லட்சுமி மணிவண்ணனின் முழுக் கவிதைத்தொகுதியான “கேட்பவரே” நெல்லையில் இன்று [3-4-2016]வெளியிடப்பட்டது. நான் அதை வெளியிட ‘நீயா நானா’ ஆண்டனி பெற்றுக்கொண்டார். விக்ரமாதித்யன் வாழ்த்திப்பேசினார்
காலையில் நாகர்கோயிலில் இருந்து பேருந்தில் கிளம்பி நெல்லை சென்றேன். எட்டாம் வகுப்பு படிக்கும்போதுதான் பாரதிவிழா பேச்சுப்போட்டிக்காக முதன்முதலாக ஆரல்வாய்மொழியை கடந்தேன். இருபக்கமும் மலைகளின் எல்லை இல்லாமல் விரிந்து கிடந்த சமநிலம், முகில்களே அற்ற கண்ணாடிப்பரப்பான வானம், முள்செடிகளும் தொலைதூரப்பனைகளும் மட்டுமே கொண்ட வறண்ட விரிவு என்னை அழச்செய்தது. பேருந்தில் இருபக்கங்களிலிருந்தும் அனல் அடித்துக்கொண்டிருந்தது.
அதன் பின் நெல்லை என்றாலே உலையருகே அமர்வதுபோல கன்னங்களில் வந்துமோதும் அனல்தான் நினைவிலெழும். கூடுமானவரை நெல்லையைத் தவிர்ப்பதே என் வழக்கம். முந்தைய முறை நெல்லை சென்றது தி ஹிந்துவின் ஆண்டுவிழாவுக்காக.
இன்று மீண்டும் நெல்லைக்குச் செல்லும்போது வெக்கை நினைவில் வந்ததுமே காரைத்தவிர்த்தாலென்ன என்று தோன்றியது. சுயவதை மனநிலைதான்.
பேருந்தில் ஒன்பது மணிக்குக் கிளம்பினேன். ஆரல்வாய்மொழி அருகே லாரி கவிழ்ந்திருந்தமையால் போக்குவரத்து திருப்பிவிடப்பட்டிருந்தது. நான் குட்டித்தூக்கம்போட்டு விழிக்கையில் தாழக்குடியில் இருந்தேன். அடடா, வண்டிமாறி ஏறிவிட்டேன் போலிருக்கிறதே என பீதியடைந்து எழுந்தேன். நடத்துநர் விஷயத்தைச் சொல்லி அமைதிகொள்ளச் செய்தார்.
நெல்லை சென்று சேர பதினொன்றாகிவிட்டது. பேருந்துநிலையத்தில் செல்வேந்திரன் இருந்தார். அவருடன் இருசக்கரவண்டியில் கோடைவெயிலில் சென்று நெல்லை மல்லுக்களின் எல்லை என்பதை அறிந்தேன்.நெல்லையில் சைவசித்தாந்தம் கொலைவெறியுடன் தழைக்க இந்த வெயிலும் ஒரு காரணமாக இருக்கவேண்டும்.
நெல்லையில் நவீன இலக்கியக்கூட்டங்கள் அரிதினும் அரிது. பன்னிரண்டுபேர் வந்து அமர்ந்திருப்பார்கள். அதில் பதினொருவர் தி.க.சியின் அணுக்கர்களான முற்போக்கு. ஒருவர் நிகழ்ச்சி அமைப்பாளராக இருப்பார். அத்தனைபேரையும் வண்ணதாசனே பெயர் சொல்லி அழைக்கமுடியும்.
மேலும் முந்தையநாள்தான் தி.க.சி விருது பாரதிமணி அவர்களுக்கு அளிக்கப்படும் நிகழ்ச்சி நடந்திருந்தது. அதில் தோப்பில் முகமதுமீரான், செ.திவான் உள்ளிட்ட நெல்லையின் செல்வங்கள் அனைவருமே பேசியிருந்தனர். ஆகவே எனக்குவரும் கூட்டத்தையும் சேர்த்து பதிமூன்றுபேரை எதிர்பார்த்தேன்.
நெல்லையப்பர் ஆலயமருகே இருந்த அரங்குக்குச் சென்றபோது அவ்வரங்கு நிறைந்திருந்ததைக் கண்டு மீண்டும் இடம் மாறிவிட்டேனா என்ற குழப்பத்தை அடைந்தேன்.
விக்ரமாதித்யன் அண்ணாச்சியை நீண்டநாட்களுக்குப்பின் பார்த்தேன். லட்சுமி மணிவண்ணனும் ‘படிகம்’ ரோஸ் ஆண்டோவும் காத்திருந்தனர். சற்றே முதிர்ந்த கைலாஷ் சிவனைப் பார்த்தேன். கோணங்கியை தழுவிக்கொண்டேன். ஃப்ரான்ஸிஸ் கிருபா பெயர் அடிபட்டது. கொஞ்சம் தேடித்தான் கூட்டத்திற்குள் சற்று உயர்ந்த அவரது தலையைக் கண்டுகொண்டேன். நீயாநானா ஆண்டனி வந்திருந்தார். தேவதச்சன் சற்று பிந்தி வந்திருந்தார். அஜயன் பாலா வந்திருந்தார். சந்துரு மாஸ்டர் வரமுடியவில்லை. செல்பேசியில் தன் வாழ்த்துக்களைச் சொன்னார்.
நீண்டநாட்களுக்குப்பின் சிற்றிதழ் நண்பர்களுடன் ஒரு நிகழ்ச்சி. முகங்கள் எண்பதுகளை நினைவுறுத்தின, தீவிரமும் ,சண்டையும், குடியும் ,கொந்தளிப்பும் நிறைந்த அக்காலகட்டம். சட்டென்று, எல்லாம் அடங்க ஆரம்பித்தது. இலட்சியவாதம் அழிந்தது. கூடவே கலகமும். ஏனென்றால் கலகம் திருப்பிப்போடப்பட்ட இலட்சியவாதம்.
எஞ்சியது வெற்றுக்காமம். அதை எழுதும் ஒருவகையான மேலோட்டமான கைகள். அவர்களுக்கும் ராஜேந்திரகுமாருக்கும் இடையே மயிரிழையே வேறுபாடு. அதுவும் அவ்வப்போது காற்றில் பறந்து மறையும். முகங்களைத்தான் பார்த்துக்கொண்டிருந்தேன். எனக்குப்பிரியமான ஒரு காலகட்டத்தின் முகங்கள். அன்றைவிட இன்னும் கலக்கம் கொண்டிருந்தன. அன்றைவிட மேலும் தனிமைகொண்டிருந்தன.
குற்றமும் மீறலும் ஒழுங்கின்மையும் நேரடித்தன்மையும் கொண்ட லட்சுமி மணிவண்ணனின் கவிதைகளைப்பற்றிப் பேசினேன். இன்றைய அறிவுலகம் எதிர்கொள்ளும் முதன்மையான சவால் உலகமயமாக்கத்தின் பொருளியல்சிக்கல்கள் அளிக்கும் எதிர் அழுத்தமும் உலகமயமாக்கத்தின் ஆன்மீகத்தன்மை அளிக்கும் நேர்விசையும் கொள்ளும் முரண்பாடே என அந்தோனி பேசினார். சமீபகாலத்தில் இலக்கியம் பற்றிக் கேட்கநேர்ந்த முக்கியமான கருத்து. அதைத்தான் இன்று எடுத்துவந்தேன் என்று சொல்லவேண்டும்.
கைலாஷ் சிவனின் புகழ்பெற்ற தொகுதியான சூனியப்பிளவு மறுபதிப்பாக வெளியிடப்பட்டது. ராஜன் ஆத்தியப்பனின் ’கருவிகளின் ஞாயிறு’ கவிதைநூல் வெளியிடப்பட்டது.
நிகழ்ச்சி சிற்றிதழ்களுக்கே உரிய ஒழுங்கின்மையுடன் விசித்திரமான தீவிரத்துடன் நடந்துமுடிந்தது. மதியம் கிளம்பி ஜானகிராம் ஓட்டலில் தங்கியிருந்த பாரதிமணி அவர்களைச் சென்று பார்த்தேன். அவர் நிகழ்ச்சிக்கு வரமுடியவில்லை, அவரால் படி ஏறமுடியாது. அறையில் கிருஷி இருந்தார். பாட்டையா என புகழ்பெற்ற பாரதிமணி உற்சாகமாக இருந்தார். நாடகநினைவுகள், பார்வதிபுரம் நினைவுகள்
மதியம் ஜானகிராமில் சாப்பிட்டுவிட்டு திரும்பவும் அரங்குக்கு வந்தேன். அங்கே கவிதை வாசிப்பு நிகழ்ந்துகொண்டிருந்தது. விக்கியண்ணாச்சி மேலும் உக்கிரமான அன்புகொண்டவராக இருந்தார். நான் இலக்கு. ஆகவே நான் திரும்ப உடனே திரும்பவேண்டியிருந்தது
வழக்கறிஞரும் கல்வியாளருமான திரு சக்தி கிருஷ்ணன் அவர்களால் கட்டப்பட்டது நெல்லையப்பர் கோயில் அருகே நயினார் படகுக்குழாம் எதிரே உள்ள சக்தி கலைக்களம். நெல்லையில் கலையிலக்கியச் செயல்பாடுகளை ஒருங்கிணைக்கவேண்டும் என்பதற்காக தொடங்கப்பட்ட நிறுவனம். இசைக்கருவிகள், விளையாட்டுக்கருவிகள் , ஓவியங்கள் விற்கும் கடை. சோதிடம், இசை , ஓவியம் போன்றவற்றில் பயிற்சியளிக்கும் குழுக்கள் என தீவிரமாக இயங்கிவருகிறது. சிறிய இலக்கியவிழாக்களுக்குரிய அரங்கு. நெல்லையில் தொடந்து இலக்கியக்கூட்டங்கள் நடக்கலாமென்று தோன்றுகிறது
இவ்விழாவின் இன்னொரு நிறைவான அம்சம், ஏராளமான வாசகர்கள் எனக்காக வந்திருந்தனர் என்பது. வெண்முரசுக்கு நெல்லையில் இத்தனை வாசகர் என்பது நான் எவ்வகையிலும் எதிர்பாராதது. பலர் ஒருவருடத்திற்குள் வாசிக்க ஆரம்பித்த இளைஞர்கள். ஓர் எழுத்தாளனுக்கு அவன் படைப்பை நுணுகி ஆராயும் வாசகர்கள் ஒருவகை நிறைவை அளிக்கிறார்கள் என்றால் அவன் படைப்புக்களால் வாழ்க்கையை மாற்றிக்கொண்டே என்பவர்கள் இன்னொருவகை நிறைவை அளிக்கிறார்கள் இரு வகை வாசகர்களையும் சந்திக்கமுடிந்தது
சக்தி கிருஷ்ணனின் காரில் திரும்பி நாகர்கோயில் வந்தேன். இனிய நாள். வெயிலின் சோர்வு நிறைந்த நாளும்கூட .