நாத்திக இயக்கங்களின் எல்லை என்ன?
ஒரு நம்பூதிரி நாவிதரிடம் பந்தயம் கட்டினார். தலையில் மொட்டை அடிக்கும்போது ஒரு கீறலுக்கு பத்துபைசா கழித்துக்கொள்வார். மொட்டைபோட கூலி ஒரு ரூபாய். ஒவ்வொரு கீறலாக விழுந்துகொண்டிருந்தது. நம்பூதிரிக்கு உற்சாகம். ஒன்பது கீறல். பத்து கீறல். காசே கொடுக்கவேண்டாம் என்று நம்பூதிரி நினைத்தார். ஆனால் சட்டென்று தலையில் வலி. ‘ஏன செய்கிறாய்?’ என்றார். ‘எல்லா கீறல்களையும் சேர்த்து ஒரே கீறலாக ஆக்குகிறேன்’ என்றார் நாவிதர்.
1988ல் எம் கோவிந்தனை நான் இரண்டாம்முறையாக சந்தித்தபோது நோயுற்றிருந்தார். ஆனாலும் உற்சாகமாக பேசி தமிழகத்தில் திராவிட இயக்கத்தின் நிலைமையைப் பற்றி அறிவதிலேயே அதிக ஆர்வம் காட்டினார். எம்.என்.ராய் தமிழக திராவிட இயக்கத்தை இந்தியாவின் மிக அறிவார்ந்த இயக்கங்களில் ஒன்றாக எண்ணினார். ஈவெரா மீது அவருக்கு பெரும் மதிப்பு இருந்தது. அந்த மதிப்பு எம்.கோவிந்தனுக்கும் இருந்தது.அவருக்கு ஈவெராவை நேரடியாகவே தெரிந்திருந்தது
எனக்கு திராவிட இயக்கங்களைப்பற்றி மதிப்பு இல்லை என்று சொன்னேன். அவருக்கு அது கொஞ்சம் ஆச்சரியமாக இருந்தது. என்னுடன் இன்னொரு தமிழ்நண்பரும் இருந்தார். அவருக்கும் மதிப்பில்லை என்றதும் கோவிந்தன் பெருமூச்சுவிட்டார். என்ன காரணம் என்று கேட்டார். ‘அது பப்பாளிமரம்போல. வேர் தடி தண்டு இலை காய் பூ எல்லாமே உள்ளீடற்றவை’ என்றேன். சிரித்தார்
அதன்பின் ‘ஈவெராவின் திராவிட இயக்கம் அப்படி அல்ல. அது ஒரு நல்ல தொடக்கம். ஆயிரம் வருட பக்தி இயக்கம் இருந்த மண்ணில் அப்படி ஒரு உக்கிரமான தொடக்கம் நடந்தது சிறந்த விஷயம்தான். ஆனால் அதிலிருந்து சிந்தனைகளும் இலக்கியமும் பெருகி மேலெழவில்லை. அது உடனடியாக பாப்புலிஸ்ட் இயக்கமாக ஆகியது. கருத்துக்களை பாப்புலிசம் வந்து தீண்டும்போது அவை உறைந்து வெறும் கோஷங்களாக ஆகிவிடுகின்றன. அதன்பின் அவற்றை விவாதிக்க முடியாது. அவை சிந்தனைகளை தூண்டாது.’ என்றார்
திராவிட இயக்கத்தை அரசியலாக ஆக்கிய அண்ணாத்துரையை குறை சொல்கிறீர்களா என்றேன்.’வரலாற்றின் இயக்கத்தை அறிந்தவன் அதை எதற்காகவும் குறைசொல்ல மாட்டான், ஆராயத்தான் முயல்வான்’ என்றார் கோவிந்தன். திராவிட இயக்கம் ஒருகட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் அரசியலை நோக்கிச் செல்லவேண்டியிருந்தது. அது இயல்பாக உருவான வரலாற்றுத்தேவை. அந்த அரசியலுக்கு மக்கள் ஆதரவு தேவையாக இருந்தது. ஆகவே அது தன்னை பரப்புவாதம் நோக்கி கொண்டுசென்றது என்றார்.
என் ஒட்டுமொத்த விமர்சனத்தை பற்றிச் சொல்லும்போது ‘பண்டு நம்பூதிரிதியின் தலையில் நாவிதர் ஒரேகீறலை உருவாக்கியதுபோலத்தான் நாமும் வரலாற்றை புரிந்துகொள்கிறோம். ஒரேவிடை வரவேண்டியதில்லை. பலவிடைகள் இருக்கட்டும்’ என்றார். நான் ஒரேவரியை தவிர்த்துக்கொண்டு சிக்கல்களையும் சாதகபாதம அம்சங்களையும் கருத்தில்கொண்டு ஆராய ஆரம்பித்தேன்.
தமிழகத்தில் நான் காண்பது பெரும்பாலும் திராவிட இயக்க துதிகளையே. சென்ற அரைநூற்றாண்டில் தொடர்ந்து திராவிட இயக்கமே பதவியில் இருந்தமையால் தமிழக பாடப்புத்தகங்களில் அது திட்டமிட்டு ஊடுருவியிருக்கிறது. அரை உண்மைகளையும் பொய்களையும் தொடர்ந்து முன்வைத்து இரு தலைமுறைகளின் பொதுப்புத்தியின் அவையே வரலாறாக நிறுவிவிட்டிருக்கிறது. அதற்கு எதிரான குரல்களுக்கு தமிழகத்தில் மேடை இல்லை. அவற்றால் பொதுத்தளத்தில் எதையும் நிறுவ முடியவில்லை
உதாரணமாக ஈவெராவின் வைக்கம்போராட்டம் , மு.கருணாநிதியின் கல்லக்குடி போராட்டம் ஆகியவற்றைப்பற்றி இங்குள்ள மிகையான சித்தரிப்புகள். சி.என்.அண்ணாத்துரை தமிழகத்துக்கு தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்தது போன்றவற்றை மாபெரும் சாதனைகளாக மிகைப்படுத்துவது. அதேசமயம் ராஜாஜி, காமராஜ் போன்றவர்களின் தியாகவரலாறுகளையும் அவர்களின் மிகபெரிய சாதனைகளையும் முழுமையாக மட்டம்தட்டுவது.
திராவிட இயக்கத்தின் பொய் பற்றிப் பேசும்போது நான் எம்.கோவிந்தனிடம் ஈவெராவின் வைக்கம்போராட்டப் பங்களிப்பு பற்றி தமிழகத்தில் உருவாக்கப்பட்ட பொய்யான வரலாறு பற்றி கேட்டேன். ‘அது ஓர் அரசியல் உத்தி. தமிழகத்தில் அவர்கள் உருவாக்க என்ணிய பிற்படுத்தப்பட்டோர் எழுச்சிக்காக அந்த வரலாறு தேவைப்பட்டது. அதன் விளைவையே நாம் பார்க்க வேண்டும்’ என்றார். ’அதே மாதிரி பொய்களை காந்தியவாதிகள் சொல்லியிருந்தால் நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களா’ என்றேன். ’இல்லை, காந்தியத்தின் அற அடிப்படை வேறு’ என்றார்.
திராவிட இயக்கத்தை வைத்து நான் நாத்திக இயக்கத்தின் சிக்கல்களை இவ்வாறு வகுத்துக்கொள்கிறேன்.
என் நோக்கில் நாத்திக இயக்கங்களின் மிகப்பெரிய போதாமையே அவை எதிர்மறை இயக்கங்கள் என்பதே. மறுப்பின் மொழியில் மட்டுமே அவற்றால் பேசமுடிகிறது. மரபின் பிடியில் இருந்து மீறி எழத்தேவையான விசையை அவை அளிக்கின்றன. எழுந்தபின் நிற்க நிலத்தை அளிப்பதில்லை. எஞ்சிய நாளெல்லாம் அந்த எதிர்ப்பையே தன் நிலமாகக் கொண்டு நிற்கவேண்டியிருக்கிறது. அது பெரும்பாலானவர்களால் முடிவதில்லை.
ஏனென்றால் வாழ்க்கை தத்துவவிளக்கங்கள் மீதே நிற்க முடியும். அறம்,ஒழுக்கம், அன்பு, பாசம், தியாகம் ஆகிய அனைத்துக்குமே தத்துவார்த்தமாக விளக்கம் தேவைப்படுகிறது மனிதனுக்கு. சாதாரணமாக மனிதர்களிடம் இருக்கும் விளக்கங்கள் மதத்தால் அளிக்கப்பட்டவை. மதத்தை நிராகரிக்கும்போது அவர்களிடம் இருக்கும் விழுமியங்களும் கேள்விக்குள்ளாக்குகின்றன. அவற்றுக்கு பகுத்தறிவுசார்ந்த விளக்கங்கள் அளிக்கப்படவேண்டும். எளிய நாத்திகவாதம் அவற்ற அளிப்பதில்லை
ஈவெரா அவர்கள் எந்த மதவாதிக்கும் நிகராக ஒழுக்கம் குறித்து பேசியவர். மனிதன் ஒழுக்கமாக இருந்தால்போதும், கடவுள் தேவையில்லை என்ற வரியை அவரது உரைகளில் அடிக்கடி காணலாம். அந்த ஒழுக்கத்துக்கான அடிப்படைகள் என்ன என்ற வினாவை அவர் சந்தித்ததில்லை. ஒரு பகுத்தறிவு அறம் நோக்கிச் செல்லும் விவாதங்களையே நிகழ்த்தவில்லை.
நாத்திக இயக்கங்கள் இருமையை தங்கள் அறிதல்முறையாக கொண்டிருக்கின்றன. எல்லாவற்றையுமே அவை கறுப்புவெள்ளையாக ஆக்கிக்கொள்கின்றன. இந்த கறுப்புவெள்ளையை மதத்தில் இருந்தே நாத்திகவாதமும் பெற்றுக்கொண்டது. மதத்தின் கறுப்பெல்லாம் இவர்களுக்கு வெள்ளை. நாத்திகவாதி ஒரு எதிர்மதவாதி. அதே பற்று மனநிலை. அதே வெறி
நான் எடுத்த பேட்டியில் ஈவெராவைப்பற்றி மறைந்த கன்னட தலித்-பண்டாயா சிந்தனையாளரான டி.ஆர்.நாகராஜ் சொன்னார். ‘அவருக்கு கடவுள் மீது இருந்த ‘அப்ஸெஸன்’ அவரது மற்ற சிந்தனைகளை வளராமல் செய்துவிட்டது. அவர் அனைத்தையும் அங்கே கொண்டுசென்று சேர்த்தார்’ டி.ஆர்.நாகராஜ் பெரியாரியராக கர்நாடகத்தில் செயலாற்றியவர் என்பதை நினைவில்கொள்ளவேண்டும். இந்த பற்று எதிர்மறையானது. வேகத்தில் ஒரு பெந்தெகொஸ்து பக்தனுக்கு நிகரானதும்கூட.
இந்த வேகம் காரணமாக அவர் அனைத்தையுமே குறுக்கிப்பார்க்கக்கூடியவராக ஆனார். கழுவியநீரில் பிள்ளையையும் அள்ளிக்கொட்டக்கூடியவராக ஆனார். நாத்திகம் ஒரு மனவேகமாக ஆனபோது ஒட்டுமொத்த தமிழ்ப்பண்பாட்டை, தமிழ் இலக்கியத்தை, தமிழ் அறிவியலை முழுமையாக நிராகரிக்கும் இடத்துக்குச் சென்று சேர்ந்தார். அவ்வாறு எந்த சமூகமும் தன் கடந்தகாலத்தை முழுமையாக நிராகரிக்காது. அது சாத்தியமும் இல்லை. இந்த வேகம் கேரளத்திலும் நாத்திகர்களிடம் உள்ளது.
இந்த பற்றுறுதி காரணமாக முழுமையான முடிவுகளுக்கு ஏற்கனவே வந்துவிட்டவர்களாக நாத்திகர்கள் உருவாகிறார்கள். அவர்களுக்கு அதன்பின்னர் அறிவியக்கமே இல்லை. தமிழக நாத்திக இயக்கம் ஏன் ஒரு பெரிய அறிவியக்கமாக உருவாகவில்லை என்ற கோவிந்தனின் கேள்விக்கு இதுவே பதில். அவர்களிடம் எளிமையான எதிர்வாதங்கள் இருந்தன. அவை போதும் என்ற மனநிலையும் இருந்தது.
தமிழில் நாத்திகவாதம் உருவாகி முக்கால்நூற்றாண்டு தாண்டியபின்னரும்கூட அவர்களின் தரப்புக்குரிய மூலநூல்கள் எவையுமே மொழியாக்கம் செய்யப்படவில்லை. இன்றுகூட டார்வினின் உயிர்களின் தோற்றம் தமிழில் கிடைப்பதில்லை. ஐரோப்பிய நாத்திகவாதத்தின் மூலநூல்கள் மொழியாக்கம்செய்யப்படவில்லை. ஏன் எம்.என்.ராய் குறித்து ஓர் அறிமுகம்கூட அங்கே நிகழவில்லை.
இந்நிலையில் தமிழகத்தின் மத சிந்தனைகளின் சாரமாக உள்ள சைவசித்தாந்தம் பற்றியோ விசிஷ்டாத்வைதம் பற்றியோ ஒரு காத்திரமான ஆராய்ச்சிநூலை அவர்களிடம் எதிர்பார்ப்பதில் பொருளே இல்லை. பாமரமக்களிடம் செல்லுபடியாகும் பேச்சுக்களை மட்டுமே அவர்களிடம் எதிர்பார்க்கமுடிகிறது. ஆகவே உண்மையில் தமிழகத்தில் நாத்திகவாதத்தின் நூற்றாண்டு நெருங்கும் இந்த காலகட்டத்தில்கூட தமிழக மதசிந்தனைகள் தங்களுக்கான மறுதரப்பை அறியாமல்தான் செயல்பட்டுக்கொண்டிருக்கின்றன.
நாத்திகவாதத்தால் ஒரு சமூகத்தின் பண்பாட்டையும் வாழ்க்கைமுறையும் புரிந்துகொள்ள முடிவதில்லை. அது சிந்தனையளவில் ஐரோப்பியத்தனத்தையே பேணுகிறது. தமிழகத்திலும் கேரளத்திலும் உள்ள பகுத்தறிவுவாதிகளிடம் இருக்கும் ஐரோப்பியவழிபாட்டுத்தன்மை ஆச்சரியமளிக்கக்கூடியது. அறிவியல் மெய்யியல் தர்க்கம் கலை அனைத்துக்குமே அவர்கள் ஐரோப்பாவையே ஆதாரமாகக் கொள்கிறார்கள். ஒரு பத்தொன்பதாம் நூற்றாண்டு ஐரோப்பியன் இந்தியாவைப்பற்றி என்ன நினைப்பானோ அதையே நாம் ஈவெராவிடமும் கோவூரிடமும் காண்கிறோம்.
ஒருசமூகத்தின் ஒட்டுமொத்த கருத்தியல் கட்டுமானமும் வெறும் சுரண்டலுக்காக உருவாக்கப்பட்ட ஒன்றாக இருக்கமுடியாதென்பதை இன்று எந்த சிந்தனையாளரும் ஏற்றுக்கொள்வார்கள். மரபு என்பது பெரும் குறியீட்டு வெளி. அதை முழுக்க உதறிவிட்டால் சிந்தனைகளே சாத்தியமில்லை. நகலெடுப்பு மட்டுமே சாத்தியம். மரபை முழுமையாக உதறும் ஈவெராவின் தீவிரத்தை அவரது முக்கியமான மாணாக்கரான அண்ணாத்துரையாலேயே ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
சமூக உருவாக்கம், பரிணாமம் பற்றிய விரிவான வரலாற்றுச்சித்திரத்தை உருவாக்கிக்கொள்ள நாத்திக சிந்தனைகள் போதுமானவை அல்ல. ஐரோப்பாவில் நாத்திகசிந்தனைகள் மிக இலகுவாக அடுத்தடுத்த கட்டங்களுக்குச் சென்றன ஐரோப்பிய நாத்திகவாதத்தின் தத்துவ சாரமான பொருள்முதல்வாதம் கருத்துமுதல்வாதத்துடன் நிகழ்த்திக்கொண்ட உரையாடலின் விளைவே மார்க்ஸியம். அதன் முரணியக்க பொருள்முதல்வாதம் தனக்குரிய விரிவான சமூகசித்திரத்தையும் மெய்யியலையும் உருவாக்கிக்கொண்டது.
கேரளத்தில் நாத்திகவாதம் இயல்பாக மார்க்ஸியத்துக்கு வழிவிட்டது. மார்க்ஸியமே இன்று கேரளத்தின் உண்மையான நாத்திக மரபாக உள்ளது. ஐரோப்பிய பாணி நாத்திகம் இடமறுகுவின் குடும்பத்தைச் சார்ந்து இயங்கும் ஒரு குறுங்குழுவாக தேங்கிவிட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் ஐம்பதுகளில் மார்க்ஸிய சிந்தனைகள் தீவிரமடைந்தபோதிலும்கூட திராவிட இயக்கத்தின் வீச்சு அவற்றை நிலைக்கச்செய்துவிட்டது. இருந்தாலும் தத்துவார்த்த தளத்தில் தமிழகத்தில் நாத்திகம் என்பது மார்க்ஸியர்களாலேயே தொடர்ச்சியாக முன்வைக்கப்படுகிறது
மார்க்ஸியம் முன்வைக்கும் சமூகப்பரிணாமச் சித்திரம், அதன் வரலாற்றுவாதம் ஆகியவற்றைப்பற்றி விரிவாகவே பேசலாம். சிந்தனைத்தளத்தில் தமிழகத்தில் மார்க்ஸியமே இன்று முக்கியமான பொருள்முதல்வாதத் தரப்பு. பொருட்படுத்தவேண்டிய நாத்திக தத்துவமும் அதுவே. மார்க்ஸிய இலட்சியவாதத்துக்கு எதிரான நடைமுறைவாதச் சிந்தனைகள் அதிகமாக தமிழில் வேரூன்றவில்லை. தொண்ணூறுகளில் வரலாற்றுவாதத்தை நிராகரித்து முன்னகரும் பின்நவீனத்துவ சிந்தனைகளும் இங்கே உருவாகியிருக்கின்றன.
இவற்றுடன் தொடர்பின்றி, தன் வரலாற்றுக்கடமையை நிறைவேற்றிவிட்டு, பழங்கால மடங்களைப்போல ஏதோ ஒருகாலகட்டத்தின் தத்துவத்தை செங்ககல்லாகவும் சுவர்களாகவும் மாற்றிக்கொண்டு தமிழகத்தில் நாத்திகவாதம் நின்றிருக்கிறது. சீமைக்கல்வாழை என்று ஒரு செடி உண்டு. சப்பையாக அடுக்கடுக்கான தண்டுகளுடன் சேம்பிலை போன்ற பெரிய இலைகளுடன் இருக்கும். ஏதோ தென்னமேரிக்க நாட்டில் இருந்து வந்தது. அலங்காரத்துக்காக வளர்ப்பார்கள். இங்குள்ள மண்ணில் அது ஆண் பெண் என பிரிவதில்லை. ஆகவே இனப்பெருக்கம் செய்வதில்லை. பூக்காது குலைதள்ளாது என்றும் பசுமையாக இளமையாக நின்றிருக்கும்.
இங்கே ஐரோப்பிய நாத்திகவாதமும் அவ்வாறுதான். அதன் இயக்கத்துக்கு தேவையான மறுதரப்பு அதனுள் உருவாகவில்லை. ஆகவே அது அப்படியே ஒரு நம் சிந்தனையின் மூலையில் நின்றுகொண்டிருக்கிறது
நன்றி
[10-10-2010 அன்று திரிச்சூரில் ஆற்றிய எம் கோவிந்தன் நினைவுப்பேரூரை]