கொல்லிமலைச் சந்திப்பு -கடிதங்கள்

அன்புள்ள ஜெமோ,

வணக்கம்.பாண்டிச்சேரியில் வருடந்தோறும் மே முதல் வாரம் நிகழும் கம்பன் கழகம் நடத்தும் விழாக்களுக்கு சிறுவயது முதற்கொண்டே பார்வையாளனாக, தந்தையுடன் சென்று வருவது உண்டு.

1

கடந்த ஆண்டு நாஞ்சில்நாடன் அவர்களின் வருகை உண்டு என்பதை அறிந்து ஆவலுடன் சென்றேன், ஆனால் கம்பனின் அம்பறாத்தூணி என்னும் அவர் படைப்புக்கு பரிசு வழங்கவே அழைத்திருந்தனர். அவரின் உரையைக் கேட்க இயலாதது ஏமாற்றமே.

அக்கழகத்தின் நிரந்தரப்பேச்சாளர் கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ் அவர்கள் ஆற்றிய ஓர் உரையில் கம்பனின் பாடல்கள் ஏன் காலத்தில் நிற்கிறது, மற்ற பாடல்கள் காலத்தில் கரைந்துவிட்டது என்று வினவி அதற்கான காரணத்தைக்கூறினார். காலமற்றதை குறிக்கும் பாடல்கள் அல்லது படைப்புகள், காலத்தில் நிற்கும் என்றபோது ஓர் அகவெழுச்சி ஏற்பட்டது.

அத்தகைய ஓர் உணர்ச்சி ஒவ்வொரு நாளும் காலையில் வெண்முரசு வாசிக்கும்போதும் ஏற்படுகிறது. இத்தகைய மகத்தான, காலத்தில் நிற்கும் படைப்பை உருவாக்கும், லட்சியவாதத்தில் நம்பிக்கை கொண்ட ஆளுமையை தரிசிக்கவேண்டும் என்ற விருப்பமே கொல்லி மலை சந்திப்பில் கலந்துகொண்டதன் காரணம்.

சொல்லப்போனால் தங்களிடம் விவாதிப்பதைவிட, உங்களின் இருப்பில் ஓரிரு நாட்களைக் கழிக்கும் வாய்ப்பே பெரும்பேறு அல்லவா, அது வாய்த்துவிட்டதில் பேருவகை.

தங்களின் தொடர்ந்த வாசகன் என்ற முறையில்,உங்களிடம் விவாதிப்பதற்கு கலந்து கொண்ட எங்கள் அனைவர்க்கும் முழுத்தகுதி இல்லை என்பதில் ஐயமில்லை.

முதிரா வாசகர்கள் என்பதாலும், சிலரைத்தவிர அனைவரும் இளம்பிராயத்தவர் என்பதாலும்,வினாக்களை கலைச்சொல்லை பயன்படுத்தி உருவாக்க முடியவில்லை என்பதும், விவாதமுறைகளை அறியாமல் தாவித்தாவிச்சென்ற முறையும் போதாமையே.

2

ஆனால் நீங்களே கூறியபடி எங்களிடம் மிகவும் பெருந்தன்மையாகவும், பொறுமையாகவும், கனிவாகவும் நடந்து கொண்டீர்கள். அதற்கு ஆசானுக்கு நன்றிகள். நாங்கள் கடைசிபெஞ்ச் மாணவர்கள் என்றாலும்,எங்கள் உள்ளத்தில் வாழும் ஆசிரியர் நீங்கள்தானே ஜெமோ….

ஆனால் இந்நிகழ்வில் பங்கெடுத்த புதியவர்கள் அனைவரும் முக்கியமாக இன்னும் வாழ்வை (திருமணம் ஆகாத) ஆரம்பிக்காத இளம் வாசகர்கள், எதிர்காலத்தில் இந்தச்சந்திப்பை வாழ்ந்தகணங்களாக நினைவுகூர்வார்கள் என்பதும் உண்மையே.,

மட்டுமல்லாமல் அருகிலமர்ந்து தனிப்பட்ட முறையில் நிறைய கற்றுக்கொண்டது நிறைவைத்தந்துள்ளது. இடையறாத ஐப்பசிமழை போன்ற பேச்சு அந்தரங்கமாக பல அகமாறுதல்களையும், திறப்புகளையும் அளித்துள்ளது என்பதைப்பதிவு செய்கிறேன்.

உங்களிடம் இருந்து வெளிப்பட்ட கருத்துக்களை நினைவிலிருந்து தொகுத்துக்கொண்டிருக்கிறேன். பல விஷயங்கள் தவிர்த்துவிட்டு பொதுவில் பகிரக்கூடிய சில பகுதிகளை மட்டும் குழுமத்தில் பதியலாம் என்று எண்ணுகிறேன்.

அன்புடன்,

திருமாவளவன்.

 

3

அன்புள்ள ஜெயமோகன்,

நான் உங்களை கடந்த ஜனவரி மாதம் முதல் இணையத்தில் வாசித்துவருகிறேன். உங்களது கட்டுரைகளே எனக்கு பிடித்தவை குறிப்பாக பயணகட்டுரைகள். இதனிடையே உங்களை கொல்லிமலை புதிய வாசகர்களுடன் சந்திக்க நேர்ந்தது இனிய அதிர்ச்சி மகிழ்ச்சி.

உங்களது நீண்டகால தீவிர வாசகர்கள் சிலர் உங்களுடன் விவாதித்த போது நானும் வேறு சிலரும் சற்று தயக்கத்துடனே கவனிக்க நேர்ந்தது, உங்களுடைய இயல்பான உரையாடல் எங்களது தயக்கத்தை களைந்தது. பெரும்பாலான நேரங்களில் நீங்களும் நண்பர்களும் சற்று உணர்ச்சிகரமான சூடான விவாதங்களில் ஈடுபட்டபோதும் நான் அமைதியாகவேயிருந்ததை கவனித்திருப்பீர்கள் என நினைக்கிறேன். வரும்காலங்களில் உங்களுடன் இயல்பான ஆரோக்கியமான உரையாடலில் ஈடுபடுவேன்.

சனிக்கிழமை மாலை மலையுச்சியில் சூரியன் மறைவை பார்த்தது, தொடர்ந்து பனியிலும் காற்றிலும் மலையுச்சியில் அமர்ந்தபடி விண்ணையும் மண்ணையும் கவனித்தபடி உரையாடியது அருமையானதொரு நிகழ்வு.

 

நண்பர்கள் ஈரோடு கிருஷ்ணன், நாமக்கல் வாசு, வரதராஜன், மீனாம்பிகை, அஜிதன் ஆகியோருக்கு நன்றியையும் வணக்கத்தையும் தெரிக்கவும்.

அன்புடன்

ஜெயப்பிரகாஷ்,

காங்கயம்

 

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 7
அடுத்த கட்டுரைஇனியவை திரும்பல்