2001 நவம்பரில் நான் என்னுடய ஒன்று விட்ட அண்ணனுடன் கவி சென்றிருந்தேன். சபரி மலை சீஸன். நாங்கள் இருவர் மட்டும்தான் அப்பொழுது விருந்தினர்கள்.
மூன்று நாட்கள் பஷீர் எங்களுடன் காட்டில் நடந்தார். அற்புதமான மனிதர். ரம்ஜான் மாதம் வேறு. பகல் பொழுதில் உணவேதும் உண்ணாமல், இரவில் ப்ளாக் டீ, உலர வைக்கப்பட்ட பழங்களை மட்டும் உண்டார்.
மூன்று நாட்களும் இரவுணவிற்குப் பிறகு அங்குள்ள மக்களுக்கு ஈக்கோ டூரிஸம் மூலமாக வருமானத்தை ஈட்ட KFDC செய்யும் முயர்ச்சி, மனித உரிமை, மொழி (மலையாளத்தில் வலிந்து சமஸ்கிருதம் கலப்பதைப் பற்றி அவர் மிகுந்த கவலை தெரிவித்தார். உதாரணமாக மீன் பிடித்தம் என்பதை மத்ஸ்ய பந்தனம் என்று அழைக்க என்ன தேவையிருக்கிறது?) என்று பல விஷயங்கள் பேசினோம். வி ஆர் க்ருஷ்ண ஐயர் மீது அவர் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்ததைக் காண முடிந்தது.
அங்கு இருந்த ஊழியர்களும் ஒரு அரசு நடத்தும் இடத்தில் ஒரு அலட்சியம் இல்லாமல், அற்புதமான சேவை அளிக்க ஊக்கப் படுத்தப்பட்டிருந்தனர். பஷீரும் அவர்களுடன் வெகு சகஜமாக பழகினார்.
கவியில் பெரும்பான்மையானோர் இலங்கையிலிருந்து புலம்பெயர வைக்கப்பட்ட மலையகத் தமிழர்கள். அங்கு ஒரு சிறு ஏலக்காய் தயார் செய்யும் தொழிற்சாலையும் உள்ளது. ஆனால், ஏலக்காய் விளயும் நில அளவை படிப்படியாக குறைத்துக் கொண்டிருப்பதாய் சொன்னார். அங்கு வேலை செய்யும் பலரின் பிள்ளைகள் கைட்-ஆக பயிற்சி கொடுக்கப்பட்டிருந்தனர். மேலும் ஆதிவாசி இளைஞர்களுக்கும் பட்டையை (சின்னமன்) மரங்களிலிருந்து எடுக்காமல் இருக்க மாற்று தொழில் பயிற்சி கொடுத்துக்கொண்டிருந்தார்கள்.
இதற்கிடையே அங்கு எனக்கு கிட்டிய திருப்பத்தூர் தொடர்பு. கவி விருந்தினர் மாளிகையில் ஒரு நாள் காலையுணவின் போது சொந்த ஊரைப் பற்றி பேச்சு எழுந்தது. நான் என் சொந்த ஊர் திருப்பத்தூர் என்று சொன்ன பொழுது, அங்கு வேலை செய்யும் ஊழியர் அவர் திருப்பத்தூரில் நிறைய வருடங்கள் வேலை செய்து சமீபத்தில்தான் இந்த வேலைக்கு மாற்றிக் கொண்டு வந்தேன் என்று சொன்னார். அவருக்கு அந்த ஊரை விட்டு வர மனமில்லை என்றும் தன்னை ஶ்ரீநகருக்கும் பணிமாற்றியதால் அந்த வேலையை விட்டு விட்டு KFDC வேலையை தேடிக்கொண்டதாகவும் சொன்னார்.
திருப்பத்தூரைத் தவிர பஷீர், கவி மூலமாக நமக்குள் இன்னொரு தொடர்பு இருப்பது எனக்கு மிகுந்த மன நிறைவளிக்கிறது.
சீனு.நரசிம்மன்
அன்பின் ஜெ எம்.,