கட்டுரையாளர் திரு ஜெயமோகன் அவர்களுக்கு
தொண்டர்படை என்னும் ஆடம்பரம் பற்றி நீங்கள் எழுதியது உண்மை. சம்பளம் வாங்கி வேலை செய்யாமலிருக்கும் உதவாக்கரை இயந்திரம் இவர்கள். உண்மையில் சொல்லப்போனால் இவர்கள்தான் இங்கே சட்டம் ஒழுங்கையே சீர்குலைப்பவர்கள்
செல்வராஜ்
***
ஆசிரியருக்கு
உங்கள் கட்டுரை அரசியல் பற்றி எளிமையாக எடுத்துரைத்து அதே சமயம் உலக நடப்பையும் தெளிவாக விளக்கும் முறை நன்றாக உள்ளது .உங்களது எழுத்து பணி மென்மேலும் தொடரட்டும் .
நன்றி!
ச.சக்திவேல்
பாப்பாநாயக்கன் பாளையம் ,
***
பெருமதிப்பிற்குரிய ஜெமோ அவர்களுக்கு,
வணக்கம்.
தங்களின் “உறிஞ்சும் பூச்சிப்படை” கட்டுரை இது வரை நினைத்ததற்கு மாறான ஒரு கோணத்தை சுட்டிக் காட்டியது.எவ்வளவு ஆக்கபூர்வமான செயல்களை நிகழ்த்தக்கூடிய மக்கள் சக்தி,தொண்டர் கூட்டம் என்ற பெயரில் ஒவ்வொரு கட்சியிலும் வெட்டி வேலைகளிலும்,வன்முறைச் செயல்களிலும் வீணடிக்கப்படுகிறது.நீங்கள் சரியாக குறிப்பிட்டபடி தொண்டர்படை வருங்காலத்தில் ஒரு நேர்மையான மக்கள் நலம் விரும்பும் கட்சிக்கு தேவையே அற்ற ‘சுமை’ தான்.
நன்றி.
அன்புடன்,
அ .சேஷகிரி.
***
கட்டுரையாளருக்கு
வணக்கம். தனக்கு அரசியல் தெரியாது என்று சொல்லும் ஒருவரே இந்தியாவில் ஊழலை உருவாக்குகிறார். ஊழல் செய்பவரை அதிகாரத்திற்கு கொண்டு செல்கிறார் என்பது சரி: அரசியல் ஆர்வம் இல்லாத குடும்பப்பெண்கள், அரசியல் டி.வி. நிகழ்ச்சிபார்ப்பவர் 10 சதம், செய்தித்தாள் வாசிப்பவர் ஒரு சதம், அரசியல் வரலாறு தெரியாத கணிசமான இளைஞர்கள் என்ற பாமரத்தனமான பட்டியலில் இல்லாத அதிகாரிகள் ஊழல் செய்வதை அரசியல்வாதிகள் ஏற்றுக்கொள்ளும் வரலாறு முந்தைய கட்டுறையில் தெளிவாக சொல்லப்பட்டுள்ளது.
ஏதோ விபரம் தெரிந்த சிலர் ஏதோ ஒரு காரணத்திற்கு மனுச்செய்தால் கூட மாவட்ட ஆட்சியரிடமிருந்து கூட பதில் வருவதில்லையே? வாக்காளர் விழிப்புணர்வு பிரச்சாரத்தில் தெருவுக்கு வரும் அதிகாரிகள் சமுதாய விழிப்புணர்வுள்ளவர்களுக்கு உதவ முன்வருவதில்லை என்பது கூட ஊழலின் ஊற்றுக்கண் தானே.
மங்களநாதன்
ரெகுநாதபுரம்
இராமநாதபுரம்(மா)
தினமலர் கட்டுரை இணைப்புக்கள்