[ 6 ]
கொதிக்கும் உடல் கொண்டிருந்தான் ரக்தபீஜன். மகவென அவனை எடுத்த யட்சர்கள் சற்றுநேரத்திலேயே கை சுட கீழே வைத்துவிட்டனர். பின்னர் கொடிகளில் தூளிகட்டி அவனை தூக்கிவந்தனர். குழந்தையை கையில் வாங்கிய மாலயட்சன் அதன் வெம்மையைத் தொட்டு “எதன்பொருட்டு எரிகிறான் இவன்?” என்றான். சிவந்து கனிந்து அதிர்ந்துகொண்டிருந்த சிற்றுடலை நோக்கி குனிந்து “எங்குளது இவ்வெரிதலின் நெய்?” என்றான். எரியும் மைந்தனை மெல்ல தன் யாழின் குடத்தின்மேல் வைத்தான். யாழ் இசைக்கத்தொடங்கியது. பாலைப்பண் எழுந்தது. தனித்து அது முடிவின்மையில் நெளிந்து அலைந்தது. “எளியோன், அளியோன்” என்றான் மாலயட்சன்.
ரக்தபீஜன் செவ்வுடலும் செங்குழலும் செங்குருதி படர்ந்த விழிகளும் கொண்டிருந்தான். அனலும் அமிலமும் நிறைந்த பையெனத் தோன்றினான். உள்ளிருந்து அந்நீர்மை கொதித்து வெடித்தெழ விழைவதுபோல அவன் மென்தோற்பரப்பு அதிர்ந்துகொண்டே இருந்தது. அவன் வந்தநாளிலேயே முலையூட்டும்படி யட்சிகளிடம் மாலயட்சன் ஆணையிட்டான். எருமையுருக்கொண்ட தீர்க்கை என்னும் யட்சி மகிஷாசுரனுக்கு முலையூட்டியபின் அவனை தொட்டாள். கையை உதறி பின்னுக்கிழுத்து அலறினாள். அவள் தொடுகையில் கனலெனச் சிவந்து, சுளித்த வாய்திறந்து வீரிட்டது குழந்தை. இரு கைகளையும் அசைத்து கால்களால் உதைத்து துள்ளிவிழுந்தது.
பசுவுருக்கொண்ட ஹரிதை என்னும் யட்சிணியிடம் முலையூட்ட ஆணையிட்டான் மாலயட்சன். அவள் தொட்டபோது மைந்தனின் கூந்தல் தழலாக புகைந்து எரிந்தது. அவள் சுட்டு கொப்பளித்த கையை எடுத்தபடி எழுந்து நின்று கூச்சலிட்டாள். பன்றியுருக்கொண்ட வராஹி என்னும் யட்சிணியும் யானையுருக்கொண்ட கரிணி என்னும் யட்சிணியும் அவனைத் தொட்டு அலறி விலகினர். அவர்களின் தொடுகையில் வெம்மைகொண்ட அவனருகே இருந்த தளிர்கள் பற்றி எரிந்தன. பாறைகளும் உருகி பள்ளமாயின.
மாலயட்சனின் ஆணைப்படி சிம்மவடிவம் கொண்ட சிம்ஹி என்னும் கந்தர்வப்பெண் அவனை அணைத்தபோது அவள் செஞ்சடைகள் தழலென பற்றி எரிந்தன. அவளிடமிருந்து அறைதலோசை எழுந்தது. அதற்கு நிகராக எதிரோசை எழுப்பி தானும் தழலென்றாகி முலைபற்றி உண்டான் மைந்தன். சற்றுநேரத்தில் அவள் குழந்தையை தன் முலைக்காம்பிலிருந்து விலக்க முயன்றபடி அலறினாள். பெருவலியுடன் கைகளால் நிலத்தை அறைந்தும் பற்களைக் கடித்தும் கூச்சலிட்டாள். மைந்தன் அவளில் உருகிஒட்டியவன் போலிருந்தான். அவன் இதழ்கள் பிடிவிட்டதும் அவள் அவனை உதறிவிட்டு பாய்ந்தெழுந்து குருதி வழியும் முலைக்கண்ணுடன் நின்று நடுங்கினாள். அவன் வாயிலிருந்து குருதி ததும்பி கன்னங்களில் வழிந்தது.
அஞ்சி நின்ற சிம்ஹியிடம் “அவனுக்கு உணவு நீ” என மாலயட்சன் ஆணையிட்டான். அழுதபடி “ஆணை” என்றாள். ஒவ்வொரு நாளும் அவள் முலைவழியாக குருதியையும் நிணத்தையும் அவன் உண்டான். முலையுண்ணும் நேரம் மட்டுமே சிம்ஹி குழந்தையை தொடமுடிந்தது. பிற தருணங்களில் அவள் கை அவன்மேல் பட்டால் நாகம்போல சீறி, வெண்பற்களைக்காட்டி அவன் கடிக்கவந்தான். பசித்தபோது உடல்நெளித்து ஓலமிட்டான். அஞ்சியும் அழுதும் அருகணைந்த சிம்ஹியை அள்ளிப்பற்றி அவள் நெஞ்சக்குலையை உறிஞ்சினான். நிறைந்ததும் பிடிவிலகி உதிர்ந்து கடைவாயில் குருதி உறைய துயின்றான்.
குருதியுண்டமையால் அவனை ரக்தபீஜன் என்று அழைத்தான் மாலயட்சன். “உண்ணும் முலைப்பால் விதையாகிறது. இக்குருதி எழப்போகும் காடு ஏதென்று தெய்வங்களே அறியும்” என்றான். மெலிந்து உடல்வெளுத்து ஒடுங்கிய சிம்ஹி மறைந்தபோது கூருகிர் எழுந்த கைகளும் செம்பிடரி பறக்கும் சிம்மத்தலையும் ஓங்கிய செந்நிற உடலும் கொண்டு ரக்தபீஜன் வளர்ந்தெழுந்தான். மாலயட்சன் அவனிடம் அவன் குலக்கதையை சொல்லும்படி காதிகன் என்னும் முதிய யட்சனிடம் சொன்னான். பாதிரிமலரின் குவைவழியாக மட்டுமே ஓசையிடத்தெரிந்த காதிகன் அவ்வொலியில் இசையெழுப்பி அசுரகுலத்தின் கதையை சொன்னான். தன்னுடைய நாடு விந்தியமலையுச்சியில் காத்திருப்பதை ரக்தபீஜன் அறிந்தான். மாலயட்சனின் கால்களைத் தொட்டு வணங்கி வாழ்த்துரை பெற்று மண்ணவர் உலகுக்குச் சென்றான்.
தானவம் புழு சிறகுபெற்று விட்டுச்சென்ற கூடுபோல் சிதைந்து கிடந்தது. அங்கு அசுரகுடிகள் பிறர் அறியாது அஞ்சி இடிபாடுகளுக்குள் ஒடுங்கி வாழ்ந்தனர். வேள்வியறியாத நகரில் இருள்தெய்வங்கள் குடியேறியமையால் அங்கே ஒவ்வொருவருக்கும் பலநூறு நிழல்கள் எழுந்து உடன் அசைந்தன. நிழல்களை அஞ்சி அவர்கள் விழிமூடி கைகளை நீட்டி தொட்டறிந்து நடமாடினர். உற்றாரின் மூச்சொலிகளுடன் ஏதேதோ நகைப்புகளும் கனைப்புகளும் ஊடுகலந்தன. அகச்சொற்களுடன் அறியாச் சொற்கள் வந்து இணைந்துகொள்ளவே அவர்களின் உள்ளம் அவர்கள் அறியாத பேருருவம் கொண்டு விரிந்தது. தங்களுள் ஓடும் எண்ணங்களை தாங்களே உணரும் கணங்களில் அவர்கள் அலறியபடி தலையை கைகளால் அறைந்துகொண்டனர். கைகளை விரித்தபடி எழுந்து வெட்டவெளிநோக்கி ஓடினர். ஆடைகளை கழற்றிவிட்டு நெஞ்சிலும் முகத்திலும் அடித்துக்கொண்டு நடுங்கி உடல்குறுகினர். தங்களுக்குள் குடியேறியவற்றை பிடுங்கி வெளியே வீசுவதுபோல கைகளை அசைத்தனர். அவர்கள் வாயிலிருந்து அவர்கள் எண்ணாத சொற்கள் ஓயாது வெளியே கொட்டிக்கொண்டிருந்தன.
சொற்கள் பொருளிழந்து ஒலிகளே என்றானபோது தானவத்தின் ஒவ்வொரு பருப்பொருளும் பெயரை இழந்தது. பெயரிழந்தவை பொருளையும் இழந்தன. பொருளிழந்த பொருட்கள் வெற்றிருப்பாயின. வெற்றிருப்புகள் அவர்கள் மேல் முட்டின. அவர்களை வீழ்த்தின. அவர்களைச் சூழ்ந்து உளம்பதைக்கச்செய்யும் அமைதியுடன் அமர்ந்திருந்தன. மொழிப்பொருளென்றாகி அவர்களைப் பிணைத்திருந்த ஒவ்வொன்றும் சிதற உருவாகி வந்த பெரும் பொருளின்மையில் ஒவ்வொருவரும் முழுத்தனிமையை அடைந்தனர். ஒருவரோடொருவர் விழிமுட்டாது உடலுரச அங்கே அவர்கள் சுற்றியலைந்தனர். ஒவ்வொருவருக்குப் பின்னாலும் நிழலுருவென அணிவகுத்த இருள்தெய்வங்களின் நெரிசலால் நகர் இருண்டு கிடந்தது.
பொருளிழந்து கிடந்த தானவத்தை நோக்கி ரக்தபீஜன் தன் உகிர்க்கைகளை விரித்து செம்பிடரித்தழல் பறக்க வந்தபோது இருள்தெய்வங்கள் கோட்டைகளின் மேலேறி அவனை நோக்கின. அச்சத்துடன் அவை மெல்ல நடுங்கின. அவற்றின் விழிகளைச் சூடியபடி வெளியே வந்த அசுரர் அவனைக் கண்டு அஞ்சி ஒடுங்கினர். சிலர் சீறியபடி தாக்கவந்தனர். அவன் அவர்களின் நிழல்களை ஒருகாலால் மிதித்துப் பற்றியபடி அவர்களை அறைந்து தெறிக்கச்செய்தான். நகரின் உளுத்தமைந்த கோட்டைக்கதவை காலால் உதைத்து உடைத்து உள்ளே சென்றான். அங்கே மட்கி வடிவிழந்துகிடந்த பொருட்கள் அனைத்தையும் அள்ளி ஒழிந்து மண்மூடிக்கிடந்த எரிகுளத்தில் குவித்து நெருப்பிட்டான். தங்கள் பொருளின்மையின் பொருண்மையிலிருந்து விடுபட்டு பொருட்கள் தழலென எழுந்து படபடத்து நின்றாடின. உருவழிந்து மறைந்ததுமே அவை தாங்கள் இழந்த பொருட்களை மீண்டும் அடைந்தன.
எரியில் விழுந்த அவிகொள்ள யட்சர்களும் யட்சிணிகளும் முதலில் வந்தனர். விண்ணகத்தெய்வங்கள் ஒன்றொன்றாக எழ நிழல்கள் சுருங்கி இழுபட்டு தழலை அணுகி உள்ளே நுழைந்து மறைந்தன. நகரம் செவ்வொளி கொண்டதும் கனவிலிருந்து விழித்தெழுந்தவர்கள்போல அசுரர் நிலைமீண்டனர். நகர்நடுவே நின்றிருந்த பேருருவனைக் கண்டதுமே அவன் தங்களவன் என அவர்கள் உணர்ந்துகொண்டனர். கண்ணீருடன் கைநீட்டி அவனை அணுகினர். முதிய அசுரன் ஒருவன் உரத்தகுரலில் “ஐயனே, தாங்கள் யார்?” என்றான். “நான் அசுரேந்திரன். ரம்பனின் இரண்டாவது மைந்தன். என்பெயர் ரக்தபீஜன்” என்றான். “என் நகரை கொள்ள இங்கு வந்துள்ளேன். இனி இங்கிருந்து இவ்வுலகங்களை ஆள்வேன்.” வாழ்த்தொலிகளுடன் விம்மல்களுடன் கதறல்களுடன் அசுரர் வந்து அவன் காலடியில் விழுந்தனர்.
ரக்தபீஜனை அணுகிய சபரரின் மைந்தர் சித்ரர் அவன் காலடிகளின் சிம்மநகங்களை தொட்டார். “எந்தை சொன்னார், குருதிபடிந்த காலடிகளுடன் நம் அரசர் நகர்புகுவார் என்று. இதோ!” என்று கூவினார். “மீட்பு வந்தது அசுரர் குலத்திற்கு. விலகுக மிடிமை! இனி எல்லாம் நலமே!” என்றனர் அசுரகுலப் பாடகர்கள். “தானவத்தின்மேல் இனி என் சிம்மக்கொடி பறக்கட்டும்” என்று ரக்தபீஜன் ஆணையிட்டான். போருக்கென குருதிப்பொட்டு தீற்றிய வீரன்முகம் போல தானவத்தின் கோட்டைமுகப்பு கொடி கொண்டது. “உங்கள் படைக்கலங்களை எடுத்துக்கொள்ளுங்கள்” என்று ரக்தபீஜன் ஆணையிட்டான். அசுரர் தங்கள் படைக்கலங்களை எங்கோ கைவிட்டுவிட்டிருந்தனர். அவை தானவத்தின் புழுதியில் புதைந்து மறைந்துவிட்டிருந்தன. படைக்கலங்களைத் தேடி அவர்கள் அங்குமிங்கும் பதறி அலைந்தனர். “சொல்கொண்டு தேடவேண்டாம். சினம் கொள்ளுங்கள். கடும்சினம் எரிய கைகளையே தேடவிடுங்கள். அவை கண்டடையும் உங்கள் படைக்கலம் புதைந்த இடத்தை” என்றார் சித்ரர்.
படைக்கலங்களை எடுத்ததுமே அசுரர் தங்கள் தன்னியல்பை அடைந்தனர். கொன்றும் இறந்தும் குருதிமணமென அப்படைக்கலங்களில் வாழ்ந்த மூதாதையர் எழுந்து அவர்களுள் நிறைந்தனர். “போர்! போர்!” என்று படைக்கலங்கள் எழுந்து ஆடின. “குருதி! வெங்குருதி!” என அவை விடாய்கொண்டு கூவின.
[ 7 ]
தானவம் மீண்டும் பேருருவம் கொண்டு எழுந்தது. மேலும் மூன்றடுக்குகளுடன் கோட்டை வலுவாக கட்டப்பட்டது. நகரின் நடுவே இருந்த தனுவின் மாளிகை மேலும் எட்டடுக்குகளுடன் ஓங்கி எழுந்தது. அதன்மேல் சிம்மக்கொடி பறந்தது. ஏவலரும் காவலரும் நிறைந்து அரண்மனை இரவிலும் பகலிலும் உறங்காமலிருந்தது. அதன் நடுவே செந்தழலெனச் சுடரும் மணிகளால் அமைந்த அரியணையில் அமர்ந்து ரக்தபீஜன் அசுரர்களை ஆண்டான். அவர்கள் ஒவ்வொருவரும் அவனுக்கென குருதிதொட்டு வஞ்சினம் உரைத்தனர். தங்கள் எண்ணங்களிலும் கனவுகளிலும் அவனையே எண்ணியிருந்தனர். அவன்மேல் கொண்ட பற்றே அவர்கள் மனைவியரில் மைந்தரென பிறந்தது. தவழ்ந்து அமர்கையிலேயே கைநீட்டி படைக்கலம் தேடினர் அம்மைந்தர்.
குருதி கொந்தளிக்கும் உடல்கொண்டிருந்தான் ரக்தபீஜன். அவன் துயில்வதேயில்லை. எங்கும் படுக்க அவனால் முடியவில்லை. பீடங்களில் அமர்ந்தபடியே விழிதுயில்கையிலும் அவன் செவிகள் ஓசைகளுக்கேற்ப அசைவுகொள்ளும். அவன் கைகளிலும் கால்களிலும் கூருகிர் விரல்கள் மெல்ல அசைந்துகொண்டிருக்கும். சினந்தெழும்போது அவன் மூக்கிலும் செவிகளிலும் குருதி பெருகிவழியும். பெருஞ்சினம்கொண்டு தன் கைகளை சேர்த்து அறைந்து பேரொலி எழுப்பி அவன் பாயும்போது விழிகளிலிருந்தும் குருதி வழியும். நூற்றெட்டு அசுரமல்லர்களை தன்னந்தனியாக நின்று தோள்கோத்து எதிரிடும் மற்போரின்போது அவன் தசைகள் இறுகி வெம்மைகொள்ளும்போது தோலில் வியர்வையென செங்குருதித்துளிகள் முளைத்து உருண்டு வழியும். தலைமயிர் நுனிகளில் குருதிமணிகள் தோன்றிச் சிதறும்.
பெருஞ்சினமே உருவானவனாக அவன் இருந்தான். மறுசொல் கேட்க ஒப்பான். அவனிடம் அறைபட்டு உடல்கிழிந்து நாளும் ஓர் அசுரக்காவலன் அவன் காலடியில் இறந்துவிழுந்தான். நிலையழிந்தவன் போல அரண்மனையில் எந்நேரமும் சுற்றிவந்தான். புரவியேறி நகரில் இரவும் பகலும் அலைந்தான். மலைச்சரிவுகளில் பாய்ந்திறங்கி தன் நாடெங்கும் தோன்றினான். தன்னைப்பார்த்த எவரும் அக்கணமே பணியவேண்டுமென்று விழைந்தான். மறுஎண்ணம் தோன்றிய உள்ளம் அதை அறிவதற்குள்ளாகவே அவ்வுடல் அவனால் கிழித்தெறியப்பட்டது. கொன்றபின்னரும் வெறியகலாது கிழித்து குருதிகுளித்து தாண்டவமாடினான். உடலெங்கும் வழியும் குருதி ஒன்றே அவனை குளிர்விக்குமென்று அசுரர் கண்டனர்.
அவனை அசுரர் அஞ்சினர். அவ்வச்சமே அவன் மேல் பெருமதிப்பை உருவாக்கியது. அந்த மதிப்பு அன்பாகியது. அவனுக்கு அடிபணிந்த அசுரர் ஒவ்வொருவரும் அவனாக தாங்கள் மாறுவதை அகத்தில் உணர்ந்தனர். எனவே அவன் செய்யும் கொடுஞ்செயல் ஒவ்வொன்றையும் அவர்களும் உள்ளத்தால் செய்தனர். அவர்களை அவன் கிழிக்கையில்கூட அவர்கள் அவனாகி நின்று அதை அகம்நடித்தனர். அவன் ஆறாப்பெருஞ்சினம் தங்கள் குலத்திற்கு கிடைத்த நல்லூழ் என்று அசுரமுதியோர் சொன்னார்கள். “நம் எரிகுளத்து தழல் அவர். நாம் அணையாது காத்த வஞ்சம். நம் நாவில் குடிகொள்ளும் நச்சு. தெய்வங்களும் அஞ்சும் நமது படைக்கலம்” என்றனர் கவிஞர்.
தானவத்திலிருந்த மூதன்னையர் ஆலயங்கள் அனைத்தையும் ரக்தபீஜன் இடித்து அழித்து சுவடறுத்தான். அன்னையர் எவரும் அவன் முன் தோன்றுதலை அவன் விரும்பவில்லை. அவன் ஓசைகேட்டதுமே அவர்கள் மைந்தரை அணைத்தபடி இருளறைகளுக்குள்ளோ புதர்களுக்குள்ளோ பதுங்கிக்கொண்டனர். தவறி எதிர்பட்டவர்களின் முலைகளை அறுத்துவீசும்படி அவன் ஆணையிட்டான். முலைகளறுக்கப்பட்ட அன்னையரின் கருப்பைகள் குருதிவடிந்து சுருங்கின. அவர்கள் பெண்மையை இழந்து, விழியில் கொடுமை குடிகொண்டு, அசுரர்களாக உருமாறினர். நெஞ்சில் அறைந்து அமலையெழுப்பியபடி வந்து அவன் தாள்பணிந்தனர். தானவத்திலும் ஆசுரநாட்டிலும் எவ்விலங்கும் முலைகளுடன் பொதுவில் வரலாகாது என்று ஆணையிருந்தது. அசுரர்களின் நூல்கள் அனைத்திலும் அன்னை என்னும் சொல்லே இல்லாமலாக்கப்பட்டது. எங்கும் எவரும் நாமறந்தும் அச்சொல்லை உச்சரிக்கலாகாதென்று அரசாணை இருந்தது. நாளடைவில் அச்சொல்லே அவர்களின் மொழியிலிருந்து மறைந்தது.
தானவத்திலிருந்து கிளம்பிய அசுரப்படைகள் சூழ்ந்த நாடுகளை முழுதும் வென்றன. ரக்தபீஜனின் விழிதொட்ட இடமெங்கும் அவன் சிம்மக்கொடி மட்டுமே பறந்தது. வெல்லற்கு எதிரிகள் இல்லாமை கண்டு விண்ணேறிச்சென்று இந்திரநாட்டையும் வெல்ல அவன் விழைந்தான். அசுரகுரு சித்ரரை அழைத்து விண்ணைவெல்லும் படைஎடுப்புக்கு ஆவனசெய்யும்படி சொன்னான். “அரசே, அசுரர் நேராக விண்ணில் பறக்கவியலாது. ஏழுலகங்களையும் முறையே வெல்லவேண்டும். முதலில் கின்னரரை. பின்னர் கிம்புருடரை. பின்னர் கந்தர்வரை. ஒவ்வொரு உலகிலிருந்தும் அடுத்த உலகிற்குச்செல்லும் சிறகுகளை பெறவேண்டும்” என்றார் சித்ரர். “அதற்குரிய வழி ஒவ்வொரு உலகுக்கும் உரிய வேள்விகளை செய்வதுதான்.”
தானவத்தின் நகர்ச்சதுக்கத்தில் வேள்விச்சாலை எழுந்தது. எரிஎழுப்பி அவியளித்து அசுரவேதங்களை உச்சரித்தனர் அசுரவைதிகர். கின்னர உலகுக்குள் செல்லும் நறுமணங்களை முதலில் அடைந்து அதனூடாகச் சென்று அவர்களை வென்றனர். கிம்புருடர் உலகுக்குச் செல்லும் இசையை பின்னர் அடைந்தனர் அசுரர். யட்சர்களின் வண்ணங்களை பின்னர் கொண்டனர். தேவருலகுக்குச் செல்லும் பாதை ஒவ்வொரு வேள்விக்குப்பின்னும் மேலும் துலங்கிவர ரக்தபீஜன் களிவெறிகொண்டான். “வெல்லற்கரியவன்! தேவர்களின் இறைவன்! மூன்றுதெய்வங்களுக்கும் நிகரானவன்!” என அவனை போற்றினர் அசுரர்களின் கவிஞர். தன்னைப்பற்றிய புகழ்ச்சொற்களை தானே கேட்டுப்பழகி, அவை தன் உளச்சொற்களாக ஓடுவதை உணர்ந்து, பின்பு அவையே தானென்று ஆனான்.
குருதியுலராத படைக்கலங்களுடன் அவன் விண்ணுலகங்களில் ஏறிச்சென்று வெற்றிகொள்கையில் ஒருமுறை அவன் தன்னெதிரே ஸ்தன்யை என்னும் யட்சியை கண்டான். பன்னிருமுலைகள் கொண்ட அவள் விழியும் கால்களும் அற்றவள். சாயாதலம் என்னும் ஆயிரம் விழுதுகொண்ட பேராலமரத்தின் அடியில் அவள் வாழ்ந்திருந்தாள். அவ்வாலமரத்தின் தசைப்பற்று மிகுந்த கனிகளை அவள் உணவெனக் கொண்டாள். பன்னிரு முலைகளிலும் வற்றாது பாலூறிப்பெருகிய அவளை பசித்த குழவிகள் அனைத்தும் தேடிவந்து முலையுண்டு சென்றன.
யட்சர் அவளை யட்சியாகக் கண்டனர். மானுடர் அவளை கனிமரமென நோக்கினர். விலங்குகள் அவளை பன்னிரு ஊற்றுகளென அறிந்தன. அவளை மகவுகள் உண்ணும் ஓசை எப்போதும் கேட்டுக்கொண்டிருந்தது. உண்டு நிறைந்த குழவிகள் அவள் அடியில் விழுந்து துயின்றன. அவள் தன் பன்னிரு கைகளால் அவற்றின் தலைமயிரை கோதினாள். செவிகளை இழுத்து வருடினாள். தோள்களையும் நெஞ்சையும் அடிவயிற்றையும் தடவி மெல்லிய குரலில் உறக்குபாட்டுகளை பாடிக்கொண்டிருந்தாள். அவள் உலகில் குழந்தைகள் அன்றி தெய்வங்களும் இருக்கவில்லை.
போர்க்குரலுடன் வந்த ரக்தபீஜன் அவளை ஒரு மாபெரும் பன்றி என கண்டான். முலைக்குவைகள் கொழுத்துச்சரிந்த கரிய உடலுடன் அது ஒருக்களித்துப்படுத்து மதம்சொக்கும் விழிகளை பாதிமூடி வெண்பற்கள் தெரியும் வாய்திறந்து இன்மயக்கில் கிடந்தது. அதன் வால் மெல்ல சுழித்து அசைந்தது. அதன் முலைகளில் பன்றிக்குட்டிகளும் சிம்மக்குருளைகளும் மான்குழவிகளும் வால்சுழற்றி தோள்முட்டி மோதித்ததும்பி பால்குடித்தன. அருந்தும் ஒலி கேட்டு அது ஒரு சுனை என எண்ணி திரும்பி நோக்கிய ரக்தபீஜன் முலைகளை கண்டான். கால்களை நிலத்தில் ஓங்கி மிதித்து அவன் அமறியபோது குட்டிகள் திகைத்து பின்வாங்கின. விடுபட்ட முலைக்குமிழ்களில் இருந்து வெண்நூல்கள் போல பால் பீரிட்டது. சினத்தில் பதறிய உடலுடன் கண்மறைத்த வெம்மைப்படலத்துடன் பாய்ந்துசென்ற ரக்தபீஜன் அதன் முலைத்தொகையை தன் வாளால் வெட்டிவீசினான்.
உறுமிய ஸ்தன்யை பேருருவ நிழலென எழுந்தாள். “வீணனே, நான் அளித்த முலைப்பாலின் நலப்பேறு ஒன்றாலேயே உன்னையும் உன் ஏழுதலைமுறைகளையும் எரித்தழிக்க முடியும். ஆனால் இன்று உன்னை விட்டுவிடுகிறேன். ஏனென்றால் எதன்பொருட்டென்றாலும் அன்னை என்றே எப்போதும் எண்ணிக்கொண்டிருக்கிறாய். உன் நாட்டில் நீ அழித்த அன்னை எனும் சொல்லால் நிறைந்துள்ளது உன் அகம். அதன் நலனை நீ அடையவேண்டும். அன்னை உன்னை வெல்க! நீ அன்னையை அறிக!” என்று சொல்லி விழுந்து மடிந்தாள். அவள் உடலில் இருந்து குருதிக்கு மாறாக வெண்ணிறப் பாலே பெருகி பரவிக்கொண்டிருப்பதை ரக்தபீஜன் கண்டான். இறந்த அவள் விழிகளை நோக்கிக் கொண்டு நின்றான். அவன் வாள் அறியாது தாழ்ந்தது.
தானவத்திற்கு மீண்ட ரக்தபீஜன் சித்ரரை அழைத்து நிமித்திகர் அவையை கூட்டும்படி ஆணையிட்டான். நூற்றெட்டு நிமித்திகர் கூடிய அவையில் முதல்முறையாக கைகூப்பி பணிந்து “அறிந்தவரே சொல்க! எப்படி அமையும் என் இறுதி? எங்கு நான் தோற்பேன்?” என்றான். அவர்கள் தயங்க “எந்த மறுமொழி என்றாலும் சினம்கொள்வதில்லை என உறுதியளிக்கிறேன். சொல்க!” என்றான். அனைவர் விழிகளையும் மாறிமாறி நோக்கியபின் அச்சம் விலகாது எழுந்த முதிய நிமித்திகர் “பிறவிக்குறிகளின்படி நீங்கள் முலைகனிந்து எழுந்துவரும் தெய்வப்பேரன்னை ஒருத்தியால் வெல்லப்படுவீர்கள். அவள் காலடியில் இறப்பீர்கள். அவள் முலையுண்டு முழுமைகொள்வீர்கள்” என்றார்.
இருகைகளையும் குவித்து அதில் தலைதாங்கி அமர்ந்திருந்த ரக்தபீஜன் “நான் அவளை வெல்வது எப்படி இயலும்?” என்றான். நிமித்திகர் அவை அமைதியாக அமர்ந்திருந்தது. “சொல்க! அவள் இயல்பென்ன? அவள் எல்லை என்ன?” என்றான் ரக்தபீஜன். முதுநிமித்திகர் “அரசே, அன்னை என்பதே அவள் இயல்பு. எனவே எல்லையற்றவள்” என்றார். “இல்லை, தெய்வமே என்றாலும் உருவெனக் கொண்டு இருப்பென வந்தால் இயல்பு என சில உள்ளதே. இயல்பென சில உள்ளதென்றால் இயல்பல்லாதவை என சிலவும் உண்டு. அவை அவள் எல்லை” என்றான் ரக்தபீஜன். நிமித்திகர் சொல்லின்றி அமர்ந்திருக்க இளைய நிமித்திகன் ஒருவன் எழுந்து “அரசே, அவள் பெருங்கருணை கொண்டவள் என்கின்றன இக்குறிகள். அதுவே அவள் இயல்பு. அதற்கு மாறானதே அவளால் இயலாதது. அதுவே அவள் எல்லை எனக்கொள்க!” என்றான்.
ஒருகணம் உளம் நின்று உடனே சொல்கொண்டு எழுந்து “ஆம்! அதுவே அவளை வெல்லும்வழி. அன்னையென வந்தால் அவளுக்கு அனைவரும் மைந்தரே. மைந்தனைக் கொல்ல அவளால் எளிதில் இயலாது” என்றான். “அரசே, கைக்குழந்தையின் பூநகத்தை பல்லால் கடித்து வெட்டும் அன்னைபோல அவள் உங்கள் தலைகொய்வாள்” என்றார் முதுநிமித்திகர். “ஆம், ஆனால் அதையும் அவள் நெஞ்சுநடுங்கியபடியே செய்வாள். தன் உள்ளத்தை வைரமாக்கியே அவள் என்னை கொல்லமுடியும்” என்ற ரக்தபீஜன் கைகளை தட்டியபடி அவையில் சுற்றிவந்தான். “நான் ஒருவன் என்றால் கொன்று மேல் செல்வாள். நான் பலர் என்றால்? முடிவற்றவன் என்றால்? எத்தனைமுறை ஓர் அன்னை தன் மைந்தரை கொல்வாள்?”
“அரசே, முடிவின்மை என்பது தெய்வங்களுக்கு மட்டுமே உரியது” என்றார் முதுநிமித்திகர். “ஆம், அதையும் அறிவேன். அன்னையென்றாகி வரும் தெய்வம் அவள். ஆகவே அவள் முடிவிலி. அவள் செயலும் முடிவற்றது. அவள் செயலே என்னை பெருக்குவதாக! ஆக்கி ஆக்கி அவளே அழிக்கட்டும். மைந்தரைக்கொன்று அவள் செல்லும் உச்சத்தொலைவென்ன என்று அவளே அறியட்டும்.” மகிழ்ந்து தன் நெஞ்சிலறைந்தபடி அவன் அவையில் சுற்றிவந்தான். “என் உடற்குருதி அனைத்தும் விதைகள் என்றார் என் தந்தை. அவை முளைக்கட்டும். ஆம், நான் அதைத்தான் படைக்கலமெனக்கொண்டு இங்கு வந்துள்ளேன்.”
“இதோ கிளம்புகிறேன், எரிவண்ண இறைவனை என் முன் வரச்செய்து அருட்கொடை கொண்டுதான் மீள்வேன்” என்று வஞ்சினம் உரைத்து ரக்தபீஜன் அரண்மனை நீங்கினான். விந்தியமலையின் உச்சிமுனையில் ஒற்றைக்காலில் நின்று தவம்செய்தான். மண்ணிலிருந்து பெற்றவை அனைத்தையும் மலையில் குவித்தான். மலையுச்சியில் சேர்த்து தன் காலில் ஏற்றினான். உடலில் கூர்த்து கைகளில் சேர்த்து விரல்முனையில் செறித்தான். விண்ணுக்கு அதை ஏவினான். ஏதுமற்ற வெறுங்கலமாக அங்கே நின்றான். விண்ணிலிருந்த மூவிழிமூத்தோன் அந்த அழைப்பை அறிந்தான். மின்பிளந்த முகிலில் தன் வெள்விடையேறி தோன்றினான். “கொள்க அருள்!” என்றான்.
“எந்தையே, நான் பெருகவேண்டும். என் குருதியிலிருந்து நான் முளைத்தெழவேண்டும்” என்றான் ரக்தபீஜன். “என் உடலில் படும் புண்சொட்டும் ஒவ்வொரு குருதியும் இன்னொரு நான் என எழவேண்டும்.” கரியுரித்த அண்ணல் புன்னகைசெய்து “மைந்தா, குருதிமுளைத்துப் பெருகும் அருள் என்பது அனைத்துத் தந்தையருக்கும் உரியதே. தவளைமுட்டைகளின் நாடாபோல மானுடர் அசுரர் அனைவரிலிருந்தும் காலமென அவை நீண்டு நெளிகின்றன. காலத்தில் தோன்றுபவை அனைத்தும் மறையும் என்றறிந்திருப்பாய். நீ இதோ அது காலமிலாகணத்தில் நிகழவேண்டுமென கோருகிறாய். தோன்றுவதுபோல அவை கணத்திரும்பலில் அழிவதையும் நீ காணலாகும்” என்றார். “ஆம், அவ்வாறே ஆகுக! நான் பெருகவேண்டும். என் துளிகளிலிருந்து முடிவிலாது எழவேண்டும்” என்றான் ரக்தபீஜன். “அருளினேன்” என்று உரைத்து இறைவன் மறைந்தார்.
சொற்கொடை கொண்டு நகர்மீண்டான் ரக்தபீஜன். சித்ரரிடம் “அழியாப் பேறு கொண்டேன் ஆசிரியரே” என்றான். “பெருகும் பேறையே கொண்டிருக்கிறீர்கள் அரசே” என்றார் அவர். “ஆம், பெருகுவன அழிவதில்லை” என்றான் ரக்தபீஜன். “இனி என்றும் இங்கிருப்பேன்” என்று சொல்லி நகைத்தான்.