அன்புள்ள நண்பர்களே,
இனிய தோழி ஒருத்தியை நினைவுகூரும்வகையில் இங்கே நாம் கூடியிருக்கிறோம். கீதா ஹிரண்யன் தன் இரண்டு குழந்தைகளையும் அறிவுலகிலும் தோழனாக அமைந்த கணவரையும் இளம் வயதிலேயே பிரிந்து மறுகரைக்குச் சென்றுவிட்டிருக்கிறார். அவருடைய பிரியத்துக்குரிய எழுத்தாளன் என்ற வகையில் நான் இங்கே பேச அழைக்கப்பட்டிருக்கிறேன்.
கீதாவை நான் சந்தித்தது ஆற்றூர் ரவிவர்மாவின் இல்லத்தில். என்னைக் கண்டதுமே சிறுமிகளுக்குரிய ஆர்வத்துடன் என்னை நோக்கி வந்து படபடப்பும் சிரிப்புமாக தனக்குப் பிடித்தமான எழுத்தாளர் நான்தான் என்று சொன்னார். மலையாளத்தில் நான் எழுதிய அனைத்தையும் அவர் படித்திருந்தார்.’என்னால் பேசவே முடியவில்லை. நிறைய பேசவேண்டும், ஒன்றுமே தோன்றவில்லை’ என்று தத்தளித்தார்.
மிகஅழகிய முகம். ஆனால் முகமும் உடலும் வெளிறியிருந்தன. பேச்சு மழலையாக குழறியது. மன எழுச்சியால் முகம் சிவந்து சிவந்து அணைந்தது. நான் அவர் எளிதாகும்பொருட்டு நிறையப்பேசினேன். அவர் அசாதாரணமான வழிபாட்டுணர்வுடன் என்னைப்பார்த்துக் கொண்டிருந்தார். என்னுடைய சில படைப்புகளைப்பற்றிச் சொன்னார். நான் அவரது சிறுகதைகளைப் பற்றிப் பேச ஆரம்பித்தபோது வெட்கத்துடன் பேச்சை மாற்றினார்.
அவர் சென்றபின்புதான் ஆற்றூர் ரவிவர்மா சொன்னார், அவரது வெளிறிய தோற்றத்துக்குக் காரணம் புற்றுநோய் சிகிழ்ச்சைதான் என்று. நாவில் புற்றுநோய் வந்து நெடுநாட்களாக கடும் வலியில் அவர் துன்புற்றுக்கொண்டிருந்தார். கல்லூரி ஆசிரியைப்பணியைச் செய்ய முடியாத நிலை. அப்போது இன்னும் இருவருடங்களில் கீதா ஹிரண்யன் இறந்துவிடுவார் என்று எனக்குத்தெரியுமா என்று கேட்டால் எப்படியோ அது தெரிந்திருந்தது என்றுதான் சொல்ல வேண்டியிருக்கும்.
கீதா ஹிரண்யன் இங்கே கூடியிருக்கும் பெரும்பாலானவர்களுக்கு இலக்கியத் தோழியாக இருந்தவர். ஒவ்வொருவரும் அவரைப்பற்றி சொல்வதற்கு நிறையவே இருக்கும். அந்நினைவுகளைப் போற்றுவோம். இறந்தவர்கள் நமக்கு அளித்துச்செல்லும் பரிசு நினைவுகள் மட்டுமே. அவர் நினைவாக கூட்டப்பட்டுள்ள இக்கூட்டத்தில் என்னிடம் பெண்ணெழுத்துக்களைப் பற்றி பேசுவதற்குக் கோரியிருக்கிறார்கள்.
பெண்ணெழுத்து என்ற அடையாளம் இலக்கியத்தைப் புரிந்துகொள்வதற்கான பல்வேறு திறப்புகளில் ஒன்று. இம்மாதிரிஅடையாளங்களை நான் ஒரு பெரிய அண்டாவின் பிடிச்செவிகள் என்று சொல்வேன். எளிதாக அண்டாவை பிடித்துத் தூக்க அவை உதவுகின்றன. ஆனால் அண்டா என்பது அவை அல்ல. அண்டாவின் உள்ளே இருப்பதற்கும் அவற்றுக்கும் சம்பந்தமில்லை. எந்த அடையாளமும் இலக்கியத்தை முழுமையாக வகுத்துவிட முடியாது.
கீதா ஹிரண்யன் மலையாளத்தின் குறிப்பிடத்தக்க இளம் பெண்ணெழுத்தாளர். கண்டிப்பாக பெண்ணியவாதி. ஆனால் அவ்வடையாளங்கள் வழியாக நாம் அவரை வகுத்துக்கொள்வோமென்றால் அதன் மூலம் அவரது படைப்புகளின் பெரும்பாலான தளங்களை இழந்துவிடுவோம் என்றுதான் படுகிறது.
ஆனாலும் படைப்புகளை ஒரு விரிந்த வரலாற்றுப்புலத்தில் வைத்துப் பார்ப்பதற்கு இந்த அடையாளங்கள்தேவையாகின்றன. படைப்புகளின் உருவாக்கத்துக்குப் பின்னால் உள்ள சில நுண்ணிய ரகசியங்களைச் சென்று தீண்டுவதற்கு அவை உதவுகின்றன.
தமிழ் இலக்கிய வரலாற்றைப் பின்னால் திரும்பிப் பார்க்கிறேன். எங்களுக்குப் பெரும் பெண்படைப்பாளிகள் உண்டு. ஆனால் எங்கள் மொழியின் மாபெரும் படைப்பாளிகளின் எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது அவர்கள் மிகச்சிலரே. சங்ககாலம் முதல் பார்த்தால் சிலபெயர்கள் தென்படுகின்றன. ஆதிமந்தியார், மாற்பித்தியார், நக்கண்ணையார், காக்கைப்பாடினியார்.
ஆச்சரியமான ஒரு விஷயம், இப்பெண் எழுத்தாளர்கள் அனைவரிலும் ஒரு விசித்திரமான அன்னியத்தன்மை பொது இயல்பாக இருக்கிறதென்பதே. தன் காதல்கணவன் ஆட்டன் அத்தி தன்னைப்பிரிந்ததனால் அவனைத்தேடி ஊர் ஊராக அலைந்த பேதையாக ஆதிமந்தி தென்படுகிறாள். ”யாண்டும் காணேன் மாண்தக்கோனை. யானும் ஓர் ஆடுகள மகளே என் கை கோடு ஈர் இலங்குவளை நெகிழ்த்த பிடுகெழு குரிசிலும் ஓர் ஆடுகள மகனே’ என்று தன்னை இழிவுபடச்செய்த தன் காதலனும் இழிவுபட்டவனே என்று பாடும் கவிஞராக ஆதிமந்தியை நாம் காண்கிறோம். அவளை பரணர் ‘ஆதிமந்தியின் அறிவு பிறிதாகி பேதுற்றிசினே’ என்கிறார்.
மாற்பித்தியாரின் பெயரே நாம் அறிவதில்லை. அவர் மாலும் பித்தும் கொண்ட ஒரு பெண் என்றே வரலாற்றில் இடம்பெற்றிருக்கிறார். காக்கைப்பாடினியாருக்கும் பெயரில்லை. காக்கையைப்பாடியவர் மட்டும்தான் அவர்.
தமிழ் மரபின் பெரும் படைப்பாளிகளில் ஒருவரான ஔவையாரின் பெயர் சங்ககாலம் முதல் காணக்கிடைக்கிறது. ஔவை என்றால் அம்மை என்றுதான் பொருள். அந்தப்பெயரில் பெரும்படைப்பாளிகள் சிலரை அடக்கிவிட்டிருக்கிறது நம் மரபு. பின்னர் அவர்களைப்பற்றிய கதைகள் புனையப்பட்டு செவிவழிச்செய்தியாக புழங்கின. ஆனால் அவர்களின் பெயரோ அடையாளங்களோ மரபில் பேணப்படவில்லை.
ஏன்? நக்கண்ணையார், ஆதிமந்தியார் போன்றவர்களின் பெயர்கள் இருக்கின்றன. ஆதிமந்தியார் மாமன்னர் கரிகால் பெருவளத்தானின் மகள். நக்கண்ணையார் பெருங்கோழிநாயக்கனின் மகள். மனிதர்கள் ஊர்,குலம், குடி சார்ந்து அடையாளபடுத்தப்பட்ட காலம் அது. பெண்களுக்கு தந்தை,கணவன் பெயர் மட்டுமே அடையாளமாக இருந்திருக்கிறது. சொல்லும்படியான குல அடையாளமில்லாதவர்கள் வெறுமே சுட்டுபெயர் பெற்றார்கள். பொதுவாக பெண்கவிஞர் பெயருடன் ஊர்பெயர் இணைவதில்லை என்பதைக் கவனிக்கலாம்.
ஔவையாரின் கதை என்று புழங்கும் செவிவழிச்செய்தியில் அவர் இளமையில் பேரழகியாக இருந்தார் என்று சொல்லப்படுகிறது. அவரை மணம் முடிக்க ஒரு இளைஞன் வருகிறான். மணம்கொள்ள விரும்பாத ஔவையார் முருகனை வழிபட்டு முதுமையை வரமாகப்பெற்று தன்னை தற்காத்துக்கொண்டார். அவர் பாணர் குலத்து உதித்தவர் என்று செய்தி உள்ளது. ஆகவே அவர் பெயரோ பாணன் பெயரோ வரலாற்றில் இல்லை.
தமிழ்மரபில் ஔவையாருக்குப் பின் நாம் காணும் பெருங்கவிஞர்கள் என்றால் அது காரைக்காலம்மையாரும் ஆண்டாளும்தான். சங்ககாலத்துக்குப் பின்னர் தமிழில் எழுந்த மாபெரும் இலக்கிய யுகம் என்பது பக்திகாலகட்டம்தான். அத்தனை பெரும்பக்திக்கவிஞர்களை உருவாக்கிய சைவ வைணவ மரபில் இரு பெண்பால்கவிஞர்களே உள்ளனர். சைவத்துக்கு காரைக்காலம்மையார். வைணவத்துக்கு ஆண்டாள்.
காரைக்காலில் வணிகர்குலத்தில் தனநந்தன் என்பவனின் மகளாகப்பிறந்து பரமதத்தருக்கு மணம் முடிக்கப்பட்ட புனிதவதி தன் பக்தியாலும் கவித்திறத்தாலும் கணவனை விட மேம்பட்டவளாக இருந்தாள். அவளை அஞ்சி கணவன் அவளை கைவிட்டு பூம்புகாருக்குச் சென்றான். புனிதவதியின் தந்தை அவளை அழைத்துக்கொண்டு கணவனைத்தேடிச்சென்றபோதும் அவன் அவளை ஏற்கவில்லை. புனிதவதி தன் அழகிய சுய உருவை அழித்து பேயுருவம் கொண்டு காரைக்காலம்மையாராக ஆனார்.
ஆண்டாளின் கதைக்கும் எல்லா பெண்கதைகளுடன் சில பொதுத்தன்மைகள் உள்ளன. ஆண்டாள் ஸ்ரீவில்லிப்புத்தூரில் பெரியாழ்வார் கொத்திவைத்த நிலத்தில் துளசிச்செடியடியில் காணக்கிடைத்தார்.கோதை என இவளுக்குப் பெயரிட்டு வளர்த்தார் பெரியாழ்வார். சிறுவயதிலேயே கண்ணனுக்கு மணமகளாக தன்னை எண்ணி வாழ்ந்து வந்தாள். மானுடருக்கென்று பேசப்பட்டால் வாழேன் என்று மன்மதனை எச்சரித்தாள். மணிவண்ணனுக்குரிய பூவை தான் சூடி எடுத்து பூசைக்கு அனுப்பினாள். பெருமாள் கனவில் வந்து ஆணையிட்டதன்படி திருமணக்கோலத்தில் அவளை திருவரங்கத்துக்குக் கொண்டு செல்கிறார்கள். அங்கே அவள் அரங்கன் கருவறைக்குள் நுழைந்து அவனுடன் கலந்தாள் என்று ஐதீகம்.
அரங்கனை கணவனாக கண்டு அவனுடன் கலந்த நப்பின்னையின் கதை பழங்காலம் முதலே தமிழில் உள்ளது. ஆண்டாளின் பாடல்களில் நப்பின்னை பற்றிய குறிப்பு அடிக்கடி வருகிறது. ஔவையும் காரைக்காலம்மையும் ஆண்டாளும் இன்று தமிழ்நாட்டின் தெய்வங்கள். ஔவைக்கு எங்களூரில் கோயில்கள் உண்டு. ஆண்டாளுக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் பேராலயம் எழுந்திருக்கிறது. காரைக்காலம்மையார் அறுபத்துமூன்று நாயன்மாரில் ஒருவராக கோயில்தோறும் அமர்ந்திருக்கிறார். அவரை அம்மையே என்று அழைத்து ஆடவல்லானே எதிர்கொண்டு கைலாயத்தில் இருத்தினான் என்று சொல்கிறது புராணம்.
நம் பெண் கவிஞர்களின் வாழ்க்கைக்கதைகளில் எல்லாமே தன்னில் இருந்து அன்னியப்படுதல் என்ற அம்சம் இருக்கிறதே! தன் இளமையில் இருந்து, அழகில் இருந்து அன்னியப்படுதல். தன்னை அழித்து பிறிதொன்றாக ஆகவேண்டிய கட்டாயம் அவர்களுக்கு இருக்கிறதே. நம்முடைய மரபின் மொத்தப் பெண்கவிதைகளையும் ‘தன்னை நிராகரித்தபின் எழுதிய வரிகள்’ என்று வரையறைசெய்துவிட முடியுமா என்ன?
பெண்ணாக இருந்து எழுதினால் ஏற்காத சமூகம் பேயாக உருக்கொண்டு எழுதினால் ஏற்கிறது என்று இதைப்புரிந்துகொள்ளலாமா? அப்படி யோசிக்கும்போது இன்னொரு கதை நம் மரபில் உள்ளது. சமண மெய்ஞானத்துடன் சென்று அத்தனை பிறதரிசனங்களையும் வெல்லும் நீலகேசி ஒரு பேய். கனவனால் கொல்லபப்ட்டு உதிரதாகம் கொண்ட நீலியாக ஆனபின்னரே அவளுக்கு வெல்லும் ஞானம் கிடைக்கிறது.
அப்படிப்பார்த்தால் நம் காப்பிய நாயகியர் அனைத்துமே உருகி உருமாறிய பெண்கள்தானே? முலையரிந்தபின்னர்தானே கண்ணகி மதுரை எரித்து மாதரசியானாள்? மணிமேகலையை மணிமேகலா தெய்வம் பவமறுத்துத் துறவியாக ஆக்கியதற்குப் பின்னர்தானே அவள் பசிப்பிணி மருத்துவம் செய்ய முடிந்தது?
ஆம், கம்பனின் சீதைகூட அக்கினியில் தன்னைப் புடமிடவேண்டியிருந்தது. பெண்ணுக்கு அவள் கடந்துசெல்லவேண்டிய ஒரு வாசல் இங்கே உருவகிக்கப்பட்டிருந்தது. நெருப்பினால் ஆன வாசல் அது. அதன் வழியாக உருகி பிறிதொன்றாக ஆனபின்னரே அவளுக்கு இலக்கியம் இடம் அளித்தது.
நண்பர்களே, இன்று உலகமெங்கும் உள்ள பெண்ணெழுத்துக்களில் அனேகமாக ஒரு பொது அம்சம் உள்ளதை நீங்கள் கவனித்திருக்கலாம். சிறிய அளவிலேலும் மனக்கோணல் — பெர்வெர்ஷன் — இல்லாத முக்கியமான பெண்ணெழுத்துக்கள் மிகக்குறைவு. ஒரு வகையான கசப்பு, திரிபு, ருசிபேதம் பெண்ணெழுத்தின் இயல்பாகவே உள்ளது. நான் இங்கே நின்று நினைக்கையில் என் சிந்தனைக்கு வரும் பெண் படைப்பாளிகளில் பெரும்பாலானவர்கள் அப்படிப்பட்டவர்கள்.
குர்ரதுல் ஐன் ஹைதர், அமிர்தா பிரீதம்,மாதவிக்குட்டி சரி. ஆஷாபூர்ணாதேவி? ஆம், ஆஷாபூர்ணாதேவியிலும் உள்ளது அந்த திரிபு. பிரதமபிரதிசுருதியில், சுபர்ணலதாவில் பெண்மனதின் ஆழம் நோக்கி எங்கெல்லாம் கதை நகர்கிறதோ அங்கெல்லாம் ஒரு சிறிய கோணலை நான் காண்கிறேன். மானுட விவேகத்தின் ராஜபாதையை விட்டு விலகி கசப்பின், அவநம்பிகையின் இடுங்கிய சிறிய ஊடுபாதையை தேர்வுசெய்யும்தன்மை என அதை நான் சொல்வேன்.
என்ன நடக்கிறது? நான் இப்படி ஊகிக்கிறேன். இன்றைய பெண்ணெழுத்தின் முன் உள்ள சவாலே தானாக நின்று எழுதுவதுதான். தன்னை பெயாகவோ தெய்வமாகவோ உருமாற்றிக்கொள்ளாமல் எழுதும் முயற்சி. நான் நான்தான் என்ற அறைகூவல். என் உடலை நான் உருக்கப்போவதில்லை, அதை இன்னும் ஆணித்தரமாக முன்வைக்கப்போகிறேன் என்ற வீம்பு
அந்த முயற்சியின் ஒரு பகுதியாகவே அதன் விளைவான உளவன்முறையாக இந்த மனக்கோணல் அம்சம் தலைகாட்டுகிறதா? அது ஒருவகை சுயவதையா? சுயவதையின் ஓர் அம்சம் இல்லாத பெண் எழுத்துகளே குறைவாக அல்லவா இருக்கின்றன?
கேரளமரபின் முதல் நவீனப்பெண் எழுத்தாளர் கெ.சரஸ்வதி அம்மா. கடுமையான ஆண்வெறுப்பாளராக வாழ்க்கைநோக்கிய கசப்பும் வீம்பும் கொண்டவராக அவர் இருந்தார். அந்த கசப்பே அவரதுஎ ழுத்தின் ஆதிவல்லமையாக இருக்கிறது. கெ.சரஸ்வதி அம்மா முதல் மாதவிக்குட்டி, கிரேஸி ,சாரா ஜோச·ப் வழியாக கீதா ஹிரண்யன் வரை நம்மால் ஒரு கோடு இழுத்துவிட முடியும்.
உளவியலாளர் ஒருமுறை சொன்னார், பெரும்பாலான பெண் மனநோயாளிகள் மனநோயின் எல்லைக்கு அப்பால்சென்றதுமே செய்யும் முதல் வேலை உடைகளைக் களைவதுதான். சொற்கள் வழியாக உள்ளத்தின் ஆடைகளைக் களைந்து அம்மணமாவதும் உண்டு. தன்னை போர்த்தப்பட்டவளாக, புதைக்கப்பட்டவளாக, மூடப்பட்டவளாக உணரும் பெண்மனம் தன்னிலையை இழக்கும்போது இயல்பாகவே விடுதலையை நாடுகிறது போலும். படைப்பில் நிகழ்வதும் அதுதானா?
புரியவில்லை. இன்று பெண்ணெழுத்து அதன் பல்வேறு தளங்களை பரிசீலித்துக்கொண்டிருக்கிறது. ‘நான் வேறு என் பாதை வேறு’ என்று சொல்வதற்கான யத்தனமாக இருக்கிறது அதன் படைப்பூக்கம். அதன் பாதைகள் தெளிவுறும்போது இன்னும் பல விஷயங்களை நம்மால் சொல்ல முடியுமென நினைக்கிறேன்.
கீதா ஹிரண்யனிடம் கேட்டிருக்கலாம். என்ன சொல்லியிருப்பார்? அவரும் உடலெழுத்தின் பிரதிநிதிதான். தயக்கமில்லாமல் பெண்ணுடலின் அந்தரங்கங்களை எழுத முயன்றவர். ஓயாது பார்க்கப்படுவதனாலேயே ஒவ்வொரு கணத்திலும் தன் இருப்பை கனத்து கனத்து உணரும் பெண் உடலின் அவஸ்தையை எழுதியவர்.
ஆனால் ஒவ்வொருநாளும் புற்றுநோயால் வதைபட்டு அவரது உடல் உருகிக்கொண்டிருந்த அந்த நாட்களில் பெண்ணின் உடலைப்பற்றி என்ன நினைத்தார் அவர்? மானுட உடலைப்பற்றி என்ன நினைத்தார்? பூமி மீது புரோட்டீன் குவைகளாக பிறந்து பிறந்து மடிந்துகொண்டிருக்கும் கோடானுகோடி உடல்களைப்பற்றி என்ன நினைத்தார். அந்த மகத்தான உடலரசியல்வரை அவரால் செல்ல முடிந்ததா?
இந்த நாளில் என் இனிய தோழிக்கு மனம் நெகிழ்ந்த அஞ்சலி
[2003 ல், மறைந்த கேரள எழுத்தாளர் கீதா ஹிரண்யனின் ஓராண்டு நிறைவை ஒட்டி திரிச்சூரில் ஏற்பாடுசெய்யபப்ட்ட கூட்டத்தில் ஆற்றிய உரை]
[மறுபிரசுரம்/ முதற்பிரசுரம் 2003, இணையவடிவம் Jun 9, 2008 ]