போல என்மேல் விழுந்தது. இரவிலும் தூக்கமில்லாமல் ஆகியது. ஜெ ஜெ சில குறிப்புகளில் ‘கண்ணுக்குத்தெரியாத கம்பிகளை பிடித்து உலுக்கிக்கொண்டே இருக்கும்’ ஜெஜெ பற்றி ஒரு வரி வரும். அதைத்தான் இக்கவிஞர்களைப்பற்றியும் நினைத்துக்கொண்டேன்

ஜெயராமன்

 

முந்தைய கட்டுரைகொல்லிமலை சந்திப்பு -கடிதம் 4
அடுத்த கட்டுரைஜே.ஜே.சில குறிப்புகள் தழுவலா?